இன்று சித்திராப்பௌர்ணமி இந்த உலகத்தினை நமக்கு அடையாளப்படுத்திய தாயவள் நம்மை விட்டுச் சென்றாலும் அவளின் உன்னதங்களை ஞாபகப்படுத்திச் செல்லும் நாள்..இதனை மறவாத தாமரை கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டை இரண்டு படுத்துக்கொண்டு இருக்கிறாள்.சமையலறையில் அவள் செய்யும் ஆரவாரம் இறந்து போன பாட்டிக்கும் கேட்டு விடும் போல இருந்தது.
இலைதுளிர் காலத்தின் இதமான குளிரில் சுருண்டு படித்திருந்த அர்ச்சனாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.இந்த அம்மா நேற்று வேலைமுடிந்து வீட்டுக்கு வந்து சேர இரவு பத்துமணியாயிற்று அதற்கு பிறகு சில வீட்டு வேலைகளைச் செய்து குளித்து தூங்க இரவு பன்னிரண்டுக்கு மேல் இருக்கும் இந்த நிலையில அதிகாலை ஐந்து மணிக்கே எழும்பி குளித்து முழுகி எப்பவோ இறந்த பாட்டிக்காக ஏன் இந்த ஆரவாரம்.நினைக்கவே சிரிப்பாகத்தான் இருந்தது ஆனாலும் அம்மா மீது அனுதாபமே மேலோங்கியது.
அர்ச்சனா சுவிற்சர்லாந்தில் பிறந்தவள்.பதினெட்டு வயதை நிரம்பிய இளமங்கை.பிறந்த நாள் தொட்டு இன்றுவரை தமது பெற்றோர் தமிழ் மொழிக்கும் தமிழர் கலாச்சாரத்துக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை உள்வாங்கிக்கொண்டே வளர்ந்து வருகிறாள்.இதனால் என்னவோ தன் தாய் மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பை தன் மொழி மீதும் காட்டுகின்றாள்.என்றாலும் தமது பெற்றோரினால் பின்பற்றப்படும் சில சம்பிரதாயங்களை மட்டும் அவளால் பூரணமாக உள்வாங்க முடியவில்லை.
பாட்டியின் நினைவுகள் அவளுள் மெல்ல எட்டிப்பார்த்தது ..தனது போர்வையை இறுகப்பிடித்துக்கொண்டு கண்களை மூடி யோசிக்கிறாள்.எனக்கு ஒரு ஐந்து வயது இருக்கும்..முதல் தடவையாக அம்மா வாய் மூடாது சொல்லிக்கொண்டு இருக்கும் ஈழத்தையும் தொலைபேசியில் பேசிச் செல்லும் உறவுகளையும் பார்க்க பறக்கிறாள்.அந்த சின்ன வயதிலும் மறக்கமுடியாத நினைவாக பாட்டியின் ஆனந்தக் கண்ணீர் கண்முன் நின்றாடுகிறது.மனதில் ஏதோ பாரம் அழுத்துவதை உணர்ந்தாள் அர்ச்சனா.கன்றைத் தேடிவரும் தாய்ப்பசுபோல ஓடோடி வந்தணைத்த பாட்டி கண்ணை இமை காப்பதே போல பார்த்து பார்த்து கவணித்தாள்.அந்த வயதிலும் தன்னைத் தூக்கிச் சென்று தெரிந்தவர் அறிந்தவர்களிடம் எல்லாம் என் பேத்தி ..என் பேத்தி..என வாயார சொல்லி மகிழ்ந்தாள்.இருந்த அந்த ஒருமாத காலமும் பாட்டும் கதையும் தேவாரமும் திருவாசகமுமாக சொல்லிச் சொல்லி தமிழை இனிமையாக்கியவள்.தனக்குப்பிடித்த உணவு அதுவா இதுவா எனக் கேட்டு தன்கைபடவே செய்து ஊட்டிவிட்டவள்.பாட்டியின் வீட்டின் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு கூட்டிச் சென்று “விநாயகா” என்று கூறி கண்களை மூடி கண்ணீர் மல்க விபூதி பூசி தூக்கி உச்சி மோர்ந்தவள் எத்தனை இனிமையான நினைவுகள் அதிலும் அந்தச் சிறுவயது நினைவுகள் எப்படி இவ்வளவு ஆழமாக என்னுள் பதிந்தது. இதுதான் நம் தமிழரின் உறவுப்பிணைப்பா?
விடுமுறை வேகமாக முடிவடைய விழிகளில் கண்ணீரும் ஏக்கமுமாக பிரிய மனமின்றி விடைதந்த அந்த முகம் மட்டுமே அவளுள் இன்று வரை வாழ்கின்றது.அதன் பின்னர் வந்த காலங்களில் பாட்டி பேத்தி உறவு தொலைபேசியிலேயே தொடர்ந்தது.ஸ்கைப் பூட்டித்தாறோம் அதில் எங்களைப்பார்த்து பேசலாம் என்று அர்ச்சனா சொன்ன போது”இந்த குளிரில் கிடந்து உழைக்கிற பணத்தை வீணாக்காதிங்க..அதெல்லாம் வேண்டாம் தினமும் நான் உங்களுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் “..எனக் கூறி முற்றுப்புள்ளி வைத்தாள்.இது குறித்து அர்ச்சனா அம்மாவிடம் கேட்ட போது”பிள்ள அங்க இருக்கிற மக்களுக்கு நாங்க படுகிற கஷ்டம் தெரிய வாய்ப்பில்லை காரணம் இப்படியான சில வசதிகளை பெற்றோரின் பாசத்துக்காக பிள்ளைகள் செய்கையில் அவர்கள் அதனை ஆடம்பரத்தின் இலக்காக தப்பாக உள்வாங்குகின்றனர் இதனை பாட்டி விரும்பவில்லை விடு ” என்று குழப்பமாக பதிலளித்தாள் அம்மா.
சிறுக சிறுக கசிந்து கொண்டிருந்த ஈழத்தின் போர் திடீரென அணையை உடைத்துக்கொண்டு பாயும் வெள்ளம் போல பிரவாகித்தது.இந்த நிலையில் தனிமரமாக இருந்த பாட்டியின் உடலும் காவு கொள்ளப்பட்டது.
எவ்வளவு கொடுரமான நாள் ..ஈழத்தில் யுத்தம் யுத்தம் என அம்மாவும் அப்பாவும் தூக்கமின்றி துக்கத்தில் அங்கலாய்ப்பதை கேட்டும் பார்த்தும் இருக்கிறாள்.ஆனால் தனது செல்லப்பாட்டி இறக்கும் வரை அவளால் அந்த ஆழத்தை உணரமுடியவில்லை.என்று தனது பாட்டி இந்த ஈழத்தை விட்டு இரத்தமும் தசையுமாக சிதைந்து சென்றாளோ அன்று தான் அவளுள் அந்த ஈழத்தீ சுடர் விட்டெரியத் தொடங்கியது.அப்போது அவளுக்கு வயது பதினாறு.
தமிழர் என்ற காரணத்துக்காக மனிதம் தொலைத்த மனிதர்களாக அப்பாவி குழந்தைகளையும் பெண்களையும் வயதானவர்களையும் துடிக்கத்துடிக்க மரணிக்க வைத்ததில் கிடைத்த இலாபந்தான் என்ன? “மனிதரை மனிதர் சரிநிகர் சமனாய் மதிக்கும் பண்பு “எல்லாம் பாவேந்தன் பாரதியுடன் போய்விட்டதா!
எனது இனம் ஒன்றுமே அறியாது அப்பாவித்தனமாக அழிகிறதே.. சீ…என்ன வாழ்வியல் அரசியல்…என முதல் முதலாக சிந்தித்தாள் அர்ச்சனா.
அதைத் தொடர்ந்து வந்த காலங்கள் அவளை பல வழிகளில் வழிப்படுத்தியது மட்டுமன்றி தனது மொழியையும் கலாச்சாரத்தையும்
உயிர் போல நேசிக்கவும் கற்றுக்கொடுத்தது.தன்னைப்போன்ற ஏனைய புலம்பெயர் சந்ததியினருக்கும் ஏதாவது ஒரு வழியில் இதைக் கொண்டு செல்ல வேண்டுமென ஆசைப்பட்டாள்.அதன் நிமித்தமாக பல பெரியவர்களின் ஒத்துழைப்புடன் “புலம்பெயர் தமிழர் மாணவர் மன்றம்”ஒன்றை உருவாக்கி தன் ஊடாக இந்த நாட்டில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு மொழி ஆர்வத்தை வளர்க்கிறாள்.
ஆரம்பத்தில் சிறு குழுவாக இருந்தவர்கள் இன்று ஒரு விருட்சமாக உருவெடுத்து தமது பெற்றோரின் உதவியுடன் ஈழத்தின் கலைகளுக்கும் கலாச்சாரத்துக்கும் உயிர்ப்புக் கொடுக்கின்றனர்.
இன்றும் தமது தாயை இழந்தவர்கள் இந்த சித்திராப்பௌர்ணமியில் உணவுகள் சமைத்து அவர்களது நிழற்படங்களுக்கு முன்னே படைத்து தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென வேண்டுவதுடன் தமது நண்பர்களுக்கும் உணவை வழங்குகின்றனர்.இதைத் தான் தனது அம்மாவும் மும்முரமாக இன்று செய்து கொண்டு இருக்கிறாள்.ஆனால் அர்ச்சனாவின் மனதில்ஏதோ நெருடியது.
படுக்கையை விட்டு விருட்டென எழுந்தவள் சமையலறையில் பொட்டும் விபூதியுமாக ஈரத்தலையுடன் நின்ற தாயைப் பார்த்தாள்.எவ்வளவு மங்களகரமாக இருக்கிறாள்.இந்த இயற்கை அழகுக்கு ஏதும் ஈடாகாது என மனதுள் நினைத்துக் கொண்டே அம்மா….என ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள்.”ஏன் பிள்ளை கொஞ்ச நேரம் படுக்கலாமே …இப்பதான் ஆறு மணி என்றாள் கேள்விக்குறியுடன்.புன்னகையை பதிலாக கொடுத்த அர்ச்சனா “அம்மா ஏன் இப்படி நேரத்துக்கு எழும்பி உடம்பை கெடுக்கிறீங்க ?என்றவளை இடை மறித்த தாமரை எனக்கு வேலை அதோடு பக்கத்தில் இருக்கும்சுந்தரம் மாமா சங்கமி அன்ரி எல்லோரும் வேலைக்கு போறவங்க அதனால் நேரத்துக்கு சமைத்து முடித்தால் அவங்களுக்கும் சாப்பாடு கொடுக்கலாம் அதுதான் பிள்ள.
அம்மா….என்று இழுத்தாள் அர்ச்சனா என்னம்மா என்றாள் தாமரை ? பாட்டியின் ஆத்மா சாந்தியடையத்தானே இதைச் செய்கிறோம் என்றாள்? கேள்விக்குறியுடன் ஆமாம் என்றாள் அம்மா ! அப்படியென்றால் இதுவொரு நம்பிக்கை தானே ..ஆமாம் என்றாள் அம்மா மீண்டும் அழுத்தமாக ” இங்கு எல்லோருக்கும் திகட்ட திகட்ட சாப்பிட உணவு இருக்கு அதைவிட பசி என்றால் என்னவென உணர வாய்ப்பில்லாத இடத்தில் இவர்கள் வாழ்கிறார்கள் நீங்கள் கொடுக்கும் உணவை நட்புக்காக வேண்டி உண்டாலும் அவர்களால் நமது பாட்டியின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென மனதார நினைக்க முடியாது.இதை நாமும் எதிர்பார்க்க முடியாது தானே என்றாள் அர்ச்சனா தெளிவுடன்.
புலம்பெயர் நாட்டில் பிறந்து வளர்ந்த தனது மகளின் நியாயமான கேள்விகளை கேட்டு சற்றுத் தடுமாறித்தான் போனாள் தாமரை.ஆனால் அர்ச்சனா நாங்கள் என்ன ஈழத்திலா இருக்கிறோம்.சமைத்து ஏழை எளியவர்களுக்கு கொடுப்பதற்கு நாங்கள் வாழ்கிற நாட்டில் இதைத்தவிர வேறு ஏதும் செய்யமுடியாது பிள்ளை என்றாள் நியாயமான வேதனையுடன்.
ஏன் அம்மா இந்த நாட்டில் செய்றதைப்பற்றியே யோசிக்கிறீங்க.எங்களது தாய் நாட்டில் எத்தனையோ பிள்ளைகள் இந்தப் போரில் அம்மா அப்பாவை இழந்து அநாதைகளாக ஒரு நேர உணவுக்காகவும் துன்பப்படுகின்றனர்.புலம் பெயர் நாட்டில் வாழும் எத்தனையோ நல்ல மனிதர்கள் எவ்வளவோ உதவி செய்வதாக நீங்கள்தானே சொல்வீர்கள் அதைப்போல நாங்களும் ஏன் செய்யக்கூடாது.?இந்த நாளுக்கு செலவழிக்கும் பணத்தை அவர்களுக்கு அனுப்பினால் மனதார பாட்டியை வாழ்த்தி வயிறாற உண்ணுவர்களே…நேரம் மிச்சம் அத்துடன் மற்றவர்களுக்கு இந்த நாளிளேனும்உணவு வழங்கி பசியாற்றிய மனத்திருப்தியும் கிடைக்கும் என்றாள் அர்ச்சனா.
என்தாய் என்னை தாய்ப்பால் கொடுத்து சீராட்டி வளர்த்தாள்.ஆனால் என் மகளோ இந்த நன்நாளில் ஞானப்பால் ஊட்டி என் தாய்க்குரிய கடனை திறம்பட புரிவதற்கு வழிகாட்டிவிட்டாளே என சிந்தித்துக் கொண்டே எதுவுமே பதில் சொல்லாது அடுப்பை அணைத்துக்கொண்டு ஈழத்தின் “செஞ்சோலை அகத்துக்கு “உரிய தொலைபேசி இலக்கத்தை சுழற்றினாள் தாமரை.