தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,002 
 
 

காலையில், சூரியனோடு சேர்ந்து, செய்திகளும் தகித்துக் கொண்டிருந்தன. அதிலும், “ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாவிட்டால், மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேரலாம்…’ என்று, அரசியல்வாதி ஒருவர் சொன்ன செய்தியைப் பார்த்து, அதிர்ந்து போனேன். அரசியல்வாதி என்று சொல்வது சரியில்லை; மத்திய நிதி அமைச்சர் அப்படி கூறியிருந்தார். குளிர்காலக் கூட்டத் தொடரை நடத்த விடாமல், எதிர்க்கட்சிகள் ரகளை செய்து, முடக்கி வைத்ததுதான் காரணமாம் அவர் கோபத்திற்கு!
நன்றாக இருக்கிறது நியாயம்… இப்படி எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசுவதா அந்த பதவிக்கு அழகு; பொறுப்புணர்ச்சி வேண்டாம்! மடியில் கனம் இல்லை என்றால் வழியில் என்ன பயம்? ஜனநாயக நாட்டில், எதிர்க்கட்சிகளின் பங்குதானே அதிமுக்கியமானது. சமாதானம்“பார்லிமென்ட் கூட்டுக் குழுவை அமையுங்கள்; உண்மையைக் கண்டுபிடியுங்கள்…’ என்ற கோரிக்கையில், என்ன தவறு இருக் கிறது. “ஆமாம்… அப் படித்தான் நாங்கள் அக்கிரமம் செய்வோம். கூட்டுக் குழுவை அமைக்க மாட்டோம். வேண்டுமானால் நீங்கள் தீவிரவாதிகளாகி, போராடிக் கொள்ளுங்கள்…’ என்று பேசுவதற்கு, எவ்வளவு அலட்சிய மனோபாவம் இருக்க வேண்டும்.
“”நிதி அமைச்சர் எப்படி பேசியிருக்கிறார் பார்த்தீர்களா?” என்று, கணவரிடம் தினசரியை நீட்டிய போது, அவசரமாக கார் சாவியை எடுத்தபடி, “”சாரி வித்யா… பர்காட் டு டெல் யூ… எக்சிகியூடிவ் மீட்டிங், எம்.ஜி.எம்., போகணும். லெட்ஸ் டாக் இன் தி நைட்,” என்று பறந்து விட்டார்.
ஜான் லென்னனின் பாடலை முணுமுணுத்தபடி, கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த ராகுலை அழைத்தேன். “”இந்த அநியாயத்தை பாரு ராகுல்… நிதி அமைச்சர் எப்படி பேசியிருக்கார்,” என்றேன் தினசரியை நீட்டியபடி.
“”அய்யோ அம்மா… இதெல்லாம் புதுசா என்ன? கல்லூரிகளை எக்ஸ் தாதாக்களும், சாராயக் கடைகளை அரசாங்கமும் நடத்தும் போதே தெரியலையா நம்ம நாட்டு அரசியல். லீவிட் மா… இமேஜின் என்ற ஜான் லென்னன் பாட்டு கேளும்மா… எப்படியெல்லாம் இருந்தா இந்த உலகம் அழகா இருக்கும்ன்னு லென்னனே எழுதி, பாடின பாட்டு… வாட் அ மேன் ஹீ இஸ்!” என்று அவனுடைய பாப் உலகத்தினுள் நுழைந்து விட்டான்.
பெருமூச்சுடன் சமையலறைக்குள் நுழைந்த போது, சங்கரியம்மா, “”ஜனங்களுக்கு சேவை செய்றேன்னு தலைவர்களாயிட்டு, இப்போ இப்படி கொள்ளை அடிக்கறாளே… ஏன் எந்த கடவுளும் அவதாரம் எடுத்து வர்றதேயில்லே?” என்று கோபத்துடன் தாளித்துக் கொண்டிருந்தாள்.
“”நம்மதான் அந்தந்த நேரத்துக்கு அவதாரம் எடுத்துக்கணும்… வேற யாரும் வரப் போறதேயில்லை நம்மளை கட்டிக் காப் பாத்த…” என்று, நானும் கோபம் குறையாமலே சொன்னேன்.
அலுவலகம் எப் போதும் போல தீராத பணிகளை வழங்கிக் கொண்டேயிருந்தது.
ஆறிப் போய், ஏடு படிந்த பிறகே காபியைத் தொட நேரம் கிடைத்தது. அதுவும் ஒரே மூச்சில் குடித்து, ஓம்கார் பைலை எடுத்த போது தான், சந்தியாவைப் பார்த்தேன்.
சோர்வாகத் தெரிந்தாள். வாடிப் போன மலர் போல முகம் சுருங்க, கண்களின் இயக்கம் பொம்மையாகத் தெரிந்தது.
“”என்ன சந்தியா காய்ச்சலா…” என்று அவளிடம் போனேன்.
“”இல்லே வித்யா,” என்று புன்னகைக்க முயன்றாள்.
“”நீ நார்மலா இல்லே சந்தியா. என்ன விஷயம்?” என்றேன் மெல்ல.
“”பக்கத்து வீட்டுக்காரங்க வித்யா…” என்றாள் தொண்டை அடைக்க.
“”என்ன பண்ணாங்க?”
“”பையனும், அவன் நண்பர்களும் மாடியில கிரிக்கெட் விளையாடி இருக்காங்க… தென்னை ஓலைங்க சாய்ஞ்சிருந்ததால தொந்தரவா இருக்குன்னு ஒண்ணு ரெண்டை வெட்டியிருக்காங்க. அது, பக்கத்து வீட்டு மரம். நேரே சண்டைக்கு வந்துட்டா அவ… “எப்படி எங்க மரத்தை வெட்டலாம்? போலீசுக்குப் போறேன்…’ன்னு மிரட்டுறா. செக்ரெட் டேரியட்டுல பெரிய வேலையாம் அவ அண்ணனுக்கு. இவர் ஊர்ல இல்லாத நேரத்துல, என்னால எப்படி சமாளிக்க முடியும்? வந்ததும் என்னையும், பையனையும்தான் பிடிச்சு கத்துவார். எனக்கு தலையே வெடிக்கிற மாதிரி இருக்கு வித்யா,” என்றாள் குரல் வழுவழுக்க.
“”நல்ல கதையா இருக்கே! அவள் பண்றதுதான் தப்பு. தென்னை மரத்தை வீட்டுக்குள்ளயே வச்சு வளத்துக்க வேண்டி யதுதானே… வேலி தாண்டி வளத்துட்டு, உன் பேர்லயே கேஸ் கொடுப்பாளாமா? நீ கவலைப்படாதே சந்தியா… என் கசின், கமிஷனர் ஆபிஸ்ல செக்ஷன் ஆபிசர், பாத்துக்கலாம்,” என்று, நான் படபடத்த போது, அழகம்மா வந்து நின்றாள்.
“”வித்யாம்மா… புல்டாக் உங்களைக் கூப்பிடுது,” என்றாள் பெருமூச்சுடன். “”காலைல இருந்தே, “உர்உர்’ன்னு இருக்குது… ஜாக்கிரதைம்மா,” என்று எச்சரிக்கை செய்தாள்.
“”அப்படியா, இருக்கட்டும் பார்க்கலாம்,” என்று, சந்தியா பக்கம் திரும்பினேன். “”ஒர்ரி பண்ணிக்காத சந்தியா… நான் போயிட்டு வர்றேன்,” என்று கேபின் நோக்கி நடந்தேன்.
பங்ஷனல் மேனேஜர் புரு÷ஷாத்தமனுக்கு, புல்டாக் என்று நாங்கள் பெயர் வைக்கவில்லை. காலம் காலமாக தொடர்ந்து வருகிற பட்டம் அது. சொல்லப் போனால், நிஜ புல்டாக்தான் கோபப்பட வேண்டும், இப்படி ஒரு வினோத குரைக்கும் ஜந்துவிற்கு, எப்படி என் பெயர் வைக்கலாம் என்று! இதற்கு, அதற்கு என்றில்லை, எதற்கெடுத்தாலும் சப்தம்தான், ஆத்திரம்தான், சாபம்தான். ஏன், எதற்கு, எப்படி என்ற விஞ்ஞானக் கோட்பாடு எதுவும் வேலைக்கு ஆகாத வேற்றுக் கிரக வினோதன் அந்த ஆள்!
“”யெஸ்… கூப்பிட்டீங்களா?” என்றபடி உள்ளே நுழைந்தேன்.
“”என்ன வெட்டிப் பேச்சு?” என்றார் எடுத்த எடுப்பில்.
சுரீரென்றது. “”வெட்டிப் பேச்சா… என்ன சார் சொல்றீங்க?” என்றேன் வேகமாக.
“”அந்த அழுமூஞ்சி சந்தியா கூட பேசிட்டிருந்தீங்கள்ல… அதைத்தான் சொல்றேன்,” என்றார் சிடுசிடு முகத்துடன்.
“”கீப் யுவர் டங்,” என்றேன் காரமாக. “”அழுமூஞ்சி, கிழுமூஞ்சின்னு யாரையும் சொல்றதுக்கு உங்களுக்கு உரிமை கிடையாது.”
“”என்னை மட்டும் புல்டாக்ன்னு எல்லாரும் சொல்றீங்களே… அதுக்கு உரிமை யார் கொடுத்தது?”
“”சொல்றவங்களைப் போய் கேளுங்க… என்கிட்ட தேவையில்லாம பேசாதீங்க. எதுக்கு சார் கூப்பிட்டீங்க? எனக்கு நிறைய வேலை இருக்கு.”
“”உங்களுக்கு மட்டும்தான் வேலை இருக்கா? நாங்க என்ன ஈ ஓட்டிக்கிட்டா இருக்கோம்?”
“”மை காட்… வாட் ஹாப்பெண்ட் சார்?” என்று சலிப்புடன் பார்த்தேன். “”உங்க கிட்ட சண்டை போட நான் வரலே… டெல் மீ த ரீசன் பார் காலிங்.”
“”அந்த ஓம்கார் லெட்டர் என்ன ஆச்சு?”
“”என்ன ஆச்சா? மெயில் அனுப்பியே நாலு மணி நேரமாச்சே!”
“”மெயிலா… இன்னும் லெட்டரே டிக்டேட் பண்ணி முடிக்கலே. அதுக்குள்ள எப்படி? யாரைக் கேட்டு அனுப்பனீங்க?”
அதற்கு மேல் அவரைத் தொடர விடாமல் அழுத்தமாகப் பார்த்தேன்.
“”மறந்து போயிருந்தா நினைவுப் படுத்தறேன் சார்… நேத்திக்கு ஈவினிங் நாலரை மணிக்கு நீங்கதான் டிக்டேஷன் கொடுத்தீங்க. டிராப்ட்டை சரி பார்த்து, ஓ.கே., பண்ணினீங்க. அதுக்குப் பிறகுதான், நாளை காலை வந்ததும் மெயில் பண்ணிடச் சொன்னீங்க. நானும் ஆபிஸ் வந்ததும், முதல் காரியமா அந்த வேலையை முடிச்சேன். போதுமா?” என்றேன் நிதானமாக.
“”நோ…” என்று மேஜையைக் குத்தினார். “”நோ வே… வித்யா நீங்க என்ன மேடை நடிகையா? இவ்வளவு கோர்வையா டயலாக் பேசறீங்க? ஆல் ரப்பிஷ்… நான் சொல்லாத ஒண்ணை சொன்னதா சொல்றீங்களே… உங்களை நம்பி ஆர்கனைசேஷன் வேலையை எப்படி ஒப்படைக்கிறது,” என்று ஆவேசமாகக் கத்தினார்.
“”ஸ்டாப் ஆல் யுவர் நான்சென்ஸ் மிஸ்டர் புரு÷ஷாத்தமன்,” என்று கையை அவர் முகத்திற்கெதிராக நீட்டினேன். “”உங்களுக்கு மட்டுமில்ல, எல்லாருக்கும் நாக்கு இருக்கு, பேசற திறமையும் இருக்கு. உங்களை விட ஏடாகூடமாவும், பச்சைப்புளுகாவும் என்னால யும் தொண்டை புடைக்க பேச முடியும். அப்புறம் உங்களுக்கும், எனக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்? பீ கேர்புல் மிஸ்டர் புரு÷ஷாத்தமன்…”
“”கையை நீட்டற அளவுக்கு திமிரா? ஜாதியில மேல இருக்கோம்ன்னு கொழுப்பா? ஒரு குரல் குடுக்கட்டுமா? எங்க மக்கள் ஓடி வருவாங்க எனக்காக…” என்றவரால், அதற்கு மேல் பேச முடியாமல் மூச்சு இரைத்தார்.
“”எல்லா மெயிலுக்கும், டிராப்ட்டுக்கும் என்கிட்ட ஆதாரம் இருக்கு. அதெல்லாம் போக நியாயமும் என் பக்கம் இருக்கு. தேவையில்லாம ஜாதியைக் கொண்டு வர்றீங்களே… இதுலயே உங்க காம்ப்ளக்ஸ் தெரியுது. சில்லுன்னு ஒரு தம்ளர் தண்ணீர் குடிச்சுட்டு யோசிங்க… உங்க முட்டாள்தனம் உங்களுக்கே புரியும்,” என்று, கதவை அறைந்து சாத்திவிட்டு, வெளியில் வந்தபோது, “உன்னை என்ன பண்றேன் பார்…’ என்று அவர் கறுவும் குரலில் சொன்னது கேட்டது.
இரவு தூக்கமின்றி என்னை வதைத்தது.
எள்ளலும், நையாண்டியுமாக தான் பேசி விட்டு, எனக்கு திமிர் என்று சொல்ல வேண்டும் என்றால், உடம்பில் எவ்வளவு கெட்ட கொலஸ்ட்ரால் இருக்க வேண்டும்?
இத்தனைக்கும் அவர் பக்கத்தில் கொஞ்சம் கூட உண்மையும் இல்லை, நேர்மையும் இல்லை. போதாததற்கு ஜாதியை வேறு இழுத்தாரே… அதுதான் தாங்க முடியாத கோபத்தைக் கொடுத்தது.
மனமார, உளமார, உணர்வுப்பூர்வமாக, ஒரு மனுஷியாக மட்டுமே வாழ்கிறவள் நான். மதம், ஜாதி, அந்தஸ்து, குலம், கோத்திரம், ஜாதகம், ஜோசியம் என்று எந்த பிடிமானமும் தேவைப்படாமல் சுயமாக, கம்பீரமாக நிற்க விரும்புபவள். என்னைப் போய் மேல் ஜாதி ஆணவம் என்றதே அந்த போக்கிரி. இன்னும் வலிமையாக வார்த்தை அடிகள் கொடுத்திருக்க வேண்டாமா நான்? ஏன் பாதியில் ஓடி வந்தேன், கோழை போல! இருக்கட்டும்… எங்கே போய் விடப் போகிறது கிழம்? நாளைக்கே கதவைத் தட்டி உள்ளே போய், “ஆமாம் மிஸ்டர் புரு÷ஷாத்தமன்… புல்டாக் என்று பெயர் வைத்து தவறு செய்து விட்டனர்; ஸ்ட்ரீட் டாக் என்று பெயர் வைத்திருக்க வேண்டும். தெருநாய்தான் இப்படி யார், எவர் என்றே பார்க்காமல் எல்லாரையும் துரத்தும்…’ என்று ஒரு கடி கடித்து விடலாம். மனசு உறுமிக் கொண்டே இருந்தது.
தூக்கமில்லாமல் சிவந்த கண்களும், எரிச்சலில் கசந்த இதயமுமாய் அடுத்த நாள் அலுவலகம் போனேன்.
வழக்கம் போல புல்டாக் இன்னும் வரவில்லை. எப்போதும் லேட்டுதான் கிழம். வரட்டும், காத்திருக்கிறது ஹார்ட் அட்டாக்!
“”ஹாய் வித்யா… இந்தா கேசரி எடுத்துக்கோ,” என்று இனிய குரல் கேட்டு, திரும்பினேன்.
சந்தியா நின்றிருந்தாள்.
“”என்ன விசேஷம் சந்தியா?” என்று புன்னகைக்க முயன்றேன்.
“”பக்கத்து வீட்டுக்காரி செஞ்சது, அதுதான் விசேஷம்,” என்று மலர்ச்சியாய் சிரித்தாள்.
“”என்ன… தென்னை மரத்துக்காரியா? சண்டை, போலீஸ், கேஸ்ன்னு பயமுறுத் தினவளா?” என்று திகைதேன்.
“”ஆமாம் வித்யா… அவளேதான்!” என்றாள் மென்மையாக. “”யோசித்துப் பார்த்தேன் வித்யா… தினம் தினம் பார்த்துக்கணும், பேசணும்; நாள் கிழமைன்னா அழைக்கணும், நல்லது கெட்டதுன்னா சேரணும். இப்படி இருக்கிற ரிலேஷன்ஷிப்பை கெடுத்துக்கிறதை விட, சீராக்கிக்கறதுதான் புத்திசாலித் தனம்ன்னு தோணுச்சு. அவள் வீட்டுக்குப் போனேன்; திகைச்சுப் போய் வரவேற்றாள். “பையனைக் கண்டிக்கிறேன், இனிமே அனுமதி இல்லாம கிளையைத் தொடக் கூடாதுன்னு சத்தியம் வாங்கிக்கிறேன், சாரி…’ன்னு சொன்னேன்; கண் கலங்கிட்டா. அவளும் சாரி கேட்டு, “ஹார்லிக்ஸ் சாப்பிடறீங்களா… இல்ல ஆரஞ்சு ஜூசா…’ன்னு பரபரத்தாள். இதோ இன்னிக்கு காலைல, கேசரி கொடுத்து அனுப்பிட்டா வித்யா!” வியப்புடன் அவளையே பார்த்தேன். என் உடல் மெல்லிய சிலிர்ப்புக்குள் போய் மீண்டது.
“”என் தாத்தா ஒரு மகாத்மா வித்யா. அவர் எப்பவும் சொல்வார்… “அமைதி வீரத்தில்தான் கிடைக்கும்; வீரம் மன்னிப்பதில்தான் வரும்…’ என்று. உண்மைதானே! சமாதானம்தானே சிறந்த அறமா இருக்க முடியும் இந்த பூமியில?” என்று அவள் கேட்ட போது, மனதுக்குள் இருந்த சைத்தான் என்னை விட்டு ஓடியிருந்தான்.

– யு.வி. சம்யுக்தா (மார்ச் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *