தமிழ்ச்செல்வி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 23, 2015
பார்வையிட்டோர்: 8,886 
 

சென்னை ராஜ்பவன், தமிழக ஆளுநர் மாளிகை முன்புள்ள சாலையில் ஒரு மறியல். அந்த மறியலுக்கு தலைமை தாங்கினாள் ஒரு மயில். பெயர் தமிழ்ச்செல்வி.மருத்துவக்கல்லூரி மாணவி. கோரிக்கை பதாகைகளுடன் சக மருத்துவக்கல்லூரி மாணவர்-மாணவிகள். இவர்களுக்கு ஆதரவாக சட்டக்கல்லூரி மாணவர்கள்.

“ இங்க பாருங்க ஸ்டூண்ட்ஸ்… நீங்க கொடுத்த மனு ஏற்ககூடியது இல்லை, ,அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுன்னு சொல்லியும் நீங்க வீம்புக்கு போராட்டம் பண்ணுவது சரியில்ல. இன்னும் அஞ்சு நிமிசம் டைம் தரேன்.உடனே இடத்தை காலி பண்ணிடுங்க. இல்லைன்னா லத்தி சார்ஜ் நடத்த வேண்டியதா இருக்கும்.” காவல்துறை அதிகாரி லட்சுமி.

“மேடம்..! கவர்னரை சந்திக்க அனுமதி வேண்டும். எங்கள் மனுவை ஏற்க மறுத்து அதை கிழித்துப்போட்ட கவர்னர் மாளிகை அதிகாரிகள் மன்னிப்பு கேட்கவேண்டும். அதுவரை இங்கிருந்து நகரமாட்டேன்….என்ன மேடம் மிரட்டலா..? உங்களுக்கு ஆர்டர் வந்துச்சோ…? ம்ம்ம் அடிங்க.. பொட்டப்புள்ள நான் போராட்டத்தை விட்டு ஓடிடுவேன்னு நினைச்சிங்களோ ?..நான் நினைக்கிறது நடக்கிறவரைக்கும் இந்த இடத்தை விட்டு போகமாட்டேன்.” என்று ஜான்சிராணியாக வீரவசனம் பேசிய தமிழ்ச்செல்வி, தனக்கு ஆதரவாக வந்த மாணவர்கூட்டத்தை பார்த்து “ நண்பர்களே.. என் கோரிக்கை நிறைவேறனும்.அடி வாங்க முடியாதவங்க ஒதுங்கிக்கோங்க. நான் சமாளிச்சுகிறேன். ப்ளீஸ்”

“ தமிழ் ..! இது நம்ம பிரச்சினை. உன் பிரச்சினை இல்ல.. அவங்க அடிக்கட்டும். அடிக்கமட்டும்தானே முடியும். ஒடுக்க முடியாது இல்ல.செத்தாலும் இங்கே சாகிறோம்” மாணவர் கூட்டத்திலிருந்து ஒரு குரல் இடியாய் ஒலிக்க

அங்கிருக்கும் ஊடகத்துறை செய்தியாளர்கள் இதைக்கேட்டு பரபரக்கின்றனர்,அவர்களின் கேமரா கண்கள் நிகழ்வை படமெடுக்க ஆயுத்தமாகின்றன.

போராட்டக்காட்சி போர்களக்காட்சியாக மாறுகிறது. போலீஸ் தடியடியில் இரத்த நதியாகுகிறது அந்தச் சாலை. இரத்த நதியில் துடித்துக்கொண்டே கோஷமிடுகிறாள் தமிழ்ச்செல்வி
“ கைது செய்..!! கைது செய்..!! தமிழக முதல்வரை கைது செய்..!!
பல பெண்களின் தாலியை பறிக்கும் முதல்வரை கைது செய்…!!
டாஸ்மாக் கடைகளை உடனே மூடு..!
மதுவினை விற்று இளையசமுதாயத்தை கெடுக்கும் தமிழக அரசை கலைத்துவிடு..!

அங்கு கூடியிருக்கும் ஒட்டுமொத்த பொதுமக்களின் செவியும் விழியும் அகலமாக விரிகிறது.தமிழ்ச்செல்வி போராடுவது அற்பகாரணத்திற்கு அல்ல. அற்புதக்காரணத்திற்கு தான் என்று உணர ஆரம்பிக்கின்றனர்.

தமிழ்ச்செல்வியின் கருங்கூந்தல் முழுவதும் கருஞ்சிவப்பு இரத்தத்துளிகள். தமிழ்ச்செல்வியும் மற்ற சில மாணவர்ர்களும் காவல்துறையின் முரட்டுதாக்குதலில் பலவீனமடைந்து சாலையில் மயங்கி விழந்துவிழுவதை கண்ட அங்கிருந்த பொதுமக்களில் சிலர் போலீசார் மீது கோபமடைந்து ஆவேசமாக கூச்சிலிட ஆரம்பித்தனர்.வந்திருந்த மாணவர் கூட்டத்தில் சிலர் கற்கள்,செருப்பு என்று கையில் கிடைத்த யாவற்றையும் எதிர்ப்பு ஆயுதமாக்கி போலீசார் மீது விட்டெறிந்தனர். நிலைமை மேலும் விபரீதமாகியது. இறுதியில் புகையை கக்கி வென்றது காவல்துறை.
தமிழ்ச்செல்வி தலைமையிலான மாணவர்களை கொத்தாக அள்ளி எடுத்து சிறையில் அடைக்க ஏற்பாடுகள் நடக்க ஆரம்பிக்கிறது.

”முதல்வரை கைது செய்ய கோரிய தமிழ் செல்வியின் நிலை கவலைக்கிடம்? உயிர் பிழைப்பாரா மருத்து மாணவி?

தமிழக முதல்வரின் பதில் என்ன ? ”

தமிழ்ச்செல்வியின் போராட்டமும் இந்த கொடூர தாக்குதலும் தமிழக அரசிற்கு தலைக்குணிவை தருமா?

காட்டுமிராண்டித்தனமாக நடந்துக்கொண்ட காவல்துறை.

முதலமைச்சரை கைது செய்ய கோரியது சரியா? சட்டத்தில் இதற்கு இடமுண்டா? ”

என்று பலவாறு செய்தியை பரப்ப டிவி கேமாராக்கள் முன் மைக்பிடித்தப்படி செய்தியாளர்கள்.

ஊடகத்துறை மூலம் தொலைக்காட்சிகளில் இந்த நிகழ்வின் செய்தி பரவுகிறது. இரத்த வெள்ளத்தில் தமிழ்ச்செல்வியை தொலைக்காட்சியில் கண்ட பொதுமக்கள் பரிதாபம் அடைந்தனர் . ஆம் மெகா சீரியல் விளம்பர இடைவெளி நேரத்தில் … !

சற்று நேரத்திற்கு பிறகு,

போராட்டக் காட்சியையும் மாணவர் மாணவிகளை மிருகங்களை அடிப்பதைப்போல அடித்து சித்ரவதை செய்தக் கொடுமையையும் கண்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, காவல்துறையை கடுமையாக கண்டித்தது மட்டுமல்லாமல், தமிழ்ச்செல்விக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சையளித்து அடுத்தநாள் காலை 11 மணிக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்திரவிட்டார். மேலும் உயர்நீதிமன்றமே முன்வந்து தமிழ்ச்செல்வியின் கோரிக்கை மனுவை , வழக்காக எடுத்துகொள்ளப்படும் என்று அறிவித்தார்.
———————-
சென்னை உயர்நீதிமன்றம்,

சில பல சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து வழக்கு விசாரணைக்கு வருகிறது.

தலை, கை , கால்களில் கட்டுப்போட்ட நிலையில் தலைமை நீதிபதி முன் தமிழ்ச்செல்வி மற்றும் சில மாணவர்ர்கள் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
தலைமை நீதிபதியே நேரடியாக மாணவர்ர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தார்.

” நேற்று நடந்த போராட்டத்திற்கும் , இப்போது நடக்கும் இந்த வழக்கிற்கும் உங்களில் யார் பதில் அளிப்பீர்கள் ? “ மாணவர்ர்களிடம் நீதிபதி கேட்க அவர்களின் கை தமிழ்ச்செல்வியை காட்டுகிறது.

“ம்ம்ம் சரி. நீங்கதான் இந்த போராட்ட குழு தலைவியா ?”

“ ஆம் அய்யா “ தமிழ்ச்செல்வி அழுத்தமாக பதிலுரைக்க

“சரி என்ன பிரச்சினை உங்களுக்கு? ஒரு முதல் அமைச்சரை கைது செய்ய கோரும் அளவிற்கு என்ன நடந்தது ?”

” மன்னிக்கவும் அய்யா, நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? “

பரபரக்கிறது நீதிமன்றம்.

“ என்னிடமா.? சரி கேளுங்க “ சம்மதம் தெரிவித்த நீதிபதியிடம்
“ கஞ்சா விற்றா குற்றமா? “

“ ஆம் குற்றம் தான் அம்மா”

“அப்போ கஞ்சா விற்பவர்களை கைது செய்யனும் இல்லையா அய்யா ? “

“ ஆமா கைது செய்து, போதுமான ஆதாரமிருந்தால் தண்டிக்கவும் செய்யலாம்? “

“ஐயா இதுல ஏதும் மாற்றம் இல்லை இல்ல”

“இல்லை”

“ அப்போ முதலமைச்சரை கைது செய்ய உத்தரவிடுங்க ? “

” அப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்.. இதை வன்மையாக கண்டிக்கிறேன் .முதல்வரின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி இது “ எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞரை பார்த்து தமிழ்ச்செல்வி….

“ சார் நீங்க தண்ணியடிப்பீங்களா ? “

“ ஏய் பொண்ணு என்ன திமிரா ? “

“ சொல்லுங்க சார்… அடிப்பீங்களா அடிக்கமாட்டீங்களா”

“ மிஸ் தமிழ்ச்செல்வி தேவையற்ற வாதம் இது. “ என்று தமிழ்ச்செல்வியை கண்டித்த நீதிபதி .

” தமிழ்நாட்டு முதல்வரை எதற்கு கைது செய்யனும். அவர் ஏதும் போதைப்பொருட்களை விற்கிறரா? “

“ அவர் நேரிடையாக விற்கவில்லை.ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற வகையில் விற்கிறார் ? “

தமிழ்ச்செல்வி சொல்லவருவதை புரிந்துக்கொண்ட நீதிபதி,சற்று புன்னகையுடன் “எப்படிம்மா? “

தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் அரசு மதுபானக்கடையில் மது விற்பனை நடைப்பெறுகிறது . இந்த வகையில் போதை பொருட்களை ஓர் அரசாங்கம் விற்பனைசெய்கிறது என்றால் அந்த அரசாங்கத்தை நடத்தும் முதல் அமைச்சர் விற்பனைச் செய்கிறார் என்றுதானே பொருள். இலவசங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும்போது முதல்வர் வழங்குகிறார் என்று சொல்கிறோம் மதுவை விற்பனை செய்வதையும் அப்படித்தானே பார்க்கமுடியும் . தமிழக மக்களுக்கு முதல்வர் மதுவை விற்கிறார்.

” அப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்.. இதை வன்மையாக கண்டிக்கிறேன் .மதுபானக்கடையில் விற்பது தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் இல்லை. கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் தான் தடைசெய்யப்பட்டிருக்கிறது.“ எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞரை பார்த்து தமிழ்ச்செல்வி….

“ சார் நீங்க தண்ணியடிப்பீங்களா ? “

“ஹேய்.. மரியாதையா பேசு.. ? “

“ சார்..சொல்லுங்க சார். காரணத்தோட தான் கேக்குறேன். “

“ உனக்கு தேவையில்லாத விஷயம் இது… ? “

“ தமிழ்ச்செல்வி அரசுவழக்கறிஞரின் மாண்பை கெடுக்கும் வகையில் பேசக்கூடாது.”

“ மன்னிக்கவும் நீதிபதி அவர்களே! அரசு வழக்கறிஞரிடம் நான் சில கேள்விகளை கேட்பதன் மூலம் என் கோரிக்கையின் வலுவை நான் காட்ட உதவும். அவரிடம் நான் கலந்துரையாடல் செய்ய அனுமதிக்க வேண்டுகிறேன்.”

“சரி பர்மிஷன் கிரேண்டட்..” என்ற நீதிபதிக்கு நன்றி தெரிவித்து தமிழ்ச்செல்வி அரசுவழக்கறிஞரிடம் கேள்விகணைகள் தொடுக்க ஆரம்பிக்கிறாள்.

“மரியாதைக்குரிய வழக்குரைஞரே…! கஞ்சா, அபின் போன்ற பொருட்கள் எதனால் தடைசெய்யப்பட்டது ? “

“ போதை தரும் பொருள் என்றும், அது உயிருக்கு தீங்கு விளைவிக்கும் என்பதாலும்….”

“ ஆங்.. கரெக்ட்டா சொன்னீங்க..அதுபோல தானே விஸ்கி,பிராந்தி,ரம்,ஒயின்,பீர் போன்ற மதுப்பொருட்களும், இதனை எல்லாம் குடிச்சா போதை ஏறாதா..உயிர் போகாதா. இதை கவர்மெண்டு விற்பது முறையா? சொல்லுங்க சார். ? “

”போதைதான் ஆனால் இது கேளிக்கை மற்றும் உற்சாக பானம் என்ற வகையில் விற்கப்படுகிறது.சரி, ..அரசு மதுபானம் விற்கவில்லை என்றால் தனியார் விற்கபோகிறார்கள். இதற்கு முன் விற்று இருக்கிறார்கள் அப்போது எல்லாம் உனக்கு உயிர் குடிக்கும் போதை என்ற தெரியவில்லையா? அரசு விற்றால் மட்டும் கேள்வி கேட்க வந்துவிடுவீர்களா என்ன ? “

“ அய்யா.. அரசுவழக்கறிஞரே..! எவர் விற்றாலும் தப்பு தப்புதான். தனியார் எவரும் அரசாங்கத்தைப் போல வீதிக்கு வீதி தெருவுக்கு தெரு மதுபானக்கடை நடத்தவில்லையே..இப்படி அநேக இடங்களில் விற்பதால் 18 வயசு இளைஞன் முதல் 90 வயது கிழவன் வரை மதுக்குடிக்க இந்த அரசு தூண்டுகிறது. சில இடங்களில் ரேஷன் கடைக்கு செல்ல 10 கிலோ மீட்டர் வரை மக்கள் செல்லவேண்டியிருக்கிறது.ஆனால் மதுபானக்கடைக்கு அரைகிலோ மீட்டர் கூட நடக்க தேவையில்லை. தடுக்கிவிழந்தால் மதுபானக்கடை. இதுதான் ஒர் அரசாங்கம் பொதுமக்களுக்கு செய்யும் சேவையா..? “ தமிழ்ச்செல்வி சற்று ஆக்ரோஷத்துடன் பேச

“ சரி, அப்படியென்றாலும் மதுவை தடைசெய்யதானே நீ கோரிக்கை வைக்கனும். முதல் அமைச்சரை கைது செய்ய கோருவது எந்தவிதத்தில் நியாயம்.. ? “

“உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய , உயிரை பறிக்கும் ஆபத்தான பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று நுகர்வோர் சட்டம் சொல்கிறது, ஆனால் ஒரு மாநில முதல்வரே தன் குடிமக்களுக்கு உயிருக்கு ஆபத்தானது என்று மதுபாட்டிலில் அச்சடித்து , அரசாங்க சார்பாகவே விற்பனை செய்ய ஆணையிடுவது எந்த விதத்தில் நியாயமானது வழக்குரைஞர் அவர்களே..
. ஒருவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி சாலைவிபத்து ஏற்படுத்தினால் அந்த குற்றத்திற்கு காரணம் குடிக்காரர் மட்டுமல்ல, குடிமக்களை போதையேற்ற வாய்ப்பு கொடுத்த அரசாங்கமும் தான். அந்த அரசாங்கத்தின் தலைமையேற்கும் முதல் அமைச்சரும்தான் காரணம்.குடியினால் ஒரு சாலை விபத்து நடந்தால் அதற்கு பெயர் விபத்து அல்ல, மதி மயக்கி செய்யப்படுகின்ற கொலை ..!
தமிழக முதல்வரை மட்டுமல்ல, முன்னாள் ஆட்சியில் இருந்த முதல்வரையும் தண்டிக்க வேண்டும். மது விற்பனை செய்யும் துறை சார்ந்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் குற்றவாளிகளே. குற்றம் செய்வதும், குற்றம் செய்யதூண்டுவதும்,குற்றத்திற்கு உடந்தையாக இருப்பதும் தவறு தவறுதான்.”

நீதிபதி குறுக்கிட்டு..

” தமிழ்ச் செல்வி.. நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளகூடியதாக இருந்தாலும் , ஒரு தனி மனிதன் தன் விருப்பத்தினால் மட்டுமே மதுவை அருந்துகிறான் எனும்போது ஒரு மாநில முதல் அமைச்சரை குறை சொல்லவதில் முறையானது அல்ல. அரசு மதுபானக்கடை இல்லை என்றாலும் மது அருந்துவோர் நட்சத்திர விடுதிகளிலும் , தனியார் பார்களிலும் மது அருந்தானே செய்வார்கள்.அவர்கள் வாகனம் ஓட்டினால் விபத்து ஏற்படத்தானே செய்யும்.அப்போது மதுவை விற்பனை செய்த குற்றத்திற்காக யாரை கைது செய்து தண்டிக்க முடியும்.உங்கள் ஆதங்கம் புரிகிறது என்றாலும் அரசாங்கம் மதுபானக்கடை நடத்துவது வணிகரீதியிலான கொள்கையாக இருக்கிறது.ஓர் அரசின்கொள்கையில் நீதிமன்றம் தேவையின்றி தலையிட முடியாது. உங்களின் ஆவேசத்திற்காக மாநில முதல் அமைச்சரை கைது செய்ய இந்த நீதிமன்றம் ஆணையிட எந்த சட்டவிதிகளும் இல்லை. நீங்கள் குறிப்பிட்ட நுகர்வோர் சட்டப்படி மது விற்பனைக்கு தடையில்லை. சட்டபடி அது உயிருக்கு தீங்கு இல்லை என்று கருதப்படுகிறது.மது விலக்கு அமல்படுத்த வேண்டுமானால் நீங்கள் அரசிடம் முறையிடலாம். திருடனாய் பார்த்து திருந்தவேண்டும் என்பது போல மது அருந்துபவர்கள் தன் சுயஒழக்கத்தை பேணிக்கொள்ள வேண்டும். …….சட்டத்தின் வாயிலாக நீங்கள்……… “

” நீதிபதி அவர்களே.. உங்கள் சட்டத்தை தூக்கி குப்பையில் போடுங்கள்….. “ தமிழ்ச்செல்வியின் முகம் விகாரமடைகிறது. நீதிமன்ற வளாகம் பரபரப்பின் உச்சத்தை அடைகிறது…வழக்கறிஞர்களுக்குள் ஓர் அதிர்வு. நீதிபதியின் கண்கள் ஓர் அதிர்ச்சியில் சிவக்கிறது…. நீதிதேவதையின் கண்களில் கட்டப்பட்ட துணி அவிழ தொடங்குகின்றன.

“தமிழ்ச்செல்வி …………!! நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசினால் உங்களை கடுமையாக தண்டிக்கமுடியும்” கடுமையான எச்சரிக்கை செய்த நீதிபதியின் குரலை உதாசீனப்படுத்திய தமிழ்ச்செல்வி தன் ஆக்ரோஷ பேச்சினைத் தொடர்கிறாள்.

“என்றோ எப்போதோ போட்ட சட்டத்தினை பிடித்து வியாக்கனம் பேசுகிறீர்கள்.என்னை, என் கோரிக்கையை முடக்க நீங்கள் எழுப்புவது சட்டப்பிரச்சினை. நான் எழுப்புவது பலரின் உயிர்பிரச்சினை. நல்வாழ்விற்கு வழிவகுக்க வேண்டிய ஓர் அரசாங்கமே குடிமக்களை குடிப்போதைக்கு அடிமைப்படுத்த மதுவை விற்பனை செய்வது இந்த மாநிலத்தின் வெட்கக்கேடான விஷயம்.மது குடிப்பது தனி மனிதரின் விருப்பம் என்கிறீர்கள், தனி மனிதனின் விருப்பத்தை இந்த அரசு பூர்த்தி செய்யும் என்றால்.. சில காமபன்றிகள் சதைப்பசியாற விபச்சாரி விடுதிக்கு செல்கிறார்கள். அதற்காக அரசு விபாச்சார விடுதி துவங்கப்படுமா ? துவங்கினால் துவக்குவார்கள் பாலியியல் குற்றம் குறைய அரசு விபச்சாரவிடுதி திறக்கப்படும் என்று முற்போக்கு சிந்தனையாக இந்த மாநில அரசு கொள்கை முடிவு எடுத்தாலும் எடுக்கும்.”

“அப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்.. “ அரசு வக்கீல்

“ அட.. கொஞ்சம் கம்முன்னு இருங்க சார்.. பலவேதனைகளை சுமந்து நான் பேசிட்டு இருக்கேன். சும்மா சும்மா அப்ஜக்‌ஷன் கிப்ஜக்‌ஷண்ட்டு…

கணம் நீதிபதி அவர்களே….! உங்கள் சட்டத்தின் படியே நான் கேட்கிறேன்.

இந்திய தண்டனைச்சட்டம் அத்தியாயம் 14 இல் “நாகரிகம் மற்றும் ஒழுக்கம் பாதிக்கும் குற்றங்கள்” சட்டத்தின் படி ஒருவன் குடித்துவிட்டு நாகரீகம் அற்ற வகையில் சுயஒழக்கமின்றி செயல்படுகிறான் என்றால் அவனின் நிலைக்கு காரணம் மதுதானே? அந்த மதுவை அரசு விற்கலாமா?

அத்தியாயம் 16 இல் குறிப்பிடப்படும் ”தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை ” மற்றும் கருச்சிதைவு தொடர்பான குற்றங்கள் போன்ற குற்றச்சடடத்தின் படி இந்த அரசு தவறான முறையில் போதைக்கு அடிமையாக்க ஒரு குடிமகனை தூண்டுகிறது.

குடிப்பழக்கத்தினால் வன்கொடுமை, பாலியியல் பலாத்தாரம் செய்ய ஒருவன் தூண்டுப்படுகிறான். தூண்ட துணை இருப்பது டாஸ்மாக்..! தண்டனைச்சட்டம் அத்தியாயம் 17 இன் படி பலாத்கார வழக்கில் இவன் கைது செய்யப்படுவான் என்றால் அந்த பலாத்காரம் செய்ய தூண்டியது மது. அந்த மதுவை விற்பனை செய்வது அரசின் டாஸ்மாக்..!

இந்த சட்டத்தின் படி குற்றம் நிகழ்வுகளை ஊக்கப்படுத்தல் என்ற முறையில் இந்த டாஸ்மாக் கடை நடத்தும் இந்த அரசை வழிநடத்தும் மாநில முதல் அமைச்சரை கைது செய்ய கோரியதில் என்ன தவறு நீதிபதி அவர்களே..?

இந்த சட்டத்தின் ஒட்டைகளையும் பயன்படுத்தி எனக்கு சில எதிர்சட்டங்களை காட்டி என்னை அடக்க முயலுவீர்கள். 47 வது பிரிவின் படி மது விலக்கை அமுல்படுத்தவும் சட்டம் இருக்கிறது அதை தடுக்கவும் 44 வது சட்டவிதி எடுத்து காட்டி வியாக்கினம் பேசுவீர்கள். எதற்கு அய்யா இந்த சட்டங்கள்.வழக்குபோடவும் வாதாடவும் டிவிகளில் பரபரப்பாக விவாதிக்கவும் தானா இந்த சட்டங்கள் இருக்கிறது. சட்டங்கள் செயல்படாதா..?

செல்வந்த சீமான்கள் குடிக்கிறார்கள் என்றால் அது பெரிய பெரிய நட்சத்திர பார்களில் தானே.?. .. கூலித் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள்,நடுத்தர மாத சம்பளக்காரர்கள் எல்லாம் குடிப்பது எங்கே..குடிக்க அழைப்பது எது .. ? அரசு மதுபானக்கடைதானே..! இதை எல்லாம் தடுக்க உங்கள் சட்டத்திற்கு மனசாட்சி கிடையாதா…? இதோ இந்த நீதிதேவதையின் கண்களை அவிழ்த்து வீதிகளில் உலாவவிடுங்கள்.இவள் இந்த கொடுமைகளை கண்டாவது மனம் வெம்பட்டும். சட்ட விதிகள் எழுந்து நிற்கட்டும். புது சட்டங்கள் பிறக்கட்டும்.

நீதிபதி அவர்களே..! பெண்ணுக்கு சம உரிமை என்று கூப்பாடு போடும் உங்கள் சட்டத்தின் படி. சட்டம் இயற்றும் எம் அரசு விற்கும் மதுபானத்தை இங்கே இப்போது நான் குடிக்கமுடியுமா ? தடைசெய்யப்படாத மதுபானம் தானே. அரசாங்கமே விற்கிறதே. எனக்கு வாங்கி கொடுக்க முடியுமா ?

நீதிமன்றத்தின் அந்த வழக்கு நடந்த அறை முழுவதும் நிறைந்த ஊடகத்துறை, வழக்கறிஞர்கள் உள்ளீட்டவர்களின் கைத்தட்டல்கள் புது ஒலியாக ஒலித்தது. செவி வழி புகுந்த இவ்வொலியின் அதிர்வால் கண்கட்டு அவிழ்ந்து புது கண்ணொளி பெற்றாள் நீதி தேவதை..!

சைலெண்ஸ் ! சைலெண்ஸ் ! என் சுத்தியை தூக்கிக்கொண்டு சத்தமிட்ட நீதிபதி…!

” தமிழ்ச் செல்வி என்ற இந்த இளம்பெண்ணின் ஆதங்கத்தையும், போராட்டகுணத்தையும் , சமூக அக்கறையும் இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. ஆனால் ஒரு மாநில முதல்வரை மாநிலத்தில் நடக்கும் குற்றங்களுக்கும் அரசு கொள்கைகளால் ஏற்படும் விபரீதத்திற்கு பொறுப்பு ஏற்கவைத்து அவரை கைது செய்ய எந்த சட்டமும் இந்திய குற்றவியல் சட்டத்தில் இல்லை. மேலும் கவர்னரை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது என்பதால் விதியை மீறி தமிழ்ச்செல்வி கூட்டத்தை கூட்டி சாலைமறியல் செய்தது குற்றமே. ஒரு பெண் என்றும் பாராமல் தமிழ்ச்செல்வியையும் தமிழ்ச்செல்வியுடன் போராடிய மற்ற மாணவர்ர்களையும் மிருகங்களை அடிப்பது போல தடியடி நடத்திய காவல்துறைக்கு கடுமையான கண்டனத்தை இந்த நீதிமன்றம் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் காவல்துறை ஆணையாளர் மற்றும் மாவட்ட கலெக்டர், தலைமைசெயலாளருக்கு இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.

மதுவிலக்க சட்டத்தை மாநிலத்தில் அமுல்ப்படுத்த போதிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசுக்கு உத்திரவிடுகிறேன். பொதுநலனுக்காக போராடிய தமிழ்ச்செல்வி மீது இருக்கும் காவல்துறையினரின் வழக்கை ரத்து செய்ய உத்திரவிடுகிறேன். தமிழ்ச்செல்விக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்திரவிடுகிறேன். இத்துடன் கோர்ட் கலைகிறது. வணக்கம்..!!”

***
நீதிமன்ற வாசல்..!

தமிழ்ச்செல்வியை மொய்க்கிறது ஊடக கேமராக்கள்.

“ இதுப்போல உங்களுக்கு போராடவேண்டும் என்று எப்படி தோன்றியது..? “

“ இந்த வழக்கு வெற்றி என்று கருதுகிறீர்களா.. மிஸ் தமிழ்ச்செல்வி..? “

“ முதல்வரை கைது செய்யவேண்டும் என்று கவர்னரை ஏன் பார்க்க சென்றீர்கள்.. நேரிடையாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கலாமே…? “

” நல்லா தமிழ் பேசுறீங்களே… நீங்க எழுத்தாளரா ? ”

“மருத்துவக்கல்லூரி மாணவியான உங்களுக்கு எப்படி லா தெரியும்? “

செய்தியாளர்களின் கேள்விகள் அனைத்திற்கும் மவுனத்தை மட்டுமே பதில் அளித்த தமிழ்ச்செல்வியின் அலைப்பேசி சிணுங்கியது

எதிர்முனையில் கார்த்திக், தமிழ்ச்செல்வியின் நண்பன்.

“ தமிழ் ! அமுதன் டெட்பாடியை வீட்டுக்கு கொண்டுவந்துட்டோம். நீ எப்போ வருவ…?.”

“ வந்துட்டு இருக்கேன்.. “

பேசிவிட்டு அலைப்பேசியை துண்டித்த தமிழ்ச்செல்வி.. தான் அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கத்தை அடக்கமுடியாமல் கதறி கதறி தேம்பி தேம்பி கண்ணீர் அழ ஆரம்பிக்கிறாள்.

நேற்று முன் தினம் குடிகாரன் ஒருவன் தாறுமாறாக ஒட்டி வந்த இருச்சக்கர வாகனத்தில் ஏற்படுத்திய விபத்தால் சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த தமிழ்ச்செல்வியின் காதலன் வழக்கறிஞர் அமுதன் அவள் கண் முன் பலியானதை நினைத்து விசும்பி தாங்கமுடியாமல் கண்ணீரை சிந்துகிறாள் !

மது, அதனால் ஏற்படும் குற்றங்கள் மற்றும் விபத்துகளால் உறவு இழந்து சிந்தும் தமிழ்ச்செல்வியின் கண்ணீர் துளிகளே கடைசியாக இருக்கட்டும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *