கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 11,431 
 
 

எழுதியவர்: அசிந்த்ய குமார் சென் குப்தா

அம்மா நசீமை அடித்துவிட்டாள்.

அம்மா அடித்தால் அடிக்கட்டும், அவனும் ஏன் அடிக் கணும்? அடிக்க அவன் யார்?

நான் ஆடு மாடு வளக்கறேன், வளக்கலே, பயிர் செய்யறேன், செய்யலே, அதிலே அவனுக்கென்ன? நெலம் தரிசாக் கிடந்தா அவனுக்கென்ன? வீட்டுக் கூரையை மாத்தணுமா வேணாமாங் கறது எங்க கவலை. கூரையொழுகினா நாங்க – அம்மாவும் பிள்ளையும் நனைஞ்சிட்டுப் போறோம். யாரும் அவனை வந்த கொடை பிடிக்கக் கூப்பிடப்போறதில்லே.

கோல்பானு – அதாவது அம்மா – “இனிமே கஹ்ராலி எல்லாத்தையும் கவனிச்சுக்குவாரு” என்று சொன்னாள்.

“கஹ்ராலி யாரு?” என்று வெடித்தான் நசீம்.

“அவரு பசையான ஆளு. அஞ்சு ஏக்கர் நெலம் இருக்கு அவருக்கு. கணக்கு வழக்கு, கோர்ட் கேஸ் நெறைய இருக்கு”

“அதனால நமக்கு என்ன வந்தது?”

“அவரை அண்டியிருந்தா நம்ம நெலத்தை நல்லபடி கவனிச் சுக்கலாம், உண்ண உடுக்க கஷ்டப்பட வேண்டாம்.. வீட்டுக்கு ஓலைக் கூரைக்குப் பதிலாத் தகரக்கூரை போட்டுக்கலாம்.”

“நமக்கு அதெல்லாம் வேணாம், இந்த ஓட்டைக் குடிசையே நமக்குத் தேவலை. நாம கீரை, கொடிகளைச் சாப்பிட்டுப் பொழைச்சுக்கலாம். நீ அவனை வெரட்டி விட்டுடு.”

கஹ்ராலி நசீமை நன்றாக அடித்துவிட்டான். கோல்பானுவும் அவனுடன் சேர்ந்துகொண்டாள்.

அப்பன் மட்டும் உயிரோடிருந்தால் நசீமை இப்படி யாராவது அடிக்க முடியுமா? அவனுடைய அப்பன் வயலில் போய் வேலை செய்யும்படி அவனை ஒருபோதும் கஸ்டாயப்படுத்த மாட்டான். நசீம் வலையை எடுத்துக்கொண்டு குளங்குட்டைகளில் மீன்பிடிக்கப் போய்விடுவான். “கடைத்தெருவிலே ஒனக்கு ஒரு துணிக்கடை வச்சுத் தந்துடறேன்” என்ற சொல்வான் தகப்பன்.

“அதுக்குப் பதிலா எனக்கு ஒரு படகு வாங்கிக் குடுத்துடு. நெலத்தைவிடத் தண்ணிதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.” என்பான் நசீம்.

ஆனால் அப்பனுக்குப் படகு வாங்க வசதியில்லை. படகை வாடகைக்கு எடுத்து ஓட்டிப் பணம் சம்பாதிக்கும் அளவுக்குப் பெரியவனாகவில்லை நசீம்.

நசீமின் வலை அறுந்துபோய் வெகுகாலமாகிவிட்டது. இருந் தாலும் அதன் பாசம் அவனை விடவில்லை. அவன் ஆற்றங் கரையில் மௌனமாக மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பான். கண்ணீர் அவனுடைய கன்னங்களில் வழிந்தோடும்.

அம்மா கஹ்ராலியை நிக்காஹ் செய்துகொள்ளப் போவ தாகக் கேள்விப்பட்டான் அவன். அவர்களிருவரும் ஒரே அறையில் இருப்பார்கள். நசீமுக்கு இடம் எங்கே? வாசல் திண்ணை அல்லது புறக்கடைதான். அவனுடைய அம்மாவிடம் யாராவது “இவன் யாரு?” என்று கேட்டால், அவள் “என் முதல் புருஷனோட புள்ள” என்று சொல்வாள். யாராவது அவனை “உனக்கு யாரு சோறு போடறாங்க?” என்று கேட்டால் “கஹ்ராலி” என்று சொல்லவேண்டும் அவன். நசீமுக்கு நெஞ்சு பற்றியெரிந்தது.

அங்கிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் சணல் வயல்களுக்கு அருகில் நீராவிப் படகு வந்து நிற்கும். படகுத்துறை எதுவும் கட்டப்பட்டிருக்கவில்லை. கரையிலுள்ள வாதா மரத்தின் அடித் தண்டையொட்டி, ஆனால் அதனுடன் மோதிக்கொள்ளாமல், படகு நிற்கும். படகிலிருந்து கரையைச் சேர்க்கப் படிக்கட்டை இறக்குவார்கள். படிக்கட்டின் ஒரு மூலையிலிருந்து மறு மூலைக்கு ஒரு மூங்கில் தடியைப் பிடித்துக்கொண்டு இரண்டு படகு ஊழியர்கள். பிரயாணிகள் படிகள் வழியே ஏறி இறங்குவார்கள். டிக்கெட் குமாஸ்தா வாதா மரத்தடியில் ஒரு தகரப் பெட்டியில் டிக்கெட்டுகளை வைத்துக்கொண்டு விற்பான்; படகிலிரந்த இறங்குபவர்களிடமிருந்து டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்வான், டிக்கெட்டில்லாமல் பிரயாணம் செய்தவர்களோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொள்வான்; பிறகு படகுக்குள் வந்த கணக் கனிடம் டிக்கெட் வசூல் கணக்குக் கொடுப்பான். அவன் படகிலிருந்து இறங்கிப்போகும் வரையில் படிக்கட்டு கரையில் இறக்கப்பட்டிருக்கும். ஆனால் அவனுக்கு மூங்கில் கழியைப் பிடித்துக்கொள்ளத் தேவையில்லை. தாழ்வான நிலம் எப்போதும் நீரில் மூழ்கியிருக்கும்; அடிமரம் மட்டும் உறுதியாக வேரூன்றி யிருக்கும். படகிலிருந்து இறங்கும் பிரயாணிகள் தண்ணீரில் நடந்து கிராமத்துப் பாதைக்கு வந்து சேர்வார்கள். அவர்களிடம் மூட்டை முடிச்சுகள் இருந்தால் அவற்றை ஒரு தோணியில் வைத்துக் கையால் தள்ளிக்கொண்டே தண்ணீரைக் கடப்பார்கள். குழந்தை குட்டிகளைத் தோளில் வைத்துக் கொள்வார்கள். பெண்டாட்டி, உருவத்தில் சிறியவளாயிருந்தால் அவளை அப்படியே அலாக்காகத் தூக்கிக்கொண்டு தண்ணீரைக் கடப் பார்கள்…

“படியைத் தூக்கு!” மேல்தட்டிலிருந்து உத்தரவிடுகிறான் சாரங்க் — படகின் தலைவன்.

படகுத்துறைக் குமாஸ்தா இன்னும் இறங்கவில்லையா?

இறங்கிவிட்டான், கோணல் மாணலாகக் கால்வைத்து இறங்கிவிட்டான். படிக்கட்டு படகின் மேலேறியது. தடிமனான சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த நங்கூரம் மடமடவென்று மேலே ஏறத் தொடங்கியது.

ஒரு ஆள் இந்த அவசரத்தில் இறங்க முடியவில்லை போலிருக்கிறது. யார் அவன்? பத்து — பன்னிரெண்டு வயதுப் பையன். பிரயாணியா? யார் கண்டார்கள்? படகைப் பார்க்க அதில் ஏறியிருக்கிறான். அப்படியானால் அடுத்த துறையில் இறங்கிக்கட்டும். அங்கேயிருந்து சின்னத் தோணியிலே வீடு திரும்பிக்கலாம். அதற்குள் இருட்டிப் போயிடும். இருட்டிலே எப்படி வீட்டுக்குப் போய்ச் சேருவான்? பாவம், அவனோட அப்பா அம்மா எவ்வளவு கவலைப்படுவாங்க!

சிறிய படகு. மேல் தட்டில் மூன்றாம் வகுப்பு மட்டுந்தான். முன்பக்கம் புறாக்கூண்டு மாதிரி முதல் வகுப்பு அறைகள் இரண்டு. அவற்றுக்கு முன்னால் திறந்தவெளி மூலையில் சாரங்கின் சுக்கான். நசீம் நேரே அங்கே போய்ச் சேர்ந்தான்.

முதலில் யாரும் அவனைப் பொருட்படுத்தவில்லை. படகின் இயந்திரங்கள் இயங்குவதை வேடிக்கை பார்க்க யாரோ வந்திருக் கிறான் என்று நினைத்தார்கள். ஆனால் பையன் அங்கிருந்து நகரவில்லை.

காலில் செருப்பும் தலையில் படகுபோன்ற தொப்பியும் அணிந்துகொண்டு ஹுக்கா பிடித்தவாறு நின்று கொண்டிருந்த சாரங்க் திரும்பி அவனைக் கேட்டான். “என்ன வேணும்?”

“ஒங்களுக்கு ஒரு வேலைக்காரன் தேவைப்பட்டா என்னை வச்சுக்கலாம்.”

“நீ எந்த ஊரு?” சற்றுநேரம் அவனைப் பார்த்துவிட்டுக் கேட்டான் சாரங்க்.

“இந்தப் பக்கந்தான் – கனக்தியா.”

“அப்பா அம்மா இருக்காங்களா?”

“ஒருத்தரும் இல்லே.”

சாரங்க் இன்னும் சிறிது நேரம் அவனைப் பார்த்துக் கொண்டே நின்றான். பிறகு “ஒன்னால வேலை செய்ய முடியுமா?” என்று கேட்டான்.

“என்னென்ன வேலைங்க?”

“சமையல் செஞ்சு பரிமாறுவது, படகைத் தொடச்சுப் பெருக்கிறது, துணி துவைக்கிறது, பாத்திரம் தேய்க்கிறது இதெல்லாந் தான். முடியுமா? அப்படீன்னா இருந்துக்க. எலவசமா வேலைக்கு ஆள் கிடைச்சா நல்லதுதானே!” என்று சொல்லிவிட்டு சாரங்க் சுக்கானை இயக்கிக் கொண்டிருந்த இயாத் அலியைத் திரும்பிப் பார்த்தான்.

“கொறஞ்சது ஹூக்காவிலே புகையிலை போட்டுக் குடுப்பான், தேவைப்பட்டாக் கைகால் பிடிச்சுவிடுவான்..”

“சம்பளம் ஒண்ணும் கிடையாதா?” இயாத் அலி கேட்டான்.

“சம்பளம் வேறயா?” என்று சீறினான் சாரங்க். “பாசியைக் கொண்டு கறி சமைக்கணுமா? அப்படி யொண்ணும் அவசியமில்லே எனக்கு! இருக்கறதுன்னா இருக் கட்டும், இல்லேன்னா கீழே எறக்கி விட்டுடுவேன் – ஏய் டிக்கெட் இருக்கா?”

“இல்லீங்க. எனக்குச் சம்பளம் வேணாம்!”

படகில் இடம் கிடைத்ததே பெரிய காரியம் நசீமக்கு. அப்பன் இல்லே, சித்தப்பன் இல்லே, முதலாளி இல்லே, யாரோ ஒரு வேத்து மனிதன்கிட்டே அடிவாங்கிக்கிடடு வாயை மூடிக் கிட்டு இருக்கறதைவிட எவ்வளவோ தேவலை இது. முற்றிலும் புதிய அனுபவம் கிடைக்கிறதே, அதுவே ஒரு சுகந்தான்.

நன்றாக வேலை செய்தால் ஒருநாள் படகிலேயே நிரந்தரமாக வேலை கிடைத்துவிடும். முதலில் படிக்கட்டை ஏற்றி இறக்கும் வேலை, பிறகு மேல் தட்டுப் பொறுப்பு, அதற்கப்பிறகு பட கோட்டும் வேலை, கடைசியில் சாரங்க்! இப்படி நடக்காதென்று யார் சொல்ல முடியும்? முதலில் சம்பளமில்லாத வேலைக்காரன், கடைசியில் படகுக்கே தலைவன்!

சாரங்க் அடர்த்தி குறைந்த தன் வெண்தாடியை உருவி விட்டுக்கொண்டான்.

ஆனால் முதல் நாளிரவே நசீமுக்கு நல்ல உதை கிடைத்தது சாரங்கிடம். அவன் கவனக்குறைவாக ஒரு கண்ணாடி ஜாடியை உடைத்துவிட்டான். பிறகு அவ்வளவுதான்! அவன் எதிர்பாராத விதமாக அவன் முகத்தில், தலையில், முதுகில் பளார் பளார் என்று அடிகள் விழுந்தவண்ணம் இருந்தன. ஹோவென்று அழுதுவிட்டான் நசீம். ஆனால் அவன் கைகால்களைக் கட்டி ஆற்றின் கறுப்புத் தண்ணீரில் அவனை எறிந்து விடுவான்.

நசீமுக்கு வருத்தத்தைவிட ஆச்சரியந்தான் அதிகம் ஏற்பட்டது. ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்தப் படகு வாழ்க்கையில் இதுதான் வழக்கம். எல்லாரும் சாரங்கிடம் அடிவாங்கத்தான் வேண்டும். படிக்கட்டு இறக்கி ஏற்றுபவர்கள், மேல்தட்டைக் கழுவுபவர்கள், சமையல் பணியாளர், கயிறு இழுப்பவர்கள், விளக்குக் காட்டுபவர்கள் இவர்களுடைய வேலை யில் ஒரு சிறிய தவறு நேர்ந்தாலும் அவர்களுக்கு அடி உதைதான்.

படகின் கீழ்ப்பகுதியில் இயந்திரங்கள் இருக்கும். கரி போடுபவன், நெருப்பை வளர்ப்பவன், இயந்திரம் இயக்குபவன் இவர்களெல்லாரும் கீழேதான் இருப்பார்கள். எல்லாரையும் கண்காணிக்கும் பொறுப்பு சாரங்குக்கு. யாராவது தவற செய்து விட்டால், ஒரு இயந்திரத்துக்கு பதிலாக வேறொரு இயந்திரத்தை இயக்கிவிட்டால், ஒரு கழிக்குப் பதிலாக இன்னொரு கழியை இழுத்துவிட்டால் அவன் கதி அதோ கதிதான்! அடி உதை, மட்டமான வசவுகள், செருப்படி கூட விழும் அவனுக்கு. இவ்வளவும் போதாவிட்டால் வேலையே போய்விடும்.

காரணம், படகுக் கம்பெனிக்கு சாரங்கை மட்டுந்தான் தெரியும். மற்ற ஊழியர்களுடன் அதற்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. சாரங்க்தான் படகுக்கு மாஜிஸ்டிரேட் மாதிரி. எல்லாப் பொறுப்பும் அவனுடையதுதான். படகு செல்லும் வழியில் ஒரு தோணியுடன் மோதி அதை மூழ்கடித்துவிட்டால் அதற்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியவன் சாரங்க்தான். மழை புயலில் அடி பட்டு அந்தப் படகே முழுகினாலும் பொறுப்பு சாரங்க்தான், கம்பெனி முதலாளிகளல்லர். படகு சம்பந்தமாக எழும் எல்லா வழக்குகளுக்கும் அவன்தான் பொறுப்பு. அதேபோல் படகு பெரும் புயலிலிருந்து தப்பிக் கரைக்குப் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டால் சாரங்குக்குப் பரிசு உண்டு. படகின் மற்ற பணி யாளர்கள் எவ்வளவுதான் கடினமாக உழைக்கட்டும், எவ்வளவு தான் சாமர்த்தியத்தைக் காட்டட்டும், அவர்களுக்கு இந்தப் பரிசின் ஒரு துளிகூடக் கிடைக்காது. எல்லா சன்மானங்களும் மெடல்களும் சாரங்கின் கழுத்தில்தான் விழும்.

“என்ன ஆச்சு?”

நீராவிப்படகு மணலில் சிக்கிக்கொண்டு விட்டது. மூடுபனி யில் மணல்மேடு புலப்படவில்லை. படகின் அடிப்பகுதி மணலில் நன்றாக மாட்டிக்கொண்ட விட்டது. அதை விரைவில் மணலி லிருந்து விடவிக்க முடியுமென்று தோன்றவில்லை. ஒரு தோணியைப் படகிலிருந்து இறக்க வேண்டும். ஒருவன் அந்தத் தோணியில் போய், தந்தி வசதியுள்ள படகுத்துறையில் செய்தி தெரிவிக்க வேண்டும். அத்தகைய படகுத்துறையெதுவும் அருகில் இல்லை. பெரும்பாலான துறைகள் மரத்தடிகள் அல்லது வயல் வெளிகள்தாம். இன்றைக்குக் குறைந்தது ஏழெட்டு மணிநேரம் படகு தாமதப்படும். வழியில் உள்ள துறைகளிலெல்லாம் பிரயாணி கள் இரவு முழுதும் படகுக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குத் தொலைவில் புகை தெரியும், படகின் ஊதல் ஒலி கேட்கும், ஆனால் படகு வராது.

குற்றம் யாருடையது?

மாலுமியின் குற்றம், இரண்டாவது, ‘மேட்’டின் குற்றம். ஆனால் இவர்கள் கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவர்கள். இவர்களை அடி்பது சுகமில்லை, அடிப்பவனுக்குத்தான் கை கால் புண்ணாகும். ஆனாலும் இவர்கள் தப்பமுடியாது. இவர் களுடைய சம்பளம் முழுவதும் பறிமுதலாகிவிடும். இவர்கள் தங்கள் சாப்பாட்டைக்கூடக் காசு கொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும்.

சாரங்க் படகை நிரந்தரமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டவன் மாதிரி. படகுக்கான தளவாடச் செலவுகள், கரிக்கான செலவு, ஊழியர்களின் சம்பளம் இவற்றையெல்லாம் கணக்கிட்டு ஒரு மொத்தத் தொகையைக் கம்பெனி சாரங்கிடம் கொடுத்துவிடும். அதைக்கொண்டு சம்பளப் பட்டுவாடாவும் மற்ற செலகளும் செய்துகொள்வான் சாரங்க். அவன் தன்னிஷ்டத்துக்கு சம்பளம் கொடுப்பான், அபராதம் விதிப்பான், சாப்பாட்டை நிறுத்துவான்; தன்னிஷ்டத்துக்கு ஆட்களை வேலையைவிட்டு நீக்குவான். அவனுக்கெதிராக எந்தப் புகாரும் எடுபடாது, அப்பீலும் இல்லை. படகின் உள்துறை நிர்வாகத்தைப் பற்றிக் கம்பெனிக்குக் கவலையில்லை. படகு, ஆட்களையும் சரக்குகளையும் ஏற்றிக்கொண்டு போகவேண்டும், கணிசமான தொகை லாபம் காட்டவேண்டும் என்பதில்தான் அதற்கு அக்கறை.

ஆகையால் படகு ஊழியர்களுக்கு சாரங்கின் வார்த்தைதான் வேதவாக்கு. அவர்கள் அவனுடைய அடிமைகள். அவன் வெறும் சாரங்க் அல்ல, பெரிய வைசிராய்.

“அழுது பிரயோசனமில்லேப்பா” பக்கத்திலிருந்த மக்பூல் சொன்னான். “இது மாதிரி இன்னும் எவ்வளவோ அடிவாங்க வேண்டியிருக்கும். அடிவாங்கி வாங்கித்தான் வேலை உயர்வு கிடைக்கும்.”

மக்பூலும் முதலில் வேலைக்காரனாகத்தான் படகில் சேர்ந்தான். சமையல் வேலையல்ல; துணிச்சலவை, செருப்புத் தைக்கும் வேலை. மூன்றாண்டுகளுக்குப்பிறகு அவனுக்குப் படிக்கட்டு ஏற்றி இறக்கும் வேலை கிடைத்தது. பிறகு மேல் தட்டில் வேலை, அதன்பின் கயிறு இழுக்கும் வேலை. அடி வாங்காவிட்டால் படகில் பதவி உயர்வுக்கு வழியில்லை.

“சாரங்க் துரையோட நல்ல பார்வை படலேன்னா ஒண்ணும் பிரயோசனமில்லே. பத்துப் பன்னெண்டு வருசம் ஒழைச்ச பிறகு துரைக்குத் தயவு வந்தா சான்றிதழ் கொடுப்பாரு. பிறகு அந்த சான்றிதழை வச்சுக்கிட்டு சாரங்க் பரீட்சை எழுதலாம்” என்று சொன்னான் மூன்றாவது மேட் அப்சாருதீன், அந்தச் சான்றிதழ் இல்லேன்னா எல்லா ஒழைப்பும் வீண் .. அதனாலே சாரங்கோட காலிலே அழுத்தமா எண்ணெய் தடவிக்கிட்டு இருக்கணும். பரீச்சை மட்டும் பாஸ் பண்ணீட்டா அப்புறம் கட்டிப்பிடிக்க முடியாது. அப்புறம் நீதான் ஜமீந்தார், நீதான் பொக்கிஷதார், நீதான் எல்லாம்!”

“ஆனா இதிலே இன்னொரு விசயம் இருக்கு. ‘சிட்டகாங்’ ஆளுங்கன்னா சாரங்குக்கு ரொம்பப் பிரியம்” என்ற தாழ்ந்த குரலில் சொன்னான், பாய்லரில் வேலை செய்யும் விலாயத் அலி. “சாரங்கோட சொந்த ஊர் சிட்டகாங். ‘சிட்டகாங்கைத்தவிர வேறே எங்கே நல்ல சாரங்க் கிடைப்பான்?’ அப்படீன்னு சொல்லுவாரு. ‘சாரங்க், மீன், வத்தல், தர்கா இந்த மூணும் சேர்ந்தது சிட்டகாங்’ அப்படீன்ன ஒரு பழமொழியே இருக்கு. அதே மாதிரி இன்னொரு பழமொழி ‘நெல், கொள்ளைக்காரன், வாய்க்கால் இந்த மூணும் சேர்ந்தது பரிசல்..!’ சாரங்க் வேலை கொள்ளைக்காரன் வேலையில்லியே!”

“ஏண்டா பயலே, ஒன் ஊரு எது?” என்று எல்லாரும் கேட்பார்கள், “இந்தப் பக்கந்தான்” என்று சோகமாகப் பதிலளிப் பான் நசீம். அவன் கண்கள் நீரால் மல்கும். அவன் முன்னே நிற்பவர்கள் மங்கலாகத் தெரிவார்கள்.

மறுநாள் அப்துலுக்கு செமை அடி கிடைத்தது. அவன் தண்ணீரின் ஆழத்தை அளக்கும்போது இரும்புக் கம்பியைத் தண்ணீரில் போட்டுவிட்டான்.

சாரங்க் யாரையாவது அடித்தால் அடிபட்டவனை விலக்க யாரும் முன்வர மாட்டார்கள். அடிபடுவது எல்லாருக்கும் பழகிப்போன விஷயம், அன்றாட நிகழ்ச்சி. இருந்தாலும் அடி பட்டவன் அழத்தான் செய்வான்.

அப்துல் ஆற்றுநீரில் கண்களைத் துடைத்தவாறு விம்மினான், “குச்சியோட வெலையையும் அதுக்கான வட்டியையும் சம்பளத்தி லேருந்து எடுத்துக்கப் போறாரு, அதோடே இந்த அடி வேறே அடிக்கறாரு!”

அப்படியும் சாரங்கை எதிர்த்துப் பேச முடியாது. தனக்கு சாதகமாக இரண்டு வார்த்தை சொல்ல முடியாது. அடிக்கும்போது திமிற முடியாது.

இவர்களெல்லாருமே தன்னைப்போல் தந்தை – தாயில்லாத அனாதைகள் போலும் என்று நினைத்தான் நசீம்.

படகின் படிக்கட்டு வேலையிலிருந்து தொடங்கிப் பதவி உயர்வு வேண்டுபவர்கள்தாம் எல்லாரும். அவர்கள் எல்லாருக்கும் சாரங்கின் சான்றிதழ் தேவை. சாரங்க் அடிப்பதை அனுமதிக்கா விட்டால் அவன் ஏன் பேனாவைக் கையிலெடுத்து சான்றிதழ் எழுதித் தரவேண்டும்.

ஆகவேதான் அன்றொரு நாள் நசீம் மக்பூலுடன் வேடிக்கை யாகப் பேசிக்கொண்டவாறு தவறுதலாக ஒரு வாளியைத் தண்ணீரில் போட்டுவிட்டதற்காக நன்றாக உதைபட்டபோது அவனுக்கு வெட்கம் ஏற்படவில்லை. அவமான உணர்வு துளிக்கூடத் தோன்றவில்லை அவனுக்கு. மாறாக அவன் மனதில் மற்ற ஊழியர்களுடன் தோழமையணர்வு ஏற்பட்டது.

“ஒனக்கென்ன சம்பளம் கிம்பளம் கிடையாது. சும்மா அடி யோட சரி” என்று அழுதுகொண்டே சொன்னான் மக்பூல். “வாளியோட வெலைக்காக என் சம்பளம் பூராவையும் எடுத் தக்குவாரு, எனக்குச் சோத்துக்கு காசு வேணும்னா, தன் கிட்டேயிருந்து கடன் வாங்கிக்கன்னு சொல்வாரு. ரூபாய்க்கி ரெண்டணா வட்டி படகிலே ஒக்காந்துகிட்டே லேவாதேவி செய்யறாரு .. உம், நம்மளைக் கவனிக்க ஆளில்லே” என்று சொல்லி ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தான் மக்பூல் – கடவுளிடம் புகார் செய்வதுபோல்.

“நீ வேற படகுக்குப் போயிடக் கூடாதா?” நசீம் கேட்டான்.

“நீ எந்த உலகத்தில் இருக்க? ஒரு படகைவிட்ட வெலகினா வேறெந்தப் படகிலேயும் வேலை கெடைக்காது. சாரங்குகளுக் குள்ளே ரொம்ப ஒத்துமை உண்டு. அதனால்தான் வாயை மூடிக்கிட்டு அடியை வாங்கிக்கிட்டு வேலை நெலைக்கணுமேன்னு கிடக்கேன். ஒரு தடவை வேலை போயிருச்சின்னா வேறே வெனையே வேண்டாம். தண்ணியை விட்டுட்டுப் போய்க் கலப்பையைக் கட்டிக்கிட்டு அழவேண்டியதுதான்!”

“தவிர எந்தப் படகுக்குப் போவே நீ?” பக்கத்திலிருந்த இயாத் அலி கேட்டான். “எல்லாப் படகிலயும் இதே வழக்கந்தான்.

“ஓடிப்போயிட முடியாதா?” நசீமின் கேள்வி.

இதைக்கேட்டு எல்லாரும் சிரித்துவிட்டார்கள். படகின் படிக்கட்டில் தொடங்கி மேலும் மேலும் உயரும் முயற்சியில் தீவிரமாக இருப்பவர்களுக்கு இந்தக் கேள்வி அசட்டுத்தனமாகத் தானே தோன்றும்!

“ஓடிப்போறது அப்படியொண்ணும் சுலபமில்லேப்பா” சீரியஸாகப் பதிலளித்தான் இரண்டாவது மேட்.

“ஒம் பேரு விலாசம் எல்லாம் சாரங்க் துரையோட நோட்டுப் புஸ்தகத்தில் எழுதி வச்சிருக்கு. நீ ஓடிப்போனா ஒம்பேரிலே போலீசுக்குப் புகார் போகும்… நீ சாரங்கோட பையிலிருந்து பர்சைத் திருடிட்டதா, கடிகாரத்தைத் திருடிட்டதா … கம்பெனி சாரங்கைத்தான் ஆதரிக்கும். கடைசியில் நீ படகிலேருந்து ஜெயிலுக்குப் போகவேண்டியதுதான்!”

அப்படியானால் இப்படியேதான் – அலப்பைத் தரும் அலை யோசையைக் கேட்டவாறு – காலங்கழிக்க வேண்டுமா அவன்? சம்பளமில்லை, பற்றிக்கொள்ள எதுவுமில்லை, இப்படியே இரவும் பகலும் அவன் மிதந்துகொண்டே போகவேண்டியதுதானா?

“தொரையைக் குஷிப்படுத்து எப்படியாவது! படிக்கட்டு வேலை கிடைக்குமா பாரு”

இன்னும் எப்படித்தான் துரையைக் குஷிப்படுத்துவது? அவன் தினம் சாரங்கின் கை கால் உடம்பை அமுக்கி விடுகிறான், சாரங்குக்கு உடலில் எண்ணெய் தடவி விடுகிறான், தலைவாரிச் சீவி விடுகிறான். கைகால் அயரும் வரை வேலை செய்கிறான். சமையலில் மாலுமியும் அவனுக்குக் கொஞ்சம் உதவி செய்வதால் தான் இன்னும் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறான் அவன். அப்படியும் சம்பளம் இல்லை, சாரங்குக்குத் திருப்தியில்லை. மாறாக அவனுக்கு அபராதம் போடமுடியவில்லையே என்று வருத்தம் சாரங்குக்கு! அதற்காகத்தான் அவன் சில சமயம் நசீமை பட்டினி போட்டு வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் மிச்சப்படுத்துகிறான்.

படகில் அரிசி, உப்பு, வெங்காயம், மிளகாய் இவற்றைத் தருவது சாரங்கின் பொறுப்பு. மற்றவற்றை – எண்ணெய், மசாலா, மீன், காய்கறி – அவரவர் தங்கள் செலவில் போட்டுக் கொள்ள வேண்டும். மாதம் முடிந்தபின் அரிசி, உப்பு,வெங்காயம், மிளகாயின் விலை ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்ளப்படும் – அதுவும் சாரங்கின் இஷ்டப்படிதான்.

“சாரங்கைக் குஷிப்படுத்தனுமின்னாத் திருட்டிலே இறங்கு!” யாரோ நசீமின் காதில் கிசுகிசுத்தான்.

சில சமயம் இந்தப் படகோடு சரக்குத் தோணியொன்றை இணைத்து விடுவார்கள். அந்தத் தோணி நிறைய அரிசி, உப்பு, மிளகாய் போன்ற சரக்குகள் இருக்கும். அத்துடன் சில ஆட்களும் இருப்பார்கள். அவர்களுக்கும் இந்தப் படகின் சாரங்குக்கு மிடையே ஏதாவது ஏற்பாடு இருக்கும்.. படகுக்கு வேண்டிய சரக்குகள் வாங்கிப் போடுவதிலும் கொஞ்சம் பணம் மிச்சப் படுத்துவான் சாரங்க்.

நசீமுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. படகில் வேலை செய்வதில் அவனுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. படகு ஒருநாள்விட்டு ஒருநாள் ஒரே வழியில் பயணிக்கும். அந்தி நேரத்தில் வந்து சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர ஒவ் வொரு சமயம் நள்ளிரவு ஆகிவிடும், ஒவ்வொரு சமயம் மறுநாள் பொழுது புலர்ந்துவிடும். இது ஒன்றுதான் இந்த பயண வாழ்க்கையில் நேரும் மாறுதல். மற்றபடி எல்லாமே அலுப்பைத் தரும் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள்தான். – தண்ணீரின் சலசலப்பு, பயணிகளின் கூட்டம், நங்கூரம் இறங்கி ஏறும் கடகட ஒலி, படிக் கட்டு போடப்படும் போதும் கயிறு இழுக்கப்படும்போதும் எழும் கூக்குரல்கள்..

நசீமுக்கு ஒன்றும் பிடிக்கவில்லை. படகு சில நாட்களுக் கொருமுறை கனக்தியாவுக்குப் போய்வரும். ஆறு இவ்வளவு சிறியதாக இருக்கும், அதன் தண்ணீர் இவ்வளவு குறைவாக இருக்கும் என்று அவன் நினைத்ததே இல்லை. ஆறு ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் போகும், இப்படி வெகு தொலைவ போய்க் கடைசியில் கடலில் சேரும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தான் அவன்.

இருட்டில் தனியாக உட்கார்ந்துகொண்டு தண்ணீரைப் பார்த்துக் கொண்டிருந்தான் நசீம். கறுப்புத் தண்ணீரில் மின் மினிகள் போல் பளபளப்பு.. இன்று நள்ளிரவும் படகு கனக்தியா வுக்கு வந்திருந்தது. நசீமுக்குத் தன் வீடு நினைவு வந்தது. ஊஹூம், அவனுக்கு வீடு வாசல் ஏது? அவனுடைய வீடு வாசலாயிருந்தது இப்போது பிசாசு இருக்குமிடம். பழைய நினைவுகள் வந்தன. அம்மாவின் முகம். “எனக்கு அம்மா இல்லை” என்று அவன் நினைத்துக் கொண்டான். அவனுடைய அம்மா எப்போதோ செத்துப் போய்விட்டாள். இந்தக் கறுப்பு நீரில் தெரியும் நிலவு அவனுடைய அம்மாவின் வெளிறிய முகத்தை நினைவூட்டுகிறது..

பெரிய திருட்டு எதுவும் செய்யமுடியாவிட்டாலும் சின்னஞ் சிறு பொருள்களைத் திருடலாமே அவன்..!

பக்கத்துக் கிராமத்திலிருந்து ஒருவன் இளநீர் விற்க வந்தான். நசீம் அவனிடமிருந்த சாரங்குக்காக இரண்டரையணாவுக்கு இரண் இளநீர் வாங்கினான். நசீம் படகில் ஏறியபிறகு படிக்கட்டு தூக்கப்பட்டது. நசீம் சாரங்கிடமிருந்து ஓரணா வாங்கிக் கரையிலிருந்த இளநீர்க்காரனிடம் எறிந்தான்.

“இன்னும் ஒண்ணரையணா?”

நசீம் வாயைக் கோணி அழகு காட்டினான். இளநீர்க் காரன் ஆற்றங்கரைச் சேற்றையள்ளி நசீம் மீது எரிந்தான். அதற்குள் படகு நகர்ந்துவிட்டது. சேற்றின் ஒரு துளிகூட நசீமின் மேல் படவில்லை. சாரங்கும் நசீமும் சிரித்தார்கள்.

இதே மாதிரி பான்ஸ் பாதாமீனும் கய்ராமீனும் விற்பனைக்கு வரும். அதிலும் கொஞ்சம் திருடுவார்கள். பால்காரன் பானையில் பால் எடுத்து வருவான். மூங்கில் உழக்கால் அளந்து தருவான். நசீம் கரைக்குப்போய் அதை வாங்கிக்கொண்டு படகிலேறுவான். படகிலிருந்து பணங்கொடுப்பதாகச் சொல்வான், கொடுக்காமல் ஏமாற்றிவிடுவான். வயலிலிருந்து பிஞ்சு வெள்ளரிக்காய் கூடை கூடையாக விற்பனைக்கு வரும். அதை மீனோடு சேர்த்துச் சமைக்கலாம், அல்லது தனியாகப் பச்சையாகவே தின்னலாம். “நான் சாரங்கோட வேலைக்காரன். ஒன் காசைக் கொடுத் துடுவேன்” என்று சொல்லி நசீம் வெள்ளரிக்காய் வாங்கிக் கொண்டு படகில் ஏறிவிடுவான். ஆனால் காசு கொடுக்க மாட்டான்.

இவ்வளவு காலத்துக்குப்பின் சாரங்க் அவனுக்கு ஒரு அரைக்கை சட்டை கொடுத்தான். லுங்கி எப்போது கொடுப்பானோ?

ஒருநாள் நசீம் சாரங்கிடம் ஓரணா கேட்டுவிட்டான்

இதுவரை யாரும் துணிந்து சாரங்கிடம் காசு கேட்டதில்லை. சாரங்க் புருவத்தை உயர்த்திக்கொண்டு கேட்டான், “என்ன காசா?”

அசட்டுத் துணிச்சலில் ஒரு பயங்கரத் தவறு செய்துவிட்ட உணர்வு ஏற்பட்டது நசீமுக்கு. அவன் பயத்துடன் விழித்தான்.

“எதுக்கு காசு?” “ஒரு மண்குடுவை டீ குடிக்க..”

உடனே ஒரு பலமான அறை விழுந்தது நசீமின் கன்னத்தில். அவன் நிலைகுலைந்து கீழே விழுந்தான்.

சாரங்க் கர்ஜித்தான், “என்ன அதிகப் பிரசங்கித்தனம்! எங்கிட்டே பீடிக்குக் காசு கேக்கறானே..! பீடி வாங்கணுமாம், பீடி ..! இன்னொரு நாள் கள்ளு போத்தல் வாங்கணும்பான்..! இந்த மாதிரி திமிரு பண்ணினா ஆத்துக்குள்ளே தூக்கி எறிஞ்சிருவேன், ஆமா!”

அழுகையினூடே அம்மாவின் நினைவு வந்தது நசீமுக்கு. அவன் இருட்டில் தண்ணீரைத் பார்த்தவாறு அம்மா செத்துப் போனபின் அவளுடைய முகம் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்ய முயற்சி செய்தான். இந்தக் கற்பனை அவனுக்குத் தெம்பளித்தது. அடியைத் தாங்கிக்கொள்ளத் திராணி ஏற்பட்டது. “அம்மா” என்று கூவியழக்கூட வழியில்லை அவனுக்கு. அந்த நிலையில் விழும் அடியையெல்லாம் வாங்கிக்கொள்ளத்தானே வேண்டும்!

ஆனாலும் இந்தக் கொடுமைக்குள்ளானவர்கள் சாரங்குக் கெதிராக ஒன்று சேர்வதில்லை. அவர்களுடைய புகாரெல்லாம் கடவுளிடந்தான். படகிலிருந்து விடுதலையும் கிடைக்காது அவர்களுக்கு. எப்போது படிக்கட்டு வேலை கிடைக்கும், எப்போது மேல்தட்டு வேலை, கயிறு இழுக்கும் வேலை, நங்கூரம் பாய்ச்சும் வேலை அல்லது இயந்திர வேலை கிடைக்குமென்று எல்லாரும் காத்திருந்தார்கள்.

சாரங்குக்கு வட்டி கொடுத்தோ, லஞ்சம் கொடுத்தோ, அவனுக்காகத் திருடியோ, அவனிடம் அடிவாங்கியோ அவனிடம் நல்ல பெயர் வாங்கிக்கொள்ள அவர்களெல்லாருக்கும் ஆசை.

சாரங்கின் ஆட்சித்திறமை அபாரந்தான்!

நசீம் அன்றிரவே ஒரு பிரயாணியின் செருப்புகளைத் திருடினான். ஆனால் சாரங்க் அவற்றைத் தண்ணீரில் எறிந்த விட்டான். “ஆகா, என்ன மூளை ஒனக்கு! நான் அந்தச் செருப்பைப் போட்டுக்கிட்டேன்னா போலீஸ் என்னைப் பிடிக்காதா?” என்று கேட்டான்.

மறுநாள் நசீம் ஒரு பிரயாணியின் தகரப் பெட்டியைத் திருடினான். ஆனால் அதிலிருந்தவை ஏதோ கோர்ட்டு வழக்கு சம்பந்தப்பட்ட காகிதங்கள், பத்திரங்கள், வரவு செலவுக் கணக்கு நோட்டுகள் இவைதாம். அந்தப் பெட்டியும் ஆற்றில் எறியப்பட்டது.

என்ன செய்தும் சாரங்கின் நன்மதிப்பைப் பெறமுடிய வில்லை அவனால். “உன்னால முடியும், முயற்சி செஞ்சுக் கிட்டேயிரு!” என்று சாரங்க் தன் பார்வையால் அவனுக்கு ஊக்கமூட்டுவதாகத் தோன்றியது. சாரங்க் நசீமின் அசட்டுத்தனத் துக்காக அவனைக் கோபித்துக் கொண்டாலும் அவனை இப்போதெல்லாம் அடிப்பதில்லை. இதுவே உற்சாகமளித்தது நசீமுக்கு.

படகில் வெளிச்சம் மங்கல்; மழை பெய்தால் பயணிகள் நனையாதிருக்கக் கித்தான் கூரையில்லை; ஆண்களும் பெண்களும் தனித்தனியாகத் தங்க அறைகள் இல்லை; ஆனால் தூக்கம் எல்லாருக்கும் வருகிறது. அந்தப் படகில் பிரயாணம் செய்பவர்கள் சீட்டாடியோ, பாட்டுப் பாடிக்கொண்டோ, அரட்டையடித்துக் கொண்டோ இரவைக் கழிக்கும் நடுத்தர மக்கள் அல்லர்; அவர்கள் விவசாயிகள், கூலி வேலை செய்பவர்கள். அவர்கள் பகலில் கடுமையாக உழைத்துவிட்டு இரவில் மரக்கட்டைபோல் தூங்கு வார்கள்.

அலங்கோலமாகக் கிடந்து தூங்கும்போது ஒரு பிரயாணியின் மடியிலிருந்த பணமுடிச்சு வெளியே வந்து தொங்கிக் கொண்டிருக்கும். நசீம் அதை லாவகமாக எடுத்து விடுவான். அதில் எவ்வளவு பணம் இருக்கிறதென்பதை எண்ணிப் பார்க்கலாம் என்று நினைப்பான். அடுத்த துறையில் இறங்கி ஓடிப் போய்விடலாம் என்று எண்ணுவான். ஆனால் இறுதியில் ஏதோ மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவன்போல் அதை எடுத்துப்போய் சாரங்கிடம் கொடுத்துவிடுவான். புலியின் வாயில் போய் விழும் மாடுபோல, சாரங்க் அவனை எப்போதும் அடிக்கிறான், உதைக் கிறான்; அவனோடு சிரித்த முகத்துடன் பேசுவதில்லை; அவனுக்குக் கிடைக்கவேண்டிய உரிமையெதுவும் அளிப்பதில்லை. அப்படியும் அவனுக்கு சாரங்கைத் திருப்திப்படுத்துவதில் அவ்வளவு ஆர்வம். சாரங்க் ஊழியர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளத் தூண்டுகிறான், அவர்களுக்கெதிரான கோள்களைக் காது கொடுத்துக் கேட்கிறான்; அப்படியும் அவனை குஷிப்படுத்த ஊழியர்களிடையே எவ்வளவு போட்டி! சாரங்கின் அன்பைப் பெறுவதில் ஒருவரையொருவர் மிஞ்சிவிட முயற்சி!

“ஏழு ரூவா ஒம்பதரையணாதானா?” மக்பூல் சொன்னான். “இதை வச்சுக்கிட்ட என்ன செய்ய முடியும், கொறஞ்சது நாப்பத்தேழு ரூவாயாவது சேர்றவரையில பிரயோசனமில்லேன்ன நம்ம சாரங்க் துரை சொல்லுவாரு..”

துணிமணி திருடுவதைவிடப் பணங்காசு திருடுவது மேல். தங்கம், வெள்ளி, நகை திருட மடிந்தால் அதைவிட நல்லது. இந்தக் காலத்திலே அவற்றுக்குத்தான் மதிப்பு. அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தக் காகிதப் பணம் வெறும் குப்பை!

இவ்வளவு நாட்களுக்குப் பிறகு நசீமுக்கு ஒரு லுங்கி கிடைத்தது. குடியானவப் பெண்களிடம் நகைகள் ஏது? அதிகமாகப் போனால் மூக்குத்தி, மோதிரம் .. கையில் கண்ணாடி வளையல், தங்கம் கிங்கம் இல்லை.

இல்லையில்லை, ஒருத்தியிடம் நகை நிறைய இருக்கிறது. ஒரு புதுமணப்பெண் புக்ககம் போய்க்கொண்டிருக்கிறாள். அவள் கழுத்தில் தங்க நெக்லஸ், கையில் கங்கணம், காலில் வெள்ளிக் காப்பு, கால் விரலில் மெட்டி. அரக்கு நிறப் புடைவையணிந்த அவள் முக்காடு போட்டுக்கொண்டு ஒரு பக்கம் தூங்குகிறாள். கலியாணத்துக்கு வந்திருந்தவர்கள் ஆளுக்கொரு பக்கம் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். யார் எங்கேயிருக்கிறார் என்று தெரிந்து கொள்ள வழியில்லை. இன்று படகில் ஒரே கூட்டம். இந்த கூட்டத்தில் சரியான தருணம் பார்த்துக் காத்திருந்தான் நசீம்.

அவன் மணப்பெண்ணின் மிருதுவான கழுத்தில் கை வைத்தான். அவனுடைய விரல்கள் நடுங்கவில்லை.

ஒரே இழுப்பில் நெக்லஸைப் பறித்துவிட்டான்.

“திருடன், திருடன்!”

நசீம் கூட்டத்தில் முண்டிக்கொண்டு கொஞ்சம் முன்னேறுவதற்குள் பிரயாணிகள் அவனைப் பிடித்து விட்டார்கள். எல்லாரும் அவனை அடிக்கத் துவங்கினர். சரியான அடி. அங்கு வந்து “என்ன விஷயம்?” என்று விசாரிப்பவன் ஒவ்வொருவனும் தன் பங்குக்கு நசீமை உதைத்தான். மணப்பெண் போட்ட கூச்சலில் அவன் நகையை அவளுடைய படுக்கையோரத்திலேயே போட்டுவிட்டான். அதனாலென்ன? பெண்பிள்ளையின் உடம்பில் கை வைத்திருக்கிறான்! அவளுடைய நகையைப் பறித் திருக்கிறான்! அடி, உதை! முறை போட்டுக்கொண்டு உதை!

“ஐயோ!” ஓலமிட்டு அழுதான் நசீம்.

நீண்ட அங்கியணிந்த சாரங்க் தலையில் படகுத் தொப்பியும் காலில் செருப்புமாக அங்கே வந்து “என்ன ஆச்சு? எம்புள்ளயை ஏன் அடிக்கிறீங்க?” என்று கேட்டான்.

புள்ளயா? எல்லாரும் திடுக்கிட்டனர். சாரங்கோட புள்ளயா?

“ஒங்க புள்ளெயா? வேலைக்காரன்னு நெனச்சோம்!” ஒருவன் சொன்னான்.

“வேலைக்காரனா? பொய்! அவன் என் சொந்தப் புள்ளெ! அம்மா இல்லே அவனுக்கு, அவனை அடிச்சது யாரு?”

“அவன் மணப்பெண்ணோட கழுத்து நகையைப் பறிச் சிருக்கான்..”

“பொய்! நிச்சயம் பொய்தான்! வாங்க, நானே போய்க் கேக்கறேன் அந்தப் பொண்ணை!”

சாரங்க் அந்தப் பெண்ணிடம் போய்க் கேட்டான், “ஒங்க நெக்லஸை யாராவது பறிச்சாங்களா?”

மணப்பெண் முகத்தை மூடிக்கொண்டு தாழ்ந்த குரலில் சொன்னாள், “இல்லே. தூக்கக் கலக்கத்திலே அது நழுவி கீழே விழுந்துடுச்சு..”

லதாபாரி படகுத்துறை நெருங்கிவிட்டது. மாப்பிள்ளை வீட்டார் அங்குதான் இறங்கவேண்டும். படகின் வேகம் குறைந்தது. நங்கூரம் கடகடவென்று கீழே இறங்கியது. துறையில் ஒரு மரத்தோடு கயிறு கட்டப்பட்டது.

“படியை இறக்கு! படியை இறக்கு..! நசீம் எங்கே? அவன் இன்னிக்குப் படிக்கட்டைப் பிடிச்சுக்கட்டும்!” சாரங்க் கத்தினான்.

படகு ஊழியர்களிடையே ஒரே பரபரப்பு. இவ்வளவு சீக்கிரமாக நசீமுக்கு முறையான வேலை கிடைத்துவிட்டதே! திருடி அகப்பட்டுக் கொண்டதில் அதிருஷ்டம் வந்தவிட்டது பயலுக்க! அகப்பட்டுக் கொள்ளாமல் திருடிக் கொண்டிருப் பவர்கள் இன்னும் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் படிக்கட்டிலிருந்து மேல் தட்டுக்குப் பதவி உயர்வு கிடைக்கவில்லை. இந்த நசீம் இன்றைக்குப் படிக்கட்டு, நாளைக்கு மேல்தட்டு, அதற்கு மறுநாள் சுக்கான் – அப்புறம் ஒரேயடியாக சாரங்காக – படகுத் தலைவனாக ஆகி விடுவான்!

“பிடிச்சுக்கங்க, பிடிச்சுக்கங்க..! அவன் சின்னப் பையன். அவனால ஒண்டியாத் தூக்க முடியுமா? எல்லாரும் கூடப் பிடியுங்க!” மேலேயிருந்து அழுத்தந் திருத்தமாக ஆணையிட்டான் சாரங்க்.

சுழல் விளக்கின் ஒளியில் நசீமின் கண்களில் நீர்த்துளிகள் பளபளத்தன.

மணப்பெண் லதாபாரியில் இறங்கப் போகிறாள். அவள் மெட்டி குலுங்க நடந்து வருகிறாள்.

படகின் வெளிச்சம் மரஞ்செடிகளுக்கு மேலே வெகு தொலைவு வரை பரவியிருக்கிறது. நசீம் படிக்கட்டோடு இணைந்த மூங்கிலைப் பிடித்துக் கொண்டிருக்கிறான்.

அவன் மணப்பெண்ணிடம் சொன்னான்,”மூங்கிலைப் பிடிச்சுக்குங்க! இல்லாட்டித் தடுமாறி விழுந்துடுவீங்க.”

“வேண்டாம்” என்று சொல்லிவிட்டு மூங்கிலைப் பிடித்துக் கொள்ளாமலேயே முன்னேறினாள் மணப்பெண்.

பின்னாலிருந்து யாரோ நசீமை இடித்தான். திடுக்கிட்டுத் திரும்பினான் நசீம். அவனை நையப் புடைத்தவன்தான் அங்கே நின்று கொண்டிருந்தான். விளக்கொளியில் அவனை அடையாளம் கண்டு கொண்டான் நசீம். அவன் தான் கஹ்ராலி!

கோல்பானு – மணப்பெண்- வெளிச்சம்படாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தாள். போர்த்தியிருந்த போர்வையால் முகத்தை நன்றாக மூடிக்கொண்டிருந்தாள். படகுத் துறையில் வேற்று மனிதர்களின் நடமாட்டம் அதிகம்.

படிக்கட்டை ஒவ்வொரு படியாகத் தூக்கத் தொடங்கினான் நசீம். கரையையடுத்த, குழம்பிய தண்ணீரின் நிழலில் தாயின் வெளிறிய முகத்தைப் பார்த்தான் அவன்.

மேற்புரத்தில் நின்றுகொண்டு சாரங்க் அவனைத் தாராளமாகப் பாராட்டிக் கொண்டிருந்தான். சாரங்கின் வெள்ளை அங்கியும் வெண்தாடியும் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. சூரியன் மாதிரி பளபளத்தது சாரங்கின் முகம்…

அசிந்த்ய குமார்சென் குப்தா (1903 – 1976)

‘கல்லோல்’ குழுவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். கதை, நாவல், கவிதை, நாடகம், வாழ்க்கை வரலாறு, குழந்தை இலக்கியம் படைப்பதில் சிறந்தவர். கூரிய பார்வை, ஆழ்ந்த மனிதாபிமானம், அளவற்ற பரிவு இவை இவருடைய படைப்புகளில் நிறைந்துள்ளன. நீதித்துறையில் பணிபுரிந்து மாவட்ட நீதிபதியாக ஓய்வு பெற்றார். இவரது கூர்மையான ஆய்வுப் பார்வை கிழக்கு வங்காளத்து ஏழை முஸ்லிம் மக்கள், அரசாங்க அதிகாரிகள், தலைநகரத்தின் உயர் மட்டத்து மனிதர்கள் ஆகிய சமூகத்தின் பல்வேறு பிரிவுகளையும் ஊடுருவிப் பார்த்து இலக்கியம் படைத்தது. இவரது படைப்புகள் மொழியின் நளினத்தில் சிறந்தவை. இவர் ரவீந்திரர் நினைவுப் பரிசு(1975) பெற்றவர்.

– முதல் பிரசுரம், 1946.

– அனைத்திந்திய நூல் வரிசை, வங்கச் சிறுகதைகள், முதற் பதிப்பு: 1997, தொகுப்பு: அருண்குமார் மகோபாத்யாய், வங்கத்திலிருந்து தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.

நன்றி: http://www.projectmadurai.org/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *