கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 6, 2021
பார்வையிட்டோர்: 17 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இடைவேளையோடு அவன் புறப்பட்டு விட்டான். இனி என்ன செய்வது எங்கே போவது என்று ஒரு திட்டமும் இல்லாமல் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தான்.

அடிபட்டுத் தளர்ந்து போய் என்பதைவிட, ஒரு வகைச் சித்திரவதைக்கு ஆளாக்கப் பட்டு நீண்ட நேரம் முழங்காலில் இருத்திவைக்கப் பட்டிருந்த போது தான் இடைவேளை மணி ஆறுதல் அளித்து தண்டனைகளுக்கும் சாவு மணி அடித்தது போலிருந்தது.

காலையில் எட்டு ‘ஏ’ வகுப்பில் அவன் சித்திரவதைக்கு உட்படுத்தப் பட்டபோது வகுப்பில் குய்யோ முறையோ வென்று ஒரே அல்லோல கல்லோலமாகவும் ஆசிரியரில்லாத அயல் வகுப்புகள் வேடிக்கை பார்த்துக் கொண்டும் குழம்பிப் போயிருந்தன.

பிரம்பு பாவிப்பதற்கும் ஒரு வரையறை இருக்கு. இவர் கோலாட்டக் கம்பை பெட்டன் பொல்லாக பாவித்திருக்கிறார். பொலிசில் இருக்க வேண்டியவர். ஏன் பாடசாலைக்கு வந்தாரோ இது ஒரு கிரிமினல் குற்றச் சாட்டு…

அடுத்த வகுப்பில் விஞ்ஞானம் படிப்பித்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு ஆத்திரமும் கோபமும் பீறிட்டுக் கொண்டிருந்தது. மனம் குமுறிக் கொண்டிருந்தார். “எப்படி பாடம் நடத்துறது…”

மாணவர்கள் காலையில் கோலாட்டப் பயிற்சி முடிந்ததும் அந்தக் களிம்புகளை ஏன்தான் அவசரத்தில் கதவு மூலையில் குவித்துவிட்டுப் போனார்கள்!

இத்தகைய ஒரு தண்டனைக்கு அவன் என்ன குற்றம் செய்திருப்பான்?

விஞ்ஞான ஆசிரியருக்குப் புதிராகவே இருந்தது. கணித ஆசிரியர் அடிக்கடி மாணவர்களுக்குச் சித்திரவதை செய்வது அவருக்குப் பிடிக்காது.

தண்டனையை நிறைவேற்றிக் களைத்துப் போன கணித ஆசிரியர் இளைப்பாறும் அறைக்குப் போனதும், விஞ்ஞான ஆசிரியர் மனம் நெகிழ்ந்து போய் வகுப்பில் விசாரணை நடத்தினார்.

“ரமீஸ் கிட்ட எப்பவும் கணிதக் கொப்பி இல்லே சேர்…மத்தவங்க கிட்ட கொப்பித் தாள் கேட்டுத் தான் கணக்கு செய்வான். முதலில் செய்து காட்டுபவன் அவன் தான் சேர்…..

“ரமீஸ் கணித பாடத்தில் கெட்டிக்காரன் சேர்…”

“அடிக்கடி அடிவாங்குவான் சேர்…”

“கணிதத்தில் திறமையான ஒரு மாணவன் கொப்பி வாங்காமல் இருக்கிறானா…? ஏன்?”

“அவனுக்கு வசதி இல்ல சேர்….”

“அப்பா குப்பிலாம்பு செய்து விற்பவர்…”

“அவருக்கு சொகமில்லாமப் போன பொறகு ஒரு கால் இல்ல…சேர்..”

“உம்மாவும் இல்ல. சகோதரங்களும் இல்ல…”

விஞ்ஞான ஆசிரியருக்குக் கிடைத்த தரவுகள் போதுமென்றாகி விட்டது.

மாணவர்கள் கல்வியில் பின் தங்கிப் போனதற்கான காரணங்களை நன்கு ஆராய வேண்டும். அதுபோலவே மாணவர்கள் கற்றலில் சிறந்து விளங்குவதற்கான பின்னணியையும் ஆய்வு செய்ய வேண்டும்.

பிரச்சினைக்குரிய மாணவர்களின் வாழ்க்கைப் பின்னணியை ஆய்ந்து பரிகாரம் காண வேண்டும் என்பதையெல்லாம் கணித ஆசிரியர் காற்றில் பறக்க விட்டு விட்டாரா…? இந்தப் பாடசாலையில் கொப்பி இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. அலுவலகத்தில் வறிய, வசதியற்ற மாணவர்களுக்கு விநியோகிப்பதற்கு என்றே ஓரிரு ஸ்தாபனங்கள் அன்பளிப்புச் செய்த கொப்பி, பேனா, புத்தகங்கள் இத்தியாதி ஓர் அலுமாரி நிரம்பி வழிகிறதே!

இதிலிருந்து ஒன்று தெட்டத் தெளிவு. கணித ஆசிரியர், தனக்கு மாணவர்களின் சுயவிபரங்கள் ஒன்றும் தெரியாது என்பதை நிரூபித்து விட்டார்.

‘கணித ஆசிரியர் மாணவர்களுக்கு வழங்கும் தண்டனை எல்லாம் மன்னிக்க முடியாத ‘சிவியர் டோச்சர்’ நாளைக்கு அந்த மாணவனுக்கு ஒரு வருத்தம் வந்து விட்டால் அல்லது ஒரு விபரீதம் நடந்து விட்டால் நான் தான் முதலாவது சாட்சியாக இருப்பேன். அவர் வழங்கிய அந்தத் தண்டனைக் கோலத்தை கண்களால் கண்டவன் நான்…’

விஞ்ஞான ஆசிரியர் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

“ஆசிரியனின் தண்டனைக்கு மாணவன் திருந்த வேண்டும். இல்லாவிட்டால் தொட்டதற்கெல்லாம் தண்டனை.. தண்டனை……. என்று தண்டனையை மலினப் படுத்தக் கூடாது…… பிறகு மாணவனின் உடம்பும் உள்ளமும் தண்டனைக்குப் பழக்கப் பட்டு விடும். பெறு பேறு பூஜ்யமாகத் தான் மிஞ்சும்…?”

இடைவேளை முடிய இன்னும் சில நிமிடங்கள் காத்திருந்தன.

“டேய் ரமீஸ்…நல்ல நேரம்டா ஒருத்தரும் பார்க்கல்ல…டிசிப்லின் சேர் முன் கேட்கிட்ட இருக்கார்…பின் பக்க சிக்குரிட்டி கன்டீனில்…நானும் சிபானும் அவரோட பேச்சு குடுத்துக்கிட்டு இருப்பம்…நீ பாஞ்சி போ…சுருக்காவா.”

எதற்கும் பயப்படாத முஜாறிட் உற்சாகமூட்டினான்.

எப்படியோ இரண்டு சகமாணவர்களின் உதவியுடன் ‘சிக்குரிட்டி’யின் கவனத்தைத் திசை திருப்பி விட்டுச் சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கினான். சிறையிலிருந்து தப்பிச் செல்லும் கைதியைப் போல் நடந்தான். புத்தகங்களோடு கனத்த அந்த பேக்கை இரு கைகளாலும் அணைத்துக் கொண்டிருந்தான். அதன் உள்ளே புத்தகங்களோடு, கிடந்த தகரக் குப்பி விளக்குகளுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. மண்ணெண்ணெய் ஊற்றித் திரியைப் போட்டு விட்டால் அவை பிரகாசமாக எரிந்து ஒளிவீசக் காத்திருந்தன.

அவை மட்டும் இழை அறுந்துபோய், மௌசிழந்த மின்பல்ப் இல் செய்யப் பட்ட குப்பி விளக்குகளாய் இருந்தால் கோலாட்டக் கம்பின் ஆக்கினைக்கு ஆளாகி உடைந்து சிதறிப் போயிருக்கும். ஆனால் வழக்கம் போல் தண்டனையை அனுபவித்தது அவன் தான்

“கணித பாடத்துக்கு இந்த வருஷத்துக்கே ஒரேயொரு நாற்பது தாள் கொப்பிதானா..? ஒரு கவனமும் இல்ல…” என்று சொல்லச் சொல்லிப் போட்ட போடுகளில் கன்னங்கள் சிவந்திருந்தன. களிகம்பு தலையைப் பதம் பார்த்திருந்தது. தலையில் இரத்தக் கசிவு. கால் கைகளில் எல்லாம் தழும்புகள். தலையும் முகமும் வியர்த்துக் கொட்டியது.

“அதென்ன அந்தப் பார்சல்..?” எடுத்து வெளியே எறிந்தார். ஆனால் அந்தப் பொதிக்குள் இரண்டு அகல் விளக்குகள் எரியக் காத்திருக்கின்றன என்பது அவர் அறியாத விடயம்.

சில விடயங்கள் நன்கு பக்குவப் பட்ட மானுட நேயம் மிக்கவர்களுக்கே புரியும்.

அவன் போட்டிருந்த சேர்ட் ஏற்கெனவே தூய்மையாக இல்லை. இப்பொழுது அவன் குளத்தில் முழுகி எழுந்தவனைப் போல் தோற்றமளித்தான்.

நீண்ட நேரம் கடும் வெயிலில், அந்தக் கபில நிறப் பேப்பர் பேக்கைத் தலையில் பிடித்துக் கொண்டு முழங்காலில் இருந்ததன் விளைவு.

தொடர்ந்து நடக்க முடியாமல் தலையைச் சுற்ற ஆரம்பித்தது.

காலை உணவுக்காகக் கொண்டு வந்திருந்த நாணயங்கள் சேட் பொக்கட்டில் கிடந்தன. கண்டீனில் சாப்பிட்டு விட்டு வந்திருக்கலாம். இனிச் சந்திவரைக்கும் நடந்தால் தான் ஹோட்டல்.

எப்படியோ தட்டுத்தடுமாறி நடந்து வந்து சந்தியைக் கடந்து வலது புறம் திரும்பினான்.

பழைய மதில் சுவரோடு ஒட்டி வைத்தால் போல் அந்தத் தள்ளு வண்டி, ஒரு பழைய புத்தகக் கடை போல் உருவம் மாறி காட்சியளிக்கிறது.

அந்தக் கடையின் சொந்தக்காரன் ஒரு பெஞ்சில் அமர்ந்திருப்பது இவன் கண்ணில் பட்டதும், சட்டென்று ஒரு யோசனை.

கடைக்கு முன்னால் போய் நின்றான்.

“தம்பி என்ன புத்தகம் வாங்கப் போறியா…?” கடைக்காரன் சம்பிரதாயத்திற்காகக் கேட்டான்.

“எல்லாம் வாங்கியாச்சி நானா, இனியும் வாங்க என்ன இருக்கு, குடுக்கத் தான் இருக்கு”

ரமீஸின் குரலில் தொனித்த சோர்வும் விரக்தியும், வெறுப்பும் புத்தகக் கடைக்காரனைச் சிந்திக்க வைத்தது.

“அப்படியா…? என்ன வைச்சிருக்கே… எடு பாப்பம்…”

நெஞ்சோடு அணைத்து வைத்திருந்த புத்தகங்களை எடுத்துக் காட்டினான். அவை பொலிதீன் அட்டை போட்டு அழகாக இருந்தன.

“கொப்பி புத்தகங்களும், அரசாங்கப் புத்தகங்களும் எடுக்கிறதில்ல… இது தான் கண்டிஷன்’

கடைக்காரன் புத்தகங்களைப் பிரித்துப் பார்த்து, சிலவற்றைப் பொறுக்கி விலை சொன்னான் –

விலைகளில் அவனுக்குப் பிரச்சினை இல்லை இருந்தாலும்……

“விலையைப் பார்த்துக் குடுங்க நானா…இன்னம் கொஞ்சம் ஊட்ல யும் இருக்கு…”

“என்னமோ பேக்ல இருக்கே…?”

“அது குப்பிலாம்பு…”

“என்னத்துக்கு…?”

“விக்க…”

“ஓ…அப்ப நீயும் பிஸ்ன ஸ்காரனா…?”

“ஸ்கூல் விட்டு போற வழியில் தான் லாம்பு விக்கிறது….. இது எந்த நாளும் போற பிஸ்னஸ் இல்ல… வாப்பாவுக்குத் தெரிஞ்ச கைத்தொழில் இது ஒண்டு தான். வீட்லயிருந்து செய்து கடைகளுக்கு சப்ளை செஞ்சி கொண்டிருந்தார். இப்ப கால் இல்லாம போன பிறகு, குறைவு. பேவ்மெண்டில இருந்து கடலை யாவாரம் செயரார்….”

“இதென்ன தலையில காயம்…ஒடம்பெல்லாம் வீங்கின மாதிரி…யாரோடயும் அடிபிடிபட்டியா..?”

முதலில் ரமீஸ் சற்றுத் தயங்கினாலும், பிறகு நடந்த சம்பவத்தைச் சொன்னான்.

புத்தகக் கடைக்காரனுக்குத் தெளிவாகப் புரிந்து கொண்டு, பச்சாதாபப்பட்டான்.

“சரி இந்தா புடி.. உன்ட புத்தக சல்லி….மேல்மிச்சமா சல்லி இருக்கு, முதல்ல போய் முன்னுக்கு இருக்கிற பிளவுஸ் ஓட்டல்ல சாப்பிட்டு வா…”

அவன் ஹோட்டலில் புகுந்து பராட்டாவும் இறைச்சிக் கறியும் சாப்பிட்டு, பால் டீ குடித்துச் சற்று இளைப்பாறினான். தெம்பாக இருந்தது.

மீண்டும் வந்து கடைக்காரன் முன் நின்றான்.

“தம்பி…இந்தா இது பக்கத்துப் பாமசியில வாங்கின மருந்து…” என்று கூறி, பஞ்சைத் தண்ணீரில் நனைத்துத் தலைக் காயத்தை ஒற்றினான். அப்புறம் மருந்தை வைத்துப் பிளாஸ்டரை ஒட்டினாள்.

“இந்த டெப்லட் ரெண்ட இரவிக்கு தூங்கும் போது குடி….. காலமைக்கு பிட்டாக இருக்கும்……. ஒன்னும் யோசிக்காத… ஒரு மனிசன்ட தேவய கண்ணால கண்ட பிறகு செய்ற சின்ன ‘சதக்கா’…..’

கடைக்காரன் சற்று உணர்ச்சி வசப்பட்டுத் தொடர்ந்தான்.

“என்ன செய்றது…மொதல்ல இந்த மாதிரி மனிசனப் பத்தி பொலிசில மொறப்பாடு செஞ்சி, காயப்பட்ட நீ ஒடனே ஹொஸ்பிட்டல்ல அட்மிட்டாகியிருக்கணும். அடிகாயம், களி கம்புத் தழும்புகளுக்கெல்லாம் ரிப்போட் எடுக்கணும் வழக்குத் தாக்கல் செஞ்சி, கோட்டுக்கு இழுத்துத் தண்டனை வாங்கிக் கொடுக்கணும். எங்களுக்கும் சட்டம் தெரியும்…… என்ன இருந்தாலும் படிப்பிச்ச குரு. அது நசீப் எண்டு உட்டுப் போடு…… பார்க்கப் போனாக்கா……. இது ஒரு சின்ன சித்திரவதை தான். சின்ன சின்ன குத்தங்களுக்கெல்லாம் சில மாணவ ஹொஸ்டல்களில் சோறு தண்ணி குடுக்காம பட்டினி போட்டு வதைப்பாங்க. பெரிய தடிகளால அடித்து காயப்படுத்துவாங்க. கைகால்களில் சூடு வைப்பாங்க. தாங்க முடியாம ஹொஸ்டல வுட்டுப் பாஞ்சி போயிருக்கிறாங்க……. தேடப் போனா இப்படி எத்தனையோ..

அவர்கள் சற்று நேரம் மௌனம் சாதித்தார்கள். கடைக்காரன் மீண்டும் மௌனத்தை உடைத்தான் நிதானமாக.

“ரமிஸ்…இனி நீ ஸ்கூலுக்குப் போக மாட்டன்ற, வேற பள்ளிக் கூடத்துக்கும் மாறிப் போக மாட்ட…இந்தக் குப்பிலாம்பு யாவாரம் வருமானத்துக்கு சரிவராது. ஒண்டு சரிவராங்காட்டியும், நீ வந்து எண்ட புத்தகக் கடையில வேல செய்யு புரியமா……?”

அவன் சற்று யோசித்தான்.

வறுமை, கல்வியில் விரக்தி, தகப்பனின் நிலை இவை அவன் இள நெஞ்சை அழுத்தியது.

“படிப்பும் இல்லாம்..வெறும் குப்பிலாம்ப தூக்கிதிரியிறதால என்ன கிடைக்கப் போகுது…”

அவன் எதைச் செய்யவும் தயார் தான். இருந்தாலும் “வாப்பா கிட்ட ஒரு சொல்லு…சொல்லிவிட்டு…”

“ஓ…அது தான் சரி…இது உன்ட வாழ்க்க பிரச்சின யோசிச்சி முடிவெடு…நாள பின்னக்கி கஷ்டப்படாது…”

“அப்ப நா வாரன் நானா….”

அவன் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தான். களிகம்புத் தழும்புகள் அடிக்கடி வலியெடுத்தாலும், மனம் மட்டும் ஒரு வகைப் பூரிப்படைந்திருந்தது.

வழக்கமாக அவனை வாழ வைக்கும் அந்த போதி மரத்தடியில் வந்து நின்றான்.

நான்காக மடித்து மரத்தில் செருகி வைத்திருந்த மட்டையை இழுத்தெடுத்து விரித்தான். உருவம் இழந்த ஒரு காட் போட் பெட்டி அது.

எங்கேயோ ஒரு மூலையில் தொங்கிக் கொண்டிந்த ஓர் அடிமைக் கடிகாரம் பிற்பகல் ஒரு மணியைப் பகிரங்கப் படுத்தியது.

குப்பி விளக்குகளைப் பரத்திவிட்டு களைப்பும் நித்திரையும் கண்களைச் சுழற்ற, இலேசாக முதுகையும் தலையையும் மரத்திற்கு முட்டுக் கொடுத்து அரைத் தூக்கத்தில் மிதந்து கொண்டிருந்தான்.

சரியாக ஒன்று முப்பதுக்கு சகபாடிகள் முஜாஹிதும் சிபானும் வந்த உசுப்பினார்கள்.

“என்னடா ரமீஸ் எப்படி? தலையில் பெரிய காயமா?… மருந்து போட்டியா…?”

புத்தகக் கடைக்காரன் செய்த உதவிகளைப் பெருமைப்படுத்தி சொன்னான். படிக்கிற வயதில் தொழிலுக்குப் போவதை அவர்கள் விரும்பவில்லை. அவனது நிலையில் வேறு மாற்று வழிகள் இல்லை என்பதும் அவர்களுக்குத் தெரியும். –

மாணவப் பருவமும் பாடசாலை வாழ்க்கையும் ஒருவனுக்கு ஒரு முறை தான் கிடைக்கும் என்பதை அவர்கள் ஞாபகப்படுத்திச் சென்றார்கள்.

“இதெல்லாம் மாணவ மன்றத்தில் பேசறதுக்கு நல்லா இருக்கும்…ஆனா வாழ்க்க வேறு. ஞானம் பெறுகிறதுக்கும் தலையில எழுதியிருக்கணும்”

அவனது முணுமுணுப்பிலும் தெளிந்த தத்துவம் தான் தொளித்தது.

மாலையானதும் வீட்டிற்குப் போக ஆயத்தமாகிக் கொண்டிருந்த போது, அதிர்ஷ்ட வசமாகப் பஸ்சை விட்டு இறங்கி, ஒரு நடுத்தர வயது கிராமத்துப் பெண் வந்து குப்பி விளக்கைக் கையில் எடுத்துப் பார்த்தாள். அதன் அழகும் பிரகாசமும் அவளுக்குத் தான் புரிந்தது. “

“…மல்லி கீயத…?” விலை விசாரிப்பு.

அவனுக்கு மகிழ்ச்சி. விலையைக் குறைத்துச் சொன்னான்.

இரண்டு விளக்குகளையும் வாங்கிக் கொண்டாள். இனியும் அவை அவன் கைகளில் சிக்குப் பட்டு, சித்திர வதைக்கு உட்படுத்தப் பட்டால் நிச்சயமாகப் பிரகாசித்து ஒளி வீச அவற்றிற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகலாமல்லவா…

அவை அவனுக்கு நன்றியுடன் பிரியா விடை கூறிப் பிரிந்தன.

ஓரிரு தினங்கள் மறைந்தன. ஒரு நாள் திடீரென்று இருளின் சித்திரவதைக்குப் பின் காலைப் பொழுது புலர்ந்தது விடியலுக்காக மேகங்கள் கூடி நின்று வானத்துத் தடைகளைத் துடைத்தெறிய, கதிரவன் வீறு கொண்டு எழும்ப ஆரம்பித்தான்.

காலை எட்டரை மணியிருக்கும்.

ரமீஸ் வந்து புத்தகக் கடைக்கு முன்னால் நின்றான்.

கடைக்காரனுக்குப் புரிந்து விட்டது.

பொருத்தமான உதவிக்கரம் கிடைத்ததில் மகிழ்ச்சிக் கடல் பொங்கி வழிந்தது.

“ரமீஸ்…நா சொன்னத்துக்கு ஒத்துக்கிட்டியா, வாப்பா என்ன சொன்னாரு….?”

கடைக்காரன் மௌனத்தைக் கலைத்தான். “ஒத்துக்கிறன்..ஆனா… ஒண்ணு..”

“சொல்லேன் ரமீஸ்…”

“வாப்பா சம்பாத்தியத்தில நா படிச்சன் வாப்பா படிக்கல்ல. அவர் எனக்குச் செய்த கடமய நான் அவருக்குச் செய்யோணும், வேலை இல்லாத நேரத்தில நா படிக்கணும். அப்ப தான் என் அறிவு வளரும், உடுவீங்களா…?”

“என்ன பைத்தியமா! பொழுத வீணாக்காம படியே…” ர

மீஸின் இதயம் நிறைந்தது.

முதல் நாளே டியூட்டியை வெற்றிகரமாக ஆரம்பித்தான்.

சாக்குகளிலிருந்தும், பெட்டிகளிலிருந்தும் புத்தகங்களைக் கொட்டினான். காட்சிக்கு வைப்பதற்கு வகைப்படுத்தினான். கச்சிதமாக இருந்தது.

சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், சஞ்சிகைகள், சினிமா, கலை, இலக்கியம், விஞ்ஞானம், விண்வெளி ஆராய்ச்சி, சோதிடம் எத்தனை ரகங்கள்! எத்தனை தரங்கள்!

‘விந்தைகள் செய்த விஞ்ஞானிகள்’ நூலை எடுத்துப் பிரித்துப் படித்துப் பார்த்தான்

ஞானம்…!

அது இங்கேயல்லவா ஊற்றெடுக்கப் போகிறது. ரமீஸுக்குப் பாடசாலையிலிருந்து பல்கலைக் கழகத்திற்கு வந்து விட்டோமோ? என்ற ஓர் அருட்டுணர்வு மெள்ளக் கிளர்ந்து எழுந்தது.

– மல்லிகை 37வது ஆண்டு மலர் ஜனவரி – 2002.

– நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: 2003, மல்லிகைப் பந்தல் வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *