கொன்றவை போம் என்று

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 15,379 
 
 

வாசலில் திரும்பவும் அந்த சத்தம் கேட்டது, கிர்ரக் கிர்ரக் என்ற மெலிதான சுரண்டல் சத்தம். கூடவே குழைவான மியாவ் சத்தம். இன்றோடு இது நாலாவது நாள், இந்தப் பூனைக்குட்டி வந்து கதவை பிராண்டுவது. வழக்கமாய் பூனைகள், மனிதர்களுடன் சிநேகமாய் இருப்பதில்லை, வீடு மட்டும் தான் அதற்கு சிநேகம். ஆனால் இந்த பூனைக்குட்டி வித்யாசமாய் நாய்க்குட்டி போல பழகுகிறது. மூணு நாளா காலைல இதே நேரத்துக்கு வந்து கதவைப் பிராண்டுகிறது இது போல… ஒரு நாள் வைத்த பால், இவன் மனைவியின் மடி, சோபா என்று மாறி மாறி தூங்கியது, சொகுசு கண்டு விட்டது போல. உரசி உரசிச் செல்லும் அது விதவிதமான சத்தங்கள் செய்யும் பல்குரல் வித்தகன் போல. பூனைகள் ஆயிரம் விதமான சத்தமிடும், நிறைய கள்ளத்தனங்கள் பழகும் என்பது எவ்வளவு உண்மை என்று இவனுக்குத் தோன்றும். விதவிதமாய் சம்பாஷிக்கும் பாஷைகள் இவன் மனைவிக்குத் தான் புரியும், இப்போ பசிக்குது, தூக்கம் வருது, கக்கா பண்ணப்போகுது மாதிரி. உள்ளே நுழைந்த பூனைக்குட்டி மியாவ் என்று கத்திக் கொண்டே அவளிருக்கும் படுக்கையறைக்குள் ஓடி அவளைத்தேடியது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை, சர்ச் போயிட்டு, அப்படியே மதிய உணவும் முடித்து விட்டு வரும்போது தான் இந்த பூனைக்குட்டியைப் பார்த்தது. சப்பைமுகமும் நீலக்கண்களும், புசுபுசு வாலும், பழுப்பு நிறக்கோடுகளுடன் வெள்ளை நிற கீழுடலும் பார்க்க அத்தனை கவர்ச்சியாய், பூனைக்குட்டி பிடிக்காதவர்களுக்குக்கூட பிடித்து விடும் ஒரு மென்பொம்மை போல இருந்தது. முதல் மாடி ஏறிவந்த பிறகு லேண்டிங் ஏரியாவில் ஒடுங்கி நின்று கொண்டிருந்த பூனையைப் பார்த்தபோது இவனுடைய மனைவி அதை பிடித்து தரவேண்டும் என்று அடம் பிடித்து விட்டாள், திடீரென்று அது ஒரு மாரீசனாய் மாறி விடுவது மாதிரி நினைத்துக் கொண்டே சிரித்தான். என்ன என்று கேட்டவளிடம் ஒன்றுமில்லை என்று சிரித்து அதை பிடிக்கத் தயங்கிய படியே குனிந்தான். பிறகு மெதுவாய் அதனிடம் பேசிக்கொண்டே நெருங்கி பிடிக்க முயன்ற போது மூலையில் மாட்டிக் கொண்ட பூனைக்குட்டி அடி வயிற்றில் இருந்து காற்றுடன் கத்தி மிரட்டியது. மேலும் நெருங்கி அதைப் பிடித்த போது இவன் கையில் நகங்களை வெளிக்கொணர்ந்து கீறியது, ஒரு மாதிரி அபயக்குரலில் கத்தியது போலும், சத்தம் வித்யாசமாய் இருந்தது.

படிகளைத் தாண்டி இரண்டாவது தளத்தில் இருக்கும் வீட்டை அடைந்த போது வாசலிலேயே இவனுக்காகவா இல்லை பூனைக்குட்டிக்காகவா என்று தெரியாமல் காத்திருந்தாள். பூனைக்குட்டியை ஒரு கொஞ்சலுடன் வாங்கிக் கொண்டு, அதன் தலையில் இருக்கும் ரோமங்கள் கீழிருந்து மேலாக தடவி விட கிறங்கியது பூனைக்குட்டி! ஏங்க இதுக்க் என்ன பேரு வைக்கலாம்? என்ன பேரு வச்சா என்ன? அது என்ன நாய்க்குட்டியா கூப்பிட்டவுடனே வர்றத்துக்கு?ஏதோ சொல்லிக் கூப்பிடு, உனக்கு பூனைக்குட்டின்னு சொல்ல கஷ்டமா இருந்தா என்று அதில் ஏதும் விருப்பமில்லாமல் உள்ளே நுழைந்து கொண்டான். இதுக்கு பேரு கிஷ்மோ என்று தூக்கிக்கொண்டே வந்தாள், கிஷ்மோ இவனைப் பார்த்து மேலும் கிஷ்ஷியது… பயத்தில். அந்த கிஷ்மோ தான் இன்று வந்து கதவைப்பிராண்டுவது. திறந்த போது காலின் வழியே கத்திக்கொண்டே உள்ளே நுழைந்து அவளிடம் ஓடியது. பராஸா நின்றிருந்தான், காரின் சாவியை வாங்கிக் கொண்டு கீழே இறங்கினான், துடைத்து காரை கண்ணாடி போல வைத்திருப்பான், இவன் கீழே இறங்குவதற்குள்

இவனும் அலுவலகத்திற்கு ஆயத்தமாகி, மனைவியிடம் சொல்லிவிட்டு, படிகளில் இறங்கிய போது எதிரே வந்தார், கன்ஷ்யாம். ஜாம்போ… ஹவ் ஆர் யூ? ஃபைன் தாங்க் யூ அங்கிள்? என்ற பதில் உபசரணையுடன் அங்கிருந்து நகர்ந்தான். பெரிய கன்ஸ்டிரக்‌ஷன் கம்பெனி வைத்திருக்கிறார் இங்கே. உடன் பிறந்தவர்கள், உறவினர்களுடன் ஒரு ராஜாங்கமே நடத்தி வருகிறார். பெரிய கூட்டுக்குடும்பம் அவருடையது. அதிகாலையில் இவனும், இவன் மனைவியும் வாக்கிங் வரும்போது எதிரில் களைத்து வேர்த்து தொப்பை குலுங்க தன் மனைவியுடன் வருபவர், இந்த ஒருமாதமாகத்தான் உபரிப் புன்னகையில் தொட்டு ஆரம்பமான சினேஹம். நல்ல மனிதர்கள். இந்த காலனியில் இருக்கும் இந்தியர்களில் இவனையும் இவன் மனைவியையும் தவிர மற்ற எல்லோரும் குஜராத்திகள் தான். பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தில் கிசுமுவுக்கு மொம்பாஸாவுக்குமிடையே ரயில்வே லைன் போட வந்தவர்கள். அப்படியே தங்கிப் போனார்கள். பெரும்பாண்மையான தொழிலதிபர்கள், இந்தியர்கள் அதிலும் குறிப்பாய் குஜராத்திகள். முஸ்லீம் குஜராத்திகளும் இருக்கிறார்கள் இங்கே, அவர்கள் கச்சில் இருந்து வந்தவர்கள், நூறு வருஷத்துக்கு மேலாக இருப்பவர்கள், தங்களை இந்தியர்கள் என்று சொல்லமாட்டார்கள், ஏசியன்ஸ் என்று தான் சொல்வார்கள்.

இவன் இந்தியாவில் இருந்த போது அதிகாலையில் எழுந்தவுடன், இவன் மனைவியுடன் வாக்கிங் போயிட்டு வருவது வழக்கம். கென்யா வந்த புதிதில் வாக்கிங் போறது எவ்வளவு பாதுகாப்பான விஷயம் என்று தெரியாததால், நிறைய நாட்களாய் வாக்கிங் போகாமல் வீட்டிலேயே இருந்து விடுவார்கள். கொஞ்சம் ஊர் பழகியதும், அலுவலகத்தில் இருப்பவர்களின் தைர்யத்திலும், இந்த காலனிக்குள் வாக்கிங் போவது ஆரம்பமானது. காலை வாக்கிங் ஆரம்பித்தவுடன் மனசுக்குள் கொஞ்சம் நம்பிக்கையும், இலகுதண்மையும், அவனுக்குள் வந்தது. வாக்கிங்க் போவதன் மூலம் எதிரில் கடக்கும், சக வாக்கர்களில் தான் புதிது புதிதாய் இது போன்ற நட்பும், உறவும் கிடைத்தது இவனுக்கும் இவன் மனைவிக்கும். இவன் மனைவி வெகு இயல்பாக அவர்களுடன் ஒட்டிக்கொண்டாள். இந்த குஜராத்தி இல்லத்தரசிகளிடம் பாலிவுட், சீரியல், சமையல் என்று ஹிந்தியில் பேசியவுடன், எல்லோரும் கொண்டாடும் நபராகி விட்டாள், இவன் மனைவி. அது இவனுக்கு கொஞ்சம் வசதியாய் இருந்தது.

முதலில் கென்யா வருவதாக முடிவு செய்தவுடன் நிறைய நலம் விரும்பிகள் அங்கேயா போறீங்க? அங்க பாதுகாப்பே கிடையாதே! என்று பயமுறுத்தினார்கள். ஆனாலும் வேறு பல காரணங்களால் இங்கு வர இவன் முடிவெடுத்தான். இவன் மனைவிக்கும் விசா கொடுப்பதாய் கம்பெனி சொன்னவுடன், இதர வசதிகள் பற்றி பேசியவுடன் இவன் மனைவி போய்ட்லாங்க டாலர்ல சம்பாதிக்கலாம்… நானும் டீச்சர் வேலைக்கு டிரை பண்ணுறேன், அங்க ஈசியா வேலை கெடக்கும், இண்டியன்ஸ்னா அங்க ரொம்ப மரியாதையா நடத்துவாங்களாம் என்று அவளுக்கு இன்டர்னெட்டில் கிடைத்த விஷயங்களை கொண்டு அடுக்க அது இவனுக்கு கிளம்ப போதுமான காரணமாய் இருந்தது. இவன் இருப்பது மொம்பாஸாவில், நைரோபியை விட மொம்பாஸா பாதுகாப்பானது. மொம்பாஸாவில் குற்ற எண்ணிக்கை குறைவு, அங்கொன்றும் இங்கொன்றுமாக குற்றங்கள் நடைபெறுவது உண்டு, மற்றபடி அமைதியான ஊர் இது.

இரண்டு மாதங்களுக்கு முன் நைரோபியில் வந்து இறங்கிய போதுதான் இவனுக்குத் தெரிந்தது, இந்தியாவின் வளர்ச்சியும், வசதிகளும். இம்மிகிரேஷனுக்காய் நின்ற போது இம்மிகிரேஷன் அதிகாரிகளின் ஏளனப்பேச்சும், பிற பணியாளர்களின் புன்னகையற்ற விருந்தோம்பலும், இவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது, இவன் மனைவியும் ஏர்போர்ட்டை பார்த்து மிரண்டு போனாள். தெனாப்பிரிக்காவிற்கு பிறகு அதிகமான சர்வதேச விமானங்கள் வந்து போகும் ஒரு ஏர்போர்ட்டின் நிலைமை இப்படி இருப்பது முகத்தில் அறைந்தது.

போயும் போயும் உங்களுக்குன்னு கிடைக்குது பாருங்க ஊரு… இருக்க இருக்க வாழ்க்கையில முன்னேறுவாங்கன்னு கேட்டிருக்கோம்… இங்க என்னடான்னா… பின்னாடி தள்ளுது… இருபது வருஷம்… உங்க கூடவே அலையணும்னு ஏந்தலையெழுத்து என்று தடாலென்று அவளுக்கு விருப்பமே இல்லாமல் இவன் இழுத்து வந்தது போல புலம்பினாள். இவனுக்கும் ஏன்டா இங்கே வந்தோமென்று, உடனே கிளம்பிப் போயிடலாமா என்றும் தோன்றியது. ஆனால் இத்தனை சம்பளம், இவ்வளவு வசதி இந்தியாவில் கிடைக்காது. காரும், வீடும், வேலையாட்கள், வரிபிடித்தம் இல்லா சம்பளம், அடர் பசுமை நிறைந்த பாதைகள் அங்கு இல்லை. அங்கு வாங்குவது போல மூணு மடங்கு. சத்தமில்லாமல், என்ஆர்ஐ அக்கவுண்டில் சேரும் பணம், இரண்டு வருஷங்களோ இன்னும் அதிகமாகவோ இருக்கும் பட்சத்தில் நிறைய சேக்க முடியும். அது அங்கு வாய்ப்பில்லை. இவளுக்கு வசதியும் வேண்டும், புலம்பவும் வேண்டும் என்ற வகையறியாத குழப்பம்.

மொம்பாஸா இறங்கியபிறகு கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது, முழுக்க முழுக்க இந்தியா போலிருக்கும் ஒரு ஊர். மனிதர்களை இடம்மாற்றினால், எந்தவொரு வித்யாசமும் இருக்காது. இந்தியாவின் எந்த ஒரு கடற்கரை கிராமத்தையும் ஒப்பிடலாம் இதனுடன். அதிலும் மொம்பாஸா, இந்திய பெருங்கடல் சூழந்த ஒரு தீவு, அழகிய தீவு. கோவா, கொல்லம் அல்லது கேரளாவின் ஒரு கடற்கரை சிறுநகரத்துடன், அழகாய் பொருந்தும், தென்னை மரங்களும், பச்சை படர்ந்த வெளிகளும் ஆங்காங்கே விரவிக்கிடக்கும் கடற்த்துகள்களும். வரவேற்றவன் சேரப்போகும் கம்பெனியில் நிர்வாக அலுவலன். துருத்திய பற்களும், மினுக்கும் கருப்பும், பிதுங்கிய விழிகளும் அவனுடன் எப்படி பேசுவது என்று யோசித்த போது, மவுனத்தை உடைத்து ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தான். கரிபூனி மொம்பாஸா… வெல்கம் டூ மொம்பாஸா என்றவன் அழகான முகமனுடன் காலம் தப்பிய ஆங்கிலத்தில் பேச உற்சாகமானாள் இவன் மனைவி.

அவனிடத்தில் நிறைய கூகிள் கேள்விகள் கேட்க, பதில் தெரியாத நேரங்களில் சிரித்து வைத்தான். கொண்டு வந்திருந்த பழைய ஒலம்பஸ் காமிராவில் முடிந்த அளவு படங்களை எடுத்துத் தள்ளினாள். இதை எங்கே கழுவ வேண்டும் என்ற கவலை அவளுக்கு இல்லை. வந்திருந்தவனின் பெயர் ஜெஃப்ரி.. ஆனால் அவனை அறிமுகப்படுத்தும் போது சொன்னது ஜோஃப்ரி என்று. இவனையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு கம்பெனிக்குப் போவதாகவும், அங்கிருந்து டிரைவரை மாற்றி விடுவதாகவும் கூற, இவனுக்கு எரிச்சலாய் வந்தது. பிரயாணக்களைப்பும், அலுப்பும், கசங்கிய உடைகளும் இப்படியே கம்பெனி வரை செல்வது உசிதமில்லை என்று சொல்லியபோதும், எங்கள் ஆங்கிலம், அவனுக்கு புரியாததாலோ என்னவோ ஏதும் சொல்லாமல் காரை செலுத்திக் கொண்டிருந்தான்

ஏர்போர்ட்டில் இருந்து செங்காம்வே, கம்பெனி இருக்கும் இடம் போவதற்கு ஜோம்போவில் இருக்கும் சேரிகளை கடந்து தான் செல்லவேண்டும். அரதப்பழசான சாலைகளில் துருத்திக் கொண்டிருக்கும் கற்களும், குழிகளும் ஒரு ஒட்டகச்சவாரியாய் எலும்புகளை குலுக்கி இடம்மாற்றியது போல் இருந்தது, இரண்டு பேருக்கும். இருபுறங்களிலும் சிதைந்த, ஏதோ மரத்தினால் செய்த கூடுகளின் மீது மண் ஒழுக்கி எழுப்பிய வீடுகள், சரிந்த கூரைகளில் உள்ளும் புறமும் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள். இடையிடையே இருக்கும் கடைகள், அதனுள்ளே இருக்கும் கல்லாவை சுற்றி எழுப்பப்பட்ட இரும்புக்கிராதிகளினால் ஆன தடுப்பு… எல்லா தொழில் இடங்களும் கட்டமிடப்பட்ட இரும்புகிரில் அல்லது கிராதிக்கம்பிகளினால் அடைக்கப்பட்டிருந்ததைப் பார்க்கும் போது இவர்களுக்கு மேலும் கலக்கமாய் இருந்தது. இவன் ஜெஃப்ரியிடம் கேட்டபோது, திருட்டு அதிகமாய் இருக்குமிடம் இந்த சேரிகளில் அதனால் தான் என்றான் ஆனால் ஊன்றி கவனிக்க எல்லாக்கடைகளிலும், அலுவலகங்களிலும் இது போன்ற கூண்டுகளில் தான் வாழ்கிறார்கள் என்று புரிந்தது. மேலும் அது பற்றிய விவரங்கள் ஏதும் சொல்லாமல் கம்பெனியை அடைந்தான் ஜெஃப்ரி.

பார்க்கவேண்டியவர்களை பார்த்துவிட்டு, குலுக்க வேண்டியவர்களிடம் கை குலுக்கிவிட்டு, மனைவியையும் டைரக்டர்களுக்கு அறிமுகப்படுத்தி விட்டு, பராஸா என்ற டிரைவர் வந்து இவர்கள் தங்குமிடமான நியாளி ஏரியாவிற்கு அழைத்துச் சென்றான். நியாளி ஏரியாவிற்கு செல்லும் வழி, இவர்களின் பயத்தை ஒருவழியாகப் போக்கியது, அழகான சாலைகள், ஒழுங்கான போக்குவரத்து. சினிமா காம்ப்ளெக்ஸ், இந்திய ஹோட்டல், பல்பொருள் அங்காடி என்று கோவைக்கு சமீபமாய் இருந்தது வசதிகளில். வழியெங்கும் எலக்‌ஷனுக்கான வேலைகள நடந்து கொண்டிருப்பதைக் காட்டும் போஸ்டர்கள், ஒலிபெருக்கி விளம்பரங்கள் கடக்கும் வாகனங்கள், மொம்பாஸாவின் மற்றோரு முகத்தைக் காட்டியது. பராஸாவை முதல் அறிமுகத்திலேயே இவர்கள் இருவருக்கும் பிடித்துவிட்டது. வார்த்தைக்கு வார்த்தை பாஸ்… யெஸ் பாஸ் என்பவன் வினோதமாய்ப்பட்டது.

இரண்டு மாதத்தில் அதிகம் பழகிவிட்டான் பராஸா. குடும்பத்தில் ஒருவனாய், இவர்களுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச் வருவது, மதியம் உணவருந்துவது என்று அதிகம் விரும்பும் டிரைவர் ஆனான். இவனால் வரமுடியாத சில நேரங்களில் இவனின் மனைவியை கடைகளுக்கு அழைத்துச் செல்வது, பார்லருக்கு அழைத்துச் செல்வது, உணவு வாங்கிவருவது என்று ஒரு நல்ல வேலையாளாய் இருந்தான். பராஸாவுக்கு கம்பெனியில் இருந்து கொடுக்கும் சம்பளம் போக, இவன் மனசுக்கு ஏத்தமாதிரி பணம் கொடுப்பது ஒரு வழக்கமாகி விட்டது. எவ்வளவு கொடுத்தாலும் சந்தோஷமாய் வாங்கிக் கொள்வான், கொடுக்காவிட்டாலும் சரி. காலையில் அலுவலகத்திற்கு அழைக்க வருபவனுக்கு காலை உணவு, இவன் மனைவி கையில் தான் இருக்கும்.

எலக்‌ஷன் மும்முரங்கள் எங்கும் தீவிரமாய் நடந்து கொண்டிருந்தது அப்போது. எலக்‌ஷன் டிசம்பர் இருபத்திஏழாம் தேதி என்று முடிவானது, ரிசல்ட் வர எப்படியும் நான்கு நாட்களாவது ஆகும் என்றும் சொல்லப்பட்டது. இரண்டே இரண்டு கட்சிகள் தான், இரண்டுமே இந்த முறை ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தன. அதனால், வழக்கமாய் இருக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை விட, தேர்தல் ஏற்பாடுகள் தான் நாடெங்கும் பிரதானமாய்த் தெரிந்தது. இந்த ஏற்பாடுகள் தீவிரமாக ஆக, பராஸா வேலைக்கு வருவது குறைந்து போனது. கம்பெனி கிறிஸ்துமஸ், நீயு இயருக்கு பத்து தினங்களுக்கு மேல் லீவு விட்டுவிட்டது ஒரு காரணமாய் இருந்தாலும், இவனுக்கு இன்னும் கென்யன் டிரைவிங் லைசன்ஸ் வாங்காததால், விடுமுறைக்காலங்களிலும் கூட பராஸா வருவதாய் ஒப்புக் கொண்டிருந்தான். ஆனால் கடந்த இரண்டு நாட்களாய் அவன் வரவில்லை. கிறிஸ்துமஸ் ஷாப்பிங் ஏதும் செய்ய முடியாமல் சிரமமாய் இருந்தது. இவன் மனைவிக்கு ப்ராஸா வேலைக்கு பெரிய குறையாய் இருந்தது. கிறிஸ்துமஸ் டெக்கரேஷன், கேக் செய்யத்தேவையான சாமான்கள் ஏதும் வாங்கமுடியவில்லை.

கென்யாவில் 1992 வருஷன் நடந்த எலக்‌ஷனின் போது ஒரு ரிசல்ட் வந்தபிறகு நிறைய கலவரங்கள் இருந்ததாக சொல்லப்பட்டது. இந்தியாவிலும் பீகார் போன்ற மாநிலங்களில் இது போல கலவரம் நடப்பதால் இவனுக்கு ஒரு பெரிய விஷயமாகப்படவில்லை. கிறிஸ்துமஸ் வந்தது, முடிந்தவரை நெருங்கிய நண்பர்களை மாத்திரம் அழைத்து விமரிசையாய் இல்லாமல் எளிமையாக கொண்டாடினார்கள். கிறிஸ்துமல் மாதிரியே இல்லை என்ற இவன் மனைவியிடம் அடுத்த வருஷம் நல்லாக் கொண்டாடலாம் என்று சமாதானம் செய்தான்.

எலக்‌ஷனும் ஒருவழியாக முடிந்தது, ஒன்றிரண்டு பூத் கேப்சரிங்க் மாத்திரமே, நைரோபியில் உள்ள சேரிகளில் பெட்ரோல் குண்டுகள் வீசி சில குடிசைகள் எரிந்தது தவிர வேற விரோத செய்திகள் இல்லை. டிசம்பர் முப்பத்தியொன்றாம் தேதி ரிசல்ட் அறிவிக்கும் முன்னரே, ஒரு கட்சியின் தலைவர் தான் தான் ப்ரெசிடெண்ட் என்று அறிவித்து, பதவிப்பிரமாணம் எடுக்க வெடித்தது கலவரம். எதிர் கட்சித்தலைவர், இது பொய்யான நிலவரம், தேர்தலில் முறைகேடுகள். தில்லுமுல்லுகள் நடந்துள்ளது எனவே தங்கள் கட்சியே வென்றது என்று பிரசங்கம் செய்ய, அவரின் சொந்த ஊரில் வெடித்த கலவரத்தில் பதவியேற்ற பிரசிடெண்ட் இனத்தை நோக்கி நகர்ந்தது கலவரம். அந்த இனத்தை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அரசியல் கலவரமாய் ஆரம்பித்த விஷயம் இனக்கலவரமாய் மாறிக் கொண்டிருந்தது. அழுத்தப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட இனங்களின் வெறுப்பிலும், துவேஷத்திலும் பிரளய நெருப்பு எரிந்தது எங்கும். பிரிட்டீஷ் ஆட்சியின் போது அந்த குறிப்பிட்ட இனம் ஆதிக்கத்தில் இருந்தது, அதனால் பிற இனத்தவர்கள் இடம்பெயர்க்கப்பட்டு அதில் தங்கள் பூர்வகுடியை இழந்தார்கள், விளைநிலங்களை இழந்தார்கள் என்ற எல்லா காழ்ப்பும், கோபங்களும் புரையோடிப்போன புண்கள். ரிப்ட் வேலி, நகுரா, நவிஷா பகுதிகளில் தீயென பரவியது கலவரம், உயிரோடு எரிக்கப்பட்டார்கள். கடைகள் சூறையாடப்பட்டனர், மொம்பாஸாவில் முஸ்லீம்கள் ஊர்வலம் போனார்கள், பெரிய பல்பொருள் அங்காடிகள் தகர்க்கப்பட்டன, கடலோர சிறு கிராமங்களில் இருந்த கட்சியைச் சேர்ந்த சேராத இளம் வயதினர்கள் தெருவில் கத்தியோடு திரிந்தார்கள். டயர்கள் கொளுத்தி குடிசை வீடுகளில் எறிந்தனர். 3500 பொதுமக்கள் இறந்தனர், 6 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். தெருவெங்கும் ரத்தமும், எரிந்த பிணங்களின் நாற்றமும் குமட்டிய சேரிகளில் ஓலங்கள் தீர்ந்த பாடில்லை.

யாரும் வெளியே போகவில்லை, போதுமான உணவில்லை. வேலைக்கு வரும் இசுலாமியப்பெண்ணும் பத்து நாளாக வரவில்லை. பூனைக்குட்டியையும் காணோம். இவனுடைய அலுவலகத்தை காலவரையின்றி மூடிவிட்டார்கள். வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று தகவல் சொல்லப்பட்டது. சரக்கு கொடவுன் எரிக்கப்பட்டது. தொலைக்காட்சியில் விட்டுவிட்டு வரும் செய்திகளில் வீடியோக்களில் ரிப்ட் வேலியில் உள்ள சேரிகள் தீவைத்து கொளுத்தப்படுவது காட்டப்பட்டது… பிபிசி ரிப்போர்டரிடம் தொலைக்காட்சி காமிராவின் முன்னால் கத்தி வைத்துக் கொண்டு ஆக்ரோஷமாய் பேசினான் ஒருவன். அவன் சிகப்புத் துணியை முகத்தை மறைத்துக்கட்டியிருந்தான். அவனுடைய பேச்சில் ஆக்ரோஷத்துடன் தெறித்த வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட இனத்தை/கட்சியைச் சேர்ந்தவர்களை தயங்காமல் கொல்வேன் என்று சொல்ல, அது சப்டைட்டிலில் ஓடியது. அவன் கண்கள் பராஸாவைப் போல இருப்பதாக இவன் மனைவி சொன்ன போது தான் கவனித்தான் இவன்.

— ராகவன் (http://koodalkoothan.blogspot.com/)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *