சாப வறட்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 18, 2018
பார்வையிட்டோர்: 5,365 
 
 

நாரைக்கிணறு, மணியாச்சியில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் இருக்கும் ஒரு சிறிய கிராமம்.

அந்த ஊர் தண்ணீர் வறட்சிக்குப் பிரபலம். நிஜமாகவே அந்த ஊரில் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காது. ஒவ்வொரு பானைத் தண்ணீருக்கும் ஊரின் பெண்கள் குடத்தைத் தூக்கிக்கொண்டு நான்கு கிலோமீட்டர்கள் சென்று வரவேண்டும். நாய் படாத பாடுதான் நாரைக்கிணறு பெண்களின் பாடு.

இந்தக் கொடுமையால்தான் அந்த ஊரின் ஆண்பிள்ளைப் பையன்களுக்கு எந்தச் சுத்துவட்டார வெளியூர்காரன்களும் தங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளை கல்யாணம் பண்ணிக் கொடுப்பதேயில்லை. அங்குபோய் தங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகள் தண்ணீர் வறட்சியினால் செத்து மடியவேண்டாம் என்கிற ஒரு பாதுகாப்பு உணர்வுதான் காரணம்.

அந்த ஊரில் வசிக்கும் எழுபது வயது இசக்கிமுத்து தேவருக்கு ஊரைப்பற்றிய அனைத்து உண்மைகளும் அத்துப்படி. அன்று மதியம் அவருடைய பக்கத்துவீட்டில் குடியிருக்கும் நாற்பதுவயது சுப்பையாத் தேவர் அவரிடம் அரட்டையடிக்க வந்தார்.

“என்ன ஐயா, இந்த வருசம் தண்ணிக்கொடுமை தாங்கலையே!”

“இது என்ன புதுசால நமக்கு? கடந்த அம்பது வருசமா இதான்ல நிலமை.

நம்ம ஊர்பயலுவ குளிச்சாச்சுன்னு துண்டால தலையத் துவட்டினா, அவங்க கோவணமே நனைஞ்சுருக்காதுல. ஆனா சுப்பையா, இந்தக் கோவணம் நனையாம குளிக்கிற தரித்திரியம் அவங்களுக்கு இப்பதாம்ல…. உனக்குத் தெரியுமா… அம்பது வருஷத்துக்கு முந்தி நாரைக்கிணறு பயல்களோட கதையே வேற..”

“கதையே வேறன்னா?”

“அம்பது வருஷத்துக்கு முந்தி, ஒரே ஒரு நாரைக்கிணறுக்காரன் குளிக்கிற

தண்ணில, ஒரு பெரிய கோயில் யானையயே குளிப்பட்டிடலாம்னா பாத்துக்க, நம்ம பயலுக எப்படி குளிச்சிருப்பானுங்கன்னு. அப்பல்லாம் நம்ம ஊரு மண்ணை சும்மா நோண்டினாலே போதும், ஊத்து தண்ணி பிச்சுகிட்டு வரும்.”

“அப்படீன்னா நம்ம ஊருல மழை பயங்கரமா பேஞ்சிருக்கணுமே !”

“அதையேன் கேக்க, ஐப்பசிமாசம் வந்தாலே அடைமழைதான். ஊரெல்லாம் தண்ணி. கிணறு எது, பூமி எதுன்னு கண்டு பிடிக்கவே முடியாதுல.”

“அது சரிதான் ஐயா… நம்ம ஊர்ல இருக்கிற பழைய நந்தவனங்க மாதிரியோ; கிணறுகள் மாதிரியோ; கம்மாக்கரைங்க மாதிரியோ எந்த ஊர்லயும் நான் பார்த்ததேயில்லை.”

“அப்பம்லாம் நம்ம ஊரு கிணறுகளைச் சுற்றி எப்போதும் நீர்நாரைகள்தான். அதுனாலதான் நாரைக்கிணறுன்னு பேரே. ஐம்பது வருஷத்துக்கு முந்தி குளிச்சு குளிச்சே ஒடம்பு மினுக்கின பயல்கள், இன்னிக்கி கட்டியிருக்கிற கோவணம்கூட நனையாம குளிக்கிறாங்கன்னா பாத்துக்க, நம்ம தலைவிதி எப்படின்னு !?”

“அதான ஐம்பது வருஷத்துக்கு முந்தி பூமியைத் தொட்டாலே ஊத்து வந்த ஊரு, இன்னிக்கி பொட்டல் காடா கெடக்கு; எந்தக் கிணத்துலயும் சொட்டுத் தண்ணியில்ல. நந்தவனங்கள் நாசமா போச்சி, சனங்களுக்கு பாவம் குடிக்கத் தண்ணியில்ல. அது எப்படிங்க ஐயா ஒரு ஊரு இப்படித் தலைகீழா மாறிப்போகும்?”

“ஆமாண்டா….அதேயேன் கேக்க, எல்லாம் ஒரேயொரு பொம்பளைவிட்ட சாபம்டா….”

“என்ன சாபமா ! கொஞ்சம் விவரமா சொல்லுங்க ஐயா…”

“இது அம்பது வருசத்துக்கு முந்தின கதை சுப்பையா. நம்மூரு பக்கத்து ஊரான கங்கைகொண்டான்ல முத்துப்பேச்சின்னு ஒருத்தி இருந்தா. அந்தப் பெண் பிறந்து வளந்த ஊரு நம்ம நாரைக்கிணறுதான். ஆனா அவள கட்டிக்குடுத்த இடம்தான் கங்கைகொண்டான். அந்தப் முத்துப்பேச்சிக்கு ஒரேயொரு செல்ல மவ. பேரு காந்திமதி. காந்திமதிக்கு பத்து வயசா இருக்கும்போதே, முத்துப்பேச்சி புருசன் செத்துட்டான். அதுனால பாவம் காந்திமதிக்கு, அப்பா இல்லாத ஏக்கத்துல கொஞ்சம் புத்தி பேதலிச்சு போச்சு.

“ஐயோ பாவம், பொட்டப்புள்ள.”

“காந்திமதிக்கு ரெண்டு பெரிய குறை. அதுல ஒண்ணுதான் புத்திபேதலிச்ச விசயம்….அதுனால முத்துப்பேச்சி தன் பொண்ணை பொத்தி, பொத்தி வளத்தா.”

“ரெண்டாவது பெரியகுறை என்ன?”

“அத நான் அப்புறம் சொல்லுதேன்…மகளை வெளிய தனியா எங்கயும் அனுப்பமாட்டா. மழை பெஞ்சா மழை பெய்யுது போவாத வெளியேம்பா; வெயில் அடிச்சா வெயில் அடிக்குது, வெளிய போகாதேம்பா; இருபதுவயசு வரையும் இப்படித்தான் காபந்து பண்ணிக்கிட்டு இருந்தா.”

“………………………”

“இந்தக் காந்திமதி ஒடம்புக்குத்தான் இருபது வயசாச்சேதவிர, அவளோட மனசு பத்து வயசுதான்….யார் எதைச்சொன்னாலும் நம்பிருவா.

“ஒருநாள் முத்துப்பேச்சிக்கு உடம்பு சரியில்லை. அவ தம்பி நாரைக்கிணறுலர்ந்து கிளம்பிப்போய் அவளைப் பாத்தான். முத்துப்பேச்சிக்கு, காந்திமதி கல்யாணத்துக்கு முந்தி, எங்கே தான் இறந்துவிடுவோமோ என்கிற பயம் தொத்திக்கொண்டது. தம்பியிடம் பெரிதாக வாய்விட்டு அழுதாள். தன் ஒரே பெண்ணை தம்பியின் மகன்தான் கட்டிக்கொள்ளவேண்டும் என்று வேண்டினாள். பேச்சிக்கு நிறைய சொத்துபத்து இருப்பதால், அவள் தம்பி இந்தத் திருமணத்திற்கு, காந்திமதியின் புத்திபேதலித்த விசயம் தெரிந்தே ஒப்புக்கொண்டான்.

“இருபதுவயது காந்திமதிக்கு தன் மாமன் மகனுடன் சிறப்பாக கல்யாணம் நடந்தது.

“திருமணம் முடிந்து நாரைக்கிணறு கிளம்பும்போது, முத்துப்பேச்சி புது மாப்பிள்ளையிடம் மகளை மிக கவனமாக பார்த்துக்கொள்ளுமாறு கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். அவனும், சரி. எனக்கு எல்லாம் தெரியும்…நீங்க கவலையே படாதீங்க அத்தை” என்றான்.

ஆனாலும் ஊரைவிட்டு மாட்டுவண்டியில் கிளம்பும்போது, என் ராசா, இனி என் பொண்ணு உசிரு உன் கையில. அவளுக்கு நீச்சலடிக்கத் தெரியாது. நம்ம ஊர்ல தண்ணீர் நிரம்பிய எரி, குளம், கிணறு, கம்மாய் அதிகம். அவள வீட்ல மட்டும் தொட்டில மொண்டு குளிக்கச்சொல்லு. வேற எங்கிட்டும் போகக்கூடாதுன்னு சொல்லி, நீதான் அவள பத்திரமா பாத்துக்கணும் ராசா என்று முத்துப்பேச்சி படிச்சு படிச்சு சொன்னாள்.

“அடுத்த ஒருவருடம் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. காந்திமதி புருசனோட ரொம்ப சந்தோசமா இருந்தா. நான்காவது மாதமே உண்டாயிட்டா. பேச்சிக்கு ஒரே சந்தோசம். ஐயிருகிட்ட நாள்பாத்து வளைகாப்பு தடபுடலா நடத்தினா.

“அது ஒரு மழைக்காலம். மதியநேரம். காந்திமதியின் புருசன் உரம் வாங்க திருநெல்வேலி போயிருந்தான். அவளின் மாமனார் வயலுக்கு போயிருந்தார். மாமியார் வீட்டினுள் வேலையாக இருந்தாள். பாவம் காந்திமதி சமத்தாக வீட்டின் திண்ணையில் அமர்ந்து பல்லாங்குழி ஆடிக்கொண்டிருந்தாள். அப்போது அங்குவந்த தெருப்பெண்கள் ஆறுபேர் அவளைக் கட்டாயப்படுத்தி எழுப்பி, அவளை அன்புடன் இழுத்துக்கொண்டு அருகிலிருந்த வயல்காட்டின் தோட்டத்துக் கிணற்றுமேட்டின் மீது போய் நின்றனர்.

“ஒவ்வொருத்தியாக பாவாடையை தங்களின் மார்புவரை இழுத்துக் கட்டிக்கொண்டு அந்த பெரிய கிணற்றில் தொபுக்கடீர் தொபுக்கடீர் என்று குதித்து விளையாடினார். அதைப்பார்த்து காந்திமதி கிணற்றடியில் அமர்ந்தபடியே வயிற்றை தடவிக்கொண்டு பெரிதாகச் சிரித்து மகிழ்ந்தாள்.

“எட்டி காந்தி, நீயும் வந்து விளையாடு…உனக்கு நீச்சலடிக்க நாங்க சொல்லித்தரோம்…பக்கத்துவீட்டு மல்லிகா குதூகலுத்துடன் அவள் கைகளைப்பிடித்து இழுத்தாள். காந்திமதி வேண்டாம், வேண்டாம்னு எவ்வளவோ மறுத்துப் பார்த்தாள். ஒருத்தியும் அத காதுல வாங்கிக்கல காந்திமதியின் கைகளைப்பிடித்து தரதரவென இழுத்து அனைவரும் விளையாட்டாக சிரித்துக்கொண்டே அவளை கிணற்றுக்குள் இழுத்துவிட்டனர்.”

சுப்பையாத் தேவருக்கு புரிந்து போயிற்று… துக்கம் தொண்டையை அடைத்தது.

“ஆனா சுப்பையா…. காந்திமதி வெறும் நீச்சல் தெரியாத கேஸ் மட்டும் இல்லடா. அவள் பாவம் காக்கா வலிப்புக்காரி. காக்காவலிப்பு வர்றவ கிணத்துமேட்டுப் பக்கம் போகலாமா?”

“…………………………”

“அதாண்டா சிக்கலாயிருச்சு…வெறும் நீச்சத் தெரியாதவளா இருந்தா உடனே கிணத்துமேட்டுல இழுத்துப் போட்டிருக்கலாம். ஆனா இது காக்காவலிப்பு பாரு… தண்ணீருக்குள்ள விழுந்த திடீர் சில்லிப்புல உடனே கையையும் காலையும் விக் விக்குன்னு வெட்டி வெட்டி இழுக்க ஆரம்பிச்சுடிச்சு. இதை சற்றும் எதிர்பார்க்காத, கூடப்போன அத்தனை பொம்பளைங்ககளுக்கும் என்னமோ ஏதோன்னு பயம் வந்திருச்சி. அவங்க சுதாரிக்கறதுக்குள்ள, அடுத்த ரெண்டாவது நிமிசத்துல, பிள்ளைத்தாச்சி காந்திமதி கிணத்துக்குள்ள மூழ்கிட்டா சுப்பையா.”

“வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு ஓடிவந்த அவ புருசன், கிணத்துல முங்கி, முங்கி காந்திமதியைத் தேடினான். அவனுடன் ஊர்க்காரர்களும் சேர்ந்துகொண்டு தேடினர். வானம் இருட்டி மழைவேறு பெரிதாகப் பெய்தது. ராத்திரி பூரா தேடியும் காந்திமதியின் பிணம் கிடைக்கல. மறுநாள் விடிகாலைல காந்திமதியின் உடம்பு ஊதிப்போய் வெளியவந்து மொதந்திச்சு. ஒரு ஊதிப்போன பிள்ளைத்தாச்சியின் உடம்பை பார்ப்பது எவ்வளவு பெரிய சோகமான விஷயம் தெரியுமாடா?… இசக்கித்தேவரின் குரல் உடைந்தது.

சுப்பையாவின் கண்கள் கலங்கியது.

“முத்துப்பேச்சிக்கு சேதி போனதும் எப்படி இருந்திருக்கும் சுப்பையா?

உடனே பதறியடிச்சு கங்கைகொண்டானிலிருந்து வயக்காட்டு வழியா தலைதெறிக்க ஓடியே நம்ம ஊருக்கு வந்தாடா….

“ஒரேமகளின் பிணத்தைப் பாத்து வெறிபிடிச்ச மாதிரி கதறி அழுதா; ரோட்ல புரண்டு புரண்டு அழுதா; மகளைப் பிணமாக்கிய கிணத்துக்குள்ள மண்ணைவாரி வீசினா; ஒத்தமவள் செத்துப்போனாளே என்கிற கோபத்தில்,

ஊர் சனங்கள்லாம் தண்ணியே இல்லாம சாவுங்கடான்னு சாபம் கொடுத்தா. அப்படியும் ஆத்திரம் அடங்காமல் தலைவிரி கோலத்தில்,

குடிக்கத் தண்ணி இல்லாம நாசமாப் போங்கடா; ஒங்க ஊர்ல இருக்கிற கிணறு ஒண்ணு பாக்கியில்லாம அழிஞ்சு போகட்டும்; ஈரேழு தலைமுறைக்கும் பொட்டு மழையில்லாம ஊரெல்லாம் பொட்டல்காடா போகட்டும்னு முத்துப்பேச்சி குடுத்தா பாரு சாபம்…

“அதோடசரி, நாரைக்கிணறுல நெசமாவே இன்னிக்கி வரைக்கும் சுத்தமா ஒருபொட்டு மழை கிடையாது; குடிக்கிறதுக்கு ஒரு சொம்புத் தண்ணியும் கிடையாது; பாலைவனமாகவே மாறிப்போச்சு ஊரு; அப்படீன்னா பாத்துக்க அவ சாபம் எம்புட்டு சக்தியான சாபம்னு.”

“ஐயா, ஏதோ அஞ்சாறு பொட்டப்பிள்ளைங்க காந்திமதிய கெணத்துக்கு கூட்டிட்டுப் போனாளுக, அதுக்கு என்னத்துக்கு ஒரு ஊரையே சபிச்சி நாசம் பண்ணனும்?”

“மதுரையையே கண்ணகி எரிச்ச வம்சம்டா நாம…”

“இதுல முத்துப்பேச்சி பக்கமும் ஒரு தப்பு இருக்கே? மகளுக்குத்தான் அப்பப்ப காக்காவலிப்பு வரும்னு தம்பிகிட்டயும், கட்டிக்கிட்ட அந்தப் பயல் கிட்டயும் ஒருவார்த்தை சொல்லி வச்சிருக்கலாமே !”

“அதைத்தாண்டா முத்துப்பேச்சி பெரிய ரகசியமா மறைச்சி வச்சிருந்தா. அது தெரிஞ்சு போச்சுன்னா, தம்பிக்காரன் அவனோட மவனுக்கு கட்டிக் குடுக்க மாட்டேன்னு சொல்லிப்புட்டான்னா? அவளும் மறைச்சா, அவ வாய்ப்பூட்டுப் போட்டு வளத்த மவளும் அதப்பத்தி யார்கிட்டையும் மூச்சு விடல. காக்காவலிப்பு வருங்கிற விசயத்த கிணத்துல முங்கி அவ சாகிற வரைக்கும் அம்மேயும் பொண்ணும் மறைச்சுட்டாங்கடா…அதமட்டும் சொல்லியிருந்தா அன்னிக்கி அவ புருசன் சத்தியமா உரம் வாங்க போயிருக்கமாட்டாண்டா…அந்தப் புள்ளத்தாச்சி அநியாயமா செத்திருக்கமாட்டா.”

“அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்லுதீங்க?”

“அந்தக் காந்திமதி புருசன் நான்தாண்டா சுப்பையா.”

இசக்கித்தேவர் கண்ணீர்விட்டுக் கதறி அழுதார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *