சூனியக்காரனின் பூனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 7, 2012
பார்வையிட்டோர்: 13,541 
 
 

கிழக்கு நோக்கி சட சட என சரியும் மெர்தாஜாம் மலை நிதானமாக ஒரு சமவெளியை அடையும் போது அந்தக் கிராமத்தின் தொடக்கம் தெரியும். முதன் முதலில் அங்கு வந்து குடிசை போட்டவன் யார் என்று இன்று யாருக்கும் தெரியாது. அது பழங்கதை. படிப்படியாக சுமார் ஐம்பது அறுபது குடும்பங்கள் நிரந்தரமாக அங்கே வசிக்க ஆரம்பித்து விட்டன. சின்னதும் பெரியதுமாக வீடுகள்… குடிசைகள்… இஷ்டப்பட்ட திசையைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தன. மின்சாரமும் குழாய் நீரும் முழுமையாகக் கம்பத்தை இன்னும் ஆக்கிரமிக்காத காலம்…

காட்டு மரங்கள்; இடையே நெழிந்து வரும் நதி; நதியில் துள்ளி விளையாடும் மீன்கள். நதியின் இருபுறமும் காய்த்து குலுங்கும் பழ மரங்கள். மனித கைகள் வாஞ்சையுடன் தடவிக்கொடுத்ததில் பூமித்தாய் பூரித்து தானியங்களையும் காய்கறிகளையும் அள்ளி இறைத்தாள். பட்டணத்தில் இருந்து பல கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் ஒரு கம்பத்தில், வாழ்க்கை எந்தக் குறையும் இன்றி இயங்க இவை போதாதா? மனித இனத்தோடு பறப்பனவும் ஊர்வனவும் சம உரிமையோடு வாழும் அக்கம்பத்தில் கண்ணங்கரிய பூனை ஒன்றும் அட்டகாசமாக வாழ்ந்து கொண்டிருந்தது. அங்கே அதற்கு பெயர் கருப்பன். செல்லப் பெயர் அல்ல. காரணப் பெயர்…

கருப்பனுக்கென்று கிராம மக்களிடம் தனி மரியாதை, பயம் எல்லாம் உண்டு. ‘சீ போ!’ என்று யாரும் கருப்பனைச் சொல்லிவிட முடியாது… கல்லை வீசி விரட்டிவிட முடியாது. சீ!! என்றவன் நாக்கு உள்ளிழுத்துக் கொள்ளலாம்… கல் வீசியவன் வீடு தீயில் அழிந்து போகலாம்…. காரணம் கருப்பனுக்கு பயங்கர பின்னணி உண்டு. கருப்பன் ஒரு காலத்தில் ஒரு சூனியக்காரனின் செல்லப் பூனை.

சூனியக்காரன் இப்போது இல்லை. அவன் வாழ்ந்த காலத்தில் சட்டை போடாமல் கைலி அணிந்து மாமரத்தடியில் எப்போதும் அமர்ந்திருப்பான். தலையில் சிகப்பு துண்டில் முக்காடு போட்டுக்கொண்டு சுருட்டுப் பிடித்த படி அவன் அமர்ந்திருப்பான். அவன் வீடு ஆற்றோரமாக அமைந்திருந்தது. நான்கு படிகள் ஏறி வீட்டுக்குள் போகவேண்டும். குனிந்துதான் வீட்டுக்குள் செல்லவேண்டும். வாசல் சிறியது.

வயோதிகம் முதுகில் ஏற முதுகு வளைந்த அவன், தினமும் காலையில் தன் பெரிய சைக்கிலை மிதித்துக் கொண்டு சந்தைக்குச் செல்வான். ரம்புத்தான் மர வேர்கள் குறுக்கிடும் ஒற்றையடிப் பாதையில் அவன் பயணம் தொடரும் அங்குள்ள கசாப்பு கடையில் கையுதவிக்கு இருந்தான். மதியம் வீடு திரும்பும் போது ரத்தக் கரை நனைந்த பையில் மாமிசமும் எலும்பு துண்டுகளும் இருக்கும். அவன் வருகையும் ரத்தக் கரை படிந்த பையும் தாய்மார்களையும் சிறுவர்களையும் அச்சுறுத்தும். அவனது அடுத்த நடவடிக்கை அவர்களுக்குத் தெரியும். உச்சி நேரங்களிலும் அந்தி நேரங்களிலும் சிறுவர்களை அவர்கள் வெளியில் விடுவதே இல்லை.

அவன் நேராகப் பலா மரங்களும் இழுப்பை மரங்களும் நிறைந்த வனப்பகுதிக்குள் புகுந்து ஆற்றங்கரையை அடைவான். அங்கே ஓங்கி வளர்ந்திருக்கும் மூங்கில் புதர்கள் அவன் வருகையை உணர்ந்தவாரு ஜிவ்வ்வ் என்று காற்றில் அசைந்து ஓசை எழுப்பும். அவன் மூங்கிற் புதருக்குப் பின்னால் மறைவான். அவன் வாய் முணுமுணுக்கும்…

கூரிய நகங்களில்
மலைகளைப் பிளந்து;
கல்லையும் மண்ணையும்
நொருக்கிக் குடித்து;
கோரப் பற்களில்
மரங்களைக் கிழித்து
சூரிய சந்திர ஒளிகளை
விழுங்கி
கரிய இருட்டை வெளியே கக்கி
குருதி ஓடையை நாக்கினில்
சுவைத்து…..

காகிதப்பையில் இருந்து ரத்தம் படிந்த எலும்புத் துண்டுகளை வாய் முணுமுணுத்தபடி மூங்கிற் புதருக்கு அடியில் வைப்பான்.

“வாடா! வா! வந்து எடுத்துக் கோ!’ என்று கரகரத்த குரலில் கூறி விட்டு ஆற்றில் இறங்கி கை கழுவுவான். சற்று நேரத்தில் மூங்கில் புதரில் சலசலப்பு கேட்கும்.

அவன் இளமையாக இருந்த போது தன் தாயோடு அதே வீட்டில் வசித்தானாம். தாய் முதுமை அடைந்து முதுகு வளைந்து இறந்து போனாள். அதன் பிறகு அவன் அந்த இயற்கை பூமியில் சில காலம் சுதந்திர மனிதனாக சுற்றித்திரிந்தான்.

இளமையின் உச்சத்தில் இருக்கும் போது அவன் இரண்டு பெண்களைத் திருமணம் செய்தானாம். இரண்டு பெண்களுமே வெளியூர்காரிகள். அழகிகள். தேவதை போலிருந்த அவன் முதல் மனைவியின் கணுக்கால்களையும் கூந்தலையும்தான் அவ்வூர் மக்கள் பார்த்ததுண்டாம். அவள் வீட்டை விட்டு வெளியே வர அவன் அனுமதித்ததில்லை. அவள் இரவு நேரங்களில் சன்னமாக பாடும் குரல் இனிமையைக் கேட்டே பலர் அவள் அழகை அணுமானித்துக் கொண்டார்கள். ஒரு முறையேனும் அவள் அழகை நேராக பார்த்துவிட காத்திருந்த கிராமவாசிகளுக்கு அவ்வாய்ப்பு கிட்டவே இல்லை.

ஒரு நாள் காலை அவள் உடல் மூங்கிற் புதர்களுக்கு வடக்கே ஆற்றில் மிதந்து கிடந்தது. தூங்குவது போல் கிடந்த அவள் உடல் ரத்தமின்றி வெளிரிக்கிடந்தது. சூனியக்காரன் சுருட்டுப் புகைக்கு மத்தியில் மாமரத்தடியில் அமர்ந்து வானத்தை வெறித்துக்கொண்டிருந்தான். ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி விசாரித்தனர். சூனியக்காரனிடமிருந்து முக்கிய தகவல் ஏதும் கிடைக்க வில்லை. முடிவில் அது ஒரு விபத்து என்று முடிவு செய்து பிரேதத்தை அடக்கம் செய்தனர்.

ஒரு வருடம் சென்று அவன் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அழைத்து வந்தான். அவள் அழகை பார்த்து கம்பத்து மக்கள் வாயடைத்து போயினர். அவ்வப்போது அவள் வெளியே தலை காட்டினாலும் யாருடனும் பேசுவதில்லை. குளித்து முடித்து தன் நீண்ட கூந்தலை வெய்யிலில் உலர்த்த வாசலில் அமர்ந்திருப்பாள். மழை ஓய்ந்த பிறகு தெரியும் ஈரநிலவாக அவள் ஜொலிப்பாள். ஒரு பெளர்ணமியில் அவள் கர்ப்பமானாள். ஒரிரு மாதங்களில் அவள் திடீர் திடீர் என்று மயக்கம் வந்து விழுந்தாள். உள்ளூர் மருத்துவச்சிகள் அவளுக்கு உதவி செய்ய முன்வந்தனர். நாடி பிடித்து பார்த்து அவளுக்கு ரத்தம் இல்லை என்று கூறினர். நாட்டு மருந்துகளைக் கொடுத்தனர்.

ஆறு மாதங்கள் சென்று ஒரு நாள் ஆற்றில் துணி துவைக்க சென்ற போது அவள் மயங்கி விழுந்தாள். கூந்தல் கரு மேகமாய் பரவிக்கிடக்க மல்லாந்து கிடந்தவள் கழுத்து ஒரு பக்கமாய் இழுத்துக்கொண்டு சென்றது. கைவிரல்கள் மூடித்திறந்தன. கால்கள் தானே மடங்கி நீண்டன……வழிப்பு மின்னல் போல வந்து தாக்கியது. கை கால்கள் பர பர வென இழுத்துக் கொண்டன. வாய் ஓரம் வெள்ளை நுரை தள்ளியது. கண்கள் செருகிக் கொண்டு மேலே சென்றன. ஊர் மக்கள் அவளைத் தூக்கி வந்து வீட்டில் போட்டனர்.

“டேய் மாப்பள… ஒன்னுதான் பொட்டுனு போயிடிச்சி… வாயும் வயிறுமா இருக்கா… புள்ளதாச்சிகாரி… இவளையாவது ஒழுங்கா பார்த்துக்க… பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிபோய் என்னா ஏதுன்னு பாரு.” வேட்டைக்கார கிழவன் பொறுப்போடு கூறினான்.

ஆனால் மறுநாள் அவளுக்குக் கர்ப்பம் கலைந்து விட்டதாக சேதி பரவியது. அவள் தொடர்ந்து மயக்கமாகவே கிடந்தாள். மயக்கம்தெளிந்து எழுந்த அவள், வெறிக்க வெறிக்கப் பார்த்தாள். சொந்தமாகப் பேசிக்கொண்டாள். ஓ வென்று கத்தி அழுதாள். கண்ணுக்குத் தெரியாத யாரிடமோ மன்றாடி நின்றாள். சூனியக்காரனின் சட்டையைப் பிடித்து இழுத்துக் கிழித்தாள். வெறிபிடித்தவளாக அலரிக்கொண்டு ஆற்றை நோக்கி அடிக்கடி ஒடினாள். அவளைப் பிடித்து வீட்டு கீழ் தூணில் கட்டிப்போட்டனர். சில நாட்களுக்கு இரவில் அவள் அழுகுரலும் சூனியக்காரனின் அதட்டல் சத்தமும் கேட்டுக் கொண்டே இருந்தன.

ஒரு நாள் காலையில் அவள் மாமர கிளையில் தூக்குப் போட்டுக் கொண்டு தொங்கினாள். கைகளைக் கட்டியிருந்த கயிற்றை கழுத்தில் மாட்டிக்கொண்டாள். சூனியக்காரன் வழக்கம் போல வானத்தை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். சுருட்டுப் புகையின் மணம் நாசியை ராவியது.

கம்பத்து மக்கள் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தனர். கூடிக் கூடி பேசிக்கொண்டனர். அச்சத்தோடு அவனிடமிருந்து ஒதுங்கியிருந்தனர். காலம் பனியாய் மறைந்தது. அவன் விட்ட சுருட்டு புகை போன்றே அவன் இளமையும் பெரிதாய் அழகாய் மாயம் காட்டி சட்டென மறைந்து போனது. அவனுக்குச் சூனியக்காரன் என்கிற ‘அந்தஸ்து’ தானாய் கிடைத்தது.

கருப்பன் அவன் வீட்டுக்குள் பிரவேசித்ததும் அந்தக் கால கட்டத்தில்தான். சூனியக்காரன் கருப்பனை எங்கிருந்தோ கொண்டுவந்து வளர்த்தான். மினு மினுக்கும் கருத்த உரோமம் கொண்ட தேகமும் அடர்ந்த வாலும் பச்சை நிற கண்களும் கருப்பனுக்கு அபார தோற்ற மதிப்பைத் தந்தன. சூனியக்காரனின் நடவடிக்கைகள் பெரிதும் மாறுபட ஆரம்பித்தன. அவன் வீட்டில் இரவு நேரங்களில் சாம்பிரானி வாசனை சுருள் சுருளாகப் பரவி கிராமம் முழுவதும் சென்றது. சில நேரங்களில் விடிய விடிய மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் அவன் சம்மனம் இட்டு அமர்ந்திருப்பதை ஊர் மக்கள் அச்சத்துடன் பார்த்தனர். நல்லிரவில் பக்கதில் இருக்கும் சுடுகாட்டுக்கு அவன் சென்று வருவதைப் பார்த்ததாகக் கூறி சில இளைஞர்கள் கம்பத்தில் மேலும் அச்சத்தைப் படர விட்டனர்.

ஊர் மக்களிடமிருந்து வெகு தூரம் விலகிவிட்ட சூனியக்காரனுக்குக் கருப்பன் தான் உற்ற நண்பன். இரவு நேரங்களில் கருப்பன் அவன் அருகிலேயே தன் உடலை நாவால் நக்கிய படி அமர்ந்திருக்கும். ஊரும் பூச்சிகளை அடித்து நொருக்கும் போதும் கூரையில் ஓடும் பெருச்சாலிகளைக் குறிவைத்துத் தாக்கி கிழித்து எறியும் போதும் கருப்பனின் சாமர்த்தியம் நன்கு வெளிப்பட்டது. எலிகளைப் பிடித்து தலையை மட்டும் தின்றுவிட்டு முண்டத்தை விட்டு விட்டு போவது கருப்பனின் வழக்கம். அக்கம் பக்கத்து வீட்டு சமையல் அறைகளை முற்றுகையிட்டு மீன் துண்டுகளைக் கொள்ளையிடும் தீரம் கருப்பனிடம் மட்டும்தான் இருந்தது.

ஒரு நாள் விடிய விடிய பெய்த அடை மழையால் ஆற்றில் வெள்ளம் கரை புறண்டு சுழித்துக் கொண்டு ஓடியது. பசுமை கூடிய காலைப் பொழுதில் கிழவனைக் காணவில்லை என்னும் சேதியால் மக்கள் சோம்பல் களைந்தனர். கிராமத்து மக்கள் தேடியதில், சேற்றில் புதைந்த கிழவனின் காலடித் தடம் மூங்கில் புதர் வரை சென்று மறைந்தது. சூனியக்காரனின் கதை ஆற்றோடு முடிந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. சிலர் அவன் காட்டுக்குள் மாந்திரீகப் பயிற்சி செய்யப் போய் விட்டான் என்று கூறினர். அன்று முதல் அவன் வீடு இருள் சூழ்ந்து கிடந்தது. வீட்டின் கதவும் சன்னல்களும் காற்றோடு போராடி கூச்சல் எழுப்பின. பெரும் சத்ததுடன் தானே திறந்து மூடிக் கொண்டன.

சூனியக்காரன் இல்லாவிட்டால் என்ன? அவன் பிரதிநிதியாக கருப்பன் கிராமத்தில் உலவிக்கொண்டிருந்தது. பகலில் பறவை வேட்டையிலும் மீன் திருட்டிலும் களைத்துப் போகும் கருப்பன் மாலையில் அந்தக் காலி வீட்டுக்குள் புகுந்து ஓய்வெடுக்கும். இரவில் எலி வேட்டைக்கும் இணைத்தேடலுக்கும் கிளம்பி விடும்

கருப்பன் தன் காதல் துணைகளை மாற்றிக் கொண்டே இருந்தது. சில நேரங்களில் தன் துணையை அடைய கருப்பன் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்றது. எதிரி கடுவன்கள் வந்த வழியே ஓடி மறைந்தன. போராட்டத்தின் உச்சத்தில், நல்லிரவில், கருப்பன் போடும் சத்தம் கம்பத்து மக்களுக்குச் சூனியக்காரனை நினைவூட்டியது. சிறுவர்கள் போர்வைக்குள் தலையை இழுத்துக் கொண்டு தூங்கிப்போயினர்.

பழங்கள் காய்த்து குழுங்கும் காலம் இன்னும் முடியவில்லை. கனிகளின் ரம்யமான வாசனை கம்பம் முழுவதும் கலந்திருந்தது. கிராம வாசிகள் பழ வியாபாரத்தில் தீவிரம் காட்டினர். சிலர் இரவு நேரங்களில் வெளவால் வேட்டைக்குப் புறப்பட்டனர். மலையிலிருந்து பழங்களைத் தின்ன கூட்டமாக பறந்து வரும் சாம்பல் நிற வெளவால்களை வேட்டைத் துப்பாக்கியால் திறமையாகச் சுட்டு வீழ்த்தினர். பல வீடுகளில் வெளவால் கறி குழம்பு மனக்க மனக்க கொதித்தது. சிறுவர்கள் ஓய்வாக சுற்றித்திரிந்தனர். பள்ளிக்கூடத்தில் பேர் போடும் நேரம் போக மற்ற நேரங்களை மரக் கிளைகளிலும் ஆற்றோரத்திலும் கழித்தனர்.

ஒரு காலை பொழுது, இலை தளைகளின் வாசனைக்கு மத்தியில் ரசாயன நெடியோடும் வினோதமான சத்தங்களோடும் துவங்கியது. சிறுவர்களின் கூட்டம் கிராமத்தின் வடக்கே மலைச்சரிவில் கூடியிருந்தது. தொடர்ந்து வரும் பல்வேறு சத்தங்களால் ஈர்க்கப்பட்டு சில பெரியவர்களும் மலைச்சரிவை நோக்கிச் சென்றனர். அவர்களுக்குப் பின்னால் சில வண்ணத்துப்பூச்சிகளைத் துரத்தியபடி கருப்பனும் மலை சரிவுக்கு ஓடியது.

சிறுவர்கள் இதுவரை பார்த்திறாத இயந்திர வண்டிகள் மலைச்சரிவில் உருமிக்கொண்டிருந்தன. பல சக்கரங்களைக் கொண்ட வண்டிகள் மலைச்சரிவில் கர்ஜித்துக் கொண்டு ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தன. புற்றிலிருந்து வெளிப்பட்ட கட்டெறும்புகளாய் அவை பரபரப்பாக இயங்கின. தொப்பி அணிந்த புதிய மனிதர்கள் அவற்றை லாவகமாக இயக்கிக் கொண்டிருந்தனர். டீசல் வாடையும் கரும்புகையும் கருகல் நாற்றமும் மலையில் இருந்து இறங்கி கம்பத்துக்குள்ளும் சென்றது.

மலைச்சரிவில் சரிந்து நின்றபடி, இரும்பு சக்கரம் கொண்ட இயந்திரங்கள் மரங்களை வேரோடு பிடுங்கி எடுத்தன. பல வருடங்கள் ரகசியமாக மண்ணில் புதைந்திருந்த வேர்கள் திடீர் என்று எல்லோரும் பார்க்கும் பொருளாக வெளிச்சத்திற்கு வந்தன. வேர்கள் நாணத்தால் வெளுத்தன. புல்லும் பூண்டும் சின்னஞ்சிறு செடிகளும் மண்ணோடு சுரண்டி எடுக்கப்பட்டன. ஈர மண்ணும் மரச் ‘சடலங்களும்’ ஓரிடத்தில் குவியலாகக் கிடந்தன. ராட்சத மண்வெட்டியை நீட்டிக் கொண்டு நின்ற இயந்திரங்கள் பூமியைக் கொத்தின… குடைந்தன. தடதட இரைச்சலோடு லாரிகள் செம்மண்ணை முதுகில் சுமந்துகொண்டு எங்கோ ஓடின. பச்சைக்காடு புழுதிக்காடாக மாறிய்து.

இயந்திரங்களின் இரும்புக்கூச்சல்… லாரிகளின் உருமல்… மனிதர்களின் கூக்குரல்… சடசட எனச் சாயும் மரங்களின் அலறல் சத்தம்… எல்லாம் ஒன்றோடு ஒன்று கலந்தன. ஒன்றே ஆயின. கரடு முரடான சத்தம் வினோதமான ஓசையாகி காற்றில் பறவியது. காட்டுக்குள் ஊடுருவியது. காடு கிடு கிடுத்தது. இடியோசையையும் விலங்குகளின் சத்தத்தையும் மட்டுமே கேட்டு வளர்ந்த காடு சலசலத்தது. மரங்களுக்கு மரண பயம் வேர்வரை பாய்ந்தது. வெட்டப்பட்டும் குத்தப்பட்டும் கீறப்பட்டும் தீண்டப்பட்டும் மூலியாக நின்ற இயற்கையின் காதுகளுக்கு மீண்டும் கரகரக்கும் குரலின் முணுமுணுப்பு கேட்டது…

கூரிய நகங்களில்
மலைகளைப் பிளந்து;
கல்லையும் மண்னையும்
நொருக்கிக் குடித்து;
கோரப் பற்களில்
மரங்களைக் கிழித்து
சூரிய சந்திர ஒளிகளை
விழுங்கி
கரிய இருட்டை வெளியே கக்கி
குருதி ஓடையை நாக்கினில்
சுவைத்து…..

நேரம் லாரிகளை முந்திக் கொண்டு ஓடியது. சிறுவர்கள் மாலை விளையாட்டை மறந்து பச்சைக் காடு வெட்டவெளி ஆவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சில பெரியவர்களும் அவர்களோடு நின்றனர். மேற்கு வானம் நிறம் மாறியது. இளசிவப்பு திட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக மூர்க்கம் அடைந்து ரத்தச்சிவப்பாகின. இயந்திரங்களின் இயக்கம் குறைய தொடங்கியது. நாளை டீசலை குடித்து அவை மீண்டும் சுறுசுறுப்படையும்.

சிலு சிலுவென்று காற்று பிடரியை தொட்டதும் சிறுவர்களும் பெரியவர்களும் வீட்டை நோக்கி நடந்தனர். புதிதாய் உருவாகி இருந்த மண் மேட்டுக்குப் பக்கத்தில் கருப்பாய் ஒன்று கிடந்தது. சுருண்ட மயிரும் பெரிய வயிறும் கொண்ட சிறுவன் ஒருவன் ஓடிப்போய் பார்த்தான். அங்கிருந்தபடி தன் நண்பர்களை நோக்கி கத்தினான். “டேய்.! கருப்பன்… செத்துப் போச்சுடா…!” சிறுவர் கூட்டம் ஓடிப்போய் பார்த்தது. மண் லாரியில் சிக்கி உடல் நசுங்கி கருப்பன் செத்துக் கிடந்தது. வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளி இருந்தது. வேட்டையாட ஓடிய கால்கள் ஓய்ந்து கிடந்தன. பச்சை நிற கண்கள் மட்டும் அகல திறந்தே இருந்தன.

சிறுவர்கள் அவசர அவசரமாக கருப்பனின் சிதைந்த உடலை பக்கத்திலிருந்த சிறு குழியில் தள்ளினர். கை நிறைய மண்ணை வாரி வாரி எடுத்து குழியில் போட்டு நிறைத்தனர். ஒரு கல்லைத் தூக்கி புதை குழிமேல் வைத்தனர். கருப்பனுக்கு நினைவுக்கல் இட்ட திருப்தியோடு கம்பத்துக்குள் ஓடினர். கருப்பனின் சாவுச் சேதியை எல்லாரிடமும் கூறிவிட்டுத்தான் இன்று அவர்கள் தூங்கப் போவார்கள்.

– ஜூலை, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *