கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 11,687 
 
 

மயில்சாமி வெளிநாட்டில் இரண்டு வருடம் வேலை செய்துவிட்டு ஊர் வந்தபோது முதல் இரண்டு நாட்கள் தனது உறவுக்காரர்கள் மத்தியில் பெரிதும் மதிக்கப்பட்டான்.

நாட்கள் நகர நகர அவனுக்கு கிடைத்த மரியாதை காற்றில் கரையும் கற்பூரம் போல
கரைந்து போனது. வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சேமித்த இரண்டு லட்சம் பணத்தை ஏதோ இரண்டு கோடி சம்பாதித்ததைப்போல தனது மனைவி விஜிலாவிடம் சொல்லி பெருமை பேசிக்கொண்டான்.

அந்த பணத்தை வைத்து ஊரில் வியாபாரம் தொடங்கலாம் என்ற தனது எண்ணத்தை விஜிலாவிடம் சொன்னபோது பரீட்சையில் தோற்றுவிட்டு வரும் மாணவனை இளக்காரமாக பார்ப்பதுபோல அவனை இளக்காரமாய் பார்த்தாள் விஜிலா.

“ஏங்க, வெளிநாட்டில மேஸ்திரி வேல செஞ்சுட்டு வந்த உங்களுக்கு
வியாபாரமெல்லாம் சரிப்படாது!’’ விஜிலாவின் வார்த்தைகளைக்கேட்டு பதில்
சொல்லத்தெரியாமல் அவள் முகத்தை பார்த்தபடியே இருந்தான் மயில்சாமி.

“திரும்பவும் வெளிநாடு போக வேணாங்கற, வியாபாரமும் செய்ய வேணாங்கற,
அப்பறம் இங்கயிருந்து என்னத்ததான் நான் செய்ய..?’’

“நம்ம வீட்ட தொட்டு இருக்குற ஒரு கிரவுண்ட் நிலத்த விக்கப்போறதா
சொன்னாங்க, நாம அத வாங்கிப்போட்டா தினமும் நல்ல வருமானம் வரும், காலையில் அதுல நிக்குற ரப்பர் மரம் வெட்டி பால் எடுக்குற வேலய நீங்களே செஞ்சுட்டு இங்கேயே இருந்துடலாம்!’’ விஜிலா சொன்னது நல்ல விஷயமாகவே பட்டது மயில்சாமிக்கு.

அன்று காலை ஏழு மணிவாக்கில் ரப்பர் மரத்திலிருந்து பால்
எடுத்துக்கொண்டிருந்த உரிமையாளர் பொன்னுசாமியிடம் நிலம் பற்றி கேட்டபோது தனது மகளின் திருமணத்தை முடிக்க நிலத்தை விற்கப்போவதாக சம்மதம் தெரிவிக்கவே பத்திரப் பதிவுக்கு நாள் குறித்தார்கள்.

“என்னங்க, நிலம் நம்ம பேருக்கு பதிவானதும் தாழ்வாரத்துல இருக்குற
ஒற்றையடிப்பாதைய அடைச்சு மதில் சுவர் கட்டிடணும், அப்படி கட்டிட்டா நமக்கு அரை சென்ட் நிலம் அதிகமா கிடைக்கும்!’’ தனது எண்ணத்தைச் தெளிவாகச் சொன்னாள் விஜிலா.

மயில்சாமி ஒருகணம் யோசித்தான். விஜிலா சொல்வதுபோல ஒற்றையடிப்பாதையை அடைத்தால் அரை சென்ட் நிலம் அதிகம் கிடைக்கும் என்பது வாஸ்தவம் தான், ஆனால் அந்த ஒற்றையடிப்பாதையை பயன்படுத்தும் தாழ்வாரத்து மக்கள் பிரச்சனை செய்தால் என்ன செய்வது என்று யோசித்தான்.

“என்ன யோசிக்கிறீங்க, ஒற்றையடிப்பாதைய அடைச்சா கீழ பொறம்போக்கு
நிலத்துல குடிசை போட்டு இருக்குற அந்த பத்து குடும்பமும் எப்பிடி
மெயின்ரோட்டுக்கு போவாங்கன்னா…?, செருப்பு தைக்குற பயலுவ ஒற்றையடிப்
பாதையுலதான் போணுமா, சுத்தி போகட்டும், மெயின் ரோட்டுக்கு போறதுக்கு கிழக்குப் பாதையுல கூட ஒற்றையடிப்பாதையிருக்கு, அவங்க அப்படியே போகட்டும்!’’ விஜிலாவின் பேச்சுக்கு மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதி காத்தான் மயில்சாமி.

பத்திரப்பதிவு நல்லபடியாக நடந்து முடிந்தது. மயில்சாமியின் முகத்தில்
சந்தோஷம் பளிச்சிட்டது. வெளிநாட்டில் ஐந்து வருசம் கஷ்டப்பட்டதின் பலனை அந்த நிலம் வாங்கியபோது உணர்ந்தான். .வீட்டுக்கு வந்ததும் நேராக தாழ்வாரத்தில் குடிசை போட்டு குடியிருக்கும் இடத்துக்குச் சென்றான் மயில்சாமி.

“ யாரு மயில்சாமி ஐயாவா, வெளிநாட்டிலயிருந்து வந்ததுக்கப்பறம் ஆள
பார்க்கவே முடியல!’’ அறுந்த செருப்பு ஒன்றை தைத்துக்கொண்டிருப்பதை அப்படியே விட்டுவிட்டு திண்ணையை விட்டு எழுந்தான் சின்னதுரை.

“சின்னதுர, என் வீட்டு பக்கத்துல கிடந்த பொன்னுசாமியோட நிலத்த நான்
வாங்கீட்டேன், என் நிலத்தையும் தோட்டத்தையும் சேர்த்து மதில் சுவர்
கட்டப்போறேன், அப்பிடி கட்டுனா ஒற்றையடிப்பாதை அடையும், நீங்க எல்லாரும்
கிழக்கே சுத்திதான் மெயின்ரோட்டுக்குப் போகணும்!’’ மயில்சாமி சொல்ல வந்த
விஷயத்தை தெளிவாகச் சொல்லி முடித்தான் அந்த பத்து குடும்பத்தின் மொத்த
ஆட்களும் கூடிநின்றார்கள். சின்னதுரை இடிந்துபோய் நின்றான்

“இதப்பாருங்க, நான் சொல்லவேண்டியத சொல்லீட்டேன் வீணா பிரச்சன பண்ண
மாட்டீங்கன்னு நினைக்கிறேன், மீறி ஏதாவது பிரச்சன பண்ணினா அத எப்படி
சமாளிக்கணு முன்னும் எனக்குத் தெரியும்!’’ குரலை சற்றே உயர்த்திச்சொன்னான்
மயில்சாமி.

சின்னதுரையின் மகன் சிவநேசன் கல்லூரி முடிந்து வந்துகொண்டிருந்தான்.
தனது வீட்டின் முன்பு கூட்டம் கூடி நிற்பதைப்பார்த்ததும் நடையின்
வேகத்தைக்கூட்டினான்.

“சிவநேசா, பொன்னுசாமிஐயாவோட நிலத்த இவர் வாங்கீட்டாராம், நாம போயும்
வந்துகிட்டுமிருக்கிற ஒற்றையடிப்பாதைய அடைச்சு மதில்சுவர் கட்டப்போறாராம்!’’ சின்னதுரையின் மனைவி பாக்யம் அழுதபடியே சொன்னாள். சிவநேசனுக்கு ரத்தம் கொதித்தது.

“மயில்சாமிஐயா, எங்க தாத்தா காலத்துலயிருந்து இந்த ஒற்றையடிப்பாதையாத்தான் போய்கிட்டும் வந்துகிட்டும் இருக்கோம், நீங்க பக்கத்து நிலத்த வாங்கீட்டதால ஒற்றையடிப்பாதைய அடைக்கிறது எந்த வகையுல நியாயம், அப்படியெல்லாம் ஒற்றையடிப்பாதைய அடைச்சு மதில் சுவர் கட்ட நாங்க விடமாட்டோம்!’’ துணிச்சலாய்ச் சொன்னான் சிவநேசன்.

கீழே எழுந்த சத்தத்தைக்கேட்டதும் விஜிலா ஓடி வந்தாள், சிவநேசன் தனது
கணவரோடு வாய்த்தகராறில் ஈடுபடுவதைக்கண்டதும் கொதித்துப்போனாள்.

“ஏலேய், என்னல பேச்சு பேசற, செருப்பு தைக்குற உனக்கே இம்புட்டு ரோசம்
இருந்தா எங்க சாதிக்காரங்களுக்கு எம்புட்டு இருக்கும், இப்ப சொல்றேன்
கேட்டுக்க, நாளைக்கு காலையுல ஒற்றையடிப்பாதைய அடைச்சு மதில் சுவர் கட்டத்தான் போறோம், தயிரியம் இருந்தா வந்து தடுத்துப்பாருங்கல!’’ ஆவேசமாய் சொன்னாள் விஜிலா. அவளது பேச்சுக்கு மொத்த கூட்டமும் வாயடைத்து நின்றார்கள். விஜிலா தனது கணவனை அழைத்துக்கொண்டு புறப்பட்டாள்.

மறுநாள் காலை தனது சொந்தபந்தகளையெல்லாம் அழைத்து தனது வீட்டிற்கு
வரச்சொன்னாள். என்ன நடந்தாலும் அதை சமாளிக்கணும். என்று தெளிவாகச் சொன்னதால் ஒவ்வொருவரும் கம்பு, கத்தி அரிவாள் சகிதம் வந்து ஆஜரானார்கள். மயில்சாமி போலீஸ் ஸ்டேசன் சென்று இன்ஸ்பெக்டர் விஜயகுமாரிடம் விபரத்தை கூறியதோடு ஐயாயிரம் நோட்டுகள் அடங்கிய கவரையும் தந்தான்.

“கவலையே படாதீங்க, தைரியமா மதில் சுவர கட்டுங்க, யார் வந்து
தடுத்தாலும் அவங்கள உங்க ஆளுங்கள வெச்சு அங்கேயே அடிச்சுபோடுங்க, அப்பறமா எனக்கு கம்பிளைன்ட் குடுங்க, மீதிய நான் பார்த்துக்கறேன்!’’ மயில்சாமிக்கு அவரது வார்த்தைகள் தெம்பூட்டுவதாக இருந்தது

காலை ஒன்பது மணிக்கு மதில் சுவர் சுவர் கட்ட தயாரானார்கள். சுற்றி
ஐம்பதுக்கும் மேற்பட்ட உறவுக்காரர்கள் நின்றார்கள். சிவநேசன் நேராக வந்து
மதில் சுவர் கட்டும் இடத்தை வழி மறித்து நின்றான, கூடவே அவன்
சொந்தக்காரங்களும் சேர்ந்து நின்றார்கள். மயில்சாமியின் உறவினர்களில்
பயில்வானைப்போல இருந்த ஒருவன சிவநேசனை பிடித்து தள்ள அவன் நிலை தடுமாறி ஐந்தடி தள்ளி விழுந்தான். அவன் சொந்தக்காரர்கள் அலறியபடியே ஒடி வந்து அவனை தூக்கி அமர வைத்தார்கள்.

“விட்டுடு சிவநேசா, நம்ம ஆட்களால எதுவுமே செய்ய முடியாது, அவங்க
ஆள்பலத்த பாத்தியா? ஒற்றையடிப்பாதைய அடச்சா அடச்சுட்டு போகட்டும், கிழக்கே சுத்தி நாம போயிடலாம், ஒரு கிலோமீட்டர் தூரம் அதிகமா நடக்கணும், பரவாயில்ல, நடந்துட்டா போச்சு!’’ சின்னதுரை தனது மகனின் கைகளைப்பிடித்து ஆறுதல் சொன்னான்.

சிவநேசனுக்கு தனது இனத்தின் மீது வெறுப்பு வந்தது, எதையும் செய்ய முடியாத கோழைகளாகிப்போன இந்த இனத்தில் ஏன் வந்து பிறந்தோம் என்று தனக்குத்தானே வருந்தினான்.

எதற்கும் பணிந்து கொடுக்கும் தனது தந்தையையும் தனது சமூகத்தையும்
நினைக்க நினைக்க சிவநேசனுக்கு வெறுப்பு வந்தது. மனதில் பாரமேற தனது குடிசை நோக்கி நடந்தான் சிவநேசன்.

ஒரு மாதம் ஓடிப்போனது எல்லோரும் கிழக்குப்பாதை வழியாக சுத்தி மெயின்
ரோட்டிற்கு போக பழகிக்கொண்டார்கள்.

வெள்ளிக்கிழமை மறைந்து சனிக்கிழமை ஆகிக்கொண்டிருக்கும் நள்ளிரவு,
எங்கும் இருள் பூசியிருந்தது மயில்சாமி வீட்டிலிருந்து விஜிலா அலறி அழும்
சத்தம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த சின்னதுரையின் காதுகளில் வந்து
ஒலித்தது. படுக்கையை விட்டு எழும்பி காதை கூர்மையாக்கினார். அலறல் சத்தம்
விஜிலாவிடமிருந்து வருவது உறுதியானது.

திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்த தனது மகன் சிவநேசனை தட்டி எழுப்பினான்
சின்னதுரை.

“மயில்சாமி வீட்டிலயிருந்து அலறல் சத்தம் கேட்குதுப்பா, போய் என்ன
ஏதுன்னு விசாரிச்சுட்டு வந்துடலாம் வாப்பா!’’ தனது உறக்கத்தை கலைத்த அப்பாவை எரிப்பதுபோல பார்த்தான் சிவநேசன்.

“அவங்க வீட்டுல என்னமோ நடக்கட்டும் நாம ஏன் போய் பார்க்கணும், அவனும்
நாமளும் ஒண்ணா, ஒரே சாதியா? வேற வேற தானே… அவங்க வீட்டு பக்கத்துல நாம போகக்கூடாதுன்னு இருந்த ஒத்தயடிப்பாதைய மதில் சுவர கட்டி அடைச்சிட்டாங்க, பேசாம படுத்து தூங்குங்க..!’’ சொல்லிவிட்டு மீண்டும் படுத்து தூங்க தயாரானான் சிவநேசன்.

தன் மகன் சொல்வதிலும் நியாயமிருக்கிறது அன்று மதில் சுவர் சுவர்
எழுப்பும்போது சென்று தடுத்த தனது மகனை தள்ளிவிட்ட காட்சி அவர் கண் முன்னே வந்து நின்றது. சின்னதுரை போய் படுத்துக்கொண்டார்.

விடிந்தபோதுதான் விபரம் தெரிந்தது மயில்சாமி மாரடைப்பில் உயிரை
விட்டிருக்கிறான் என்று. அன்று மாலை ஈமச்சடங்கு முடியும் வரை சின்னதுரையும் சிவநேசனும் ஒப்புக்கு கூடவே நின்று விட்டு வீடு திரும்பினார்கள்,

ஐந்தாவது நாள் கல்லறை கட்டி பிரதீட்சை செய்து வந்தவர்களுக்கு காலை பத்து
மணி வாக்கில் இட்லி சாம்பார் வைத்து டிபன் குடுத்து அனுப்பிவிட்டு சாயங்கால
வேளையில் தனது உறவுக்காரர்களை வைத்து வீட்டின் பின்புறம் கட்டியிருந்த மதில் சுவரை ஆறடி அகலத்துக்கு இடித்து ஆட்டோ சென்று வரும் பாதையாக்கச் சொன்னாள் விஜிலா.

சின்னதுரையும் சிவனேசனும் அவன் சொந்தக்காரர்களும் நடப்பதையே வேடிக்கை
பார்த்தபடி நின்றார்கள். விஜிலாவே வலிய வந்து பேச்சு கொடுத்தாள்.

“தப்பு பண்ணீட்டேங்க, இருந்த ஒத்தையடிப்பாதைய அடச்சி மதில் சுவர் கட்டி
உங்கள கிழக்கு பாதை வழியா சுத்தி போக வைச்சுட்டேன், மதில் சுவர்
கட்டினதுக்கப்பறம் உங்களுக்கும் எங்களுக்கும் தொடர்பே இல்லாம போச்சு, என்
வீட்டுக்காரர் நெஞ்சுவலி வந்து உயிருக்கு போராடிகிட்டு இருந்தப்போ பாழாப்போன
இந்த மதில் சுவர் இருந்ததினால உங்க யாருக்குமே என் அழுகைச்சத்தம் கேட்டு ஓடி வந்து பார்க்க மனசு வந்திருக்காது, ஒருவேள இந்த மதில் சுவர் இல்லாம
இருந்திருந்தா நீங்க எல்லோரும் ஓடி வந்து பார்த்திருப்பீங்க, என் புருஷன
ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் உயிர காப்பாத்தியிருப்பீங்க, சொல்லிவிட்டு அழுகையை அடக்கமுடியாமல் தனது வீட்டுக்குள் ஓடி அழ ஆரம்பித்தாள் விஜிலா.

சின்னதுரையின் சர்வ நாடிகளும் செயலிழந்ததுபோல் தோன்றியது. மயில்சாமிக்கு
நெஞ்சுவலி வந்து விஜிலா அழுதப்போ ஓடிப்போய் அவன் நெஞ்சை அழுத்தி அழுத்தி முதலுதவி செய்திருக்கலாம், வீட்டில இருந்த டிஸ்பிரின் மாத்திரையை தண்ணீரில போட்டு கலக்கி குடிக்க குடுத்திருக்கலாம், அக்கம் பக்கத்திலுள்ள யாராவது ஆட்டோகாரர கூட்டி வந்து மயில்சாமிய தூக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் காப்பாத்தியிருக்கலாம் ஆனா செய்யலையே… அக்கம் பக்கத்துல இருந்தும் அவன காப்பாத்த முடியாம அவன் சாவுக்கு காரணமாயிட்டனே…

சின்னசாமியால் அழுகையை நிறுத்த முடியவில்லை. சிவநேசன் சென்று அவர்
கரங்களைப் பிடித்தும் அவர் அழுகையை நிறுத்துவதாக இல்லை. அவரது வாய் திரும்ப திரும்ப புலம்பிக்கொண்டே இருந்தது மயில்சாமிய மதில்சுவர் மட்டும் சாகடிக்கல நானும் என் மகனும் சேர்ந்து சாகடிச்சோம் ஒரு பித்து பிடித்தவர் போல் அவர் உளறிக்கொண்டிருப்பதைப் பார்த்து சிவநேசனும் அழ ஆரம்பித்தான்.

அலறல் சத்தம் கேட்டப்போ பகைய மறந்து மதில் சுவர் ஏறி குதிச்சாவது மயில்சாமிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் காப்பாத்தியிருக்கலாம் என்ற குற்ற உணர்வு படித்துறையில் படிந்துகிடக்கும் பாசிகள் போல அவன் அடி மனதில் படிய
ஆரம்பித்தது. மனசு கனக்க இடிந்துகிடந்த மதில்சுவர் மீது அவனது பார்வை படிந்தது. அவனிடமிருந்து பெருமூச்சு மட்டும் விடாமல் வந்துகொண்டே இருந்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “சுவர்

  1. நல்ல கதை.

    அந்த சிறிய சுவரை இடித்தாகிவிட்டது. ஆனால் இந்த சமூகத்தில் உள்ள சாதி, மதம், பணம், பலம் போன்ற எத்தனையோ சுவர்களை எப்போது நாம் இடிப்பது.

    இது போன்ற கதைகள் குறைந்தபட்சம் மேலும் பல சுவர்களை வளராமல் தடுக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *