சாதிகள் இல்லையடி பாப்பா

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 22, 2014
பார்வையிட்டோர்: 12,473 
 
 

“சாதிகள் இல்லையடி பாப்பா….குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
இரண்டாம் வகுப்புக்குத் தமிழ் பாடம் படிப்பித்துக் கொண்டிருந்த தர்மலிங்கம் மாஸ்டர் இரண்டாம் வகுப்புத் தமிழ் புத்தகத்திலிருந்த இப்பாடலை இராகத்தோடு பாடினார்.இராகமாகப் பாடினாலும் குரலில் உணர்ச்சியோ சுருதியோ இல்லை கேலித்தனம் தொனித்தது.. அவர் பாடி முடித்ததும் மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து அதனைப் பாடினார்கள் இரு கைகளையும் தட்டி, ஒரு காலால் நிலத்தில் தாளம் போட்டு உற்சாகமாகப் பாடிக் கொண்டிருந்த மாணவர்களின் குரலில் பாட்டின் பொருளைப் புரிந்து கொண்ட உணர்ச்சி தெரிந்தது.

அது ஒரு கிராமத்துப் பள்ளிக்கூடம். ஸ்கிறீனால் மூடி அடைக்கப்பட்ட வகுப்பறைக்குள் புழுக்கம் அதிகமாகி வியர்த்துக் கொட்டியதால் பள்ளிக்கூடத்துக்குப் பின்னால் இருக்கும் மாமரத்து நிழலுக்குள் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார் தர்மலிங்கம் மாஸ்டர் அடி மரத்தில் சாத்தியபடி கதிரை போட்டு அமர்ந்திருந்தார் அவர். மாணவர்கள் அவர் முன்னால் அரை வட்டமாக நின்றிருந்தார்கள்.

உற்சாகமாகப் பாடிக்கொண்டிருந்த மாணவர்களை ஒவ்வொருவராகக் கவனித்துக் கொண்டு வந்த தர்மலிங்கம் மாஸ்டர் பிரசாத்தை கண்டதும் கேலியோடு சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“பிரசாத்! பாட்டின்ரை கருத்து உனக்கு நல்லாய் விளங்குது போலை கிடக்கு . அதுதான் துள்ளித் துள்ளிக் கைதட்டிப் பாடிறாய். நீ வீணாய்க் குதிக்காதை அதொண்டும் நடக்காது” சொல்லி விட்டுக் கேலியாக் கண் சிமிட்டினார் பிரசாத்தின் பிஞ்சு மனம்வாடிப் போக அவன் சங்கடப்பட்டுத் தலைகுனிந்தான். இப்படித்தான் கொஞ்ச நாள்களுக்கு முன்னும் அவனுடைய மனதை புண்படுத்தினார்.

அன்று வகுப்பு முடிகின்ற நேரம் தர்மலிங்கம் மாஸ்டருக்குத் தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது
“கோபி கிணற்றிலை கொஞ்சம் தண்ணி அள்ளிக் கொண்டு வா”என்று மொனிற்றராக இருக்கும் கோபியை அனுப்பினார் தண்ணீர் அள்ளப் போனவன் வெறுங்கையோடு திரும்பி வந்தான்.
“வாளி கழன்று கிணத்துக்கை விழுந்திட்டுது வாத்தியார், எப்பிடித் தண்ணீர் அள்ளிறது “ என்றான்.

“அட எனக்குத் தலை வலிக்குது மருந்து குளிகை விழுங்கிறதுக்குக் கூடத் தண்ணி இல்லையே” தலையை அமுக்கியவாறு சலித்துக் கொண்டார் தர்மலிங்கம் மாஸ்டர்.

“வாத்தியார் வாத்தியார் நான் வீட்டிலையிருந்து றிங்ஸ் போத்திலுக்கை , தண்ணி கொண்டு வந்தனான்.. இந்தாங்கோ இந்தத் தண்ணியோடை மருந்துக் குளிசையை விழுங்குங்கோ” வாத்தியார்” பிரசாத் ஆவலுடன் தன் தண்ணீர்ப் போத்தலை தர்மலிங்கம் மாஸ்டரிடம் நீட்டினான். அவருக்கு வந்ததே கோபம். மேசையிலிருந்த தடியை எடுத்து ஓங்கினார்.

“டே! நான் உன்னைத் தண்ணி கேட்டனானே. உன்ரை வீட்டுத் தண்ணியை நான் குடிக்க மாட்டன் என்பதும் உனக்குத் தெரியாதே” பிரசாத்தை உறுக்கினார் உண்மையில் அப்படி ஒரு விஷயத்தைப் பற்றி அவனுக்குத் தெரியாது. இந்தச் சமுதாயத்தின் பாகுபாடுகள் விகாரங்கள் பற்ரி அறிந்து கொள்ளாத பிஞ்சு மனம் அவனுடையது தன் ஆசிரியர் மருந்துக் குளிசை
விழுங்கத் தண்ணீர் இல்லாமல் போய் விட்டதே என்ற ஆதங்கத்தில் தான் குடிக்கக் கொண்டு வந்த தண்னீரை அன்போடு கொடுத்தான்.

தர்மலிங்கம் மாஸ்டரின் தடித்த மனதுக்கு அந்த அன்பை உணரத் தெரியாததால் அவர் ஆத்திரப்பட்டார் விஷயத்தை அவ்வளவோடு, அவர் நிறுத்தியிருந்தால் , பிரசாத்தும் அதனை மறந்திருப்பான். ஆனால் அவர் இன்னொரு மாணவனான கோபியிடம் இருந்த தண்ணீர்ப் போத்தலை வாங்கி அந்தத் தண்ணீரைக் குடித்தார். பிரசாத்துக்குப் பெரிய அடியாக இருந்தது. மிக அவமானமாக இருந்தது.

அந்த நினைவு மாறுமுன் இந்த கேலியால், பிரசாத் தலை குனிந்து சங்கடப்பட்டுக் கொண்டிருக்க நல்ல வேளையாய் அந்தப் பாடம் முடிந்து மணி அடித்தது.அடுத்த பாடத்துக்காக மாமரநிழலை விட்டு வகுப்பறைக்குப் போனார்கள்.
தர்மலிங்கம் மாஸ்டருக்கும் பிரசாத்தை கேலி செய்த விஷயம் கொஞ்சம் மனதைக் குடைவதாகத்தான் இருந்தது. அவர் தன் இயற்கையான சுபாவத்தால் , அவரிடம் குடி கொண்டிருக்கும் அந்தத் தடிப்பினால் தன் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் பிரசாத் போல் சில குறிப்பிட்ட மாணவர்களை ஏதேதோ சொல்லி வேதனைப்படுத்தி விடுவார்.
இப்படிப் பல தடவைகள் செய்து, சில தடவைகள், அதிபரின் காதுக்கு விஷயம் எட்டி அதிபரால் கண்டிக்கப்பட்டும் இருக்கிறார். ஒரு தடவை மேலிடம் வரை முறைப்பாடு போய், பெரிய பிரச்சனையாகி விட்டது. அதிபர் முற்போக்குச் சிந்தனையாளர் சமத்துவக் கொள்கையுடையவர் எத்தனையோ விதமாகப் புத்தி சொல்லிப் பார்த்தார் நயமாகவும் பவ்யமாகவும் எடுத்துச் சொன்னார், தர்மலிங்கம் மாஸ்டர் போல் தடிப்புப் பிடித்தவர்கள் புத்தி சொல்லித் திருத்தக்கூடிய ஆட்களல்ல.

அது வேறொரு வகுப்பில் நடந்தது பிரசாத்தின் ஒன்று விட்ட சகோதரியான சிந்துஜா ஆசிரியர் கொடுத்த பாடத்தைச் செய்து விட்டு , வாத்தியார் இந்தாங்கோ” என்று தன் கொப்பியை தர்மலிங்கம் மாஸ்டரின் கைகளில் கொடுக்க , அவர் வெடுக்கென்று சொன்னார்.

“என்னடி சிந்துஜா என்னோடை உரசிற மாதிரி வந்து நிற்கிறாய் கொஞ்சம் தள்ளி நில் வர வர உனக்குத் துணிவு கூடுது”

சிந்துஜா சிறியவளாக இருந்தாலும் அவர் சொன்னது அவளுக்கு முகத்தில் அடித்த மாதிரி இருந்தது அவள் வீட்டிற்குப் போனதும் தகப்பனிடம் சொல்லியிருக்கிறாள். தகப்பன் படித்தவன், அவரைப் பற்றி மேலிடத்துக்கு முறைப்பாடு செய்து விட்டான்.. அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிபருக்கு அறிவித்தல் வந்தது அதிபர் உடனேயே தர்மலிங்கம் மாஸ்டரைத் தன் அலுவலக அறைக்கு அழைப்பித்தார்.

“ஏன் மாஸ்டர் இப்படிப் பத்தாம் பசலித்தனமாய் மற்றவர்களை வேதனைப்படுத்திறியள்? உங்கள் மேல் நடவடிக்கை எடுக்கச் சொல்லி அறிவித்தல் வந்திருக்கு வேறை நான் என்ன செய்ய முடியும் உங்களை வேறிடத்துக்கு மாற்றி அனுப்பி விடுறன்.”

தர்மலிங்கம் மாஸ்டர் அதை எதிர்பார்க்கவில்லை காலில் விழாத குறையாக அதிபரிடம் கெஞ்சினார்
“என்னை வேறிடத்துக்கு மாற்றிடாதையுங்கோ நான் பெரிய குடும்பஸ்தன் ஊரோடையிருந்தே, செலவுகளை சமாளிக்க முடியாமலிருக்கு”

அவர் ஏற்கெனவே வெளியிடங்களில் ஆசிரிய சேவை முடித்துத்தான் ஊருக்கு வந்தவர் அவருடைய சம்பளம் குடும்பத்துக்குப் போதவில்லை ஊரோடு இருக்கிறபடியால் பின்னேரங்களில் விடுமுறை நாட்களில் வீட்டு வளவுக்குள் தோட்டம் செய்கிறார். அதனாலும் அவருக்கு வருமானம் கிடைக்கிறது.

வேறிடம் மாற்றி விட்டால் தோட்டமும் செய்ய முடியாது கிடைக்கிற சம்பளமும் அங்குமிங்குமாய்ப் பங்கிட பற்றாக்குறையாகத்தான் இருக்கும். அதனால்தான் அவர் தன்னை மாற்ற வேண்டாமென்று அதிபரிடம் கெஞ்சினார். ஆனால் தன் செய்தது தவறென்று மன்னிப்புக் கேட்கவுமில்லை தன் கொள்கை பிழையென்று ஒத்துக் கொள்ளவுமில்லை. அதிபரோ வெட்டொன்று துண்டு இரண்டாகச் சொல்லி விட்டார்.
.
“இதுதான் கடைசி எச்சரிக்கை என்று நினையுங்கோ மாஸ்டர்.. இனி இப்பிடி முறைப்பாடு வந்தால் உங்களிடம் சொல்லாமலே மாற்றி விடுவேன்“

அதன் பிறகும் அவருடைய தடிப்பும் கொள்கையும், மாறாமலிருந்த போதும் மாணவர்களிடம் அதைக் காட்டிக் கொள்ளாமலிருக்க முயன்றார். ஆயினும் அவரது உள்மனத்து எண்ணத்தின் வெளிப்பாடாய், பிரசாத்தைக் கேலி செய்து விட்டு அதிபருக்குத் தெரிய வந்தால் தன்னை மாற்றி விடுவாரோஎன்று பயந்தார்.

மறுநாள் சனிக்கிழமை/ பிரசாத் விஷயத்தை மறந்தவராய் தோடத்துக்குள் புகுந்து களை பிடுங்கிக் கொண்டிருந்தார்.

“வாத்தியார் ஐயா! தோட்டத்திலை ஏதும் வேலை கிடக்கோ? வேலன் கேட்டுக் கொண்டு அருகில் வந்தான். வேலன் பிரசாத்தின் பாட்டன்.

“ஓம் வேலன்/ கத்தரிக்குப் பாத்தி கட்ட வேணும் நீ வந்தது நல்லதாய்ப் போயிற்று. அந்த மண்வெட்டியை எடுத்துக் கொண்டு வா” என்றார் தர்மலிங்கம் மாஸ்டர். தோட்டத்தில் அவரால் செய்ய முடியாத கொத்து வெட்டு வேலைகளைச் செய்து கொடுக்கும் வேலன் , மண்வெட்டியை எடுத்து வந்துபாத்தி வரைய ஆரம்பித்தான்.

“நான் போய் உனக்குத் தேத்தண்ணி கொண்டு வாறன்”

“தேத்தண்ணி பிறகு குடிக்கலாம் நில்லுங்கோ ஐயா! ஒரு விஷயம் சொல்ல வேணும்” என்றான் வேலன் அவர் புருவத்தை உயர்த்தியபடி நின்றார்.

“நேற்று என்ரை பேரன் பள்ளிக்கூடத்தாலை வந்து ஒரே அழுகை. நீங்கள் மற்றப் பிள்ளைகளுக்கு முன்னாலை தன்னைக் கேலியாய் ஏதோ சொல்லிப் போட்டியளாம்”

வாத்தியார் சரியாய்த்தான் சொல்லியிருப்பார் . அதுக்கேன் அழுகிறாய் என்று நீ கேட்டிருக்கலாமே” தர்மலிங்கம் மாஸ்டர் அவசரமாய்ச் சொன்னார். வேலன் மண்வெட்டியைப் போட்டு விட்டுக் கத்தரிச் செடியை விலக்கிக் கொண்டு வெளியே வந்தான்.

“நான் சொன்னால் அவன் கேட்பானே என்ரை மகன் சங்கர் சொல்லுறான். அவையைப் போலைதானே எங்களுக்கும் இரண்டு கைகள்.. இரண்டு கால்கள் இருக்கு எங்களுக்கு ஏதோ கொம்பு முளைச்சிருக்கே ஏன் எங்களை வித்தியாசமாய் நினைக்கினம். வாத்தியார் சொன்னது பிழை, ஏதோ நாங்கள் அப்பிடிப் பழகினதாலை அடங்கி ஒடுங்கி இருந்திட்டம். அவன்கள் படிச்சு உழைச்சு நாலு பேரோடை பழகி எல்லா விஷயமும் விளங்கி வைச்சிருக்கிறாங்கள். அவங்கள் என்னைப்போலை இருப்பாங்களெண்டு நினக்காதையுங்கோ.. வாத்தியார் அந்தக் காலம் மலையேறிப் போச்சுது” வேலன் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிவிட்டு மூச்சு வாங்கினான்.

தர்மலிங்கம் மாஸ்டருக்கு ஆத்திரமும் வந்தது . அதிர்ச்சியாகவும் இருந்தது.

“வேலா! உன்ரை மேனுக்கு மட்டுமில்லை உனக்கும் ஏதோ விளங்கி விட்டுது. நீ இனி எனக்கு வேலை செய்ய வேண்டாம்.“
என்றார் கோபமாக.

“ஐயா! எங்களை அப்பிடி நினயாதையுங்கோ. நான் பழைய ஆள் உங்கடை வீட்டுப் படியிலை மறந்து போய் ஏறினாலே, வேலா கீழே இறங்கு என்பீங்கள். நான் கோபிச்சிருக்கிறனே? நாங்கள் அப்பிடிப் பழகி விட்டம் ஆனால் என்ரை பேரன் அப்பிடியிருப்பான் எண்டு நினைக்காதையுங்கோ”

“வேலா! நீ நல்லாய்க் கதைச்சுப் பழகி விட்டாய் இனி என்ரை வளவுக்கையே கால் வைக்காதை போ”

வேலன் மன்னிப்புக் கேட்டும் அவர் ஆறவில்லை. வேலன் தன்னை அவமானப்படுத்தி விட்டான் என்று நினைத்துக் கொண்டார். அதன் பிறகு தானே தோட்ட வேலைகளயும் செய்தார் தோட்ட வேலையை நிறுத்தினாலும் பள்ளிக்கூடச் சம்பளம் அவரது குடும்பத்துக்குப் பற்றாது., மூன்று பெண் பிள்ளகள். கடைசியாக ஒரு பையன் .குடும்பப் பொறுப்பு பெரியதாக இருந்தது. மூத்த மகளுக்குக் கல்யாணம் பேசத் தொடங்கிக் கேட்ட சீதனத்தைக் கொடுப்பதற்குள் திக்குமுக்காடிப் போனார். மூத்த மகளின் கல்யாணம் முடிந்து ஆறு வருடங்களின் இரண்டாவது மகளுக்குக் கல்யாணம் செய்து வைத்த போது, ,அவருக்கு ஓய்வுபெறும் வயதாகி விட்டது மூன்றாவது மகளின் பொறுப்பு இருந்ததால், வயது வந்தும் ஓய்வு பெறாமல் மேலும் இரண்டு வருடங்கள் சேவை நீடிப்புப் பெற்றுப் பள்ளிக்கூடம் போனார்.

அவருக்கு இவ்வளவு வயதாகி ,உலகத்திலும் இவ்வளவு மாற்றங்கள் நேர்ந்த பிறகும் கூட, மனிதர்களிடையே பாகுபாடு பார்க்கும் அவருடைய தடிப்புப் போகவேயில்லை. அவருடைய பள்ளிக்கூட வாழ்க்கையில், மற்றவர்களிடம் பிடிபடாமலே.எத்தனையோ தடவைகள் தடிப்பைக் காட் டியிருக்கிறார்.

அன்று ஏதோ சிந்தனையுடன் பள்ளிக்கூடத்திலிருந்து, திரும்பிக் கொண்டிருந்த போது, எதிரே வந்த மோட்டார் வண்டி ஒன்று, அவரோடு மோதிக் கொண்டது. அவரது சைக்கிள் ஒரு புறத்தில் கிடந்தது. முதலுதவி செய்தும், இரத்தப் பெருக்கை நிறுத்த முடியவில்லை நல்ல வேளையாக அவரை அடித்து வீழ்த்திய மோட்டார் வண்டிக்காரர் அவரை அப்படியே விட்டு விட்டு ஓடாமல் தன் மோட்டார் வண்டியில் அவரைத் தூக்கிப் போட்டுக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில்சேர்த்தார் அதன் பிறகு தர்மலிங்கம் மாஸ்டரின் வீட்டைத் தேடிப் போய் விஷயத்தைச் சொன்னார். மனைவியும் மக்களும் மருமக்களும் அலறியடித்து ஆசுபத்திரிக்கு வந்தனர். மகன் பக்கத்தில் இல்லை வேறிடத்தில் படித்துக் கொண்டிருந்தான்.

தர்மலிங்கம் மாஸ்டருக்கு உடனடியாக இரத்தம் ஏற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆசுபத்திரியின் இரத்த வங்கியில் இரத்தம் பற்றாக்குறை, இருக்கிற இரத்தமும் அவருடைய இரத்த வகையாகஇல்லாமல் வேறு குரூப் ஆக இருந்தது.. உடனடியாக இரத்தம் ஏற்றாவிட்டால் அவருடைய உயிருக்கே ஆபத்து என்கிற நிலை. இரத்தம் கொடுக்க ஆளை ஏற்பாடு செய்வது உங்கள் பொறுப்பென்று, அவருடைய மனைவியிடம் சொல்லி விட்டார்கள். அவள் முதலில் மூத்த மருமகனை இரத்தம் கொடுக்கும்படி கேட்டாள்.

“அம்மா அவர் கிட்டடியிலை காய்ச்சலாய்க் கிடந்தவர் அவர் எப்படி இரத்தம் கொடுக்கிறது”

என்று மூத்த மகள் குறுக்கிட்டுச் சொன்னாள்.

“காய்ச்சல் சுகமாகி விட்டுதுதானே. மூத்த மருமகன் செய்யாமல் வேறை ஆர் இந்த நேரத்திலை உதவி செய்யிறது” அவள் கெஞ்சிக் கேட்ட பிறகுதான் மூத்த மருமகன் இரத்தம் கொடுக்கச் சம்மதித்தான். உடனடியாக அவனிடமிருந்து இரத்தம் எடுத்துச் சோதித்துப் பார்த்து விட்டுக் கை விரித்தார்கள். அவனுடையது வேறு குரூப் இரத்தமாம்.. அவள் அழுது புலம்பி இரண்டாவது மருமகனிடம் கேட்டாள்.

“நீங்கள் தான் அவருடைய உயிரைக் காப்பாற்ற வேணும் . மறுக்காமல் அவருக்கு இரத்தன் குடுக்க வேணும்”

அவன் மறுக்க முடியாமல் அரை மனதோடு சம்மதித்தான். அவனுடைய இரத்தமும் தர்மலிங்கம் மாஸ்டரின் இரத்த வகையைச் சேராத வேறு குரூப் இரத்தமாக இருந்தது. படிப்புக் காரணமாக வேறிடம் போயிருக்கும் மகன் வந்து விட்டால் அவனுடைய இரத்தம் தந்தைக்குப் பொருந்தி வரும்.. ஆனால் போக்குவரத்துச் சீரில்லாத நிலையில் அவனுக்குச் செய்தி போய் , அவன் வந்து சேரும் வரை தர்மலிங்கம் மாஸ்டரின் உடம்பு தாங்காது.

அவருடைய மனைவியோ உற்றார் உறவினரிடம் போய்க் கை நீட்டினாள், கணவருக்கு இரத்தம் தாருங்கள்” என்று. எல்லாரும் ஏதோ சாக்குப் போக்குச் சொன்னார்கள் கடைசியில் அவள் டாக்டரின் காலில் விழுந்தாள் “ஐயா! எப்படியாவது அவரின் உயிரைக் காப்பாற்றுங்கோ முடியுமானால் என்ரை இரத்தத்தை எடுத்து அவருக்கு ஏற்றியாவது காப்பாற்றி விடுங்கோ”

“உங்களிடமிருந்து இரத்தமெடுக்க முடியாது. நான் வேறு யாரிடமாவது கேட்டுப் பார்க்கிறேனம்மா”

என்று ஆறுதல் சொல்லி விட்டுப் போனார். அந்த விஷயமாக அவர் வெளியில் வந்த போது ,எதிரே வந்து கொண்டிருந்தார்கள். மருத்துவ மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கும் அந்த மாணவர்கள் ப்ராக்ரிஸ் செய்வதற்காக ஆசுபத்திரிக்கு வந்து கொண்டிருந்தார்கள் அவகளைக் கண்டவுடன் சந்தோஷத்துடன் நின்றார் டாக்டர்.

“தம்பிமாரே! ஒரு பேஷன்ற் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.அவசரமாய் அவருக்கு ரத்தம் வேண்டியிருக்கு.உங்களிலை யாராவது ரத்ததானம் செய்யுங்களேன்”

“ஓம் சேர்! நாங்கள் ரத்தம் தாறம்.”

மனித நேயம் முற்றாய் அழிந்து விடவில்லை என்பதை நிரூபித்த்தது அவர்களின் பதில். டாக்டர் அவர்களைக் கூட்டிக் கொண்டு போய் இரத்தப் பரிசோதனை செய்தார். முதலாம் ஆளின் இரத்தம் வேறு குரூப் ஆக இருந்தது. இரண்டாம் ஆளின் இரத்ததைச் சோதித்த போது டாக்டரின் முகம் மலர்ந்தது. அவனது இரத்தம் தர்மலிங்கம் மாஸ்டரின் இரத்ததைச் சேர்ந்ததாக இருந்தது.. அவனுடைய இரத்ததை எடுத்து, தர்மலிங்கம் மாஸ்டருக்கு ஏற்றினார் டாக்டர்.

அந்தப் பல்கலைக்கழக மருத்துவ மாணவனின் இரத்தம் , அவருடைய உடம்புக்குள் புகுந்து இரத்ததுடன் இரத்தமாய்க் கலந்து அவரின் உயிரைக் காப்பாற்றியது.

தர்மலிங்கம் மாஸ்டர் மெதுவாகத் தேறிக் கொண்டு வந்தார், காயங்களும் ஆறிக் கொண்டு வந்தன அதற்கிடையில் தன் மனைவியிடம் கேட்டு எல்லா விஷயங்களும் அறிந்திருந்தார். தனக்கு விபத்து நேர்ந்ததும், உடனடியாக இரத்தம் தேவைப்பட்டதும் மருமக்கள் இருவரும் இரத்தம் தரப் பின்வாங்கி பின் அரை மனதோடு சம்மதித்ததும் அவர்களின் இரத்தம் தனக்குப் பொருந்தாமலிருந்ததும், மனைவி மிக அலைந்து கடைசியில் டாக்டர் யாரிடமோ இரத்தம் பெற்று ஏற்றியதுமான, அத்தனை விஷயங்களும் மனைவி சொல்லியிருந்தாள். அவருக்கு ஓர் ஆசை ஏற்பட்டது தனக்கு இரத்தம் தந்து தன் உயிரைக் காப்பாற்றியவன் யாரென்று அறிந்து நன்றி சொல்ல வேண்டும்.

அன்று டாக்டர் அவரைப் பார்க்க வந்ததும் கேட்டார்.

“எனக்கு இரத்தம் தந்தது ஆர் டாக்டர்?”

“அவன் ஒரு மெடிக்கல் ஸ்ருடன்ற். ,இங்கு வேலை பழக வந்து போறவன்.. பிரசாத் என்று பெயர் சொன்னதாக ஞாபகம்”

“எந்தப் பிரசாத்? யூனிவேசிற்றியிலை டாக்டருக்குப் படிக்கிறானா? அப்பிடியென்றால் அவன் வேலன்ரை பேரன் பிரசாத் ஆக இருக்குமோ? ஐயையோ அவனுடைய இரத்ததை ஏன் எனக்கு ஏற்றினீங்கள் டாக்ட? சீ! பிரசாத்தின்ரை இரத்தமா என்ரை உடம்பிலை ஓடுது”

உதட்டைச் சுளித்து அருவருப்புக் காட்டினார் தர்மலிங்கம் மாஸ்டர்

“ஏன் இப்பிடி அருவருக்கிறீர்கள்? அவன் உங்களுக்குப் பகைவனா? என்றார் டாக்டர்.

“பகைவனில்லை அந்தப் பிரசாத்தின்ரை வீட்டிலை பச்சைத்தண்ணி கூட வாங்கிக் குடிக்க மாட்டன்.அப்படியிருக்க அவன்ரை இரத்ததை எனக்கு ஏற்றிவிட்டிருக்கிறீர்களே”

“ஓகோ”

என்றார் டாக்டர் கேலியாக . தர்மலிங்கம் மாஸ்டரின் மனப்பாங்கும் தடிப்பும் அவருக்குத் தெரிந்து விட்டது.

“அவன் இரத்தம் தந்திருக்காவிட்டால் நீங்கள் செத்தெல்லோ இருப்பீங்கள். இப்படி உட்கார்ந்து பேச முடியுமே. உங்கடை உயிரை எப்படியாவது காப்பாற்றுங்கோ என்று உங்கடை மனைவி மன்றாடிக் கேட்டா. நல்ல வேளையாய் இந்தப் பிரசாத் இரத்தம் தரச் சம்மதித்த்து பெரிய விஷயமல்ல அவனுடைய இரத்தமும் உங்கடை இரத்தமும் ஒரே குரூப் ஆக இருந்ததுதான் முக்கியமான விஷயம் ஆண்டவனுடைய விளையாட்டைப் பார்த்தீர்களா உங்கடை உடம்பிலை ஓடிற அதே இரத்தம் தான் பிரசாத்தின் உடம்பிலும் ஓடுது. இன்னொரு விஷயத்தைப் பாருங்கோ நீங்கள்தான் அவனுடைய இரத்ததில் வெறுப்பைக் காட்டுறியள், ஆனால் உங்கடை உடம்போ அவனுடைய இரத்தத்தை அப்படியே ஏற்று புத்துணர்ச்சி பெற்று இயங்கிக் கொண்டிருக்கு. உங்கடை உடம்பு அவனுடைய இரத்ததை வேண்டாமென்று தள்ளவில்லையே இதை கொஞ்சம் யோசியுங்கோ .யோசிச்சுப் பதில் சொல்லுங்கோ”

இவருக்கு இருக்கிற தடிப்புக்கூட ஒரு நோய்தான். அந்த நோயையும் தீர்க்கத்தான் வேண்டும் என்பது போல், அடுத்த நோயாளியைப் பார்க்கப் போகாமல் பதிலுக்காகக் காத்து நின்றார் டாக்டர்.

“பிரசாத் வீட்டுப் பச்சைத்தண்ணியைக்கூடக் குடிக்க மாட்டன் என்று வீம்பு காட்டினன் ஆனால் அவனுடைய இரத்தம் , எனக்குத் தெரியாமலே என் உடம்புக்குள் புகுந்து , தெம்பு தந்து எனக்கு உயிர்ப்பிச்சை அளிச்சிருக்கு.” எத்தனையோ வருடங்களாய் , அவருள் குடி கொண்டிருந்த அந்தத் தடிப்பு, இந்த இரண்டு நிமிட சிந்தனையில் கரையத் தொடங்கியது.

ஒரு மாதத்திற்குப் பின் அவர் சுகமாகி ஆசுபத்திரியிலிருந்து வீட்டுக்கு வந்த போது அது முற்றாகவே கரைந்து விட்டது.

தர்மலிங்கம் மாஸ்டர் ஓய்வு பெறும் வயதை கடந்து சேவை நீடிப்பில் இருந்த போதுதான் அந்த விபத்து நடந்தது. இன்னும் நாலைந்து மாதங்கள் அவர் வேலை செய்யலாம் ஆனால் அவரைப் பார்க்க வந்த ஆசிரியர்களும், மனைவி மக்களும் “ இனி நீங்கள் படிப்பிக்கப் போய் சிரமப்பட வேண்டாம் .. இப்படியே ஓய்வு பெறுங்கள்” என்றார்கள்.அவரோ நான் எப்படியும் பள்ளிக்கூடம் போக வேணும்” என்று பிடிவாதமாய் நின்று ஓரளவு சுகமானதும் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தார்.

மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ்ப் பாட வகுப்பு நேரம் ”வாங்கோ பிள்ளைகள். மாமர நிழலுக்குப் போவம்”
தர்மலிங்கம் மாஸ்டர் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வந்து மதாளித்து நின்ற மாமரத்தடியில் அமர்ந்தார். அவர் முன்னால் அரை வட்டமாக மாணவர்கள். தமிழ் புத்தகத்தை எடுத்து விரித்தார் எத்தனையோ தடவைகள் சிலபஸ் மாறி பாட மாற்றங்கள் ஏற்பட்ட போதும், அந்தப் பாரதி பாடல் மட்டும் இன்னும் புத்தகத்தில் இருந்தது அந்தப் பாடலைப் பார்த்தவுடனேயே அவரது உள்ளம் நெகிழ்ந்தது.

”இதப் பாட்டைச் சொல்லித் தாறன் பாடுங்கோ பிள்ளைகள்”

அவர் கண்களை மூடிக் கொண்டார் கண்களுக்குள் தலைப்பாகையுடன் தீட்சண்யமான விழிகளுடன் பாரதியார் வந்து நின்றார். உணர்ச்சிவசப்பட்டவராய் பாட ஆரம்பித்தார் அவர்.

“சாதிகளில்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு நிறைய உள்ளவர்கள் மேலோர் பாப்பா”

மாணவர்கள் திருப்பிப் பாடக் கண் திறந்து பார்த்தார்.அவர் நடுவில் நின்று பாடிக் கொண்டிருந்தான் பிரசாத்தின் அக்காவின் மகன் சஞ்சீவ்.

”இங்கே வா சஞ்சீவ் பொருளைப் புரிந்து கொண்டு பாடினால் தான் பாட்டு உணர்ச்சிகரமாய் இருக்கும்.. நீ தனித்துப் பாடு பார்ப்போம்“

சஞ்சீவ் பாடுகிறான் தர்மலிங்கம் மாஸ்டர் இதமாகப் பதமாகத் தாளம் போடுகிறார். ரசித்துத் தலை அசைக்கிறார்.. மாணவர்களுக்குப் பெரிய சந்தோஷம். அவர்களுக்கு மட்டுமா அந்தத் தமிழ் புத்தகத்தில் ஓவியமாய் நிற்கும் பாரதியாரும் சிரித்துக் கொண்டுதான் இருக்கிறார்..

– வீரகேசரி (14.09.1997)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *