(1993 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இந்த வெளி எப்போதுமே அற்புதமானது. மாரியோ. கோடையோ இரவோ பகலோ -எப்போதும். ஆனால் முன்னிரவு வேளைகளில் வலு விசேஷம். தெரு. கிழக்கிலிருந்து மேற்கே ஓடுகிறது. ஒரே நேர். அப்படி வருகிறபோது. இருந்தாற் போல ஓரிடத்தில் வேலி அடைத்த வளவுகள் நின்று விடும். இரண்டு பக்கமும் வெளி விரியும். படாரென்று கட்டொன்றை அவிழ்த்து விட்டதுபோல் விட்டாத்தியாயிருக்கும். முகத்திலும் படுகிற புதுக் காற்றுப் போல் மனதிலும் வீசும்.
வெளி தொடங்குகிற இடத்திலிருந்து ஒரு முப்பதடி வந்ததும். தெருவின் தார் கழன்று நீழ் வட்டமாய்க் கிடக்கிற அந்தக் கிடங்கைத் தாண்டுகிற கையோடு. இடது பக்கம் திரும்பி, வெளி விளிம்பின் தென்னை நிரைகளுக்கு மேல் பார்த்தால், பத்திரகாளி கோவில் கோபுரம் தெரியும். ஒன்று அல்லது இரண்டு கணந்தான் மோட்டார் சைக்கிளா. சைக்கிளா என்பதைப் பொறுத்து. மரங்களின் இடைவெளி அவ்வளவுதான். காட்டும். இன்றைக்கும். இந்தா. மாலை வெயிலில் மஞ்சளாய்…
கால் மைலுக்கும் கூடவரும். வெளியின் நீளம். அகலமும் கிட்டத்தட்ட அவ்வளவு. நட்ட நடுவில் தெரு. பக்கத்துப் பாத்திகளிலும் தெரு உயரம் புகையிலை வைக்கிற காலங்களில் வெளி நிறைந்து கடல்போலிருக்கும். பயிர் வளர, பச்சைக் கடல் உயரும்….மற்றைய காலங்களில், அங்கொரு துண்டில் குரக்கன். இங்கொன்றில் மரவள்ளி- அவரவருக்கு வாலாயம்போல, வெளிச்சம் இருக்கிற எந்த நேரத்தில் வந்தாலும் எங்கோ யாரோ. ஏதோ செய்து கொண்டிருக்கிற உயிர்ப்பு..
இந்தத் துண்டில். கண்ணு உழுந்து போட்டிருக்கிறான். உழுந்தா? பயறா? இன்னும் வடிவாய்த் தெரியவில்லை. இவ்விரண்டு இலைகளோடு நிற்கிற பயிர். இன்று இறைத்த ஈரத்துக்கிடையில் மதாளித்துப் படர்ந்திருந்தது பசளிக்கீரை. மெல்லிய நீலம் பரவிய பச்சை. மடித்தால். இலைகள் டிக்கென்று ஒடியுமென்று இங்கிருந்தே உணர முடிகிறது.
சோழகம். கொஞ்ச நாட்களாகவே இப்படி ஒரு வாடைக் குளிரோடு வீசுகின்றது. எங்காவது மழையா? இங்கென்றால். வானம் வெளித்துக் கிடக்கிறது. மேற்கில் மட்டும் சில சிவப்பு முகில்கள்.
என்ன இது?
ஒருவரையும் காணவில்லை! தெரு நீளம் ஒரு காகக்குருவியும் இல்லை! என்ன சங்கதி? இந்த நேரத்தில் இந்தத் தெருவில் எவ்வளவு சனம் போகும்? என்ன நடந்தது?
தோட்டங்களைத் திரும்பிப் பார்த்தான். வலது பக்கம் தெருவோடு ஒரு குரக்கன் பாத்தி. அங்கு வெருளி மட்டும் அதன் கையிலிருந்த சவுக்கு நுனி காற்றில் பறக்கிறது. இடது பக்கம் அதுகூட இல்லை. இதென்ன? கொடியேற்றுகிற பெடியள் எல்லாம் எங்கே போனார்கள்? காற்று எவ்வளவு நல்லதாய் அடிக்கிறது! அதற்கிடையிலா வலித்துக் கொண்டு போயிருப்பார்கள்? நேற்றுக்கூட இரவிரவாக ஒரு எட்டுமூலை விண்கூவியது.
அசைவேயில்லை. ஒரு வாகனம். வண்டில். சைக்கிள் -? நடப்பவர்கள் கூட! என்ன நடந்தது எல்லோருக்கும்? இறைப்பவர்கள். விறகுக்கு அலம்பல் தேடுபவர்கள். எருப்பொறுக்குபவர்கள். எதையோ விதைப்பதற்காகக் கொத்துபவர்கள், புல் பிடுங்குபவர்கள். மாட்டைக்கலைப்பவர்கள். இவர்களோடு கதைப்பவர்கள், சண்டை பிடிப்பவர்கள், வரம்பால் நடந்து தவறணைக்குப் போகிறவர்கள். வரும்போது வரம்பில் தள்ளாடுபவர்கள். குறுக்கே பாயக்கூடிய சிறுவர்கள்..? எல்லாரும் எங்கே? என்ன இது. இன்று?
நேரே…..வெளிமுடிந்துங்கூட, தெரு நேர போகிறது. ஒரு முந்நூறு யார் அப்படிப் போய்த்தான் பிறகு டானாவாக வலப்பக்கம் திரும்பும். இங்கிருந்து அந்த முடக்கும் தெரிகிறது. அங்கும் ஒரு மனுக்கணமும் இல்லை! வெளி முடிவில் வருகிற கனகராசா கடை, தள்ளியிருக்கிற சலூன், பிறகு சந்தி…ஓரிடத்திலுமா ஆட்களில்லாது போவார்கள்?
காற்று, தெற்கிலிருந்து வந்து தெருவைத் தாண்டி வடக்கே பறந்தது. பொலித்தீன் பையொன்று, பூப்போல், கடற்சொறி போல். பரசூட்போல் இந்த வெயிலிலும். காற்றுக் குளிராய்த்தானிருந்தது.
என்னாகியிருக்கும். இங்கே? ஏதும் பிரச்சினையா? அப்படி என்ன? சத்தங்கூட கேட்காமல் பயமா. இது ? பரபரப்பா? சைக்கிளை உழக்கினான்.
பத்துவருஷம்! எண்பத்து மூன்று ஜூலை. ஒரு காலை விடிந்த போதே வித்தியாசந் தெரிந்தது.
சக்தி வந்து மெல்லக் கூப்பிட்டான்.
சந்தையடியிலே ஏழெட்டுப் பேரை ஆமி சுட்டுப் போட்டிருக்காம்! வாறியா. என்னெண்டு பாத்திட்டு வருவம்?
வழியில் கண்ட எவரோ. ஊரடங்காம் என்றார்கள்.வடிவாயுந்தெரியவில்லை. ஊரே கெலித்து ஒடுங்கிக் கிடந்தது.
“நேற்றிரவு தின்னவேலியிலை நடந்ததுக்குப் பழிவாங்கலாம் இது.’ ……காற்றோடு கதைகள்.
சந்தையடியில் சிறு கும்பல் நின்றது. நின்றவர்கள். காதுகளையும் கால்களையும் தயாராய் வைத்தபடி நின்றார்கள்.
எப்போது எங்கிருந்து வருவான்களென்று தெரியாத பதகளிப்பு. பூட்டியிருந்த கடைகளின் விறாந்தைகளில் வளர்த்தியிருந்த சடலங்கள் .. எல்லாம் இளந்தாரிகள். பள்ளிக்குப் போன பெடியன்களும்…..கடவுளே!
இடது கன்ன மேட்டில் துவாரம் தெளிவாய்த் தெரிய மல்லாந்து கிடந்த முகமொன்று…… தாங்க முடியாமல், “வா, போவோம்’ என்று சக்திதாசனை இழுத்தபடி வெளியே வந்தான்.
எங்காவது ஜீப்போ. ட்ரக்கோ இரைகிறதா? என்று புலன்களைக் குவித்தபடி ஒழுங்கைகளூடாகத் திரும்பிக் கொண்டிருந்த போது. சக்தி சொன்னான்.
“மச்சான். பதின்மூண்டு சிங்களவர்களைக் கொண்டதெண்டு சொல்லுவாங்கள்..ஆனா, இது உண்மையிலேயே இலங்கை இராணுவமாக இருந்திருந்தால்.. “
சக்தி “இலங்கை” என்றதை அழுத்திச் சொன்னான்.
“இந்தப் பதின் மூண்டிலை. மூண்டாவது தமிழாக இருந்திருக்குமே!”
இந்தத் தெருவால் வந்து கே. கே. எஸ் வீதிச் சந்தியையும் பார்க்கலாமென்றான்,சக்தி. வந்தார்கள். இடையில் ஏதோ இரைந்த மாதிரி ஒரு சத்தம். சோழகமா. வாகனமா என்றுகூட யோசிக்க முடியாத அந்தரத்தில் அமத்திக்கொண்டு பறந்தபோதும். இந்த வெளி இப்படித்தானிருந்தது!
இன்றாவது பரவாயில்லை. சக்தி கூட வந்தான். ஆனால் ஒரு நாலு வருஷத்திற்குப் பிறகு இந்த இடத்தை அப்படித்தாண்ட நேரிட்டபோது. இவன் தனியேதான் வந்தான். சைக்கிள்தான்.
தோட்டவெளியைச் சுற்றி அரண்கட்டி நிற்கிற பனங்கூடலெங்கும் இந்தியன் ஆமி நிற்கக்கூடும். இவன் ஆர்.இப்படித் தன்னந்தனியே ஊரைச் சுற்றி வளைத்தபோது இப்படித்தான் ஏழெட்டுப் ஏன் இங்கு வந்தேன்? இருந்தது போல் மாமா வீட்டில் இருந்திருக்கலாம்…இப்போ வீடு பார்க்க என்ன அவசரம்?
சுற்றி வளைத்து, அந்தக் குறிச்சியின் சனமெல்லாவற்றையும் ஒரே வீட்டில் அடைத்து வைத்த அந்த ஒருகிழமை. அவன்கள் விட்டதும் விடாததுமாய் வீட்டுக்குப் போய் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு பட்டணத்துக்கு நடந்தே போய் மாமா வீட்டிலிருந்த மூன்று கிழமை இந்த ஒரு மாதமும் வீடு ஏதோ இருந்திருக்கும்தானே.
முதல்நாள் மகாலிங்கத்தைக் கண்டபோது. இரண்டு தரம் போய்த் தனது வீட்டைப் பார்த்துவிட்டு வந்ததாகச் சொன்னான். அவன் கதையைக் கேட்டு வெளிக்கிட்டதும் பிழை. அதுவும் தனியே! அவனோடாவது வந்திருக்கலாம்…… ஆரும் கூட இருந்திருந்தால் பரவாயில்லை. தடுத்துவைத்த போதுதான் என்னவெல்லாம் செய்தான்கள்….ஆனால், ஊரெல்லாம் அப்போது ஒருமிக்க இருந்தது.
மழைக்காலம். எங்கும் பச்சை. பனையடி மூலையில் மாடுகள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன. பசுமாடுகள். வீடுகளை விட்டு வெளிக்கிட்டபோது புத்தியாய் அவிழ்த்து விட்டவர்களின் மாடுகள். பிறகு, அவன்களும் கட்டுகளில் நின்றதுகளை அறுத்து விட்டதாய்ப் பறைந்தார்கள்……எப்படியோ கட்டைகளில் நின்ற மாடுகள் மந்தையாப் போயின!
தடுப்பு முகாமிலிருந்தபோதே இந்த மந்தை உருவாகிவிட்டது. ஒரு பிற்பகல், அந்த வீட்டைத் தாண்டி அது தெருவால் போனது. அவன் வீட்டு மாடும் அதில். கன்னி நாகு. மாடுகள். அந்த வீட்டிலிருந்த மனிதர்களைக் கவனித்ததாய்த் தெரியவில்லை. அவர்கள் கட்டில் நின்றார்கள். அவை சுதந்திரமாய்ப் போயின! வீட்டைத் தாண்டியதும், பள்ளமாய்க் கிடந்த தெருக்கரையில் தேங்கி நின்ற வெள்ளத்தை வாய் வைத்து உறிஞ்சின. அதைக்கண்ட கந்தையர் அழுவார் போலிருந்தார்- அவைகளுக்கு வித்தியாசமே இல்லைப் போலும். நல்லகாலம் மாரியாயிருந்தது.
அதே மந்தைதான். அவன் மாடும் அதில் நிற்குமா? ஏதோ. தப்பிப் பிழைத்திருக்கும்……அதையெல்லாம் பார்க்கிற நிலையில்லை. இது..
வீட்டுக்குப் போனது, பார்த்தது. திரும்பியதெல்லாம் வெளி நினைவில் மங்கிப்போயின.
இன்றைக்கும் வெளி அதே மாதிரி? முடிவில் வருகிற முதலாவது மின்கம்பம்….. முதலி வீட்டு வேலியோடு வெளி முடிகிறது. கண்கள் கூர்ந்து முன்னால் தேடின.
கனகராசா கடை திறந்துதான் இருக்கிறது. அதற்கும் சலூனுக்குமிடையிலிருக்கிற ஓடையில் இரண்டு சைக்கிள்கள். கடையில் ஓர் ஆள். சலூனுக்குள்ளும் கண்ணாடிக் கதவினூடு தெரியும் அசைவுகள்.
இடது பக்கம் திரும்புகிற ஒழுங்கை முகப்பில் வாசிகசாலை திறந்திருந்தது. எட்டுப்பத்துச் சைக்கிள்கள் எதிர்வேலி நிழலோடு நின்றன. சனங்களும் கனபேர். குரல்கள் பெரிதாய் ஒலிக்கின்றன.
சைக்கிளை ஃப்ரீவீலில் விட்டான்.
– வெளிச்சம் – புரட்டாதி 1993
– எழுதப்பட்ட அத்தியாயங்கள், முதற் பதிப்பு: மே 2001, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.