ஏதோ ஒரு காலத்தில் குளமாக இருந்து இன்று ’அண்ணா பேருந்து நிலையமான’ பிறகும் ‘குளத்து பஸ் ஸ்டாண்டாகவே’ அழைக்கப்பட்ட அதன் கற்படிகள் கீழே கீழே சென்று அது குளமாக இருந்த போது எத்தனை பிரம்மாண்டமாக இருந்திருக்க வேண்டும் என ஊகிக்க மட்டுமே வைத்தன.
காலை எட்டு மணிக்கே என்றாலும் பாக்கியத்துக்கு வெயில் சுளீரென தலையில் மௌடீகமான தலைவலியாக இடிக்க ஆரம்பித்தது. கற்படிகளில் காலை வைத்த போது அவள் உள்ளங்கால்கள் வலித்தன. இது வரை அறியாத புதிய வலி. ஒவ்வொரு நாளும் முதுமை இப்படி புதிய புதிய வலிகளைச் சேர்த்துக் கொண்டே இருந்தது. இங்கெல்லாம் வலிக்கும் என்பதற்கான சாத்தியங்களையே அறியாத இடங்களிலெல்லாம் வலிகள்.
அவள் மெல்ல இறங்கி பேருந்து நிலையத்தின் ஒதுக்குப்புறச் சந்தில் சாக்கடை ஓடைக்கும் பஸ்கள் அங்கே வந்து நிற்கும் இடத்துக்கும் நாயர் டீக்கடைக்கும் மையமாக இருக்கும் காங்கிரீட் தூணின் அருகில் வந்து நின்றதும். இடுப்பில் பச்சை பை முடிச்சிலிருந்து திருநீறை எடுத்து “என்னப் பெத்த சிவனே” என்று நெத்தியில் இட்டாள். அதை இடும் போதெல்லாம் ஏனோ அவள் இளம் பிராயத்தில் பார்த்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன் சிவபெருமானாக “அந்த சிவந்தானே நம்மள இந்த பாடுபடுத்துறான்” என்று சொல்லுவது நினைவாக வரும்.
இன்றும் அந்த நினைவு சிறு புன்னகையை அவள் முகத்தில் ஏற்படுத்த முயன்று ஒரு கோணலாக அதை மாற்றி மறைந்தது. “சவத்து மூதி.. காலங்காத்தால வந்துருவா மூதேவி.. கோணமூஞ்சி சவம்…” என்று டீக்கடை நாயர் வழக்கம் போலவே திட்டியபடி பிள்ளையாருக்கும் லட்சுமிக்கும் மல்லிகை சரத்தைப் பிய்த்து வைத்து எதிரில் இருந்த ரூபாய் போட்டிருக்கும் டிராயரைத் தொட்டு கண்ணில் வைத்தான். ஏற்கனவே முதுகில் மெலிதான வளைவு அவளை கோலூன்ற வைத்திருந்தது. உடலின் தேவைக்கு அதிகமாகவே அவள் கோலில் சாய்வாள். காரணம் வேறு தேவைகள். பார்ப்பவருக்கு கொஞ்சமாவது இரக்கம் வந்தால்தான் இரண்டு காசு அதிகம் பார்க்க முடியும். அவளது கருப்புத் தோலும் அதிலுள்ள சுருக்கங்களும் சேர்ந்து எவரையும் முகஞ் சுளிக்க வைக்கும். அவள் அணிந்திருக்கும் அழுக்கேறிய கடும் பச்சை சேலையும் அதைவிட அழுக்கான ஜாக்கெட்டும் மருந்துக்கும் கருப்பில்லாத அவள் தலையும் அவளது கறுப்பு நிறத்தை அடிக்கோடிட்டுக் காட்டும்.
அவள் அருகில் சென்றவுடனே, காத்து நிற்கும் பயணிகள் அனிச்சையாகப் பின்நகர்வார்கள். அவள், ’அய்யா தர்மதுரையே’ என்பதை இரண்டாவது முறை சொல்வதற்குள் ஒன்று நாயை விரட்டுவது போல் ’ச்சூ சூ ஒண்ணும் இல்லை போ போ’ என்பார்கள். அல்லது நாய்க்குப் போடுவது போல், சட்டைப் பையைத் துழாவி அல்லது பர்ஸிலிருந்து கையில் கிடைக்கும் சில்லறையை அவசர அவசரமாகத் தூக்கிப் போடுவார்கள். இதில் அருவெறுப்புக்கும் அது கலந்த பச்சாதாபத்துக்கும் பால் பேதம் உண்டா என்கிற அவளுக்கு மட்டுமே தெரிந்த சமூகவியல் மர்மம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் குறைந்தது இரண்டு முனைவர் பட்டங்களை உருவாக்கும் திறன் கொண்டது. வீசப்படும் சில்லறைகள் பெரும்பாலும் அது அவள் கைகளில் விழாது தரையில் ஓடும். அவள் கஷ்டப்பட்டு ஓர் அசுரப் பிரயத்தனத்துடன் அவற்றை எடுத்துவிடுவாள்.
ஐந்து ரூபாய் சேகரித்ததும் ’இன்னா வெயிலு மக்கா’ என்று நாயரிடம் வந்தாள். மற்றவர்களுக்கு கண்ணாடி டம்ளரில் டீ ஆற்றிக் கொண்டிருந்த நாயர் அவளுக்குத் திரும்பி ‘ம்ஹ்ம்’ என்று உறுமினான். கேவலமான ஜந்துவை பார்த்துவிட்ட உயர்ந்த ரக காட்டுமிருகத்தின் உறுமலுக்கும் மனிதக்குரலுக்கும் இடையிலான ஏதோவோர் எச்சரிக்கை ஒலியும் கட்டளையுமாக அது இருந்தது. அவள் மறந்தது நினைவு வந்தது போல அங்கேயிருந்த குப்பைக் கூளத்துக்குள் இருந்து ஒரு செரட்டையை எடுத்து வந்தாள். காட்டன் சாயா ஒன்றை ஏதோ செத்த எலியின் அழுகிய பிணத்தைப் பார்ப்பது போன்ற பாவனையுடன் அவள் பிடித்த செரட்டையில் ஊற்றினான். அவள் அங்கேயே குத்தங்காலிட்டு அமர்ந்து குடிக்க போனபோது மீண்டும் ஓர் உறுமல். அவள் எஜமானனின் கோபத்தை உணர்ந்து நடக்கும் நாய்குட்டியை போல நகர்ந்து ஓர் ஓரமாகச் சென்று சாயா என்கிற கருப்பு திரவத்தை செரட்டையிலிருந்து உறிஞ்சினாள். மீண்டும் அவள் மனதில் அந்த வசனம் பொருளில்லாமல் ஓடியது “அந்த சிவந்தானே நம்மள இந்த பாடு படுத்துறான்”. மீண்டும் நினைவின் புன்னகையில் வாய் கோணலாக. எப்போதோ கள்ளச் சாராயம் குடித்து இறந்து போன தன் கணவன் அன்று கட்டிளம் இளைஞனாய் தன்னுடன் உரசியபடி திரையரங்கில்; இன்று துரத்திவிட்ட பையனோ அன்று அவள் இடுப்பில் தொத்தி, கடலைப்பொரி தின்றபடி, மூக்கு வழித்தபடி, அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தான். இன்று மூளியான மூக்கில் அப்போது ஒரு சின்ன மூக்குத்தி கூட இருந்தது. பாக்கியம் ஆச்சியாகி இன்று அநாதைக் கிழவியாக பஸ் ஸ்டாண்டில் பிச்சையெடுப்பதற்கு முன்னால் பாக்கிய லட்சுமியாக இருந்த நினைவு அது.
”சவத்து கெளட்டு மூதி மூஞ்சையைப் பாரு தள்ளிப் போய் ஓரமா உட்காருட்டி… கஸ்டமர்ஸ் நிக்கறது தெரியலை…” என்ற நாயரின் ஒலி மூர்க்கமாக அவளை நனவின் வலிகளுக்குக் கொண்டு வந்தது. குற்ற உணர்ச்சியுடன் முடிந்தவரை வேகமாக ஒதுங்கி ஓரமாக நின்று மீண்டும் ஆரம்பித்தாள் “அய்யா தர்மதுரையே கதியில்லாத ஏழைக்கு இரங்குங்கய்யா.. அய்யா தர்மம் போடுங்கய்யா…”
உச்சியில் வெயில் வந்து, அவள் திரட்டிய சில்லறைகளுடன் நிழல் தேடிய தருணத்தில் அது நடந்தது. அந்த ஆள் வெள்ளை ஜிப்பாவும் வெள்ளை வேட்டியையும் போட்டிருந்தார். கையில் ஒரு சிறிய கருப்புப் பை. கூர்ந்து பார்த்த போது அது புத்தகம் என்பது தெரிந்தது. நாயரிடம் டீ போடச் சொல்லிவிட்டு அவளையே கொஞ்ச நேரம் பார்த்தபடி இருந்தார். பிறகு நாயரிடம் சென்று அவளைப் பார்த்தபடியே ஏதோ பேசினார். நாயரின் பார்வை இப்போது அவள் பக்கம் திரும்பியது. ’இங்கன உள்ளவதான். நான் சொன்னா கேப்பா… கழுத மூளிக்கு நாந்தானே தருமத்துக்கு அவ வயித்தக் கழுவுறேன்..” என்ற நாயரின் குரல் காற்றில் சிதைந்து கேட்டது.
சில நிமிடங்களுக்குப் பிறகு நாயர் அவளிடம் வந்தான். “ஏ பாட்டி எந்திரி” என்றான் முதேவியும் கெழவியும் பாட்டியானதை அவள் கிரகித்தது போலத் தெரியவில்லை. “இவரு கூட போறியா… இரண்டு நாளு முழுசா ஐம்பது ரூபா தருவாரு. அவரு சொன்னாப்ல கேட்டுட்டு அப்புறம் இங்க பிளசர் கார்லேயே கொண்டாந்திருவாரு.. சாப்பாடும் உண்டு. என்னா மனசுலாச்சா போறியா…” இரண்டு மூன்று தடவை அபிநயங்களுடன் விளக்கிச் சொன்ன பிறகு அவளுக்குப் புரிந்தது,. எசமானோட போய் இரண்டு நாளு இருந்தா சோறும் பணமும் இருக்க இரண்டு நாளைக்கு இடமும் கிடைக்கும் என்பது மையமாக அவளுக்குப் புரிந்தது. சமூக சேவகரு என்று என்னவோ சொல்வார்களே அதாக இருக்குமோ? இருக்கலாம். ஒருவேளை அவள் நன்றாக நடந்தால் அவர்களுக்கு அவளைப் பிடித்து விட்டதென்றால் யார் கண்டது, அவளை அவர்களே தங்க வைத்துக் கொள்ளலாம். கடைசிகாலத்தில் மானமாக தலைக்கு ஒரு கூரைக்குக் கீழே சாகலாம்.. இப்படி தெருவில் சீரழியாமல் அநாதைப் பிணமாக நாறாமல் கண்ணை மூடலாம்.
அவள் அந்த ஆளுடன் கிளம்பியபோது நோட்டுகள் நாயருடன் கை மாறுவது தெரிந்தது. அவள் இதுவரை பார்த்தே இராத சலவை நோட்டுகளில் அவள் கண்களில் மங்கிய காந்தி சிரித்தார். ”ஐந்நூறு ஒரு ஆளுக்குன்னு கேட்டுண்டு சாரே இருநூத்துக்கு நான் முடிச்சிட்டேன் இதுலயும் நூறு குறைச்சா சரியோ” என்று நாயர் சொல்வதை அவள் சரியாகக் கேட்க முடியவில்லை.
message
அந்த இடத்துக்கு அந்த வெள்ளை ஜிப்பாக்காரருடன் பிளசர் காரில் போய்ச் சேர்ந்த போது மாலை மங்கி விட்டது. கூரை போட்ட பெரிய மைதானமாக இருந்தது. ஆங்காங்கே கட் அவுட்களில் துரைமார் போல கோட்டும் சூட்டும் போட்ட ஒருவர் ஒரு கையில் கருப்பாக ஒரு புத்தகத்தைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையை உயர்த்திக் கொண்டு நின்றிருந்தார். மேடையில் பார்த்த போது அதே கட்அவுட் காரரை போலவே ஒருவர் – அவரேதானோ மேடை ஒளியில் கண் கூசியது- ஏதோ புரியாத பாஷையில் சத்தமாக அலறிப் பேசிக் கொண்டிருக்க முக்காடு போட்ட பெண்கள் கண்களை இறுக மூடிக் கண்ணீர் சிந்தியபடி, “ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆண்டவரே” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தவரின் குரல் திடீரென உயர்ந்தது. அங்கேயும் கோட்டு சூட்டு போட்டவர் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு வெள்ளை ஜிப்பா ஆசாமி அதை மொழி பெயர்த்தார்- ”இதோ நாலாவது வரிசையிலே இருக்கிற ஒருவர் மேலே பற்றியிருக்கிற வாதை போகுமென்று எனக்கு, பரிசுத்தமானவர் சொல்லுகிறார். அவர் எழுந்து மேடைக்கு வரட்டும். அவருக்குக் கண்ணிலே உபத்திரவம் என்று பரிசுத்தமானவர் என்னிடத்திலே சொல்லுகிறார்” ஒலி பெருக்கிகளில் பூதாகாரமாக்கப்பட்ட ஒலிகள் அவளது வயதான செவிப்பறைகளிலும் கூட ஜவ்வு கிழிய அறைந்து ஒலித்தன.
ஒரு வயதான பாட்டியம்மா எழுந்தாள். மெதுவாகத் தட்டுத்தடுமாறி கைகளால் துழாவி எழுந்தாள். அவருடன் உடனே துணைக்கு ஒரு இளம் பெண்மணி கூட எழுந்தாள். அவள் அந்த முதிய பெண்ணை கையைப் பிடித்து மேடைக்கு அழைத்துச் செல்ல, பாக்கியத்தை கூட்டிக் கொண்டு வந்த வெள்ளை ஜிப்பாக்காரர் இவளிடம் குனிந்து சொன்னார் “அந்த பாட்டி செய்றத நல்லா பாத்துக்க”
அந்தப் பாட்டியம்மா மேடைக்குச் சென்றது. அவளுக்கு கண் தெரியாது என்பதை அவளின் ஒவ்வொரு செய்கையும் காட்டியது. கோட்டு சூட்டு ஆசாமி அந்தப் பாட்டியின் தலையின் மீது கையை வைத்தார். ஏதோ சீமை பாசையில் சொன்னார். மேடை மேலே நின்ற வெள்ளை ஜிப்பா தமிழில், “ஆண்டவரே உம்மைப் பிரார்த்திக்கிறேன். இந்த வயதான சீமாட்டியின் மீதான பிசாசின் வல்லமையை மாற்றிக் கொடும் தேவனே… ஆண்டவரே உம்முடைய ஒரே குமாரனின் வல்லமையாலே சொல்லுகிறேன் கர்த்தரே வாதை உன் கூடாரத்தை அணுகாமல் போகட்டும் தேவனே… இவருக்கு கண்பார்வையை தாரும். அல்லேலுயா ஆண்டவரே”
இப்போது அந்தப் பாட்டியம்மாவுக்கு என்ன ஆகிறது? அந்தப் பாட்டியம்மா கண்ணைத் திறந்தாள். பிறகு ஒளிக்குக் கூசுவது போல கண்ணைத் தாழ்த்திக் கொண்டாள். பின்னர் மீண்டும் மெதுவாகக் கண்ணை உயர்த்திப் பார்த்தாள். இப்போது அந்த கோட்டு சூட்டு மனிதர் தன் ஒரு விரலை உயர்த்தினார். ஒன்று என்றாள் அந்த பாட்டி. கூட்டம் ஆர்ப்பரித்தது. ஆச்சரியமான விசுவாசம் அலையாகப் பரவியது.
கூட்டம் கோஷித்தது.. “அல்லேலுயா ஆண்டவரே” ”உமது ரத்தத்தாலே ஜெயம் ஆண்டவரே” கூட்டம் மீண்டும் அதிர்ந்து.. “உமது ரத்தத்தாலே ஜெயம் ஆண்டவரே”
சீமை சூட்டு இப்போது கேள்வி கேட்க ஆரம்பித்தார். கேட்க கேட்க ஜிப்பா மொழி பெயர்த்தது.
“உன் பெயரென்ன?”
“பார்வதி”
“வயசு?”
“68”
“உனக்கு என்ன பிரச்சனை இருந்தது”
“எனக்குக் கண் தெரியாது”
“எந்தக் கண்?”
“இரண்டு கண்ணும். இரண்டு கண்ணும். பெரியாஸ்பத்திரில போனேன் டாக்டருங்க சரியாகாதுன்னுட்டாங்க.”
“இப்போ தெரியுதா”
“நல்லா தெரியுது”
”எதுனால தெரியுது தெரியுமா”
“கர்த்தரோட அருளால”
“ரட்சிப்பை ஏத்துகிடுகிறாயா”
“ஏத்துக்கிறேன்..”
”என் தேவனே பரமண்டலப்பிதாவே நீரே என் தேவன் என்று சொல்வாயா? இதுவரை வாழ்ந்த பிசாசின் வாழ்க்கையை விட்டு வந்துவிடுகிறாயா?”
“பிசாசின் பாதையை விட்டு ரட்சிப்புக்கு வந்துடறேன் அய்யா வந்துடறேன்”
“இனி உன் பெயர் பார்வதி அல்ல நீ இனி தேவனின் பிள்ளை. உன் பெயர் எஸ்தர்.. .இனி உன் மேல் பிசாசின் முத்திரைகள் இருக்காது”
பாக்கியத்துக்கு ஒருவழியாகப் புரிய ஆரம்பித்தது, ஆகா எவ்வளவு நல்லது. தனக்கும் சுகம் கிடைக்கப் போகிறது. பார்த்துக் கொண்டிருக்க இருக்க அவளுக்கு மயிர் கூச்செறிந்தது போல இருந்தது. இதே போல ஆண்டவர் நமக்கும் கருணை செய்தால் நாளைக்கு இந்தக் கோலைத் தூக்கி எறிந்துவிடலாம். ஏதாவது வீட்டில் பத்து பாத்திரம் கழுவி கௌரவமாகப் பிழைத்து விடலாம். இதோ இந்த ஆண்டவரை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எங்கோ ஓரத்தில் ”அந்த சிவன் தானே நம்மை இந்த பாடு படுத்துறான்” என்று கேலியாகக் குரல் கேட்டது. அதே நேரத்தில் அவளருகில் இருந்த வெள்ளை ஜிப்பா ஆள் அவள் பக்கம் குனிந்தாள் ”நாளைக்கு நீ அவளோட இடத்தில். மனசுலாச்சா?”
பிறகு ஏதேதோ பாடினார்கள். “எல்லாம் தேவனே எனக்கு எல்லாம் தேவனே உம்மையன்றி இவ்வுலகில் சுகம் இல்லையே” அவளும் பாடினாள். ஏதேதோ பிரார்த்தித்தார்கள். “ஆண்டவரே எவ்வளவு பாவிகள்… சாத்தானின் கட்டில் இருப்பவர்கள் விடுதலை கொடும் தேவனே” யாருக்காகவோ இவர்கள் இந்த இருட்டில் இப்படி மண்டியிட்டு ஜெபிக்கிறார்களே அவளுக்கு இதயத்தில் தொட்டது. அவர்கள் தனக்காகவே ஜெபிப்பதாகப் பட்டது. அவள் மனம் விம்மியது. கண்களிலிருந்து கண்ணீர் தானாகப் பெருகியது. அவளால் மண்டியிட முடியவில்லை. ஆனால் நாளைக்கு… அதற்குள் அந்த மொழி அவளுக்குப் பரிச்சயமானது போல இருந்தது. நாளைக்கு பரிசுத்த ஆவியால் நான் குணமான பிறகு நானும் மண்டியிட்டு ஜெபிப்பேன். இதே போல… எனக்காக மட்டுமல்ல, இறந்து போன என் புருசனுக்காக, என்னை துரத்தின என் மவன், அவன் வீட்டுக்காரி, பேத்தி எல்லாரும் மனம் திரும்ப… ஜெபிப்பேன்.
எல்லாம் முடிந்த போது நன்றாக இருட்டியிருந்தது. அந்த ஆள் அவளைத் தன் பின்னால் வரச்சொன்னார். ஓர் ஓரமாக ஜெனரேட்டர் வண்டி இருந்தது.. டீசல் வாடை அடித்தது. அங்கே மைதானத்தில் ஓரமாக சின்னக் கூடாரங்கள் போல இருந்தன. தொங்கிக்கொண்டிருந்த விளக்குகளைச் சுற்றி கொசுக்களும் சின்னச் சின்னப் பூச்சிகளும் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. சற்றுத்தள்ளி அந்த பார்வதி பாட்டி… இல்லை எஸ்தர் நின்று கொண்டிருந்தாள். அந்த வெள்ளை உடைக்காரர் அவளிடம் போனார்.
“இந்தா…” நோட்டுக்களை வெள்ளை ஜிப்பாவின் உள்ளேயிருந்து உருவி எண்ணிக் கொடுத்தார். அவள் வாங்கி மகளிடம் கொடுத்தாள். மகள் எண்ணிக் கொண்டே “என்னங்க ஐநூறுதான் இருக்கு… மார்த்தாண்டம் கன்வென்ஷன்ல எழுநூறு தந்தாங்க. அங்க எங்கம்மா பேசக்கூட இல்லை இரண்டு தடவை முழிச்சு பாத்துச்சு அவ்வளவுதான்”
”மார்த்தாண்டம் கன்வென்ஷன் நடத்துறவங்க பிஜி சபை. அவுங்களுக்கு நல்லா ஃபண்ட் வருது. ஆனா இது இப்பத்தான வளர்ற சபை… கொஞ்சம் பொறும்மா. இது நல்லா பிக்கப் ஆச்சுன்னா தினவரன் மாதிரி ஆயிடும் அப்புறம் உங்கொம்மா கெளவிதான பிரதான சாட்சி”
அந்தப் பெண் திரும்பியது.
“ஆங் இன்னொன்னு” என்றார் வெள்ளை ஜிப்பா, “ஒரே ஊர்ல எல்லா சபை கன்வென்ஷன்லயும் இஸ்டம் போல சாட்சி சொல்லிட்டு அலையாதீங்க ஆராவது ரெண்டெடத்துல பாத்தா ரெண்டு சபைக்கும் அசிங்கம். அது உங்க பொழைப்பையும் பாதிக்கும்.”
அந்தப் பெண் தலையாட்டிவிட்டு, பாட்டியுடன் கிளம்பியது. அவர்களின் கண்கள் ஒரு கணம் பாக்கியத்தைப் பார்த்து, ஒரு போட்டியினை இயல்பாக உணர்ந்து, அந்த வெறுப்பின் ஒளியை ஒரு நொடி உமிழ்ந்து விலகின.
வெள்ளை ஜிப்பா இப்போது பாக்கியத்தை அணுகினார். சென்று கொண்டிருந்த தாயையும் மகளையும் பார்த்தபடியே இவளிடம், “ரொம்ப கேட்காளுக.. அவளுகளை விட்டா ஆளில்லைன்னு நினப்பு.” என்றான். பின்னர் “ நீ பாஸ்டர் கிட்ட வா வேற ஒண்ணும் இல்ல… ஒரு நிமிசம் மட்டும் அந்தக் கோலை கீழே போட்டுகிட்டு நிக்கணும்… என்ன? ம்ம் அப்புறம் உம் பேரு என்ன?”
”பாக்கியம். பாக்கியலட்சுமி. பாக்கியம்னுதான் கூப்பிடுவாக”
”என்ன வயசுன்னு சொன்ன?”
”70ன்னு நெனக்கேன் துரை.”
”சரி நல்லா கேட்டுக்க அந்தப் பார்வதி இருந்த எடத்த பாத்தல்ல” அவள் தலையாட்டினாள் ”நாளைக்கு அங்க போயி இருந்துக்க. பாஸ்டர் அல்லேலுயா சொல்றத எண்ணிகிட்டிரு. மூணாமத்த முறை கண்ணை மூடி ஒரு கையை மேல தூக்கி அல்லேலுயா சொல்லுவாரு… அதுக்கு அடுத்து கூப்புடறப்ப நீ மேடைக்கு போவணும்… கூட ஆராவது வரணுமா மேடைக்கு ஏத்திவிட.?..”
அவள் அமைதியாகத் தலையாட்டினாள்
”சரி நானே வருதேன்… மேலே ஏத்தி விட்டுருவேன்.. பாஸ்டரு உன் நெத்திய தொட்டதும் கம்பை கீழ போட்டுகிட்டு ஒரு நிமிசம் கையை தூக்கி குணமாயிட்டேன் ஆண்டவரேன்னு சொல்லு… மனசுலாச்சா?”
வெள்ளை ஜிப்பாவின் கண் குறுகியது… அவள் நெத்தியில் திருநீறு போட்ட தடம் லேசாகக் கருத்தும் இன்னும் கொஞ்சம் திருநீறு அதில் ஒட்டி சிறிதே வெள்ளையாகவும் இருந்தது.
”நாளைக்கு நல்லா துந்நீர போட்டுட்டே வா… இல்லைன்னா பவுடரு வாங்கி தீட்டிக்க.. பாஸ்டர் கிட்ட கையைத் தூக்கினதும் அவரே உனக்கு ரட்சிப்புக்கு முந்தின பேரு பாக்கியமான்னு கேட்கச் சொல்லிறுவேன். அவரே கேட்டு “இனி ரட்சிப்புக்கு பொறவு உன் பேரு சாரான்னுவாரு. உடனே நீ துந்நீர அழிச்சிரணும் என்னா?”
”அந்த சிவஞ்தானே நம்மள இந்த பாடுபடுத்துறான்” சம்பந்தமே இல்லாமல் அந்த வரி நினைவில் வர கிழவியின் முகத்தில் புன்னகை மீண்டும் முகக் கோணலாக வெளிப்பட்டு அந்த வெள்ளை ஜிப்பாவை முகம் கடுக்க வைத்தது…
”புரிஞ்சுதா கெளவி?” வெள்ளை ஜிப்பா கடுகடுப்புடன் கேட்டான். ”நாளைக்கு ராத்திரி வரைக்கும் இங்கனயே இரு. நல்ல சிக்கன் சாப்பாடு உண்டு. மத்தியானம் ஒரு ரிகர்சல் வேண்ணா பாத்திரலாம்….. அப்புறம் ராத்திரி முடிஞ்சதும் உனக்கு நூத்தம்பது ரூபா. திரும்ப குளத்து பஸ் ஸ்டாண்ட்க்கே கொண்டு விட்டுரலாம்… ஒழுங்கா சாட்சிக்கு வந்தா வரப்பல்லாம் சாப்பாடும் துட்டும் கிடைக்கும் மனசிலாச்சா….”
அவள் ஒரு நிமிசம் வெள்ளை ஜிப்பாவை ஏறிட்டு பார்த்தாள். அவளுக்குப் புரிந்தது… உள்ளே ஏதோ நொறுங்கி வேறேதோ மீண்டது. வெள்ளை ஜிப்பாவை நேராகப் பார்த்து “த்த்தூ” எனத் துப்பினாள். அதிர்ச்சியிலிருந்து அவன் மீளுவதற்குள் வெடு வெடென கோலூன்றி, பழக்கமில்லாத அந்த மைதானத்தின் இரவுப்பரப்பில் கற்பரல்கள் அவள் கால்களில் வேதனையைப் படரவிட, அதை லட்சியப்படுத்தாமல் வெளியேறி சாலையில் நடந்தாள்.
இருள் வெளியில் மட்டுமே இருந்தது.
– மார்ச் 2011
நல்ல கத