‘டேய், உம் பேர் என்ன?’ வழிந்து விழுந்த மூக்குக் கண்ணாடிக்கு வெளியே கண்ணை வைத்துப் பார்த்துக் கேட்டார் தலைமையாசிரியர் துரைசாமி அய்யங்கார்.
‘சீதுரு.’ சொல்லிவிட்டுப் பையன் தன் அப்பனைத் திரும்பிப் பார்த்தான்.
கண்ணாடியைச் சரி செய்துகொண்டு பையனின் தகப்பனாரைப் பார்த்தார் தலைமையாசிரியர்.
‘சீதுரு, சாமி,’ வாயெல்லாம் பல்லாகச் சொன்னான் கோதண்டம்.
‘சீதுருவா? அப்படியெல்லாம் பேர் இருக்காதுடா. சரியாச் சொல்லு.’
‘சீதுருதான், சாமி. பெரியய்யிரு பேரனுக்குக்கூட அதாம் பேரு. அதைப் பாத்துதான் வெச்சேன். அது தாம்பரம் கிஷ்டங்காலேஜிலே படிக்குது.
ஊரில் பெரியய்யர் என்று சொல்லப்படுபவர் அசூரி நரசிம்மச்சாரியார். அவர் பேரன் செங்கல்பட்டு செயின்ட் கொலம்பஸ் பள்ளியில் படித்துவிட்டு இப்போது மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் பி. எஸ்சி. படிக்கிறான். ஹெட்மாஸ்டர் வெளியூர்க்காரர். மரியாதை நிமித்தம் நரசிம்மாச்சாரியாரை இரண்டுமுறை சந்தித்திருக்கிறாரே ஒழிய பெரியய்யர் குடும்பத்தைப் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது.
“தொப்ப வாத்தியார்” என்று மாணவர்களால் கேலியாக — ஆனால் ரகசியத்துடன் — குறிப்பிடப்படும் தலைமையாசிரியர் துரைசாமி அய்யங்கார் ஒரு பெருமூச்சுடன் பேனாவைக் கீழே வைத்தார். யோசனையுடன் மூக்குக்கண்ணாடியையும் கழற்றி மேஜைமேல் வைத்துவிட்டு, தன் பக்கத்தில் பெஞ்ச்மேல் கிடந்த நசுங்கிய ஒரு சாக்கலேட் டப்பாவைத் திறந்து இரண்டு வெற்றிலைகளையும் ஒரு பாக்கையும் வெளியில் எடுத்தார்.
நிமிடங்கள் நகர்ந்துகொண்டிருந்தன. கோதண்டம் கட்டிய கைகளுடன் பயபக்தியுடன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். பையனின் பார்வை மட்டும் ஹெட்மாஸ்டருக்குப் பின்னால் இருக்கும் ஜன்னலுக்கு அப்பால் இருந்தது. தாடி வீரபத்ர நாயக்கரின் எருமை மாடுகள் குளித்துவிட்டு பெரியகுளத்து மேட்டின்மேல் ஏறி வந்துகொண்டிருந்தன. முதலில் வரும் எருமைமேல் கோவணத்துடன் சவாரி செய்து வந்துகொண்டிருந்தான் “பொக்கை வாய்” பலராமன் மகன் கோபாலு. இரண்டு வகுப்புகளுக்குப் பிறகு படிப்பை நிறுத்திவிட்டு மாடுமேய்க்கச் சென்றுவிட்டவன்; மாடு மேய்ப்பதற்கு இணையான தொழில் வேறு எதுவும் இல்லை என்று அடித்துச் சொல்பவன்.
கடைசி எருமை மாடும் கீழே இறங்கி ஜன்னலைவிட்டு மறைந்தவுடன் பையனின் பார்வை மீண்டும் தொப்பை வாத்தியாரின்மீது விழுந்தது. அவர் இப்போது சாக்கலேட் டப்பாவிலிருந்து எடுத்த தங்கபஸ்பம் புகையிலைக் கட்டைப் பிரித்துக்கொண்டிருந்தார். வலது கையில் ஒரு கொத்து புகையிலையை எடுத்து இடது உள்ளங்கையில் வைத்துத் தடவிக்கொடுத்தார். பிறகு அதை ஜாக்கிரதையுடன் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு வெற்றிலைப் பெட்டியை மூடி மறுபடியும் பென்ச்சின்மேல் வைத்துவிட்டு பையனை நிமிர்ந்து பார்த்தார்.
‘டேய், இங்க வா.’
பையன் முன்னால் வந்தான். பித்தான்கள் இல்லாமல் இறுக்கமாக இழுத்து சொருகப்பட்ட முடி தளர்ந்து கால்சட்டை கீழே விழுந்தது. பையன் அதை நிதானமாகத் தூக்கி இல்லாத இடுப்பைச் சுற்றி இருகக்கட்டி முடுச்சுப்போட்டு சட்டை இல்லாத உடம்புடன் தலைமையாசிரியர் எதிரில் கைகட்டி நின்றான்.
ஹெட்மாஸ்டர் வாயைத்தூக்கி வெற்றிலைக் குதப்பலை நிலைப்படுத்திக்கொண்டு கேட்டார்,
‘டேய், இப்ப சொல்லு, உம்பேர் என்னா?’
பையன் மூக்கை ஒருதடவை நன்றாக உறிஞ்சிவிட்டுச் சொன்னான், ‘சீதுரு!’
‘சரியாச் சொல்லுடா, முண்டமே!’ தொப்பை வாத்தியாரின் பார்வை தன்னிச்சையாகப் பிரம்பின் பக்கம் திரும்பியது.
‘சீதுரூ…’
பையன் குரலில் விம்மல் வெடித்தது. இன்னொருமுறை கேட்டால் கட்டாயம் அழுதுவிடுவான்.
‘ம்ம்ம்… சீதுரு, இல்லையாடா, கோதண்டம்?’
‘சாமி, பையன் பொறந்தபோது பெரியய்யரு பேரன் ஊருக்கு வந்ததா, அப்போ…’
‘அது இருக்கட்டுண்டா, ஒம் பையன் பேர சரிய்யா சொல்லு.’
‘சீதுரு, சாமி.’
தலைமையாசிரியரின் தயக்கம் கோதண்டத்துக்குத் திகைப்பாக இருந்தது. பையனுக்கு “சீதுரு” என்று பெயர் வைத்து நாம் ஏதாவது தவறு செய்துவிட்டோமா? “சீதுரு” என்பது அய்யமார்கள் மட்டும் வைத்துக்கொள்ளக்கூடிய பெயரா?
தலைமையாசிரியர் நழுவிய கண்ணாடியை சரி செய்துகொண்டார். பின்பு குனிந்து “சீதுரு” என்று பதிவிட்டார்.
‘உம்பேர் கோதண்டம்தானேடா?
‘கோதண்டபாணி, சாமி… அளவுக்கார கோதண்டபாணி. எங்கப்பா பேரு அளவுக்கார சீராமுரு. வேண்டராசி அம்மன் கோயில் தெருவுல, சேஷப்ப செட்டியார் செக்குமேடு தாண்டி…’
தலைமையாசிரியர் “போதும்” என்று சைகை காட்டினார். பின்பு குனிந்து “தகப்பனார் பெயர்” என்ற இடத்தில் “கோதண்டபாணி” என்று எழுதினார். கோதண்டம் இடதுகைப் பெருவிரலை வைத்து அழுத்த சீதுருவின் பள்ளிப் பிரவேசம் நிறைவானது.
கோதண்டம் பையிலிருந்து ஒரு பிரம்புத்தட்டை எடுத்து மேஜைமேல் வைத்தான். பிறகு அதில் வெற்றிலை, பாக்கு, அரை டஜன் வாழைப்பழம், ஒரு ரூபாய் நாணயம் என்று வரிசைக்கிரமமாக வைத்தான். திரும்பிப்பார்த்தான். பையன் இப்போது வராண்டாவின் கோடிக்கு நகர்ந்துவிட்டிருந்தான். அங்கு அமெரிக்க உபயம் பால் பௌடரை தண்ணீர் விட்டுக் கரைத்துக்கொண்டிருந்தாள் மண்ணாம்பா; அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.
‘சீதுரோய்!’
பையன் ஓடி வந்தான்.
‘வீந்து கும்புடு.’
பையன் விழுந்து கும்பிடும்போது கால்சட்டை திரும்பவும் அவிழ்ந்து விழுந்தது. அம்மணமாக எழுந்துநின்று பிறகு கால்சட்டையை மேலே தூக்கி இடுப்பைச்சுற்றிக் கட்டி முடிச்சு போட்டான்.
‘டேய், உங்கப்பன் ஆடு மேய்க்க அனுப்பாம பள்ளிக்கூடம் அனுப்பிச்சிருக்கான். ஒழுங்கா படிப்பியாடா? ஊர் சுத்த ஓடிப்போகமாட்டிய?’
பையன் புரிந்தும் புரியாமலும் தலையை அசைத்தான். கோதண்டம் ஆனந்த பாஷ்பத்துடன் தலைமையாசிரியரைப் பார்த்து கை கூப்பினான்.
‘படிப்பாண்டா. கவலைப்படாதே.’
‘கொயந்தங்களுக்கு பொரிகடலை கொடுக்கலாமா, சாமி?’ கோதண்டம் பவ்யமாகக் கேட்டான். துரைசாமி அய்யங்கார் தலையை அசைத்தார். பிறகு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டார்.
தன் கல்வி வரலாற்றின் அந்த ஆரம்ப நாளை சீதுரு என்றும் மறந்ததில்லை. அறுபது வருடங்கள் கழிந்து, இன்று ஒரு விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதம விஞ்ஞானியாக ஒய்வுபெறும் அவர் வாழ்த்து மடலில் “டாக்டர் சீதுரு” என்று பொறித்திருக்கும் தன்னுடைய பெயரைப் பழைய நினைவுகளுடன் பெருமையுடன் பார்த்துக்கொண்டார்.
அன்று காலை ஹ்யூஸ்டனில் தரவு அறிவியல் விஞ்ஞானியாக வேலை பார்க்கும் அவர் மகன் பாணி எனப்படும் கோதண்டபாணி வாட்ஸாப் வீடியோவில் அவருடன் உரையாடினான். பல விஷயங்களைப் பேசி முடித்தபிறகு அவர் பெயர் குறித்த விவாதம் எழுந்தது.
‘அப்பா, நீ ஏன் கிராமத்தில் ஒரு முட்டாள் வாத்தியார் தப்பாக எழுதின பெயரை அப்படியே வைத்துக்கொண்டிருந்தாய்? “ஸ்ரீதர்” என்று மாற்றியிருக்கலாம் அல்லவா?’
‘நோ, நோ, அது தொப்பை வாத்தியார் தப்பாக எழுதிய பெயர் இல்லை; என் தகப்பனார் எனக்கு வைத்த பெயர். அளவுக்கார கோதண்டபாணியின் வாயிலிருந்து சீதுரு என்ற பெயர்தான் வந்தது. நான் அதை ஸ்ரீதர் என்று மாற்றியிருந்தால் அது அவர் வைக்காத பெயராகியிருக்கும். இருந்த அரைக்காணி நிலத்தையும் எனக்காக விற்று, பிறகு வாரக்கூலிப் பண்ணையாளாக இரவு பகலாக உழைத்து, என்னைப் படிக்கவைத்து, பெரிய மனிதனாக்கி, எனக்காகவே வாழ்ந்து, நாற்பது வயதிலேயே உயிரைவிட்ட அந்த மாமனிதர் கூப்பிட்ட மாதிரியே உலகமும் என்னைக் கூப்பிடட்டும் என்று விட்டுவிட்டேன். வாட்ஸ் இன்ன…’ அவருக்குத் தொண்டையை அடைத்தது.
‘அஸ் சிம்பில் அஸ் தட்?’ (‘அவ்வளவு சின்ன விஷயம் என்கிறாயா?’)
‘அஸ் எனோப்லிங் அஸ் தட்’ (‘அவ்வளவு உயர்வான விஷயம் என்கிறேன்.’)
– நன்றி: https://solvanam.com, Issue 246, May 9, 2021.