(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தெல்லிப்பழை
1983,12-01
அன்புமிக்க மகன் விநோ அறிவது.
நாங்கள் அனைவரும் நற்சேமமாகவுள்ளோம். அதுபோல் நீயும் சேமமாக இருக்க விநாயகர் அருளை வேண்டியிருக்கிறேன்.
மேலும் நீ ஒரு ‘ரோச் லைற் வாங்கப் போவதாகவும், இருளிற்குள் செல்லப் பயமாகவிருக்கிற தென்றும் கடிதத்தில் எழுதியிருந்தாய். அப்படி இருளில் எங்கு தான் போகின்றாய்? அப்பா யானை ஏற்றம், குதிரை ஏற்றத்தில் நின்றார். ஒருவாறு முரண்டு பண்ணி அப்பாவையும் சம்மதிக்க வைத்துள்ளேன். நல்ல தரமானதாகப் பார்த்து, பாலா வாத்தியாருடன் சென்று வாங்கவும்.எனக்குத் தெரியும் நீ ஏதாவது பொருட்கள் வாங்கினால் அதனுடனேயே நேரத்தைக் கழித்து விடுவாய் என்று. நீ தான் எனது மூத்த குஞ்சு. உனக்குப் பதினெட்டு வயதாகின்றது. நீ இன்னமும் சின்னப் பிள்ளையில்லை. விளையாடாமல், குழப்படி செய்யாமல், கவனமாகப் படித்து முன்னுக்கு வரவேண்டு மென்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.
சுவர் இருந்தாற்றான் சித்திரம் வரையலாம். எனவே காசு செலவழிகிறது என்று எண்ணாமல் நன்றாகச் சாப்பிடவும். 500 ரூபா மணி ஓடரும் இதற்குள் அனுப்புகின்றேன். பெற்றுக் கொண்டு பதில் போடவும்.
ரோச்லைற் என்றவுடன்தான் எனக்கு நினைவுக்கு வருகின்றது. முன்பு ஒரு முறை நீயும் தங்கைச்சியும் ஒரு ரோச்லைற்றைக் கழட்டிப் போட்டு அடிபட்டதும் உங்களுடைய புத்தகம் கொப்பிகளையும் மாறி மாறி முற்றத்திலே எறிந்ததும் நினைவிருக்கலாம். மறுபுறத்தில் தங்கைச்சியும் ஒரு கடிதம் எழுதி வைத்திருக்கின்றாள்.
எங்கள் வளவில் வடக்கு வேலியை, அடுத்த வளவிற்குள் தோட்டம் செய்யும் மார்க்கண்டு, தனதென்று கூறி, அதை வெட்டியும் விட்டார். மதில் கட்டப் போகின்றாராம். ஆச்சி நாலைந்து கூலி ஆட்களைப் பிடித்து மீண்டும் அதனை அடைத்துவிட்டு, பகல் முழுவதும் புளிய மரத்துக்குக் கீழே பாயொன்றைப் போட்டு படுத்திருக்கின்றா. தலைமாட்டின் கீழ் கொழுத்த தடியொன்றும் வைத்திருக்கின்றா. இரவிலும் அங்கு படுக்கப் போவதாகவும், அதற்கு ஒரு ரோச் லைற்றோ அல்லது அரிக்கன் விளக்கோ வாங்கித் தரும்படியும் கூறுகின்றா. அவற்றை நீ இங்கு வரும்போது விபரமாகக் கூறுகின்றேன். வேறு குறிப்பாக எழுதுவதற்கு ஒன்றுமில்லை. அப்பாவும் ஆச்சியும் தம்பியும் சுகம் கூறுகின்றார்கள்.
இப்படிக்கு
பட்சமுள்ள அம்மா
சே.பார்வதி.
அன்புள்ள அண்ணாவிற்கு,
நீங்கள் ரோச்லைற் ஒன்று வாங்கப் போகிறீர்கள் அல்லவா! அதனை அடுத்த முறை விடுதலைக்கு வரும்போது கொண்டு வரவும்.
நீங்கள் ரோச்லைற் வாங்கும் விடயத்தை ஆச்சிக்குச் சொன்னதும், ஆச்சி பல்லெல்லாம் வாயாக ஆம் அண்ணா! இப்ப இருக்கிற ஒரே ஒரு முன் வாய்ப்பல்லினால் றோட்டு லைற்றா’ என்று கேட்டபடியே சிரித்தே விட்டா. மேலும் அது ‘வயர்’ இல்லாமல் எப்படி பற்றி, பல்புடன் எரிகிறது என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு என்னையும் மலைக்க வைத்து விட்டா. நீங்கள் ‘கைக்கொலிச்சிலை’ பெரிய படிப்புப் படிக்கிறீர்கள் எனவும் வரும்போது இவற்றையெல்லாம் அறிந்து வருவீர்கள் எனவும் ஆச்சியிடம் கூறினேன். உடனே ‘கை’ உள்ள பள்ளிக்கூடம் எங்கு இருக்கிறதென்றும் கேட்கின்றா. ஆச்சியின் திருக் கூத்துக்களை நேரில்தான் பார்க்க வேண்டும்.
மேலும் இப்பொழுதெல்லாம் பரீட்சைகளில் ஒரே மாதிரிக் கேள்விகள்தாம் சுற்றிச் சுற்றி வருகின்றன எனவும், அவை வெவ்வேறு வடிவங்களில் தலையைக் குழப்பும் விதத்தில் வருகின்றன எனவும், அதற்கேற்ற வகையில் பாடங்களைப் படிக்கும் படியும் சிவப்பிரகாசம் ஆசிரியர் உங்களிடம் கூறும்படி சொன்னார்கள்.
நாங்கள் வாற மாதம் பயனுள்ள சுற்றுலா ஒன்றிற்குப் போகவிருக்கின்றோம். உங்களிடம் வட்ட வடிவமான முத்திரைகள் இருந்தால் அனுப்பி வைக்கவும்.
தம்பியும் தனக்கு வேறையாக கடிதம் எழுதவில்லை எனக் கோபிக்கின்றான். அவன் இப்பொழுது குறும்புகள் செய்வதில்லை. என் நண்பி மஞ்சுவும் சுகம் விசாரிக்கின்றாள். வேறு விசேடமின்று.
இங்ஙனம்,
அன்புத் தங்கை
சே.சக்தி
ஆளியை அழுத்தி ஒளி பாய்வதை நிறுத்தினேன். எங்கள் அறைக்கு (அறை என்று சொல்வதற்கில்லை. புறாக் கூடு போல) மின்சாரம் இருந்திருந்தும் நான் அதனைப் பாவிக்கவில்லை. புதிதாக வாங்கிய ரோச் லைற்றினால் ஒரு தட்டுத் தட்டி, அதன் மூலம் கடிதத்தை வாசித்து விட்டேன். விடுதிக்கு சாப்பிடப் போன அறை நண்பன் செந்தில் வந்து விட்டான்.
‘என்ன ஒரே புளுகம். வீட்டிலே இருந்து கடிதம் வந்திருக்காக்கும்’ என்றான் சிரித்தபடியே.
“கூடவே கையிலே என்னண்டு தான் பாரேன்?” என்றேன் மினுமினுக்கும் ரோச் லைற்றைத் தூக்கிப் பிடித்தபடியே. எத்தனை மாசத்து ஆசை நிறைவேறியிருக்கிறது இன்று.
“மின்சூழ்! எடேய் எப்பவடா வாங்கினனி?” ஆச்சரியத்துடன் அழகு தமிழில் வினவினான் அவன்.
“இப்பதான்” என்றேன் பெருமையாக. உடனே வெளியே ஓடிச் சென்ற அவன், என் நண்பர்கள் ஒவ்வொருவருடைய அறைக் கதவுகளையும் தட்டி பறைசாற்றி விட்டு மூச்சிறைக்க வந்தான். அதன் விளைவு- ரோச்லைற் ஆராய்ச்சிக் குட்படுத்தப்பட்டது.
அக்கு வேறு – ஆணி வேறு. பல்பு வேறு – பற்றி வேறு. அடித்து, தட்டி, உரஞ்சி, நொறுக்கி, மினுக்கி செய்யாத வேலைகள் செய்து கொண்டிருந்தனர் நண்பர்கள்(எமகாதகப் பயல்கள்)
ஒருவாறு அவர்களிடமிருந்து அதனை இழுத்துப் பறித்து மூலை முடுக்குகளிலெல்லாம் ஓடி ஒளித்துக் கொண்டவற்றை யும், ஒருதுணியில் அள்ளிக் கட்டி, உருப்படியை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர அரை மணித் தியாலமாகி விட்டது.
“கன்ரீனிலை சாப்பாடு முடிஞ்சுது” வாயை வங்காள விரிகுடா மாதிரி அகலத் திறந்து கொட்டாவி விட்டுக் கொண்டு வந்த புத்தகப் பூச்சி கணேஷ் சொன்னான். அவன் ஒருவிதமான அடாவடித்தனமான வேலைகளிலும் ஈடுபடாத சுபாவம் கொண்ட நல்ல நண்பன். எப்பொழுதுமே படிப்புத்தான் தஞ்சமென்று இருந்து வருபவன். உணவு கூட முக்கியமான தொன்றல்ல அவனுக்கு.
இன்றைய ஸ்பெஷலை துடைத்து, கடுதாசியினால் சுற்றி ஒளித்துக் கொண்டிருக்கும் போது, அறைக்குள் ஒரே ஆரவாரம். ஆராய்ச்சி முடிந்து இப்பொழுது விவாதம் நடந்து கொண்டிருந்தது.
‘அழுத்தம் கூடியவிடத்திலிருந்து குறைந்த இடத்திற்கு இலத்திரன்கள் செல்லும்.’
‘மின் பாய்வதற்குள் சுற்று பூர்த்தியாக இருக்க வேண்டும்.’
‘மின் ஒரு சக்தியின் வடிவம்.’
மின்னின் விசித்திர பண்புகள் பற்றி இன்னமும் மேனாட்டவர்கள் மத்தியில் புரியாத புதிராகத்தான் உள்ளதாம். நம்மவர்கள் தான் அதனைத் தெளிவுபடுத்த வேண்டும்.
இப்படிப்பட்ட பேச்சுக்கள் விவாதத்தில் இடம் பெற்றன. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. விபரீத ஆசை ஒன்று வந்தது. இந்த அஞ்சன இருளிற்குள் வெளியே போய் வந்தால் நல்லது போல இருந்தது. நல்ல காற்றோட்டமும் பெற்றதாக இருக்கும். இருள் எனக்குப் பகை. ஆனாலும் பாட்டு எனக்குத் துணை. சாரத்தை முழங்காலளவிற்கு தூக்கிக் கொண்டு, கோடு விழுகின்ற பாட்டொன்றை முணுமுணுத்தவாறே மெல்ல இறங்கினேன். நூற்றியிருபத்தைந்து படிகள். அதல பாதாளம்.
வெளியே மலையின் மேல் இரண்டு மிருகங்கள் புல் மேய்ந்து கொண்டிருந்தன.
“ஓடி வாருங்கோ, காண்டா மிருகங்கள்” என்றேன் கூச்சலிட்டவாறே.
பூச்சி மாத்திரம் கதவைத் திறந்து பார்த்து விட்டு ‘காட்டெருமைகள்’ என்று கூறிவிட்டு ஓடிச் சென்றான் அவசரமாக தனது தொழிலுக்கு. ஒரு விநாடி கூட வீணடிக்க மாட்டான். மற்றவர்கள் சர்ச்சையிலிருந்தனர்.
ஒளிக் கீற்றுகளை அவற்றின் கண்களின் பக்கம் திருப்பினேன். கூச்சத்தினால் அலறி ஓடி மலையின் சரிவிலிருந்து தொபுக் தொபுக் என விழுந்தன. இரண்டு சத்தங்கள்.
வானத்திலே முகிற் கூட்டங்கள் இரவிவர்மாவின் ஓவியங்களை தோற்கடிக்கும் வரைகளை வரைந்து கொண்டிருந்தன. அவற்றைச் சிதைத்து வெளியே வரப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தான் சந்திரன். சடுதியாக இடமும் வலமும் மேலும் கீழுமாக அசைத்து வானத்தை நோக்கி ஒளிக் கதிர்களைப் பாய்ச்சினேன்.
“நல்ல தொலைதூரத்திற்கும் அடிச்சுப் பார்க்கக் கூடிய ரோச்லைற்றை விஞ்ஞானிகள் செய்தால் என்னவாக்கும்?”
மாரிக்காலக் குளிர் காற்று மல்லிகைப் பந்தலினூடே புகுந்து, நல்ல வாசனையை உறிஞ்சி, முகத்திலே வீசியடித்துச் சென்றது. மல்லிகைப் பந்தலின் பக்கம் திரும்பினேன். அவற்றிலிருந்த சிட்டுக் குருவிகள் ‘ஜிவ்’ எனக் கீச்சிட்டவாறே இறக்கைகளை அடித்துப் பறந்தன. காலிற்குள் ‘கொரக் கொரக்’ எனச் சத்தமிட்டவாறே ‘லபக் லபக்’ என தத்திப் பாய்ந்தன தவளைகள். ஒன்றை நான் நசித்திருக்க வேண்டும். தீனக் குரல் எழுப்பியது மண்டூகம்.
ஒருவாறு மலையின் அரைவாசிப் படிகளைத் தாண்டி விளக்குக் கம்பம் இருக்குமிடம் வந்து விட்டேன்.
வாழ்க்கையில் எவ்வளவோ கடினமான படிகளை யெல்லாம் தாண்ட வேண்டும் என உணர்த்தின அப்படிகள். இப்பொழுதுதான் ரோச்லைற்றை என்னால்
என்னால் ஆறுதலாக முழுமையாகப் பார்க்க முடிகிறது.
நல்ல வெள்ளிப் பூச்சிட்ட கோடிட்ட கவச உறை. உறையின் பின்புறத்தில் வட்ட ஸ்பிறிங் பூட்டியுள்ள மூடி. மூடியில் வேண்டும் போது பிரயோகிக்கக் கூடிய உள்ளே அமர்த்தி விடும் அழகிய கைப்பிடி. கவசத்திலே பக்கப்பாட்டிற்கு அசைக்கக் கூடிய ஆளி. ஆளியிலே ஒரு சிவப்புக் குமிழ். முன்பக்கத்தில் கண்ணாடியுடன் ஒளியைத் தெறிக்கச் செய்யும் பளபளப்பான பரவளையத் தெறி கருவியும் இருக்கின்றன.
இருளில் பொருள்களைத் தேடிக் கண்டுபிடிக்க சிறந்த பொருள்தான்.
இப்பொழுது மலையின் அடிவாரத்திற்கு வந்துவிட்டேன். மழைக் காலத்துப் பூக்கள் தலைக்கு மேல் சொரிந்து ‘பூமழை’ பொழிந்தன. காலை வேளை என்றால் பள்ளிக் கூடத்திற்குப் போகும் போது, படிக்கட்டுகளில் இறங்கியபடியே அவற்றை ஏந்திக் கொண்டு செல்வோம்.
வீதியில் விரைந்து சென்ற காரொன்று, வெள்ளத்துடன் சேற்றையும் வாரித் திரட்டி, என் மேல் இறைத்து விட்டுச் சென்றது. மண் முழுக்கு. ‘லைற்’ இல்லா துவிச்சக்கர வண்டியொன்று ‘கறக் புறக்’ என்ற இராகத்துடன் கடந்து சென்றது. அது இருபக்க வேலிகளையும் மாறி மாறி தொட்டுக் கும்பிட்டபடி சென்றது. ரோச் லைற்றைச் சுழற்றிக் கொண்டு, ஆஜானுபாகுவாக தொலை தூரம் நடந்தேன் கால் கடுக்க.
அதே ஊர்தி பஞ்சாங்க நமஸ்காரம் (இரண்டு ரயர்கள், மூன்று கால்கள் – ஐந்து அவயவங்கள் நிலத்தில் பொருத வணங்குதல்) போட்டு விட்டிருந்தது. ஒருவன் குந்தியிருந்து பெரிய கல் ஒன்றினால் ‘பெடலை’ அறைந்து கொண்டிருந்தான். மற்றவன் ஒரு காலினால் ‘மட்காட்டை’ உதைந்து ‘ஸ்ராற்’ செய்து கொண்டிருந்தான்.
“தம்பி! உந்த ரோச் லைற்றை ஒருக்கால் தாரும். சைக்கிளில் ஏதோ கோளாறு போலை. கோளறு பதிகம் பாடவேண்டும்’ என்றான் கல் வைத்திருந்தவன். அவன் மீது நல்ல நெடி வீசியது. பனை இல்லாத இடத்திலை எப்படி இந்த வாசனை வருகுது என்ற மர்மத்தை நினைக்கையில், தேங்காய் ஒன்று சதுப்பு நிலத்தில் விழுந்து தான் இருப்பதை உணர்த்தி மர்மத்தை துலக்கியது.
“மூஞ்சியும் முகரக்கட்டையையும் பாரு! நாலு நாளைக்கு குளோரீனிலை முகத்தை ஊற விட்டு, ‘பார்’ சோப்பினாலை நல்லாத் தேய்த்துக் கழுவிப் போட்டுக் கேட்டாலும், எனக்குக் கொடுக்கச் சம்மதமில்லை. என்ன சோக்கான ரோச் லேற். எனக்கெனவே பிரம்மனால் படைக்கப்பட்டது. கை பட்டாலே கறுத்துப் போய்விடும்.
“நான் அடிக்கிறேன். நீங்க பாருங்க!” என்றேன் இலேசான பயத்துடன்.
என் பேச்சுக்கு கட்டுப்பட்டவன் போல குனிந்தவன், லபக் என்று கையிலிருந்த ரோச் லைற்றைப் பிடுங்கிக் கொண்டு குரங்குத் தாவல் தாவி வண்டியில் ஏறிக் கொண்டான். நான் திடுக்கிட்டுப் போனேன்.
மறுகணம் பிரேக் இல்லா அவ்வண்டி மேடும் பள்ளமும் துள்ளிக் குதித்து, காற்றில்லா, ‘றிம்’ இனால் சடசட என ஓசை எழுப்பி ஓடத் தொடங்கியது. ஒரே ஓட்டம்.
நான் படித்தவன். ஆண் பிள்ளை. விட்டேனா?
“அண்ணை, அண்ணை” என்று கத்திக் கொண்டு கால் போன போக்கில் பின்னால் தலை தெறிக்க ஓடினேன்.
இரக்கம் என்பது இவர்களுக்கு இல்லையா?
அது வளைந்து நெளிந்து என்னை விட்டுத் தொலை தூரம் சென்று சிறிய மின் பொட்டாகியது. ரோச்லைற் பொட்டின் விட்டம் வர வர சிறியதாகியது. வானத்திலே கண் சிமிட்டும் தாரகைகளுக்கும் அதற்குமிடையே இப்பொழுது வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. சுற்றுலாவிற்கு வெளிக்கிட்டதை சுரண்டிக் கொண்டு போய் விட்டார்கள்.
இனம் புரியாத பயம் என்னைப் பிடித்தது.
பாதை வெறிச்சோடிக் கிடந்தது. உடம்பிற்குள்ளிருந்து ஆயிரமாயிரம் இலத்திரன்கள் வெளியே பாய்ந்தன. நடை மெல்ல ஆட்டம் காணத் தொடங்கியது.
காற்றில்லா துவிச்சக்கரவண்டி, அதன் மேல் ஒன்றுமேயில்லாத இரண்டு மனிதர்கள், மாரி காலத்துப் பூக்கள், தெருவிளக்கு, தவளைகள், சிட்டுக் குருவிகள், காண்டா மிருகங்கள்… எல்லாமே ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வரிசையாகித் தோன்றின.
என் மனோரதம் இவற்றின் மீது ஊர, இருளின் சந்து பொந்துகளை தடவிக் கொண்டு மேலே ஏறி வந்து விட்டேன். இரண்டு உடைந்த படிகள் உட்பட நாற்பத்தைந்து படிகள். அப்பப்பா! அத்தனை படிகளையும் தாண்ட வைத்த சக்தி எது? ஒருவேளை உடைந்த படிகளுக்கிடையே கால்கள் சிக்கியிருந்தால்? என் சிந்தனைகள் கடந்து வந்த பாதைக்கு எதிராகச் செயற்பட்டு நிலைகுத்தி நின்றன.
உலகம் மெல்லப் புரிவதுபோல இருந்தது. அதற்காக ஒரு ரோச்லைற்றை இழந்திருக்கத் தேவையில்லை. ரோச் லைற் மாத்திரமா? அதற்கு அணி சேர்த்திருந்த அந்தத் திறப்புக் கோவை! ரோச்லைற்றுக்குள் ரெடியாகவிருந்த இரண்டு எவறெடிக் கலங்கள்!
நண்பர்களுக்குப் புரிந்ததோ புரியவில்லையோ, அவர்கள் சயனித்து விட்டனர். புத்தகப் பூச்சியின் அறை லைற்றைத் தவிர ஏனையவை அணைக்கப்பட்டிருந்தன. ஓசைப்படாமல் மௌனமாக மெதுவாகச் சென்று திறந்திருந்த கதவினூடு உட்பிரவேசித்த பின் மீண்டும் உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டேன். நல்ல காலம்! நண்பன் வித்தியாசமான குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். ஸ்பிறிங் கட்டிலில் மெல்லச் சாய்ந்து, கண்களை இறுக மூடி உறக்கத்தைப் பலாத்காரமாக வரவழைத்தேன்.
“என் நண்பி மஞ்சுவும் சுகம் விசாரிக்கிறாள்” என்றான் செந்தில் படுத்திருந்தபடியே.
“றோட்டு லைற், றோட்டு லைற்” ஏக காலத்தில் எண்ணற்ற குரல்கள் ஒலித்தன.
ஆமாம்! இப்போது அது, ஆச்சி சொன்ன மாதிரி நான் காணாத தெருவெல்லாம் சுற்றிப் பார்க்கும் றோட்டு லைற்றுத்தான்.
ஜன்னற் பக்கமாக பல தலைகள் எட்டிப் பார்த்துக் கலகல எனச் சிரித்தன. எனக்குத் துக்கத்துடன் வெட்கமும் சேர மறுபுறமாகச் சரிந்து கொண்டேன். நண்பர்கள் குட்நைற் சொல்லிக் கொண்டிருந்தனர்.
– ஈழநாடு வாரமலர், தை, 1984
– எங்கே போகிறோம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மார்கழி 2007, அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம், அவுஸ்திரேலியா