சுற்றி சுற்றி வருவேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 1, 2023
பார்வையிட்டோர்: 1,598 
 
 

ராசப்பனுக்கு ஏதோ பயணி இருபது ரூபாய் நோட்டை தள்ளிவிட்டு போய் விட்டான், அது நடுப்பகுதியில் கிழிந்து இருந்தது, சட்டென தெரியாது.

காலையில் ஆட்டோவை இரயில்வே ஸ்டேசன் அருகில் நிறுத்தியிருந்தான். அப்பொழுது வந்த பயணி அவசரமாய் லட்சுமி புரம் கொண்டு விட சொன்னார். இவனும் எண்பது ரூபாய் பேசி கொண்டு போய் இறக்கி விட்டான். அவர் நான்கு இருபது ரூபாய் நோட்டுக்களை கொடுத்தார். நல்ல கலராய் சிவப்பாய் முதல் வசூலாய் பரவசமாய் வாங்கியவன், இப்பொழுதுதான் ஒரு டீ சாப்பிடலாம் என்று கேண்டீனில் கொடுக்கும்போது கடைக்காரர் அதை மேலும் கீழும் பார்த்து அவனிடமே கொடுத்து விட்டார். ‘சோமாரி’ வாயிற்குள் திட்டிக்கொண்டவன் அடுத்து இந்த இருபது ரூபாய் நோட்டை எவன் தலையிலாவது கட்டிவிட வேண்டும் என்று முடிவு செய்தான். வசதியாய் அகப்பட்டாள் ‘சின்னம்மாக்கா’ அவர்கள் ஏரியாவில் கடனுக்கு காய்கறி வியாபாரம் செய்பவள், கண்களில் கொஞ்சம் கோளாறு என்பது அந்த ஏரியாவாசிகளுக்கே தெரியும்.

ராசப்பன் இந்த இருபது ரூபாயை அவளிடம் தள்ளி விட நினைத்தான். அக்கா உன் காய்கறிக்கு என் வூட்டுக்காரி எவ்வளோ தரணும். சின்னம்மாக்கா கண்ணை மூடி கணக்கை போட்டு பார்த்தவள் முப்பத்தி எட்டு ரூபாய் வரோணும். இந்தாக்கா இரண்டு இருபது ரூபாய் தாளை அவளின் கையில் கொடுத்து அழுத்தினான். பணத்தை பிரிக்க்கூடாதே என்று வேண்டிக்கொண்டே,

பணத்தை வாங்கி பார்த்தவள் இரண்டு இருபதாய் இருக்கவும் பாக்கி சில்லறை தர்றேன் இரு, என்று கூடையை இறக்க போனாள். அதெல்லாம் வேணாம், நீயே வச்சுக்க, புன்சிரிப்புடன் சொன்னான். சின்னம்மாக்கா வியப்பாய் பார்த்துக்கொண்டே அவனை கடந்து போனாள். இப்பொழுதுதான் ராசப்பனுக்கு நிம்மதி ! இருபது ரூபாய்தான் என்றாலும் கிழிந்த நோட்டை பையில் எவ்வளவு நேரம்தான் வைத்திருப்பது.

மறு நாள் ! இந்தாய்யா ! புள்ளைக்கு இன்னைக்குத்தான் ஸ்கூல் பீசு கட்ட கடைசி நாள், பணம் ஒரு கத்தையாய் கையில் கொடுத்து, போய் கட்டிட்டு சவாரிக்கு போ !

பள்ளியில் பீஸ் கட்ட கொண்டு வந்த பணத்தை எண்ணிய பள்ளி அலுவலர், சார் இந்தாங்க இந்த இருபது ரூபாய் கிழிஞ்சிருக்கு, வேற கொடுங்க, வாங்கி பார்த்தவன் அதிர்ந்தான் அதே இருபது ரூபாய் நோட்டு !

இரவு அந்த நோட்டை காட்டி இதை யார்கிட்டே வாங்கினே?

யோசித்தவள் ‘எண்ணெய்க்கார மணி அண்ணாச்சிதான்’ ஒரு லிட்டர் கடலெண்னை வாங்கிட்டு மிச்சம் கொடுத்துச்சு,

அப்பொழுதே எண்ணெய் கடைக்கு சென்றவன், இவன் கொடுத்த நோட்டை வாங்கி பார்த்து விட்டு அங்கிருந்த சிப்பந்தியிடம் ஏம்ப்பா இந்த நோட்டை பார்த்து வாங்கறதில்லையாப்பா ?

அண்ணாச்சி நம்ம ‘பாயம்மாதான்’ மதியம் எண்ணைய் வாங்கினப்ப கொடுத்துச்சு,

சரிங்க தம்பி ‘பாயம்மாக்காவ’ நாளைக்கு கேட்டு மாத்தி கொடுக்க சொல்றனே, அவருக்கு கடை பூட்டும் நேரத்தில் நோட்டை மாற்றி கொடுக்க விருப்பமில்லை, காரணம் அடுத்த பார்ட்டிக்கு தள்ளிவிட முடியாது.

கடையை விட்டு வெளியே நடந்து வந்தவன் ‘பாயம்மாக்காவை’ வழியிலேயே பார்த்து ‘அக்காவ்’ இந்த ரூபா நோட்டை நீங்க எண்ணேய் கடையில கொடுத்திட்டீங்களாம், மாத்தி வாங்கி தர்றேன்னு சொன்னாரு ! கையில் வாங்கி பார்த்த பாயம்மாக்கா, சற்று யோசித்து இது நம்ம காய்க்காரி ‘சின்னம்மாக்கா’ தான் கொடுத்துச்சு, நான் அதைய வாங்கி எண்ணெய் வாங்கிட்டு வீட்டுக்கு போனேன். சரி இதை வச்சிரு, நாளைக்கு ‘காய்க்காரி சின்னம்மாக்கா’ வந்தா கேட்டு மாத்தி தாறேன்.

சத்தமில்லாமல் பணத்தை வாங்கிக்கொண்டு வீடு சென்றான் ராசப்பன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *