கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 2, 2021
பார்வையிட்டோர்: 2,326 
 
 

கால்ஷீட் எல்லாம் பேசி முடித்து, சம்பளத்தொகையும் பேசி முடிக்கப்பட்டபின் அந்த சந்தோசத்தை கொண்டாடுவதற்காக தயாராக டேபிளின் மேல் வைத்திருந்த ஒயின் கிளாசை தூக்கி பிடித்து காட்டினான் ஷியாம். எதிரில் இருந்த தயாரிப்பாளர் தனபாண்டியன் தலை குனிந்து வணக்கம் சொல்லிவிட்டு நான் வருகிறேன் என்று திரும்பினார்.

என்ன சார்? நீங்க கலந்துக்கலையா?

இல்லை சார் ஒரு இடத்துக்கு போகணும், தப்பா நினைச்சுக்காதீங்க. பணம் உங்க வீட்டுக்கு வந்துடும். வரட்டுமா, மீண்டும் கை எடுத்து வணங்கி விட்டு கிளம்பினார்.

சே ! சினிமா எடுக்கணும்னா எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கு, தனக்குள் பேசியபடி காருக்கு வந்தவர் மாம்பலம் போப்பா, டிரைவரிடம் சொல்லிவிட்டு அப்பாடி என சீட்டில் தலை சாய்ந்தார்.

ஷியாம் கால்ஷீட் கிடைப்பதற்குள் படாத பாடு பட்டு விட்டார். மூன்று வருசம் இழுத்தடித்து விட்டான். எல்லா பயலுவலுக்கும் இவனை வச்சு படம் எடுத்து பணம் பண்ணிடனும்னு ஆசை. நமக்கு மட்டும் என்னவாம்? மனதுக்குள் சிரித்துக்கொண்டவர் ஷியாமின் கடந்த காலத்தை நினைத்து பார்த்தார். அஞ்சாறு வருசத்துக்கு முன்னாடி இவர் படத்துல கூட துக்கடா கேரக்டருக்கு வந்துட்டு போவான். எவ்வளவு பணம் கொடுத்தாலும் கை எடுத்து கும்பிட்டு வாங்கிக்குவான். ம்….அதை இப்ப நினைச்சு என்ன?

அவன் நேரம் துக்கடா கேரக்டருக்கு நடிக்க வந்தவன் , அந்த நேரம் ஹீரோவுக்கு நண்பனா நடிக்க வேண்டிய ஆள் வராம டைரக்டர் இவனை பாத்துட்டு இந்த கேரக்டரை கொடுத்தாரு. படம் பிச்சிகிட்டு ஒடிடுச்சு, பாவம் ஹீரோவா நடிச்ச ஆள் அதுக்கப்புறம் கவுந்துட்டாரு, இவன் மேலே வந்துட்டான். எல்லாத்துக்கும் நேரம் காலம் வரணும்.

கார் சட்டென்று நிற்க இவர் நிஜ உலகுக்கு வந்தார். டிரைவரிடம் வண்டியை ஓரங்கட்டு, சொல்லிவிட்டு காரை விட்டு இறங்கி அந்த பிரமாண்டமான பங்களாவை பார்த்தார். காஞ்சனா இன்றைக்கு நம்பர் ஒன் நடிகை, ம்..எல்லாம் நேரம்,மனதுக்குள் இவரிடம் வாய்ப்பு கேட்டு நின்ற கோலத்தையும் நினைத்து பார்த்துக்கொண்டவர் உள்ளே இவரைப்போல் நான்கைந்து பேர் உட்கார்ந்திருப்பதை பார்த்த்தும் முகம் சுணங்கி போய் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தார்.

ஆரம்பத்தில் காஞ்சனாவின் மேனேஜர் கால்ஷீட் இல்லை என்று சொல்லிவிட்டார். இவர் ஷியாம் கால்ஷீட் வைத்து இருப்பதாக சொன்னவுடன் கொஞ்சம் இருங்க என்று உள்ளே சென்றவர் பத்து நிமிடத்தில் வந்து அம்மா ஒத்துகிட்டாங்க, வாங்க என்று உள்ளே கூட்டி சென்றான்.காஞ்சனா அறிமுக பார்வை கூட பார்க்கவில்லை, ஷியாமின் கால்ஷீட் எப்பொழுது என்று தான் கேட்டாள், தேதிகளை கேட்டவள் அதற்கு தகுந்தாற்போல் அட்ஜஸ்ட் செய்து கொள்வதாய் தெரிவித்தாள். அவனோடு நடிப்பதற்கு இப்போதெல்லாம் ஆலாய் பறக்கிறார்கள். ஒரு காலத்தில் அவனை உதாசினம் பண்ணியவர்கள்தான்.

ஒரு வழியாய் சம்பள விவகாரங்களை பேசிவிட்டு கையெடுத்து கும்பிட்டு கிளம்பியவர் வீட்டுக்கு போப்பா, டிரைவரிடம் சொல்லிவிட்டு சீட்டில் சாய்ந்தார் மீண்டும் ஒரு கார் பயணம்.

சில நேரங்களில் இந்த மாதிரி அலைச்சலை கண்டு சினிமாவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று தோன்றும். ஆனால் கிட்டத்தட்ட இருபது வருடங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு படம் முடிந்து கொஞ்சம் லாபம் பார்த்து விட்டால் இது அத்தனையும் மறந்து விடும். எந்த தொழிலில் கஷ்டம் இல்லை. எல்லாம் வருமானத்தை நம்பித்தான் இருக்கிறது. மனம் இப்படி சமாதானம் செய்து கொள்ளும்.

இனி டைரக்டரை அழைக்க வேண்டும், முடிவு செய்தவர், இப்பொழுது இருக்கும் டைரக்டரில் கதிரை அழைக்கலாம் என்று முடிவு செய்தார். அவரை பொருத்தவரை முதலில் நடிப்பவர்களின் கால்ஷீட், அப்புறம்தான் அடுத்து. இதனால் நிறைய டைரக்டர்கள் இவரிடம் பணி புரிய தயங்குவார்கள். காரணம் இவர் புக் செய்த நடிகர்களைத்தான் நடிக்க வைக்க முடியும். இது சொந்தமாய் செயல்பட நினைக்கும் டைரக்டர்களுக்கு ஒத்து வராது. இது இவருக்கும் தெரியும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பாணி. இது என்னுடைய பாணி என்று சொல்லிக்கொள்வார்.

கதிர் கொஞ்சம் யோசித்தான், சார் உங்க பாணியில என்னால படம் பண்ண முடியுமான்னு தெரியலை.

தம்பி..நீ எப்படின்னு தெரிஞ்சுதான் உன்னை கூப்பிட்டேன். இது என்னோட பாணி. நீ எங்களை மாதிரி ஆளுக கிட்டயும் வேலை செய்யணும். உரிமையுடன் பேசினார்

நீங்க ஷியாமையும், காஞ்சனாவியும் புக் பண்ணியிருக்கீங்க, அவங்க இரண்டு பேருமே டாப் ஸ்டாருங்க, அவங்க என்னோட பாணிக்கு கொண்டு வரணும்னா ரொம்ப கஷ்டங்க.

அட என்ன தம்பி நீ, இங்க பாரு இன்னைக்கு அவங்க இரண்டு பேரு கால்ஷீட் கிடைக்காதான்னு, என்னைய மாதிரி முதலாளிகளும், உன்னைய மாதிரி டைரக்டர்களும் காத்து கிடக்கறாங்க. நீ என்னடான்னா. இந்த மாதிரியும் எடுக்க முடியும்னு ஜன்ங்களுக்கு காட்ட வேணாமா?

அவரின் இந்த பேச்சு கதிரை யோசிக்க வைத்தது. சரி செய்வோம், முடிவு செய்தவன் சரிங்க சார்.

தனபாண்டியனுக்கு சந்தோசம், நடிகர்களை புக் செய்த்தை விட கதிரை புக் செய்த்தற்கு மிகுந்த சந்தோசப்பட்டார். பையன் இதுவரை எடுத்த படங்களில் ஒரு படம் கூட தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை தரவில்லை. அது போல செலவுகளும் அதிகமாக வைக்கமாட்டான். பாட்டு காட்சி வைப்பதற்கே பல முறை யோசிப்பான். ஆனால் பெரிய நடிகர்களை வைத்து எடுப்பது இதுதான் முதல் முறை.

ஷியாமிடம் மனம் விட்டு சொன்னான், சார் இது என்னோட படம், நான் கொஞ்சம் உங்களை கஷ்டப்படுத்துவேன் தயவு செய்து தப்பா நினைச்சுக்காதீங்க, எனக்கு திருப்தியாகற வரைக்கும் கஷ்டப்படுத்துவேன்.

சிரித்தான் ஷியாம், தாராளமா செய்யும்ங்க. காஞ்சனாவும் இதையே சொன்னாள்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஷியாமுக்கு ஆர்வம் குறைய தொடங்கியது, காரணம் அவனுக்கு இந்தி படம் ஒன்று புக்காகி விட்டது. அதில் ஆர்வம் காட்டியதால் ஒரு டேக், அதற்கு மேல் போனாலே முகத்தை கோபமாக்கிக்கொண்டான்.

காஞ்சனா சொல்லவே வேண்டாம், அவளுடைய கால நேரமே விரயமாவதாக நினைக்க ஆரம்பித்தாள்.

பல்லை கடித்து படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தான் கதிர். சில நேரத்தில் பேசாமல் விலகிக்கொள்ளலாமா என்று கூட நினைக்க ஆரம்பித்தான். தன பாண்டியன் மட்டும் அவ்வப்பொழுது ஆறுதல் சொல்லிக்கொண்டே இருந்தார்.அதனால் அவர் முகம் பார்த்து தனது எண்ணத்தை இறுக்கிக்கொண்டான்.

எப்படியோ படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள வரை வந்து விட்டான். திடீரென்று ஷியாம் இவனை வரச்சொல்லி பத்திர்க்கைக்கு பேட்டி கொடுக்க சொன்னான்.இவனுக்கு தர்ம சங்கடமாகி விட்டது. அதெப்படி சார், படத்தை நாம போட்டு பார்த்து எல்லாம் பேசி முடிச்சுட்டு அப்புறமா பத்திரிக்கைக்காரங்களுக்கு பேட்டி கொடுத்தா நல்லாயிருக்குமில்லை.

ஷியாம் சிரித்தான், இங்க பாருங்க கதிர், நீங்க இந்த படத்தை பத்தி மட்டும் யோசிக்கறீங்க, நான் அப்படி இல்லை, அடுத்த இந்தி படத்துக்கும், இதைய அச்சாரமா வச்சு விளம்பரம் செஞ்சுடுவேன்.

கதிர் அவனின் திறமையை வியந்தான், அப்பா எப்பேர்பட்டவனாய் இருக்கிறான்.

மறு நாள் காலையில் செய்தித்தாளில் படப்பிடிப்பு முடிந்து ஷியாம் கையால் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டு, படம் மிகப்பெரிய புரட்சியை உண்டு பண்ணும் என்று நடிகர் மற்றும் டைரக்டர்கள் சொன்னதாக செய்தி வந்தது.

தனபாண்டியன் வருத்தப்பட்டார். என்ன தம்பி, என் படம் எங்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லாமல்…

சார் ஷியாம் சொன்னவைகளை சொன்னான்.

சரி விடு தம்பி, படம் நல்லா வந்த சரி, அடுத்த மாசம் முதல் வாரம் முடிச்சு கொடுத்துடு.இரண்டாவது வாரம் ரிலீஸ் பண்ணிடலாம்.

படம் நல்ல ஓட்டம், ஷியாமை அவனது இரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள், காஞ்சனாவையும் அவள் இரசிகர்கள் கொண்டாடினர். கதிரையும் புகழ்ந்து பேசினர்.

தன பாண்டியன் கதிரை அழைத்து இந்தா தம்பி உன்னோட பேசின சம்பளம் அவன் கையில் கொடுக்க அவன் விருப்பமில்லாமல் வாங்குவது போல வாங்கினான்.

ஏன் தம்பி இவ்வளவு வருத்தமாயிருக்கே?

நான் என் விருப்ப்படி செய்ய முடியாத படமா போச்சேன்னு நினைச்சேன்.

சிரி சிரி என்று சிரித்தார், தம்பி இன்னும் இந்த சினிமா உலகத்தை புரிஞ்சுக்கலையே நீ. நான் கூட நல்ல தரமான படமா எடுத்து கொடுக்கணும்னுதான் ஆரம்பத்துல நினைச்சேன், அப்புறம் வாங்குன அடியில துண்டை காணோம் துணியை காணோம்னு இந்த மாதிரி படங்களை தயார் பண்ண ஆரம்பிச்சுட்டேன். இப்பவும் ஒண்ணு கெட்டு போயிடலை. நீ கொஞ்சம் வெளியில போய் பாரு, இரசிகர்கள் உன்னை கொண்டாடுவானுங்க, காரணம் ஷியாமையும் காஞ்சனாவையும் வச்சு எடுத்தியில்ல அதுக்குத்தான். இதுக்கு முன்னாடி படம் எடுத்த இல்லைங்களே, அப்ப உனக்கு இந்தளவுக்கு இரசிகருங்க இருந்திருப்பாங்களான்னு யோசி..

அப்புறம் சொல்லு, இன்னொரு படம் இதே மாதிரி பெரிய வேற நடிகரை வச்சு படம் பண்ணலாம்.

வெறும் புன்னகையுடன் அவர் சொன்னதை கேட்டு வெளியே வந்தவனை சுற்றிக்கொண்ட பத்திரிக்கை நிருபர்களும், இரசிகர்களும். எங்க தலைவரை வச்சு படம் எடுத்திருக்கீங்க, என்று ஷியாம் இரசிகரக்ளும் ஷியாம் என்னவெல்லாம் உங்க கிட்ட சொன்னாருன்னு சொல்ல முடியுமா? பத்திரிக்கை நிருபர்களும் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *