கொடுப்பவரெல்லாம் மேலாவார்…?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 2,437 
 
 

இன்னும் சரியாக ஒரு மணி நேரத்தில் மணிமாறனைப் பார்க்கப் போகிறேன்..!!!!

என்னுடைய பர்சனல் செக்ரட்டரி கனிகாவைக் கூப்பிட்டு எல்லா அப்பாயின்ட்மென்ட்டையும் கேன்ஸல் பண்ணிவிட்டேன்….

நான் ஒரு சாதாரண ஆளில்லை என்று இந்நேரம் யூகித்திருப்பீர்கள்.

ஆமாம்..இந்தியாவிலேயே பேர் சொல்லும் பத்து கம்பெனிகளில் ஒன்றான ‘ நிரவதி ஃபார்மா ‘ வின் M.D. ..CEO…

மருந்துக் கம்பெனிகளில் நம்பர் ஒன்…ஏழு நாடுகளுக்கு ஏற்றுமதி.. இதைத் தவிர சில்லறைக்
கம்பெனிகள் நிறைய… எனக்கே மறந்து போகும் அளவுக்கு…..

நிரவதி என் மனைவிதான்.. அவள் கொண்டு வந்த ஐஸ்வர்யம் தான் எல்லாம்…

என்னுடைய பங்கு என்ன என்று கேட்கிறீர்களா….?

என்னுடைய கம்பீரமான தோற்றம்…(ஆறடிக்கு கொஞ்சம் மேலே) அசாத்திய மூளை (பள்ளியிலும், கல்லூரியிலும் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு சுலமில்லைதானே….!!)
அப்புறம் என் பெயருக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டிருக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் MBA…

இது போதாதென்று நினைப்பவர்களுக்கு…எனது பேச்சு சாதுரியம்… கொஞ்சம் குயுக்தி புத்தி.. ஏகப்பட்ட சுயநலம்… துணிச்சல்.. பேராசை… அயராத உழைப்பு…எல்லாம்.. எல்லாம்…

ஆனால் நட்பென்று வந்து விட்டால் எல்லாவற்றையும் தூக்கி போட்டு விட்டு முதல் ஆளாய் நிற்பேன்.. நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நிறையபேர் இல்லைதான்..

ஆனால் மணிமாறன் என்ற பெயரைக் கேட்டால் உச்சி முதல் பாதம் வரை ஒரு சிலிர்ப்பு வரும் பாருங்கள்…!

கண்ணன்…. குசேலன். …. நட்பையும் தாண்டி…புனிதமானது…. புனிதமானது…!

யார் கண்ணன்.. யார் குசேலன்…..?

போகப் போக புரியும்…!

என்னுடைய பெயரை சொல்லவேயில்லையே…‘ராமச்சந்திரன் கிருஷ்ணன்‘ சுருக்கமாய் ‘ராம்கி’.

******************************

மணிமாறன்….

என்னுடைய ஒரே ஆத்மார்த்தமான நண்பன்.. மற்றவர்கள் எல்லாம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உபயோகித்து தூக்கி எறியப்படும்’ use and throw ‘ ரகம் தான்…

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் … பள்ளி இறுதி ஆண்டுவரை நானும் மணிமாறனும் நகமும் சதையும்…

மணிமாறனின் தாத்தா காரைக்குடியில்..பாதி இடத்தை வளைத்துப் போட்டவர்…

அந்த காலத்தில் பர்மாவில் போய் குடியேறி.. பின்னர் காரைக்குடி வந்து செட்டிலான பாட்டன்.. பூட்டன் சொத்துக்கெல்லாம் ஒரே ஆண்வாரிசு..

தரையெல்லாம் இத்தாலியிலிருந்து வரவழைக்கப்பட்ட பளிங்கு கற்கள்.. பர்மா தேக்கு மரம் எங்கும் தூண்களாய் மாறி நிற்கும் அழகு.. சுமார் முப்பது அறைகள்.. கோபுரம் போன்ற முகப்பு…

இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும் என்று யோசிக்கிறீர்களா…???

சென்னையில் இருக்கும் ஒரு பெயர் பெற்ற பள்ளியில் இருவரும் முதல் வகுப்பிலிருந்து SSLC வரை கூடப் படித்தால் அவன் சரித்திம் தெரியாமல் போகுமா….????

மணிமாறனின் அப்பா காரைக்குடியிலிருந்து சென்னை வந்து சின்னதாக ஆரம்பித்த ரியல் எஸ்டேட் வளர்ந்து ஆலமரமாகி..விழுதுகளுடன் ‘

‘ பெரியநாயகி பில்டர்ஸ்’ என்று சென்னை முழுவதும் கிளைகள் ஊன்றிவிட்டது….

மணிமாறனும்.. வள்ளியும்தான்.. அளவோடு பெற்று வளமோடு வாழும் குடும்பம்….

நான் பிறந்த குடும்பத்தில் தரித்திரம் தலை விரித்து ஆடத்தொடங்கியிருந்த சமயம்..

எட்டு குழந்தைகள்.. முதல் நாலு பெண்கள்… இரண்டு பேரின் கல்யாணக் கடன் அப்பா தோளிலிருந்து இன்னும் இறங்கவில்லை…. அதற்குள் இன்னும் இரண்டு கல்யாண சுமையைத் தோளில் ஏற்றிக் கொள்ள முடியாமல் தவித்த நேரம்…..!!! என்ன குசேலன் கதை சாயல் அடிக்கிறதா…?

அப்பா ‘பெரியநாயகி பில்டர்ஸில் ‘ கணக்குப் பிள்ளையாகச் சேர்ந்தார்..கை சுத்தம்.. இல்லையென்றால் செட்டியார் கம்பெனியில் வேலை பார்க்க முடியுமா…?? அப்பாவை அண்ணாமலைக்கு ரொம்ப பிடித்து விட்டது..

அப்பாவுடன் சில சமயம் ஆஃபீசுக்கு போகும்போது மணிமாறன் பழக்கமானான்.

‘சின்ன செட்டி…!’

***

நாலு வயதில் நான் கணக்கு போடும் திறமையைப் பார்த்து வியந்த செட்டியார் என்னை மடியில் தூக்கி வைத்துக் கொள்வார்..

“மணிமாறா.. வாங்க ஐய்யா……!!!”

அவனையும் ஆசையாய்க் கூப்பிட்டு பக்கத்தில் உட்கார வைப்பார்..

“மணி..ராமு பயலப் பாரு.. ‘ஊங்’ க முந்தி என்ன மாதிரி கணக்கு போடறாரு… நீயும் கத்துகிடணும்..போயி ஆய்த்தாகிட்ட சொல்லி பலகாரம் குடுக்கச் சொல்லு..தின்னுபோட்டு ராமுகிட்ட கணக்கு கத்துகிடுதியா..?? போங்க..உள்ளார போய் முதல்ல பலகாரம் சாப்பிடுங்க..!!!?

ஒருநாள் செட்டியார் அப்பாவிடம் ஒரு ஃபார்ம் கொண்டுவந்து கொடுத்து..

“ஐயரே…இதக் கொஞ்சம் ரொப்பிக் குடுங்க..பையன பள்ளிக்கூடத்தில சேத்தணுமில்ல… இந்தசித்திரயில ஆறு முடிஞ்சிருச்சில்ல…

இந்த ஊரிலையே வச்சு பெரிய பள்ளிக்கூடம்.. இடம் கிடைக்கிறது அம்புட்டு சிரமமாமில்ல…??? உங்க கையாலா எது செஞ்சாலும் நெறக்குமே…!!!”

வாயைத் திறக்காமல் அப்பா மணிமணியான கையெழுத்தில் நிரப்பிக் கொடுத்தார்…

மறுபடியும் இன்னொரு ஃபாரத்தை தூக்கி அவர் முன் போட்டார் செட்டியார்..

“என்ன மறுபடியும்…?? நானு எழுதினதில ஏதாவது தப்பு…
கிப்பு..??”

“தப்பா…உங்கவேலையிலேயா…??ஐயரே.. உங்களுக்கு மறதி இல்லைன்னு நம்பிக்கிட்டு இருந்தேனே ..அதுதான் தப்பு…!

உங்களுக்கு ஒரு மவன் இருக்கானில்ல..பேரு ராமச்சந்திரன்..வயசு ஆறு.. என்ன நியாபகம் இருக்கா?”

“அதுக்கென்ன இப்போ….???”

“அவன பள்ளிக்கூடம் சேத்தணும்னு தோணலியா…??”

“அந்த அளவுக்கு நான் யோசிக்கல..ஃபீஸூ கட்டி சேக்கிற நிலைல இப்போ இல்ல..கவர்மென்ட் பள்ளிக்கூடம் வேண்டாம்.. இன்னும் இரண்டு வருஷம் கழித்து பிரைவேட்டில சேத்துக்கலாமுன்னு வீட்ல சொல்லிட்டாங்க..இப்ப என்ன அவசரம்….???”

“நல்லா.. சொன்னீங்க போங்க… நல்ல புத்திசாலி பிள்ளைய பெத்து வச்சிருக்கிற அப்பன் பேசுற பேச்சா இது….ராமுவுக்குத்தான் இந்த விண்ணப்பம்..

இரண்டு பேரும் ஒரே பள்ளிக்கூடத்தில் ஒண்ணா சேந்துதான் படிக்கப்போறாங்க…செலவு பூரா என்னுது.. எனக்கு இரட்டப் பசங்கன்னு வெச்சுகிட்டா போச்சு….”

காலில் விழுந்து கும்பிடப்போன அப்பாவைத் தூக்கி நிறுத்தினார் செட்டியார்…

அப்பா குசேலரானார்..அப்போ செட்டியார் தானே கண்ணன்….????

***

மணிமாறனைப் பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்..

இத்தனை சின்ன வயதில் அவனிடமிருந்த முதிர்ச்சி….
கடைசிவரை தன்னுடைய அப்பாதான் என்னைப் படிக்க வைக்கிறார் என்ற ஆணவமோ..
அகம்பாவமோ.பேச்சிலோ..செயலிலோ…வெளிப்பட்டதே இல்லை….

“டேய்..ராமுவ யாராவது கணக்கில முந்தி காட்டுங்கடா பாப்போம்…!!”

“ராமு தான் இந்த வாட்டியும் முதல் ரேங்க் வருவான்..பெட்டு கட்றீங்களா…??

என்னை யாருக்காகவும்.. எதற்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை….

மணிமாறனும் நன்றாகப் படிக்கக் கூடியவன் தான்… எந்த சந்தேகம் என்றாலும் என்னிடம்தான் வருவான்.. அவனுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன்..

இப்போதெல்லாம் இரண்டாவது இடம் மணிமாறனுக்குத்தான்..

ஒரு முறை அவன் கணக்கில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றதும் செட்டியார் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்…

“ராமு… எனக்கு எம்புட்டு சந்தோசமா இருக்கு தெரியுமா…?? மணி இந்த அளவுக்கு வருவான்னு நான் நெனக்கவேயில்ல அய்யா..இப்ப இருக்காப்பல என்னிக்கும் ஒத்துமையா இருப்பீகளா தம்பி…??”

அரையாண்டு தேர்வில் கணக்குகளெல்லாம் ஏனோ மிகவும் கடினமாயிருந்தன..

நூறுக்கு நூறுக்கு குறைந்து எடுக்காத எனக்கே சவாலாக இருந்தது..

முடிவுகள் வந்தபோது நானும்..மணிமாறனும் மட்டும்தான் பாஸ்..

நான் எண்பத்தைந்து … மணிமாறன் எண்பது…

விடைத்தாளைக் கொடுக்கும்போது ஆசிரியர் மணிமாறனை…

“மணி.. ஒரு நிமிஷம் நில்லுப்பா.இதோ பாரு உன்னோட விடைத்தாள்.. இரண்டு கணக்குக்கு சரியான விடைய போட்டிருக்க.. ஆனால் இரண்டையும் அடிச்சிடியே…இல்லாட்டி இந்த முறை உனக்கு நூத்துக்கு நூறு கிடைச்சிருக்கு மே…நீ ராமுவ முந்தியிருப்ப… ஏன் அப்படிச் செஞ்சுபுட்ட…??”

“கடைசி நிமிஷத்தில் தப்பா இருக்குமோன்னு தோணிச்சு ஸார்..ராமு எப்பவுமே ஃபஸ்ட்டுதான் ஸார்… அதுதான் எனக்கு சந்தோஷம்….!!!”

மதியம் இடைவேளைபோது நான் மணியிடம் பேசவேயில்லை..

“டேய்..ராமு.. என்னடா .மொகத்த திருப்பிட்டு உம்முன்னு உக்காந்திட்ட…எப்பவும்போல நீதானே முதல் மார்க்கு…??”

“மணி..ஏண்டா இப்படி பண்ணிபுட்ட? என்னிய என்ன முட்டாள்னு நெனச்சியா…??”

“டேய்.. உன்னயப் போய் முட்டாள்னு நினைக்கமுடியுமா…பள்ளிக்கூடத்திலேயே முதலா வரவன் எப்படிடா முட்டாளாக முடியும்…???”

கடகடவென சிரித்தான்… எனக்கு எரிச்சலாக வந்தது……

“மணி..இந்த சால்ஜாப்பு எல்லாம் செல்லாது… உண்மையைச் சொல்லு…!!!”

“நீ எதச் சொல்ல வரன்னு எனக்குத் தெரியும்..என்ன இப்ப…?? வேணுமின்னிட்டுதான் இரண்டு விடைய அடிச்சுப்புட்டேன்…

பரீட்சை எழுதும்போது உம்முகமே நல்லால்ல..சரி. உனக்கும் விடை தெரியாமஇருக்கும்போலன்னுதோணிச்சு… என் ராமுவ தோக்கடிச்சு என்னிக்கும் நான் முதல் ஆளாக இருக்க மாட்டேன்..இது சத்தியம்…!!”

இப்படி ஒரு நண்பன் உங்கள் யாருக்காவது இருந்தால் சொல்லுங்கள்…!

கண்ணன்.. சுதாமன் (குசேலன்..)நட்புக்கு இணையாகத் தோன்றவில்லையா….?

***

ஒரு முறை மணிமாறன் வீட்டில் ஒரு விசேஷம்..வழக்கப்படி அவர்களுடைய பூர்விக வீட்டில்தான்..

குடும்பத்தோடு போயிருந்த எங்களுக்கு ஒரே வரவேற்பு.. அரண்மனை போலிருந்த வீட்டைச் சுற்றிப்பார்க்கவே ஒரு நாள் போதாது..

பள்ளியிலிருந்து ஆசிரியர்களும்.. நண்பர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்..

மணிமாறனும் எங்களுடன், தனக்கும் வீட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரி சுற்றி வந்தான்..

இத்தனை சொத்துக்கும் ஏகபோக வாரிசு..இப்படிக்கூட ஒருவனால் இருக்க முடியுமா…??? ‘ என் வீடு.. என் அரண்மனை…’என்று தப்பித்தவறி கூட வாயில் வராமலிருக்க முடியுமா….???

தேர்வு முடிந்து அவரவர் வழியில் பயணம்..

மணிமாறனைப் பார்க்கவேயில்லை..

இருபது வருடங்களுக்கு மேலாகி விட்டது…

***

எங்களுடைய பள்ளி Reunion.

மகாபலிபுரத்தில்…

பரமபத விளையாட்டைப்போலத்தானே வாழ்க்கையும்.. சிலர் ஏணியில்..உயரே.. சிலர் பாம்பில் சறுக்கி விழுந்து பாதாளத்தில்..!!!!

ஏணியில் ஏறி உயரத்தைத் தொட்ட ஒரு சிலரில் நானும் ஒருவன்…. ஒரு சிலரைப் பற்றி குறிப்பிட்டு சொல்லும்படி ஒன்றுமில்லை…

ஆனால் இதெல்லாம் தாண்டியதுதானே பால்ய கால நட்பு….!!!!

நாங்கள் பள்ளிப்பருவத்தில் மறுபடி வாழ்ந்தோம்…

பசுமை நிறைந்த நினைவுகள்..

மணிமாறனை என் கண்கள் தேடின.. வரவில்லை..

சிதம்பரம் சொன்னான்..

“டேய் ராமு…நீ யாரத் தேடறன்னு சொல்லட்டா…? மணிமாறனத்தானே.. அவன போன வருஷம் ஒரு மெடிக்கல் எகஸிபிக்ஷன்ல பாத்தேன். இங்கதான்டா சென்னையில.. இருக்கான்..

எனக்கு ஃபிளைட்டுக்கு நேரமானதால் அதிகம் பேச முடியல.. போரூர் கிட்ட ஏதோ அட்ரஸ் சொன்னான்..

நல்லவேள.. ஒரு கார்ட் குடுத்தான்..இந்த function க்கு வரமுடியாதுன்னும் சொன்னான்…நீ நிச்சயம் அவன எதிர்பார்ப்பன்னு தெரியும்..இந்தா..பிடி…”

எனக்கு புதையல் கிடைத்தமாதிரி இருந்தது..

***

‘மணிமாறன்…. ஊன்றுகோல்….’

என்று இரண்டே வார்த்தையில் visiting card…

வீட்டிற்கு வந்து முதல் வேலையாக அவனைக் கூப்பிட்டேன்…உடனே எடுத்தான்…

இப்போது போரூரில் இருப்பதாயும்… எப்போது வேண்டுமானாலும் வரலாமென்றும் சொன்னான்..

அதே மணி…!!!

அதே நிதானம்..பொறுமை..கனிவு.!

ஒன்று மட்டும் சொன்னான்..

“ராமு..அப்பப்போ உன்னப்பத்தியும் உன் வளர்ச்சியைப் பத்தியும் செய்தில பாத்திட்டுத்தான் வரேன்….எங்கியோ போய்ட்ட ராமு.. உன்னப் பத்தி நெனைக்காத நாளில்ல… நேர்ல பேச நிறைய இருக்கு…!!எப்ப வர..???”

“. நாளைக்கே….!!!”

“வரும்போது பென்ஸ்..BMW..ன்னு எடுத்துட்டு வராத.. கொஞ்சம் சந்து பொந்திலெல்லாம் திரும்ப வேண்டியிருக்கும்.. நிச்சியம் ஒரு சின்ன காரு இருக்கும்..அதில வா..என்ன…???”

இதோ கிளம்பி விட்டேன்….

போரூரிலிருந்து மாங்காடு போகும் வழியில் எங்கு பார்த்தாலும் ‘ஊன்றுகோல்…’ என்றது பெயர்ப்பலகை….

அவன் எச்சரித்தது சரிதான்..
சின்னகாரே ‘இடிக்கவா….இடிக்கவா… என்று கேட்டுக் கொண்டே வந்தது….

அப்பாடா.. வந்துவிட்டேன்…..

கார் சத்தம் கேட்டதுமே வெளியில் எட்டிப்பார்த்தவன், அப்படியே ஓடி வந்து அணைத்துக் கொண்டான்..

தலைக்குப் பின்னால் அதே ஒளி வட்டம்.. இன்னும் பிரகாசமாக..
முத்துப்பல் தெரிய சிரித்தவன்…,

“ராமு…எவ்வளவு அம்சமா இருக்க தெரியுமா….??? இவ்வளவு தூரம் ஓட்டிட்டு வந்த…???உள்ள. வா…ரிலாகஸ்…”

கையைப் பிடித்து உள்ளே அழைத்துக் கொண்டு போனான்…

மணிமாறனனின் வீடு என்னுடைய வரவேற்பறை அளவுதான் இருக்கும்..
ஆடம்பரமான ஒரு பொருள் கூட இல்லாத அமைதியான.. எளிமையான வீடு….!!!!!

வீடு முழுவதும் அன்பால் நிரம்பியிருக்கும் போது வேறு என்ன வேண்டும்….????

இருபது வருட இடைவெளி….. எப்படி விட்ட இடத்திலிருந்து ஒரு தயக்கமும் இல்லாமல் தொடர முடிகிறது….??

ஆழ்ந்த நட்புக்கு மட்டுமே இது சாத்தியம்….

**************************

“மணி…அப்பா….???”

“அப்பாதான் எனக்கு ஊன்றுகோலா இருக்காரு ராமு….

அப்பாவுக்கு நான் அவரோட பிஸினஸ பாத்துக்கணும்னு ஆசை…. எனக்குத் துளியும் விருப்பமில்லை…

அப்பாவுக்காக செஞ்ச எத்தனையோ காரியங்களில இதுவும் ஒண்ணா இருந்துட்டு போவுதுன்னு கல்லூரில சேந்தேன்….

சென்னை பல்கலைக்கழகத்தில சோஷியல் சயின்ஸ் முதுகலை பட்டப் படிப்பின் போதுதான் அப்பாவுக்குள்ள புற்றுநோய்ங்கிற நண்டு நுழைந்தது…

அவருடைய பணம்..செல்வாக்கு ஒண்ணும் அது கிட்ட செல்லுபடியாகல…

ஒரு வருஷம் அவர் பட்ட துன்பம்..!!! அது நரகம்……

அவர் போறதுக்குள்ள அம்மா போய்ச்சேந்துட்டாங்க….

அப்பா போனதும் எனக்கு எதிலையுமே நாட்டமில்லை…பிஸினஸூம் நஷ்ட்டத்திலதான்..

எல்லாத்தையும் வித்து அப்பா..அம்மா..பேரில ஒரு சேரிட்டபிள் டிரஸ்ட் ஆரம்பிச்சேன்..

அதுல வர வட்டியில தான் ஊன்றுகோல் என் கையில வந்தது…

புற்றுநோய் வந்து குணமானவங்க ஒரு பக்கம்…ஆனா… ஒவ்வோர் புத்திலேர்ந்தும் எட்டிப் பாக்கும் பாம்பு மாதிரி … ‘எந்த புத்தில் எந்த பாம்பு இருக்குமோ ‘ன்னு பயந்து..பயந்து.. இதுக்கு மேல முடியாதுங்கிற அளவுக்கு.. தினம் தினம் செத்துப் பிழைப்பது கொடுமையிலும் கொடுமை……

அப்பப்பா.. அந்த வேதனை அனுபவிக்கறவங்களுக்கும்… பக்கத்தில் இருந்து பாத்துக்கிறவங்களுக்கு மட்டுமே புரியும்…”

உனக்கு ஆட்சேபம் இல்லைனா எங்கூட வரியா.. என்னோடே குடும்பத்த உனக்கு காட்டறேன்…!!”

***

போரூரை அடுத்து வீட்டுமனைக்காக அண்ணாமலை செட்டியார் வாங்கிப்போட்டிருந்த பத்து ஏக்கர் பூமி .. ,

புற்றுநோய் குணமாகாத நிலையில் மருத்துவத்தால் கைவிடப்பட்ட….
குடும்பத்தால் நிராகரிக்கப்பட்ட.. உதறித் தள்ளப்பட்ட… நூற்றுக்கணக்கான…இரண்டு முதல் எண்பது வரை.. ஆண்.. பெண்.. ஏழை..பணக்காரன்.. வித்தியாசமில்லாமல் வாழ்க்கையின் இறுதிப் படியில்..எந்த நேரத்திலும் விழுந்து விடலாமென்று தடுமாறிக் கொண்டிருப்பவர்களுக்கு…ஊன்றுகோலாய் மாறி… தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தது…..

“மணி என்னோட பத்து மாடி AC கட்டிடமோ… அஞ்சு நட்சத்திர ஓட்டல் வசதியோ தராத ஒரு மன நிறைவ..வாழ்க்கையோட அர்த்தத்த உன்னோட ‘ ஊன்றுகோல்’ எனக்கு குடுத்திருக்கு…

பணம் சம்பாதிப்பது பெரிசில்ல..அது எப்படி மத்தவங்களுக்கு பயன்படப் போகுது என்பதுதான் உண்மையிலேயே பெரிய விஷயம்…!!”

ராமு தன் பெட்டியைத் திறந்து அவசர அவசரமாய் ஒரு செக் புத்தகத்தை எடுத்தான்…

“வேண்டாம் ராமு.. பணம் தாராளமா இருக்கு..குடுக்கிற மனசு இருக்கே ..அது போதும்..!”

“மணி.. என்னோட வாழ்க்கையே நீ போட்ட பிச்சை தான்… நான் அனுபவிக்கும் இத்தனை சொத்தும்.. சுகமும் என் மனைவி போட்ட பிச்சை..

நான் எப்பவுமே வாங்கியே பழக்கப்பட்டவன்…எனக்கும் கீழ இருக்கிறவங்கள நினைச்சுப் பார்த்ததேயில்ல. ப்ளீஸ்டா… எனக்கும் ஒரு சந்தர்ப்பம் குடு மணி…நான் குசேலனாகவே இருக்கணுமா…???

இப்போ என்னால.. என் பணத்தால சாதிக்க முடியாதது எதுவுமில்ல..
ஒரு நாளாவது கண்ணனாக மாற ஆசையாயிருக்கு…!!”

“ராமு..நீ தப்பா புரிஞ்சிகிட்டு இருக்க… குசேலன மட்டமான எடை போடாத….

கண்ணன் ஒரு விரல அசைச்சா சகல சம்பத்தும் அவன் காலடியில…

ஆனா குசேலன நினைச்சு பாரு… அவன் கையிலிருந்ததே ஒரு பிடி அவல்தான்..

அத பட்டினியில வாடும் குழந்தைகளுக்கு குடுத்திருக்கலாம்…

ஆனா கண்ணனுக்கு கொண்டுபோகணம்னு நினச்சான் பாரு…

ஒருத்தன் செல்வத்த குடுத்தான்.. ஒருத்தன் அன்பைக் கொடுத்தான்..

நம்மகிட்ட எது இருக்கோ அதக் குடுக்க யாரைக் கேக்கணும்…?

எங்கப்பா உன்னை படிக்க வச்சிருக்கலாம்..ஆனா நீ எனக்கு அறிவக் கொடுத்த..தன்னம்பிக்கய கொடுத்த.. எல்லாத்துக்கும் மேல உண்மையான நட்பக் குடுத்த…

உன் மனைவிக்கு நல்ல அந்தஸ்த்த குடுத்திருக்க..

உன் அறிவால தானே இதை சாதிக்க முடிஞ்சது..

உனக்கு முடிந்த போதேல்லாம் வந்து உன் நேரத்த குடு..அன்பக் குடு…

***

கண்ணன்.. குசேலன்.

ஒருத்தரே சில சமயம் கண்ணனாயும்..சில சமயம் குசேலனாயும் மாறமுடியும்னு நான் நம்பறேன்..எது இருக்கோ அதைக்குடுப்பவன் கை எப்போதுமே உயர்ந்துதானே இருக்கும்….!!!

ஒரு சமயம் நீ சுதாமன்.. நான் கண்ணன்.. நீயும் கண்ணனாகலாம்.. நானும் குசேலனாகலாம்…!!!

ஆனால் நம்ம நட்பு..எங்கப்பா கேட்டுகிட்டது போல..அது வாழ்க்கை பூரா தொடரணும்…!!! கண்ணன்.. குசேலன் போல….”

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு…… ஔவையார்

***

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *