கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 19, 2023
பார்வையிட்டோர்: 2,144 
 

(1992 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தாள லயத்தோடு வந்த எக்ஸ்பிரஸ் ரயில், பிரதான நிலையங்களில் கணவனுக்கு அடங்கிய மனைவியாய் சாது வேடமிட்டது. ஜனநெரிசலில் மூச்சடைத்து, விழி பிதுங்கி, கழுத்தை நீட்டி வெளியே பார்த்தான் இவன். திருவனந்தபுரம் என்ற மலையாள அட்சரங்கள், பெயர் பலகையில் பெரிதாய் இனங்காட்டின. களைப்பை உதறிவிட்டு கீழே இறங்கும் அவசரம் இவனுக்கு. தமிழகத்துக் காரமில்லாத உணவு வகைக ளும், உடலைத் தாலாட்ட மறுக்கும் மது விலக்குச் சட்டமும், ஜீவனை மெல்லும் அக்னி வெப்பமும், பல மாதங்களாக உடன்பாட்டுக்கு வரவில்லை . கேரளாவின் கார உணவும், கலர் கலரில் மதுக்கடைகளும், இன்னும் அதிரசனைக்குரிய வேறு வேறு சங்கதிகளும்…

இவட… தாரளமாயிட்டு… உண்டு! என்பதை இதுவரை கேள்வி ஞானமாக மட்டுமே, அறிந்திருந்தான். முதல் வருகை இப்போதுதான் சாத்தியமாயிற்று.

இந்தக் குட்டிக் காஷ்மீருக்கு இதுவரை வராதது முட்டாள் தனம்! உள்மனம் அழுது தொலைத்தது. ஒரு வியாபார காரிய மாக இங்கு வந்ததில், ‘ஈ ராஜ்யம் வளரே சௌந்தர்யம்’, ஆயிற்று!

மப்பும் மந்தாரமுமாக, வான் முகட்டிலிருந்து எப்போதும் பன்னீர் சிந்தும் சின்னச் சிதறல். ரயிலில் இருந்தே அனுபவித்த போது, இவனது தாயகமான இலங்கைத் தீவும், அதன் மார்பகமான மலையகமும், மனதில் நிழலாடின. இரண்டும், அந்நியமாய் அர்த்தம் தரவில்லை. இன்னொரு வசதியும் அனுகூலமாயிருந்தது.

தமிழும், ஆங்கிலமும், கூடவே மலையாள மொழிப் பரிச்சயமும், இவனுக்கு பெரிதும் கைகொடுத்தது. இரு சகாப் தங்களுக்கு முன்புவரை, ஈ மலையாளிகளில் பலர் சிறிலங்காவில், செறிந்து கிடந்தார்கள். ஹோட்டல், தையல், பீடிக் கம்பெனி, கள்ளிறக்கல், அரசு நிறுவனங்கள் என்று எங்கும் வியாபித்தார்கள். இங்கு இவர்கள் சமயா சமயத்தில், சின்ன வீடுகளையும், வசதிக்கேற்ப நிர்மாணித்தார்கள். அன்றைய கம்யூனிஸ்ட், இயக்கவாதிகளில் ஒருவனாக இருந்தபோது ஈ சகாவுக்களின் சிநேகத்தில், இம்மொழி இவனுக்கும் கை வந்தது.

சர்வதேச விருதுகளை கலை இலக்கியத்தில், பெற்றுப் பூரிக்கும் மொழியல்லவா இது! எதுவோ, இந்த மண்ணைத் தரிசிக்கும் வாய்ப்பு இப்போதாவது கிடைத்ததே! எண்ணச் சிதறலுக்குத் தடை போட்டுவிட்டு பிரதான பாதையின் விளிம் பில், வந்து நின்று, சற்று நிதானித்தான்.

‘சாரே!… ஆ, பை, இவட, கொடுக்கூ!’ ஞான் கொண்டு வராம்’

குரல் வந்த திக்கை சுவாரஸ்யமின்றி வெறித்தான். இவன், பொதி சுமக்கும், கூலியாள், எனத் தெளிந்து,

‘வேண்டா! நீங்கள், புத்தி முட்டெண்டா! எனிக்கு சாதிக் கும்’ என்றான் சரளமான மொழியில்.

‘ஈ புருஷோத்மன், வல்ல தெம்மாடியோ, கள்ளனோ அல்லா ! சத்யம் பறயுந்த, என்னே , சார் விசுவசிக்கனும். ஞான், வித்தியாப்பியசம், உள்ளவனா. காலத்து தொட்டு, ஊணு கழிச்சிட்டில்லா. வயறு வெசந்திட்டு, பாடில்லா. எனிக்கு, பைஸா வேண்டா! ஊணு, கிட்டியா, மதி, பிளீஸ்!

அவனது வார்த்தைகளில், பணிவும் சோகமும் இழையோ டின. பாத்திரங்களைப் படைக்கும் பிரம்மா, நான், இவனது பாத்திரம் என்னவாக இருக்கும்? இவன், ஒரு ஈரமான பார்வை யால் அவனது பாதாதி கேசத்தை, பவ்வியமாக அளந்தான்.

அடர்ந்த கறுப்பு தாடிக்குள் விரக்தி சுமக்கும் முகம். யோக்கிய, அயோக்கியத்தனங்களை, உடன் நிர்ணயிக்க இய லாத உதட்டுச் சிரிப்பு. தளர்ந்து சோர்ந்த விழிகளுக்குள் தீட்சண்யம் மட்டும் பிரத்தியேகமாகத் தெரிந்தது. ஆழமாகப் பார்த்தால், அலட்சியம் செய்ய மனம் வராத தோற்றம். அவன் ஆங்கிலத்திலும், மலையாளத்திலும், சுத்தமாக சளசளத்தான்.

இவனுக்கு இப்படியும் நினைக்கத் தோன்றியது. இங்கு, கூலிகளும், ஆட்டோகாரரும், பெரும்பாலும் ஒரே ரகத்தினர் தான்! கிராக்கி கையில் கிடைக்கும்வரை உன்னதமாய் நாணயம் தரிப்பர். குறித்த இடம் வந்ததும், கூடுதலாய்க் கறக்கச் சண்டி யர்களாக விஸ்வரூபம் எடுப்பர்.

இந்த அனுபவங்கள் ஒன்றும் இவனுக்கு புதியவை அல்ல! என்றாலும், இவன் எந்த வகையை சார்ந்தவன்? ஒரு ஐரோப்பியனின் அங்க அசைவில் இளநகை உதிர்த்து, சட் டென, அவன் கைக்கு, தோள்கையை மாற்றிவிட்டு, நிமிர்ந்து நின்று சம்மதம் தெரிவித்தான்.

பல அவன் முகம்மலர்ந்து, ‘தேங்யூ வெரிமச்,’ என்றான். புறச்சூழலில் மனம் ஒன்றி இருவரும் மெல்ல நடந்தார்கள். நகரின் மையத்தில் அமைந்துள்ள, பிரதான பாலத்தை, கடக் கையில் பேச்சுக்குரல்கள் செவியை நிறைக்கின்றன.

கொழும்பு புறக்கோட்டை இவன் மன அரங்கில் நிழலாடின.

இளவயது ஆண், பெண், பச்சை மலையாளத்தில், பரஞ்சா, குறைஞ்சா, உதிர்த்து ஜோடியாகச் சென்றார்கள். இந்தப் பேரழகுப் பெண்களின் அழகில் சித்தம் தடுமாறாத வெளியூர்வாசிகள் இருக்கவே முடியாது. இத் தேவதைகளை மேடுபள்ளத்தில் இறக்கிவிட்டுப் (மலை-ஆழம்) போனது யார்?

இந்நாட்டின் புகழ்பூத்த படைப்பாளி உருபு, சுந்தரன்மார், சுந்தரிமார், என்று தனது நாவலில் புகழ்ந்தது இவர்களைத் தானோ?

சிந்தனையைக் குலைத்தான் முன்னால் நடந்த புருஷோத் மன். ‘சார்! இவட எத்தர திவஸம் தாமஸிக்கான் உத்தேசம்?’

‘கொரச்சி திவஸம் மாத்ரமானு…!’ –

அவன் இவனுடன் கூடவே நெருங்கி நடந்தான். ‘எவரெஸ்ட் லாட்ஜில் நல்ல சௌகர்யம் உண்டல்லோ?’

‘பின்னே, எந்தா. காசு கொரச்சி கூடுதல் எந்து மாத்ர மானா…! ‘காசு கூடுதல் ஆனாலும் சௌகரியம் முக்கியம்’, என்றான் இவன். கூடவே நின்று, அறை எடுத்து, எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தான் புருஷோத்மன். பணம் பிடுங்கும் நோக்கமோ, நேர்மையீனங்களோ, இல்லாமல் சிநேக பூர்வமாக நடந்தது, அவனில் இவனுக்கு பிடிப்பு வளர காரணமாயிற்று. சுற்றுப்புற சூழலும், இடமும், இவனை வெகுவாக ஆக்ரமித்தது.

ஜன்னலினூடே மார் நிமித்தி திண்மைகாட்டும், மலைத் தொடர், எழில்சிந்தும் இயற்கைக் காட்சிகள் எல்லாம் மன திற்கு இதமளித்தன. பாதையில் பிருஷ்டம் குலுக்கி வேலைக் குச் செல்லும், பிராமண – நாயர் ஸ்திரீகள், இவனுள், கவிக் கிளர்ச்சியூட்டினர். புருஷோத்மனிடம் சாப்பிட்டு வரும்படி பணம் கொடுத்தான்.

‘சாருக்கு எந்தா வேண்டது? ஞான் கொண்டு வராம்!’

‘ஐ வோண்ட், பிரண்டி, என்ட், மிக்ஸர்!’ என்று சொன்ன தும், அவன், ‘வீ – வோண்ட்…!’ என்று திருத்தினான். சிரிப்பொலி அறையை நிறைத்தது. பக்கத்து அறையின் வானொலி யேசுதாஸை முழங்கியது. உடம்பைக் கழுவ பாத்ரூம் பக்கம் போன இவன் தெருவில் கேட்ட கூச்சல் சத்தத்தால், திடுக்குற்றான். ஏதும் கலவரங்களோ? என திகைத் துப் பரபரத்து, பாதையை வெறித்தான். ஒரு பிரமாண்டமான ஊர்வலம் அரிவாள், சுத்தியல், தாங்கிய கொடிகளுடன், வீதியில் முழக்கமிட்டுச் சென்றது. இலங்கையில் முன்னாள் – மேதின ஊர்வலங்கள் இவனில் ஞாபகமேறின.

அங்கு – அரசியல் இருளில், மனிதம் தொலைந்ததில் இனங்களுக்கு இடையில், எத்தனை பெரிய இடைவெளி! உழைக்கும் வர்க்கத்தின் முனைப்பும், நேசிப்பும், சிதைந்து போன அவலம் அங்கு…. அந்தப் பாதிப்பை எண்ணி உள்ளூர மனம் விசனித்தான் இவன்.

பிராண்டியும், மிக்ஸருமாக, புன்முறுவல் பூத்தான் புரு ஷோத்மன். இருவரும் பலநாள் நெருங்கிய நண்பர்களாக, நட்புணர்வில் திளைத்துக் குதூகலித்து, மது அருந்தினார்கள். தத்துவங்களும், சுயதாற்பரியங்களும், வெடித்துச்சிதற, அன்னி யம் துறந்த நெருக்கத்தில், இருவரும் இணைந்து தீர்க்கத்தோடு ஐக்கியமாயினர்.

அவனை வெறும் வழிப் போக்கனாக மட்டும் நினைத் தது, எவ்வளவு பெரிய தவறு! அவனது வார்த்தைகளில், புத்திஜீவி நெடி வீசியது. மாக்ஸ், லெனினை, சமூகவியல் பரிணாமத்தில் சாட்சிகளாக்கி, மேற்கோள் காட்டினான்.

கலை இலக்கிய, துறைகளில், அவனுக்கு ஈடுபாடு அதி கம் இருந்தது. வைக்கம் பஷீரும், தகழியும், பொட்டேக்கா டும், நவீன இலக்கியத்தின் நதி மூலங்கள் என்று விமர்சித்தான். அடூரும், அரவிந்தனும், கலைப்பரிமாண, காத்திரங்கள் என்றான். இலங்கை நாட்டு யுத்தம் பற்றி கரிசனையோடு கேட்டறிந்தான்.

இவனுக்கு இப்படியொரு புத்திஜீவி நண்பன் கிடைத்த தில், பேருவகையாயிற்று. மலையாளிகளாயிருந்து, தமிழில் கதை படைக்கும் மாதவன், நீலபத்மநாபன், தோப்பில் மீரான் – ஜெயமோகன் பற்றி விதந்து பேசினான். தமிழிலும், அவ னுக்கு பரிச்சயம் இருப்பது கண்டு இவன் வியந்து போனான்.

‘குடிப்பழக்கம் எப்பவும் விருப்பமுள்ளதோ?’ அவன் விழிகளைப் பெரிதாக்கி ஆர்வத்தோடு கேட்டான்.

‘எப்பவுமில்லை சில நேரங்களில் மட்டும்!’

‘எனிக்கு அது இல்லையென்றால், ஜீவிதமே இல்லை சாரே! ஈ லோகத்திண்டே , விநாசங்கள ஒக்க, காணான்டு, இரிக்கான், கல்மிஷம் கொண்ட, மானுஷ்யரிலிருந்தும் அன்னி யப்படான், ஈ மது மாத்ரமானு, சகாயம் புரியுந்தது! சத்யம் பறயனுமென்கில், மதுவானு நமக்கொக்க ஆத்மார்த்த சிநேகிதன்!”

ஒரு ஞானியின் சாயலில் மனம் திறந்து பேசினான். ‘எண்டே சொப்னங்கள் லட்சியங்கள் ஒக்க நசிஞ்சி போயி சாரே!’

உள் மூட்டும் சோகம் வார்த்தைகளில் தெறித்தது. ஐ ஆம், ஏ, கிராஜுவேட், எண்ட், கவர்மெண்ட், சேவண்ட், லீடர் ஓப் லேபர் யூனியன். ஸோ… அந்த பிரதாங்கள் நசிஞ்சி போயிட்டு, பல கொல்லங்கள் ஆயிப்போயி. எனிக்கு உள்ள விசனம்…?

பாவப்பட்ட குஞ்சுகளும் எண்டே சுகுமாரியுமானு… கலங்கிப் பேதலித்த விழிகளுக்குள், அவனது சுயத்தின் வடு விசாலமாய் தெரிந்தது. புருஷோத்தமனின் வாழ்க்கையை அறியும் ஆவல், இவனில் கிளர்ந்தெழுந்தது. என்றாலும், போதை வசப்பட்டவர்கள் எத்தனை நிதானம் தரித்தாலும், பேச்சில் மிகையும், தன்னைப் பற்றிய பக்கசார்பான நியாயங்க ளும் நிறைந்திருக்கும். இந்நிலையில், சத்தியத்தின் துல்யம் சாத்தியமற்றது என்பதை இவன் அனுபவபூர்வமாக அறிந்து வைத்திருந்தான்.

இதை பிறிதொரு சந்தர்ப்பத்தில் அறியலாம், என்ற தீர்மா னத்தில், தலையை உயர்த்தி இடக்கையை அடுகெடுத்து, கடிகார முட்களை, கருசனையோடு பார்த்தான். இதை சூட்சம – மாகப் புரிந்து கொண்ட அவன், ‘பொன்னு சாரே, எண்டே ஜீவித, கதா, பின்னீடு பறையாம்’, என்றவாறு, முலை மார்பில் அழுகை தொலைத்த மழலையாய் மனம் ஆசுவதமானான்.

சில கணங்கள் மௌனத்தில் கரைந்தன. மீண்டும் அவன் இப்படிக் கேட்டான்.

‘சாருக்கு எதிலெல்லாம் வளரே பிரியமுள்ளது?’

‘சாகித்தியம் – சமூக சேவை’

‘சரி! செக்ஸ் விருப்பமுள்ளதோ?

‘அதை வெளிப்படையாக வெறுப்பவன்கூட உள்ளுக்குள் விரும்புவான். அது ஒரு தவம். கண்ட சகதியில் இறங்குபவ னுக்கு அல்ல. ஒரு அந்திப் பொழுதின் ஜீவகளையில் மனம் லயிப்பனுக்கு.’

‘ஒரு சௌந்தரியமுள்ள ஸ்திரியிடத்து போவான். நிங்களுக்கு வல்ல ஆட்சேபனை எந்தெங்கிலும் உண்டா?’

இவ்வளவு கெதியில் நெருங்கி விடுவான் என்று இவன் எதிர்பார்க்கவேயில்லை.

‘அது என்ன வியாபார ஸ்தலமா?’

‘அல்லா … ஒரு பாவப்பட்ட குடும்பம்!’

‘அவளுடைய பர்த்தாவு…?’

‘சுகக்கேடு காரணாயிட்டு ஷீணித்து கெடக்கிணுண்டு!’

‘அவன் சம்மதிப்பானா?’

‘சம்மதிக்கும்!’

‘அழகுள்ளவளா?’

‘ரதியிண்ட உடன்பொறப்பு!’

செம்மீன் கறுத்தம்மையும், சிதம்பரம், சுமீதா பட்டேலும் விழிகளில் கதை சொல்ல இவன் இப்போது ஒரு புதிய உலகில் சஞ்சரித்தான். ஒரு வித்தியாசமான கதைக்கருவும், ஒரு மாறு பட்ட இன்ப அனுபவமும், இவனை வாவென்று சைகை காட்டுவதாய், மகிழ்ந்தான். அந்தத் தம்பதிகள் பற்றிய பூரண தகவல்கள். புருஷோத்மன் மூலமாய் இவனுக்குக் கிடைத்தது.

அந்நாளில் அப்பெண்ணின் கணவன் ஒரு தீவிர தொழிற் சங்கவாதியாய் இருந்தானாம். வேலை நிறுத்தம் போராட்டம் என்று முதலாளிமார்களின் சிம்ம சொப்பனமானான். இதனால் பெரும் நஷ்டம் கண்ட பிரபுத்துவம், கூலிப்படையை ஏவி இவன்மீது பழி தீர்த்துக் கொண்டது. இவன் குற்றுயிராய் கிடந்து பலகாலம் சிகிட்சை பெற்று தெய்வாதீனமாக உயிர் பிழைத்துக் கொண்டான். நாளடைவில் அவனது நரம்பியக்கங் கள் பெரிதும் ஸ்தம்பித்தன. அந்த பாதிப்புகள் புருஷ வீரி யத்தை பெயர்த்தெடுத்து விட்டது. அவனது இளம் மனைவி இல்லற சுகமின்றி, கண்ணீர் வடித்தாள். மறுமணம் செய்து கொள்ளவும் அவள் இசையவில்லை.

இறுதியில் இருவரும் சேர்ந்தே இந்த விகற்பமான முடி விற்கு வந்தார்களாம். மிக அபூர்வமாக வெளியூர்க்காரர்கள் யாரும் வந்தால், அந்தரங்கமாக இந்த நாடகத்தை அரங்கேற்று வார்களாம். இந்த நிகழ்வின் இணைப்பதிகாரியாய் புருஷோத் மன் அவ்வப்போது கடமையாற்றுவானாம்.

ஒரு குடும்பத்தின் கதை எப்படியெல்லாம் கோணலாகி, கோரமாகி, சிதைந்து விட்டது என்பதை நினைக்கையில் இவன் உள்மனம், உருகிக் கரைந்தது. வெளியே சென்றிருந்த புருஷோத்மன் கையில், மலையாள நாவல்களோடு திரும்பி இருந்தான்.

மதிலுகள்: வைக்கம் பஷீர்
கயிறு : தகழி
கசாக்கிண்டே இதிகாசம்; விஜயன்
இருட்டிண்டே ஆத்மாவு: கேசவதேவ்.

அவற்றுக்கு மகிழ்ச்சியோடு பணம் கொடுத்தபோது அவன் ஏற்க மறுத்து விட்டான். திருவனந்தபுரத்திலிருந்து இருபத்தைந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள, வர்க்கல, என்னும் கிராமத்திற்கு புருஷோத்மனுடன் போவதற்கு இவன் ஆயத்தமானான். அந்த அழகிய அனுபவிக்கத்தான்…

‘சார் எடத்து, ஒரு காரியம் பறையான் உண்டு!’ ஜன்னலி னூடே தெரியும் மலைத் தொடர்களை வெறித்தவாறு அவன் பீடிகை போட்டான்.

‘NOT WE LIVE, BUT WE SURVIVE!’

ஞங்கள் ஜீவிக்கினில்லா – பட்சே, இருக்கினுண்டு எங்கனயோ, இது ஆஸ்திரேலியக் கவி ஹோப், பறஞ்ஞ வார்த்தகளானு!’

‘இப்ப எதுக்கு இந்த வாசகம்?’

‘அத்தியாவஸியம் உண்டு. சார் என்னப்பற்றி எந்து விஜாரிக்குந்து?’

‘நல்ல சிநேகிதன்.’

‘வெரிகுட்! சிநேகிதன்மார் தம்மில், கபட முகம், தெற் றல்லோ , அது கொண்டு ஞான் நிங்களடத்து சத்தியம் பறயான் விளையுந்து….

புருஷார்த்தம் ஹீணித்து, நசிஞ்சு போய, ஆ பெண்ணிண்ட பர்த்தாவு, ஞான் ஆனு, நிங்கள் இப்போல் காணான் போகுந்தது, எண்டே சுகுமாரியையானு!’

‘அந்தப் பெண்ணின் புருஷன் இவனா?’ என்று இவன் விதர்த்து அதிர்ந்தான்.

‘சரி சாரே! இனி நமக்கு அவடப் போகாம்!’ புருஷோத் மன் துரிதப்படுத்தினான். சுமை இறங்கிய மனதோடு, இவன் கனிவோடும், அர்த்த புஷ்டியோடும், அவனைப் பார்த்தவாறு சொன்னான்.

நான் வரவில்லை . நீ மட்டும் வீட்டுக்குப் போகிறாய்! இதோ பணம். கொஞ்ச நாளை, சந்தோஷமா, நீ வீட்டில் கழிக்கலாம். சீ, யூ, குட்பை.

அவன் ஒரு கணம் மலைத்துப் போனான் ‘நீங்கள் ஏன் வரவில்லை ?’ என்ற கேள்விக்கு பதில் அறியத் துடித்தான் அவன்.

இவன்மிக நிதானமாககச் சொன்னான். “நான் ஒரு போதும் நண்பனின் மனைவியை தீண்டுவதில்லை!’

– 5.12.1992 – மீறல்கள், மல்லிகைப் பந்தல் வெளியீடு, முதற்பதிப்பு: நவம்பர் 1996

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *