(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பசும் பூங்கா என்றும் தர்ம தேசம் என்றும் பெயர் பெற்றதெல்லாம் பழம் கதையாகி,மரணப் படுகுழி என்று உரைக்கத்தக்கதாகி அவலப்படுகின்ற மாணிக்கபுரி. மாணிக்கபுரி நாட்டின் குணதிசை அங்கத்தின் அழகிய பாறை எனப் பெயரிய ஜில்லாவின் வனப்புமிக்க கடற்கரை, பொங்கும் அலைகள் கொஞ்சிமகிழும் மருதமூரின் பொன் மணல் திட்டு. பூரண சந்திரன் பொழியும் அந்தக் குளிர் நிழலிரவில், மருதமூரின் கடற்கரை மகா சௌந்தர்யமுற்றுக் கிடந்தது.தளைத்து வளர்ந்த தாழை மரங்கள் பல இடங்களில் சிறுதோப்பாக கிடந்தன. ஒரு தாழந் தோப்பின் மிக அருகில் அந்தத் தவக்கோலம் காட்சியளித்தது.
தவக்கோலத்திற்குரிய அடையாளங்களான சடாமுடி, சடைத்த நெடுந்தாடி, மெலிந்த மேனி, துவராடை, கைதாங்கு கோல், பக்கத்தில் கமண்டலம்… ம்ஹும்… எதுவுமில்லை. சூபிகளின் சங்கதிகளான பச்சைத் தலைப்பாகை, பச்சை ஜுப்பா, கம்பளிப் போர்வை … ம்ஹும்… அவையுமில்லை.
மறுகா? அடுத்தபடி தவக்கோலம்? கைவிரல்களாலோ, விறைப்பான தூரிகையாலோ குழப்பி விட்டதைப்போல நெற்றியில் படிந்து கிடக்கும் அடர்ந்த கருமுடி. அடித்தாலும் உதைத்தாலும் அகலமாட்டேன் என அடம்பிடிக்கும் வாலிப மிடுக்கு கவிந்த முகம். முழங்கைக்கு மேல் மன்னிவிடப்பட்ட விலையுயர்ந்த சேட், விலையுயர்ந்த காற்சட்டை, பட்டியணிந்த இடை, பக்கத்தில் பாத்றூம் பாட்டா, ஒவியத்தில், எழுத்தணியில், கவிதையில் மாத்திரம் தானா மொடனிட்டி, தவக்கோலத்தில் இருந்தால் எந்தக் குடி கெட்டுவிடும்? பத்மாசனத்தில் அல்லது அத்தஹியாத்து இருப்பில் இருந்துதான் யோகமுத்திரை காட்டவேண்டுமோ? அவசியமில்லை என்பது போல கால்களை நீட்டி வலக்கை பிடரியைத் தாங்க கடிகாரம் அணிந்த இடது கை தொடையை நீளமருவ ஒருங்கணித்துக் கிடந்த தவக்கோலம் அது. மூடிய கண்கள் ஆழ்ந்த சிந்தனையின் வயப்பட்ட நவீன தவக்கோலம்.
கடற்கரை மணலின் மெத்தென்ற சுகமும், கடற் காற்றின் வெதுவெதுப்பான தழுவலும், மடல் பெரிய தாழம் பூக்களின் சுகந்தமும், கனிந்து பாணி சிந்திக் கொட்டிக் கிடக்கும் மனதுக்கினிய தாழம் பழ மணமும், பூரண நிலவின் பால் மழையும் எந்தப் பாதிப்பையும் யோகியில் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.
பூரணை என்றால் கடல் பொங்கும். அலைகள் எழுந்து மடிந்து மோதி முழங்கின. தாழை மணத்தால் பூநாகம் எங்கிருந்தும் ஓடிவரும். பூநாகம் ஒன்று மிக அருகில் ஊர்ந்து சென்றது. நண்டுகள் வந்து பாதங்ககளைத் தொடப் பார்த்து தொடாமல் திரும்பின. எட்ட நின்ற ஆலமரக் கிளைகளில் ஒரு சோடி ஆந்தைகள் அலறி மரண பயத்தை விதைத்தன. மஞ்சை இழுத்துக் கொண்டு அலைந்த கவுசுப் பேய்களுக்கும், எதிரும் புதிருமாக வந்த மாடன்களுக்கும் சண்டை மூண்டதற்கான சந்தடியும் கேட்டது.
இந்த ஆரவாரங்களுக்கெல்லாம் அலையாத புலக் கட்டுப்பாட்டு வைராக்கியத்துடன் யோக நிலை நீடித்தது.
“ஆ….. ஹஹ்…… ஹஹ்……ஹா!”
“ஆ…… ஹஹ்…… ஹஹ்……ஹா!”
“ஆ….. ஹஹ்…. ஹஹ் ஹா!!!”
கிட்டத்தட்ட ஒரு பேய்ச்சிருப்பு. எல்லா ஆரவாரங்களையும் அடித்து வீழ்த்துவது போன்று, ஓங்காரங் கொண்டொலித்த அப்பெரும் சிரிப்பு மூன்று முறை ஒலித்தது. முதலாம் முறையைவிட இரண்டாம் முறையும், இரண்டாம் முறையைவிட மூன்றாம் முறையும், சிரிப்பின் ஓங்காரச்சுருதி கூடி ஒலித்தது.
தழையத் தூக்கி விடாமல் குந்தினால், உடுத்திருக்கும் பழைய சாறன் பின்பக்கமாகப் ‘பராக்’ கென்று கிழிவது போல யோகம் சட்டென்று கலைந்தது. இமை திறந்து பார்த்தபோது ஆச்சரியம் காத்திருந்தது. அச்சம் உலுக்கியது. நா வரண்டது. உடம்பு உதறல் எடுத்தது, மேல் கணகணத்தது. சன்னி வரும்போல் இருந்தது.
‘அச்சம் தவிர்க! ஆண்மை தவறேல்!! தைரியமது கைவிடேல்!!!! வார்த்தைகள் சந்தமாக ஒலித்தன. மெல்ல மெல்ல அச்சம் விலக, உதறல் தணிய, சற்றே தைரியம் பிறக்க, ‘நான் ஆண் மகன் தானே!’ என்ற ஓர்மமும் பிறந்தது. எதிரே நின்ற உருவத்தைப் பார்க்கவும் முடிந்தது. மெல்ல எழுந்து ஒட்டியிருந்த மணலைத் தட்டி விட்டு நிமிர்ந்து நின்றார் யோகியார்.
‘என்ன உருவமிது? பத்துமுழம்? ம்ஹ்….. இருபது? இருக்க முடியாது. நாற்பது? இருக்கலாம்’ நாற்பது முழ அவுலியா என்பதெல்லாம் வெறும் ‘றீல்’ அல்ல என்ற நிச்சயம் பிறந்தது. வெண்தாடி, தலைப்பாகை, நீண்ட அங்கி, அங்கி என்ன கலர்? பச்சையாகத்தான் இருக்க வேண்டும். நிலவொளியில் சரியாக நிறம் காட்டவில்லை.
‘நீர் யார்? ஆண்டவனா? மலக்கா? அவுலியாவா?’
“ஆண்டவனை அவ்வளவு சிம்பிளாக நினைக்கக் கூடாது. மலக்கு முகாந்திரம் காணாது. பாமரர்களின் நேர்ச்சைகளை செவிமடுப்பதற்கே அவுலியாவுக்கு நேரம் பத்தாது.”
“அப்படியானால்……..?”
“மனச்சாட்சி”
“யாருடைய மனச்சாட்சி”
“உண்மையின் மனச்சாட்சி”
“உண்மைக்கு, அதன் மனச்சாட்சிக்கு உருவம் எப்படி வரும்? இதுவரை கண்டதில்லையே!”
“காணாததெல்லாம் இல்லையென்றாகுமா? காற்றை, மின்சாரத்தை, ஒலியலையைக் காண முடியுமா? உமது புலன்களுக்கு எட்டாதவை. ஏன் உனது சிந்தனைக்கே எட்டாதவை, எவ்வளவோ உண்டு. மறைவானவற்றை நம்ப பக்குவம் வேண்டும். ஞானம் வேண்டும். கலப்பறுதல் அற்ற விசுவாசம் வேண்டும்”.
“என்னென்னவோ சொல்லுறீரே!”
“என்னென்னவோ அல்ல உண்மையான உண்மைகளைச் சொல்கிறேன். அதிருக்கட்டும் கவலை கொண்டவராய் தெரிகிறாய் அறியலாமா?
“எனது ஜில்லாவின் அரசியல் பற்றிய கவலை எனக்கு”
“ஹஹ்ஹஹ்ஹா…”
“அது சாக்கடை. அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம். சுயநலமிகளின் சூதாட்டக் களம், ஏமாற்றுபவர்களின் நீச்சல் குளம் என்றெல்லாம், மனிதர்களே சொல்லி வைத்திருக்கிறார்களே!”
“ஆர் என்ன சொன்னாலும், அரசியல் இல்லாமல் உலகத்தில் ஒன்றும் நடக்காதே. அரசியலைப் பற்றி யோசிக்காமல் எப்படி இருக்க முடியும்?”
“யோசிக்கத்தான் வேணும். ஆனாலும் இந்த நடு ராத்திரியில், சூழ்ந்த உயிராபத்துகளையும் சட்டை செய்யாமல் நிஷ்டையில் இருப்பதா? வலமும் இடமும் சுடுகாடு. நடுவில் நடுவில் மையத்துப்புட்டி, சுடலை மாடன்களும், கவுசுப்பேய்களும் ஊர்கோலம் வரும்வேளை, பூநாகம் கூட உன்னைக் கடந்து போயிற்று. நீ என்ன எலக்சன் கேக்கிற ஆளா?”
“ஐயையோ! அப்படியெல்லாம் இல்லை. நான் வாக்காளன், அவ்வளவுதான். அதுவும் ஒட்டக வம்சத்தவன். இந்த அழகிய பாறை ஜில்லாவிலே ஒட்டகை வம்சத்தவர் பெரும்பான்மையாகி இருந்தோம். வேங்கைப் பரம்பரையினர் சிறுபான்மையினர். ரெண்டு திறத்தாரும் நீண்ட காலமாகப் புட்டும் தேங்காய்ப் பூவும் போல ஒற்றுமையாய் இருந்தோம். இந்த முழு நாட்டையும் சிங்க குலத்தவர்கள் கட்டியும் குட்டியும் ஆளுறாங்க. அவங்கட ஆக்கள் இந்த அழகிய பாறைப் பிரதேசத்திலே அடர்ந்தேறிவந்து குந்திட்டாங்க. இப்ப எங்களை விட அவங்க கொஞ்சம் பெரும்பான்மை ஆகிட்டாங்க”.
“ஐசி…அதுக்கும் உம்முடைய கவலைக்கும் என்ன சம்மந்தம்?”
“சம்மந்தம் இருக்குதே! இந்த மாணிக்கபுரி பல நாடுகளாக இருந்த காலத்தில், சிங்க ராசாக்களும், வேங்கை ராசாக்களும் ஆண்டு வந்தாங்க. பிறகு செவல ராசாக்கள் வந்து ஒரே நாடாக்கிக் கொஞ்சக்காலம் ஆண்டாங்க. செவலையர்கள் மூட்டை கட்டினப்புறம், நாட்டத் துண்டுகளாக்கி, துண்டுக்கொரு சின்னராசாவ சனங்கள் குடவேலைபோட்டு தெரிவு செஞ்சாங்க. தெரியப்பட்ட சின்னராசாக்கள் குட நகருக்குப் போய் நாட்டு மக்களை ஆழத் தொடங்கினாங்க.
நாங்க முந்தி மீனாடு ஜில்லாவாசிகளாக இருந்தம்.பாறையூர்த் துண்டு, சித்தன் குலத்துண்டு எண்டு ரெண்டு துண்டு இங்கே உருவாக்கினாங்க. இந்த ரெண்டு துண்டில இருந்தும் ஒட்டகச்சாதியைச் சேர்ந்த சின்ன ராசாக்கள் ரெண்டு பேரைத் தெரிஞ்சி குடநகருக்கு அனுப்பி வந்தம்”.
யோகியார் இந்த இடத்தில் நிறுத்தி ஒரு பெரிய மூச்சு விட்டார். அவர் கண்கள் பனித்தன, வாய் குழறல் எடுத்தது. இதைப் பார்த்த நாற்பது முழத்தார் ஆறுதல் கூறினார்.
“ம்…. கண்ணைத் துடைச்சிட்டுப் பேசுங்க”.
“அதுக்கு அப்புறம் தான் படுவான் பக்கமாக் காட்டஅழிச்சி என்னென்னமோ செஞ்சி சிங்க குலத்தாக்களை கொண்டு வந்து சேர்த்தாங்க. அதுக்குப்பிறகு மீனாடு ஜில்லாவிலே இருந்து எங்களைப் பிரிச்சி அழகிய பாறை ஜில்லா எண்டு நாவாக்கினாங்க. படுவானில ஒரு துண்டும் எழுவானில் ரெண்டு துண்டும் உண்டாக்கினாங்க. அப்ப என்ன நடந்திச்செண்டா, படுவான் துண்டில் சிங்ககுல சின்னராசா ஒருவர் தெரிவானார். எழுவானில் ஒட்டக வம்ச சின்னராசாக்கள் ரெண்டுபேர் தெரிவானாங்க.பிறகு ஒரு கட்டத்திலே எழுவானை மூணு துண்டாக்கினாங்க. மூணு ஒட்டக வம்ச சின்னராசாக்களும், ஒரு வேங்கைப் பரம்பரைச் சின்னராசவும் தெரிவானாங்க”.
மீண்டும் இடைநிறுத்தம். மீண்டும் பெருமூச்சு, மீண்டும் சிறு கண்ணீர், நாற்பது முழத்தார் ஆறுதல் அளிக்க பேச்சுத் தொடர்ந்தது.
“அதுக்குப் பிறகு வந்திச்சிங்க மாராயம். ஒரு ஜில்லாவை ஒரு தேர்தல் துண்டா மாத்தினாங்க. அழகியபாறை ஜில்லாவும் ஒரு தேர்தல் துண்டாகியது. அதிலிருந்து கொண்டாங் கௌச்சனா ஆறு சின்ன ராசாக்களைத் தெரிவு செய்ய வேணும். கட்சிகளில் ஆக்கள் போடுவாங்க, சனங்க கட்சிக்கும் குடவோலை போட்டு, கட்சியில நிறுத்தின ஆக்களுக்கும் குடவோலை போடணும். கட்சிக்கு கிடைக்கிற குடவோலையின்படி சின்னராசாக்கள் தொகை அமையும். அந்தக் கட்சியிலேயும் கூடின குடவோலை எடுத்தவங்கள்தான் சின்ன ராசாக்களாகவும் ஆகுவங்க. இதுபோக நாட்டுப் பட்டியல் எண்டும் ஒரு சங்கதி. அதில இருந்தும் ஒவ்வொரு கட்சிக்கும் சின்னராசாக்கள் ஒதுக்குவாங்க”
“என்ன யோகியாரே லாடாச்சங்கிலி மாதிரிக் கிடக்கு நீ சொல்லுறது, ஒண்டும் வெளப்பமாகுதில்லை தலைசுத்துது”.
“தலைச்சுத்து உங்களுக்கு மாத்திரமா? இந்த நாட்டில உள்ள எல்லாருக்கும் தலைசுத்துத்தான். அதிலேயும் அழகியபாறை ஜில்லாவிலுள்ள ஒட்டக சம்சத்தாருக்கு ஏற்பட்டிருக்கிற தலைசுத்துக்கு மருந்தே கிடைக்குதில்லை”.
“ம்…. மேலே சொல்லும்”
“இந்த நாட்டிலே சிங்கங்களுக்கு ஆண் சிங்கக் கட்சி, பெண் சிங்கக் கட்சி என்று பெரிய கட்சிகள் ரெண்டு. இந்தக் கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வரும். அதனால், எங்க நாட்டிலுள்ள ஒட்டக வம்சத்தாக்கள் இந்த இரண்டு கட்சிக்கும் குடவோலை போடுவாங்க.”
“ம்……. சோக்காரிக்கி…”
“சிங்கக் கட்சிகள் மாறிமாறிச் செஞ்ச சிறுமானியங்களால வேங்கைப் பரம்பரைக்கும், ஒட்டக வம்சத்துக்கும் ஏகப்பட்ட கஸ்டங்கள் நஸ்டங்கள். இதனால் வேங்கைப் பரம்பரையாக்கள் தங்களுக்குள் கட்சிகள் அமைத்து அவங்க விமோசனத்துக்காக போராடி வந்திருக்காங்க, வர்றாங்க. ஒட்டக வம்சத்தாக்களையும் முன்னோட்டமான ஆக்கள் தங்களுக்கும் கட்சி வேணுமெண்டு யோசிச்சி, ஒட்டகக் கட்சி ஒன்றைத் தொடங்கினாங்க….”
“பேஷ்….பேஷ்…”
“ஜில்லா வாரியக் குடவோலை போடுகிற கஷ்டம் வந்திச்சிங்க.”
“அடிசக்கையெண்டானாம் சிங்கங்கள் சிங்கக் கட்சிகளுக்கு பிரிஞ்சி போட்டிருப்பாங்க. வேங்கைகள் வேங்கைக் கட்சிகளுக்கு பிரிஞ்சி போட்டிருப்பாங்க. ஒட்டகங்கள் ஒட்டகக் கட்சிக்கு ஒட்டுமொத்தமாகப் போட்டிருப்பாங்க. ஆவ்டா மைனா! ஒட்டக ராசாக்களாகவே வந்திருப்பாங்க என்ன? ஐசம்மாக்குண்டு, வாழக்காத்தண்டு”.
“அதுதான் நடக்கலை. ஒட்டகையர்கள் ஒட்டகை அணிக்கு கூடத்தான் போட்டாங்க. கணிசமான ஒட்டகர்கள் ஆண் சிங்க பெண் சிங்கக் கட்சிகளுக்கும் போட்டாங்க. அதனால ஆண்சிங்க சின்னராசாக்கள் மூணுபேர், பெண் சிங்க சின்னராசா ஒருவர், வேங்கைச் சின்னராசா ஒருவர், ஒட்டகக் கட்சி சார்பில் ஒட்டகச் சின்னராசா ஒருவர் எண்டுதான் தெரிவானார்கள்.”
“அடப்பாவமே! புத்திமான் பலவான், புத்தி இல்லாதவன் அழிவான். பிறகு….”
“அடுத்த குடவோலைத் தேர்விலும் கதை இதுதான்.ஒட்டக வம்சத்தார் ஒட்டக கட்சிக்கு முன்னைய விட கொஞ்சம் கூடப் போட்டார்கள்.”
“அட நத்தை கொஞ்சம் நடந்திருக்கு”
“கணிசமான ஓலைகளை ஆண் சிங்கக் கட்சிக்கும் போட்டாங்க.”
“ம்…. அப்புறம்?”
“ஆண் சிங்கக் கட்சிக்கு மூணு சின்னராசாக்கள். பெண் சிங்கக் கட்சிக்கு ஒரு சின்னராசா, ஒட்டகக் கட்சிக்கு இரு சின்னராசாகள்”
“பரவாயில்லையே “
“என்ன பரவாயில்லை? வேங்கைப் பரம்பரை ஓலைகள், வேங்கைக் கட்சிகளுக்குள் பிரிந்தன. ஆண் சிங்கக் கட்சிக்கும் கொஞ்சம் விழுந்தன.
“அதனால அவங்களுக்கு ஒண்டுமில்லையாக்கும்”
“அதுதான் நடந்தது. அவர்களுக்கு வேங்கைராசாவுக்குரிய வாய்ப்பு தவறியதாலதான் ஒட்டகக் கட்சிக்கு இரண்டாவது சிங்கராசா கிடைத்தார்.”
“சிக்கலோ சிக்கல். அதுசரி ஆண்சிங்கக் கட்சியில ஒட்டகங்கள் கேட்கலையா?’
“கேட்டாங்கதான்”
“ஆண் சிங்கக் கட்சி சார்பா ஒட்டக வம்ச சின்னராசாவுக்கு சாண்ஸ் இல்லாமப் போச்சேன்ன? ஒட்டக வம்சத்தார் ஆண் சிங்கக் கட்சிக்கு ஓலை போட்டதோட அந்த அணியில் கேட்ட ஒட்டகங்கள் இரண்டு பேருக்காவது விருப்பு ஓலையைக் கூட்டிப் போட்டிருக்கலாமே!”
“அறுவான்கள் அதைச் செய்ய மாட்டானுகள்!”
“ஏன்?”
“இங்க, தோணித்தறையூர், பாறைக் குடியூர், நிமிர்ந்த மரத்தூர், வந்தவூர், செங்கொடித்தீவு என்பன பெரிய ஒட்டகை ஊர்கள், சித்தன்குளம், பரண்தோட்டம், மருதமூர் என்பன அவ்வளவு பெரிசுமில்லை அவ்வளவு சிறிசுமில்லை. இவை போக 3ம் தர, 4ம் தர, 5ம் தர ஆட்பலம் கொண்ட சின்ன ஊர்களும் உண்டு. பெரிய ஊரான் மத்தப் பெரிய ஊரானுகளுக்குப் போடமாட்டானுகள். குடவோலை கேட்கிறவன் போட உடமாட்டான். ஆளை ஆள் வெல்ற புத்தி. நீயா நானா என்கிற பறி. சிங்க குலத்தான் புத்திசாலி. மூணு ஓலையையும் மூணு சிங்கத்துக்கு பிரிச்சிப்போட்டு காரியத்தைக் கச்சிதமா முடிச்சிட்டானுகள்”.
“ஒட்டக வம்சத்தார், சகோதரத்துவ உணர்வு மிக்கவர்கள். உயர்வுதாழ்வு பேசாதவர்கள். அல்லாவுக்கு முன்னால எல்லாரும் சமம் என நினைக்கிறவர்கள் ஆயிற்றே!”.
“அதெல்லாம் ஏட்டிலும் மேடையிலும் தான். ஓடையிலே விரால், கொறட்டை, கச்சப் பொட்டியான், மாங்கான், சுங்கான், பனையான், கெழுத்தி மீசைக்காரன், செப்பலி, விலாங்கு, என்டாப்போலதான் இவனுகள். பெரிய ஊரான் சின்ன ஊரான் எண்ட ஏற்ற இளக்காரங்கள். விரால்களுக்குள்ளேயும், திருவிரால் சிறுவிரால் என்ற வேறுபாடு”.
“அடேங்கப்பா! இவ்வளவு சங்கதிகள் மலிஞ்சி கெடக்கா இங்க?”
“சும்மா சொல்லப்போடா. ஒட்டகக் கட்சி, இந்த ஊர்க்கோட்டை கருங்கல் சுவர்களில் கொஞ்சம் வெடிப்பை உண்டாக்கிரிக்கி”.
“பிறகென்ன அடுத்தமுறை ஒட்டகக் கட்சிக்கே ஒட்டு மொத்தமா ஓலையைப்போட்டு வேலையை முடிக்கிறதானே.!”
“அதுக்கும் சான்ஸ் இல்லை”
“என்ன இளவுடா இது? ஒரு பாசைக்கும் இணங்காட்டி எப்பிடி? அதுசரி, ஏன் சான்ஸ் இல்லை? இனம் இனத்தோடதானே சேரணும்!”
“பானையும் கிடச்சி பானைக்குள்ள கொஞ்சம் சோறும் இருக்கென்று வைச்சிக்குவம். பிள்ளைகளோ அதிகம். பசி தங்காது துடிக்கிற பிள்ளைகளுக்கு ஆளுக்கொரு கவளம் கொடுக்கக்குள்ளே சோறு முடிஞ்சி போகுது. ஒரு கவளமாவது கிடைக்காததற்கு ஒன்றுமே கிடைக்கவில்லை என்ற தாபம், ஒண்டு கிடைச்சதற்கு இன்னும் ஒன்பது கிடைக்கவில்லையே என்ற கோபம்”.
“அதனால அல்லசெல் ஊட்டுப் பானைகளைப் பார்த்து ஓடப் பாக்குதுகளாக்கும்”
“சிங்கங்கள் ஆளக்க இப்படியான பிரச்சினைகள் வாறல்லையா?”
“அங்கேயும் இதுதான் கதை ஆண் சிங்கங்களும் பெண் சிங்கங்களும் மாறி மாறி தட்டு மாறுவதற்கு இதுதானே காரணம். அதுமட்டுமில்லை, ஆண் சிங்க்கமெண்டா பெண் சிங்கத்துக்குப் பொறி. பெண் சிங்கமெண்டா ஆண்சிங்கத்துக்கு குழி. படு முஸ்பாத்திதான்.”
“நீர் எதையாவது எதிர்பார்த்து ….. ஏமாந்து…”
“எனக்கு எந்த எதிர்பார்ப்புமில்லை”
“அப்ப உடு ஓணான் ஆண்டா என்ன! உக்குளான் ஆண்டா என்ன, சிங்கம் வெண்டா என்ன, ஒட்டகம் விழுந்தா என்ன போயுன் வேலையைப்பாரும். எட்டப் போச்சிதே பூநாகம், கிட்டவந்திருந்தா? நாளைக்கு நீ மண்ணறையின் தட்டுகளுக்குள் மறைந்திருப்பாய். மரித்தோர் பட்டியலில் சேர்ந்திருப்பாய். அல்லாஹ்வின் படைப்புகளான, சங்கைவான்களான பிரமாண்டமான இரு மலக்குகளின் கேள்விகளுக்கு, திடுக்கிடாமலும், அச்சம் தவிர்ந்தவனாய், உனது நாகரீகமான நளினமான நாவால் மறுமொழி சொல்லுவாய். உலக வாழ்க்கை ஏமாற்றுச் சரக்கேயன்றி வேறில்லை என்பதை உண்மையான சொல்லைக் கொண்டு நிலைநிறுத்தி இருப்பாய்.
அச்சம் தவிர்ந்தவனே! அல்லாஹ்வின் அடியானே! அவனின் அடியானின் மகனே வீடு செல்வாயாக, வியாகூலம் தவிர்வாயாக”
“அதுக்கில்லீங்க, இது சமூகத்தின் மான உரிமைப் பிரச்சினையுங்க. ஒட்டகங்களின் இருப்புக்கான அடையாளமே இந்த மூணு சின்னராசா வேலைதாங்க. இதுதாங்க கவலை.”
“ம்..நீர் திருந்த மாட்டீர்”
“ஜெய்…..! மலையாள பகவதி! ஜம்புக் ஜிம்பா! ஜிஷ் பும்பா”.
ஒருகணம் சூறாவளி அடித்த மாதிரியும் மின்னல் வெட்டி மறைந்த மாதிரியும் இருந்தது. யோகியார், பாவம் யோகியாகி, பாவமேயாகி பரிதாபமேயாகி, பின் பரிதாபியாகி நின்றார். முன்னின்ற உருவம் மறைந்து, தற்போது ஒரு புது உருவம் கண்டு திகைத்தார்.
“யூ யூ. .? யெஸ். யெஸ் அமிழ்தம் சினிமாக் காமடியன்”
“அவ்வளவுதானா?”
“பக்ளக் பத்திரிகை ஆசிரியர்!”
“அதுக்கு மேலே இல்லையா?”
“விந்தையர் தேசத்தின் அரசியல் விமர்சகன். அமிழ்தம் நாட்டின் அரசியல் நாறடித்த பூரணாகதி, ஜி கார் உம் ஜொய் தாலிலா போன்ற வில்லாதி வல்லவர்களை துணிந்து விமர்சித்த கௌதானே நீ?”
“என்ன மரியாதையெல்லாம் போய் நீயில நிக்குது”
“நீயும் அரசியல் பிராணி, நானும் அரசியல் பிராணி”
“ஜம்….. ஜிம்….. ஜும்….மலையாள பகுபதி!”
“என்ன நீ பக்ளக் மகாராணியாக மாறி விட்டாய்”
“இந்த பக்ளக் மகாரணியாலதான் உன்ட துக்ளக்குகளுக்கெல்லாம், இல்லையில்லை, துக்கங்களுக்கெல்லாம் தீர்வு சொல்ல முடியும்.”
“எண்டாலும் நீ பெரியாள்தான்”
“சரி சரி விசயத்துக்கு வருவோம். அழகியபாறை ஜில்லாவிலுள்ள ஓட்டகையூர் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு குடவோலைத் துண்டாக்கி விடுவோம். ஒவ்வொரு துண்டிலும் ஆண்சிங்க, பெண்சிங்க கட்சிகள், விருப்பமானால் வேங்கைக் கட்சிகள், ஒட்டகக் கட்சி வண், ஒட்டகக் கட்சி ரூவண், ஒட்டகக் கட்சி ரூரூ. மூக்கணம் இல்லாத ஒட்டகங்கள் எல்லாம் குடவோலைத் தளத்தில் குதிக்கலாம். துண்டுக்கொரு சின்னராசா ஒட்டக வம்சத்திலிருந்து வருவார்”.
பெரிய துண்டுக்கும் ஒரு சின்னராசா, சிறிய துண்டுக்கும் ஒரு சின்னரசாவா? உதைக்குதே!
இவ்வளவு காலமும் பெரிய ஊரான் சின்ன ஊரானை இளக்காரமாப் பார்த்ததுக்குத்தான் இந்தத் தண்டனை.
“பேஷ் பேஷ் மூணு சின்னராசாக்கள் தானே தேவை. முப்பதுக்கு மேலே வருமே! ரெண்டு மாதத்துக்கு ஒரு ராசா உண்டு பங்கு போடலாம். கனவான் ஒப்பந்தங்களைக் கௌரவிக்கிற சங்கதியும் எங்கட ஆக்களுக்கிட்டே எடுபடாதே!”
“அவசரப் படாத பொடியா, முப்பது சின்ன ராசாமார்களையும் மரதன் ஓட்டப் போட்டிக்கு விடுறது. எல்லா ஒட்டக ஊரின் பிரதான வழியாக ஓட்டம் நடக்கும். அதில முந்திவாற மூணுபேர் தான் சின்னராசாக்கள்
ஆவாங்க. எப்படி என் ஜிம் ஜும் ஜா?”
“நீ பக்ளக் மகாராணியாக, இட்லி நகரை ஆண்டென்ன பிரயோசனம்? எங்கட விண்ணாணம் எப்படிப் பட்டதென்று உனக்குத் தெரியாது. மரதன் ஓட்டம் ஊர் ஊரா நடக்கக்க, அந்தந்த ஊர்ச் சினராசாவை உட்டுப்போட்டு, மற்றவர்களின் கால்களை கல்லெறிஞ்சி ஒடச்சிப் போட்டுறுவான்கள். கடைசியில ஒண்டும் தேறாது.”
“ஓகோ சங்கதி அப்படியுமா? சில இடங்கள் வேங்கைப் படையின் கட்டுப்பாட்டிலிருக்காமே.அங்க இந்த ஒட்டகங்களால போக முடியுமா?”
“முடியாது”
“ஆவ்டா மைனா! அடி சக்கை அவங்களோட ஆள்வைச்சிக் கதைச்சிப்பேசி அந்த முப்பது போரையும் கொண்டுபோய் ஓட உடுவம் அப்புறம் எல்லாம் சக்ஸஸ்”
“பக்ளக் ராணியா? கொக்கா?”
“அதுசரி பக்ளக் மகாராணியாரே இந்தத் திட்டத்தை மாணிக்கபுரி நாட்டின் குடவோலைச் சட்டமாக்கி எடுக்க வேணுமே! இது நடக்கிற காரியமா?”
“சும்மா பிசத்தாத காணும். இந்த உலகமாகப்பட்ட உலகத்திலே நடக்க முடியாததாகப் பட்ட ஒரே ஒரு காரியமாகப் பட்டது ஒண்டுதான். இந்த மாணிக்கபுரி நாட்டின், அழகிய பாறை ஜில்லாவின், ஒட்டகை வம்சத்தார் ஆகியிருக்கும் படியாவாகிய பேர்களுக்குள்ளே, ‘நாங்கள் ஒட்டகங்கள் என்னும் படியவாகிய சகோதரத்துவ உணர்ச்சியைக் கட்டியெழுப்பும் படியாவாகிய காரியமாகத்தான் இருக்கும். விளங்குதா?”
“ம் ம் ஒரு மாதிரி விளங்குது. இது விளங்குறதுக்குள்ளே ஆள்ளாள்ள ஆயிசு முடிஞ்சிரும் போலிருக்குது. நீயும் ஒண்ட நடையும்.”
“ஜெய்…. மலையாள பகவதி ஜம்! ஜும்! ஜிம்!”
பக்ளக் மகாராணியார், பாழடைந்த, பழைய இட்லி நகரக் கோட்டையை நோக்கி வானில் பறந்தார். யோகியாகிய பரிதாபியார் வீடுநோக்கி தரை நடந்தார்.
(யாவும் சிந்திக்க அல்ல)
-அல்-மருதமுனை – 1998
– மருதூர்க்கொத்தன் கதைகள், முதற் பதிப்பு: ஒக்டோபர் 2007, எம்.ஐ.எஸ்.ஹபீனா கலீல், மருதமுனை.