செங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கெட்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: June 26, 2013
பார்வையிட்டோர்: 15,891 
 
 

கிழவி பஸ்ஸில் ஏறியதிலிருந்து அத்தனை பேரின் கவனமும் அவள் மீதுதான். ஒரு பித்தளை அண்டா, எவர்சில்வர் குடம் இரண்டையும் என்ஜினுக்கு அருகில் காலியாயிருந்த இடத்தில் பத்திரப்படுத்திவிட்டு தானும் மருமகளும் அமர இடம் தேடினாள்.

டிரைவர் இருக்கைக்குப் பின்புறம் மூ‎ன்று பேர் அமர்கிற சீட்டில் கணவன், மனைவியாய் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள்.

“ஏம்ப்பா.. நீ இப்படி வந்தா.. பொம்பளைங்க நாங்க அங்கே ஒக்காருவோமுல்ல” கணவனுக்கு ஏழு மணி நேரப் பயணத்தில் மனைவியை விட்டுப் பிரிந்து அமரத் துளியும் மனசாகவில்லை.

“வேற எடம் பாரு” என்றான் முறைப்பாக.

“பஸ்ஸுல எடம் இருந்திச்சுன்னா.. நான் ஏன் ஒங்களைப் பிரிக்கப் போறேன்.. தயவு பண்னுப்பா.. ஏம்மா.. நீயாச்சும் மனசு இரங்கக்கூடாதா?”

கிழவியின் வேண்டுதல் இப்போது மனைவியின் மீது பாய்ந்தது.

பஸ்ஸில் இப்போது இன்னொரு நபரும் ஏறி முன்னால் இருந்த காலி இருக்கைக்கு இடம் போட முயன்றார்.

“இருப்பா. நாங்க நிக்கிறோம்ல” கிழவி அதட்டியது.

வந்தவர் பஸ்ஸில் இடமில்லை என்று இறங்கிப் போக, கிழவி மீண்டும் தன் குரலை உயர்த்தியது.

“அனுசரிச்சு.. உக்கார இடம் கொடுப்பா. உந் தாயா இருந்தா இப்படி யோசிப்பியா?”

கிழவியின் சுருக்கம் விழுந்த முகம், நேரடிப் பார்வை, குரலின் வயதை மீறிய கணீர், அதை விடவும் வார்த்தைகாளில் தொனித்த உறுதி.. கணவன் சலிப்புடன் எழுந்து விட்டான்.

“நல்லாயிருப்பா.. ஏ.. வடிவு.. ஒக்காரு. நான் இப்படி உக்கார்றேன்”

வடிவு அமர, ஓரத்தில் கிழவி அமர்ந்தது. சுருக்குப் பையைத் திறந்து அம்பது ரூபாய்த் தாளை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு பையை மீண்டும் பத்திரப்படுத்தியது.

“பஸ்ஸுதான் ரொம்பிப் போச்சே… எப்ப எடுப்பாங்களாம்?”

யாரும் பதில் சொல்கிற மூடில் இல்லை. அதே நேரம் எல்லோரும் எதிர்பார்த்த கேள்வியும் அதுதான்.

“பஸ்ஸே வராது. வந்தா ஒரே நேரத்துல மூணு பேரு வருவாங்க”

கிழவியைப் போலவே சதா பேசத் துடிக்கிற இன்னொரு நபரின் குரலும் கேட்டது.

கண்டக்டர் பஸ்ஸுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். தனக்கும் அந்த பஸ்ஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல. டிரைவர் அங்கே வெளியே நின்ற கும்பலில் எந்த மூலையில் நிற்கிறார் என்றே புரிபடாத நிலை.

“ஒரு கோடி.. நாளை குலுக்கல்.. ஒரு கோடி” கை நிறைய லாட்டரி சீட்டுகளுடன் பஸ்ஸின் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை சிறுவன் வந்தான்.

“டிக்கெட் எம்புட்டு?” என்றாள் கிழவி.

“இருவது ரூபா. பரிசு ஒரு கோடி பாட்டி. அப்புறம் நீ கவலையே பட வேணாம்” பஸ்ஸில் சிலர் சிரித்தனர். கிழவி இத்தனை வயசில் ஒரு கோடி ரூபாய் பணத்தை என்ன செய்யும் என்ற யோசனையில்.

டிரைவர் இருக்கையில் வந்தமர்ந்து கண்ணாடியில் தன்னையும், பின்னால் அமர்ந்திருந்தவர்களையும் பார்த்துக் கொண்டார்.

“எப்ப எடுப்பீங்க?” கிழவி டிரைவரைக் கேட்டது.

“ஏன் பாட்டி.. அவசரப்படறே.. பொண்ணு பார்க்க வாராங்களா”

“ஆமாப்பா. யோக்கியமா ஒருத்தனும் அமையாம.. இத்தனை வருஷம் கன்னியா காலத்தை ஓட்டிட்டேன். எல்லோரும் உன்னைப் போலவே இருந்தாக்க.. நம்ம நாட்டுப் பொண்ணுங்க கதி இப்படித்தான்.”

கொல்லென்று பஸ்ஸில் சிரிப்பொலி கிளம்பியது. டிரைவர் முகம் கறுத்தது. “ஏ.. கிழவி.. நான் உன்னிய பொண்ணு பார்க்க வாராங்களான்னு கேட்டேனா. பொதுவாத்தானே கேட்டேன்”

“நானும் என்னப்பா சொல்லிட்டேன்.. பொதுவாத்தானே சொன்னேன். யோக்கியமா உன்னைப் போல இருக்கற கொஞ்ச பேரும் கல்யாணம் ஆனவுங்களா இருக்கறதால மத்த பொம்பளைங்க.. புருஷன் அமையாமத் திண்டாடறாங்கன்னுதானே சொன்னேன்” நச்சென்று பதில் சொன்னதும் கிழவிக்கு பஸ்ஸில் ஆதரவாளர் கூட்டம் அதிகமானது.

இடங் கொடுத்த கணவனும் தன் மனைவியை விட்டு நகர்ந்த துக்கம் மறைந்து சூழலின் கலகலப்பில் ஒன்றிப் போனான். “நல்லாப் பேசறீங்க பாட்டி”

“எனக்குத் தெரிஞ்சதை சொல்றேன்பா”.

கண்டக்டர் சீட்டு கொடுத்துக் கொண்டே வந்தார். கிழவி அம்பது ரூபாய்த் தாளை நீட்டியது.

“ரெண்டு செங்கிப்பட்டி”

“அங்கே நிக்காது பாட்டி”

“ஏம்பா.. ஊரைக் காலி பண்ணிட்டாங்களா?” என்றது அப்பாவியாய்.

“இது இடை நில்லாப் பேருந்து பாட்டி.. கண்ட எடத்துல நிக்காது” “கண்டக்டர் தம்பி.. நான் வயசானவ. படிப்பறிவு கிடையாது. தெரியாம இந்த வண்டி போவும்னு நினைச்சு ஏறிப்புட்டேன்.. பெரிய மனசு பண்ணி இறக்கி வுட்டுரு.. ரெண்டு பேரும் விரைசலாப் போவணும்”

“சொன்னாப் புரியாதா.. உனக்கு. சட்டு புட்டுனு எறங்கு. வேற டிக்கிட்டு ஏறியிருக்கும். அதையும் கெடுத்துபுட்டே. பஸ்ஸு கெளம்பற நேரத்துல ஒன்னோட ரவுசு பண்ணமுடியாது”

“போற வழிதானப்பா.. எறக்கி வுட்டுட்டுப் போயேன்”

“இது போவாது. எறங்கு”

“தயவு பண்ணுப்பா”

டிரைவர் திரும்பிப் பார்த்தார். “என்னப்பா கலாட்டா”

“செங்கிப்பட்டிக்கு போவணுமாம். நிறுத்தி இறக்கி வுட்டுட்டுப் போன்னு சட்டம் பேசுது”

“சொல்ல வேண்டியதுதானே.. இது பாயிண்ட் டு பாயிண்ட்னு”

“கிழவி லா பாயிண்ட்ல பேசுது”

“எறக்கி வுடு.. நேரமாவுது”

“யப்பா.. பெரிய மனசு பண்ணுங்கப்பா. தெரியாம ஏறிப்புட்டேன்.. பொட்டச்சி.. படிப்பறிவில்லே”

“ஏறினதுலேர்ந்து இந்தக் கிழவி என்னமா கலாட்டா பண்ணுது”

“பாவம்.. ஆம்பளைத் துணை இல்லே.. விவரம் புரியாம ஏறிடுச்சு. என்ன பெரிய பாயிண்ட் டொ பாயின்ட்.. ரெண்டு பேரை அவசரத்துக்கு நிறுத்தி எறக்கி வுட்டாத்தான் என்ன”.

பஸ்ஸில் கூட்டம் கட்சி பிரிந்து இரு தரப்பும் பேசியது. கிழவி விரல்கள் நடுங்க பணத்தாளை நீட்டிக் கொண்டிருந்தது. வடிவு நடுங்கிப் போய் அமர்ந்திருந்தாள், கையில் ஒரு மஞ்சள் பையைப் பற்றிக் கொண்டு.

“பஸ்ஸை எடுங்கப்பா.. நேரமாவுதில்ல” அலுப்பான சில பயணிகள் முனகினர்.

“கிழவியை எறங்கச் சொல்லுங்க. பஸ்ஸு உடனே கிளம்பிரும்” என்றார் டிரைவர்.

“இது என்னய்யா.. கூத்து. உங்க பிரச்னைக்கு எங்களை ஏன் தொல்லை பண்றீங்க”

“கண்ட எடத்துல நிறுத்தி எறக்கி வுட்டா.. நீங்களே புகார் கொடுப்பீங்க. இது என்ன ரூலு.. இன்ன தேதி.. இன்ன டிரைவரு.. பஸ்ஸைத் தகாத எடத்துல நிறுத்தினாருன்னு.. மெமோ.. சார்ஜ் ஷீட்னு நாங்க நாயா அலையணும். அப்படித்தானே” டிரைவர் சீறினார்.

“போன தரம்.. யாரோ கர்ப்பிணிப் பொண்ணு வலியால துடிச்சிதுன்னு நிறுத்தி எறக்கி விடப் போக.. என்னமா அலைய வுட்டாங்க. தப்பான எடத்துல எறக்கி பிரசவம் கஷ்டமாயிருச்சுன்னு..நிறுத்தச் சொன்னதே கூட வந்தவங்கதான்” என்றார் கண்டக்டர் தன் பங்குக்கு.

பஸ்ஸுக்குள் உஷ்ணம் எகிறிக் கொண்டிருந்தது. காற்றோட்டம் இல்லாததாலும், பிரச்னைக்குத் தீர்வு கிட்டாததாலும்.

“ஏய்.. கிழவி.. உன்னாலதான் இப்ப பிரச்னை.. பஸ்ஸு போவாதுன்னா இறங்குவியா”

தாமதமாகிற எரிச்சலில் பயணிகளில் சிலர் கிழவியை நோக்கிக் கோபத்தைத் திருப்பினார்கள்.

கிழவி பதில் பேசவில்லை. தனக்குச் சாதகாமாய் ஏதாவது வழி பிறக்காதா என்ற நம்பிக்கையுடன் அமர்ந்திருந்தது.

“லக்கேஜைக் கீழே போடுங்க. தன்னால இறங்கிப் போயிரும்” என்றார் ஒருவர் முரட்டுத்தனமாய்.

கிழவி அசையவில்லை. என்னதான் நிகழும் என்று பார்ப்பது போல.

“அந்த அண்டா.. குடம் அவங்களதுதான்” யாரோ அடையாளம் காட்டினார்கள்.

“கண்டக்டர்.. எடுத்துக் கீழே வீசுங்க”

பாவச்சுமை கண்டக்டருக்கு என்று தீர்மானித்தது போல தீர்ப்பு வழங்கப்பட்டது. கண்டக்டர் இதற்குள் மற்றவர்களுக்கு டிக்கட் போட்டு முடித்து விட்டார். அடுத்ததாய் நின்ற பஸ்ஸிலிருந்து கண்டக்டர் இரைந்தார். “உங்க டயம் என்னப்பா? ஏன் இன்னும் நிக்கறீங்க”

“இவன் வேற.. விவரம் புரியாம” கண்டக்டர் ஜன்னல் வழியே தலையை நீட்டிப் பேசினார்.

“பஸ்ஸுக்குள்ளே பிரச்னைப்பா”

“எந்தப் பிரச்னையா இருந்தாலும் டயத்துக்கு வண்டியை எடுத்துட்டு.. வழியிலே போயி பேசிக்குங்க. அடுத்த டிரிப் நாங்க போக வேணாமா?”

“ஏய்.. கிழவி உன்னால எவ்வளவு தொல்லை பாரு.. சனியன் எறங்கித் தொலையாம.. ராவடி பண்ணிகிட்டு”

“எறக்கி வுடுங்கப்பா.. என்னவோ சமாதானப் பேச்சு பேசிகிட்டு”

“வயசான பொம்பளைன்னு பார்க்கிறேன்”

“அதுக்கேத்த மரியாதை இல்லியே அதுகிட்டே.. அழிச்சாட்டியம் பண்ணுது”

“ஏதாச்சும் பண்ணுங்க” அடுத்த பஸ்ஸிலிருந்து ஹார்ன் பலமாக ஒலிக்கத் தொடங்கியது.

“பஸ்ஸை எடு”

“தெரியாத்தனமா இதுல ஏறிபுட்டேன்”

“விவரங் கெட்ட ஜன்மங்க.. எப்படி வீம்பு புடிக்குது பாரேன்”

பஸ்ஸில் இரைச்சல் அதிகப்பட்டுக் கொண்டே போனது. அடுத்த பஸ் கண்டக்டர் இறங்கி வந்து கூச்சல் போட்டார்.

“இப்ப எடுக்கப் போறீங்களா.. இல்லே.. நான் புகார் கொடுக்கவா?”

டிரைவர் முகத்தில் கோபம் தகித்தது. “என்னடா பண்றே.. கிழவியைத் தள்ளி வுடுரா கீழே”

கண்டக்டர் மெல்ல அவர் அருகில் போனார்.

“வேணாம்ணே. இப்பதான் சஸ்பென்ஷன் முடிஞ்சு டூட்டி ஜாயின் பண்றீங்க.. மறுபடி எதுக்கு என்னொரு தகராறு”

“ஸ்டாப் இல்லாத எடத்துல நிறுத்தச் சொல்றியா”

“பிரச்னை வேணாம்னு பார்த்தேன். பஸ்ஸுல ரெண்டு பேர்கிட்டே விலாசம் வாங்கிக்குவோம். வேற வழி இல்லாமத்தான் நிறுத்தினோம்னு. வளர்த்தாமப் போயிருவோம்ணே”

டிரைவர் பஸ்ஸைக் கிளப்பிய வேகத்தில் அவர் சீற்றம் தெரிந்தது. கண்டக்டர் டிக்கட்டுகளையும் மீதிச் சில்லறையையும் கிழவியிடம் வீசினார்.

“கிழவி பேசியே ஜெயிச்சிருச்சு.. பாரேன்”

யாரோ சொன்னது பஸ்ஸுக்குள் கேட்டது.

“ஒம் மாமியா.. சரியான அழுத்தம். என்னமா சாதிச்சிருச்சு”

வடிவு தோளைத் தொட்டு பின் சீட்டுப் பெண்மணியின் பாராட்டு.

“ஆ..ஆங்”

வடிவு திரும்பிப் பார்த்து முனகியது வினோதமாய் இருந்தது.

பின் சீட்டுப் பெண்மணி சங்கடத்துடன் வடிவைப் பார்த்தாள். கிழவி திரும்பி அவளைப் பார்த்தாள்.

“அவளுக்குப் பேச வராது.. தாயி. ஊமைச்சி”

“எ..என்ன”

பஸ் இதற்குள் காம்பவுண்டை விட்டு விலகி பிரதான சாலைக்கு வந்து செங்கிப்பட்டி ரூட்டில் ஓட ஆரம்பித்திருந்தது.

“ஆமா.. தாலி கட்டறப்ப.. அவங்க வீட்டுச் சீரும்.. இந்தப் பொண்ணோட ஒடம்பும் எம் புள்ளைய மயக்கிருச்சு. மோகம் முப்பது நாளுன்னு சும்மாவா சொன்னாங்க.. இவ பேசற அழகை இழந்துட்டான்னு எம்புள்ளைக்கு சலிப்பு தட்டிப் போயி.. பேசற இன்னொரு சிறுக்கி பின்னால போவ ஆரம்பிச்சுட்டான்” கிழவி நிறுத்தாமல் பேசிக் கொண்டே போனாள். குமுறல் குரலில் கொப்பளித்தது.

“பக்கத்துல யாரோ பாவப்பட்டவங்க தகவல் அனுப்பி வுட்டாங்க. இந்தப் பொண்ணைச் சாவடிச்சுப் போடறதுக்குள்ளே வந்து கூட்டிகிட்டு போயிருன்னு” கிழவி முந்தானை ஈரம் பட்டு உறிஞ்சிக் கொண்டது.

“பேசி.. செயிச்சுப்புட்டேன்னு சொன்னீங்களே.. எம் பேச்சு எம் புள்ளைகிட்டேயே எடுபடலியே.. என்னியும் சேர்த்து அடிச்சு விரட்டிப்புட்டான்..அந்தப் பாவிப் பய. எம் பின்னால வாடின்னு கூட்டிகிட்டு வந்தேன். எங் கடைசிக் காலம் வரை நான் பார்த்துக்கிறேன். பின்னால எஞ்சொத்து ஒனக்குன்னு”

பஸ்ஸில் அதற்குள் கிழவி சொன்னது முழுமையும் பரவிக் கொண்டிருந்தது. “பொட்டச்சிதானேன்னு பல்லுல போட்டு.. நாக்கை வெட்டற மனுஷப் பொறவி பெருத்த ஊராப் போச்சு. என்னிக்காவது நியாயம் எடுபடாமயாப் போவும்”

செங்கிப்பாட்டியில் வழக்கத்தை மீறி அந்தப் பேருந்து நின்றபோது சில பயணிகளே லக்கேஜை இறக்கி வைக்க, டிரைவர் நிதானித்து வண்டியை எடுக்க, கிழவியையும் மருமகளையும் பார்த்தபடி பயணிகள் வீற்றிருக்க.. இடை நில்லாப் பேருந்து மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தது.

– ஜூன் 2007 (Diamond Jubilee Short Story competition – III prize ஸ்டோரி)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *