சம்பந்தச் சர்க்கரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 10,771 
 
 

1

கோயம்புத்தூர் ஜில்லாவில் பழைய கோட்டை என் பது ஒரு பாளையக்கார்ருடைய ஊர். அங்கே உள்ள பாளையக்காரர் கொங்குவேளாளருக்குத் தலை வர். அவரை இக்காலத்தில் பட்டக்காரர் என்று வழங்குவார்கள். அந்தப் பழைய கோட்டையின் ஒரு பகுதிக்கு ஆணூர் என்ற பெயர் முன்பு வழங்கியது.

ஆணூரில் பல வருஷங்களுக்கு முன் (பதினே ழாம் நூற்றாண்டு) சம்பந்தச் சர்க்கரை மன்றாடியார் என்பவர் பாளையக்காரராக இருந்தார். அவர் தமிழ்ப் புலவர்களின் அருமையை அறிந்து பாராட்டிப் பரி சளித்து அவர்கள் உவகை யடைவதைக் கண்டு தாம் உவகை யடைவார். அவருடைய வள்ளன்மையையும் தமிழறியும் இயல்பையும் தெரிந்து பல புலவர்கள் நெடுந்தூரத்திலிருந்து வருவார்கள். வந்து பார்த்துப் பழகிச் சம்பந்தச் சர்க்கரை மன்றாடியாரது சல்லாபத் தினாலே அதுகாறும் அடையாத இன்பத்தை அடைந்து, ‘நாம் இவரைப்பற்றிக் கேள்வியுற்றது சிறிது; அறிந்துகொண்டது பெரிது’ என்று பாராட்டி வியப்பார்கள்.

திருமலை நாயக்கர் மதுரையிலிருந்து அரசு செலுத்தி வந்து காலம் அது. கொங்கு நாட்டில் பெரும் பகுதி அவருடைய ஆட்சியின்கீழ் இருந்தது. அம்மன்னருடைய மந்திரியாகிய தளவாய் ராமப்பையரே கொங்கு நாட்டுக்கு உரிய அதிகாரியாக இருந்து வந்தார். பாளையக்காரர்களிடமும் காணியாளர்களி டமும் தம்முடைய அதிகார பலத்தை வெளிப்படுத்தி வரியை வாங்குவதில் அவர் வல்லவராக இருந்தார்.

ஒருசமயம் கொங்கு நாட்டில் பஞ்சம் உண்டாகி விட்டது. பல பசுக்களையும் எருதுகளையும் செல்வ மாக வைத்துப் பாதுகாக்கும் சம்பந்தச் சர்க்கரைக்கு அந்தப் பஞ்சம் பல வகையில் இடையூறு செய்யலா யிற்று. தக்க உணவு இன்மையால் பல பசுக்கள் இறந்தன; எருதுகள் உயிரை இழந்தன.. அவற்றைக் காணப் பொறுக்காமல் பாளையக்காரர் மனஞ் சோர்ந்து போனார்.

இந்த நிலையில் அவர் செலுத்த வேண்டிய வரியை அவரால் செலுத்த முடியவில்லை. அவரைப்போலவே வேறு சிலரும் வரி செலுத்த முடியாமல் துயருற்றனர். தளவாய் ராமப்பையரிடமிருந்து தாக்கீது வந்தது. அவர்களிடம் வஞ்சகம் இல்லை; வரிகொடுக்க முடியா மல் தவித்தார்கள். தளவாயினிடம் தங்கள் குறை களை விண்ணப்பிக்கும்படி சொல்லியனுப்பினார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. கடைசியில் அந்தப் பாளையக் காரர்களைச் சிறையில் இடும்படி ராமப்பையர் கட்டளை யிட்டார். சங்ககிரி துர்க்கத்தில் அவர்கள் சிறையிடப் பட்டார்கள். சம்பந்தச் சர்க்கரையும் சிறைவாசத்துக்கு உட்பட்டார்.

2.

அந்தப் புலவன் சம்பந்தச் சர்க்கரையின் புகழைப் பல காலமாகக் கேட்டிருக்கிறான். ஒருமுறை வந்து பார்த்துப் பழகவேண்டும் என்ற ஆசையை அவன் உள்ளத்திலே வளர்த்துவந்தான். காலம் இசைய வில்லை. அவன் துரதிருஷ்டம் இப்போது ஒழிந்தது. புறப்பட்டு நேரே ஆணூருக்குப் போனான். சர்க்கரை ஆணூரை விட்டுச் சங்ககிரியில் சிறைப்பட்டிருக்கும் செய்தியை அவன் அறியான். அறிந்தபோது தன் ஊழ்வினையை நொந்துகொண்டான். “நல்ல காலத் தில் நீங்கள் வந்திருக்கக் கூடாதா? எவ்வளவு புலவர் கள் இங்கே வந்து பரிசு பெற்றுப் போயிருக்கிறார்கள்! இப்போது சிறைக்குள் அந்தக் குரிசில் அடங்கிக் கிடக் கிறார். ஆனாலும் அவர் புகழ் நாடு முழுவதும் விரிந் திருக்கிறது. அதற்கு உங்கள் வரவே தக்க சாட்சி” என்று ஒருவர் சொன்னார். அதைக் கேட்டபோது புலவனுக்குத் துக்கம் பொங்கிவந்தது.

‘நமது அதிருஷ்டத்தை முற்றும் சோதித்து விடுவோம். சங்ககிரி துர்க்கத்துக்கே போய் எப்படி யாவது அந்த வள்ளலைப் பார்த்த பிறகுதான் ஊர் போகவேண்டும்’ என்று தீர்மானித்துக்கொண்டான் புலவன். “நான் போய்ப் பார்க்கிறேன்” என்று அவன் சொன்னதைக் கேட்டவர்கள் நகைத்தார்கள். “ராமப் பையன் அதிகாரம் லேசானதா என்ன? சுக்கிரீ வாக்ஞை அல்லவா? அங்கே போய் உங்களுக்கு ஏதா வது ஆபத்து நேர்ந்தால், அபக்கியாதி எங்கள் தலைவ ருக்கு வரும். பேசாமல் ஊருக்குப் போய்விடுங்கள். நல்ல காலம் வந்த பிறகு ஆண்டவன் அருளால் பிழைத் திருந்தால் ஒன்றுக்குப் பத்தாகச் சம்மானம் வாங்கிப் போகலாம்” என்றார்கள். அவர்கள் வார்த்தைகள் யாவும் தன்னுடைய அதிருஷ்டக் குறைவைக் குத்திக் காட்டுவனவாகவே புலவனுக்கப் பட்டன. ‘அந்த வள்ளலைப் பாராமல் ஊர் திரும்பக்கூடாது. அவரைப் பார்க்க முடியாவிட்டால் சிறை நீங்கும் வரையில் நான் சிறைவாயிலிலே தவங்கிடப்பதற்கும் சித்தமாக இருப் பேன்’ என்ற அவனுடைய தீர்மானம் பின்னும் உறுதி பெற்றது. அதனைத் தடுப்பார் யார்?

சங்ககிரி துர்க்கத்தை வந்து அடைந்தபோதுதான் அவனுக்கு மனம் நிலைகொண்டது. சிறைச்சாலை இருக் கும் இடத்தைக் தெரிந்துகொண்டான். சிறைக்குள் வேறு யாரேனும் புக முடியுமா என்பதை விசாரித் தான். அவனுக்குக் கிடைத்த விடையிலிருந்து, ‘நம் முடைய சங்கற்பம் நிறைவேறவும் வழி இருக்கும் போலும்’ என்ற எண்ணம் உண்டாயிற்று. பாளையக் காரர்கள் சிறையிலே இருந்தாலும் அவர்களுக்கு வேண் டிய வசதிகளைத் தளவாய் ராமப்பையர் செய்வித்திருந் தார். மிகவும் முக்கியமான உறவினர்கள் அவர்களைப் பார்ப்பதற்கும் அநுமதி கிடைத்துவந்தது. எந்த இட மானாலும் புகுவதற்கு உரிமை பெற்றவர்கள் புலவர் கள். ஆகையால் அவர்களுக்குத் தடையே இல்லை.

தான் புலவனென்பதைப் புலப்படுத்திய பிறகு அவன் சிறைகாவலனது அநுமதி பெற்றுச் சிறைக் குள்ளே புகுந்தான். உள்ளே போனபோது, அங்கே பல பேர் அமர்ந்திருந்தனர். புலவர் போகும்போதே சம்பந்தச் சர்க்கரை விஷயமாக ஒரு பாடலைப் பாடிக் கொண்டே சென்றார். அதைக் கேட்டு அங்கே இருந் தவர்களுள் சிலர் சிரித்தார்கள். “சரிதான், சிறைச் சாலையிலுங்கூடவா யாசகம்? நல்ல சமயத்தில் வந் தீரே!” என்று இகழ்ச்சியாக ஒருவர் பேசினார். “யாச கனுக்குச் சிறையென்றும் வீடென்றும் பேதம் இல்லை. கொடுப்பவர்களுக்கும் அந்தப் பேதம் இல்லை. சந்திரன் தன்னை ஒருபால் ராகு பற்றிக்கொண்டே ….. போது மற்றொரு பால் நிலவொளியைத் தருவதை நீங்கள் பார்த்ததில்லையா? நல்ல சமயம் வரட்டும் என்று நான் பார்த்துக் கொண்டிருந்தால் அது வரைக்கும் என் வறுமை என்னை விடாதே. அவரை பதமாகு முன்பே கடுகு பொடியாகிவிடுமே! அது கிடக்கட்டும். சம்பந்தச் சர்க்கரை யார் என்பதைத் தெரிவிக்க மாட்டீர் களா?” என்று புலவர் சொல்லி அந்தக் கருத்தையே ஒரு பாடலாகவும் பாடினார்.

“எவரையென்று நாம் அறியோம் இரப்பவனோ இடமறியான் இரவில் ராகு கவருமதி யொருபுறத்தே நிலவெறிக்கும் பான்மைதனைக் கண்டிலீரோ அவரைபத மாகுமுனம் கடுகு பொடி ஆகிவிடும் அதனை யோர்ந்து துவரைமுதல் காதலனாம் சம்பந்தச் சர்க்கரையார்? சொல்லுவீரே.”

[துவரைமுதல் காதலன் – துவாரகாபுரி வாசியாகிய கண்ண பிரானிடத்துக் காதலுடையவன்.]

பாட்டுப் புறப்பட்டதைக் கேட்டவுடனே அவர் கள் தங்கள் பரிகாசத்தை விட்டுவிட்டுப் புலவருக்கு மரியாதை செய்தார்கள். பிறகு தனியே ஓரிடத்தில் சிந்தனையுள் மூழ்கியிருந்த சம்பந்தச் சர்க்கரையிடம் கொண்டுபோய் விட்டார்கள்.

புலவன் கண்ணைக் கொட்டாமல் அவரைப் பார்த் தான். பார்க்கவேண்டும் பார்க்கவேண்டும் என்று ஆர் வம் கொண்டு தவங்கிடப்பதற்குக் காரணமான வள் ளலை, நற்கலையில்லாத மதிபோல் நகையிழந்த முகமும் வாடிய மேனியுமாகக் கண்டான். சர்க்கரை வள்ளல் எழுந்து உபசரித்தார். “இந்த நிலையிலே தங்களைக் கண்ட கண்களைத் தோண்டி எறிய அல்லவா வேண் டும்? நான் பாவி! திருமகள் நடனஞ் செய்த காலத் திலே காணக் கொடுத்துவைக்கவில்லை” என்று புலவன் மனமுருகி நைந்தான்.

“வருந்த வேண்டாம். எல்லாம் அவரவர் வினை ப்பயன். தங்களைத் தக்கவண்ணம் உபசரிக்கக் கொடுத்து வைக்காத பாவி நான் தான். என்னுடைய சுதந் திரத்தை இழந்து சிறைப்பட்டுக் கிடக்கும் இந்தச் சம யத்தில் தங்களை உபசரிப்பதற்கோ, தங்கள் புலமையை அறிந்து பாராட்டுவதற்கோ என்னால் இயன்றதை அளிப்பதற்கோ வழியில்லாமல் இருக்கிறதே!” என்று அந்த உபகாரி இரங்கலானார்.

புலவன் அவருக்கு ஆறுதல் சொன்னான். அப்பால் இருவரும் சம்பாஷித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று சர்க்கரை வள்ளலுக்கு ஏதோ ஞாபகம் வந்தது; அவ ருக்குத் தெரிந்த சிறை ஏவலாளை அழைத்து ஏதோ சொல்லியனுப்பினார். சிறிது நேரம் கழித்து அவன் தன் கையில் எதையோ மூடிக் கொணர்ந்து பிரபுவின் கையில் கொடுத்தான். அவர் புலவனை நோக்கி, “இந்த இடத்திலே என்னால் உதவ முடிந்தது இது தான். என்னுடைய ஞாபகத்துக்கு அடையாளமாக இதை வைத்துக் கொள்ளவேண்டும்” என்று அந்தப் பொரு ளைப் புலவன் கையிலே கொடுத்தார்.

புலவன் அதைப் பார்த்தான். அது ஒரு பொற் றாலியாக இருந்தது. புலவனுக்குத் திடுக்கிட்டது; மயிர்க் கூச்செறிந்தது; உடம்பெல்லாம் வேர்த்தது. “என்ன இது?” என்று பதறிப்போய்க் கேட்டான்.

“என் மனைவி இவ்வூரில் தங்கியிருக்கிறாள். அவளுக்குச் சொல்லியனுப்பினேன். அவள் இதை அனுப்பினாள். கழுத்தில் மஞ்சட் சரடு இருக்கிறது. அது போதும். இது மிகை தானே? இந்தச் சமயத்தில் உதவுவதற்கு இது கிடைத்தது. இப்பொழுதுதான் இது மங்கலம் பொருந்தியதாயிற்று” என்று சர்க்கரை வள்ளல் சொல்லச் சொல்லப் புலவருடைய கண்களில் நீர் சுரந்து வழிந்தது.

“இப்படி யாரையும் நான் கண்டதில்லை. உலகத்தில் மழை பொழிவது உங்களுக்காகத்தான். நான் பரிசு வாங்க வரவில்லை. உங்களைப் பார்த்துப் போகத்தான் வந்தேன்” என்று தழுதழுத்த குரலில் புலவன் பேசினான்.

“தாங்கள் வருந்துவதற்கு நியாயம் ஒன்றுமே இல்லையே. என்னுடைய வாழ்நாள் இன்னும் எவ்வளவு காலமோ, யார் அறிவார்கள்? இந்தச் சிறையே எனது இறுதி வாசஸ்தலமாக இருந்தாலும் இருக்கலாம். இந்தச் சமயத்தில் தங்களுக்கு இதையாவது கொடுக்க முடிந்ததுபற்றி என் நல்லூழை வாழ்த்துகிறேன்.” என்று சர்க்கரை வள்ளல் கூறினார்.

புலவனுக்குப் பேச வரவில்லை. பொங்கி வரும் அழுகையை அடக்கிக்கொண்டான்.

கடைசியில் விடை பெற்றுக்கொண்டான்.

“இத்தகைய தாதாவைச் சிறையில் அடைக்கத் துணிந்தவன் மிகவும் கல் நெஞ்சனாக இருக்கவேண்டும். கடவுள் இவரையும் படைத்து அவனையும் படைத்திருக்கிறாரே!” என்று புலவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ‘அந்த அதிகாரியிடம் போய் நம்முடைய ஆத்திரந்தீர வைதுவிட்டு வரலாம்’ என்று ராமப்பையரை நோக்கிப் புறப்பட்டான்.

3.

தளவாய் ராமப்பையர் அவன் நினைத்தது போல அவ்வளவு கொடியவர் அல்ல. தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கும் இயல்பு அவரிடமும் இருந்தது. வித்துவானுக்கு எங்கும் தடையின்றிப் புகும் உரிமை உண்டு; ஆதலால் அப்புலவன் நேரே ராமப்பையரை அணுகினான். ஒன்றும் பேசாமல் சர்க்கரை கொடுத்த தாலியை எடுத்து நீட்டி, “இதைப் பார்த்தீர்களா?” என்றான்.

“என்ன இது?” என்று பரபரப்பாகக் கேட்டார் தளவாய்.

புலவன் ஒரு பாட்டிலே பதில் சொன்னான்;

“கொங்கினில் ராமப் பயனதி காரக் குரூரத்தினால் கங்குல் இராப்பகல் சர்வசங் காரஞ்செய் காலத்திலே சிங்கநற் சம்பந்தச் சர்க்கரை தேவி திருக்கழுத்தின் மங்கலி யந்தனைத் தந்தான் தமிழ்க்கவி வாணருக்கே”

என்று தன்னுடைய ஆத்திரத்தையெல்லாம் கொட்டினான். ராமப்பையரது கலங்காத நெஞ்சமும் கலங்கியது. “ஹா! நீர் என்ன சொல்கிறீர்?” என்று கேட்டார்.

“சொல்வது என்ன? சமுகத்தின் அதிகாரம், புருஷர் இருக்கையிலே நல்ல மகளிர் தம் மங்கலியத்தை இழக்கும்படி செய்கிறது. இதனால் அவர்கள் மங்கலம் இழக்கவில்லை. மங்கலம் இழப்பவர்கள் வேறு” என, என்ன வந்தாலும் வரட்டுமென்று துணிந்து பேசலானான் புலவன்.

“அப்படியா! சம்பந்தச் சர்க்கரை கொடுத்ததா இது!” – அந்த மங்கலியம் ராமப்பையர் நெஞ்சில் வேதனையைக் கிளப்பியது. வேகத்தையும் உண்டாக்கியது.

அவருடைய அதிகாரத்துக்குச் சொல்ல வேண்டுமா? ஆட்கள் ஓடினார்கள். சிறைச்சாலைக்குச் சென்று சம்பந்தச் சர்க்கரைக்கு ஆசார உபசாரங்கள் செய்து தளவாயினிடம் அழைத்துவந்தார்கள்.

“அடடா! உம்முடைய பெருந்தன்மையை இவ்வளவு காலம் நான் அறிந்துகொள்ளவில்லையே. தமிழுக்குத் தாலி கொடுக்கும் தாதாவை நான் சிறையில் அடைத்தது பிழை” என்று அவரை ராமப்பையர் வரவேற்றார்.

“எல்லாம் விதியின் செயல்” என்று சுருக்கமாகப் பதில் வந்தது.

தளவாயும் வள்ளலும் அளவளாவிப் பேசினர். “உம்முடைய செயல் என் மனத்தை உருக்கிவிட்டது. வரியை உமக்குச் சௌகரியமானபோது கட்டலாம். உமக்கு ஏதாவது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்” என்றார் தளவாய்.

“எனக்கு ஒன்றும் வேண்டாம். உங்கள் தயை இருந்தால் போதும். ஒரே ஒரு வேண்டுகோள்; அதை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.”

“என்ன, என்ன?”

“என்னுடன் சிறையில் இருந்த பாளையக்காரர்களும் காணியாளர்களும் மானமுள்ளவர்கள். கால வேற்றுமையால் அவர்கள் வரி கட்ட இயலவில்லை. நல்ல காலம் வந்தால் கரவின்றி வரியைக் கட்டிவிடுவார்கள். அவர்களையும் விடுதலை செய்யும்படி உத்தரவாக வேண்டும். என்னை மட்டும் விடுதலை செய்தால் பக்ஷபாதம் உடையவர்கள் என்ற அபவாதம் சமுகத்தைச் சாரும்” என்று பணிவுடன் வேண்டிக்கொண்டார் சம்பந்தச் சர்க்கரை.

ராமப்பையர் சிறிது யோசித்தார்; “சரி; உம்முடைய உயர்ந்த குணத்தை மெச்சுகிறேன். உம்மோடு இருந்த விசேஷத்தால் அவர்களும் விடுதலை பெறட்டும்” என்றார்.

சிறைச்சாலைக் கதவு அகலத் திறந்தது. யாவரும் விடுதலை பெற்றனர்.

புலவர் சர்க்கரைவள்ளலோடு ஆணூருக்குச் சென்று அவருடைய உபசாரத்தைப் பெற்றுச் சில காலம் தங்கினான். “தங்களுக்கு நான் அளித்த பொருள் சிறிதானாலும், நல்லவர்களுக்கு அளிக்கும் ஈகை பன்மடங்கு பயனைத் தருமென்பதற்கு இணங்க, உடனே எங்கள் யாவருக்கும் விடுதலை கிடைக்கச் செய்தது. எல்லாம் நீங்கள் தந்த வாழ்வு!” என்றார் சர்க்கரை.

“உலகம் உள்ள அளவும் மறவாத செயலை நீங்கள் செய்தீர்கள். உங்கள் புகழ் வாழ்க!” என்றான் புலவன்.

நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *