ஜீப்புகள் ஓடிக் கொண்டிருக்கின்றன

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 1,363 
 

(1976 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘மூவிருமுகங்கள் போற்றி
முகம்பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள்கள் போற்றி’

எடுப்பான குரலில் மனமுருகப் பாடினார் சொக்க லிங்கம். பக்திப் பிரவாகமாக வெளிக் கிளம்பிய அவரது இசை கோயில் மண்டபத்தை நிறைத்து, உள்ளே வேலும் மயிலுமாக வீற்றிருந்தவரின் சன்னிதானத்தை நிறைத்து, நிர்மானுஷ்யமான அந்தப் பிரதேசத்து மருதமரங்களிடை யேயும் எதிரொலித்தது.

மூர்த்திகரம் என்பது கோயிலின் அளவுப் பிரமாணத்தைப் பொறுத்ததல்ல. ஆற்றங்கரையிலே அனாதரவாக விடப்பட்டிருக்கும் அச்சின்னஞ் சிறு கோயிலிற் குடிகொண்டிருக்கும் சித்திர வேலாயுதரின், மூர்த்திகரத்திற்கு ஈடும் இணையும் கிடையாது; என்றெல்லாம் பக்தர்கள் பேசிக் கொள்வதைச் சொக்கலிங்கம் கேள்விப்பட்டுத்தான் இருந்தார்.

புரட்டாசி மாதத்துப் பௌர்ணமி கழிந்த பின்னர் அம்மூர்த்திக்கு விழா எடுக்கையில் சுற்று வட்டாரத்து ஊர்கள் எல்லாமே அக்கோயிலின் வெளிப்பிரகாரத்திற் கூடிவிடும். அசமந்து கிடந்த அப்பிராந்தியத்தில் பதினெட்டு நாட்களுக்குக் கடையும் கண்ணியும், காரும்’ லொறியுமாக அமர்க்களப்படும் என்பதையும் சொக்க லிங்கத்தார் அறிந்துதான் இருந்தார்.

ஆனாலும் தான் திருக்கோணமலைப் பிராந்தியத் திற்கு மாற்றலாகி வந்த இரண்டு வருட காலத்தில் எந்தத் திருவிழாவிலும் கலந்து கொள்ளும் பாக்கியம் சொக்க லிங்கத்தாருக்குச் சித்திக்கவேயில்லை!

சென்ற மாதந்தான் அக்கோயிலில் திருவிழா நடந் தது. அவரது காரியாலயத்திலிருந்த அத்தனை ஊழியர்களும் – இந்துக்களல்லாத ஊழியருங்கூட அத்திருவிழா விற்குச் சென்றிருந்தார்கள்.

அவர்கள் தனியாக ஒரு பஸ்ஸை அமர்த்திக் கொண்டு தான் கோயிலுக்குச் சென்றார்கள். அப்படிச் செல்ல எத்தனிக்கையில் காரியாலயப் பிரதமலிகிதர் சோம சுந்தரம் கேட்டார்: ‘ஐயா எல்லோருமே சித்திரவேலாயுதர் கோயிலுக்குப் புறப்படுகிறோம். வெள்ளிக் கிழமை பின்னேரம் புறப்பட்டுச் சென்று இரண்டு திருவிழாக்களைப் பார்த்துவிட்டு ஞாயிற்றுக் கிழமை திரும்பவிருக்கிறோம். நீங்களும் வாருங்கள்.’

சொக்கலிங்கம் சொன்னார்: ‘எனக்கும் அந்தக் கோயிலைத் தரிசிக்க வேண்டும் என்று கொள்ளை ஆசை. ஆனால் எந்தக் கோயிலுக்கும் திருவிழாக் கும்பலிற் செல்வது எனக்குப் படிக்காது. திருவிழாவின் கோலாகல மான கண்காட்சிகளுக்கிடையே பக்தி பூர்வமாகச் சுவாமி தரிசனம் பண்ண முடியாது. வேடிக்கையிலும் வினோதத்திலுந்தான் மனம் செல்லும்.’

‘அப்படியானால் நாங்கள் போய் வருகிறோம்’ என்று விடைபெற்றுக் கொண்டே சோமசுந்தரம் மற்றவர்களோடு சென்று விட்டார்.

திருவிழாவிற்குச் சென்று திரும்பி வந்த கூட்டத்தினர் சுவாமிக்குக் காவடி எடுத்த பக்தர்களின் வைராக்கியத்தை யிட்டு வாய் ஓயாமற் பேசினார்கள். தீமிதிப்பு வைபவத்தைப் பற்றிப் பரவசத்தோடு கதைத்தார்கள். கோயிலின் அருகாமையிற் சலசலத்துத் தெளிந்தோடும் புனித கங்கையின் தீர்த்த விசேடத்தையிட்டுப் பூரித்தார்கள்.

‘முப்பது ரூபாய்க் காசுக்கு அருமையான பயணம்’ என்று சிலாகித்தான் இளைஞனான சந்திரன்.

‘இதற்காகத்தான் நான் கூட்டத்தோடு கூட்டமாக எந்தக் கோயிலுக்குமே போறதில்லை’ என்று தம் தனித்துவத்தை நிலைநாட்டிய சொக்கலிங்கம், பிரதம லிகிதர் மறக்காமற் கொண்டு வந்திருந்த கோயில் திரு நீற்றை ஆசாரத்தோடு வாங்கி நெற்றியிற் தரித்துக் கொண்டே ‘வேலாயுதர் என்னையும் தன் சந்நிதிக்கு அழைக்காமலா இருக்கப் போகிறார்?’ என்று சொல்லிக் கொள்கையில் அவர் கண்கள் பனித்தன. காரியாலயம் முழுமையுமே-சந்திரன் என்ற அந்த இளைஞன் உட்பட அவரது ஆத்மார்த்தமான பக்தியைக் கண்டு வியந்தது.

மாதங்கள் உருண்டோடி விட்டன. சொக்கலிங்கம் தம் காரியாலயத்து மேசையிலிருந்த கோலிங்பெல்லை அழுத்தினார்.

காரியாலயச் சேவகன் அவர் முன்னால் அடக்க ஒடுக்கமாக வந்து நின்றான்.

‘சேர்’

‘சந்திரனை வரச் சொல்’ சந்திரன் வந்தான். தான் சித்திராவேலாயுதர் கோயி லுக்கு ட்ரிப் போன நாட்தொடக்கம் சொக்கலிங்கத்தார் தன்மேல் ஏதோ கறுவிக் கொண்டிருப்பது சந்திரனுக்குத் தெரியும். கடவுட் பக்தியற்ற கழிசறை என்று தன்னைப் பற்றி அவர் சொன்ன தாக பிரதமலிகிதர் மூலம் கேள்விப் பட்டிருக்கிறான். ஆகவே என்னவோ ஏதோ என்ற அச்சத்தோடுதான் சொக்கலிங்கத்தாரிடம் போனான்.

தன் முன்னால் அடக்கொடுக்கமாக நின்ற சந்திரனிடம் சொக்கலிங்கத்தார் கேட்டார்:

கங்கைக் கரையில் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் ஆரம்பித்திருக்கும் இளைஞர் விவசாயத் திட்டத்திற்கான பொருட்கள் எல்லாம் அனுப்பப்பட்டாயிற்றா?

‘ஆம் ஐயா. விதை வெங்காயம், நீரிறை கருவிகள், பசளை- கிருமிநாசினி மருந்துகள் எல்லாமே அனுப்பப் பட்டாயிற்று. அனுப்பி இரண்டு வாரங்கள் இருக்கும்.’

‘அவ்வளவுந்தானா?’ சொக்கலிங்கத்தாரின் தரவில் கடுமை கனன்றது.

‘காரியாலயப் பாவிப்புக்கான காகிதாதிகள் இன்னும் சில சில்லறைப் பொருட்களை இன்றையத் தபாலில் அனுப்புவேன்.’

‘இத்தனை நாளும் ஏன் அவைகளை அனுப்பவில்லை’ என்று கர்ச்சித்த சொக்கலிங்கத்தார் நாளைக்குச் சனிக்கிழமை. காரியாலய விடுமுறை. அங்கே அவர் களுக்கு ஒன்றும் கிடைக்காது’ என்று பொரிந்தார்.

‘அவைகளுக்கு உடனடித் தேவையில்லை ஐயா?’ என்று இழுத்தான் சந்திரன்.

‘ஷடப். இன்றைக்கு அத்திட்டத்தின் மனேஜர் கடிதம் எழுதியிருக்கிறார். போய் எல்லாவற்றையும் எடுத்து வையும்’ என்று ஆணையிட்ட சொக்கலிங்கம். ‘யூஸ்லெஸ் பகர்’ என்று ஆங்கிலத்தில் புறுபுறுத்தார்.

தலைகுனிவோடு தன் இருப்பிடம் சேர்ந்த கந்திரன் காகிதங்கள், கடித உறை, குண்டூசிகள், பிசின் ஆகிய பொருட்களை ஒரு பெரிய கடித உறையிற் போட்டுக் கட்டினான்.

காரியாலயச் சேவகன் அந்தப் பொதியை எடுத்துச் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் காரியாலய ஜீப் வண்டி உறுமிக் கொண்டோடியது. சாரதியின் ஆசனத்துக் கருகாமையில் சொக்கலிங்கத்தார் வீற்றிருந்தார்.

உச்சி வெய்யிலின் கொடுங் கிரணங்களைத் தடுத்து நிறுத்தித் தண்ணிழல் பரப்பும் புனித சேவையிற் கர்ம யோக சாதகனாக நின்ற மருதமரத்தின் கீழ் ஜீப் வண்டி நின்றது.

வண்டியிலிருந்தபடியே தன் மேற்சட்டையைக் கழற்றி அரையில் வேட்டியையும் உடுத்திக் கொண்டு இடுப்பிலே சால்வையையும் கட்டிக்கொண்டு இறங்கினார் சொக்கலிங்கம்.

நேரே ஆற்றுக்குச் சென்று முழங்காலளவு தண்ணீரில் இறங்கி முகம், கை, கால்களைக் கழுவிக் கொண்டு அருகே இருந்த பெட்டிக்கடைக்குச் சென்றார்.

அங்கே தேங்காய், பழம், கற்பூரம் வாங்கிக்கொண்டு ஆசாரத்தோடு கோயிலுக்குச் சென்ற சொக்கலிங்கத்தைப் பெட்டிக்கடைக்காரன் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். ‘எத்தனை பெரிய உத்தியோகத்தராக இருந்தும் எத்தனை பக்தி. எவ்வளவு ஆசாரம்!’ என்று அவன் வாய் முணுமுணுத்தது.

சொக்கலிங்கம் கோயிலுக்குச் சென்ற சமயம் மத்தியானப் பூசை முடிவடைந்திருந்தது. கோயிற் குருக்கள் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

ஆனாலும் சொக்கர் அதைப் பொருட்படுத்தவே யில்லை. மனதிலே நிறைந்திருக்கும் வேலவரைப் பூசை நேரத்திற்தானா கும்பிட வேண்டும்?

ஆகவே அவர் கொடிக் கம்பத்தருகே நின்று, பக்திச் சீரத்தையோடு தலைமேற் கரங்களைக் கூப்பிக்கோயிலின் கர்ப்பக்கிரஹத்திடையே மோனத்திலாழ்ந்திருக்கும் வேலவரின் காதுகளிற் படும்படியாக ஏன் கோயில் மண்டபம் முழுமையும் அதற்கும் அப்பால் நிர்மானுஷ்ய மான அப்பிராந்தியத்தின் மருதஞ்சோலைகளையுமே நிறைக்கும்படியாக அவர் பாடினார். “மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி”

அவரது குரல் கேட்டதாலோ, அல்லது பெட்டிக் கடைக்காரர் சொன்னதினாலோ மீண்டும் அவசர அவசரமாக கோயிலுட் பிரவேசித்த குருக்கள், அந்த அதிகாரிக்காக விசேட பூசை ஒன்றைச் செய்ய ஆயத்த மாக இருந்தார்.

‘எனக்காகப் பிரத்தியேகமாக ஏதுமே வேண்டாம்” என்று சமிக்ஞை செய்துவிட்டு சொக்கலிங்கத்தார் பாடிக் கொண்டேயிருந்தார்.

குருக்கள் அவசர அவசரமாகச் சந்தனம் அரைத்தார். அரைத்ததை வழித்து எடுத்துக் கொண்டு திருநீற்றையும் சேர்த்துச் சொக்கலிங்கத்திடம் நீட்டினார்.

ஆசாரத்தோடு அவைகளைத் தரித்துக் கொண்டு ஜீப்புக்கு மீண்ட சொக்கலிங்கத்தாரைச் சுமந்து கொண்டு அரசாங்க ஜீப் வண்டி இளைஞர் விவசாயத் திட்டப் பண்ணையை நோக்கி ஓடிற்று.

தான் கொண்டு வந்த பார்சலைத் திட்டச் செய லாளரிடம் கையளித்து விட்டு மீண்ட சொக்கலிங்கத்தார் ‘ஐந்தாண்டுத் திட்டத்திற் தமது பிரதேசத்தின் அபிவிருத்தி’ என்ற விடயமாக திட்டக்கமிஷனுக்கு அறிக்கை எழுதுவதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

அதே நேரத்தில் அரசாங்க ஜீப்புக்கான எரி பொருள், அதன் தேய்மானம், சார திக்கும் தலைமை உத்தியோகத்தருக்குமான சப்ஸிஸ்ரென்ஸ் இவைகளுக்காக நூற்றுக்கணக்கான ரூபாய்கள் மக்கள பணம் விரயமாயிற்றே. இந்த லட்சணத்தில் இந்த நாடு எப்படி உருப்படும்?’ என்று சிந்தித்துக் கொண்டிருந்தான் சந்திரன்!

பாவம்! அவன் கடவுள் பக்தியற்ற கழிசடை!

– வீரகேசரி 1976

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *