சொல்லாமல் போனது தப்பு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 12, 2022
பார்வையிட்டோர்: 3,282 
 

மிகப்பெரிய சிக்கலில் மாட்டி கொண்டிருக்கிறேன். எதிரே காவல்துறை அதிகாரி கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டிருக்கிறார்.

பார்த்தா படிச்சவனா தெரியறதுனால மரியாதையா விசாரிச்சுகிட்டிருக்கேன். உங்க இரண்டு பேருக்கும் எத்தனை நாளாய் பழக்கம்? இரண்டு பேருக்கும் இதே தான் தொழிலா?

இவர்களுக்கு எதை சொல்லி புரிய வைப்பது. எல்லாம் என் போதாத காலம்.

ஒரு நிறுவனத்தில் கணக்கராய் இருக்கிறேன், வீட்டில் இருந்து கிளம்பும் போதே பெண் சொல்லிவிட்டாள், அப்பா எனக்கு “ஆன்லைன் கிளாஸ்” இருக்கு, நீ ஸ்கூல் பீஸை பேங்குல கட்டிடு.

எட்டாவது படிக்கிறாள், அவள் பள்ளியில் எல்ல கட்டணங்களும் வங்கிகள் வழியாகத்தான். நாம் அந்த அக்கவுண்டில் போட்டுவிட்டு கட்டியதற்கான வங்கி செலானை அவர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தால் போதும்.

இருந்தாலும் இன்று “ஆடிட்டிங்” வேலை அலுவலகத்தில் இருக்கிறது, இந்த நேரத்தில் வங்கிக்கு போய் இந்த வேலையை எப்படி பார்ப்பது? மனதுக்குள் நினைத்தாலும் பெண்ணிடம் எதுவும் சொல்லவில்லை, அங்கு போய் பார்த்து கொள்ளலாம், முடிவு செய்து கிளம்பினேன்.

சத்தமில்லாம் வங்கிக்கு போய் வந்து விடவேண்டும், பக்கத்து இருக்கை நண்பனிடம் காதை கடித்து விட்டு எனது தலைமை கணக்கரிடம் அனுமதி பெறாமல்தான் வந்திருக்கிறேன்.

வந்தவன் வந்த வேலையை மட்டும் பார்த்து போயிருந்தால் எந்த பிரச்சினையும் வந்திருக்காது. “செலானை” நிரப்பி வரிசையில் நின்று பணம் கட்டி விட்டு திரும்பியவன் ஏதேச்சையாய் எதிர்புறம் பார்க்க, வங்கியின் மூலையில் ஒரு ஓரமாய் அமந்திருப்பவனை பார்த்தேன் எங்கோ பார்த்த முகம் போல் தெரிகிறதே என்று உற்று பார்த்தேன்.

அட..நம்ம பாலு மாதிரி இருக்கே, ஆமாம் அவனேதான் எத்தனை நாளாச்சு இவனை பார்த்து, ஏன் இருபது வருசம் இருக்கலாம், என் கூட பத்தாவது வரைக்கும் படிச்சவன், அதுக்கப்புறம் வேற ஸ்கூலுக்கு மாறிவிட்டான்.

வேகமாய் அவனருகில் சென்றவன் ஹலோ பாலு..மெல்ல அழைத்தேன். ஏதோ யோசனையில் அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்து இருந்தவன் சட்டென விழித்தான்.

உங்க..உன் பேரு பாலுதானே…ஆமாம் என்று தலையசைத்தவன் மீண்டும் என்னை பார்த்து விழித்தான். டேய் என்னை தெரியலையா? ராஜேஷ், பத்தாவது வரைக்கும் ஒண்ணா படிச்சமே, இரண்டாவது வரிசையில ஒரே பெஞ்சுல உட்கார்ந்திருந்தோமே. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு உரக்க சொல்லி விட்டேன் போலிருக்கிறது. சுற்றி உள்ளவர்கள் எங்களை பார்க்க.

சட்டென பாலு எழுந்து என் கையை பற்றி வெளியே இழுத்து வந்தான். எனக்கு அவன் செய்கை அவ்வளவாக பிடிக்கவில்லை என்றாலும், நீண்ட நாள் கழித்து சந்திப்பவனிடம் ஏன் வம்பு என்று நினைத்தவன் வேண்டா வெறுப்பாய் அவனுடன் நடந்தேன்.

வெளியே வந்தவுடன் என் முகம் போன போக்கை கவனித்திருப்பானோ என்னவோ, சாரி தப்பா நினைச்சுக்காதே, தோள் மீது கை போட்டவன் வா..எங்காவது உட்கார்ந்து பேசலாம் அழைத்தான்.

அவன் இப்படி பேசியவுடன் கொஞ்சம் தளர்ந்தேன், சாரி, நானும் கூட கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன், பேச்சை சகஜமாக்க, விடு, பக்கத்துல இருக்கற பேக்கரிக்கு இழுத்து சென்றேன்.

கொஞ்சம் தயங்கினான், ஸ், பேசாம வா என் கூட, இருவரும் பேக்கரிக்குள் சென்று, இரண்டு ‘டீ’ ஆர்டர் செய்து விட்டு அங்கிருந்த டேபிளில் அமர்ந்தோம்.

அப்புறம் என்ன பண்ணிட்டு இருக்கே?

என் கேள்விக்கு சிறிது தடுமாறியவன், சின்னதா பிசினஸ் ஒண்ணு பண்ணிட்டு இருக்கேன், அது சரி நீ என்ன பண்ணறே? அவசரமாய் என்னை பற்றி விசாரிக்க ஆரம்பித்தான். இந்த செயல் எனக்கு அப்பொழுது பெரியதாக தெரியவில்லை, ஆனால் இதோ இந்த காவல் அதிகாரிகள் கேள்வி கேட்கும் போதுதான் தெரிகிறது.

சார் அவன் என்னோட பால்ய நண்பன், ஒண்ணா பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கோம், ரொம்ப நாள் கழிச்சு பேங்குல பார்த்துட்டு அப்படியே வெளியே போய் இதோ இந்த பேக்கரியில டீ சாப்பிட்டோம், என் கூட பத்து நிமிசம் கூட பேசியிருக்க மாட்டான், அதுக்குள்ள சாரி நண்பா, தப்பா நினைச்சுக்காதே, அப்படீன்னு சொல்லி அவசரமா இதோ இந்த வழியாத்தான் கிளம்பி போனான்.

இப்ப நீங்க வேகமா போனா கூட அவனை பிடிச்சிடலாம், கூட்டிட்டு வந்து விசாரிச்சுக்குங்க, நான் வேணா உங்க கூட இங்கேயே நிக்கறேன். அநியாயமா என்னை சந்தேகப்படாதீங்க, நான் இதோ எதிர்த்தாப்புல இருக்கற கம்பெனியிலதான் வேலை செய்யறேன், போய் விசாரிச்சு என்னை பத்தி தெரிஞ்சுக்குங்க, ப்ளீஸ்..

முகம் முழுக்க அவமானத்தில் சுருங்கி விட்டது. அதுவும் வங்கிக்குள் அத்தனை பேரும் என்னை திருடன் மாதிரி பார்ப்பதை பார்த்ததும் மனசு துடிக்க ஆரம்பித்தது.

அது எப்படி நீ அவன் பக்கத்துல வந்த உடனே அவனும் நீயும் கிளம்பி வெளியே போறீங்க, நாங்க உங்களை தேடி வர்றப்ப அவன் சரியா காணாம போயிருக்கான், நீ மட்டும் நின்னுகிட்டிருக்கே.

சட்டை பையில் இருந்த “வங்கி செலானை” எடுத்து காண்பித்து இங்க பாருங்க சார், பேங்குல என்னோட வேலை முடிஞ்சிடுச்சு, கிளம்ப போனவன் ரொம்ப நாள் கழிச்சு ஒரு நண்பனை பார்த்து பேசிட்டு போனது குத்தமா சார்? அப்படி என்னதான் சார் பிரச்சினை? எதையோ காணோம் காணோமுன்னு சொல்றீங்க, என்னன்னே புரியலை

அமர்த்தலாய் சிரித்த அந்த காவல் அதிகாரி சத்தியமா உனக்கு தெரியாது, கிண்டலாய் கேட்டவர் இனி மேல மரியாதையாய் கேட்டிட்டு இருக்கமாட்டேன், ஸ்டேசனுக்கு கூட்டிட்டு போய் எப்படி விசாரிக்கனுமோ அப்படி விசாரிச்சா தெரியும்.

சார் பிரச்சினை என்னன்னு, சொல்லிட்டு அப்புறமா என்னை மிரட்டுங்க சார் கொஞ்சம் குரலில் காரத்தை காட்டினேன்.

இங்க பாரு, இவரோட பை ஒண்ணு இங்கிருந்துச்சு, அதுல பத்தாயிரம் பேங்குல கட்டறதுக்காக வச்சிருந்தாரு, உன் கூட வந்தவந்தான் பக்கத்துல உக்கார்ந்துகிட்டு இருந்தான், நீங்க இரண்டு பேரும் எந்திரிச்சு போன பின்னால வெறும் பை மட்டும்தான் இருக்கு பணத்தை காணலை. கேமிராவுல நீங்க இரண்டு பேருதான் நின்னுகிட்டிருந்திருக்கீங்க, அதுதான் எங்களுக்கு இப்ப டவுட்டா இருக்கு.

என்னடா வம்பாய் போச்சு, சார் நான் அவனை பார்த்தப்ப அந்த இடத்துல அவன் மட்டும்தான் இருந்தான், பக்கத்துல பை ஒண்ணும் கண்ணுக்கு தெரிஞ்ச மாதிரி தெரியலை. நீங்க மறுபடி ‘சிசிடிவிய’ நல்லா பாருங்க.

அதற்குள் அந்த பெரியவரின் பேரை சொல்லி வங்கிக்குள் இருந்து அழைப்பு வர காவலரை பார்த்தவர், அவர் தலையசைக்கவும் கூப்பிட்ட இடத்தை நோக்கி சென்றார்.

“மாரப்பன்” உங்க பேருதானே, பத்தாயிரம் பணம் கட்டி பாதி செலானை இங்கேயே போட்டுட்டு போயிருக்கீங்க, சொல்லிவிட்டு அந்த கவுண்டரில் இருந்த பெண் அந்த வங்கி செலானை எடுத்து கொடுத்தாள்.

எனக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை, அந்த காவல் அதிகாரி அந்த பெரியவரை முறைத்தார். நான் அழும் குரலில் ஏன் சார் இப்படி எல்லாத்து முன்னாடி என் மானத்தை வாங்கிட்டீங்க இல்லையா? நீங்க பேசின பேச்செல்லாம் திரும்ப கிடைக்குமா சார்?

அந்த அதிகாரி ஒரு மன்னிப்பு கூட கேட்காமல் திரும்ப எத்தனிக்க, பாலு வேகமாய் உள்ளே வந்தான், அங்கே நானும் என்னை சுற்றி ஒரு கூட்டம் நிற்பதை பார்த்தவுடன் கேள்விக்குறியாய் என்னை பார்க்க நானும் திகைப்புடன் அவனை பார்த்தேன்.

இங்க ஒரு பெரியவர் இருந்தாரு பார்த்தியா, அவர்கிட்டே என் பேனாவை கையெழுத்து போட கொடுத்தேன், நல்ல ராசியான பேனா, அதை வாங்கறதுக்கு திரும்ப வந்தேன். அது சரி எதுக்கு இந்த போலீஸ் உன் முன்னாடி நிக்கறாரு.

நான் குரலில் அழுகையை காட்டி நடந்த எல்லா விவரங்களையும் (அவமானங்களையும்) சொல்லி முடித்தேன்.

அவ்வளவுதான், தமிழில் ஆரம்பித்து இந்தியாவில் பேசும் நான்கைந்து மொழிகளில் அந்த காவலரிடம் வாதித்தவன், சட்டென தன் அடையாள அட்டையை காண்பித்தான்.

அவ்வளவுதான், அந்த காவல் அதிகாரி முகம் வேர்த்து சாரி சாரி சார்.. அட்டென்சனில் நின்று சல்யூட் வைக்க..

பார்த்து கொண்டிருந்த எனக்கு இவ்வளவு நேரம் நான் பட்ட அவமானங்களின் கஷ்டமெல்லாம் வடிந்து ஒரு வித சந்தோஷம் மனதில் பரவியதை தடுக்க முடியவில்லை.

என்னை அணைத்து வெளியே கூட்டி வந்தவன், சாரி நான் பம்பாயில இருந்து ஒரு கேஸ் விஷயமா வந்திருக்கேன், அவன் பம்பாயில இருந்து இங்க வந்து கொஞ்ச நாளா தங்கியிருக்கான், அவன் இந்த பேங்குக்கு அடிக்கடி வந்து போறதா எனக்கு நியூஸ் கிடைச்சு, ஒதுங்கி நின்னு பார்த்துகிட்டிருந்தேன். அதுதானலதான் உன்னை பார்த்ததும் பேச தயங்கினேன், அவனுக்கு என்னை நல்லா தெரியும். என்னைய பார்த்துட்டான்ன தப்பிச்சுக்குவான், அதுனாலதான் உன்னை வெளியில கூப்பிட்டு போனேன். இப்ப கூட நான் பேனாவுக்காக வரலை, மறுபடி அவன் வருவானான்னு பார்க்கத்தான் வந்தேன். சாரி..சாரி..என்னால உனக்கு தொல்லையாயிடுச்சு.

என்னை சமாதானப்படுத்தி அவன் விடை பெற்று சென்றாலும் என் மனம் மட்டும் கடவுளே இப்படி ஒரு சிக்கல்ல மாட்ட வச்சு விடுவிச்சும் கொடுத்துட்டியே.

அலுவலகத்தில் தலைமை கணக்காளர் என்னை கண்டபடி பேசினார் ஏன் சொல்லாம கொள்ளாம வெளியில போனே? உன்னை பத்தி இப்பவே கம்பெளியிண்ட் பண்ண போறேன்.

அவர் இன்னும் கூட திட்டட்டும் சார், எவ்வளவு பெரிய அபாண்டத்துல இருந்து தப்பிச்சிருக்கேன், என்ன இருந்தாலும் அவர்கிட்டே சொல்லாம போனது தப்புத்தானே சார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *