இவர்களும் வேலைக்குப் போகும் பெண்கள் தான்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 8, 2014
பார்வையிட்டோர்: 8,086 
 

ஆடி வெள்ளிக்கிழமை!

ஆடி வெள்ளிக்கிழமையென்றாலே மைத்ரேயியின் அலுவலகத்தில் பட்டுப்புடவை சீருடைதான். இன்று என்ன புடவை கட்டிக் கொண்டு போவது என்று யோசித்துக் கொண்டு இருந்தாள் மைத்ரேயி. படுக்கையறை கட்டிலின் மீது புடவைகளை கடை பரப்பிக் கொண்டு உட்கார்ந்தாள்.

நிச்சியதார்த்தப் புடவை?

சம்பங்கி வண்ணத்தில் வைர ஊசிகள் நெய்யப்பட்டு பளபளவென்று ஜொலிக்கும் புடவையோடு அலுவலகத்தில் நாள் முழுவதும் உட்கார முடியுமா?

ஊஹ¨ம்!

அதை ஓரமாக ஒதுக்கி வைத்தாள். அரக்கு வண்ணத்தில் அமைந்திருந்த திருமண வரவேற்புக்கு எடுத்த புடவையும் மனதைக் கவரவில்லை. தலைதீபாவளிக்கு வாங்கிய இளம் ரோஜா வண்ணப் பட்டுப்புடவையைக் கையிலெடுத்ததும்,

“நீ இன்னும் கிளம்பலியா?” என்று கேட்டவாறே அறைக்குள் நுழைந்தான் அரவிந்த்.

“ஆஹா! இந்தப் புடவையைப் பார்த்ததுமே நம்ப தலை தீபாவளி தான் ஞாபகத்திற்கு வருது மைதூ! அன்னிக்கு நீ எப்படி இதைக் கட்டிக்கிட்டு தேவதையாட்டம் ஜொலிச்சே!” என்றான் அரவிந்த் கண்களில் மலரும் நினைவுகள் மின்ன.

தலை தீபாவளியன்று தன்னை இந்தப் புடவையில் அரவிந்த் புகைப்படம் எடுத்த நினைவு மைத்ரேயியிக்கு வர அவள் முகமும் மலர்ந்தது.

“அப்ப இன்னைக்கு இதையே கட்டிக்கலாம்னு சொல்றீங்களா?”

“சரியாப்போச்சு! இன்னும் என்ன புடவைன்னே தீர்மானம் ஆகலியா? ஒண்ணு செய்யி மைதூ! எனக்கு நேரமாச்சு, நான் கிளம்பறேன். நீ ஒரு ஆட்டோ பிடிச்சு அலுவலகம் போயிடு, சரியா?”

நேரத்தைப் பார்க்காமல் புடவைகளை கடை பரப்பிக் கொண்டு உட்கார்ந்து விட்டோமே என்று வருந்திய மைத்ரேயி அவனுக்கு விடை கொடுத்து அனுப்பி விட்டு கதவைத் தாளிட்டு விட்டு உள்ளே வந்தாள்.

மைத்ரேயியின் அலுவகம் பத்து மணிக்கு தான். ஆனால் அரவிந்த்தின் வங்கி காலை ஒன்பதரை மணிக்குத் துவங்கும். அவளும் சீக்கிரமாகவே அவனுடன் கிளம்பி தினமும் ஒன்பதரை மணிக்கே ‘அசோக் பில்லரில்’ இறங்கி நிதானமாக நடந்து அலுவலகம் செல்வாள்.

அலங்காரங்கள் பூர்த்தியாகி முழு நீளக் கண்ணாடியில் தன்னை ஒருமுறை ஏற இறங்க பார்த்துக் கொண்டு திருப்தியோடு தெருவில் இறங்கினாள். தெருமுனையிலிருக்கும் பழக்கப்பட்ட பூக்காரப் பெண், “ரோஜா வச்சிக்கினு போ அக்கா!” என்று குரல் கொடுக்க, தன் புடவைக்குப் பொருத்தமான நிறத்தில் ஒரு ஒற்றை ரோஜாப்பூவைத் தேர்ந்தெடுத்து தலையில் சூடிக்கொண்டு நடந்தாள்.

பிரதான சாலை பேருந்து நிறுத்தத்திற்கு வந்து ஒரு ஆட்டோ பிடிக்கலாமா என்று சுற்றுமுற்றும் பார்த்தபோது அசோக் பில்லர் செல்லும் பேருந்தே வந்தது. இன்னும் நேரம் நிறைய இருக்கிறது என்பதால் பேருந்திலேயே செல்ல முடிவு செய்து ஏறிக் கொண்டாள்.

கூட்டம் ரொம்ப இல்லை. இருந்தாலும் உட்கார இடம் கிடைக்கவில்லை. ‘அடாடா! அவசரப்பட்டு ஏறி விட்டோமோ? பொறுமையாக நின்றிருந்தால் அடுத்த வண்டி காலியாக வந்திருக்குமோ?’ தான் வெளிர் நிற பட்டுப்புடவை கட்டிக் கொண்டிருக்கிறோம் என்ற நினைப்புடனேயே கூட்டத்தில் இடிபடாமல், புடவையில் அழுக்குப்படாமல் ஜாக்கிரதையாக ஒதுங்கி ஒதுங்கி நின்றே பயணித்தாள்.

அடுத்த நிறுத்தத்தில் ‘சள புள’ என்ற பேச்சுக் குரல்களோடு ஆண்களும் பெண்களுமாக கட்டிட வேலை செய்யும் கும்பலொன்று ஏறியது. சத்தமாக ஒண்ணு, ரெண்டு என்று தலையை எண்ணி “பில்லர் பதினாலு” என்று இளைஞன் ஒருவன் பயணச்சீட்டு எடுத்தான்.

சித்தாள் பெண்கள், பெண்கள் இருக்கைகளையட்டி தங்கள் ‘பாண்டுகளை’ வைத்து விட்டு அருகிலேயே நின்று கொண்டார்கள். ஓவ்வொரு பாண்டிலும் சாப்பாட்டுத் தூக்கு, சும்மாட்டுத் துணி, சொம்பு, டம்ளர் போன்ற சாமான்கள் காணப்பட்டன. ஓவ்வொருவர் மேலேயும் படிந்து கிடந்த சிமெண்ட், மண் தூசிகளைப் பார்த்தபோது ‘இன்று நம் புதுப்புடவை அதோ கதி தான்!’ என்று மைத்ரேயியிக்கு கவலை பிடித்துக் கொண்டது.

அடுத்த நிறுத்தத்தில் ஒரு இருக்கை காலியாக, மைத்ரேயி பாய்ந்து சென்று அமர்ந்து ‘அப்பாடா தப்பித்தோம்’ என்று ஆசுவாசமானாள்.

அவள் இருக்கைக்கு அருகிலேயே ஒரு இளவயது சித்தாள் பெண் இடுப்பில் ஒரு குழந்தையோடு நின்றிருந்தாள். மைத்ரேயியைப் பார்த்து சினேகமாகப் புன்னகைத்தாள். குழந்தையை மடியில் கிடியில் உட்கார்த்தி வைத்து விடப்போகிறாளே என்ற பதைப்பில் மைத்ரேயி முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“ஏற இறங்க வழி இல்லாம இப்பிடி சாமான்களைப் போட்டு வச்சிருக்காங்களே? ஏம்ப்பா கண்டக்டர்! நீ ஒண்ணும் கேக்க மாட்டியா?” கீழே இறங்கிய ஒருவர் கத்திக் கொண்டே போனார். அதைக் கேட்டு மைத்ரேயியின் அருகில் நின்று கொண்டிருந்த சித்தாள் பெண் தன் பாண்டை இன்னும் உள்ளே தள்ள, ஏதோ ‘பாத நமஸ்காரத்திற்குத்’ தாம்பாளத்தை வைத்தது போல ‘பாண்டு’ மைத்ரேயியின் கால்களுக்கு அடியிலேயே வந்து விட்டது. அந்தப் பெண் இடுப்பில் குழந்தையோடு குனிந்து நிமிர்ந்தபோது குழந்தையின் எண்ணை காணாத சிமிண்ட் வண்ண தலைமுடி லேசாக மைத்ரேயியின் பட்டுப் புடவையை ஒருமுறை உரசியது. மைத்ரேயி முகச் சுளிப்புடன் புடவை மடிப்புகளைக் கற்றையாகப் பற்றி, சிமெண்ட், மணல் அழுக்குப் படாமலிருக்க சற்றே மேலே தூக்கிக் கொண்டாள்.

அசோக் பில்லர் வந்து விட்டது.

திரும்ப ‘சள புள’ என்ற பேச்சுக் குரல்களோடு கட்டிட வேலை செய்பவர்கள் இறங்கினார்கள். ‘டணார், டணார்’ என்று சாமான்களை கீழே தூக்கிப் போட்டு விட்டு அவரவர் சாமான்களை சரி பார்த்துக் கொண்டார்கள்.

அவர்கள் பின்னாலேயே மைத்ரேயியும் இறங்கினாள். தன் புடவையை முன்னும் பின்னும் திரும்பிப் பார்த்த அவள் முகம் ‘கடுகடு’வென்றானது.

“சேலையிலே அழுக்கு பட்டிடிச்சாம்மா? அதான் கோவமா இருக்கீங்களா? ஓங்க ‘பேகு’ மாதிரி தானம்மா எங்க ‘பாண்டு’. அதை நாங்க வண்டியில மடியில வச்சிக்கிட்டா வர முடியும்? கோவிக்காதீங்கம்மா!”

மைத்ரேயியின் இருக்கைக்கு அருகே நின்று கொண்டு வந்த இளவயது சித்தாள் பெண் சிநேகமான புன்னகையோடு சொல்லி விட்டு அவள் பதிலுக்குக் காத்திராமல் நகர்ந்தாள்.

புன்னகை மாறாத முகத்துடன் இடுப்பில் தன் கைக்குழந்தையை இருக்கிக் கொண்டு, தலையில் ‘பாண்டை’ வைத்துக் கொண்டு நடையை எட்டப் போட்டு, நாள் முழுவதும் வெய்யிலில் நின்று, நடந்து, செய்யப்போகும் வேலைக்காக விரைந்து அந்தப் பெண் செல்ல, இன்னும் கோபம் குறையாமல் சிடுசிடுவென்ற முகத்தோடு, நாள் முழுவதும், குளிர் சாதன வசதி செய்யப் பட்டிருக்கும் தன் அலுவலகத்தில், தான் ஒரே இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு செய்யப் போகும் வேலைக்காக, மெல்ல மைத்ரேயி நடந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *