தமிழரசி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 26, 2023
பார்வையிட்டோர்: 2,295 
 
 

எங்கள் வீட்டுக்கு வந்தால், எல்லா அறைகளிலும் புத்தகங்கள் கிடப்பதைப் பார்க்கலாம். சமையலறை, பாத்ரூம், ஜன்னல், வாசல்படி எங்கும் ஒரு புத்தகம் உங்களுக்குத் தட்டுப்படும். ஆகவே, இது இளைஞர்கள் தங்கியுள்ள வீடு என எளிதில் நீங்கள் யூகித்துவிடலாம். 

நான்கு அறைகள் கொண்ட இந்த வீட்டில், ஆட்களின் எண்ணிக்கை ஐந்திலிருந்து பதினைந்து வரை ஏறுவதும் மாறு வதுமாக இருக்கும். பெரும் பாலும் ‘காம்பெடிஷன் எக்ஸாம் எழுதி கலெக்டர் ஆகும் கனவுகளில் இருப்பவர்கள் தங்கிப் படிக்கிற இடம் இது! 

பெருநகரத்தில் சிறுநகரம் எங்கள் வசிப்பிடம். நேதாஜி நகர் என்று பெயர். இந்தப் பெயருக்குப் பின்னால் ‘டைம்ஸ்’ என்று சேர்த்துக்கொண்டு, ஓர் இலவசப் பத்திரிகை ஆண்டுக்கு ஒரு முறை, நான்கு வாரம் வருவதும், பின் நிற்பதுமாக இருக்கிறது. 

இன்றைய தேதிக்கு வீட்டில் மகேந்திரனாகிய நான், காளிதாஸ், ரவிக்குமார், அலெக்ஸ், அப்பாராவ், பார்த்தசாரதி, சரவணன் ஆகியோர் இருந்தோம். 

எங்கள் வாழ்வில், நாங்கள் கேட்டுக் கொள்ளாமலே, ஒரு வயலின் இசை போல் குறுக்கிட்ட ஒரு ஜீவனைப் பற்றித்தான் இப்போது பேச்சு. 

எங்கள் வீட்டுக்கு அடுத்து, இசைப் பயிற்சிக்கூடம் ஒன்று உள்ளது. பெண்களுக்கானது. இளம்பெண்களுக்கானது. அழகிலாவது புஷ்டியிலாவது தேர்ச்சி பெற்றால்தான் அங்கே சேர்த்துக்கொள்வார்கள் என்பது, அவர்களது தோற்றங்களால் நாங்கள் கண்ட உண்மை! 

ஓர் இளங்காலைப் பொழுதில்நான் வீட்டுக்கு வெளியே நின்றிருந்த போது, விநோதமான ஓர் ஓசையைக் கேட்டேன். ‘போச்சு. கம்பி அறுந்தோ, கை தவறியோ எழுகிற நஷ்ட சங்கீதம் இது’ என எண்ணினேன். நளின விரல்களிலிருந்து எழும் நஷ்ட சங்கீதம்! 

வீட்டு வாசலில் நின்று, பார்வை தாழ்த்தாமல் நேர்ப் பார்வை பார்த்தேன். சத்தம் காதுக்கு நெருங்கி வந்தது. ஒலியின் திசை நோக்கிக் குனிந்தபோது, கறுத்த நிறமுள்ள இரண்டு நாய்க்குட்டிகளைப் பார்த்தேன். ஒரு வாரப் பிராயமே ஆன குட்டிகள்! தள்ளாடித் தள்ளாடித் தலை தட்டி விழுந்தும், ஓரஞ்சாய்ந்து நடந்தும் என்னருகே வந்தன. 

அவற்றைத் தொட்ட கணத்தில் அவை இந்த வீட்டுக்குச் சொந்தமாகிவிட்டன. ஒடுக்கப்பட்ட எவர்சில்வர் தட்டு ஒன்றை ஒதுக்கி, பாக்கெட் பாலைக் கத்திரித்து ஊற்றியதில், உணவு தொடங்கியது. பெயரிடுவதற்குமுன் எது ஆண், எது பெண் எனக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத் துக்கு ஆளானோம். 

பருகும் பால் போல, அவ்வளவு எளிதானல்ல… இந்தப் ‘பால்’ பிரச்னை. மளிகைக்கடை அண்ணாச்சிதான் சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, ‘இது ஆண், இது பெண்’ என ‘பால்‘பிரித்து உதவினார். பெண் நாய் குண்டாக இருந்தது. ஆண் வத்தலாக இருந்தது. 

பெண் நாய்க்கு ‘பிளாக்கி’ எனப் பெயரிட்டோம். மறுபரிசீலனையில், இவ்வளவு நேரடியான அர்த்தப்பாட்டை விளக்கும் பெயர் தேவையற்றதெனக் கருதி, பின் ‘தமிழரசி’ என முடிவாயிற்று. ஆண் நாய்க்குப் பெயரிடும்போது அலெக்ஸ், ‘வள்ளுவன்’ என்ற பெயரைப் பரிந்துரைத்தான். முதல் கணத்தில், அது மொழிப்பற்று போலக் காட்சியளித்தாலும், அந்தப் பெயர் ஆழத்திலுள்ள அவனது குறும்பைக் காட்டிவிட்டது! இறுதியில், ‘ரோமியோ’ என்ற பெயர் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அது தன் பெயரைக் காப்பாற்றும்விதமாக ஒருபோதும் நடந்துகொள்ளவில்லை! 

ரோமியோ, உடல், பொருள், ஆவி அனைத்தையும் தமிழரசிக்கு விட்டுத் தரத் தயார் என்பதுபோலவே நடந்துகொண்டது. தட்டில் சோறு வைத்தால், முக்காலே மூணு வீசம் தமிழரசிக்குதான்! சிந்தினது, சிதறினதிலேயே ரோமி திருப்தியடைந்து விடும். 

எங்களை ஏறெடுத்தும் பார்க்காத சில வயலின்/கிடார்/மிருதங்கப் பெண்கள், நாய்களுக்கு வர்க்கி, பன், ரொட்டி, பிஸ்கெட் முதலியன வழங்கி, எங்கள் அருமைக் கறுப்புகளை நன்றிக்கடனுக்கு நாயாக்கினார்கள். தமிழரசி கொழுத்து வளர்ந்தது. ரோமி, ‘பிறந்தது முதலே இளைத்தேதான் இருக்கிறேன் என்பதான தோற்றம் காட்டியது. இரண்டும் சாலையில் விளையாடினாலும், அடிபடுவது என்னவோ ரோமிதான்! மூன்றாவது முறை ஸ்கூட்டரில் அடிபட்டபோது ரோமிக்கு படுகாயம். குற்றுயிரும் குறையுயிருமாக அது முனகித் தவித்தது. 

அதே வாரத்தில், விலங்கு நல அமைப் பொன்றின் குரலை வானொலியில் கேட்டிருந்ததால், அவர்கள் நல்கிய நம்பருக்கு போன் செய்தேன். ஏழு டன் எடை தாங்கும் மினி லாரி ஒன்றைக் கொண்டுவந்து, பூஞ்சை ரோமியைக் கூட்டிப் போனார்கள். “சரியானவுடன் கொண்டுவந்து விட்டுரு வீங்களா?” என்றதற்கு, ‘சரி சொல்லிப் போனார்கள். ஆனால், மறுபடி நாங்கள் ரோமியைச் சந்திக்கவே இல்லை! 

சில மாதங்களில் தமிழரசி தனக்கு நேர்ந்தது இன்னதென அறியாமலே மாற்றத்துக்கு உள்ளானது! தெருநாய்களிடம் அதற்குக் கிராக்கி அதிகமாகிவிட்டது. குறிப்பாக, ஆண் நாய்கள் குரைப்பொலியில் வித்தியாசம் காட்டின. 

தமிழரசி, எதிர்ச்சாரியில் கேட்டை எல்லையிட்டு வாழும் ஸ்டீபனுடன் லேசான நெருக்கம் காட்டியது. இரு பக்கக் கதவுகளும் திறந்திருக்கும்போது சந்திக்கத் தடை இல்லை! 

நாயுலகில், பருவத்தின் வாசனையை தான் தெருவில் இறைத்துவிட்டிருப்பது பற்றிய பிரக்ஞையே தமிழரசியிடம் இல்லை! ஆனால், நீண்ட மூக்குகளுடைய நாய்கள், காற்றின் பனிப்பொதிவின் ஊடாக முதலில் வாசனையைக் கவ்வின. பிறகு தமிழரசியைத் தீண்டின! என்ன நடக்கிறது என்று புரியுமுன்னரே, முற்றாக வலையில் விழுந்துவிட்டது அது! 

புஷ்பவதியாக இருந்த தமிழரசி கர்ப்பவதியாகிவிட்டது. இந்தத் தகவலை அதன் நடையின் குலுக்கு, பாவனை இவற்றைக்கொண்டு கண்டறிந்து மளிகைக்கடை அண்ணாச்சி எடுத்து இயம்பினார். 

அதன் பின் தமிழரசிக்காக பிஸ்கெட் டுகள் வாங்குவது அதிகரித்தது. காசு தாராளமாக இருந்ததால், சிங்கப்பூர் பேரீச்சம்பழம்கூட வாங்கிப் போட்டோம்! தமிழரசியின் தாய்மை நிலை, அதன் மீதான எங்கள் அக்கறையை அதிகமாக்கியது. அதே சமயம், இது குட்டிகள் ஈன்றபின் என்ன செய்வது என்ற கவலை வந்தது. ஒற்றைக் குட்டி போடுவதில் நாய்கள் இனம் நம்பிக்கை இழந்துவிட்டது! கூட்டாலோசனைக்குப் பிறகு, தமிழரசியையும் குட்டிகளையும் விலங்கு நல அமைப்பிடமே ஒப்படைப்பது என முடிவு செய்தோம். 

நான்கு குட்டிகளை ஈன்றதும் மீண்டும் போன் செய்தோம். ஏழு டன் ஏற்றிப் போகும் அதே வண்டி வந்தது. குட்டிகளும் தாயும் எங்களை விட்டுப் போனதும், நாங்கள் நாயில்லாத அநாதைகளானோம். ஆறு மாத காலம் ஆகியிருக்கும். இதனிடையே சரவணன், ‘சரவணபாரதி’ என்ற பெயரில் கவிதை எழுதி, ஒரு புத்தகத்தில் வெளியானது. 

எக்ஸாம் பாஸ் ஆகுமுன்னரே, ‘தான் ஐ.ஏ.எஸ். ஆனால் என்ன ஆகும்? இந்த அதிகார மையம், கார்க்கதவு திறந்திடுதல்.’ என்றெல்லாம் அவனது இலக்கிய மனம் அதிதீவிரக் குழப்பக் கேள்வி எழுப்ப, சரியாகத் தேர்வு தினத்தன்று அவன் மனநல மையத்தில் இருந்தான். 

நான் எக்ஸாமும் தேறவில்லை; மனோசிகிச்சைக்கும் போகவில்லை! 

நல்ல கோடை தகிக்கும் வெண்பகல் ஒன்றில், விலங்கு நல அமைப்பிடமிருந்து போன் வந்தது.. “சார், உங்க நாயைக் கொண்டுவந்து விட்டுடறோம்!’ 

“சரி- குட்டிகள் என்னாச்சு?” 

“குட்டி களைத் தர மாட்டோம் சார். ரூல்ஸ்ல இடமில்லை!” 

“பரவாயில்லை! தமிழரசியைக் கொண்டுவாங்க!” 

மறுநாள், தமிழரசி வந்தபோது, எங்கள் வீட்டில் யாருமில்லை. அது, வீட்டின் முன்னால் நிற்கும் காருக்கு அருகில் படுத்திருந்த போதுதான், நான் வீட்டினுள் நுழைந்தேன். தமிழரசி என் உணர்விலேயே பதிவாகவில்லை. அது அந்த அளவுக்கு சொறிநாய் போல் காட்சி தந்தது. 

வீட்டினுள் நுழைந்ததும், ‘வெளியே ஒரு நாய், டெலிபோன் செய்தி – இரண்டும் இணைந்த ஒரு நிரல் மூளையில் தோன்ற, வேகமாக வெளியில் ஓடி வந்தேன். அது.. அது.. தமிழரசியேதான்! குரைக்கவும் முனகவும்கூட தெம்பற்றுப் படுத்து இருந்தது அது. 

நான் விலங்கு நல அமைப்புக்கு போன் போட்டேன். “சார், எங்க குட்டிகளைக் கொடுத்துடுங்க. ரோமியோவைக் கொடுத்துடுங்க.நீங்க எப்படிப் பார்த்துக்குவீங்கனு தெரிஞ்சுபோச்சு!” 

“ரோமி செத்துப்போச்சு சார். குட்டிகளைத் தர முடியாது! ரூல்ஸு” 

தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. நான் தமிழரசியிடம் வந்தேன். 

அது ஊன் மறுத்தது. வீட்டினுள் உள்வர மறுத்தது. காருக்கு அடியில் போய், ரூபம் திரண்ட நிழலைப் போல் படுத்துக்கொண்டது. 

இரவு நண்பர்கள் கூடிக் குமுறினோம். போலீஸ், கன்ஸ்யூமர் கோர்ட் எனப் பலவற்றை ஆராய்ந்து பேசினோம். கோயிலில் காசு வெட்டிப் போடுவது பற்றிப் பேச, எங்கள் அறிவு இடம் தரவில்லை! 

மறுநாள், காலை உணவுக்கு அழைத்த போதும் தமிழரசி வர மறுத்தது. வாங்கிப் போட்ட பிஸ்கெட்டுகளில் எறும்புகள் ஊர்ந்தன. 

‘என்ன செய்வது?’ என்றகேள்வியுடன் வெளியேறிப் போனேன். ஆனால், நெடுங்காலத் தர்மசங்கடத்துக்கு அது எங்களை ஆளாக்கவில்லை! 

மாலையில் திரும்பி காருக்கு அடியில் குனிந்து பார்த்தபோது, வயிறு அலை எழும்பாமல், தலை தரை தொடாமல் விறைத்திருந்தது. 

போய்விட்டது! அசையாக் கருநிழல்; சோகத்தின் பருண்மை உணர்வேதான் அது. மாநகராட்சிக்கு போன் செய்தேன். ‘பணியாளர்கள் போய்விட்டார்கள். இனி, நாளைக் காலையில்தான் கவனிக்க முடியும்’ எனப் பதில் வந்தது. 

எங்கள் தெருவின் துப்புரவாளரை, வீடு விசாரித்துத் தேடிப் போனேன். குளித்து முடித்து, பவுடர் போட்டு நின்றிருந்தார். சேதியைச் சொன்னதும், “குளிச்சுட்டேனே!” எனச்சில விநாடிகள் தயங்கியவர், சட்டையைக் கழற்றிவிட்டு, பிளாஸ்டிக் பை ஒன்றைத் தூக்கிக்கொண்டு வந்தார். 

காருக்குக் கீழ் குனிந்து, அதன் கால்களைப் பற்றி இழுக்க,படுத்த இடத்தில் வெற்றிடம் நின்றது. தமிழரசியை மடக்கித்திணித்து, பிளாஸ்டிக் பையில் போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தார். தெருமுனை வரை அவர்கூட நடந்துவிட்டு, பிறகு வீடு திரும்பினேன். 

தமிழரசி படுத்திருந்த இடத்தை ஸ்டீபன் நுகர்ந்து பார்த்து, சுற்றிச் சுற்றி வந்துகொண்டு இருந்தது. பக்கத்தில், சாயங்காலத்தின் வயலின் சத்தம் மெலிதாகக் கேட்டது. 

எனக்கு, பிறந்தகத்துக்கு வந்து செத்துப்போகிற பெண்கள் நினைவுக்கு வந்தார்கள்! 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *