தோல்விதானா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 5, 2024
பார்வையிட்டோர்: 296 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  

அவன் சிற்பத் திறனின் எல்லை கண்டான். சிற்பக் கலைக்கு வரையறைகள் செய்த வல்லாளனாக விளங்கினான். சிலையைக் கலையாக்கும் வித்தகர்க்கு அவன் இட்டதுதான் பிச்சை. 

அவன் கை படைத்த அமரச் சிலைகள் எத்தனையோ… தெரியாது. ஆயிரக்கணக் கில் சிலைகளை அவன் படைத்துவிட்டான் என்று நாடெங்கும் பேசிக்கொண்டார்கள். ஆனால், அவன் செய்தனவாக மக்கள் கண்டவை மிகமிகச் சிலவே. 

அவன் கலைஞன். பிறர் யாருக்காகவும் அவன் வாழவில்லை. அவன் போக்கு ஒருவருக்கும் புரியாது. அவன் யாரிடமும் புகழை நாடிப் போகவில்லை. எவரையும் நாடவேண்டுமென்ற எண்ணம் அவன் மனத்திலே அரும்பியது கூடக் கிடையாது. அவனைப்பொறுத்தவரையில் அவன் தன்னைக்கூடப் பொருட்படுத்தினான் என்று சொல்லமுடியாது. கற்கள் உண்டு; சிற்றுளி பேருளிகள் உண்டு; அவன் கலைப் பித்தும், கற்பனைச் செல்வமும் உண்டு. அவனுக்கென்று ஒரு கூடம் உண்டு. மூதாதையர் விட்டுச் சென்ற சிறு வீடுண்டு ; அதிலே ஒரு சிறு அறை; அது தான் அவனுக்கு உலகம்; அங்கே சில சிலைகள் – கலையின் அசையா அவதாரங்கள். அந்த அறையில் நுண்கலையானது கண்ணுக்குத் தெரி யும்படி பருவுருவம் பெற்றுத் திருவோலக்கம் கொண்டிருந்தது. 

புகழிலே நாட்டமில்லாத அவனை எந்தச் சமஸ்தானாதிபதியும் ஆஸ்தானச் சிற்பியாக நியமிக்கவில்லை. ஆஸ்தானச் சிற்பிகள் எவரும் அவனை நாடி வரவுமில்லை. பயித்தியக்காரன் என்பது அவர்கள் முடிவு. ஏதோ, உள்ள திறமையை மற்றவர்க்குக் காட்டிப் புகழுடல் நிறுவி, பொன் பொருள் சேகரித்து, பொன்னும் புகழும் புடை சூழக் கலைமகளைச் சித்திரமாக்கும் ‘பெருமை’யைப் பெரிதாக மதித்த அவர்கள் போக்கு வேறு ; தன்னையே ஒரு பொருட்டாக மதிக்காமல், கலைத் தேவதைக்கு உள்ள பசியைத் தன் கற்பனையால் தீர்க்க முனைந்து, கனவுலகில் வாழ்ந்து, யாவும் மறந்து ‘மயங்கி ‘ இருக்கும் இவன் போக்கு வேறு. 

அவர்களும் சிற்பிகள். இவனும் சிற்பி. ஆனால், அவர்கள் ஒரு போக்கு; இவன் ஒரு போக்கு. 


மன்னன் ஒரு பௌத்தன். செல்வம் மலிந்த அந்த நாட்டிலே அவன் ஆதரவைப் பெறத துறை இல்லை. கலை என்றால் மன்னனுக்கு மிகவும் பித்து என்று சொல்லிக்கொண்டார்கள். அவன் தந்த கொடைகளைக் கல்லில் செதுக்கிவைத்த சிற்பிகள், அவனுக்குச் ‘சிற்பச் செல்வம்’, ‘கற்பனைக் களஞ்சியம்’, ‘கலைவெறி ஏறிய காவலர் ஏறு’ என்றெல்லாம் பட்டங்கள் தந்தனர். மன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. புகழ் அவனை நாடிற்று; அவன் புகழை நாடினான். பொருளெல்லாம் அவன் ஆதிக்கத்துக்கு அடங்கியது ; பொருள் புகழைத் தேடி வந்தது; புகழ் பொருள் வலையில் சிக்கிற்று. கடைசியில் மன்னவனுடன் அரியாசனம் ஏறி விட்டது. அரசன் புகழாய்விட்டான். அரசன் ஒரு மனிதன் என்பதையே யாவரும் மறந்து விட்டார்கள். அப்படிப்பட்ட பண்பினன், இப்படிப்பட்ட சிறப்பினன் என்றெல்லாம் பண்பியாகக் கண்டார்கள். அவன் பண்புகளின் உறைவிடமாக இருந்தான்; அவன் அவனாக இல்லை. 

அவனுக்கே ஓரொரு நாள் வியப்பாக இருக்கும். “நமக்கு என்ன தெரியும், நம்மை ஒரு கலைப் பித்தன் என்று சொல்லுகிறார்களே”  என்று அவன் நினைப்பான். ஆனால், இனி அவன் என்ன செய்ய முடியும்? அவன் ஒரு கலைப்பித்தன்தான். 

பொருள் அவனை ஒரு கலைப் பித்தனாக ஆக்கிவிட்டது. 


வைகாசி விசாகம் வரப் போகிறது என்றால் அந்த நாட்டிலே ஒரே உற்சாகமாக இருக்கும். புத்தர் பெருமான் திருநாளாகிய அன்றைய நாளில் பெரிய திருவிழாக் கொண்டாடுவார்கள். மன்னவன் தன்னை மக்கள் தலைவனாகக் கருதாமல் தானும் மற்றவர்களைப்போல் புத்தர் பெருமானின் அடியவன் என்று நினைத்து நடக்கும் நாள் அந்த நாள்…. 

அந்த ஆண்டு நடைபெறப் போகும் விசாகத்திருநாளில் அந்த நாட்டுச் சிற்பி ஒவ்வொருவனும் புத்தர் பெருமானின் சிலை ஒவ்வொன்று செய்துகொண்டு வரவேண்டும். இது மன்னன் இட்ட கட்டளை. ஓராண்டுக்கு முன்னரே இடப் பட்ட இந்தக் கட்டளையை நிறைவேற்ற ஒவ்வொரு சிற்பியும் முனைந்து நின்றான்; அரும்பாடு பட்டான். மற்றச் சிற்பங்களைக் கவனியாமல் புத்த விக்கிரகத்தையே ஒவ்வொரு சிற்பியும் கவனித்தான். அரும்பாடு; பெரு முயற்சி. 

தனிமையில் திளைக்கும் சிற்பிக்குப் ‘புத்தர் சிலை- வைகாசி விசாகம்மன்னன் கட்டளை ‘ என்ற சொற்கள் எட்டின. மன்னவன் கட்டளை என்னவென்று தெரியாது ; வைகாசி விசாகம் என்னவென்று தெரியாது. 

புத்தர்-சிலை…
புத்தர் சிலை..
புத்தர் பெருமான் சிலை… 

இவ்வளவுதான் அவனுக்கு விளங்கிற்று.

புத்தர்—அவர் எப்படி இருந்திருப்பார்?

சித்தார்த்தராக–அரச குமாரராக–எங்கள் பெருமான் எப்படித் தோற்றம் அளித்திருப்பார்? 

இந்தக் கேள்விதான் அவன் கற்பனையைக் கிளர்ந்தெழச் செய்தது. கற்பனை எத்தனையோ விடைகள் தந்தது. 

ஒவ்வொரு விடையையும் நன்றாக எண்ணி எண்ணிப் பார்த்தான். கடைசியாகப் புத்தரைச் சித்தார்த்தராக்கும் முயற்சியில் தன்னை ஒப்ப டைத்தான்; தன்னை மறந்து ஈடுபட்டான். 

சிற்பக் கலையில் இணையில்லாத அந்தச் சிற்பி, சிலைக் கலையின் செங்கோலன், அவன் தோற்றான் – தோற்றுப் போனான். 

ஒரு முறையா ? இரு முறையா? பலமுறை தோற்றுவிட்டான். 

அவன் யாருக்கும் தோற்கவில்லை. அவ னுக்கு அவனே தோற்றான். அவன் படைத்த கலை அவனுக்குத் திருப்தியளிக்கவில்லை. ஒவ் வொரு முறையும் அவன் மனம் ‘நீ தோற்றாய்: உன் திறமை தோற்றது. நீ சிற்பியே அல்ல ; உனக்கும் சிற்பத்துக்கும் வெகு தொலைவு என்றுதான் சொல்லிற்று. 

வைகாசி விசாகம் வந்துவிட்டது. அரண் மனையின் ஒரு பக்கத்தி லிருந்த கலைமன்றம் முழுவதும் புத்தர் பெருமானின் சிலைகளால் அணிபெற்று விளங்கிற்று. மன்றத்து வாயிலில், 

“வாடாப் போதி மரகதப் பாசடை 
மரநிழல் அமர்ந்தோன் நெஞ்சம் யார்க்கும்
அருளின் தீந்தேன் நிறைந்துநனி நெகிழ்ந்து
மலரினும் மெல்லிது என்ப…” 

என்ற வரிகள் அழகாக எழுதப் பெற்றிருந்தன. மன்றத்துள் நுழைவோர் யாவரும் அந்த வரிகளைப் படித்தே சென்றனர் ; மலரினும் மெல்லிதான உள்ளத்தைத் திறம்பட வெளிப்படுத்திய சிற்பிகளின் திறமையைப் புகழ்ந்து கொண்டே ஒவ்வொரு சிலையாகப் பார்த்தனர். ஒன்றைவிட ஒன்று. மேம்பட்டது என்றே தோன்றிற்று. அருளின் தீந்தேன் நிறைந்து வழியும் அந்தப் புத்த அமுது ஒவ்வொரு சிற்பியின் படைப்பிலும் நிறைந்திருந்தது. 

அந்த மன்றத்தில் ஒரே குறை: அவன், புகழ் பெற்ற – அந்தச் சிற்பியின் சிலைமட்டும் அங்கே இல்லை. 

ஏன் என்று ஒருவருக்கும் தெரியவில்லை. கடைசியில் மன்னவன் தன் ஏவலரைச் சிற்பியிடம் அனுப்பினான். 

அவர்கள் வந்து சொன்ன செய்தி மன்னனைத் திடுக்கிடச் செய்தது. 

அவனே நேரே போய்ப் பார்த்துவரப் புறப்பட்டான். மன்னனுடன் வயது முதிர்ந்த அமைச்சரும் சென்றார். 

சிற்பியின் வீட்டை அடைந்தனர். அவனுடைய கலைக் கூடத்தை நாடிச் சென்றனர். 

அந்தக் கூடத்தில் புத்தர் பெருமான் சிரங்கள் பல உருண்டு கிடந்தன. அருளொழுகும் வதனங்கள்-முடிதரித்த புத்தரின் திருவுருவங்கள். 

அவை ஒரு விளக்கமும் தரவில்லை. சிரசில்லாமல் பல உருவங்கள் அங்கே நின்றன. அந்த உருவங்கள் மன்னரின் கோலத்தில் அமைந்திருந்தன. 

அரசனும் அமைச்சரும் கூடம் முழுவதும் சுற்றிப் பார்த்தனர். இதே மாதிரியான பல முண்டங்கள் – பல தலைகள். 

ஒரு மூலையில் சிற்பி மனமிடிந்து அமர்ந்திருந்தான். அரசன் வந்தது அவனுக்குத் தெரியாது; அமைச்சர் வந்ததும் தெரியாது. 

அவனைத் தன் நினைவுக்குக் கொண்டுவர அமைச்சர் வெகு பாடு படவேண்டி யிருந்தது. அவன் முனகியதி விருந்து வந்தவர்கள் தெரிந்து கொண்டது இதுதான்: 

புத்தர் பெருமான் அரச போகத்தில் இருந்தபோது எவ்வாறு தோற்ற மளித்திருப்பாரோ என்ற எண்ணத்தைச் சிலையாக வடிக்க அவன் பல முறை முயன்றான். 

ஆடை அணிகளால் மன்னராக ஆக்க முடிந்ததே ஒழிய, முகத்தில் அருள் பொழிய வாழ்ந்த புத்தரை, அரச போகத்தில் ஆழ்ந்த செல்வராகக் காட்ட அவனால் முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அரச கோலத்திலிருந்த ஒரு முனிவர் பெருமானைக் கண்டானே ஒழிய, தான் கற்பனை செய்துவைத்திருந்த அரச மகனைக் காண முடியவில்லை. 

கடைசியில் என்ன? அவனுக்குத் திருப்தியில்லை ; அவன் மனம் அமைதியடையவில்லை. 

அமைச்சர் அரசனிடம் சொன்னார் : “புத்தர் பெருமான் பிறந்தபோதே புத்தராகத்தான் பிறந்தார். சித்தார்த்தராக வளர்ந்த போதும் புத்தராகத்தான் வளர்ந்தார். அவர் அரசபோகத்தில் தம்மை மறந்து ஈடுபட்டு மூழ்கிப்போய் என்றுமே வாழ்ந்ததில்லை. கலை, என்றும் உண்மையில்லாததைப் படைத்துவிட முடியாது. இல்லாததைப் படைக்க முயன்ற சிற்பி தோற்றான்; இவன்தான் சரியான கலைஞன். ஏனென்றால் என்னதான் வலிய முயன்றும் உண்மையையே அவன் கைத்திறன் வெளிப்படுத்திற்று.” 

அமைச்சர் சமாதானம் கூறினார்; அரசன் ஏற்றுக்கொண்டான். ஆனால், சிற்பிக்கு இவர்கள் பேச்சு ஒன்றும் தெரியாது. அவனைப் பொறுத்தவரையில் தோற்றுவிட்டதாகத்தான் முடிவு செய்துவிட்டான். உளியைக் கையிலெடுத்த நாள் முதலாகத் தோல்வியை அறியாதவன் தோல்வியின் முதற் காட்சியால் சிலையாய்ச் சமைந்துவிட்டான்.

– இடமதிப்பு, முதற் பதிப்பு: 1962, மல்லிகா வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *