சர்ப்ப வியூகம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 15, 2022
பார்வையிட்டோர்: 3,724 
 

(1979 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அனல் பறக்கும் வயல் வெளியை உற்று நோக்கியவாறு அமர்ந்திருந்தான் திரவியம். வெறுமையின் தகிப்பில் வயல்வெளி பாலை என நீண்டு கிடந்தது. வெப்பத்தால் இலை கருகியும், புழுதிப் புயலில் அடிபட்ட பசுந்தளிர்கள் கூட மண் பூத்த செந்நிற மரங்கள் வரியமைத்து அடிவானின் விளிம்பாக காட்டெல்லை தெரிந்தது. வயலின் வரம்புகள் மனிதனின் காலடியே படாத கன்னி நிலமென, உடைந்தும், சிதறியும், கரணை கட்டிகளாயும், உருக்குலைந்து கிடக்க…. நெருஞ்சி, தொட்டாற்சிணுங்கி, கிடைச்சி எனப் பரவி, பூக்களாய்ச் சிரித்து முட்களாய்ச் சிலிர்த்திருந்தன. திரவியம் மேலே பார்த்தான்.

வானில் வெண்மேகங்கள் குடும்பம் குடும்பமாக உல்லாச பவனி வந்துகொண்டிருந்தன. உச்சிச் சூரியனின் வெப்பக் கதிர் குளத்தில் நீச்சலடித்துத் திரியும் மீன் குஞ்சுகளாக……

அவனின் எக்கி, ஒட்டிய அடி வயிற்றிலிருந்து ஏழுந்ததான நீண்ட பெருமூச்சு எழுந்து, வயிற்றில் சப்த ஜாலங்களை ஏற்படுத்திற்று.

அக்னி-

உள்ளும் புறமும்.

தூரத்தில் யாரோ கும்பலாகப் பாதை விலக்கி, முட்களுக்கு வழி பிரித்து வருவது தெரிந்தது.

‘யாரது?’

பசியால் பூத்த கண்களை இடுக்கிக் கொண்டு, நெற்றி மேட்டில் கை வைத்துக் கொண்டு பார்த்தான். அவர்கள் நெருங்கிக் கொண்டிருந்தனர்.

வெள்ளை வேட்டியும், ‘நஷனலு’மாக, இடையிடையே அவரது ஏதாவது விரலில் இருக்கும் மோதிரத்தில் ஒளி பட்டுத் தெறிக்க, வேலாயுதம் முன்னாக வேகமாக வந்து கொண்டிருந்தார். அவரின் பின்னாகவோ, அருகாகவோ கிராம சேவகரும் அவரின் உதவியாள் குறி சுடும் கம்பியையும், முத்திரை இரும்பையும் கொண்டு வர, அவர்களின் பின்னால் சில அடி தூரத்தில் ரகுராமனும், இஸ்மாயிலும் வந்துகொண்ருந்தனர்.

‘என்ன திரவியம்…. எப்படி இருக்கு உங்க பாடெல்லாம்?’ என்று கேட்டவாறு வந்தார் வேலாயுதம்.

அவன் இடுப்பால் நழுவும் சாரத்தைத் தூக்கி அவசரமாகச் செருகினாற் போல கட்டியவாறு எழுந்தான்.

‘என்னத்தைச் சொல்லுகிறது….. உங்களுக்குத் தெரியாததா? பாத்துக் கொண்டுதானே இருக்கிறியள்…. வானம் பாத்த பூமி, குளம், அரசாங்கம் என்னத்த செய்தென்ன…… மழையெல்ல பெய்யோணும். மூண்டாம் வருஷமா வானம் முகடு துறக்கேல்ல. குளமெல்லாம் வத்திப் போச்சு. குடிநீருக்கே அருந்தலாக இருக்கு. குளம் சேறாகி கொதிச்சுக் கிடக்கு. சீலையைப் போட்டு பிழிஞ்சு தண்ணி எடுக்கிறம். மீன் எல்லாம் செத்து மிதக்குது. இந்த நிலையில் எப்படி வேளாண்மை செய்யிறது. பயறு, உளுந்தெண்டாலும் போடலாமெண்டு பாத்தா….. அதுக்கும் கூட பன்னீர் தெளிச்ச மாதிரியெண்டாலும் மழை வேணுமே. இப்ப ஒண்டுக்கும் வழியில்லாமத் தவிக்கிறம். வெள்ளாமையை நம்பியிருக்கிறவர் பாடெல்லாம் நரகம் தான்’.

வேலாயுதம் சிரித்தார்.

‘உப்புடிச் சொல்லாத திரவியம். வெள்ளாமையை விட்டுடொரு தொழிலே…….’

‘உப்புடிச் சொல்லிச் சொல்லித் தான் கமக்காரன் ஏமாந்து போய் வயித்துக்குக் கூட வழியில்லாமக் காய்கிறான். எல்லாருக்கும் உணவளிக்கிறவன் எண்டு பேர். இங்க அவன்ர வயிறு கருகிறதை ஆர் கண்டினம்? எல்லாத்துக்கும் மழைத்தண்ணி வேண்டும். கொதிக்கிற வயித்தில ஈரத் துணி போடக் கூட தண்ணிக்கு வழியில்ல……’

இப்போது வேலாயுதத்துக்குச் சிரிப்பு வரவில்லை.

‘சரி சரி உன்னோட நிண்டு கதைக்கிறதெண்டாக் கனக்கக் கதைக்கலாம். எனக்கு இப்ப நேரமில்ல. கொஞ்சம் வேலை கிடக்கு. விதானையாரையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறன். அப்ப வரட்டே’ என்றவாறு, அவன் வளவுக்கு அடுத்திருந்த தனது மாட்டுப் பட்டிக்குள் நுழைந்தார்.

திரவியத்தின் கமத்திற்கு ஒதுக்குப் புறமாக, முட்பற்றைகளிடையே ஒற்றையடிப் பாதை அமைத்திருந்தார். யாரும் பொதுப்படையாக நோக்கினால் முட்பற்றை தான் தென்படுமேயன்றி அவற்றிடையே ஒரு மாட்டுப் பட்டி அமைந்திருக்கும் எனக் கற்பனை கூடச் செய்து பார்க்க மாட்டார்கள்.

வேலாயுதத்தார் ஒரு பெரிய மாட்டு வியாபாரி. ஊருக்குள் உள்ள மாடுகளை, எருமைகளை விலைக்கு வாங்கியும் – விலைக்கு வாங்காமல் கள்ள மாடு, எருமைகள் பிடித்தும் – கொழும்பு போன்ற நகரங்களுக்கு டீ.ஆர்.ஓ.வின் அனுமதியுடன், அனுமதிப்பில்லாமலும் அனுப்பி வருவார். அவர் வெளிப்படையாக மாடுகள் ஏற்றுமதி செய்து வருவதால் அவருக்குக் கொஞ்சக் காலம் தொடக்கமாக ‘மாட்டுக் கார வேலன்’ என்ற புதுப் பெயரை ஊரிலுள்ள வாலிபர்கள் சூட்டப் போக, அது சிறுவர் வயோதிபர் வரை வியாபித்து கிராமம் முழுவதும் அவருடைய பெயராகப் பரவி விட்டது.

ஆரம்ப காலங்களில் அவர் ஊரவர்களுடைய மாடுகளைக் கள்ளமாகவே பிடித்து ஏற்றுமதி செய்து வந்ததைக் கண்டு, டி.ஆர்.ஓவிற்கும் கவுண்மேந்து ஏஜெண்டிற்கும் அனுப்பப் பட்ட புகார்களும், பெட்டிசங்களும் அவர் பணம் பெருகப் பெருக வலிகுன்றி, மங்கி மடிந்து எலியரித்தும் இராமபாணம் துளைத்தும் போயின. ஆரம்பத்தில் அவரை எதிர்த்த ஊர்மக்களும் பணத்தின் சீற்றத்துக்கு அஞ்சி அஞ்சி ஒடுங்க வேலாயுதத்தாரின் கள்ள மாட்டு வேட்டைகளை அதிகரிக்கச் செய்திருந்தது. அவர் கள்ள மாடு ஏற்றுகிறார் என்று ஊர் மக்களுக்குத் தெரிந்தாலும், எப்படி, ஆர் மூலம் பிடித்து எப்படி அனுப்புகிறார் என்பதை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.

இன்று அவர் ஊரில் பெரிய மனுஷர், அவருக்கு எந்த வீட்டில், எவனிடம் எத்தனை மாடுகள் நிக்குது? எங்க கட்டியிருக்கு? அவனுக்கு எப்ப பணமுடை ஏற்படும் என்பதெல்லாம் அவருக்குப் பஞ்சாங்க பாடம். ‘ஓ… ஓ…. செல்லன்ர பெஞ்சாதியப் பாத்தா இப்ப எட்டு மாசம் போலகிடக்கு…… ஆளுக்கு ஒரு பெரும் செலவு காத்திருக்கு…. இப்ப வெள்ளாமையுமில்லை….. செல்லன் பிள்ளைப் பெறுவுக்கு என்ன செய்வான்? தன்ர நெற்றிச் சுட்டியனை வித்தாத் தான் புள்ளத்தாச்சிக்குச் சரக்கரைச்சுக் கொடுக்க முடியும். எப்படியும் ரெண்டு மூண்டுக்க அமத்திப் போடோணும். கிடைச்சா அந்த மாட்டிலேயே எல்லாம் போக எனக்கும் ரெண்டு மூண்டு கிடைக்கும்.’ இப்படித்தான் அவருக்கு எந்தவொரு மாட்டைப் பார்த்தாலும் சிந்தனை ஓடும்.

அவனவனிடம் அந்தக் காலங்களில் நட்சத்திர நேரகாலம் போல, குரு மாறுகிற வீட்டைப் போல, போய் நிற்பார். போகும் போது மாட்டு வியாபாரத்துக்குப் போவது போலவும் போகமாட்டார். ‘வேறை அலுவலாக அந்தப் பக்கம் வந்தது போலவும், அவனையும் வந்த கையோட பாத்துட்டுப் போவம்’ என்று வந்ததாகவும் சுகம் விசாரித்து நிற்பார். இதுவரை காலமும் அவரைக் கண்ணால் கண்டாலே எரிச்சலுடனும் கோபத்துடனும் நோக்கிக் கொண்டிருந்த கமக்காரனுக்கு – அவர் வந்த வேளையில் கண் கண்ட தெய்வமாகத் தோற்றமளித்தார். பிறகென்ன?

தெய்வத்திடம் பக்தன் பேரமா பேசுவான்?

தெய்வம் தீர்த்தது தான் விலை.

பணத்தேவை முடிந்ததும் தான் பக்தன், கற்பூரச் செலவைப் பற்றி எண்ணிப் பார்ப்பான். பதறிப் போவான். பதறி என்ன செய்வது. வேலாயுதத்தார் அவனால் வந்த வரவை எண்ணிக் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருப்பார்.

தொழிலின் நெளிவு சுழிவுகளை நன்குணர்ந்து தொழில் நடத்திச் செல்வதில், வேலாயுதத்தார் வெகு சாமர்த்தியசாலி. டி.ஆர்.ஓ கொடுக்கும் ‘பெமிட்’டுக்கு பன்னிரண்டு மாடுகளை லொறிகளில் அனுப்புவார். அவருக்கு மாதம் ஒரு ‘பெமிட்டுத்தான். ஆனால், கொழும்பு மாநகர் தேவைக்கு இந்தப் பன்னிரண்டு மாடுகளோ எருமைகளோ எந்த மூலைக்கு. இதை எண்ணியதும் இவருக்கு கொழும்பு மக்கள் மேல் ஏற்படும் பரிதாபவுணர்ச்சி கருணை வெள்ளத்தைக் கரைபுரண்டோடச் செய்துவிடும். உடனே எப்படியோ இன்னுமொரு ஐம்பது எருமைகளையோ, மாடுகளையோ தேடி அதிகாரிகளுக்குத் தெரியாமல் காடுகளிடையேயும் குளங்களிடையேயும் அவற்றை நடத்தியே கொழும்புக்குக் கொண்டு போய்ச் சேர்க்கச் செய்துவிடுவார். இரண்டு நாட்களில் அத்தனை மாடுகளும் கொழும்பில் நிற்கும் அல்லது இறைச்சிக் கடையில் தொங்கும். சில சமயங்களில் கொழும்புக்கு அனுப்பி வைக்கும் உருப்படிகளில் நாலைந்தோ, இரண்டு மூன்றோ கூடுவதுமுண்டு. இறைச்சிக்காக ‘அடிபட’ (ஓ!அறுபட) அனுப்பப் படும் மாடுகளிலோ, எருமைகளிலோ சிலதுகள் சினைப் பட்டவையாக இருக்கும், வழியில் புல்லும் தண்ணீரும் கண்ட இடத்தில் அவை ஈன்று விட்டால் அவற்றை விட்டுவிட்டா செல்வது? அனுப்பும் போது அவற்றையும் மனக் கணக்கிட்டுத் தான் அனுப்பி வைப்பார். அவற்றை மாடோட்டிகள் தூக்கி அணைத்துக் கொண்டு செல்வர். இதற்கெல்லாம் வேலாயுதத்தாரின் கருணையுள்ளம் தான் காரணம் என்பார்கள். உண்மைதான். இல்லாவிட்டால் கொழும்புக்காரருக்கு இதமான, மென்மையான ‘ஆட்டிறைச்சி’ எப்படிக் கிடைக்கும்.

கால் நடைகளை நடத்திச் செல்லும் ‘மாடோட்டி’கள் மீதும் இவரின் கருணை வெள்ளம் வற்றாத நதியாக கரை புரண்டு ஓடுவதும் நித்திய உண்மை .

கடத்திச் செல்லும் எருமை, மாடுகளை வழியில் கிராமசேவகரோ, டி.ஆர்.ஓவோ மடக்கி விட்டால் பணத்தால் சமாளிக்கப் பாப்பார். இல்லாவிட்டால் தான் என்ன?

மாடோட்டிகள் பதினான்கு நாள் ரிமாண்ட் சிறையிருப்பர். மாடுகளும் டி.ஆர்.ஓவின் மேற் பார்வையில் நாளொன்றுக்கு நான்கு ரூபா செலவில் பராமரிக்கப் படும். பதினான்காம் நாள் மாடுகளும், மாடோட்டிகளும் பிணையிலோ குற்றம் கட்டிவிட்டோ வெளியே சுதந்திரப் பறவைகளாக வருவர். இவ்வளவுக்கும் வேலாயுதத்தாரின் பெயர் வெளியே தெரிய வராது. ரிமாண்டால் வெளியே வருபவர்கள் ஓய்வுகூட எடுக்க மாட்டார்கள். எதற்காக ஓய்வு? பதினான்கு நாட்கள் போதாதா, அன்றிரவே மாடுகள் விட்ட பயணத்தைத் தொடங்கிவிடும். அவர்களும் உற்சாகமாக ஓட்டிச் செல்வர். அவர்களுக்கு ஒரு உருப்படிகளைப் பத்திரமாகக் கொழும்புக்குக் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டால் ஒன்றிற்குப் பத்து ரூபா என்ற வீதம் கிடைக்கும். வழிச் செலவு வேறு. கொழும்புச் செலவினை இறைச்சிக் கடைக்காரர் பார்த்துக் கொள்வார். மூன்றாம் நாள் லொறி மூலமோ, ரயில் மூலமோ கொழும்பால் திரும்பி வருவார்கள்.

தற்போது கமம், சேனை எல்லாம் வறண்டு கிடப்பதால் இந்த வேலைக்கு ஏக மதிப்பு. ஆனாலும் அவர் எல்லாரையும் இந்த வேலைக்குச் சேர்த்துவிட மாட்டார். நம்பிக்கை, நாணயம், தொழில் வல்லமை பார்ப்பார்.

திரவியத்தை அடிக்கடி நோட்டம் விட்டுப் பார்க்கிறார். அவன் அசைந்து கொடுப்பதாக இல்லை. மனைவி பிள்ளைகளை விட்டிட்டுப் போய்ச் சிறையில் இருக்க நேர்ந்தால்……

நினைக்கவே அவன் மேனி நடுங்கும்.

மாடுகளின் கதறல் கேட்டது.

‘குறி சுடுகிறார்கள்… அது தான் மாடுகள் கத்துது’ திரவியம் காதைப் பொத்திக் கொண்டான்.

‘போயும் போயும் என்ர அருமை மாடுகளான ‘வெள்ளைப் பூச்சியளையும் நெற்றிச் சுட்டியனையும், கறுத்த வாலனையும் இவனுக்கு வித்தனே? நான் என்ன செய்யிறது. அறாவிலைக்கு வித்து என்ன சுகத்தைக் கண்டன். அதுகள் இரண்டும் இப்போது இல்ல. அதால வந்த பணமும் இல்ல. வானம் பொய்ச்சு, வீடு, வளவு எல்லாத்தையுமே, துடைச்சுக் கொண்டிருக்குது நினைவும் வெறுமை பூத்து நெருஞ்சியெனச் சிரித்துக் குத்தியது.

‘என்ர குழந்தையள் போலையல்லவா வளத்தன். அதுகளும் என்ர குரலைக் கேட்டாப் போதும். சொன்னபடி கேக்கும். அதுகளை நம்பித்தானே இந்த மூண்டேக்கர் நிலத்தை வைச்சிருந்தன். இனி மழை பெய்தாலும் எப்படி உழவு செய்யப் போறனோ?……..’ அவன் இரு கரங்களாலும் தலையைப் பிடித்துக் கொண்டான்.

உச்சி வெய்யிலில் உலகு இருண்டு வந்ததென அவன் கண்களுக்குப் பட்டது.

உச்சி வெய்யில் மண்டையைப் பிளக்க, வரம்பு வழியே விநாசித்தம்பி ஓடிவந்தான். அவன் முகம் வெய்யிலில் கறுத்து வியர்வையில் மெருகிட்டிருந்தது.

‘இந்த வெய்யிலுக்கை இவன் எங்கையெல்லாம் போய் அலைஞ்சிட்டு வாறான். நாளைக்குக் காய்ச்சல் எண்டு கிடந்தா அவனை ஆர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு காவுறது. ஆசுப்பத்திரியிலும் மருந்தே கிடக்கு. காசு கொடுக்கிறவைக்குத் தான் அப்போதிக்கரி டொக்குத்தரும் ஊசி போடுகிறார்’ அவனுக்கு எரிச்சல் மண்டியது.

‘டேய்…… எங்கையெல்லாம் போய்ச் சுத்திட்டு வாறாய். இங்க வாடா!’ திரவியம் சத்தம் போட்டான்.

விநாசி குடிசைக் கப்புப் பக்கமாக ஒதுங்கினான். திரவியத்துக்கு அவன் நின்ற கோலம் ஆத்திரத்தை மூட்டியது.

‘என்னடா பதுங்கிற……. வாய்க்கயென்ன கொழுக்கட்டையா? நான் கேக்கிறன் எண்ட மரியாதை கூட இல்லாமல்…… படவா…….ராஸ்கல்……!

‘அப்பா…. வந்தப்பா….. அவன் தயங்கினான்.

‘என்னடா? சொல்லிறதைச் சொல்லித் தொலையன்’

‘நானும் தம்பிராசாவின்ர மகன் காங்கேசனும் கீரைக் கொட்டை தேடிக் காட்டுக்க போனம்.’

‘சனியனே….. தனிய உந்தக் காடுவழியே போகாத எண்டு எத்தனை தரம் உனக்குச் சொன்னனான். எடி… இஞ்சாய்….. உள்ள இருக்கிற துவரம் கம்பைக் கொண்டு வா….. தங்கம் வெளியே எட்டிப் பார்த்தாள்.

‘என்ன செய்யப் போறியள் அவனை? வீட்டில அதுகளுக்குத் திறுத்தியாப் போட்டா ஏன் அதுகள் காடு மேடெல்லாம் போய் அலையுதுகள்’.

தண்டிக்கப் போன திரவியம், தானே தண்டிக்கப் பட்டவனாகத் தயங்கினான். என்றாலும் மகனின் முன் தன் தோல்வியைக் காட்டினால் நாளைக்கு அவன் மதிக்க மாட்டானே என்ற எண்ணம் மனதில் எழவும் ‘காட்டுக்க போய் என்ன செய்தனியள்’ என்றான்.

விநாசித்தம்பிக்கு முகம் மலர்ந்தது. ‘அப்பா…. அங்க காட்டுக்க ஒரு குளம். கனக்கத் தண்ணியோட இருக்கப்பா…. அங்க கனக்க அல்லிக்காய் எல்லாம் காய்ச்சு வெடிச்சு…. நாங்க ரெண்டு பேரும் நிறைய புடுங்கிக் கொண்டு வந்தமப்பா’

– அப்போது தான் மகனின் சறத்தைக் கவனித்தான் திரவியம். ‘சண்டிக்கட்டு’ கட்டியிருந்தான். அந்தச் சண்டிக் கட்டு நிறைய அல்லிக்காய் இருப்பது தெரிந்தது.

‘இந்தக் காலத்தில் குளமாம், தண்ணியாம் என்ன ஏதும் கனவு கண்டியா?’ என்று விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில் அடுத்த கமம் தம்பிராசா தன் மகன் காங்கேசனை இழுத்துக் கொண்டு வந்தான்.

‘திரவியம் கேட்டியே சங்கதியை! பெடியள் எதையோ கண்டுபோட்டு உளர்றாங்களோ’.

‘வா தம்பிராசாண்ணை , அதத் தான் நானும் விசாரிச்சுக் கொண்டிருக்கிறன், நீயும் வாறாய். அப்ப என்ன செய்வம்’.

‘வாவன்… இதுகளோட போய் நாங்களும் அதப் பாத்திட்டுவருவம். இங்கேயும் என்ன வேல வெட்டியே வீணாப் போகுது’.

‘சரி நடவுங்கடா நாங்களும் போய்ப் பாப்பம்’.

சிறுவர் இருவரும் உற்சாகமாக வழி காட்டிச் சென்றனர்.

வழக்கமாகச் செல்லும் பாதையிலிருந்து, ஒற்றையடிப் பாதை கூட இல்லாமல் ஏதோ விலங்குகள் பற்றைகள் புதர்களை விலக்கிச் சென்றதால் ஏற்பட்ட குகை போன்ற பாதை வழியே இருவரையும் அழைத்துச் சென்றார்கள். வழியில் யானை ‘இலத்தி’கள் காணப் பட்டன. திரவியம் தயங்கினான். தம்பிராசா சென்று அதன்மேல் தன் உள்ளங் காலை மெதுவாக வைத்தான். சிரித்துக் கொண்டே அந்த இலத்தியை உழக்கிக் கொண்டு வந்தான். இலத்தி பொடிப் பொடியாக உதிர்ந்தது.

‘மச்சான் அது எப்பவோ போட்ட இலத்தி, சூடாளறிப் போய்…….’ – விளக்கம் சொல்லிக் கொண்டு நடந்தான்.

விர்ரென்று தேனீ இலையான் ஒன்று திரவியத்தின் முகத்தின் முன்னால் வட்டமிட்டு ரீங்கரித்தது.

‘அட, சை…..!’ திரவியம் முகத்திற்கு முன்னால் கைகளை ஆட்டினான். தேனீ எழும்பிப் பறந்து சென்றது. தம்பிராசா திடீரெனப் பரபரப்புக் கொண்டான்.

‘மச்சான், நீ விசர்வேலை பாத்துக் கொண்டாய். அது தேனீயடா. இப்ப பார் காட்டு மரமெல்லாம் பூத்துக் கிடக்கு. இப்பதான் தேனீ எடுக்கிற காலம். உந்தத் தேனீ போற இடத்தில் நிச்சயம் தேன் இருக்கும். வா….. வா…. பொடியங்கள் போற பாதையில் தான் அதுவும் பறக்குது. வா….. அது எந்த மரத்தைப் போய் அடையுது எண்டு பாப்பம்.’

சிறுவர்களுடன், பெரியவர்களுக்கும் இந்த வன வேட்டை உற்சாகமான பொழுது போக்காக அமைந்தது.

தேனீ மெல்லிய நெட்டையான பாலை மரத்தின் சுவரில் இறங்கியது. தம்பிராசா அதனைக் கூர்ந்து கவனித்தான்.

‘மச்சான்….. இந்த மரத்தில் நிச்சயம் தேனிருக்கும்’ என்றான். ‘எப்படி?’ என்பது போல் திரவியம் அவனைப் பார்த்தான்.

தம்பிராசா மரத்தினடியில் போய் சுற்று முற்றும் பார்த்தான். குனிந்து ஒரு ‘ஆமான’ கல்லை எடுத்தான். பாலை மரத்தின் அடியில் ‘டொக் டொக்’ எனச் சப்தமிடப் பெரிதாகத் தட்டினான். தட்டிய இடத்தில் காதைக் கொஞ்ச நேரம் வைத்து அமைதியாகக் கேட்டான். அவன் உதட்டில் புன்னகை மிளிர்ந்தது. சிறுவர்கள் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அவன் கண்ணசைவால் திரவியத்தைக் கூப்பிட்டு, தன்னைப் போல் காதை வைத்துக் கேட்கும் படி கூறினான். திரவியம் காதை வைத்தான். முதலில் ஒன்றும் புரியவில்லை . சில விநாடிகளின் பின் மெல்லிதாக ஈக்கள் இரையும் சப்தம் கேட்டது. அவன் மரத்தை விட்டு நீங்கியதும் சிறுவர்கள் ஓடிச் சென்று காதை வைத்து உற்றுக் கேட்கலாயினர்.

தம்பிராசா அந்த மரத்திற்கு அடியில் சில கற்களைக் குவித்து அடையாளமிட்டான். ‘மச்சான் திரும்பி வரேக்க எந்த மரம் எண்டு அடையாளம் காணத் தான்’ என்றான்.

‘சரி சரி கேட்டது போதும். நீங்க போய்ப் பாத்த இடத்தைக் காட்டுங்க’ என்று திரவியம் அதட்டினான். சிறுவர்கள் உற்சாகம் கொண்டவர்களாக பற்றைப் புதர்களை விலக்கிக் கொண்டு நடந்தவர்கள், திடீரென ஓரிடத்தில் நின்றார்கள். அந்த இடத்தைக் கண்ணுற்ற இருவரின் விழிகளும் ஆச்சரியத்தால் விரிந்து மலர்ந்த ன.

இளம் காடுகளால் சூழப் பட்டு, கன்னி கழியாத குமரிப் பெண் போல மரநிழலின் குளுமையில், அந்தக் குளம் அமைதி கண்டிருந்தது. ஒரு காலத்தில் யாரோ தனிப்பட்டவர்களால் பராமரிக்கப் பட்டு வந்து கைவிடப்பட்ட குளம் எனத் தெரிந்தது. மண் கலிங்கு, மடை அனைத்தும் ஆங்காங்கு, சிதைந்து உடைவுற்ற மண்பாண்டம் போல விளங்கியது. அவர்கள் நின்ற இடத்தில் அகலமாகப் பரந்து காணப்பட்ட குளம் அவர்கள் பார்வையில் முன்னாகச் சற்றுக் குறுகிச் சென்று, மீண்டும் கிழக்காகத் திரும்பிப் பரந்திருந்தது. அவர்கள் நின்றிருந்த பக்கமே குளத்தின் ஆழமான பகுதியாக இருக்க வேண்டும். வடக்கேயும், கிழக்கேயும் குளத்து நீர் வற்றிப் புல் நிலமாக பரந்திருந்தது.

சிறுவர்கள் கோரைக் கிழங்குகளுக்காக ஓடினர்.

தண்ணீரைக் கண்டதும் திரவியத்தால் கம்மா இருக்க முடியவில்லை. ‘மச்சான் வடிவா ஒரு போகம் செய்யத் தண்ணி காணும்’ என்றான்.

‘எங்க செய்யிறது? எப்படிச் செய்யிறது?’ என்றான் தம்பிராசா.

‘மச்சான் குளத்தின் வடக்குப் பகுதியை உழுது பதப் படுத்தி இந்தத் தண்ணியை வாய்க்காலால பாய்ச்சினமெண்டால்’.

‘குளத்திலேயே பயிர் செய்யப் போறியா?’

‘இதொண்டும் அதிசயமில்ல. உப்புடிக் கன இடத்தில் செய்யிறதுதான். ஆனா இந்த விசயம் ஒருத்தருக்கும் தெரியக் கூடாது. தெரிஞ்சாப் போச்சு’.

‘அது சரி…. உழுகிறதுக்கு என்ன செய்யிறது. கலப்பையை நீயும் நானுமா இழுக்கிறது. மாட்டைத்தான் வித்துச் சாப்பிட்டுட்டம்.’

திரவியத்துக்கு அப்போது தான் மாடுகள் பற்றிய பிரச்சனை உறைத்தது. பரிதாபமாக தம்பிராசாவைப் பார்த்தான். தம்பிராசா தலையைத் தடவி விட்டுக் கொண்டான். திடீரென குளத்தின் வடபகுதியிலே ஹீங்கார முக்கார முழக்கம் கேட்டது. சிறுவர்கள் ஓடிவந்தார்கள். எல்லாரும் மரத்தின் பின்னால் போய் ஒளிந்து கொண்டார்கள்.

நான்கைந்து காட்டெருமைகள், குளுமாடுகள் குளத்தை நோக்கி ஓடி வந்தன.

தம்பிராசாவின் முகம் மலர்ந்தது.

‘மச்சான் நீ ஒண்டுக்கும் பயப்படாத. பொடியங்களோட இங்க வந்ததும் ஒரு நன்மைக்குத்தான். எங்கோ அடிக்காட்டுக்க கிடக்கிற குளுமாடுகள் தண்ணித் தாகத்தில் இந்தக் குளத்துக்கு வந்து போகுதுகள். இதுகளில் ஒண்டு ரெண்டை மட்டும் பிடிச்சிட்டா…..’ என்றவாறு திரவியத்தைப் பார்த்தான்.

‘அது முடியிற காரியமா….. இந்தக் குளுமாடுகளைப் பிடிக்கிறதெண்டா . மாடுகளைப் பிடிக்கிறமோ அதுகள் எங்கட உயிரைக் குடிக்கிறதோ தெரியாது’ என்று கவலையோடு பார்த்தான் திரவியம்.

‘மச்சான் எனக்கும் உதில கொஞ்சம் பழக்கமுண்டு. ஊருக்குள்ள இருக்கிற எருமைகளில் முக்கால் வாசி இப்படிக் காட்டுக்க புடிச்சு வந்ததுதான். அதுக்கு ஒரு பழகின எருமையிருந்தாப் போதும். அதின்ர குரலையும் அதனையும் காட்டியே மற்றக் குளுமாடுகளை வளைச்சப் பிடிச்சிடலாம். ஆனா, எங்களுக்கு அதுக்கும் வழியில்ல. நாங்களே எப்படியும் பிடிச்சுப் பாப்பம். வா வீட்ட போவம். எல்லா ஆயத்தத்தோடும், கயிறு, கோடாலி எல்லாத்தோடும் வருவம்..’

திரும்பும் போது அவர்கள் நடையில் வேகம் கண்டிருந்தது.

***

அடுத்த நாள் புலரிப்பொழுதிலேயே தம்பிராசாவும், திரவியமும் காட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தனர். தம்பிராசாவின் தோளிலே தேடாக் கயிற்று வளையங்கள் – சுமையாக அழுத்த கைக் கோடாரியுடன் முன்னே நடக்க, திரவியம் இரண்டு கரைக் குடுவையுடனும், ஒரு சாக்கு மூட்டையுடனும் பின் தொடர்ந்து கொண்டிருந்தான்.

முதனாள் அடையாளமிட்ட பாலை மரத்தை அண்மியதும் தம்பிராசாவின் நடை தடைப் பட்டது. தேடாக் கயிறுகளை கீழிறக்கினான்.

‘நெருப்புப் பெட்டியும், கொஞ்சம் கந்தல் துணியும் தா!’ திரவியம் தனது மூட்டையை அவிழ்த்து எடுத்துக் கொடுத்தான். தம்பிராசா இரண்டையும் எடுத்து மடியில் கட்டிக் கொண்டு, கோடாரியை வலப் பக்க இடுப்பில் செருகிக் கொண்டு பாலையில் விறுவிறு வென்று ஏறிக் கவரை அடைந்தான்.

தேன் பொந்திற்கு ஒரு சாண் கீழாக, கைக் கோடாரியால் பதமாக வெட்டி ஓட்டை தயாரித்தான். கோறை பாய்ந்த மரமாதலால் அது சுலபமாக இருந்தது. அந்தக் கோறைக்குள் துணியைத் திணித்து நெருப்பு மூட்டினான். புகை எழும்பத் தொடங்க வேகமாகக் கீழிறங்கினான்.

பாலைக் கவரிலிருந்து தேனீக் கூட்டம் கரும்புகையென வெளிக் கிளம்பிப் பறந்தன. சிறிது விநாடியின் பின் தேனீக்கள் முற்றாகக் கலைந்து விட்டன, என்றதன் பின் மீண்டும் தம்பிராசா ஏறிப் பொந்திற்குள் கைவிட்டான்.

தேன்வதை கையோடு வந்தது. எவ்வித சேதாரமுமில்லாமல். அவன் தேன் எடுத்து வந்த லாவகம் திரவியத்தை மெய்சிலிர்க்க வைத்தது. இரு வருமாக சுரைக் குடுவையில் தேனைச் சேகரித்துக் கொண்டு குளத்தை அண்மிய போது பொழுது உச்சிக்கு வந்திருந்தது.

‘மச்சான் நல்ல நேரத்தில் தான் வந்து சேந்திருக்கிறம். இனித்தான் குளுவான்கள் வெப்பம் தாங்காமல் தண்ணி குடிக்க இங்க வரும்.’

அவர்கள் தங்களின் சுமைகளைக் குளக்கரையோரமாக, கூந்தல் வேர்ப் பரப்பியும், சயனித்தும், பரந்து கிடந்த மருதமரத்தடியில் இறக்கினார்கள். சுற்று வெளி எங்கும் வெறுமை பூத்துக் கிடந்தது. நேரம் சென்று கொண்டிருந்தது. திடீரெனத் தூரத்தில் புயல் கிளம்புவதைப் போல் புழுதி எழ, குளுமாடுகள் கூட்டம் விரைந்து வந்து கொண்டிருந்தது.

தம்பிராசா பரபரத்தான்.

‘மச்சான், அதுகள் கூட்டமாக வரேக்க பிடிக்கிறது கஷ்டம். இப்ப எங்களைக் கண்டாலும் எங்களுக்குத்தான் ஆபத்து. கவனமாக மரத்துக்குப் பின்னால மறைஞ்சு கொள்.’

குளுமாடுகள் வந்தன. புல்லை அசைபோட்டன. தண்ணீரிலே அழுந்தி எழுந்து சேற்றில் புரண்டு……

அவர்கள் பொறுமையுடன் காத்திருந்தார்கள்.

சூரியன் காட்டு மரங்களைத் தடவித் தடவிச் சென்று சரிந்து கொண்டிருந்தான். குளுமாடுகள் ஒவ்வொன்றாகக் குளத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தன. ஆனால் அந்த ஒற்றை எருமை மட்டும் எதனையும் கவனியாமல் குளத்தைச் சேறாக்கித் தனிமையில் இனிமை கண்டு கொண்டிருந்தது. அது குளத்தை விட்டு வெளியேறுகையில் எல்லா எருமைகளும் காட்டிடையே மறைந்து விட்டன. ஒன்றையொன்று நோக்கி, பிறையாக வளர்ந்த கொம்புகளுடன் அது சிலிர்த்து எழுந்து வெளியேறிய போது, அதன் தாடை, கால்களில் வலிவு தெரிந்தது. தம்பிராசாவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

‘மச்சான் உருப்படி ஆமானதுதான். கிடைச்சால்’ என்று கிசு கிசுத்தபடி மரத்தை விட்டு வெளியே வந்தான். மாடு என்ன எதுவென்று அறிய முன் தேடாக்கயிறு வானத்தில் வட்டமிட்டு எழுந்தது. அதன் கழுத்தில் போய் விழுந்தது. அதே வேளையில் அவன் புல் தரையில் உருண்டு கொண்டிருந்தான். அவன் கயிற்றை விடவில்லை. திரவியம் பின்னால் ஓடிச் என்று கயிற்றைப் பற்றினான். இருவர் பிடியிலும் மாடு திணறியது. கயிற்றை அப்படியே கொண்டு சென்று ஒரு மரத்தில் சுற்றி விட்டு, அதன் முனையைத் திரவியம் பிடித்திருக்க, தம்பிராசா இன்னொரு தேடாவளையத்தை எடுத்து வந்து அதனை நோக்கி ஓடினான். மாடு ஹீங்காரத் தொனியுடன் மண்ணைக் காலாலும், கொம்பாலும் கிளறிக் கொண்டிருந்தது. அந்த அமானுஷ்யப் பிரதேசமே அந்த ருத்ர போராட்டத்தால் அதிர்ந்தது. தம்பிராசா மாட்டிற்குப் பாய்ச்சல் காட்டிக் கொண்டே, நான்கு கால்களையும் எப்படியோ கயிற்றால் பிணைத்து விட்டான்.

எப்படியோ ஒரு மரத்தினடியில் அதனைக் கட்டிப் போட்ட போது அவர்கள் உடலே இற்று விட்டது போலிருந்தது. ஆனால் உள்ளத்திலிருந்த மகிழ்ச்சி முகத்தில் மலர்ச்சி காட்டியது.

பசி வயிற்றைக் காந்தியது.

‘சாப்பிடுவமா?’ — இருவரும் குளக்கரையில் அமர்ந்து உணவுப் பொட்டலத் துணியைப் பிரித்தார்கள்.

வட்டமான, தோசைக் கல் அளவில், குண்டாளமான இரண்டு குரக்கன் ரொட்டிகள். அதுதான் கிராமத்தவர்கள் காட்டிற்கோ, வேட்டைக்கோ செல்லும் போது கொண்டு போகும் உணவு. குரக்கன் அடை என்பார்கள். அதனைத் தின்று தண்ணீரும் குடித்தால் போதும். காட்டுப் பகுதியின் வெம்மை இதனால் அடங்கும்.

‘மச்சான்….. இண்டைக்கு நாங்கள் இதைப் பிடிச்சது பெரிய வேலையில்ல. ஏன் தெரியுமே, மாடுகள் வழக்கம் போல சுதந்திரமாக வரும் ஆபத்தை உணரால் நடமாடியதால் பிடிச்சிட்டம். ஆனா…. போன குறுவான்கள் தங்கட ஆள் ஒண்டு குறையுது எண்டு நிச்சயம் திரும்பும். அப்ப இன்னொண்டைப் பிடிப்பதில் தான் இருக்கு விசயம்.’

‘எப்ப வரும்?’

‘இரவு வரலாம், விடிஞ்சாப் புறகும் வரலாம். அதோட கட்டிப் போட்டிருக்கிற குளுவான்ர சத்தமும் அதுகளைக் கூட்டிவிடும்.’

‘அப்ப என்ன செய்யிறது?’

‘இரவு இங்க ஒரு சிறாம்பி கட்டி அதில தங்க வேண்டியது தான். கெதியனச் சாப்பிடு, வசதியா ஒரு சிறாம்பி கட்ட வேணும்.’

-அவசரமாக உணவை முடித்துக் கொண்டு எழுந்தனர்.

வாகான இரண்டு மரங்களிடையே தங்களின் ‘சிறாம்பி’ எனும் பரணை அமைத்து முடித்த போது இருட்டி விட்டது.

கட்டிப் போட்ட குளுமாட்டிற்குப் புற்களை அரிந்துகொண்டு வந்து போட்டார்கள். தங்கள் சிறாம்பியின் நேர் கீழாக காட்டு மரங்களை அடுக்கி நெருப்பு மூட்டினார்கள்.

இருவரும் சிறாம்பியில் ஏறிப் படுத்துக் கொண்டார்கள்.

இரவு முழுவதும் எருமையின் சிறுநீரின் ‘கார்’ சப்தமும் அது நடமாடுவதால் எழும் ஓசையும் இடைவிடாது கேட்டுக் கொண்டிருக்க இருவரும் அறிதுயிலிலாழ்ந்து கொண்டிருந்தனர்.

நடு நிசியின் போது பலத்த சப்தம் – பற்றைகள் முறிவடைவதைப் போல் ஒலி எழவும் விழித்தெழுந்தார்கள். திரவியம் பயத்தால் உறைந்து போனான்.

‘ச் எங்க?’

குளுமாட்டின் பக்கமாக பலத்த சச்சரவு கேட்டது.

டோச்சின் ஒளி வெள்ளத்தில் பன்றிக் கூட்டம் ஒன்று புற்தரையைக் கிளறிக் கொண்டிருக்க அருகே கட்டியிருந்த குளுமாடு மிரண்டு ஹீங்காரம் செய்து திணறிக் கொண்டிருந்தது.

தம்பிராசா துணிப் பந்தொன்றை நெருப்பு மூட்டி பன்றிகளிடையே எறிந்தான். பன்றிக் கூட்டம் சிதறி ஓட, நெருப்பால் மிரண்ட குளுவானின் ஹீங்காரம் அந்த அந்காரத்தைத் துளைத்தது.

தூங்காத இரவாக விடிந்தது. திரவியத்திற்கு அனுபவம் புதிதாக இருந்ததால் புத்துணர்ச்சியாக இருந்தது. குளு மாடு அமைதியாக அசைபோட்டுக் கொண்டிருந்தது.

அவர்கள் எழுந்து காலைக் கடனை முடித்து, உணவையும் உண்டுவிட்டு கீழிறங்கி நடந்து திரிந்தார்கள். அவர்களே அறிந்திருந்த, பெயர் தெரியாத காட்டுப் பழங்களைப் பறித்துண்டார்கள்.

நேற்றைய தினம் போலவே குளுமாட்டுக் கூட்டம் ஓடி வந்தது. வழியில் கட்டிப் போட்டிருந்த குளுவான் அருகே நின்று சுற்றிச் சுற்றி வந்தது. தமது எச்சரிக்கையான விழிகளை நாற்புறமும் கழற்றி ஹீங்கார முழக்கமிட்டது.

இவர்கள் இருவரும் சிறாம்பியில் ஏறி மரக்குழைகளிடையே பதுங்கிக் கொண்டனர். அவைகளின் பார்வையில் பன்றிகள் பறித்த குழிகளே பட்டன. சில அவற்றை முகர்ந்து கிளறி எறிந்தன. சில குளத்தை நோக்கி நகரவும், எல்லாம் ஓடிச் சென்று குளத்தைச் சேறாக்க முனைந்தன.

திரவியத்துக்குப் பரபரப்பாக இருந்தது. தம்பிராசா அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்தான். நேரம் சென்று கொண்டிருந்தது.

குளுவான்கள் ஒவ்வொன்றாகக் குளத்தை விட்டு வெளியேறிக் கட்டப் பட்ட காளையைப் பார்த்து விட்டு தயக்க நடையுடன் போய்க் கொண்டிருந்தன. ஆனால் ஒன்று மட்டும் போகாமல் தனித்து அதனையே முகர்ந்தும், உராய்ந்தும், முகத்தோடு முகம் வைத்தும் என்ன பேசினவோ? ஆறுதல் சொன்னதோ?

திரவியத்துக்குத் தாங்க முடியவில்லை. உருக்கமாக இருந்தது.

‘ஏன் மச்சான் போகாம இருக்கு?’

‘அதின்ர சோடி போல…… அதுதான் நிக்குது. உது லேசில போகாது. உதைப் பிடிக்கிறது தான் வேலை. ஆனால் கோபமாக இருக்கும். நேற்று நல்ல வேளை காளையைப் பிடிச்சிட்டம். இது அதின்ர பிணைதான். அதுதான் காளையோடு முகந்தது.’

தம்பிராசா கீழிறங்கினான். அவனது தேடாக்கயிறு அதன் மேல் விழுந்தது. கயிறு சோர்ந்தது. குளுமாடு அவனைப் பார்த்தது. அவனைத் துரத்தத் தொடங்கியது. தம்பிராசா நேராக ஓடாமல், வளைந்து வளைந்து ஓடி, அதன் பின்புறமாக ஓடத் தொடங்கினான். குளுமாடால் உடனடியாகத் திரும்ப முடியாது. அது வட்டமடித்துத் திரும்ப முயலுகையில் தம்பிராசா நிலைமாற்றி அதன் பின்புறத்துக்குப் போய்விடுவான். அது திரும்ப முயற்சிப்பதும், தம்பிராசா அதற்குப் பாய்ச்சல் காட்டுவதுமாக இருந்தான். அவன் நன்றாகக் களைத்துப் போனான். ஒரு திருப்பத்தின் போது தம்பிராசா கத்தினான்.

‘மச்சான் கயிற்றைக் கழுத்தில எறி.’ திரவியம் பயத்தால் உதறிக் கொண்டே கயிற்று வளையத்தை அதன் கழுத்தை நோக்கி எறிந்தான். நல்ல சுருக்கு, இறுகியது. மாட்டின் மூர்க்கத் தனம் அதிகரித்தது. பலமாக இழுத்தது. சிறாம்பியிலிருந்து திரவியம் கயிற்றுப் பிடியோடு விழுந்து, தரையில் அரையலானான்.

குளுமாட்டின் கவனம் திரும்பியதும் தம்பிராசா தனது கயிற்றை அதன் கால்களிடையே வீசினான். பின்னங்காலில் அந்தச் சுருக்குப் போய் இறுகியது. இதற்குள் எழுந்து விட்ட திரவியம் மாட்டின் கயிற்றை முன்னாலிழுக்க, தம்பிராசா கால் கயிற்றைப் பின்னால் இழுக்க மாடு நிலைத்து ஹீங்காரமிட, கட்டியிருந்த மாடும் ஹீங்காரமிடத் தொடங்கியது. இரு குளுவான்களையும் ஒன்றுடன் ஒன்று பிணைத்துக் கட்டினர்.

திரவியம் சிறாம்பியிலிருந்து விழுந்தாலும், சருகுப் புதர்களில் விழுந்ததால் விலாவில் சிறிதளவே நோ கண்டிருந்தது. புறங்கைகள் உராய்வு ஏற்பட்டு இரத்தம் வழிந்தது. தம்பிராசாவின் தோள் மூட்டுகளெல்லாம் கழன்று விட்டதென வலி கண்டிருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவருக்கும் மகிழ்ச்சியால் சிரிப்பு வெடித்துக் கொண்டு வந்தது.

இரண்டு குளுமாடுகளையும் ஓட்டிவந்து, திரவியத்தின் மாட்டுக் கொட்டகையில் கட்டிவிட்டுப் படுக்கும் போது இரவாகி நீண்ட நேரமாகிவிட்டது. அப்போதும் வேலாயுதத்தாரின் மாட்டுப் பட்டியில் விளக்கு வெளிச்சம், ஆட்கள் நடமாட்டம் காணப் பட்டது.

***

முதனாள் தூக்கமின்மையும், மாடுகள் போராட்டத்தால் ஏற்பட்ட உடல் அசதிச் சோர்வு என்பனவற்றால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவனை மனைவியின் கூச்சல் தூக்கி எறியப் பட்டதென எழுப்பியது.

‘இங்க வாங்கோவன்… இராத்திரிக் கொண்டுவந்த மாடொன்றையும் காணேல்ல…’

எந்தப் படுபாவியோ இராவோடு இரவாகக் கொண்டு போட்டான்.

திரவியம் ஓடிப்போய்ப் பார்த்தான்.

புழுதியில் மாடுகளின் தடயமும், மனிதரின் காலடிச் சுவடுகளும் தெரிந்தன. வேலாயுதத்தாரின் பட்டியை எட்டிப் பார்த்தான். ஒன்றுமேயில்லை.

இரவு கள்ளமாக மாடுகள் கடத்தப் பட்டிருந்தன.

வெளியே ஓடிவந்து பாதையைப் பார்த்தான் மாடுகளின் குழம்படிகள், குழம்பிப் போய் பாதை நீண்டதென தொலைவு வரும்வரை வெறிச்சிட்டிருந்தது.

அவனுக்கு ஏதோ புரிந்தது. அவனது ஆக்ரோஷ வெள்ளம் இரத்த நாளங்களைத் துடிக்கச் செய்தன.

உள்ளே ஓடிச் சென்று கைக்கோடாரியை எடுத்துக் கொண்டு ஓடினான். மாடுகளின் குளம்படிகள் வழிகாட்டிச் சென்றன.

‘மச்சான் நில்லு…. நேற்று நடத்தியது போராட்டமில்ல… இண்டைக்கு நடத்தப் போறது தான் போராட்டம்’ என்று குரல் கேட்டுத் திரும்பினான், தம்பிராசா தன் கைக்கோடாரியுடன் ஓடிவந்து கொண்டிருந்தான்.

அவன் பின்னே புழுதி, மேகங்களாகத் திரண்டதென மக்கள் கூட்டம் வந்து கொண்டிருந்தது.

– இதழ் 136 – ஆகஸ்ட் 1979, மல்லிகைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2002, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *