கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 9, 2021
பார்வையிட்டோர்: 2,809 
 

அவன் உக்கிரமான சுடலை மாடன்.

ஆலமரம் கவிந்திருந்த அந்த சுடுகாட்டு முகப்பில் தெற்குப் பார்த்து நின்ற கோபக்காரச் சுடலை.

கல்லில் வடித்த சிலைதான். மீசையின் முறுக்கு, வலது கையில் பிடித்து நெற்றிக்கு மட்டமாய் உயர்த்திய வெட்டரிவாளின் எடுப்பு, மேல் வரிசைப் பற்களில் இருந்து நீண்டு – வறுத்து உடைத்த கொல்லாங் கொட்டைப் பருப்பின் பிளவாய் – வீரப்பற்கள்; கோபத்தில் கனிந்து சிவந்து தெறிக்கும் பாவமாய் கண்கள்….

நல்லொரு வேலைக்காரன் போல் முறுகித் தெரிந்த கைகால்கள், வரிகள் ஓடும் வயிறு, சமமாய்ப் பிளந்த மார்புப் பரப்பில் உண்ணிக் காய்கள் போல் பால் நுனிகள்…

இந்தச் சிலைக்கு கோரம் பெய்வது – இதழ்க் கடையில் மின்னும் புன்னகையா? விம்மி மூச்சுவிடுவதுபோல் மயங்கித் தோன்றும் விலா எலும்பின் மெலிதான வரிசையா? கோரைப் பற்களின் கூர்மையில் தெறிக்கும் கொலை வெறியா?

பகல் பன்னிரண்டு மணிக்குக்கூட ஆலமர நிழலின் அடர்வில் – இடையிடையே அஞ்சி அஞ்சி விழுந்த சூரிய வட்டங்களின் மங்கிய ஒளியில் – நேராக நிமிர்ந்து சுடலையைப் பார்க்க முதுகுத்தண்டில் கடுமை யான பலமும் நெஞ்சில் வைரம் பாய்ந்த உரமும் வேண்டும். அப்படிப் பார்த்தாலும் கண்ணை யாரும் இரண்டு நொடிக்கு அப்புறம் தாழ்த்துக் கொள்ளாமல் இருக்க முடியாது.

ஆற்றங்கரைதான் சுடலையின் வாசம். ஆலமரம் மட்டுமே பனிக் கும் மழைக்கும் காற்றுக்கும் கூர்கூர் என விழும் சூரியனின் அம்புகளுக் கும் பாதுகாப்பு.

களை பறித்து வரும் பெண்கள் அந்தப் பாதையைத் தவிர்த்தார்கள். பகல் உச்சியில் மாடு மேய்ச்சிப்பயல்கள் அவன் அருகாமையைத் தவிர்த் தார்கள். உழுது மாடு பத்திக்கொண்டோ , கலப்பையையும் நுகத்தையும் பெருக்கலாய் தோளில் சாய்த்துக்கொண்டோ, வயலுக்கு வெள்ளம் பாய்ச்சிவிட்டு மண்வெட்டிக் காம்பில் கைபோட்டு தோளில் சரித்துக் கொண்டோ வருபவர்கள் மாலை மயங்கி வரும் மூந்திக்கருக்கல் வேளை களில் அந்தப் பாதையைத் தவிர்த்தார்கள்.

வெள்ளிக்கிழமைகளில் மாடு கன்றுகள், ஆட்டு மறிகள் கூட அந்தப் பக்கத்தில் அஞ்சி அஞ்சியே மேய்ச்சலுக்கு அடிக்கப்பட்டன. மேலாற்றங் கரையில் ஒரு தடம் இருந்தாலும் சுடுகாட்டை, சுடலை கோயிலைத் தாண்டி, கீழாற்றங்கரையில் ஒரு தடம் ஆற்றில் இறங்கி மேலாற்றங் கரைக்கு ஏறியது.

சிறிய ஊர்தான். ஆறுமாதம் ஒரு பிணம் விழுந்தாலே அதிகம். எனவே மேலப்பத்துக்கு வெள்ளம் பாயும் மடையைத் தாண்டிகாலடிகள் விழுவது கணிசமாய் குறைந்தே இருந்தன. வழித்தடத்தில் படர்ந்திருக் கும் பூச்சி முள், நெருஞ்சி முள், நாயுருவிப் புதர்களை வெட்டி, பாடையைத் தூக்கி ஆட்கள் போவதற்காக, பிணம் விழும்போதெல்லாம் ஆட்கள் மண்வெட்டியும் கையுமாய் போக வேண்டியிருந்தது.

ஊரிலுள்ள ஆலமரங்களில் எல்லாம் ஆட்டுக்கு குழை ஒடிப்பார்கள். நிச்சயதார்த்தத்துக்குக் கால்நாட்ட கம்பு வெட்டுவார்கள். ஆற்றின் குறுக்கே அணை போட என்று பெருந்தடிகளை வெட்டிச் சாய்ப்பார்கள். ஆலம் பிசின் எடுத்து வாயில் போட்டு சுகமாய் சவைக்க என்று பள்ளிச் சிறுவர்கள் ஏற முடிந்த கிளைகளில் எல்லாம் வெட்டாங்கல்லால் கொத்தி வைப்பார்கள். ஆழமாக அம்மன் விளையாடிய முகமாய் கோறை பட்டு நிற்கும் அவை.

ஆனால் சுடலைக்குப் பாதுகாப்புத் தரும் ஆலமரத்துக்கு சுடலை பாதுகாப்பு.

தானே இலைகள் பழுத்து, சருகுகள் உதிர்ந்து, தீப்பட்ட சோலை யாய் துளிர்கள் செஞ்சிவப்பில் கனிந்து, காற்றில் அசைந்து, பச்சையாய் படர்ந்து, கொடிவீசி, யாரும் கண்டறியாமல் – மலர் விரிக்காமல் மணம் வீசாமல் – கருக்கொண்டு காயரும்பி பச்சை முத்தாய், சிவப்புப் பழமாய்…

குருவிகளுக்கெல்லாம் கொண்டாட்டம். பெரிய பெரிய ஆலம் பழங்கள். அங்கேயே கூடு கட்டி, முட்டை இட்டு, குஞ்சு பொரித்து, ‘ஆலம்பழம் தின்று விதைக் கூட்டமாய் எச்சம் இட்டு….

மரம் பழுத்திருக்கும் வேளைகளில் எப்போதும் சுடலைக்கு பறவை சங்கீதம். ஆதிகாலம் தொட்டு மருவாமல் திரியாமல் தேயாமல் இருக்கும் மொழியில், அவற்றுக்கு மட்டும்தான் சுடலையிடம் பயமற்ற உறவு இருந்தது.

சிவந்த பட்டுடுத்து, செவ்வரளிப் பூச்சூட்டி, மஞ்சணை சார்த்தி, கையில் ஒரு கமுகம் பூக்குலையும் கொடுத்து வெள்ளிக் கண்களைத் திறந்து விட்டால் – கூர்ந்து பார்க்கும் கர்ப்பிணியின் கருவழியும்.

ஆனால் தலையிலும் தோளிலும் எச்சமிடக்கூட இந்த குருவிகளுக்கு மட்டும் என்ன சுவாதீனம்?

பரதேசியா பிள்ளை சுடலைமாடன் கொண்டாடி. அவருக்கு வெள்ளிக்கிழமை தோறும் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு ஆராசனை வரும். “ஒவ்” என்றொரு பிளிறலுடன் வீட்டை விட்டுப் பாய்ந்தார் என்றால் மதங்கொண்ட யானை தோற்றது. சுடுகாட்டுச் சுடலை முன் போய்த்தான் ஓட்டம் நிற்கும். சுடலை முன் குதித்து ஆடி, சுடுகாட்டுப் புழுதியில் சுடுகுழிச் சாம்பரில் புரண்டு மறிந்து ஆராசனை அடங்கும் போது மணி மூணோ, மூணரையோ? ஆற்றில் இறங்கிக் குளித்து சுடலை யின் பீடத்தின் முன் ஆசனமிட்டு அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தால் எழும்போது வெள்ளி எழுந்திருக்கும்.

பரட்டைத் தலைமயிர்சிலிர்க்க, திருநீறு நெற்றியில் துலங்க, அவர் வீட்டுக்குப் புறப்படும்போது கண்கள் அப்போது துவைந்த வெட்டரி வாளாய் கதிக்கும்.

ஆரம்ப காலத்தில் பரதேசியா பிள்ளை பின்னால் ஓட முயன்றவர் கள் சுடுகாட்டிலிருந்து திரும்பியதும் காய்ச்சலில் விழுந்திருக்கிறார்கள். திருநீறு போட்டபின்தான் எழுந்திருக்கிறார்கள். பிறகு யாருமே அந்த முயற்சியில் இறங்குவது கிடையாது. ஆராசனை வந்து சுடலையாடி ஓடும்போது, தெரியாமல் செலவாதிக்கு எழுந்து எதிர்ப்பட்டவர்கள் படுத்து மறுபடியும் எழுந்தது கிடையாது. வெள்ளிக்கிழமை இரவுகளில் பத்து மணிக்கு மேல் யாரும் கதவு திறப்பது கிடையாது.

நாஞ்சில் நாட்டு பன்னிரெண்டு பிடாகையிலும் பரதேசியாபிள்ளை என்றாலும் சுடுகாட்டுச் சுடலைமாடன் என்றாலும் தெரியாத ஆள் கிடையாது.

பரதேசியாபிள்ளையின் இளைய சகோதரியை பாறசாலைப் பக்கம் கட்டிக்கொடுத்திருக்கிறது.

தாயம்மை தலைப்பிள்ளைச் சூலி. ஏழு மாசம் ஆனதும் ஏழு வகைப் பலகாரம் செய்து போட்டு, இரண்டு கையிலும் காப்பு அடுக்கி, தலை நிறையப் பூச்சூடி, மடி நிறைத்து, அழைத்துக்கொண்டு வந்தார்கள்.

சாப்பாடு எல்லாம் முடிந்து புறப்படும்போது இரண்டு மணிக்கு மேலாகிவிட்டது. குமாரகோவில் விலக்கைத் தாண்டும்போது அந்தி சிவந்து விட்டது. மொத்தம் மூன்று வில்வண்டிகள். முதல் வண்டியிலும் கடைசி வண்டியிலும் மற்ற வேண்டப்பட்ட சொந்தக்காரர்கள். நடு வண்டியை பரதேசியா பிள்ளையே அடித்து வந்தார். வண்டிக்குள் சூலியான தங்கச்சி, தாயார், தகப்பனார், தாய்மாமன்.

நேரம் விளக்கு வைக்க ஆரம்பித்த உடன்தானே தாயாருக்கு நெஞ்சில் ஒரு கலக்கம். தலைப்பிள்ளைச் சூலியை நேரங்கெட்ட நேரத்தில் கூட்டிக்கொண்டு போகிறோமே என்ற கதங்கதம். என்றாலும் சுடலைமாடன் கொண்டாடி வண்டி அடிக்கையில் எந்த வாதை வந்து வழிமறிக்கும் என்ற நம்பிக்கை.

பார்வதிபுரம் தாண்டிய உடன் வடசேரிக்குப் போகும் மெயின் ரோடு வழியாகச் சுற்றிக்கொண்டு வருவதைவிட நேரே அனந்தனாற்றங் கரை ஓரமாக ஒரு குறுக்குப் பாதை உண்டு. வழிகொஞ்சம் கரடுமுரடாக இருக்கும் என்றாலும் இரண்டு மைல் மிச்சம். கடைத்தெருவில் வண்டி களை நிறுத்தி அரிக்கேன் விளக்குகளைப் பொருத்தி வண்டியின் கோசுப் பெட்டிக்கும் கீழேகட்டித் தொங்க விட்டதும் குறுக்குப் பதையில் வண்டி புறப்பட்டது.

நல்ல முன்நிலவுக் காலம்.

காளைகள் கழுத்துமணி குலுங்க பாதையை நிதானித்து வண்டியை இழுத்துக்கொண்டு அஞ்சல் ஓட்டத்தில் ஓடின.

நடுவழியில் ஒரு தோப்பின் முகப்பில் இசக்கியம்மன் கோயில் ஒன்று. யாரோஏற்றிவைத்த விளக்கு மினுக் மினுக் என்று வேப்பமரத்தின் இருட்செறிவுக்கு பொருள் ஏற்படுத்திக்கொண்டு இருந்தது. நேர்ச்சைக் காக வேப்பமரத்துக் கிளைகளில் கட்டிய தொட்டில்கள், வளையல் குலை கள்; கை உடைந்த, கால் உடைந்த மண்உருவங்கள் பக்கவாடுகளில் கால் மாடு தலைமாடாகக் கிடந்தன.

வில்வண்டிகள் கோயிலுக்குப் பக்கம் வருகையில் எதிர்க்கரையில் இருந்து குதிரைக்குட்டி போல் ஒன்று குதித்து கோயிலுக்குள் ஓடியது. ஒரு வித அதிர்ச்சியில் ஆட்பட்டதுபோல் மாடுகள் சடக்கென்று நின்றன. பர தேசியா பிள்ளைக்கு மயிர்க்கூச்சம் எடுத்தது.

ஒருவிதமாய் விறுவிறுப்புக்கு ஆட்பட்டவராய் தலைக்கயிற்றை கூண்டுப் பிரம்பில் செருகிவிட்டு வண்டியில் இருந்து இறங்கி இசக்கி யம்மன் கோயில் முன்நின்று தொழுதார். மாடக்குழியிலிருந்து குங்குமம் எடுத்து நெற்றியில் தீற்றிக்கொண்டு தங்கை நெற்றியிலும் இட்டார்.

வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டாலும் செவ்வாய்க்கிழமைகளில் அந்தியானதும்தாயம்மைக்கு ஒரு மயக்கம் போல, தளர்ச்சி போல வரும். கர்ப்பிணிக்கு இதுவழக்கமாக இருக்குமாக்கும் என்று அதை அவள் பொருட்படுத்தவில்லை.

பரதேசியா பிள்ளைக்கு அப்போது படுக்கை பெரும்பாலும் பத்தயப்புரையில்தான்.

ஒரு செவ்வாய்க்கிழமை.

இரவு நேரம் என்ன இருக்கும் என்று தெரியவில்லை. பக்கத்தில் படுத்திருந்த மகளைக் காணாமல் தாயார் புறக்கடைக் கதவைத் திறந்து பார்த்தாள். அங்கும் காணோம். கணவனை எழுப்பி விஷயத்தைச் சொல்ல அவரும் வீடெங்கும் களமெங்கும் தேடிப் பார்த்துவிட்டு பதங் குலைந்து மகனை எழுப்ப வந்தார்.

அவர்கள் வீடிருந்த தெருக்கோடியில் ஒரு இசக்கியம்மன் கோயிலும் பெரியதோர் ஆலமரமும் உண்டு. பரதேசியா பிள்ளைக்கு என்ன தோன்றி யதோ? சுடுகாட்டுச் சுடலைமாடன் திசை நோக்கி நின்று ஒரு கும்பிடு போட்டுவிட்டு அம்மன் கோயிலை நோக்கிப் பாய்ந்தார்.

கோயிலின் முன் யாருமில்லை. ஆனால் இருட்டையும் மீறியதோர் பிரகாசம் எங்கும். உச்சிக்கு மேலே கலகலெனச் சிரிப்பொலி. தலை தூக்கிப் பார்த்தார்….

இடுப்பில் கர்ப்பிணி தாயம்மையைத் தூக்கி வைத்துக்கொண்டு சிவந்த கண்டாங்கியும் தெறித்து விழும் முலைப்பாரமும் குறத்தி போல் மேல் தூக்கிய கொண்டைக்கட்டும் வாயெல்லாம் வெற்றிலைக் கொலுவு மாக ஒரு பெண் ஆலவிழுதுகளில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தாள். பரதேசியா பிள்ளைக்கு எங்கும் ரோமாஞ்சலி. நின்ற இடத்திலேயே கண்ணை மூடி நின்று ஜெபிக்க ஆரம்பித்தார். எத்தனை ஊழி சென்றதோ?

கண்ணைத் திறக்கும் போது மரக்கவடியொன்றில் சாய்ந்து உறங்குவது போல் தோற்றத்தில் தாயம்மை.

மறு நாளேதாயம்மை இரட்டைக் குழந்தைகளைப் பெற்றாள்.

சுடுகாடு பொது என்றாலும் சுடலைமாடன் நிற்கும் தோப்பு பரதேசியா பிள்ளையின் குடும்பச் சொத்து. யார் வேண்டுமானலும் வந்து வழிபாடு நடத்தலாம். ஆனால் முன் பேறாக பரதேசியா பிள்ளையிடம் ஒரு வாக்கு சொல்லிவிட வேண்டும். அவரன்றி யாரும் பீடத்தின் தளத்தில் ஏறி சருகு மாலைகளைக் கழற்றுவதையோ, சிலையை எண்ணெயும் பாலும் தயிரும் கருக்கு வெள்ளமும் களபசந்தன பன்னீரும் விட்டு நீராட்டுவதையோ, புதிய அலங்காரங்கள் செய்வதையோ அவர் அனுமதிப்பதில்லை .

ஆண்டுக்கு ஒரு முறை கொடை தவறாது. பரதேசியா பிள்ளையின் அப்பா அந்தப் பிடாகையில் நல்ல ‘சொதை’யுள்ள மூத்தபிள்ளை. ‘சொச்சதையா’ நாற்பது கோட்டை விதைப்பாடு நஞ்சை. குறுக்கே காகம் பறக்காது. வண்டி மாடு, தோட்டம் என சுற்றுப்புறங்களில் நல்ல வசதி.

இரண்டு பல் காளையங் கன்றுகள் பூட்டிய தட்டு வண்டியில் ஒரு கையில் சாட்டைக் கம்பும் மறுகையில் காளையங் கன்றுகளின் தலைக் கயிறுமாக அவர் போகும் கம்பீரம் தனி.

ஆனால் கோமரம் வந்துவிட்டால் பாவி மட்டையை முகமேறிட்டுப் பார்த்துவிட முடியாது. கழுத்தில் செவ்வரளி மாலையும் மார்பு தோளெங்கும் சந்தனப்பூச்சும்கைகளில் தரித்த கடயங்களும் அரை யில் வெண்கல மணி குலுங்கும் சல்லடமும் மார்பில் பாய்ச்சல் கயிறும் தலையில் முடியை மறித்துக் கட்டி செம்பட்டுத்துண்டும் காதோரங்களில் கொம்பு போல் செருகிய தாழம்பூ மடல்களும் ஒரு கையில் திருநீற்றுச் சம்புடமும் மறுகையில் வெள்ளிவாளும்…

கொடையன்று இரவு ஊட்டு எடுக்கும் பன்னிரண்டு மணிச்சாமத் தில் பரண் மேல் கால்களும் வாயும் கட்டப்பட்டு கழுத்தில் பூ மாலை சூட்டி மல்லாக்கப் படுக்க வைத்து நான்கு பேர்பிடித்தவாறு நிற்கும் ஆண் பன்றியின் மார்பை கூர்ங்கத்தியால் கிழித்து பெருகிவரும் ரத்தத்தை வாய் வைத்து உறிஞ்சிக் குடித்து…

சுடலையின் பரிபூரண அருளற்ற யாரால் இப்படிச் செய்ய முடியும்? கைகளிலும் மார்பிலும் உடுத்த துணிகளிலும் தெளித்திருக்கும் பன்றி ரத்தக் கறையோடு கீழே இறங்கி பீடத்தின் முன் ஆடுகையில் ஆடுவது சுடலையா பரதேசியா பிள்ளையா என்ற பேதம் யாரும் கண்டுவிட முடியாது.

அந்தப் பக்கம் ஆண்டு தோறும் பெருவாரியாய் மழை பெய்யும். ஆவணியில், ஐப்பசியில், சித்திரையில், ஆனி ஆடியில் என – பருவ மழை, கோடை மழை, சாரல் மழை மழை பெய்தால் காட்டாற்றில் வெள்ளம் கரை புரளும். நாலைந்து நாட்கள் ஆற்றைக் குறுக்கே கடக்க முடியாது. பாலம் ஒன்றரைமைல் தள்ளி, சுற்றிக்கொண்டு வர வேண்டும். அவசரமாய் ஆற்றைத் தாண்டித்தான் தீர வேண்டுமெனில் அரை வேட்டியை உரிந்து தலையில் சுற்றிக்கொண்டு நெஞ்சளவு நீரில் இறங்கி விட வேண்டியதுதான். வேறு வழியில்லை. ஊரும் ஊரைச் சார்ந்த வயல்களும் ஆற்றுக்கு கீழக்கரையில் இருக்கும்போது சுடுகாட்டை மட்டும் கொண்டுபோய் மேலக் கரையில் வைக்க வேண்டும் என அந்த நாளில் எந்தக் கோணையனுக்குத் தோன்றியதோ? ஆனால் சுடுகாடு மேலக்கரையில்தான்.

தற்செயலாகப் பிணம் விழும் நாட்களில் ஆற்றில் வெள்ளமும் இருந்துவிட்டால் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்த பாடையோடு, தீச்சட்டியோடு, கொள்ளிக் குடத்தோடு ஆற்றைக் கடப்பதற்குப் பெரும் பாடு, இப்படியோர் ‘நல்ல நாள்’ பார்த்துச் செத்த புண்ணியவானுக்கு ஏழேழு பிறவிக்கும் வசவுகள் போதும். அந்த மாதிரி நாட்களில் அந்த ஊர்க்காரர்களுக்கு ஏற்படும் மயான வைராக்கியம் – அடுத்த பங்குனி சித்திரையில் சுடுகாட்டை கீழக்கரைக்கு மாற்றி விடவேண்டும் என்பது.

பரதேசியா பிள்ளை காலம் எல்லாம் ஆகிவிட்டது. சொக்காரர் களுக்குள் ஏற்பட்ட வழக்குகள் காரணமாய் மூத்தபிள்ளை சந்ததியினரில் பெரும்பாலோர் கூலி வேலைக்குப் போனார்கள். உப்புப் பானையின் வெளிப்புறம் பொரிவதுபோல் வெள்ளையாய் அவர்கள் முதுகுகளில் வியர்வை காய்த்து உப்புப் பொரிந்தது. ஒன்றிரண்டு வீடுகளில் மட்டும் அங்கே ஒரு தடி, இங்கே ஒரு துண்டு என நிலங்கள்.

பரதேசியா பிள்ளை மகனுக்கு மிஞ்சி இருந்ததெல்லாம் பழைய மட்டுப்பா வீடு ஒன்றும் அரைக் கோட்டை விதைப்பாடும் சுடுகாட்டுத் தோப்பும் சுடலையும் மட்டும்.

கொடை, பொங்கல் எல்லாம் போயிற்று. ஆண்டுக்கு ஒரு முறை நல்ல நாளில் மூன்று பாளையங்கோட்டன் பழமும் சாம்பிராணிப் புகை யோடு மட்டும் சுடலை திருப்திப்பட வேண்டியதாயிற்று.

சுடுகாடு கீழ்க்கரைக்கு மாற்றப்பட்டபோது சுடலை ஒரு பிரச்சினை யாகவே நிற்கவில்லை. குடும்பச்சாமி ஆதலால் சுடுகாட்டைப் பெயர்க் கும்போது சுடலையைப் பெயர்க்க முடியாது. அதற்குப் பரதேசியா பிள்ளை மகனும் சம்மதிக்கவில்லை. ஊரில் பரவலாய் இருந்த சூனா மானாக்களும் சுடுகாட்டோடு இந்த சுடலைச் சள்ளையும் எதற்கு என்று எதிர்ப்பாட்டுப் பாடினர்.

பரதேசியாபிள்ளையின் மகள்கல்யாணத்துக்கு சுடுகாட்டுத் தோப்பு கை மாறியது. ரொக்கப் பணம் பதினெட்டாயிரம் கொடுத்து வாங்கிய கயிற்றுக் கடை பொன்தூசிமுத்து நாடார் சுடலையைப் பெயர்த்துக் கொண்டு போய்விட வேண்டும் என்று வாக்குறுதி வாங்கிக்கொண்டு தான் விலையாதாரம் ஆகும் போது பணம் கொடுத்தார்.

என்றாலும் சுடுகாட்டுச் சுடலையைப் பிடுங்கி எங்கு கொண்டு நட முடியும்? அரங்கில், ஒழுக்கறைப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டக்கூடிய சமாச்சாரமா? வேறு வழி இல்லாமல் சுடலை அக்கரையில் இருந்த சுடு காட்டையே விரக்தியோடு பார்த்துக்கொண்டு நின்றது.

தோப்பை வாங்கிய பொன்தூசி முத்து நாடார் தோப்பில் பல சீர்திருத்தங்களைச் செய்தார். சுளையாகப் பதினெட்டாயிரம் போட்டு வாங்கி வெட்டுக்கு இருநூறு தேங்காய் கொண்டுபோவது பைத்தியக் காரத்தனமல்லவா? அறுபது சென்று தோப்பில் சென்றுக்கு ஒரு பிள்ளை என்று கணக்கிட்டு பிள்ளைக்குப் பதினைந்து காயானாலும் தொள்ளா யிரம் காய் வெட்ட வேண்டாமா?

தேறும் என்று கருதிய சிலபிள்ளைகளுக்கு கொண்டையில் சீர் பார்த்து மூடுகளில் மண்ணைக் கிளைத்துக் கொடுத்து, உரம் வைத்து… தேறாது என்று கருதிய, நரங்கிக்கிடந்த பிள்ளைகளை வெட்டி மாற்றி பக்கத்தில் புதிதாகக் குழி எடுத்து புதியகன்று நட்டு… குழை ஒன்றுதவிர வேறு பயனில்லாமல் தோப்புக்குள் அடைத்துக்கொண்டு நின்ற வாகை, பூவரசு மரங்களை வெட்டி மாற்றி… தோட்டத்தின் சத்தை நாலுபக்கமும் உறிஞ்சிக்கொண்டு நின்ற உயிர் வேலிகள் காட்டாமணக்கு, கடலா மணக்கு, திருகுக் கள்ளி, பாம்புக் கள்ளி, கொடுக்கள்ளி எல்லாம் பிடுங்கி எறிந்து சீமை உடைமுள்ளை சீராக அடுக்கி தட்டி கட்டி வேலி வரிந்து…

அநாவசியமாக தோட்டம் பூராவும் வளர்ந்து கிடந்த எருக்கலை, மஞ்சணத்தி, மலட்டு மாமரம் யாவும் வேரோடு கல்லி..

ஆலமரம் மட்டும் இரண்டு தென்னங்கன்றுகளுக்குண்டான இடத்தை அடைத்துக்கொண்டு நின்றது. முறித்துப் பாரம் வைக்கையில் தடிகளும் கிளைகளும் ஒரு லாரி பாரம் வந்தது. சல்லிக்கிளைகளைகாயப் போட்டு எரிக்க என்று வேலைக்காரர்கள் கட்டிக்கொண்டு போனார்கள்.

ஆலமரமும் இன்றி, சுடுகாடும் இன்றி, தோப்புச் சூழலும் இன்றி சுடலை மட்டும் மூளியாக நின்றது. சுடலையின் சிலை நின்ற திரட்டிலும் பெரும் பகுதியை வெட்டி எடுத்து விட்டதால் எட்டடிக்கு எட்டடி மண் திரட்டில் நாலடி உயரத்தில் சுடலையின் சிலை.

தோப்பு கைமாறி ஏழெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஏழெட்டு ஆண்டுகளில் நாலோ ஐந்தோ முறை மூத்தபிள்ளை குடும்பக் காரர்களில் யாரோ வந்து பாயசம் வைத்துக் கொடுத்திருப்பார்கள். மூத்த பிள்ளையின் குடும்பக்காரர் எவரைக் கண்டாலும் பொன்தூசிமுத்து நாடார் தவறாமல் படிக்கும் பாட்டு இந்தச் சுடலைமாடன் சிலையை இடம் மாற்றி விட்டுவிடக்கூடாதா என்பது தான்.

திரட்டு மண், மழை பெய்யும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்ச மாகக் கரைந்தது. கரையக் கரைய வெட்டி தோப்பில் வாங்கிக் கொண் டிருந்தார்கள். அண்டை கொடுத்திருந்த பின்புறக்கால் ஒன்று சரிய, ஆபாச மானதொரு விரிகோணத்தில் சுடலை வானை நோக்கிச் சாய்ந்து நின்றது. அடுத்து வந்த ஆனியாடிச் சாரலில் ஒருநாள் இரவு பெருமழையும் காற்று மாக அடித்ததில் முற்றிலுமாக முதுகு மண் அடித்து தோப்பினுள் விழுந் தது. இரண்டு மாதங்கள் அப்படியே கிடந்தது.

கடையடைப்பான ஒரு ஞாயிறு பிற்பகலில் தோப்புக்கு வந்த பொன்தூசிமுத்து நாடார் நாலு ஆட்களை விட்டு சுடலையைப் புரட்டி வேலியோரம் போட்டுவிட்டு, பீடம் இருந்த திரட்டை, முழுவதுமாய் வெட்டி மாற்றி ஒரு தென்னங்கன்று நட குழி பறிக்கச் சொன்னார்.

– சதங்கை , ஜனவரி – 1981

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *