கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 11,940 
 

சிங் எனும் துணைப் பெயர் கொண்டவர்கள் எல்லாம் பஞ்சாபி என எண்ணிக்கொள்ள வேண்டாம். தன்ராம் சிங் பஞ்சாபி அல்ல. கேட்டால், அவன் தன்னை நேபாளி என்பான். நேபாளிகளுக்குள்ளும் சிங் என்று துணைப் பெயர் உண்டு. ஆனால், உண்மையில் தன்ராம் சிங், திபேத்துக்காரன்.

நேபாளிகளுக்குச் சற்று மேலான தோற்றப்பொலிவு, தன்மையில் கூரான நிறம் உண்டு. திபேத்துக்காரர்களும் வெள்ளை நிறம்தான்; கண்கள் இறுக்கமானவைதான்; முகத்திலும் உடலிலும் நிரப்பாக மயிர் வளர்வதில்லைதான்; எனினும், நேபாளிகள் வேறு, திபேத்தியர்கள் வேறு. நேபாளி என்று சொன்னால், வடநாட்டில் சமூக அங்கீகாரம் சற்று அதிகம். எனவே, கூர்க்கா வேலை செய்யும் யாரைக் கேட்டாலும், நேபாளி என்பார்கள். நேபாளிகளுக்கு அதில் சற்று மனவருத்தம் உண்டு. தன்ராம் சிங்கைத் துளைத்துக் கேட்டால், ‘திபேக்’ என்பான். அவனுக்கு ‘திபேத்’ என்று சொல்ல வராது.

எனக்கு மும்பையில்தான் கூர்க்காக்கள் முதலில் அறிமுகம். நாற்பது பேர் வேலை செய்த எங்கள் தொழிற்சாலையில், முதலில் மகேந்திர சிங் என்றொரு கூர்க்கா இருந்தான். அவன் அசல் நேபாளி. தொழிலாளர்கள் யாரும் அவனைச் சீண்ட முடியாது. தலையில் ஜெனரல்

மானெக்ஷா பாணி தொப்பி அணிந்திருப்பான். முழுக்கைச் சட்டையும், காலில் சாக்ஸ§ம் பூட்ஸ§ம், காக்கி கால்சட்டையும், இடையில் பெல்ட்டில் செருகிய சற்றே வளைந்து கூரான ‘குக்ரி’யும் என்று தோரணையாக இருப்பான். வேறு பெரிய கம்பெனி ஒன்றில், அதிக சம்பளத்தில் வேலை கிடைத்து மகேந்திர சிங் சென்ற பின், அவன் இடத்துக்கு வந்தவன்தான் தன்ராம் சிங்.

தன்ராம் சிங்கிடம் அவ்வளவு மிடுக்கு போதாது. அச்சுறுத்தும் உடல் மொழியோ பார்வையோ கிடையாது. கடுமையாகத் திட்டினாலும் இளித்துக்கொண்டு நிற்பான். அவனுக்கு ஊரில் ஒரு குடும்பம் இருந்தது. இருக்கத்தானே செய்யும்? பெண்ணும் இரண்டு பையன்களும். இரண்டாண்டு களுக்கு ஒருமுறை மட்டுமே ஊருக்குப் போய்வரும் அபாக்யவான் அவன்.

பதினைந்து, இருபது பேர் சேர்ந்துதான் பயணமாவார்கள். ரயிலில் முன்பதிவெல்லாம் பழக்கமில்லை. ஜெனரல் கோச்சில் சேர்ந்தாற்போல தடுப்புகளில் இடம்பிடித்துக்கொள்வார்கள். மும்பையில் இருந்து வாரணாசி வரை ஒரு ரயில். இறங்கி வண்டி மாறி பாட்னா, பரூணி, மன்சி. மறுபடியும் வண்டி மாறி மீட்டர் கேஜில் சிலிகுரி. அங்கிருந்து மலைப் பாதையில் மங்கன் வழி சிக்கிம் எல்லை வரை கிழட்டு டப்பா பஸ். பிறகு, மலைப் பாதையில் தலைச் சுமடாகவும் மட்டக் குதிரைகளிலும் பாரம் ஏற்றிக்கொண்டு, எட்டு முதல் பத்து நாட்கள் வரை நடை. காலை எட்டு மணிக்கு மேல் ஆரம்பித்து பிற்பகல் நாலு மணி வரை மலைப் பயணம். இரவு மலைக் கிராமம் ஒன்றில் கிடை. உணவுக்குச் சுட்டு எடுத்துப்போகும் ரொட்டி. வண்டி மாறி, அடுத்த ரயிலுக்குக் காத்திருக்கும்போது, தேவைக்கு மறுபடியும் ரொட்டி தட்டிக்கொள்வார்கள். மலை ஏறும்போது இரவில் சுடும் ரொட்டிகள் பகலுக்கு. வர்ண டிரங்குப் பெட்டிகளில் இரண்டு ஆண்டுகளாகச் சேகரித்த துணிமணிகள், வெள்ளி ஆபரணங்கள் இருக்கும். இந்திய நாணயம் அவர்கள் ஊரில் செல்லுபடி ஆகாது.

கூர்க்காக்கள் அவ்வளவாகச் சிறு விடுப்புகள் எடுப்பதில்லை. நிர்வாகம் காருண்ய அடிப்படையில் கூர்க்காவுக்கு மாத்திரம் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை எல்லா விடுப்புகளையும் சேர்த்து மொத்தமாக வழங்கும். ஊருக்குப் போகும்போது தற்காலிக மாற்று ஏற்பாடு செய்துவிட்டுப் போவார்கள். போக வர பாதி லீவு போய்விடும். ஈராண்டுக்கு ஒரு முறை ஒரு மாதம் தாம்பத்யம். தன்ராம் சிங் விடுப்பில் போனதையே மறந்திருக்கும்போது, ஒருநாள் காலையில் சிரித்தபடி சல்யூட் அடிப்பான். ‘சேஞ்ச் ஆஃப் கார்ட்’ எப்போது நடந்தது என்றே நமக்குத் தெரியாது.

அலுவலக நேரம் முடிந்து, அதிகாரி களும் சிப்பந்திகளும் போன பிறகு, அவனது இன்னொரு உலகு மெள்ளக் கண் அவிழ்த்துப் பார்க்கும். தொழிற் சாலை மேலாளர் காலையில் அரை நாள் மட்டும் வந்துவிட்டுப் போவார். மற்றபடி அலுவலகம் எனது கட்டுப் பாட்டில் இருந்தது. ஸ்டோர் சாவி, அலுவலகச் சாவி, மெயின் டோர் சாவி எல்லாம் என் கைவசம். எனவே, சாவதானமாகக் கடைசி ஆளாகக் கிளம்புவேன். சில சமயம் எதற்கடா வீட்டுக்குப் போகிறோம் என்றிருக்கும். ரயிலில் சற்று தள்ளல் குறையட்டும் என்று சில நாட்களில் தாமதமாகக் கிளம்புவேன். சில சமயம் தொழிற் சாலையிலேயே தங்கிவிடுவதும் உண்டு. வளைவினுள் நாலைந்து தொழிற்கூடங்கள். எல்லோருக்கும் பொதுவாக கண்ணூர்ப் பக்கம். கக்காடு ஊரைச் சேர்ந்த தாவூத் மூசான் கேன்டீன். மாதக் கணக்கு உண்டு எனக்கு. இரவுக்கு சொல்லி வைத்தால் சப்ஜி செய்து, ரொட்டி சுட்டுத் தருவான்.

‘‘ஷாப், கர் நை ஜாத்தா?’’ என்பான் தன்ராம் சிங்.

மாலை அவனது வேலை ஆரம்பமாகி இருக்கும். துவைத்துக் குளித்துவிட்டு, ரொட்டி போட ஆரம்பிப்பான். ஆறரை மணிக்கு மேல் அக்கம்பக்கம் வேலை பார்க்கும் அவனது கூட்டாளிகள் சிலர் எட்டிப் பார்ப்பார்கள். கசா முசா என்று உரையாடல் கேட்கும். இரண்டு பேர் அவனுடனேயே தங்குபவர்கள். அலுமினிய டப்பாவில் எப்போதும் ரொட்டி மாவும் பச்சரிசியும் இருக்கும். மஜ்ஜித் பந்தரில் வாங்கிய பருப்பு, கொண்டைக் கடலை, உப்பு & புளி சமாசாரங்கள், கடுகு எண்ணெய், மண்ணெண்ணெய் பம்ப் ஸ்டவ். இரவுக்கும் காலைக்குமாக, வேளைக்கு தலைக்கு நான்கு ரொட்டிகள். கடைசியில் காதடைக்காமல் இருக்க கொஞ்சம் போல சோறு. அவர்களுக்கு காலை, இரவு என இருவேளை உணவுதான். மதியம் எதுவும் உண்பதில்லை.

‘‘தோ ரொட்டி காவ் ஷாப்’’ என்பான் தன்ராம் சிங். சிலசமயம் சுடச்சுட இரண்டு தின்றிருக்கிறேன். பூண்டு சதைத்துப்போட்டுக் கடுகெண்ணையில் தாளித்த டால், மணமாக இருக்கும். சில சமயம் மூசாக் கடை சப்ஜியும் சப்பாத்தியும் இல்லையேல் டால் & சவால். சாப்பிட்ட பின் சற்று நேரம் கதை பேசிக்கொண்டு இருப்பார்கள். ஞாயிறுகளில் ஆட்டுக் கறி சமைப்பார்கள். ஆட்டுக் கறி என்பது தலைக் கறி. தலை வாங்கக் காசில்லை என்றால், ஆட்டுக் காதுகள் வாங்கிக்கொண்டு வருவான் மலிவாக. தீயில் ரோமத்தைச் சுட்டுப் பொசுக்கி, கழுவி, துண்டு துண்டாக நறுக்கிச் சமைப்பார்கள். காசிருந்தால் குடல், அது விருந்து.

எப்போதாவது தன்ராம் சிங்குக்கு கடிதம் வரும். முகவரி எனது கையெழுத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். புதிய கடித உறைகளில் மொத்தமாக மும்பை முகவரி எழுதி வாங்கி, இரண்டு ஆண்டுகளுக்கு வரும்விதத்தில், ஊருக்குப் போகும்போது கொடுத்துவிட்டு வருவான். யாரிடம் கொடுத்து, இந்திய எல்லைக்குள் கொண்டுவந்து, எந்த ஊரில் போஸ்ட் செய்வார்கள் என்று தெரியாது. தந்தியும் தொலைபேசியும் உதவாத மலைப் பிரதேசங்கள். தாய், தகப்பன், பெண்டு பிள்ளைகள், உடன்பிறப்புகள் இறந்துபோனாலும் தபால் உறைதான். பத்துப் பதினைந்து நாட்கள் சென்று கிடைக்கும் தபால் பார்த்து, நேரில் செல்ல மேலும் பத்துப் பன்னிரண்டு நாட்கள் என்றாலும், உயிரின் பிரிவல்லவா?

மாலையில் கூடும் கூட்டாளிகள் மூலம் செய்திபோகும், ஒவ்வொரு உறவுக்கார கூர்க்காவுக்கும். ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணிக்கு சௌபாத்தி கடற்கரையில் கூடுவார்கள். மர நிழல் பார்த்து வட்டமாக உட்கார்ந்து, கண்கள் கலங்க நினைவுகளைக் கூறவைத்து, சடங்குகள் செய்து, தீ வளர்த்து, அதில் தகவல் வந்த கடிதத்தை உறையுடன் சேர்த்து எரித்து, பின்பு நெருப்பை ஆற்றி, சாம்பலைக் கொண்டுபோய் அரபிக் கடலில் கரைத்து, மொட்டை அடித்து, சமுத்திரத்தில் குளித்து, அவரவர் நினைவு சுமந்து பிரிந்துபோவார்கள்.

கடிதம் வந்த மறு ஞாயி றுக்குள் தன்ராம் சிங் மொட்டை போட்டிருந் தால் தெரிந்துகொள்ள லாம். எப்படியும் அவனுக்கு ஆண்டுக்கு மூன்று, நான்கு மொட்டைக்கு பிழை வராது. மொட்டை போட்டி ருந்தால், சக தொழிலாளர் கள் எப்போதும் தன்ராம் சிங்கை கலாட்டா செய் வார்கள். சாவு பரிகாசத்துக் குரியதா? எளியதோர் சிரிப்பில் அவன் துக்கம் உறைந்து இருக்கும்.

தன்ராம் சிங் மாத்திர மல்ல, எந்த கூர்க்காவையும் கடுகடுத்த முகத்துடன் நான் கண்டதில்லை. முகம் ஏறிட்டுப் பார்த்த உடன், மலரும் சிரிப்பு; உன் ஆதரவில் என் வாழ்க்கை என்பது போல.

தொழிற்சாலையில் இருந்து நடந்து போகும் தூரத்தில் சினிமா தியேட்டர் ஒன்றிருந்தது. இரண்டே ரூபாய் டிக்கெட். வகுப்பு பேதமில்லாமல் கிடைத்த இடத்தில் உட்காரலாம். காற்றாடி சுழலாது, மூட்டைப் பூச்சி ரத்தம் உறிஞ்சும், வெற்றிலைப் பாக்கு குளம் எங்கு வேண்டு மானாலும் உமிழப் பட்டிருக்கும், புழுங்கிய வாடை அடிக்கும். தன்ராம் சிங்குக்கு சத்ருகன் சின்ஹா படங்கள் பிடிக்கும். சினிமா பார்க்க சில சமயம் வாரக் கடைசி யில் இரண்டு ரூபாய் கடன் கேட்பான். ஏழாம் தேதி சம்பளம் வாங்கிய கையோடு சில்லறை மாற்றி வைத்துக் கொண்டு, நிறைய பேருக்கு தன்ராம் சிங் இரண்டிரண்டு ரூபாயாகக் கடன் தீர்த்துக்கொண்டு இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

ஒருமுறை விடுமுறையில் ஊர் சென்று திரும்பியபோது, வளைந்து கூரான, கைப்பிடியில் கைத்திறன் கொண்ட ‘குக்ரி’ ஒன்று கொணர்ந்து தந்தான். சிலிகுரி சந்தையில் வாங்கிய தாகச் சொன்னான். அவனது ஊருக்குப் பக்கத்தில் பாயும் ஆறொன்று உண்டென் றும், அதன் பெயர் இன்னதென்றும் பலமுறை சொல்லி இருக்கிறான். எத்தனை யோசித்தும் எனக்கு அதன் பெயர் நினைவுக்கு வரவில்லை.

பதினெட்டு ஆண்டுகள் முன்பு, என் மும்பை வாழ்க்கையின் கடைசி ஆண்டில், கோடை விடுமுறைக்கு ஊருக்குச் சென்று திரும்பியவன், கூடவே ஒருவனைக் கூட்டி வந்தான். காக்கிச் சீருடையும், தொப்பியும், பூட்ஸ§ம், பெல்ட்டும், கத்தியுமாக கூர்க்கா உடையில் இருந் தான். திபேத்திய சிற்றர சொன்றுக்கு இளவரசனாக இருக்கும் எல்லா அங்க லட்சணங்களும் இருந்தன. முகம் வசீகரமாக இருந்தது. ‘‘அமாரா அமாரா ஷாப்’’ என்றான் தன்ராம் சிங். ‘‘மகனுக்கு எப்போது திருமணம் செய்தாய்’’ என்றேன். ‘‘விடுமுறையில் போயிருந்தபோது’’ என்றான்.

அதே ஆண்டில் நான் கோவைக்குக் குடி பெயர்ந்தேன். அதன் பிறகு, அலுவல்நிமித்தம் மும்பை சென்றாலும் எனக்கு அந்த தொழிற்சாலைக்குப் போக வாய்க்கவில்லை. தொழிற்சாலையும் மூடப்பட்டு, அந்த இடம் கம்பெனி குடோன் ஆயிற்று. தன்ராம் சிங் இருப்பானோ, இல்லை என்னைப் போல ஓய்வு பெற்றுவிட்டானோ? ஓய்வுபெற்றாலும் ஊருக்குத் திரும்ப இயலாது. என்னால் திரும்ப முடிந்ததா?

எனக்கு இன்று தன்ராம் சிங்கைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது; பார்ப்பது சாத்திய மில்லை எனத் தெரிந்தும். ஒரு வேளை புலம் பெயர்ந்து, தன்ராம் சிங் தென்னாட்டுத் தெருக்களில், இரவில் மூங்கில் கழி தட்டிக்கொண்டு, நீண்ட விசில் ஊதிக் கொண்டு, கண் விழித்து நடந்துகொண்டு இருக்கக்கூடும். கூலியாக மாதம் ஐந்தோ, பத்தோ வீட்டுக்கு வீடு யாசித்துப் பெறுவானாக இருக்கும். மாதத்தின் முதல் வாரத்தில், உங்கள் வீட்டின் முன் வந்து சிரித்தபடி நின்றால், அருள் கூர்ந்து அவனுக்கு ஐந்து ரூபாய் தாருங்கள், கனவான்களே!

– 15th ஆகஸ்ட் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *