சில்லறையும் மொத்தமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 5, 2024
பார்வையிட்டோர்: 252 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  

நாணயக்காரப் பிள்ளை என்ற பெயரில் வழங்கப்பெறும் சிறப்பு நெல்லை நகரில் ஒரு வருக்குத்தான் கிடைத்தது. மளிகைக் கடை வைத்து நிறையப் பொருள் சேர்த்துவிட்டார். எப்படியோ அவருக்கு நாணயக்காரப் பிள்ளை என்று பெயர் தோன்றிவிட்டது. அவருடைய இயற்பெயர் என்ன என்பது அயலூரானாகிய எனக்குத் தெரியவில்லை. எனக்குமட்டுந்தான் தெரியவில்லை என்பதில்லை. எத்தனையோ பேருக்கு அவருடைய உண்மைப் பெயர் தெரியாது. 

உண்மைப் பெயர் தெரியாவிட்டால் என்ன? நாமும் அவரை நாணயக்காரப் பிள்ளை என்றே வழங்குவோமே. அதனால் ஒன்றும் குடி முழுகிப் போகாது. 

வீரராகவபுரத்தில் நாணயக்காரப் பிள்ளை கடை வைத்திருக்கிறார். வண்ணார் பேட்டையில் வீடு. நடுப்பகல் உணவுக்காக வீட்டுக்கு வருவார். சாலை வழியாக வருகிற வழக்கம் இல்லை. வீரராகவபுரத்துக்கும் வண்ணார் பேட்டைக்கும் நடுவே தண்பொருநை ஆறு தான். நாணயக்காரப் பிள்ளையைப் போன்ற வர்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்று எண்ணித்தானோ என்னவோ, அந்தத் தமிழ் ஆற்றில் பெரும்பாலும் சிறிதளவே தண்ணீர் ஓடும். நாணயக்காரப் பிள்ளை சிந்துபூந்துறை வந்து, ஆற்று வழியாக வண்ணாரப்பேட்டை அடைவது வழக்கம். எப்போதாவது மழை பெய்து ஆற்றில் தண்ணீர் நிறைந்து வந்தால், “இந்தப் படுபாவிப் பயல்கள் நிறைந்த ஊரிலே மழை வேறு கேடா?” என்று ‘திருவாய் மொழி’ பாடிக்கொண்டே சாலை வழியாக நடந்து ‘தொலைப்பார்.’ ஆனால், ஆள் இறங்க முடியாது என்ற நிலை எப்போதாவதுதான் ஏற்படும். 

பொழுது விடிவதற்கும் மறைவதற்கும் நாள்தோறும் யாராவது கட்டளை இடுகிறார்களா? இயற்கை நியதி தன்பாட்டில் இயங்குகிறது. இந்த இயற்கை நியதிக்கும் நமது நாணயக்காரப் பிள்ளையின் வாழ்க்கை நியதிக்கும் மிகவும் ஒற்றுமை. கிழக்கு வெளுக்குமுன் எழுந்துவிடுவார். குட்டந் துறையில் குளிப்பார்; பேராச்சி கோயிலை வலம் வந்து அவள் பொறுமையைச் சோதிப்பார். பிறகு வீட்டில் ‘பழையது விருந்து.’ அடுத்த வேலை ‘கடை திறப்பு.’ ஆற்று வழி தான் அவருக்கு எப்போதும் ஏற்பட்ட வழி. கடையில் அவர் அமர்ந்திருப்பதைப் பார்த்தால் திருநீற்றுப் பொலிவே ஓர் உருவம் பெற்று அமர்ந்திருக்கிறதோ என்றுதான் எண்ணத் தோன்றும். சிலருடைய ‘தயவை’ நாடி அவர் செலவழிக்கிற பணத்தை மறந்துவிட்டால், திருநீற்றுக்கெனச் செலவிடுவதுதான் ‘பிள்ளை’ வாளுக்குப் பெரிய செலவு. இந்த இரண்டு செலவினமுந்தான் அவருடைய வாணிக ‘இரகசியங்கள்’. நடுப்பகல் உணவுக்காக வீட்டுக்கு வருவார். வரும்போதும் போகும்போதும் பேராச்சியை விடமாட்டார். 

ஆறு, வீடு, கடை, ஆறு, வீடு, கடை – இதுதான் அவர் நியதி; நிலைத்த நியதி. இந்த நியதிக்கிடையே சிக்கி மூச்சுத் திணறித் திண்டாடும் நிலை பேராச்சிக்குத்தான். இயற்கை நியதியில் அவ்வப்போது ‘ கிரகணங்கள்’ ஏற்படு வதுபோலப் ‘பிள்ளை’ வாளும் மேலதிகாரிகளைக் ‘கைக்குள் போட’ப் போவார். மற்றப்படி ஒரே ஒழுங்குதான். பொழுது விடிவதும் சாய்வதும் நிலைமாறினால் இவர் நியதியும் ஒருவேளை மாறலாம். 

ஒரு திங்கட்கிழமை. வழக்கம் போலச் சாப்பாட்டுக்காக நா….பிள்ளை வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். பேராச்சி கோயிலுக்குப் பக்கம் ஆற்று நடுவில் முருகன் கோயில் ஒன்று இருக்கிறது. அதன்முன் ஒரு சிறு கூட்டம்; கூட்டம் சிறிதானாலும் ஒலி பெருகித்தான் இருந்தது. எல்லோரும் என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் சொன்னதை மற்றவர் கேட்கவில்லை; எல்லோருமே பேசினார்களே தவிரக் கேட்கவில்லை. 

அது என்ன கூட்டமென்று அறியவேண்டு மென்று நம் பிள்ளைவாளுக்குக்கூட ஓர் ஆசை எழுந்துவிட்டது. அதாவது, ஒரு வால் நட்சத்திரம் வானில் புதிதாகத் தோன்றிவிட்டது என்றுதான் எண்ண வேண்டும். நியதி பிறழ்கிறது…

“என்ன தம்பி, அங்கே ஏன் கூட்டம் கூடி’ருக்கு? ஏதாவது கிழடு ஆத்திலே வாயைப் பிளந்திருச்சா?” என்று பக்கத்தில் சென்ற ஒருவரிடம் நா….பிள்ளை கேட்டார். 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஒரு ‘பொடிப் பய’ துட்டைக் களவாண்டுக் கிட்டானாம். புடிச்சிக்கிட்டாக. போலீசுக்காரரும் வந்தாச்சி. ‘பய’ மெத்தத் துணிச்சல்காரன்தான். வாயைத் தெறப்பனாங்கான்.”

பிணங் கிடக்கும் இடத்தை யாரும் சொல்லாமலே தெரிந்துகொள்ளக் கூடிய வல்லமை பருந்துகளுக்கு உண்டல்லவா ? அதுபோலத் தான் போலீசுக்காரர் நிலையும். இங்கே ஒரு சிறுவன் காசு திருடிவிட்டான் என்பது எப்படித்தான் தெரிந்ததோ? கண் இமைக்கு முன் இரண்டு பேர் வந்துவிட்டார்கள். மூக்கு வியர்த்ததோ என்னவோ! 

பையனுக்குப் பத்து வயது இருக்கும். களையான முகந்தான். வயிறுதான் ஒட்டிக் கிடந்தது. கண் பெரிய கண்; ஆனால் ஒளியிழந்த கண். வருத்தம் அவனை விழுங்கியிருப்பது தெரிகிறது. என்றாலும் ஒரு சொட்டுக் கண்ணீர் வர வேண்டுமே….! கிடையாது. அவன் இடுப்பில் இருந்த ஒரே வேட்டி இப்போது அவனுக்கு விலங்காக மாறிவிட்டிருந்தது. மானம் காக்கத் திருடினான்; மானம் பறந்துவிட்டது. இனி வேட்டி எதற்கு? மானங் கெட்ட சமூகத்தின் சாபக் கேடாக அவன் அங்கே நின்றான். நாகரிகச் சமூகத்தினை எள்ளி நகையாடவே ஏற்பட்ட படைப்பாக அவன் அங்கே நின்றான். படித்து வளர்ந்து சமூகத்தில் பெரிய மனிதனாய் வாழ வேண்டிய அவன், மானம் இழந்து, ஆடை இழந்து-ஏன் அனைத்தும் இழந்து- அங்கே நின்றான். தண்பொருநை இந்த மானக் கேட்டைக் காண நாணி, ஒதுங்கி வளைந்து மௌனமாகச் சென்றுகொண்டிருந்தது. நெகிழ்ந்த மனம் சமூக வாழ்வுக்குச் சரியன்று என்று சொல்வதைப் போல ஆற்றை ஒட்டிப் பாறைகள்- திண்ணென்று கரடுமுரடாயிருந்த பாறைகள்—இருந்தன. அத்தகைய ஒரு பாறை மீதுதான் சமூகத்தின் மானக்கேடு– சாபக் கேடு – நாடகமாக நடந்துகொண்டிருந்தது. 

எல்லோரும் என்னென்னவோ பேசினார்கள். போலீசுக்காரர்களின் வெருட்டொலி ஓங்கிக்கொண்டே போயிற்று. ஒலி செயலாய் மாறிற்று. அடி, உதை என்ற வடிவில் போலீ சாரின் அதிகாரம் அங்கே நடனமாடிற்று. ஆனால், இந்த ஆரவாரங்க ளெல்லாம் அந்தச் ‘சின்னப் பயலை’ ஒன்றும் செய்துவிடவில்லை. வறண்டு கிடந்த அவன் கண்ணி லிருந்து ஒரு சொட்டு கண்ணீர்கூட வரவில்லை. வாய்திறந்து பேசவோ – இல்லவே இல்லை. சிறுவன் வன் கண்மையின் வடிவமாக அங்கே நின்றுகொண்டிருந்தான். சமூகத்தின் கேலிப் பிழைப்பைக் கேலி செய்வதுபோல் அங்கே அசைவற்று நின்றுகொண்டிருந்தான். 

ஆற்றில் குளிக்கப்போன ஒருவர் படிக்கட்டில் நான்கணாக் காசை வைத்துவிட்டுப் போனாராம். அதை அவன் எடுத்திருக்கிறான். பார்த்துவிட்டார்கள்.- பிறகு ஆரவாரங்களும் சடங்குகளும் ஒன்றன்பின் ஒன்றாய் வந்து விட்டன…இவ்வளவுதான் நடந்த நிகழ்ச்சி. 

நாணயக்காரப் பிள்ளை பையனைப் பார்த் தார் . நல்ல வேளையாக அவரும் ஒரு போலீசுக்காரராக இல்லை. அப்படியானால் பாறைதான் அம்மி; பையன் துவையல்தான். 

“காலம் கெட்டுப் போச்சு. பிடிச்ச பிடிக் குப் பதில் சொல்லத் தெரியாத இந்தப் பொடியனுக்கு வந்த துணிச்சலைப் பாத்தியளா? காசை எங்கெதான் வைச்சிருப் பான்? சொன்னானா இல்லையா? முழிக்கிற முழியைப் பாரு, ஆந்தைமாதிரி. பிள்ளையைப் பெத்துவிட்டானே, அவனைச் சொல்லணும், பயல் என்ன பண்ணுவான்?”

-இது பிள்ளை’ வாள் சொற்பொழிவு. பக்கத்திலிருந்தவர் ஒருவர் சொன்னார்: 

“என்னவே, ஊரிலே எத்தனையோ பேரு மொத்த மொத்தமாக் கொள்ளை யடிக்கலையா?-அதெல்லாம் மரியாதைக் கொள்ளை. அவுக செய்றதுக்கெல்லாம் என்னென்னமோ பேரு ! இந்தப் பய’ செய்ததுமட்டுந் தான் களவா? பாவம், பச்சை மதலை, எத்தனை நாள் பட்டினியோ, என்ன சங்கடமோ? இந்த நாலணாவை வெச்சு என்னென்ன செய்ய நினைச்சானே! அவன் தலைவிதி ஆப்பிட்டுக் கிட்டான். ஊரே இப்பிடித்தான். அண்ணாச்சி, போலீசுக்காரரே, உங்களைத்தானே! வயித்துக்கில்லாத கொடுமையிலே களவாண்டிருப்பான். பயலை போகச் செல்லுங்க”

-இது ஒருவர் பரிவுரை. என்ன……..! சிறுவன் கண்ணில் ஒரு சொட்டுக் கண்ணீர் ! அது வந்தேவிட்டது! இரக்கமும் இந்த உலகத்தில் உண்டா! 

“எலே, மூதி, என்னலெ அழுதுக்கிடுதியே, அழுகை வேறயா? சீ மூதி, எங்கேலெ’காசை வச்சே ” 

-இப்படியாக நாடகம் நடந்துகொண் டிருந்தது. இதையெல்லாம் பார்த்துக்கொண் ருக்க நம் பிள்ளை வா’ளுக்கு முடியுமா? 

“அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான். பயலைச் சக்கையாப் போட்டு நாலு அறை வச்சாத் தானே கக்குவான். அடிமேலே அடி வைத்தால் அம்மியும் நகரும்” 

என்று மேற்கோள்களுடன் முடிவுரை கூறி விட்டு நடந்தார். 

பேராச்சி கோயிலை வலம் வராமல் போக லாமா? “அம்மா, பேராச்சி! நாளை செவ்வாய்க் கிழமை. நாலு தேங்காய் விடலை எறிகிறேன். அந்தக் காரியம் மட்டும்….” என்று எதற்கோ நேர்ந்துவிட்டு வீட்டுக்கு வந்தார். 

அங்கே….? 

பிள்ளையவர்களை வரவேற்க ‘வாரண்டு’ காத்திருந்தது. 

என்னவோ கள்ள வியாபாரமாமே…! 

மறுநாள், செவ்வாய்க்கிழமை. பேராச்சிக்கு நான்கு தோங்காய் நஷ்டம்.

– இடமதிப்பு, முதற் பதிப்பு: 1962, மல்லிகா வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *