தண்ணீர்த் தொட்டி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 3, 2023
பார்வையிட்டோர்: 1,501 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘உந்த அலுவலுக்கு நீங்கதான் தோது…ஆற்றை சொல்லையும் சனம் கேக்காது’.

ஊர்ப் பிரமுகர்கள் தேன் சொரிய, பால் சொரியப் பேசிப் பென்னம் பெரிய வேண்டுகோளொன்றை விடுத்துச் சென்று விட்டனர். சாய்மனைக் கதிரையில் கிடந்து, தில்லையம்பலம் அங்குமிங்கும் புரண்டு கொண்டிருக்கின்றான்! விடுத்திருக்கும் அன்பான வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளுவதா அன்றேல் கை கழுவுவதா இந்தப் பிரச்சினை தான் அவனது மனப் போராட்டத்திற்குக் காரணம். மொழிப் பிரச்சினை போல் அவ்வேண்டுகோள் அவனைத் திக்குமுக்காட வைக்கிறது.

‘ஊர்ப் பெரிய மனிசரைக் காய்வெட்டுவதா…’

‘கஷ்டப்பட்டாலும், கூழுக்குக் கஞ்சிக்கு இல்லாததுகளுக்கு உதவினால் நல்லது. கண்டவையிட்டயும் குடுத்தாச் சுருட்டிக் கொண்டு போயிடுவினம். அது தான் என் தலையில் கட்டினவை.’

தில்லையம்பலத்தின் மனம் சலிக்கின்றது. பொதுப் பணியென்றால் முன்னுக்கு நின்று முடிச்சை அவிழ்த்துவிடுபவன் அவன். இன்னமும் அந்த விலாசம் ஊருக்குள் நிலவுகின்றது. தனது வீட்டு முற்றத்தை அவன் ஏறிட்டுப் பார்க்கிறான். முற்றத்தில் புழுதி பறக்கிறது. கொழுத்தும் வெயில் அவன் பார்வையை மழுங்கச் செய்கிறது.

‘இஞ்சேரும்…’ குரல் உரத்து ஒலிக்கிறது.

‘இப்பத்தான் தேசிக்காய் கரைக்கிறன்.. கொஞ்சம் பொறுங்க’ மனைவியின் உத்தரவை ஏற்று, நிமிர்ந்தவன் மீண்டும் சாய்மனையில் சாய்கிறான்.

குழப்ப நிலையில் இருந்த அவனுக்கு நல்லதோர் தீர்வு பிறந்துவிட்டதென்ற களிப்பு!

‘இந்தாங்க…’அலுமினிய லோட்டா நிறையத் தேசிக்காய் ரசத்தை மனைவி சற்குணவதி நீட்டுகிறாள். அவன் வாங்கிக் கொள்கிறான்.

‘அந்த வேட்டியைக் கொஞ்சம் கொண்டு வா..’

குமையும் அகத்தை முகத்தில் நிழலாடவிட்டு, கணவனைச் சற்குணவதி நோக்குகிறாள். அவள் நின்ற இடத்தை விட்டு அகலவில்லை.

‘நான் என்ன சொன்ன நான்’ அலுமினிய லோட்டாவைக் கீழே வைத்தபடி தில்லையம்பலம் கடுகடுக்கிறான்.

‘இந்த வெயிலுக்க எங்க வெளிக்கிடப் போறியள்?’ கணவனின் பேச்சை விளங்காதவள் போல நடித்துக் கொண்டு, சற்குணவதி அறையை நோக்கிச் செல்கிறாள்.

‘நல்ல காரியமெண்டாலும் சரி, கெட்டகாரியமெண்டாலும் சரி எப்பவும் இவளுக்கு இந்தக் கேள்விதான்’. தில்லையம்பலம் புறுபுறுத்துக் கொண்டு நேரத்தைக் கடத்துகிறான்.

‘போம் குடுத்து முடிஞ்சிது, இப்ப வரட்சி நிவாரணம் வந்திருக்கு. ஊருக்க கதைச்ச கதை தெரியுந்தானே’ வேட்டியையும், சால்வையையும் கணவனிடம் கொடுத்தபடி சற்குணவதி முறையிடுகிறாள்.

‘ரேப்பில பதிச்ச மாதிரி அதுகள் இன்னும் இவளிட்டக் கிடக்கு. ஊரவை என்னத்தைத் தான் கதைக்க மாட்டீனம்….. நான் உள்ளிட்டா நறுக்கா நிப்பன். அந்தக் காமகாரந்தான்’ எழுந்து நின்று தில்லையம்பலம் சாரத்தை அவிழ்க்கிறான்.

‘இஞ்ச வந்து தலைக்குத்து, மண்டைக்குத்தெண்டு நிக்கக் கூடாது’.

‘உந்த வெய்யில் தலைக் குத்தை, மண்டைக் குத்தையா குடுக்கும். ஆளை ஈயம் மாதிரி உருக்கிப்போடும்’

‘ஊர் அலுவலெண்டா உங்களை நெருப்பில வைச்சுக் காய்ச்சினாலும் தெரியாதே’.

களைந்து கீழே கிடந்த சாரத்தைச் சற்குணவதி எடுத்துக் கொள்கிறாள்.

தில்லையம்பலத்தின் நிவாரண யாத்திரை தொடங்கிவிட்டது. முற்றத்தில் இறங்கிவிட்டான். வெந்து போயிருந்த தரை அவன் பாதத்தைக் கொதிக்கச் செய்கிறது. பாதங்களை நிமிர்த்திக் குதிகளால் நடக்கிறான்.

‘செருப்பைக் கொழுவிக் கொண்டு போங்களன்.’

‘அறுந்தெல்லே போச்சு…’ தில்லையம்பலம் சலிப்போடு கூறுகிறான்.

‘ஒரு செருப்பு வாங்க எங்களிட்ட வக்கில்லை. ஊர் முழுக்க நிவாரணக் காசில சுதி பண்ணுதுகள்’.

‘உன்னை ஆரு உத்துயோகத்தனை முடிக்கச் சொன்னது.

கிழுவை மரத்தில் சாத்தி நின்ற சைக்கிளை எடுத்துக் கொண்டு தில்லையம்பலம் படலையை நோக்கி நடக்கிறான்.

‘ஆகவும் கடும்புடி புடிச்சு ஊருக்க பகையைக் காட்டாம…இந்த முறை எல்லாரையும் சேத்துப் போடுங்க’ தெருவோரத்தில் நின்று கொண்டு சற்குணவதி கணவனுக்கு ஆலோசனை கூறுகிறாள்.

கண்ணைக் கூச வைக்கும் வெயில்! கதிரவன் பயங்கரவாதியாக இயங்கிக் கொண்டிருக்கிறான். தில்லையம்பலத்தின் வெறும் மேனி தீக் குழிக்கின்றது. குழிகள் விழுந்துள்ள பாதையில், நிதானத்தை இழக்காமல் சைக்கிளை ஓட்டுகிறான். கிழக்கூரை நோக்கிச் சைக்கிள் போய்க் கொண்டிருக்கிறது.

தான் பொறுப்பேற்ற பணியை எப்படியாவது குற்றம், குறை இல்லாது முடித்துவிட வேண்டுமென்று அவன் தனக்குள் கங்கணம் கட்டுகின்றான். சற்குணவதி சொன்னவைகள் அவன் மனதைப் பிய்த்துக் குத்துகின்றன. அவள் சொன்னவைகள் பாதிக்குமேல் உண்மைதான். ஊதியமற்ற பணி! தன்னைப் போன்றவர்கள் ஒதுங்கிக் கொண்டால் முழுக்கிராமமுமே பாதிப்பிற்கு உள்ளாகும்! அதைக் கண்டு நெகிழப் போவதும் தானேதான்! தில்லையம்பலம் மீண்டுமொரு முறை சபலங்களிலிருந்து விடுபடுகிறான்.

அவன் புளியடிச் சந்திக்கு வந்துவிட்டான். இன்னும் கொஞ்சத் தூரந்தான். முதல் தரிப்பு சின்ன மணி வீட்டுக் கேற்றிற்கு முன் நிற்கிறது. தலைப்பாகையைக் குலைத்து, முகத்தில் வழிந்து கொண்டிருக்கும் வியர்வையைத் துடைக்கிறான். சைக்கிள் மணி ஓசை கேட்டு, சின்ன மணி கேற்றடிக்கு விரைந்து வருகிறான். தில்லையோ ‘வாய்க்குள் நிரப்பி வைத்திருந்த வெற்றிலை எச்சிலை ஓரமாகக் கொப்பளித்தபடி சின்னமணி திகைப்பிலிருந்து சாந்த நிலைக்கு வருகிறான்.

‘நிப்பியோ எண்டு யோசிச்சன்…’

‘இந்தக் காண்டியத்துக்க எங்க போறது, வீட்டுக்கதான் இருக்க முடியுதா? மரங்களுக்குக் கீழதான் இப்ப எங்கட நடமாட்டம்’ தில்லையம்பலத்திற்குச் செங்கம்பள வரவேற்பு.

‘உங்களையெல்லாம் உப்புடி வீடுகளுக்க அடஞ்சு கிடக்காமச் செய்யத்தான் இப்ப ஒரு புது வேலை வந்திருக்கு. நான் இப்ப வந்தது அதுக்குத்தான்.’

சின்னமணியின் முகத்தைப் பார்த்துச் சொல்லிக் கொண்டு தில்லையம்பலம் கதிரையில் அமர்கிறான்.

‘உம்மட எந்த அலுவலுக்குக் காணும் நான் பின்னடிச்சனான்’ தில்லையம்பலத்தின் சிந்தனை மேகங்கள் கலைந்துவிட்டன. வந்த அலுவலில் மூன்றில் இரண்டு முடிந்து விட்டது போன்ற ஆறுதல்.

‘மணியின்ர குணம் எனக்கா தெரியாது.’

தான் அறிவிக்க வந்த விஷயத்தை தில்லையம்பலம் ஒவ்வொன்றாகப் பிய்த்துக் பிய்த்து விளக்குகிறான். அவன் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் தன் தலையை ஆட்டி ஆட்டிச் சின்னமணி தன் உடன் பாட்டை அறிவிக்கிறான்.

‘இந்த ஊருக்கு உந்த வரட்சி நிவாரணத்தை நிரந்தரமாக்கிப் போட்டாலும் நல்லது தில்லை…… இல்லையே! சொல்லு பாப்பம், எந்த வருசந்தான் இஞ்ச மழை ஒழுங்காப் பெஞ்சிருக்கு? குடிக்கத் தண்ணி இல்லாமல் மிருக சாதியெல்லாம் றோட்டு றோட்டாகச் செத்துக் கிடக்கப் போகுது.’

‘உம்மோட கதைக்கிற் தெண்டா நெடுகக் கதைச்சுக் கொண்டு இருக்கலாம். எனக்கு அலுவல் கிடக்கு’ தில்லையம்பலம் எழுந்து நின்றான்.

‘என்ன, தண்ணி கிண்ணி குடிக்காமலோ? அவவும் வெளியால போட்ட…’

‘நான் குடிச்சுப் போட்டுத் தான் வந்த நான்’ வீட்டுப் படிக்கட்டை விட்டு தில்லையம்பலம் தரைக்கு இறங்கினான்.

‘இனி எந்தப் படலையைத் திறக்கப் போகிறீர்’ பிரியாவிடை கொடுக்கும் பாணியில் வீட்டு வாசலில் நின்று கொண்டு சின்ன மணி கேட்டான்.

‘இதுக்க ஜே. பியையும் இழுக்கப் போறன்.’

தன் அடுத்த வீட்டுக்காரரைத் தான் குறிக்கப்படுகிறதென்பதைச் சுருதி சுத்தமாக அறிந்து கொண்டான் சின்னமணி. தில்லையம்பலம் கேற்றை நோக்கி நடந்தான்.

சைக்கிளை உருட்டியபடியே தில்லையம்பலம் றோட்டிற்கு மிதக்கிறான். பத்திற்கும் மேற்பட்ட மாடுகள் சின்னமணியின் வீட்டு மதில் ஓரமாக நிற்கின்ற சின்னமணியின் காணிக்குள் நிற்கும் உயர்ந்த தருக்கள் அம்மாடுகளுக்குக் குடை பிடிப்பது போல் நிழல் கொடுக்கின்றன. வெய்யிலின் வெம்மையை மறக்கத் தில்லையம்பலத்திற்கு அக்காட்சி கை கொடுக்கிறது. சைக்கிள் உருண்டு முன்னேறுகிறது. சின்ன மணியின் கிணற்றடிக்கு முன்பாகத் தெருவோரத்தில் தொட்டியொன்று தெரிகிறது. அதைச் சுற்றி நின்று மாடுகள் அதற்குள்ளிருக்கும் நீரைக் குடிக்கின்றன.

‘தில்லை தொட்டீக்க தண்ணி கிடக்கா? ஒருக்காப் பாத்துச் சொல்லு’.

துலாக் கயிற்றைப் பிடித்த படி சின்னமணி நிற்பதைத் தில்லையம்பலம் கண்டு கொள்கிறான்.

‘இவ்வளவு மாடுகளும் குடிக்க உந்தத் தொட்டித் தண்ணி காணுமா? சின்னமணி.

‘காசு வரட்டும் பெரிய தொட்டி கட்டப் போறன்.’ ஆனந்த ஆரவாரத்தோடு சின்ன மணி உரத்துக் கத்துகிறான். நீர் பீலி மூலமாகக் கொட்டிக் கொண்டிருக்கிறது. வாலை ஆட்டி ஆட்டி மாடுகள் நீரைக் குடிக்கின்றன.

தன்னைக் கேற் வரை வந்து சின்னமணி வழி அனுப்பாததற்கான காரணத்தைத் தில்லையம்பலம் உணர்ந்து கொள்கிறான்.

சுற்றுமதிலில் குண்டுகள் துளைத்தது போன்ற குழிகள்! வயிறு குளிர்ந்த மாடுகள் தங்கள் கொம்புகளால் சுற்று மதிலை முட்டிப் பார்த்திருக்கின்றன வென்ற உண்மையைத் தில்லையம்பலம் இரசிக்கிறான். அது மட்டுமா! சுற்று மதிலில் அங்கு மிங்கும் சாணி பூசப்பட்டிருந்தது. மாடுகளின் இத் திருவிளையாடல்களைக் கண்டும் சின்னமணி இன்னமும் தொட்டிக்குள் நீர் நிறைக்கிறான்! தில்லையம்பலத்திற்கு வியப்பாக இருக்கின்றது. நண்பனின் இதயம் ஆழ்ந்த சாகரம்!

‘இந்தத் தொட்டியை எப்ப சின்னமணி கட்டினவன்! ஒரு வார்த்தைகூட எனக்குச் சொல்லவில்லையே’ மனம் திறந்து பேசும் நண்பன் இப்படியான நல்ல காரியத்தைத் தான் செய்தது குறித்து ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லையே என்ற ஆதங்கம் தில்லையம்பலத்தின் நெஞ்சை அடைக்கிறது.

‘புகழை விரும்பாதவன்.’ நசுக்கிடாமல் இரகசிய நடவடிக்கை எடுத்ததன் காரணம் இதுவேயெனத் தில்லையம்பலம் தன்னைச் சுதாகரித்துக் கொள்ளுகிறான்.

உருண்டு கொண்டிருந்த சைக்கிள் ஜே. பியின் கேற்றை அடைந்து விட்டது.

சுற்று மதிலில் பொருத்தப் பட்டிருந்த பிளாஸ்ரிக் எழுத்துக்கள் வீட்டுச் சொந்தக்காரர் என். வடிவேலு, ஜே.பி எனக் கட்டியங் கூறுகின்றன. தில்லையம்பலம் சைக்கிள் மணியை ஒலிக்கிறான். நாயொன்று தானும் அங்கிருப்பதைக் குரைத்து அம்பலப்படுத்துகிறது.

‘ஆரது…’நாய் போடும் சத்தத்தை உதைத்துக் கொண்டு பெண்ணொருத்தியின் குரல் தில்லையம்பலத்தின் செவிகளுள் புகுகின்றது. தன்னை அறிமுகப் படுத்த வேண்டிய அவசியமில்லை. அவன் மௌனித்துக் கொள்கிறான். ஜே. பியின் மனைவி அம்மன் சிலைபோல் அவனை நோக்கி வந்து கொண்டிருக்கிறாள்.

‘ஜே.பி. இருக்கிறாரோ?’

‘ஓம் வாருங்க’ மனக் கிலேசம் எதுவுமின்றி ஜே. பி. மின் மனைவி கேற்றைத் திறக்கிறாள்.

‘சனம் அவரைச் சும்மாவா இருக்க விடுகுது. அடிக்கொரு தரம் சத்தியக் கடுதாசியெண்டு வருகுதுகள்’ மொலு, மொலுவென அவள் சினந்து சொல்லிக் கொண்டிருந்தாள்.

‘இப்பத்தானே அந்த நிவாரணம், இந்த நிவாரணமெண்டு அறிவிச்சுக் கொண்டிருக்கினம். சனத்துக்கு எல்லா நிவாரணத்தையும் எடுக்க வேண்டுமென்ற நோக்கம், அதுதான் ஜேபியிட்ட சத்தியக் கடுதாசிக்கு கியூவில் நிக்குதுகள்.’

ஜே. பி. யின் மனைவி குசினிப் பக்கம் போகிறாள். கூச்சமற்றவனாகத் தில்லையம்பலம் முன் முற்றத்திற்குச் சைக்கிளை உருட்டுகிறான். கமுக மரமொன்றின் கீழ் சைக்கிளைச் சரித்து வைக்கிறான்.

‘தில்லையம்பலமோ வாரும் வாரும்’ விறாந்தையில் நின்று கொண்டு ஜேபி வரவேற்கிறார்.

‘வரவேற்புக்குக் கண்டதுக்கு இண்டைக்குத்தான் இஞ்சால…..’ சலித்தபடி ஜேபி கூறுகிறார்.

குசன் செற்றியில் இருவரும் சமனாக அமருகின்றனர். மின்னல் வேகத்தில், எதிர்பாராது, ஜேபி எழுந்து எதிரில் இருந்த செற்றியில் குந்துகிறார்.

‘முகத்தைப் பார்த்துக் கதைக்க வேணும்’ தனது செய்கைக்கான விளக்கத்தை ஜே.பி. ஒப்புவிக்கிறார்.

‘இந்த வெய்யிலுக்க எங்க தான் ஜே. பி. போறது…”

‘இப்ப என்னவும் மழையிக்காலயா வந்திருக்கிறீர்’ நகைச்சுவையாகப் பேசிவிட்டதைப் போல் ஜேபி அட்டகாசமாகச் சிரிக்கிறார்.

‘தள்ளிப் போட ஏலாத காரியம் ஜே. பி. அதுதான் வெய்யிலைப் பாராம வந்தனா…’ ஜே. பியின் தவிப்பை முடுக்கிவிட வேண்டுமென்ற தந்திரத்தோடு தில்லையம்பலம் தனது பயணத்தின் நோக்கத்தைத் தொடர்ந்தான்.

‘அப்படி என்னப்பா விஷயம’ ஜே பிக்கு ஆறப் பொறுக்க முடியாத ஏக்கம்! வந்தவன் என்னத்தைச் சொல்லப் போகிறானென்ற மனத் தவிப்பு.

தில்லையம்பலத்தின் கசெற் ஓடிக் கொண்ருந்தது. மக்களுக்குத் தொண்டு செய்ய இதை விட அரிய சந்தர்ப்பம் கிடைக்காதென ஜேபி தனக்குள் எண்ணிக் கொண்டார்.

‘உது கட்டாயம் செய்யவேண்டிய அலுவல் தான். மாடுகளுக்கு நோயெண்டு இறைச்சி விக்கவும் தடை போட்டிருக்கு. இன்னும் கொஞ்ச நாளையில நாயளுக்கும் விசர் புடிச்சு ஆக்களுக்குக் கடிச்சு, ஆக்களுக்கும் விசர் வரப் போகுது. அது சரிநிவாரணக் குழுவில மற்ற ஆக்கள் ஆர்’.

ஜே.பியின் கண்கள் தில்லையம்பலத்தில் மொய்த்தன.

‘நீங்களொண்டு, நானொண்டு சின்னமணியையும் போட்டிருக்கிறன். அவர் எங்களோட போம் குடுக்க வந்தவர்.’

சடாரென ஜேபி முகத்தைக் கவிழ்த்துக் கொண்டார்.

‘என்னோட ஜேபிக்குப் போட்டி போட வெளிக்கிட்டவர்’ இரு கைகளையும் முழங்கால்களுக்குள் இடுக்கிக் கொண்டு ஜே.பி சொன்னார். அவரது முக முத்திரைகளை அவதானிக்கத் தில்லையம்பலம் துடித்தான். அவன் கண்கள் துருதுருத்தன!

‘அதெல்லாம் போன கதை. விட்டுப் போடுங்க. இப்ப எவ்வளவு காலமாப் போச்சு’ ஜேபியைச் சாந்தப் படுத்தத் தில்லையம்பலம் முனைந்தான். தன் முழுத் திறமையையும் பாவித்து ஜேபியின் வைராக்கியத்தை ஒட்டு மொத்தமாகப் போக்க வேண்டுமென்ற முனைப்போடு தில்லையம்பலம் இயங்கினான்.

உரையாடல் தொடராமல் காலம் கரைந்தது.

‘சின்னமணியைப் பற்றி யோசிக்காதயுங்க. குழுவுக்கு நீங்கதான் தலைவர். எது எப்படி இருந்தாலும் நாங்கள் சனத்துக்குச் செய்யிறதைச் செய்யத்தான் வேணும்’.

செருமிக் கொண்டு ஜேபி குனிந்த தலையை நிமிர்த்தினார். தில்லையம்பலத்திற்குப் பழத்தைப் பறித்து விட்ட மகிழ்ச்சி எழுந்தது. இருவரும் வெளியே வந்தனர். சைக்கிளை எடுத்துக் கொண்டு ஜே.பி சகிதம் தில்லையம்பலம் கேற்றை நோக்கி நடக்கிறான்.

‘நாங்கள் வாசிகசாலையில தான் சந்திக்க வேணும். எப்ப வெண்டு சொல்லியனுப்புறன்.’

புறப்பட ஆயத்தமாகத் தில்லையம்பலம் தெருவோரத்தில் நின்றான். தொட்டியில் நீர் குடித்துக் கொண்டு நின்ற மாடுகள் வால்களை உயரத் தூக்கி ஆட்டிக் கொண்டு நகர ஆரம்பிக்கின்றன. நடந்து கொண்டே அவைகள் தெருவில் சாணத்தைக் கழித்துச் செல்கின்றன.

‘கண்டீரே…உந்தப் பேயன் சின்னமணி ஒரு தொட்டியைக் கட்டிவிட்டு, தண்ணியைக் குடிச்சுக் குடிச்சு மாடுகளுக்கெல்லாம் பீச்சல் விசாதி புடிச்சிட்டுது’.

தொட்டியை எளிப்பதுபோல் பார்த்துக் கொண்டு ஜே.பி. ஏளனமாகக் கூறுகிறார். அந்தப் பேச்சைப் பொருட்படுத்தாதவன் போல் தில்லையம்பலம் சைக்கிள் பெடலில் பாதத்தை வைத்தான்.

‘உந்தத் தொட்டியை உடைக்கச் சொல்லி எல்லாருமாகச் சேந்து கொமிசனருக்கு பெட்டிசம் எழுதினா என்ன?’ மிகவும் நெருங்கி வந்து ஜே.பி. சொன்னது தில்லையம்பலத்தின் நெஞ்சில் சுட்டது.

சற்று முன் வரட்சியைக் குறித்து ஜே.பி சொன்னவைகளை தில்லையம்லம் மீட்டுப் பார்க்கிறான். இந்தத் தொட்டியை உடைத்தால், இந்த மிருக சாதிகளின் வயிற்றில் வரட்சி குடி கொள்ளுமே…இந்த உணர்வு ஜே.பிக்குப் பிறக்கவில்லையே. சின்னமணி போட்டிக்கு வந்ததிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? எறிக்கும் வெயிலில் தில்லையம்பலம் நிற்பதா போவதாவெனத் திணறிக் கொண்டு நின்றான். ஜே.பியின் உள்ளத்து வரட்சிக்கு எங்குதான் நிவாரணம் தேடுவது. பெடலை ஊன்றி மிதித்துச் சைக்கிளில் ஏறிக் கொள்கிறான். சைக்கிள் ஜே.பிக்கு அப்பால் நகர்ந்து விட்டதென்ற குளிர்ச்சி அவன் மேனியில் சில்லிட்டது.

‘வடிவேலு ஜே.பி. போன்றோரின் தலமையின் கீழ் சின்ன மணி போன்றோரைப் பணியாற்ற வைப்பது தகுமா?’

நியாயத் தீர்வொன்றின் தேடலில் அவன் மனம் இலயித்துக் கொண்டது. நியாயம் பெரிய மனிதர் சிலருக்கு மட்டும் சொந்தமானதல்ல நியாயத்தின் பொதுமை அவன் நெஞ்சில் நங்கூரம் பதித்தது. அவன் திசை மாறும் பறவையல்ல………

– மல்லிகை இதழ் 220 – ஏப்ரல் 1989, மல்லிகைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2002, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *