கொச்சிக் கடையும் கறுவாக்காடும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 30, 2021
பார்வையிட்டோர்: 1,734 
 
 

(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“மாத்தயா…”

டாக்டர் இராஜநாயகம் திரும்பிப் பார்த்தார்..

ஹார்பர் தொழிலாளி அப்புஹாமி அங்கு நின்றுகொண்டிருந்தான்.

அப்புஹாமி ஏதோ சொல்ல விரும்பினான். ஆனால் வார்த்தைகள் மட்டும் கோர்வையாக வாயைவிட்டு வெளி வரத் தயங்கின. மீண்டும் “மாத்தயா……மாத்தயா……” என்று மட்டும் அழைத்தான்; கூப்பிட்டான்.

“என்னப்பா, என்ன விஷேசம்? என்ன சொல்ல வந் தாய்?” என்று நாற்காலியை அவன் பக்கம் திருப்பியபடியே டாக்டர் கேட்டார்.

தயக்கம். “மாத்தயா…தயவு செஞ்சி நம்ம ஊட்டுக்கு ஒருக்கால் வர்றதா? மவன் சுதுபண்டாக்கு ரெண்டு நாள் சொகமில்லை. அவனுக்கு வவுத்தாலே அடிக்குது. வாயிலே சத்தி வர்றாங், மாத்தயா. நமக்கு மிச்சாங் பயங். அது தான் நாங் வந்து பாத்தது.”- தனக்குத் தெரிந்த அரைகுறைத் தமிழில் இரந்து நின்றான் அப்புஹாமி.

டாக்டர் இராஜநாயகம் அலட்சியமாக அவனைப் பார்த்தார்.

“இந்தாப்பா, உன்னிடம் பத்து ரூபா இருக்கா? பத்து ரூபாய்! இருந்தால் நீட்டு வருகிறேன்.”

“மாத்தயா, நம்மகிட்ட ஒரு சல்லி கூட இல்லே. வாற கௌமை ஆபரிலே சம்பளங் கிடைப்பாங். நாங் தர்றது, மாத்தயா” – அவலக் குரல்.

“அதற்கு என்னை என்ன செய்யச் சொல்லுகிறாய்? மனிதனை வீணாக அலட்டாமல் போ. அடுத்த கிழமை சம்பளம் கிடைக்குமானால், அடுத்த கிழமையே பணத்தோடு வா. நான் வருகிறேன்.”

டாக்டரின் வார்த்தைகள் ஹார்பர் தொழிலாளியின் நெஞ்சைச் சம்மட்டியால் அடித்து நொருக்கியது.

***

இரண்டு நாட்களாக அப்புஹாமி வேலைக்குப் போக வில்லை. சுதுபண்டாவின் உடல் நிலைதான் அதற்கு முக்கிய காரணம். சுதுபண்டா , பாவம், ‘தாயைத் தின்னிப் பிள்ளை. திடுதிப்பென்று சுதுபண்டாவுக்கு உடம்பு சுகமில்லாமல் வருமென்று கனவு கண்டானா? அவனுக்கு ‘மேல் சுட்ட பொழுது, தந்தை அதைச் சாதாரணக் காய்ச்சலென்றே கருதினான். பக்கத்துத் தெருவிலுள்ள முனிசிபல் வைத்திய சாலைக்குக் கொண்டு சென்று காட்டி, மருந்து எடுத்துக் கொடுத்தான். மருந்து குணம் தரவில்லை யென்பது மட்டு மல்ல, கொழும்புப் பட்டணத்துப் பிரபல டாக்டரிட மல்லவா கொண்டு வந்திருக்கிறது?

பணக்காரருக்கு நித்திய நோய்கள் வரும். நோயாளி களாக இருப்பதில் அவர்களுக்கு ஒரு சுகம். புதுப் புதுப் பெயரில் அந்தச் சாதாரண நோய்கள் அழைக்கப்படும். அதைப் பற்றிப் பேசுவதிலும், கேட்பவர்களுக்கு ஆறுதல் சொல்வதிலும், அளவற்ற பெருமை அவர்களுக்கு.

ஆனால் அப்புஹாமியைப் போன்ற அன்றாடம் காய்ச்சி களுக்கு? அது அவர்களுடைய வாழ்க்கை என்ற ஒற்றைபடிப் பாதையில் நெருஞ்சிக் காட்டை யல்லவா வளர்க்கின்றது.

டாக்டர் பத்து ரூபாய்கள் சுளையாகக் கேட்கிறார். ஆனால் அவனிடம் தற்சமயம் பத்துச் சதங்கள் கூடக் கிடையாது. மளிகைக் கடைக்காரனிடமும், தேனீர்க் கடைக்காரனிட. மும் பொருட்களைக் கடன் சொல்லியே வாங்கி விடுவதைப் போல, டாக்டரிடமும் மருந்து கடனுக்கு வாங்கிவிடலாமென்று மாதச் சம்பளக்கார மனோபாவத்திலேதான் டாக்டரிடம் வந்தான் என்பது உண்மை.

டாக்டர், கையில் பணம், வாயில் மருந்து என்கிறார்.

பணம்?–

கடன் வாங்கமுடியுமா?

வழியில்லை, யார் நம்பித் தருவார்கள்?

‘களவு ? ஆபத்துக்குப் பாவமில்லையாம் ..சீ, உழைத்து வாழும் இந்தக் கரங்களா?’

அப்புஹாமியின் நெஞ்சம் எண்ணப் போராட்டச் சுழலில் சிக்கித் திணறிச் சோர்வடைந்தது. எப்படியாவது டாக்டரை அழைத்துச் சென்று மருந்து வாங்கிவிட வேண்டு மென்ற தந்தையுள்ளம் தவியாய்த் தவித்தது. பணப் பசையே இன்றி உலர்ந்த சருகான அவன், வாய்ச் – சாதுர் யத்தின் மூலமாவது…

“மாத்தயா…! மாத்தயா!…”

இரக்கத்தை யாசித்து நிற்கும் பரிதாப முகம். ஆனால் டாக்டர் அவனைப் பார்க்காமலே, “அட சீ! உங்களுக்கு என்ன கொள்ளை? உழைக்கிறதில் ஒரு பகுதியைச் சேமித்து வைக்கவேண்டாம்? வருத்தம் துன்பம் வந்தால் மட்டும் – ‘ஐயா, துரை’, மாத்தயா’ என்று எங்களிடம் வந்து பல்லைக் காட்டத் தெரியும்…சரி, சரி, போ…” – நீரில் அமுங்கிப் போனவனுக்கு, நீந்தக் கற்றுக்கொள்வதைப் பற்றி ஆற்றப்படும் பிரசங்கம்!

அப்புஹாமி மௌனமாக நின்றான். டாக்டரின் பொன் மொழி அவனுடைய காதில் உறைக்கவில்லை. அவனைப் பற்றிச் சட்டை செய்யாது, டாக்டர், ‘இந்து’ப் பத்திரிகையில் வெளியான நேருவின் சோஷலிசத் திட்டப் பேச்சுக்களை மிக மிக நுணுக்கமாகப் படிப்பதில் அப்படியே மூழ்கி…..

***

“டிரிங்.. டிரிங்… டிரிங்.”

டெலிபோன் மணி கணகணத்தது.

டாக்டர் பேப்பரை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, ரிஸிவரைக் காதில் வைத்தார். விரல்கள் பேப்பர் வெயிட் டுடன் விளையாடிக் கொண்டிருந்தன.

“ஹலோ …”

“ஹலோ!… யார் பேசுறது? டாக்டர் வீட்டில் இருக்கிறாரா?”

”யேஸ்…டாக்டர் ஸ்பீக்கிங். நீங்கள் யார்?”

“பரந்தாமன் …ஆம், பாரிஸ்டர் பரந்தாமன் பேசுகிறேன். கறுவாக் காட்டில் எனது பங்களாவிலிருந்துதான் பேசுகிறேன். இங்கேயொரு ஸீரியஸ் கேஸ்.. உடனே புறப்பட்டு வாருங்கள்.”

“யாருக்குச் சுகமில்லை?”

“ரொபினுக்குத்தான். வீடே களையிழந்திருக்கிறது. படுத்த படுக்கை. என் மிஸிஸ் துடியாய்த் துடிக்கிறாள் உடனே வர்றீங்களா?”

‘”அட்ரஸ்?”

“மந்திரி சில்வா அவர்களுடைய வீட்டிற்குப் பக்கத்துப் பங்களா?”

“சரி . இதோ , புறப்பட்டுவிட்டேன்.”

டாக்டர் புறப்பட்டுச் சென்றார். அப்புஹாமியை ‘ஏன் நாயே’ என்று கூடக் கவனிக்கவில்லை. கார் ‘வீர்’ என்ற அலறலுடன் புறப்பட்டு மறைந்தது.

அவன் டாக்டரின் கேட் தூணுடன் சாய்ந்து சிலையாக நின்றான். செய்வது என்ன என்றே புரியவில்லை. உலகமே நித்தியமான இருள் வெள்ளத்திற்குள் அமிழ்த்து விட்டதைப் போன்ற மனப்பிராந்தி…

***

காரிலிருந்து இறங்கி, வைத்தியப் பெட்டி சகிதம் கால்களில் வேகத்தைச் சேர்த்து, பாரிஸ்டர் பரந்தாமனின் பங்களாவிற்குள் நுழைந்தார் டாக்டர். டாக்டர் இராஜ நாயகம் – மிகவும் திறமைசாலி என்பது வெகு பிரசித்தம். கோப்பாயில் ஒரு புகையிலைக்காரனின் மகனாகப் பிறந்து, கடின வழியில் – படித்து முன்னேறி, இப்பொழுது கறுவாக்காட்டுப் பிரதேசத் திலிருந்து, எதற்கும் அவரையே அழைக்கின்றனரென்றால், அவர் இலேசுப்பட்ட டாக்டரா, என்ன ?

“குட் ஈவினிங்……”-பாரிஸ்டர் வரவேற்றார்.

“குட் ஈவினிங்! எங்கே ரோபின் இருக்கிறான். காட்டுங்கள்…….”

“வாருங்கள். மாடியில் இருக்கிறான்.”

இருவரும் மாடிக்குச் சென்றனர்.

அங்கே –

ஒரு அறையில் மெல்லிய துணியால் மறைக்கப்பட்டிருந்த தொட்டிலைச் சுட்டிக் காட்டினார், பரந்தாமன்.

தேவாலயத்தினுள்ளே நடந்து செல்கிறவரைப்போல, மிக அமைதியாக நடந்து சென்று, தொட்டிலை அடைந்தார் தொட்டிலை மறைத்திருந்த படுதாவை நீக்கிப் பார்த்தார்.

திகைத்துப்போனார் டாக்டர்.

அவருடைய முகம் கார்காலத்து வானாக இருண்டது. கறுத்தது.

ஹாலிவுட் நட்சத்திரங்களின் அந்தஸ்தினைப் பறைசாற்றும் நாகரிகச் சின்னமான குச்சு நாய்க்குட்டியொன்று, தொட்டிலில் படுத்திருந்தது.

“மிஸ்டர் பரந்தாமன், நான் மிருக வைத்தியனல்ல, மனிதர்களுக்கு மட்டும் வைத்தியம் செய்யும் டாக்டர்!” – வார்த்தைகளில், தான் அவமதிக்கப்பட்டுவிட்டதான எண்ணத்தின் சூடு புரையோடி இருந்தது.

அவருடைய வைத்திய அனுபவத்தில் புதிதாக ஏற்படும் நிகழ்ச்சி; அதிர்ச்சி.

“அது தெரியும் டாக்டர். ரொபின் வெறும் மிருகமல்ல; நாயுமல்ல! அது என்னுடைய உயிர். எப்படியாவது அதன் உயிரைக் காப்பாற்றுங்கள்.” என்று கண்ணீரும் கம்பலையுமாக, நாடகப் போஸ் கொடுத்து, இரந்து நின்றாள் தொட்டிலுக்குப் பக்கத்தில் நின்ற மிஸிஸ் பரந்தாமன்.

பரந்தாமன் தன் திருவாட்டியின் வாசகத்திற்கு ஊமைக் குழல் ஊதினார். அத்துடன் ஒரு பணக்கட்டைக் கொண்டு வந்து டாக்டரிடம் நீட்டினார்.

டாக்டர் பணத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை.

மிஸிஸ் பரந்தாமன் விக்கி விக்கி அழுதுகொண்டிருந்தாள்.

பரந்தாமன் பணக்கட்டைப் பலாத்காரமாக டாக்டரின் கோட்டுப் பைக்குள் திணிக்க முயன்றார்.

“தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள், பாரிஸ்டர் பரந்தாமன். இங்கே ஏராளமான மிருக வைத்தியர்கள் இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவரை அழைத்துக் காட்டுங்கள். நான் வருகிறேன்.” – என்று திரும்பினார்.

“டாக்டர் என் ரொபினைக் காப்பாற்றுங்கள்” என்று அம்மணி கதறியதை அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

***

கார் வீதியில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது..

‘என்ன மனிதர்கள்! ஒரு நாயின் சுகவீனத்தை இப்படிப் பெரிதாக்குகிஞர்களே. அமெரிக்க நாட்டுப் பணம் படைத்த சீமாட்டிகள் தங்கள் அன்பு நாய்களுக்கு வைரத்தாலும் இரத்தினத்தாலும் செய்யப்பட்ட விலையேறிய தோடுகளை அணிவித்து அழகு பார்ப்பார்கள் என்று வாசித்தபொழுது, நம்பவில்லை. மனிதத் தன்மையைக் கொல்வதற்கு ஏன் அமெரிக்கா? கறுவாக்காடு போதாதா?’. மனதைக் கிழித்துப் புறப்படும் சில நினைவுச் சிதறல்கள்.

***

கார் பங்களாவைச் சமீபித்தது. திரும்பும் நோக்கத்துடன், ஸ்டியரிங்கைத் திருப்பும் பொழுது –

‘வருவார், வருவார்’ எனக் காத்திருந்து, கடைசிச், சொட்டு நம்பிக்கையுமிழந்து, இனி, ஆண்டவன்மீது பாரத்தைப் போட்டு விடுவோம் என நினைத்து, தள்ளாடித் தள்ளாடி, தனது அங்க இயக்கங்களின் வேகத்தை இழந்த நிலையில் நடந்துகொண்டிருக்கும் அப்புஹாமி அவருடைய கண்களில் படுகிறான்.

அவனுக்கும் அவருக்குமிடையில், சற்று நேரத்திற்கு முன்னர்கூடப் பத்து ரூபா நோட்டு சுவரொன்றை எழுப்பியிருந்தது. கறுவாக்காட்டுப் பங்களாவில் அந்தச் சுவர் தகர்த்தெறியப்பட்டு, மறைவு விலகி, அப்புஹாமியை அப்புஹாமியாக நோக்க முடிந்தது. காரை, அப்புஹாமிக்குச் சமீபமாகச் செலுத்தி நிறுத்தினார் டாக்டர். காரின் ‘பிரேக்’ ஓசையைக் கேட்டு, வீதியின் ஓரத்திற்குத் துள்ளிக் குதித்தவன், காரில் டாக்டரைக் கண்டு வாயடைத்து நின்றான்.

டாக்டர் காரின் பின் கதவைத் திறந்தபடி, “இந்தப்பா! காரில் ஏறிக்கொள். உன் வீடு எங்கே இருக்கிறது” என்று கேட்டார்.

அவனால் ஒரு கணம் தன் கண்களையும் காதுகளையுமே நம்ப முடியாமல் இருந்தது. ஒரு வேளைச் சோற்றுக்கே ‘லாட்டறி’ அடித்துத் திரியும் ஒருவன், தனக்கு ‘சுவீப்பின் முதற்பரிசு கிடைத்துவிட்டதைக் கேட்கும் பொழுது ஏற்படும் ஒரு மலைப்பு அவனுக்கு ஏற்பட்டது. பின்னர் நிலையைச் சமாளித்துக்கொண்டு, “கொச்சிக்கடே, சோம வீரா லேன், மாத்தயா” என்று சொல்லிக்கொண்டே, காரில் ஏறிக்கொண்டான்.

***

டாக்டர் இராஜநாயகம், சுதுபண்டாவை நன்றாகப் பரிசோதித்து முடித்தார். நோயாளி ‘கிரிட்டிக்கல் கண்டிஷ’னில் – இருப்பது விளங்கிவிட்டது. இருப்பினும், தனது – நீண்ட வைத்திய அனுபவத்தில் அவர் அசைக்க இயலாத நம்பிக்கை பூண்டவர். ஓர் ஊசி மருந்து போட்டார்.

கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துவிட்டு, சற்று யோசித்த பின்னர், அருகில் கிடந்த, ஆசனப்பகுதியில் பிரம்புப் பின்னல்களெல்லாம் அறுந்துவிட்ட, ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தார்.

அப்புஹாமி டாக்டரையே, கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு நின்றான். “அப்புஹாமி! பயமில்லை. இன்னும் சற்று நேரத்தில் இன்னொரு ஊசிபோட வேண்டும். அதுக்காத்தான் காத்திருக்கிறேன். அது கொடுத்ததும் உன் மகன் கண் விழித்து விடுவான். நீ என் டின்ஸ்பென்ஸரிக்கு வந்து மருந்து எடுத்துக்கொண்டு வரலாம்” என்றார், ராஜ நாயகம்.

சோகம் கவிந்திருந்த அந்த முகத்தில் மகிழ்ச்சி கோடி காட்டுவதை டாக்டர் உணர்ந்தார். உள்ளூர மகிழ்ச்சி. வேலையினாலும், அதற்காக ‘உடலைக் கயிறாகப் பிழிந்து சிந்தும் வியர்வையினாலும், கறுத்த முகம். மழையின்றி வெடித்துக் கிடக்கும் வறண்ட நிலத்தைப் போன்ற வரட்சி குடிகொண்ட முகம். ஓர் அசைப்பில், ஊரில், தோட்டத்தில் பகலெல்லாம் கொத்திப் பாடுபட்டுத் தன்னை டாக்டராக்கி, ஆளாக்கிவிட்ட தன் தந்தையினுடைய சாயல் இருப்பதை அவதானித்தார். மனிதன், மனிதனை மனிதாபிமானத்துடன் நோக்கும் பொழுது, இனம்தெரியாத அன்புச் சங்கிலி பிணைப்பதை உணரமுடியும். அப்படியான ஒரு பிணைப்புத் தன்னை அந்தத் துறைமுகத் தொழிலாளியுடன்…

அப்புஹாமி மனத்திருப்தியுடன் உள்ளே சென்றான்…

***

நேரத்தைப் பார்த்து, கறுவாக்காட்டு பங்களாக்களுக்கே விசேடமாக எடுத்துச் செல்லும், விலையுயர்ந்த ஊசி மருந்தொன்றினைச் சுதுபண்டாவின் உடலுக்குள் செலுத்தினார். அவனுடைய முகத்தில் வியர்வை முத்துக்கள் அரும்ப ஆரம்பித்தன. அறையை நோட்டமிட்டுப் பார்த்தார். அப்புஹாமியைக் காணவில்லை. துவாலையொன்றைத் தேடினார். கிடைக்கவில்லை. உடனே, தனது கைக்குட்டையை எடுத்து, அவனுடைய முகத்தில் அரும்பிக் கொண்டிருந்த வியர்வைத் துளிகளையெல்லாம் துடைத்துக்கொண்டிருந்தார்.

அப்பொழுது –

சுதுபண்டா கண்விழித்தான்.

டாக்டர் நம்பிக்கையுடன் முறுவலித்தார்.

அவருடைய முகத்தில் அரும்பும் முறுவலைப் பார்த்து, அப்பொழுது அங்கு வந்த அப்புஹாமி மகிழ்வுற்றான்.

“மாத்தயா!”

“ஒன்றும் பயமில்லை. உன் மகன் விழித்துக்கொண்டான். சற்றுப் பொறுத்து மருந்து எடுக்க வா!” என்று தன் தோல் பெட்டியை மூடினார். கையில் தூக்கினார்.

“மாத்தயா! கொஞ்சங் பொறுங்…” என்று திரும்பவும் உள்ளே சென்றான் அப்புஹாமி.

திரும்பிய அவன், ஒரு கிளாஸ் டம்ளரில் தேனீர் கொண்டு வந்தான்.

“மாத்தயா! நீங்க மிச்சங் களைச்சது. தயவு செஞ்சு, இதைக் குடிங்கோ …….” என்று மிக விநயமாகக் கேட்டபடி, தேனீர்க் கிளாஸை டாக்டரிடம் நீட்டினான்.

டாக்டருக்குப் பழக்கமில்லை. சுத்தத்தைக் கடைப்பிடித்து, கொதி தண்ணீரில் கழுவப்படும் பீங்கான்களையே உபயோகிக்கும் அவர், அந்தத் தொழிலாளி வீட்டுக் குவளையின் பின்புறத்தில் நுதம்பிக் கொண்டிருக்கும் அழுக்கைக் கண்டதும்…..

ஆனால் மறுகணம் வாங்கிப் பருகினார். இனித்தது; அதில் சுவை இருப்பதை அனுபவித்தார்.

குவளையும் – தேனீரும் !

புறமும்-அகமும்!

கறுவாக்காட்டு நாயும் – கொச்சிக் கடைத் தொழிலாளி மகனும்!

அப்புஹாமிகளும், சுதுபண்டாக்களும், தோட்டத்தில் நிலம் கொத்தும் தன் தந்தையைப் போன்றோர்களும் நிறைந்த ஒரு உலகம் – மனிதர் மனிதர்களாக வாழும் ஒரு உலகம் அவர் மனக்கண் முன் எழுந்தது; விரிந்தது. கதிரையிலிருந்து எழுந்தார்.

“டிஸ்பென்ஸரிக்கு வா” என்று புறப்பட்டார்.

“சரி, மாத்தயா எனக்குப் படி கிடைச்சதுங் மோதல்லிலே உங்க பணங் தர்றது” என்று சொன்னவாறு கும்பிட்டான்.

“அப்புஹாமி! பணத்தினால் சிலவற்றை வாங்க முடியாது!” என்று சொல்லிக் கொண்டே, மனநிறைவுடன் காரைநோக்கி நடந்தார் டாக்டர் இராஜ நாயகம்.

இதயம் காற்றைப் போல இலேசாக இருந்தது.

– 8-5-1955 – தண்ணீரும் கண்ணீரும் – சரஸ்வதி வெளியீடு – முதற் பதிப்பு – ஜூலை 1960

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *