கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 25, 2015
பார்வையிட்டோர்: 8,895 
 
 

பானுவுக்கும் அவளுடைய மூன்று பிள்ளைகளுக்கம் மிகுந்த சந்தோஷமான நாள். தடுப்பில் இருந்த நகுலன் இன்று விடுதலை. அந்த செய்தி கேட்டதில் இருந்து அவள் உள்ளத்தில் பெரும் சந்தோஷம்.

யுத்தம் நிறைவடைந்து எல்லோரும் இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது, நகுலனை ஓமந்தை இராணுவ முகாமில் வைத்து கைது செய்யப்பட்டு மூன்றான்டுகளாக புனர்வாழ்வு அளித்து இன்று சமூகத்தோடு இணைக்கும் நாள்.

யாழ்ப்பாண வீரசிங்கம் மண்டபத்தில் அரங்கு நிறைந்த கூட்டம் எல்லோருக்கும் சந்தோஷம். விடுதலையாகும் விடுதலைப்புலி உறுப்பனாகளின் முகத்தில் ஒரு ஏக்கம். நிகழ்வில் உரையாற்றிய பொறுப்பு வாய்நத ஒரு இராணுவ அதிகாரி ‘உங்களுக்கு இனி நல்ல காலம் நீங்க சுகந்திரமாக எதையும் செய்யலாம், எங்க ஆட்களால உங்களுக்கு தொந்தரவு இல்லை’ என பல கருத்துக்களை முன்வைத்தார்.

நகுலன் விடுதலை பெற்று தனது மனைவி பிள்ளைகளை கட்டி அணைத்து முத்தமிட்டான். அவர்கள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. நாம் இன்று விடும் கண்ணீர் இறுதியானது என அவர்கள் நினைத்திருக்கலாம்.

விடுதலைப் புலிகளில் இருந்த நகுலன், அவர்களின் படையணி ஒன்றுக்கு நிர்வாகப் பொறுப்பாளராக இருந்தவன். திருமணக்குரிய வயதுவர அவர்களே நகுலனுக்கு திருமணம் செய்து வைத்தனர். இன்று விடுதலையாகும் நகுலனுக்கு தனது குடும்பத்தை எப்படிக் காப்பாற்றப்போறேனோ என்ற ஏக்கம் அவன் மனதில் கலக்கத்தை ஏற்படத்தியது.

விடுதலையான புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்களை இராணுவத்தினர் ஒரு பஸ்சில் ஏற்றிக்கொண்டு அவர்களின் வீடுகளில் விட்டனர். நகுலனின் வீடு புதுக்குடியிருப்பு கைவேலியில் அரையேக்கர் திட்டத்தில் உள்ளது.

விடுதலையான நாளில் இருந்து நகுலனின் வேலை தேடும் பணி மிக மூர்க்கத்தனமாக நடந்தது. தெரிந்தவர்கள் எல்லோரிடமும் ‘வேலையிருந்து சொல்லுங்கோ’ என சொல்லி வைத்;தான். வீட்டுச்சீவியம் படுமோசமாக இருந்தது. கொடுக்கும் நிவாரண உதவிகளும் இப்போது இடைநிறுத்தியாச்சு அவர்கள் பசியை பச்சையரிசி கஞ்சிதான் ஒரளவுக்கு தீர்த்தது.

ஒருமாதிரியாக புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் வேலையொன்று நகுலனின் நண்பனின் உதவியால் கிடைத்து. மாதம் பதினைந்தாயிரம் பகலும் இரவும் மாறிமாறி வேலை வரும் ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணிநேரம் வேலை செய்ய வேண்டும்.

மறுமொழி ஏதுமின்றி சம்மாதித்த நகுலன் வேலையை செய்யத் தொடங்கினான். லீவெடுததால் சம்பளம் வெட்டுப்டும். லீவு ஏதும் எடுக்காமல் நகுலன் வேலை செய்தான்.

ஒரு நாள் இரவு நல்ல மழை, வேலை முடிந்து வீட்டுக்கு வந்த நகுலனுக்கு பானு பெரும் முறைப்பாடு ஒன்றை செய்தாள். ‘இரவில இஞ்ச படுக்கவே பயமாக்கிடக்கு ஓரே நாய்கள் குரைக்குது, ஆட்கள் வேற நடமாடுற மாதிரி இருக்கு, சாப்பிடாம இருந்தாலும் பரவாயில்லை இனி நீங்க இரவேலைக்கு போகவேண்டாம்’ பிள்ளைகளும் அழுதுகொண்டு ‘அப்பா எங்களுக்கு பயமா இருக்கு’

அவர்கள் சொன்னதை நகுலனால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தாலும் வீட்டின் நிலைமை உடனடியாக முடிவெடுக்க முடியவில்லை.

அன்றிரவும் ஆட்கள் நடமாடுவதும், நாய்கள் குரைத்துக்கொண்டே இருந்தது. ‘பத்தியலே இப்படித்தான் நேற்றும்’ நகுலன் அன்றிலிருந்து வங்கி பாதுகாவலர் வேலைக்கு வரமாட்டேன் என பொறுப்பானவருக்கு அறிவித்தான். மீண்டும் வேலை தேடலானான்.

நகுலனுடன் தடுப்பிலிருந்து வந்த குணா இப்ப நல்ல மேசன் தொழிலாளியாகி விட்டான். மேசன் வேலைக்குரிய பொருட்களுடன் சைக்கிளில் சென்றகுணாவை கைவேலி கணேசவித்தியாலயத்துக்கு முன்னுக்கு வைத்துக் கண்டான் நகுலன்.

‘மச்சான் டேய் வேலையிருந்தா சொல்லடா என்ன வேலை என்றாலும் பரவாயில்லை’

‘எனக்கொரு உதவியாள் தேவை இப்ப வாறியா’

நகுலனுக்கு பெரும் சந்தோஷம் உடனேயே குணாவுடன் சென்றான்.

கைவேலிக் கிராமத்தில் இந்தியன் அரசாங்கத்தின் உதவியால் பல வீடுகள் கட்டப்பட்டுக்கொண்டிருந்ன. அதில் பல வீடுகளை குணாவே கட்டிவந்தான். நகுலனுக்கு சீமெந்து வேலை புதிதாக இருந்த படியால் அவனுக்கு பெரும் சிரமமாக இருந்தது.

சுண்ணாம்பு வெக்கையில கால்கள் புண்ணாப்போச்சு வலிகளை பொருட்படுத்தாது வேலை செய்தான். அதுவே பழக்கமாகவும் போய்விட்டது. குணாவுக்கு உதவியாள நின்று மூன்று வீடுகள் கட்டிய பிறகு நகுலனும் மேசன் ஆகிவிட்டான். அவனும் தனக்கொரு உதவியாளை வைத்து வேலை செய்த் தொடங்கினான்.

நகுலனும், குணாவும் சேர்ந்து பல இந்தியன் வீட்டுத்திட்ட வீடுகளைக் கட்டி முடித்தனர். இவர்கள் இருவரும் புதுக்குடியிருப்பு பகுதியில் மிகச்சிறந்த மேசன் என பேரும் எழுத்தாச்சு.

நகுலன் என்னதான் தலைக்கு மேல வேலை இருந்தாலும் இரவு வீட்டுக்கு சென்று விடுவான். பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது மனைவிக்கு சமையலுக்கு உதவிசெய்வது என குடும்பத்தில் கண்ணும் கருத்துமாய் இருந்தான்.

‘நாங்க பட்ட கஸ்ரமெல்லாம் எங்களோடேயே போகவேண்டும் பிள்ளையல வடிவா படிக்கவைக்கவேனும்’ என பானுவுக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பான்.

நகுலனின் குடிசை வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வந்து விட்டது. புதிய இந்தியன் வீட்டுத்திட்டம் பெறும் பெயரில் நகுலனின் பெயரும் கிராமசேவையாளர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருந்தது. உடனடியாக வீட்டு வேலைகள் தெடங்கியாச்சு.

நகுலன் வீடுகட்டுவதற்கு அத்திவாரம் வெட்டிக்கொண்டிருக்கும் போது அவனுடன் பாடசாலையில் படித்த நண்பன் சுபன் வந்தான். ‘என்னடா வீடும் கட்டவெளிக்கிட்ட போல’

‘வா வா நீ சும்மா வரமாட்டா ஏதும் அலுவல் என்டாத்தனே வருவ சொல்லு என்ன அலுவல்’

‘அதெடாப்பா ஐ.நா போர்க்குற்ற விசாரணைக்கு போராலா பாதிக்கப்பட்ட எங்கலப்போல ஆக்களிட்ட இருந்து சாட்சி சொல்லச் சொல்லி எங்கட எம்.பி. கேட்டவர் நீ வடிவா எழுதித் தந்தாய் என்றால் அத நான் அனுப்பி விடுவன், எங்கட இனம் பட்ட துன்பத்துக்கு அதாலயாவது ஒரு தீர்வு வரட்டும்’

‘இப்பதான் தடுப்பால வந்து கொஞ்சக்காலமாகுது அதிக்கிடையில ஏன் இந்த தேவையில்லாத வேல’

‘என்னட நகுலன் நீயே இப்படிச் பயந்தா? யார் தெளிவ சாட்சி சொல்லிறது’

‘உண்மைய சொல்லுறதுக்கு ஏன் பயப்படுனும் சரி சரி நாளைக்கு வா நான் இரவு எழுதிப்போட்டு தாரன் இத வெளியில யாருக்கும் சொல்லிப்போடதே’

‘நானும் நேற்று எல்லாம் வடிவ எழுதி அனுப்பிப்போட்டுத்தான் இருக்கிறன்’

இரவோடு இரவாக கடந்த முப்பது வருட காலமாக எமது இனம் பட்ட துன்பங்கள் அத்தனையையும் அழகாக அறிக்கைப்படுத்தினான். வேலைக்கு கிழம்ப முன்னமே சுபன் வந்துவிட்டான். நகுலன் எழுதியதை கொடுத்துவிட்டு வேலைக்கு கிழம்பினான்.

‘இத வெளிய யாருக்கும் உலறிவிட்டுடாதே’ மன்றாட்டமாக கேட்டான். தலையாட்டிய படியே சுபன் அதனை பெற்றுக் கொண்டு சென்றான்.

நகுலனுக்கு அதனை வெளியில சொல்லாமல் இருக்க முடியல நடந்தவற்றை எல்லாம் குணாவுக்கு சொன்னான்.

‘டேய் விசற உன்னை யாரட இதையெல்லம் சொலலச் சொன்னது அவன் என்னையும் கேட்டான் நான் பேசி அனுப்பினான்’

‘ஏன்ர குணா அவன எனக்கு முதலே தெரியும், இப்ப ஏதோ அரசியல் அது இது என்று திரியிறான்’

‘அவனத் தெரியும் ஆனா அவன் வேறுயாருக்கோதான் அனுப்ப போறான் அவன் எப்படிப்பட்டவன் என்று உனக்குத் தெரியுமா’

‘இப்ப என்னடா செய்யிறது’

‘எனக்குச் சொன்ன மாதிரி வேறயாருக்கும் சொல்லிப்போடாதே மனுசி, பிள்ளைகளுக்கும் கூட சொல்லிப்போடாதே’

நகுலனுக்கு அதை நினைத்தாலே ஒரே பயமாக இருந்தது. நாட்கள் நகர்ந்தன நகுலனின் வீடும் கட்டுமான பணியில் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டது.

மாலை நேரம் நகுலன் வீட்டின் முன் பகுதியை அழகுபடுத்திக் கொண்டிருந்தான். பானு சமையல் வேலையை கவனித்துக்கொண்டிருந்தாள், பிள்ளைகள் மூவரும் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர். வாசலில் மோட்டாச் சைக்கிள் கோண் அடிக்கும் சத்தம் கேட்க நகுலன் படலைக்குச் சென்றான்.

மோட்டச் சைக்கிளில் இரண்டு பேர் வந்திருந்தனர்.

‘நகுலன் வீடா’

‘ஓம் சேர் ஓம் சேர்’ என வீட்டுக்குள் அழைத்து வந்தான்.

‘நங்க தான் உங்க இப்ப ஊருக்கு புதுச வந்திருக்கிறம்’ மௌனமாக நின்றான் நகுலன். வந்த இருவரும் மீண்டும் பல பதிவுகளை எடுத்துக்கொண்டு போகும் போது ‘நகுலன் ஏதும் என்ட எங்களுக்கு சொல்லனும் இல்லாட்டி பிறகு தெரியும் தானே’ என்று சொல்லிவிட்டு சென்றனர்.

நகுலனுக்கு ஒரே கலக்கமாக இருந்தது. அன்றிலிருந்து அவனுடைய நடவடிக்கைகள் மாறத்தொடங்கியது. எதைக்காண்டாலும் பயம், பச்சை உடுப்புடன் யார் சென்றாலும், வாகனங்களின் சத்தம் கேட்டாலும்; தலையை ஒரு துணியால் முடிக்கொண்டு ‘நானில்லை நானில்லை’ என தனக்குள் சொல்லிக்கொண்டு வீட்டுக்குள் ஒழிந்து விடுவான். நகுலனின் மூத்த பெடியன் படிப்பை விட்டுவிட்டு குணாவுடன் உதவிக்குச் செல்லத்தொடங்கினான். ஊரில் உள்ள எல்லோரும் நகுலனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *