கோடரிகள் கூராகின்றன

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 5, 2023
பார்வையிட்டோர்: 1,480 
 
 

(1971 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கச்சான் காற்றுத் தணிந்த கெதியில் வீசுகிறது.

கோடரியை நிலத்தில் ஊன்றி உடலை இறால் போல வளைக்கமுடியாமல் வளைத்து குடிசையின் வாயிலால் நுழைந்து வெளிவருகிறான் கரீம்.

அவனது வதனத்தில் அசுர சாதனையின் மிடுக்கு சுட ரோடுகிறது. அந்தச் சிறிய குடிசையின் சிறிய கடவலால் நுழைந்து புறப்படுவது அவனைப் பொறுத்தவரை அசுர சாதனையே. சற்றுப் பருத்த பனங்குற்றி போன்ற அந்த கரிய ஆகிருதி ஆறடிக்கு மேலிருக்கும்.

கரீமுடைய பார்வை அவன் கண் முன்னே பரந்து கிடக்கும் காட்டு மரங்களிலே நிலைக்கின்றது. யதேச்சையாக வாளிப்புடன் வளர்ந்து கிடக்கும் அவற்றின் கிளை, காற்றுக்கு அசைந்து அவனைப் பரிகசிக்கின்றதுவா? அப்படியும் அர்த் தப்படுத்திக்கொள்ளலாம்.

அந்தக் காடெல்லாம் புகுந்து பெரிய கம்புகளையும் மரங்களை யுந் தறித்து அனாயாசமாகத் தூக்கிக்கொண்டு புறப்படுவது அவனுக்குக் கைவந்த கலை. அவற்றை மற்ற வர்களுக்கு விற்கத்தான் அவனால் முடிந்தது; தனக்கென்று சுமாரான ஒரு குடிசையைத்தானும் வைத்துக் கொள்ள முடியவில்லை. வருவாயில் பெரும்பகுதி வனபரிபாலன உத்தி யோகத்தர்களது சாக்குகளை நிரப்பப் போய்விடும். மிஞ்சு வது அன்றாடத் தேவைகளுக்கே போ தா மலிருக்கும். தேவைப்படுவோரது கோரிக்கையும் மாதத்துக்கு ஒன்று கூடத் தேறாது.

முற்றத்திலே முதிரை மரமொன்று தண்ணிழலைப் பரப்பி நிற்கிறது. பட்டுப்போன பாலை மரமொன்று நிழலின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக்கிடக்கிறது. பட்டை உரித்து விடப்பட்டிருக்கும் அந்த மரத்தில் கரீமைப்போன்ற இருவர் அருகருகாகப் படுத்திருக்கலாம்.

ஐம்பத்தேழாம் ஆண்டு பெருவெள்ளந் தந்த அனுப வத்தால் குளக்கட்டுக்குப் பின்னால் குடியிருப்பதிலுள்ள ஆபத்தையுணர்ந்த கிராமத்தவர்கள் மேட்டுநிலப் பகுதியில் காட்டை அழித்துக் குடியேற ஆரம்பித்தபோது கிராமந் தோறும் புது ஊர் பழைய ஊர் என இரு பிரிவுகள் ஏற்பட்டன.

சமுளங் குளமென்ற அந்தக் கிராமத்தில் பழைய ஊரிலிருந்து பெயர்ந்து புது ஊரில் குடியமர்ந்த கடைசிக் குடும்பம் கரீமுடையதுதான். கிராம வீதியின் இரு மருங் கிலும் எல்லாரும் காணி பிடித்தபின் கிராமத்து எல்லைக் கோட்டில் கற்பாறைகள் நிறைந்து கிடந்த ஒரு சிறு துண்டு நிலந்தான் கரீமுக்குக் கிடைத்தது. அதிலிருந்த காட்டை வெட்டியபோது அந்த முதிரை மரத்தை மாத்திரம் வெட்டா தொழித்தான். வெட்டிய காட்டை எரித்தபோது முதிரை யின்கீழ் விழுந்த பாலையை மாத்திரம் எரிக்காது காத்துக் கொண்டான்.

முதிரை நிழலும், பாலை மரமும் அவனுக்கு என்ன மாய் உதவுகின்றன.

பாடுபட்டு நொந்துபோன உடம்பை முதிரை நிழலில் வழுவழுப்பான அந்தப் பாலை மரத்தின்மேல் கிடத்தி நீட்டி நிமிர்ந்து படுப்பதிற்தான் எவ்வளவு இதம்.

க்ரீம் அந்தக் கிராமத்தில் ஒரு தளபதியைப்போல. சதா அவனைக் சுற்றி ஒரு வாலிபர் கூட்டம் வளைய வந்து கொண்டிருக்கும்.

அந்த மர நிழலின்கீழ்க் கிடக்கும் கட்டையில் அமர்ந் திருந்து தான் அவர்கள், கள்ளக்கோழி பிடித்துச் சமைப்பது பற்றியோ, ஆட்டையோ மாட்டையோ களவாக அறுத்துப் பங்குவைப்பது பற்றியோ முடிவெடுப்பார்கள். கொழும்புக் கசாப்புக் கடைகளுக்கு அறுவை மாடனுப்பும் கிராமத்து முதலாளி தங்கமரைக்காருக்குக் கள்ள மாடு பிடித்துக் கொடும்பதுபற்றியும் தீர்மானிப்பார்கள். மாட்டுலொறி வழிநெடுக பொலீசில் சிக்கியதால் அதை விடுவிக்க அள்ளி யிறைத்ததால் உண்டாண வழிச்செலவு நட்டத்திலிறக்கி விட்டது” என்று கூறி ஆளுக்கு ஐந்தையோ பத்தையோ கொடுத்துச் சமாளிக்கும் அவரது குள்ள நரித்தனத்தை உணர்ச்சி வசப்பட்டு விமர்சிப்பார்கள். பரம்பரைச் சொத் தாக ஐந்தேக்கர் காணிகூட இல்லா திருந்த மரைக்கார் ஊர்க்காணியின் அரைவாசியைத் தனதாக்கிக்கொண்டதற் குரிய முகாந்திரம் என்ன? மற்றவர்களெல்லோரும் வைக் கோல் குடிசையை வைத்துக்கொண்டிருக்க இவரால் மட்டும் மாளிகைபோன்ற வீடு கட்டமுடிந்த மருமம் என்ன? என்ற ஆராய்ச்சியிலீடுபடுவார்கள்.

அதேகணம், தங்கமரைக்காரிடம் இருந்து அழைப்பு வந்ததோ! விமர்சனத்துக்கு வாழி பாடிவிட்டு, அவர் வீட் டைத் தரிசித்துவிட்டு அங்கே ஊற்றிக் கொடுக்கப்படும் கசிப்பைப் பருகிவிட்டு வந்து கும்மாளமடிப்பதும் அந்த மரத்தடியிற்தான்.

கரீம் கோடரியோடு முதிரைமர நிழலுக்கு வருகிறான். கோடரியைப் புரட்டிப் புரட்டிப் பார்ச்கிறான். அது சாடை யாகத் துருப்பிடித்துப்போய்க் கிடக்கிறது. அவன் அதை யெடுத்து வேலை செய்து மூன்று மாதம். வேளாண்மைச் செய்கையிலீடுபட்டதால் காட்டில் புகுந்து கம்பு வெட்டக் கிடைக்கவில்லை. நேற்று ஒருவர் வந்து ஒரு மாட்டுக் கொட்டி லுக்குக் கம்பு வெட்டித் தரும்படி கோரிவிட்டுப் போயிருந் தார்.

கரீம் கட்டையில் அமர்ந்தான். அவனுக்குச் சற்றுத் தொலைவில் ஒரு பசுவொன்று படுத்துக்கிடந்து இரை மீட்டு கிறது. அதன் தோலில் ‘த, ம’ குறி சுடப்பட்டிருக்கிறது.

தங்கமரைக்காரின் பட்டியைச் சேர்ந்த பசுதான் அது. அந்தக் குறியெழுத்துக்கள் கரீமின் கண்முன்னே தங்க மரைக்கரை நிறுத்திவிடுகிறது. அவனது தேகமெல்லாம் நன்றியுணர்வு சிலிர்த்துவிடுகிறது.

குனிந்து ஒரு சிறங்கை மணலை அள்ளி கட்டையில் பரப்பிக்கொண்டு கோடரியைத் தீட்ட ஆரம்பிக்கிறான். அவனது மனம் தங்கமரைக்காரைப்பற்றிய நினைவுப் பின் னலில் மூழ்கிவிடுகிறது.

அன்று தங்கமரைக்கார் இதே மர நிழலில் இதே கட் டையில் கரீமுக்கு அருகருகாக அமர்ந்திருந்தார். அவர் பேசவாரம்பித்தார்.

“அடே மடையா! நீ பொளக்கத் தெரியாதவன். கோடலியும் காடு மென்று திரிந்தா இந்தக் காலத்திலே உருப்பட ஏலாது. நான் கதக்கத்த கொஞ்சங் கவனமாகக் கேளு. நீ செய்யவேண்டிய வெள்ளாமக்காணிய வேறொரு வன் செய்யிறான். பாய்ச்சல் காணி வாய்க்காலோரமாகக் கெடக்கு. வருசம் ரண்டு போகம் தப்பாமச் செய்யலாம். நேத்து நடந்த மீட்டிங்கிலே (விவசாயக் குழுக் கூட்டம் )
வாறகெழம தண்ணி தொறக்கிறதாத் தீர்மானம் பண்ணி யிருக்கிறம். ஏண்ட மிசினால் உழுது தாறன். மிரிக்க மாடும், வெதக்க நெல்லும், வேலிக்குக் கம்பியுந் தாறன்” என்று ஒரே மூச்சில் கூறிமுடித்தார்.

கரீம் அந்தக்கணம் ஒரு புது அனுபவத்தை அனுப வித்துக்கொண்டிருந்தான். தங்கமரைக்கார் இப்படிப் பேசு வதை அவனால் நம்பமுடியாதிருந்தது. ஆச்சரியத்தால் விழி பிதுங்க அசைவற்றுப்போனான். தானும் ஒரு காணிச் சொந் தக்காரன் என்று நினைக்க அவனுக்குப் பரம ஆனந்தமா யிருந்தது. மீண்டும் தங்கமரைக்காரே தொடர்ந்தார்.

“காணியப்பத்திய வெபரம் ஒன்றும் சொல்லல்லியே எண்டு யோசிக்கிறீயா? ஒண்ட பெண்சாதியின் வாப்பா மகுத்தாப் போனார் தானே. அவருட தம்பி இருக்கானே பல்லன் காசீம் அவன் செய்யிற காணி ஒண்ட மாமனாருக் குரிய பாகம். ஒண்ட மாமா மட்டக்களப்புக்குப் போய் கலியாணம் முடிச்சித்தானே ஒண்!.. பெண்டாட்டியப் பெத் தார். அந்தநேரமாப் பார்த்து அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கும் பொதுவாகக் கிடந்த தாயாதிக் காணியில் பாதி பாகத்த இந்த பல்லன் காசின் ஏண்ட மாமாக்கு வித்திருக் காண்டா. ஆனா அவன் செஞ்ச அநியாயத்தப் பாத்தியா? * ‘ஒப்பினை’ யில ஒண்டமாட கையெழுத்து மாதிரி இவன் போட்டு குடுத்திருக்கிறான்டா, ஒண்ட மாமனார் அவருட பாகத்த வித்துப்போட்டார் எண்டு ஒலகத்த நம்பவச்சிற் றாண்டா. இப்ப பார்த்தியா எங்க வெசயம் மிருக்கெண்டு இப்பொழுது சொல்லு” என்று நிறுத்தி மீண்டும் அவரே பேச ஆரம்பித்தார்.

“ஓண்ட மாமட காணிக்கு உருத்தாளியரு?”

“ஏண்ட… பொண்டாட்டி”

“உடாத; புடி. ஒண்ட பெண்டாட்டிர காணிய ஆரு செய்யவேணும்?”

“நான் தான்”

“அதையும் உடாத புடி. நாளக்கி நீ வயல்ல இறங்கி முள்ளியைத் கொத்து, ஆராவது தடுக்கவந்தா நீ கெட்டிக் காரன். ஆம்புள. எளந்தாரி. குடுத்துடு. கோடு கச்சேரி ஏற வந்தா நான் பாத்திக்கிறன். ஆனா கொவகில செஞ்சிராத. காயமில்லாத மாதிரிப் போட்டுப்புடி”

“அந்தாளப் பாத்தா ஏண்ட மாமனாரப் பார்க்கிற மாதிரியிருக்கு. குமர்குட்டிக்காரன். வயசாளி ஏண்ட மாமா உசிரோட இருந்த காலத்தில் எனக்கிட்ட இதுபத்தி ஒண் டுஞ் சொல்லல்லய?”

“அடமடயா, இதில நடவடிக்கையெடுத்தா தம்பி மறியலுக்குப் போகவேண்டி வருமே எண்டுதாண்டா ஒண்ட மாமா இதுபத்திப் பேசாம இருந்தார்”

“இதுக்கு நாம எப்புடி ஓப்பின முடிக்கிற?”

“ஒனக்கென்னடா ஒலகந் தெரியுமா? இது சின்னக் கரைக் காணி. சிங்கள ராசா ஆண்ட காலத்தில் மானிய மாக கொடுத்த பூமி. பரம்பரை யாக ஆண்டனுபவிச்சு வந்தது. ஒண்ட பேரில இடாப்பு வைச்சா நீயே இத விற்கலாம். ஒண்ட பொண்டாட்டிர பேரில் தான் இடாப்பு வைச்சுத் தாறன். குழுக் காரியதரிசி நான் சொல்லுற மாதிரி ஆடுவான். ம்… நீயொரு ஆம்புளதான். ஒண்ட வாழ்க்கையில மண்ணப் போட்டவனுக்கு நீ இரங்கிறாய்” என்று நிறுத்தி கரீமை ஆழநோக்கினார்.

அவன் தெய்வத்தின் முன் நிற்கும் பக்தனைப்போல உருகி நின்றான். நன்றி உணர்வில் மூழ்கி நின்றான். கண்கள் ஆனந்த பாஷ்பம் மல்கின. மீண்டும் மரைக்காரே பேசத் தொடங்கினார்.

“நொத்தாரிசு லொக்கு பண்டா இருக்கிறானே அவன் கல்லில் நாருரிச்சிக் கயிறு திரிச்சுக் காட்டுவான். அவனக் கொண்டு உனக்கு ‘ஒப்பினை’ முடிச்சித் தராட்டி ஒட்டிலேபோட்டு என்ன ‘ உஞ்சு…..’ எண்டு கூப்பிடு” என்ற முத்தாய்ப்போடு, காரியஞ் சாதித்த களிப்புடன் முதலாளி தங்கமரைக்கார் நடையைக் கட்டினதும் இதே மரநிழலில் தான்.

சில நாட்களுக்குமுன் ஊர்ப் பள்ளிக்கூடத்தில படிப் பிக்கும் தலைமையாசிரியர் இதே மர நிழலின் பாலைக் கட்டை யில் கரீமொடு அருகருகாக அமர்ந்திருந்து இதே காணிப் பிரச்சினை சம்பந்தமாகப் பேசிப்பார்த்தார்.

மட்டக்களப்பிலிருந்து தொழிலுக்காக வாழ்க்கை வசதிகளற்ற குக்கிராமத்தில் அவதியுறும் ஆசிரியரால் மற்றவர்களைப்போன்று தானுண்டு, தன் பாடசாலையுண்டு என இருக்கமுடியவில்லை. அவர் மனிதாபிமானம் மிகுந்த புத்தி ஜீவப் பாட்டாளி.

கரீம் வயலிலிறங்கி வேலை செய்தபோது ஏனென்று கேட்ட கிழவன் காசீம் கரீமால் நையப்புடைக்கப்பட்டது; அதனால் காசீம் வாரக்கணக்காக நோயுற்றுக்கிடந்தது. வல்லார் கொள்ளையடிக்க மிஞ்சிநின்ற ஒரேயொரு பசு மாட்டை அநியாய விலைக்கு விற்று பணமாக்கிக்கொண்டு பட்டினம் போய் பொலிஸாரைச் சந்தித்துவிட்டு காசீம் வெறுங் கையோடு திரும்பியது; அடுத்தநாள் கிராமத்துக்கு வந்த பொலிஸ் வீரர்கள் தங்கமரைக்காரின் விருந்தாளி யாகத் தங்கிவிட்டுச் சென்றது; காசீம் ஆசிரியரை சந்தித்து, ‘தனது குமர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும், தனது பிள்ளை குட்டிகளுக்கும் கஞ்சி வார்க்கவும் இருக்கின்ற ஒரேயொரு ஆதாரம், அதைத் தனக்கு வித்துவிடும்படி தங்கமரைக்கார் கேட்டிருந்தார். நான் மறுத்ததற்காக இப்படியெல் லாம் செய்விக்கிறார்’ என்று அழுது முறையிட்டது, எல்லா வற்றையும் கரீமிடம் எடுத்துக்கூறியபின் ஏமாற்றத்தோடு திரும்பியதும் இதே மர நிழலிலிருந்துதான்.

தீட்டிய கோடரியின் கூர்ப்பாகத்தைப் பெருவிரலால் நீவிவிடுகிறான் கரீம். அவனது கோடரி எந்த வைரித்த மரத்தையும் ஒருகை பார்த்துவிடும் என்ற நம்பிக்கையை அவனுக்கூட்டிவிட்டது.

பஸ் “அரைக்கொத்தரிசி கடனாகக் கேட்டு இந்த சமுளங் குளத்தூரில் ஒவ்வொரு கடப்பா ஏறி இறங்கினன். வாத்தியாருட பொம்பளக்கி ஆண்டவன் நல்ல ஈமானக் கொடுக்கனும். அரைக்கொத்துக்கு ஒரு கொத்தையே தந்தா”

இடுப்பிலே குழந்தையும் தலையிலே அரிசிப் பெட்டியு மாக வருகிறாள் கரீமின் மனைவி.

“கொஞ்சம் பொறுடி. வயல்ல இருந்து நெல்லக் கொண்டாந்து மூட்டை மூட்டையா அடுக்கியுடுறன்; வட்டியும் மொதலுமாச் சேத்து அவிச்சித் தள்ளு” என்று கூறி அவளை அலட்சியமாகப் பார்த்தான்.

“வயல்ல இருக்கிற நெல்லும் வகுத்தில இருக்கிற புள்ளயும் வந்ததுக்குப் பொறகுதான்”

“ஏண்டி அப்புடிக் கதக்கிறாய். கரும்புப் பத்தையிலே தென்னம்பாள வெடிச்சமாதிரி கதிர்கள். அது காத்தில ஆடுறது ஒண்ட கண்வெட்டு மாதிரி. இன்னம் பொறுத் துக்கடி ஒரு கெழமைக்கி”

“மரைக்காருட ஊட்டில ஒரு சிங்களவன் இருந்து என்னமோ எழுதினான். என்னயும் ஏண்ட பெருவிரலில் மையப் பூசி ஒரு தாளில் பதியவெச்சாங்க. போய் ஏன் னெண்டு பாருங்க”

கரீம் கோடரியை மரத்திலே சார்த்திவிட்டு மரைக் காரின் வீட்டை நோக்கி விறுவிறுவென்று நடையைக்கட்டினான்.

கச்சான் காற்று மூர்க்கமாகச் சுழன்றடிக்கிறது. கரீமின் முகம் துவந்த யுத்தம் நடந்த போர்க்களமாகச் சாம்பிக்கிடக்கிறது.

சாரத்தை முளங்கால் மூட்டுக்கு மேல் உயர்த்தி மடித்து அரையோடு முடிந்து கொள்கிறான். சிலும்பிப்போய்க் காற்றிலே அலை புரளும் தலைமயிரைக் கைக்குட்டையால் சுற்றிக்கட்டிக்கொள்கிறான். முதிரை மரத்தில சார்த்திய கோடரியை எடுத்துத் தோளில் வைத்துக்கொண்டு நடக் கிறான். தெருப்படலையில் தான் படுவனாக முளைத்துச் சடைத்து வாடா மல்லிகைச் செடியொன்று பூத்து சிலிர்த் துச் செம்மயமாகிச் சிலிர்க்கின்றது.

தெருவிலே இறங்கி கிழக்குமுகமாக நடையைக் கட்டு கிறான். கடைந்தெடுத்த கருங்காலி வைரம்போன்ற அவனது கால்களும் வலது கையும் போர்முனை நோக்கி விரையும் வீரனுடையது போல இயங்குகின்றன.

எதிரே சில மாடுகள் மர நிழலில் நின்றவண்ணம் இரை மீட்கின்றன.

கரீமுடைய மனம் சற்றைக்குமுன் மரைக்காரின் வீட் டில் நடந்த சம்பவங்களை அரைபோட்டுக் குமுறுகின்றது.

கரீம் மரைக்காரின் வீட்டுப் படலையில் நிறுத்தப்பட் டிருக்கும் காரைக் கண்டதுமே விசயம் என்னவாக இருக்கு மென்பதைப் புரிந்துகொண்டான். அது பக்கத்துப் பட்டி னத்திலுள்ள அப்புகாமியின் கார். அதற்குரிய வாடகை எக்கச்சக்கம். தலை போகிற காரியமாக இல்லாவிட்டால் மரைக்கார்கூட அதை அமர்த்துவதில்லை. நிச்சயமாக நொத்தாரிசு லொக்கு பண்டாவைத்தான் அழைத்து வந்திருப்பார் எனக்குக் காணி சொந்தமாக்கித் தருவதில் அவருக்குத்தான்

எவ்வளவு ஆர்வம், எவ்வளவு சிரமம், எவ்வளவு செலவு என்றெண்ணிக்கொண்டு நன்றிப்பெருக்கில் மூழ்கிக்கொண்டு மரைக்காரின் வீட்டை நோக்கி விரைந்தான்.

அந்தப் பென்னம்பெரிய கல்வீடு மரைக்காரின் பெரிய மனதை அவனுக்கு நினைவுபடுத்தியது.

வீட்டின் முன்கதவு பூட்டியிருந்தது. யன்னல் கதவு ஒன்று மாத்திரம் சாடையாகத் திறந்திருந்தது. கரீம் கத வடியை நெருங்கியபோது அவனது செவியைத் தீண்டிய சிங்கள வசனங்கள் அவனைத் திகைக்கவைத்தன. காலும் ஓடாமல் கையும் இயங்காமல் அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.

சிங்களத்தில் பதிவுசெய்யப்பட்ட உயிலை நொத்தாரிசு மரைக்காருக்குப் படித்துக்காட்டிக்கொண்டிருந்தான். அதன் படி, கரீமின் மனைவி அலிமா தனது தகப்பன் காதர் சாவுக்கு சொந்தமான காணியை தங்கமரைக்காருக்கு விலைக் கிரயமாக விற்றுவிட்டதாக அந்த வாக்கியங்கள் பொருள் கொடுத்தன. கரீம் ஆவேசங்கொண்டு கதவுகளைத் தட்டி னான். கதவு திறக்கப்பட்டது. சரீம் உள்ளேவந்த வேகத் தைக்கண்டு மரைக்காரும் நொத்தாரிசும் அதிர்ந்து போனார் கள். தன்னைச் சுதாரித்துக்கொண்டார்.

“கரீமா, வா இப்படி இரு. ஒனக்கிட்ட வரத்தான் இருந்தன், நீயே வந்திற்றாய்” என்று சொல்லிக்கொண்டே புன்முறுவல் பூத்தார்.

“நொத்தாரிசு மாத்தயா வாசித்ததென்ன?” என்று உணர்ச்சியுடன் கேட்டான்.

“ஒனக்கு இங்க ஒண்டும் குடிமுழுகிற காரியம் நடக் கல்ல. இரு ஆறுதலா எல்லாத்தையும் சொல்றன்.”‘-58

மரைக்கார் சாவதானமாகச் சொன்னார்.

“ஓம் தம்பி, ஆத்திரப்படாம விசயத்தைக் கேளு. மரைக்கார் உனக்கு நன்மையைத்தான் செய்வா” என்று நொத்தாரிசு சிங்களத்தில் கூறினார். மரைக்கார் ஒரு கொப்பி புத்தகத்தை விரித்தார்.

“கரீம், நான் இப்ப படிக்கப்போறதக் கொஞ்சம் கவனமாகக் கேளு” என்று சொல்லிவிட்டுப் படிக்கத்தொடங் கினார்.

“ஔவுமிசின் கூலி நூறு, விதைநெல்லுக்கு நூத்தம் பது, வரம்புகட்டி விதைத்து வேலி போட்டவகையில் கூலி தூத்தம்பது, ராலஹாமியாருக்கு ரொக்கம் அறுநூறு, சாராயஞ் சாப்பாட்டுக்கு இருபத்தியஞ்சி, ஆராய்சிக்கு (கிராமத்தலைவர்) இருநூறு, வயல் விதானைக்கு நூறு, விவ சாயக்குழுக் காரியதரிசிக்கு நூறு, பசளைக்கு நூத்தியம்பது, மருந்துக்கு எழுபத்தஞ்சி, நீயும் ஒண்ட மனைவியும் காசாக வாங்கியது முன்னூத்தி எண்பது. எல்லாமாகச் சேர்ந்து இரண்டாயிரத்தி முப்பது ரூபா’ என நிறுத்திவிட்டு முத லாளி கரீமைப் பார்த்தார்.

“இதென்ன ஈது? இதென்ன கணக்கு?”

“இதோ, இது…. நீ வெள்ளாம செஞ்ச வகையில் நான் செலவுசெஞ்ச பணம் தெரியுமா?”

“இந்தக் கணக்க என்னால ஒத்துக்கேலாது”

“நீ ஒத்தாலும் ஒத்துக்காட்டியும், இது கணக்கு, தான் கையால செலவுசெஞ்ச கணக்கு”

“இது பொய்க் கணக்கு”

கரீம் கத்தினான்.

“கரீம் கத்தாதே, ஆத்திரப்படாதே. இத அப்படியே உட்டுவச்சா வட்டியுஞ் சேந்து தலைக்குமேலால போகும். பேருக்கு ரண்டேக்கர் தான். அளந்து பார்த்தா ஒரு ஏக்கரும் தேறாது. எப்படிப் பாத்தாலும் பெறுமதி ஆயிரத்துக்கு மேலே போகாது. எனக்குத்தான் கைநட்டம். நட்டம் என்னோட போகட்டும். ஒண்ட தலையைக் காப்பாத்தி உடுறனே அது போதும் எனக்கு.”

“முடியாது, நா னிதுக்கு இணங்கப்போறதில்ல” என்று கரீம் திரும்பவும் கத்தினான்.

“கரீம் ஆத்திரப்படாதே. இப்படியான நேரத்தில் தான் புத்தியோட நடக்கவேணும். முதலாளி ஒனக்கு தீங்கு செய்யமாட்டார்” என்று நொத்தாரிசு கரீமுக்குப் புத்தி புகட்டினார்.

கரீம் சற்றுத் தணிந்து மௌனியாக நின்றான். மரைக் கார் மேலுந் தொடர்ந்தார்.

காணிய நீதான் சீவியபரியந்தமும் செய். பெண்சாதி ஒப்பினல கையெழுத்துப் போட்டுது. நீயும் சாக்கியாக கையொப்பத்தப் போட்டுடு.

“எனக்குத் தலைவலிக்குது. நீங்க இஸ்டம் போல செய்யுங்க. நான் வாறன்”

கரீம் அவன்பாட்டுக்கு வெளியேறினான். முதலாளி உதிர்த்த வெற்றிச்சிரிப்பு அவன் செவியைத் தீண்டத் தவறவேயில்லை.

“என்ன கரீம் ஆழ்ந்த யோசனை?”

கரீமுக்கு எதிர்த்திசையில் சைக்கிளில் வருகிறார் உபாத்தியார். அவர் கூறிய வார்த்தைகள் அவன் சிந்தனையைக் கலைத்தது.

“ஓம்சேர் நீங்க சொன்னதில் உள்ள உண்மை இப்ப புடிபட்டுடுட்டு. இப்ப அவசரமாப் போறன். மறுகா வந்து ஒங்களக் காணுறன்.”

கரீம் விறுவிறென்று நடக்கிறான். கிழவன் காசீமுக் குத் துடிக்கத் துடிக்க அடித்ததை நினைத்துப்பார்க்கின்றான். அவன் நெஞ்சை யாரோ கோடாரி கொண்டு பிளப்பது போ லிருந்தது. பொங்கிவந்த அழுகையை அவனால் அடக்கமுடிய வில்லை .

அவனது விசிப்பு கச்சானோடு போட்டிபோடுகிறது.

கரீம் பாதையின் வளைவான இடத்துக்கு வந்துவிட்டான். தகைந்து நின்று நாலாபக்கமும் பார்க்கிறான். சில வண்டுகள் ஆவேசங்கொண்டு இரைந்து தள்ளுகின்றன. கச்சான் காற்று காட்டுமரங்களைச் சுழற்று சுழற்றென்று சுழற்றுகிறது.

கோடாரியை எடுத்து பாதையோரத்தில் நின்ற மர மொன்றை மளமளவென்று தரிக்கிறான். மரம் மறமறத்துக் கொண்டு பாதையின் குறுக்கே சாய்கிறது.

அதேநேரம் காரும் வந்து பிரேக்போட்டு நிற்கிறது. கரீம் பாய்ந்துபோய் காரின் கதவைத் திறக்கிறான். பின் சீட்டிலிருந்த முதலாளி தங்கமரைக்கார் அடுத்த பக்கத்துக் கதவைத் திறந்து கொண்டு காட்டிலே பாய்ந்தார். கரீம் நொத்தாரிசின் கையிலிருந்த தோற் பையை ‘லபக்’ கென்று பறித்து அதைத்திறந்து உள்ளேயிருந்த அத்தனை காகிதங் களையும் கொளுத்திக் காற்றிலே பிடித்தான். செந்தீயின் நாக்கு அவற்றைச் சுட்டெரித்தது.

– தாமரை 1971

– மருதூர்க்கொத்தன் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1985, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, கல்முனை (இலங்கை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *