எங்கள் கார் ஐ.ஐ.டி.யின் பரந்து விரிந்த வளாகத்தின் ஏதோ ஒரு தனி மரத்தை முட்டியபடி நின்றுக்கொண்டிருந்தது. மேலிருந்து சருகுகள் வேலையில்லாமல் முன் கண்ணாடியில் விழுந்து சரிந்துகொண்டிருந்தன. உள்ளுக்குள் மெதுவாக நேரத்தை படிப்படியாக எண்ணியபடி தாண்டிக்கொண்டிருந்த நான், சரியாக பத்து நிமிடம் ஆனதும் கேட்டேன். ‘போலாமா?’
அவர் என்னைப் பார்த்தார். திரும்பி மீனுவை ‘போலாமா?’ என்பது போல பார்த்தார். அவள் தான் உத்தரவு தர வேண்டும்.
மீனு பின் சீட்டில் உட்காருவதற்கும் நிற்பதற்கும் இடையே ஏதோ ஒன்றை சிரமமின்றி செய்துகொண்டிருந்தாள். இவ்வளவு நேரம் உருண்டு பிரண்டிருப்பாள் என்பது என் யூகம். ‘டூ மினிட்ஸ் டாட்’.
இன்று அவளுக்கு ரிஸல்ட் வருகிறது. நெட்டிலே தெள்ளத் தெளிவாக போட்டுவிடுவார்கள். இன்று காலை எழுந்ததும் பல் துலக்கி, முகம் கழுவியதும் எங்களை இழுத்துக்கொண்டு வந்துவிட்டாள். பொட்டு வைக்க சொன்னால் வைக்கவில்லை. சண்டை வேண்டாம் என நினைத்து அமைதியாக இருந்தேன்.
இரண்டு நிமிடங்கள் இன்னும் ஆகவில்லை. இருந்தும் கேட்டேன். ‘மீனு, போலாமா?’ மீனு எதுவும் சொல்லாமல் இருந்தாள். வெயில் என் பக்கம் சுள்ளென அடித்துக்கொண்டிருந்தது. ‘அதான் நெட்லயே போடறாங்களே?. வீட்டுலயே பாத்துருக்கலாம். ரிடிகுலஸ்’. என்னால் சும்மா இருக்க முடியவில்லை.’டோண்ட் யூ எண்ஜாய் திஸ் த்ரில் மாம்?’ மீனுவின் குரலில் முதல்-முறை-ஆச்சரியம் பாசாங்கோடு இருந்தது.
சண்டை வேண்டாம் என்று அமைதியாக இருந்தேன். ‘இதென்னா ப்ளஸ்டூ ரிஸல்ட்டா, சுவத்துல ஒட்டி வெக்க? அதெல்லாம் செய்வாங்களோ மாட்டாங்களோ? நீங்க போய் முதல்ல விசாரிங்க’. இவர் மேலே எரிந்து விழுந்தேன். மனுஷன் நகரவில்லை.
மீனு எழுந்து அமர்வது கேட்டது. மூச்சை இழுத்து பெருமூச்சாக விட்டாள். ‘ஈஸி, ஈஸி’ என்றாள். திரும்பிப் பார்த்தேன். தியான நிலையில் அமர்ந்திருந்தாள். ‘டாட், நீங்க போய் பாருங்க. ஐ வில் ஸ்டே ஹியர்’.சொல்லி முடிப்பதற்குள் இவருக்குள் மின்சாரம் பாய்வது போல, சட்டென இறங்கிவிட்டார். கிளம்பும் முன் மீனுவைப் பார்த்து ஒரு தம்ஸ் அப்.
அமைதியாக அந்த ப்ளாக் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தேன். முன்னிரு சீட்டுகளின் நடுவே மீனு தலையை நீட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஐந்து நிமிடங்களில் இவர் வெளியே வந்தார். தளர்ந்த நடை. அவர் நடந்து வரும் வரை எனக்கு பக் பக் என்றிருந்தது. ‘என்னாச்சு?’
‘அது.. ஒரு சின்ன குழப்பம்..’
‘டாட், ப்ளீஸ், சீக்கிரம்’
‘உன் பேர் இருக்கு டியர். ஆனா உன் பேரான்னு தெரியல.. பேர் பக்கத்துல ஒரு ப்ராக்கெட் போட்டு 2னு எழுதியிருக்கு’
‘ஷிட். டாட், நான் இனிஷியல் குடுக்கல.. உங்க பேர முழுசா சேத்து குடுத்திருக்கேன். மீனாட்சி ஸ்பேஸ் சங்கர். இஸ் தட் வாட் யு சா?’
‘ம்’ என்றார்.
‘காட்…’ மீனுவுக்கு பி.பி ஏறியது.
‘இவ நம்பர் தெரியாதா உங்களுக்கு. அத போட்டிருப்பாங்களே?’
‘சரியா நினவில்லமா.. டேட் ஆஃப் பெர்த்தும் சேம்..’
‘மீனு, உன் நம்பர் சொல்லு..’
‘மாம், டோண்ட் ஆஸ்க் மீ. டோட்டலி ப்ளாங்க். ஷிட் ஷிட். டாட், ஏன் எனக்கு இந்த பேர் வெச்சீங்க.. வேற பேர் வெச்சிருக்க கூடாதா?’
எனக்குப் பத்திக்கொண்டு வந்தது. அப்பாவும் பெண்ணும் சரியான முட்டாள்கள். தண்ணீர் தெளித்து விட முடியாமல், கூட தரதரவென இழுபட்டுக் கொண்டிருக்கிறேன். வெளியே இறங்கியபடி ‘நான் போய் பாக்குறேன்’ என்றேன். ‘வெயிட் மாம்..’ மீனுவும் இறங்கினாள்.
அது மீனு இல்லை. மீனாட்சி சங்கர் தான். அதே பிறந்த தேதி தான். ஆனால் மீனு இல்லை. இவள் மீனாட்சி சங்கர் (1). அந்த அட்மின் ஆஃபீஸில் இருந்த வெள்ளை சட்டை நபர் சங்கடமாக சிரித்தபடி மறுத்தார். அந்தப் பெண் இப்போது தான் வந்து பணம் கட்டுவது பற்றிக் கேட்டுவிட்டு போனாளாம்.
மூவருமாக திரும்பி நடக்க ஆரம்பித்தோம். அடுத்து என்ன? வேறெதாவது எக்ஸாமாக இருக்கும். அடுத்த மாப்பிள்ளை ஃபோட்டோவை கையில் எடுக்க வேண்டும்.
வீடு வந்து சேர்ந்ததும், இவர் என்னிடம் தனியாக ‘அது அவ நம்பர் இல்லேனு எனக்கு அப்பவே தெரியும். சொல்லல’ என்றார். ‘ரொம்ப சந்தோஷம்‘ என்றேன்.
******
மூன்று மாதங்கள் கழிந்திருக்கும். மீனு மும்பைக் கல்லூரி ஒன்றின் தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்தாள். இந்த சமயம் பார்த்து வந்த வரன்களும் சரியாக இல்லை. என்ன செய்வது என்று விழித்துக்கொண்டிருந்த ஒரு மதிய நேரம், செக்யூரிட்டி காபி கலர் கவரை கொண்டு வந்து நீட்டினான். மேலே ஐ.ஐ.டி. அச்சிட்டிருந்தது. என்னவென்று பார்ப்பதற்குள் இவர் பிடுங்கிக்கொண்டு மேலே ஓடிவிட்டார். இரண்டு நிமிடங்கள் பிடிவாதமாக உட்கார்ந்துவிட்டு, நானும் மேலே போனேன்.
மீனு இப்படியும் அப்படியுமாக தலையை ‘இல்லை’ என்று ஆட்டிக்கொண்டிருந்தாள். கட்டில் மேலே ஏறி நின்றிருந்தாள். ‘இது அந்த ஜம்போ வேலயா இருக்கணும். திஸ் ஈஸ் ஃபேக். ராஸ்கல்’ சிரித்தபடி மொபைலை எடுத்தாள். நான் லெட்டரை வாங்கிப் படித்தேன்.
‘செகண்ட் ரவுண்ட் ஆஃப் செல்கஷனில் தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறீர்கள் மிஸ்.மீனாட்சி சங்கர். உடனே வந்து பணம் கட்டவும். குறைவான அவகாசம் தந்தமைக்கு வருந்துகிறோம்’. தெள்ளத் தெளிவாக இது ஐ.ஐ.டி கடிதமென தெரிந்தது. மீனுவும், ஜம்போவோ டம்போவோ, அவன் இல்லையென அறிவித்தாள். பத்தாவது நிமிடம் கார் வெளியே புறப்பட்டது.
இந்த முறை நல்லவேளையாக மீனு காரை அந்த மரத்தடியில் நிறுத்த வேண்டுமென்றாலும் சொல்லவில்லை. போனதும் மூவரும் இறங்கி நடக்கத் துவங்கினோம். அதே அட்மின் ஆஃபீஸ். அதே ஆள். அதே சங்கட சிரிப்பு.
‘வெரி ஷார்ட் நோட்டீஸ் இல்லீங்களா?’ அரசாங்க-வருத்தம் தொனித்தது அவர் குரலில்.
‘தட்ஸ் ஓகே. நாட் எ ப்ராப்ளம்’ என்றார் இவர்.
‘நல்லது. எவ்ளோ சீக்கிரம் பணம் கட்ட முடியுமோ கட்டிடுங்க. மேலே கவுண்ட்டர் இருக்கு. நெக்ஸ்ட் வீக் கோர்ஸ் ஸ்டார்ட் ஆயிடும். எனி கொஸ்ட்டீன்ஸ், எங்கிட்ட வாங்க.’
‘பட், இந்த செகண்ட் செல்கஷன்.. இதுக்கு முன்ன நடந்த மாதிரி தெரியல.. மே ஐ நோ..’ மீனு கேட்டதும், நான் அவளை திரும்பிப் பார்த்தேன். எதற்கு இந்த அநாவசியம்?
‘ஷ்யூர். ஆக்ச்சுவலி வெரி அன் எக்ஸ்பெக்டட். ஒரு கேண்டிடேட் ஃபீஸ்லாம் கட்டிட்டு போயிட்டப்புறம் ஆக்ஸிடெண்டுல இறந்துட்டாங்க. தே இன்ஃபார்ம்ட் அஸ் வெரி லேட். அவங்க மேல தப்பு இல்ல. ஸோ, அடுத்து இருந்தவங்கள கூப்பிட்டோம். லக்கிலி, யு ஹாவண்ட்ட் மூவ்ட் டு அதர் காலேஜஸ்..’
‘ஓ..ஒகே..’ நாங்கள் யாரும் இதை எதிர்பார்த்திருக்கவில்லை.
‘டூ யு ரிமம்பர்.. நீங்க அன்னிக்கு வந்து விசாரிச்சீங்களே.. அந்தப் பொண்ணு தான்.. உங்க டாட்டரோட நேம்.. சேம் டேட் ஆஃப் பெர்த்…’
‘ஓ..’ என்னையறியாமல் சொன்னேன். மீனுவையும் அவரையும் பார்த்தேன்.
‘வெரி அன்ஃபார்ச்சுனேட். அவங்க பாரண்ட்ஸ் ரீஃப்ண்டுக்கு வந்திருக்காங்க. ரொம்ப சங்கடமா இருக்கு. ஒரே பொண்ணு’.
இன்னும் பத்து நிமிடங்கள் அவரே பேசிவிட்டு, அவரே விடை கொடுத்தார்.
என்னால் வேறெதுவும் யோசிக்க முடியவில்லை. யாரந்த பெண்? அன்று அப்படி இப்படி என்று எங்காவது பார்த்திருப்போமோ? சே. பாவம். இவரும் அவளும் ஃபீஸ் எப்போது வந்து கட்டுவது என்று பேசிக்கொண்டிருந்தார்கள். நான் கொஞ்சம் முன்னால் நடந்து. காரை வந்தடைந்தேன். இவர்களும் வந்தபின், கார் கிளம்பியது.
அடுத்த நொடி நகரும் என்று நினைத்தபோது, மீனு ‘டாட்’ என்றார். இவர் வண்டியையே நிறுத்தி விட்டார். ‘நீ என்ன சொல்லப்போறேன்னு தெரியும் டியர்’ என்றார்.
‘என்னது‘ என்றேன். இது ஒரு ஆறேழு வருஷமாகவே நடக்கிறது. எனக்கெதுவும் புரிவதில்லை. ஏதோ ஏடாகூடம் என்று மட்டும் தெரியும். ‘என்னனு சொல்லுங்க‘ மீனுவைப் பார்த்தேன்.
‘ஐ வாண்ட் டூ ஸீ ஹெர் பாரண்ட்ஸ்’ என்றாள்.
‘வாட்? டோண்ட் பீ சில்லி’‘
‘ஐ வாண்ட் டூ. டாட், வரீங்களா?’
‘ஷ்யூர்’
‘அறிவில்லாம பேசாதீங்க ரெண்டு பேரும். யாரையும் பாக்க வேண்டாம். அவங்களே கஷ்டத்துல இருப்பாங்க. நம்ம கிளம்பலாம்’.
நான் சொல்லி முடிப்பதற்குள் மீனு காரை விட்டு இறங்கி முன்னால் வந்தாள். இவரும் இறங்க முற்பட்டார்.எனக்கு கோபம் தலைக்கேறியது. நானும் இறங்கினேன்.
‘ஹவ் இன்ஸென்ஸிட்டிவ் யு ஆர் மீனு? இதென்ன சினிமாவா? போய் என்ன பேசுவ அவங்க கிட்ட? என்ன உங்க பொண்ணு மாதிரி நினச்சிக்கோங்கனு பினாத்துவியா? யார எப்போ பாக்கலாம்னு கூட உனக்கு தெரியல? எல்லோமே ‘திரில் எக்ஸ்பீரியன்ஸ்’ ஆயிடுச்சு உனக்கு. யு ஷுட் நாட் கோ’ பொரிந்து தள்ளினேன்.
‘வாட் நான்ஸென்ஸ்’ என்று சொல்ல வந்த மீனு, வாயை ‘வா’ விலேயே வைத்துக் கொண்டு தோள்களை கொஞ்சம் மேலுயர்த்தி என்னையே ஆச்சரியமாக அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். இவர் அந்தப் பக்கத்தில் இருந்து நடந்து வந்தவர் இவளைப் பற்றிக்கொண்டார்.
‘டென்ஷனாகதம்மா.. நாங்க போயிட்டு உடனே வந்துடறோம்.’
மீனுவை இழுத்துக்கொண்டு அவர் நகர்ந்தார். மீனு என்னையே திரும்பிப் பார்த்தபடி நடந்துகொண்டிருந்தாள். வாய் இன்னும் ‘வா’விலேயே இருந்தது. எனக்கென்று வந்து பிறந்திருக்கிறது.
போய் அவர்களை அழவைத்து விட்டு வரப்போகிறார்கள். பணக்காரத் திமிர் என அவர்கள் நினைத்துக்கொள்வார்கள். ‘கொஞ்சம் அப்படி போறீங்களா’ என்று வெடிக்கப் போகிறார்கள். நான் சி.டி. ப்ளேயரை ஆன் செய்தேன். வெக்கையாக இருப்பது போல பட்டது. ஏ.சியை போட்டுக்கொண்டேன். மேலிருந்து சருகுகள் வேறு கார் முன் கண்ணாடியில் விழுந்து விழுந்து வெறுப்பேற்றிக்கொண்டிருந்தது. என்னால் அங்கிருக்க முடியவில்லை.
வெளியே இறங்கி வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டேயிருந்தேன். ஐந்து, பத்து என நிமிடங்கள் கழிந்தன. அரை மணி நேரம் கழிந்ததும், அப்பாவும் பெண்ணுமாக வெளியே வந்தார்கள் கை கோர்த்துக்கொண்டு. மீனுவின் இன்னொரு கையில் ஒரு பெரிய பை. என்னைப் பார்த்ததும், மீனு ஓடி வர ஆரம்பித்தாள். நான் கார் கதவை திறந்து உள்ளே அமர்ந்துகொண்டேன்.
‘மாஆஆஆஆஆம்’. மூச்சு வாங்குவதும் ஓடுவதுமாக என்னை வந்தடைந்தாள். நான் நிமிர்ந்து ஒரு முறை முறைத்து விட்டு, பொத்தாம் பொதுவாக எங்கேயோ வெறித்துப் பார்த்தேன்.
‘மாம், தே ஆர் ஸோ ஸ்வீட். ஓ காட், சாண்ஸே இல்ல’. நானெதுவும் பேசவில்லை.
‘யூ நோ, ஹர் மாம் ஈஸ் ஸோ ஹோம்லி. பெரிய பெரிய கண்ணு. சாஃப்ட் வாய்ஸ். அழகா தலையாட்டி ஆடி பேசினாங்க. யு மிஸ்ட் மாம்”
‘வாட்டெவர்‘ என்று சொல்லிவிட்டு, உள்ளே திரும்பிக்கொண்டதும் அவள் கையில் இருந்த பை நினைவுக்கு வர, வெடுக்கென திரும்பி, ‘அதென்ன கைல?’ என்றேன். ‘இதுவா..’ என்றிழுத்த மீனுவின் குரல் ரைம்ஸ் சொல்லும் சின்னக்குழந்தையினுடையது போல மாறியது. ஏதோ பெரியமனுஷத்தனமான பேச்சு வரப்போகிறது என்று அர்த்தம்.
மீனு பின்னால் உட்காரப் போனாள். இவரும் வந்து முன்னால் வந்து அமர்ந்துகொண்டார்.
‘அந்தப் பொண்ணு என்ன மாதிரியே இல்ல மாம். நீட்டு முடி. ஸ்பெக்ஸ். . பயங்கர படிப்ஸ். இங்க சீட் கிடச்ச உடனே ஏகப்பட்ட புக்ஸ் வாங்கிருக்கா. அவங்க அம்மா எனக்கு குடுத்துட்டாங்க’. நான் பின்னால் திரும்பாமல் கேட்டுக்கொண்டிருந்தேன்.
மீனு அப்படியே தாவி முகத்தை இரண்டு சீட்டுக்குமிடையில் முகத்தை நீட்டியபடி தொடர்ந்தாள். ‘ஃப்ரெண்டஸோட எங்கயோ கார்ல போறப்போ ஆக்ஸிடண்ட் ஆயிடுச்சாம். ஸ்பாட்லயே ஷீ பாஸ்ட் அவே. ரொம்ப அழுதாங்க. பட் போகப் போக நல்லா பேசினாங்க. தே ஃபெல்ட் குட் மாம்.’
‘ம்‘
‘ஐயோ. கோவப்படாத மாம். வீ டிண்ட் ஹர்ட் தெம். அவங்களுக்கு மனசு கொஞ்சம் லேசாகும்னு தான் போனேன். அட் டைம்ஸ் யு ஃபீல் டெல்லிங் மோர் டூ ஸ்டிரேஞ்சர்ஸ். நிஜமா மாம். டாடிய கேட்டுப் பாரு. டாட், தே ஃபெல்ட் குட் ரைட்?’
‘யா.. கண்டிப்பா..’
‘ம். நீதான் வரல’ என் தோளை தொட்டாள்.’போ மாம் நீ’.பின்னால் நகர்ந்து அமர்ந்தாள்.
கொஞ்சம் நேரத்தில் ஏதோ சத்தம் கேட்டுத் நான் திரும்ப, அந்தப் பையை சீட்டின் மேலே அப்படியே கவிழ்த்திருந்தாள். ஏராளாமான புத்தகங்கள். ‘ஓ மை காட்…எவ்ளோ புக்ஸ்’ – மீனு அவற்றை ஆராயத் தொடங்கினாள்.
திடீரென முன்னே வந்தவள், ஒரு புத்தகத்தை நீட்டினாள். அதில் அழகான கையெழுத்தில் பெயரும் தேதியும் எழுதியிருந்தது. ஒரு பிள்ளையார் சுழி. மீனு அப்படியே புத்தகத்தை புரட்டிக் காட்ட, உள்ளே எங்கோ ஒரு ஸ்டிக்கர் பொட்டு. இவர் லேசாக புன்னகைத்தார்.கொஞ்சம் நேரத்திற்குப் பின், ‘மாம்’ என்றாள்.
‘ம்’
‘இங்க பாரேன்’
‘என்ன சொல்லு”
‘பாரேன் சொல்றேன்’
திரும்பினேன்.
‘கோவிச்சாகதயேன் ப்ளீஸ். நான் வேணும்னா பொட்டு வெச்சுக்குறேன்’. புத்தகத்திலிருந்த பொட்டை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டு என்னைப் பார்த்து ஈயென இளித்தாள்.
நிறைய சிரிப்பு வந்தாலும், கொஞ்சமாக சிரித்தேன்.
– ஓகஸ்ட் 2009