கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 10, 2013
பார்வையிட்டோர்: 32,847 
 

லாட்ஜிலிருந்து வெளியே வருவதற்கு ஒரு நூறு அடி இருக்குமா? அதற்குள் இவ்வளவு சொட்டச் சொட்ட நனைந்துவிட்டிருக்கிறேன். இரண்டே நொடிக்குள் சமர்த்தாகி, ‘நானா… மழையா?பெய்தேனா?’ எனக் கேட்டுக்கொண்டிருக்கிறது வானம்.

“எட்டு மணிக்குத் தானே வருவேன்னு சொன்னீங்க சார்?” – நெல்லையப்பன் பீடியை அவசரமாகத் தரையில் தேய்த்தான்.

“ஆமாம்…கிளம்பறதுக்கும் எப்படியும் எட்டு ஆயிரும்..ஆனா,ஒரு டீ குடிச்சாத் தான் எனக்குக் காலம்பறப் பொழுதே தொடங்கும்!”

“இந்தக் கடையிலயா சார்குடிக்கப் போறீங்க? வேணாம்சார்… மண்ணெண்ணெய் ஸ்டவ்வு. டீயிலயும் அதே நாத்தமடிக்கும். ஏறி உக்காருங்க… தெரு முனையில ஒரு கடை இருக்கு’” – படித்துக்கொண்டிருந்த பேப்பரால் சீட்டைத் துடைத்தான்.

கைவண்ணம்இயற்கையின் பேரழகுக்கு எதிர்ப்பதமாக இருந்தது சாலை. ஏழுமணிக்கே முழுதும் விழித்துவிட்டு இருந்தது. யாரையும் பற்றிக் கவலைப்படாமல் நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்ட டெம்போவேன், டிரைவர் வண்டியில் இல்லை எனத் தெரிந்தும் கோபத்தின் வெளிப்பாடாக பின் நின்றிருந்த வண்டிகளின் காதைக் கிழிக்கும் ஹாரன் ஜுகல்பந்தி, எண்ணெய் தேய்த்து மேலேறும் தொப்பைகள், ‘ஷாம்பு போடலாமா? சீயக்காய் போடலாமா?’ – கடைக்காரரிடமே சுகாதார ஆலோசனை பெறும் பெர்முடாக்கள், தலையில் முண்டோடும் ஈரம் ஒட்டிய உடைகளோடும் வெளியூர் தரும் சுதந்திரத்தோடு சாலை கடக்கும் பெண்கள், ஓடிக்கொண்டிருப்பதை மதிக்காமல் ஆட்டோவோடு ஒட்டி பலாச்சுளை விற்கும் உள்ளூர்க்காரர்கள்… சீசன் வந்தால் ஊருக்கே உயிர் வருகிறது.

“குளிப்பீங்களா சார்?”

“தெரியலை நெல்லை. வேலைக்குப் போயிட்டு வந்துதான் யோசிக்கணும். நடு ராத்திரியா போலாமா?”

“ராத்திரி பன்னெண்டு மணிக்குக்கூட கும்பல் இருக்கும் சார். ரெண்டு மூணு மணிக்கு கொஞ்சம் காலியாகும். ஐந்தருவி போயிரலாம் சார்…7&8 மணிக்கே ப்ரீயா இருக்கும்.”

“பாக்கலாம்.. ஐந்தருவின்னா வர வழிதான் இல்லியா? எதுக்கும் ஆபீஸ் போறப்பயெ ஒரு துண்டு எடுத்து வச்சுக்கறேன்…”

“இவன்கிட்ட டீ சூப்பரா இருக்கும். குடிச்சுட்டு வாங்க, வண்டி திருப்பி வைக்கிறேன்.”

“நீயும் வாயேன் நெல்லை.”

“வரேன் சார்… டேய் கன்னி…சாருக்கு எலை மாத்தி ஏலக்காய் தட்டிப்போடு. எனக்கும்” என்றான் டீக்கடைக்காரனைப் பார்த்து.

‘கன்னியப்பன் காபி ஹவுஸ்.’ வெளுத்துப் போகத் தொடங்கியிருந்தது ஃப்ளெக்ஸ் போர்டு. பந்தாவான பெயருக்கு பொருந்தாமல் இரண்டே பெஞ்சுகள் ஓங்கிவளர்ந்திருந்த ஆலமரத்தடியில். போட்டோவில் கன்னியப்பன் கேமராவை விட்டு 45 டிகிரி சாய்வாகப் பார்த்துக்கொண்டு கைகூப்பி வரவேற்றான். லோக்கல் அரசியல்வாதி ரிப்பனை கட் செய்தார் இன்னொரு போட்டோவில். ஆலமரத்தைச் சுற்றியாரிப்பன் கட்டியிருப்பார்கள்? விரை வீக்கம், இந்திரிய சுத்தம் செட் கி .45 ரூபாய் என்றது விளம்பரம்.

“யாரு நெல்லையா? வாப்பா…’சீசன் ஆரம்பிச்சா பாக்கியத் தரேன்’னு சொன்னே… சீசன் தான் வருது. காசைக் காணோம்?”

போட்டோவுக்கும் கல்லாவில் அமர்ந்திருந்த கன்னியப்பனுக்கும் சம்பந்தமே இல்லை. மூன்று நாள் தாடியும் வாயில் பீடியும். எப்படியும் 10 வருடம் முந்தைய புகைப்படம்.

“கஸ்டமர் முன்னால மானத்த வாங்காதே… எங்க போவுது உன்காசு! தங்கச்சி குழந்தைங்க எல்லாம் மேலுக்கு ஒண்ணுமில்லாம இருக்காங்களா?”

நிறையப்பேர் இல்லை. ஒருபெரியவர் ஓரமாகக் குந்திக்கொண்டு டீயை ஆற்றிக் கொண்டிருந்தார். பெஞ்ச் முழுக்க அடைத்துக்கொண்டு பேப்பர் படித்துக் கொண்டிருந்தான் ஒரு ஆள். சூழலுக்குப் பொருந்தாத பேண்ட், ஷ¨, பேப்பர் விளிம்பில் தெரிந்த நீலக்கலர் முழுக்கைச் சட்டை.

“கொஞ்சம் நகந்துக்கறீங்களா சார்?”

பேப்பர் மடிந்தது. இவனா! இந்த நாய் இங்கே என்ன செய்கி றான்?

அடுத்த மூலைக்குச் சென்று நின்றுகொண்டேன். காலையிலிருந்து இருந்த இனிமையான உணர்வு மனோகரைப் பார்த்ததும் காலாவதி ஆகிவிட்டிருந்தது. கோபம் மனதுக்குள் இத்தனை வருடங்களும் குறையாமல் வெறியாகக் கனன்றது. சுடச்சுட டீயை ஊற்றி வேறு ஒரு வலியால் வெறியைத் தணிக்க முயற்சித்தேன்.

“நெல்லை… சீக்கிரம் டீ சாப்பிடுங்க. கிளம்பலாம்.”

“நீங்க சந்தோஷ்தானே?” – என்ன தைரியம் இருந்தால் என்னு டன் பேச வருவான் இவன்.

அவனைக் கவனிக்காமல், “டீ, காபி மட்டும்தானா… இல்லை டிபனும் உண்டாங்க?” என்றேன் கன்னியப்பனிடம்.

“சந்தோஷ்… எப்படி இருக்கீங்க? டேம் ப்ராஜக்ட்டுக்கு தானே போறீங்க” – மனோகர் விடாப்பிடியாக என் கண்களைத் தேடினான்.

அதெப்படிடா உன்னால நல்லவன் மாதிரி நடிக்க முடியுது?

“நான் செஞ்சது தப்புதான் சந்தோஷ். ஆனா, நீங்க நினைக்கற அளவுக்கு பெரிய தப்பில்லை…”

எப்படியாவதுபேசவைக்க முயற்சிக்கிறான்… மாட்டாதே!

“எவ்வளவு ஆச்சுங்க?”

“உங்க ரிப்போர்ட்டை எடுத்து கவர்லே போட்டது நான்தான். ஆனா, நீங்க கையெழுத்து போடலைன்னு எனக்குத் தெரியாது.”

“நெல்லை, கிளம்பலாமா?”

“இப்ப என்ன ஆயிடுச்சு சந்தோஷ்… அந்த ரிப்போர்ட் என்னதுன்னு கம்பெனிலே நினைச்சுட்டாங்க… ஆனா, இப்ப நாமரெண்டு பேருமே அங்கே இல்லியே… இப்ப அந்த இன்சிடென்ட்னாலே ரெண்டு பேருக்குமே பாதிப்பு இல்லியே… எனக்கு மட்டும் என்ன ப்ரமோஷனா கொடுத்துட்டாங்க?”

உனக்கும் கிடைக்கலை தாண்டா… ஆனா, எனக்குக் கிடைச்சிருக்க வேண்டியதை நீ பண்ண வேலை கெடுத்துடுச்சே…

“கன்னியப்பன், மிச்சம் கொடுங்களேன்.”

“டேய், சாருக்கு ஒரு 92 ரூபாய் எடுத்துக்கொடு” – கல்லாவிலேயே உட்கார்ந்திருந்த கன்னியப்பனுக்கு ரூபாய் எடுத்துக் கொடுக்க அடியாளா? அப்போதுதான் கவனித்தேன்… கன்னியப்பன் சட்டையின் வலதுகை மடிப்புக்கலையாமல் தொங்கிக் கொண்டிருந்ததை. போட்டோவில் கை இருந்ததே!

மறுபடி தூறத்தொடங்கிவிட்டது. மனோகர் ப்ரீஃப்கேசை தலைக்கு மேல் பிடித்து ஆட்டோ விசாரித்துக்கொண்டிருந்தான்.

அப்பாடா.. இப்போதாவதுபுரிந் ததே என் கோபம்.

“நான் கிளம்பறேன் கன்னி… தங்கச்சியை கேட்டதா சொல்லு. சனி, ஞாயிறுல கோழி அடிச்சா சொல்லி விடு. வந்துடறேன்.”

நெல்லையப்பன் ஆட்டோ உறுமிக்கொண்டிருந்தது.

“ஓசி சோறுன்னா குடும்பத்தோட வந்துடுவியே… பாக்கி தீக்கற வழியப் பாரு.”

“ஏறுங்க சார்… ஏழரை ஆயிருச்சு.”

ஆட்டோவின் ரெக்ஸின் திரை வழியாகச் சிந் திய சாரலில் கோபம் கொஞ்சம் குறைந் தது.

“அந்த சார் உங்களுக்குத்தெரிஞ்சவரா சார்?”

மனோகர் இன்னும் ஒவ்வொரு ஆட்டோவாக குனிந்து கொண்டிருந்தான்.

“ஏன் கேக்கறே?”

“இல்லை, அவருக்கும் டேமுக்குதான் போகணுமாம். நான் புக்டுன்னு சொல்லிட்டேன்… சீசனா, ஒரு ஆட்டோவும் கிடைக்கலியாம்!”

“அவன் கஷ்டம் அவனுக்கு… அதை வேற நாம படணுமா?”

***
குளிக்க வசதியில்லாத பாத்ரூமில் ஒரு வழியாகக் குளித்துக் கிளம்பினேன். நெல்லை தயாராக இருந்தான்.

“போறப்ப அதே கடையில இன்னொரு டீ சாப்பிட்டுட்டு போகலாம் நெல்லை… ஆமாம், கேக்கணும்னு இருந்தேன், டீக்கடை கன்னியப்பன் உனக்கு உறவா?”

“ஆமாம் சார்.. பங்காளிங்க.”

“போட்டோவுல அவருக்கு கை இருந்திருக்கே.”

“ஆமாம் சார்.. குடும்பத் தகராறு… வெட்டு குத்து வரைக்கும் போயிருச்சு… அதிலதான் அவருக்கு கை போச்சு.”

“அடப்பாவமே… அப்படி என்ன சண்டை?”

“கன்னியப்பன் அக்கா கல்யாணத்துக்கு எங்களுக்கு முதல் பத்திரிகை வைக்கலை. இது பெரிசுங்களுக்கு மானப்பிரச்னை… இதைப் பேசப்போய் பேச்சு பேச்சா நிக்காம ஏறிக்கிட்டே போச்சு… நானும் அப்ப இளரத்தமா? எடுத்தேன் அரிவாளை…”

“நீதான் அவர் கையை வெட்டினியா?”

“அட விடுங்க சார்… அப்புறமா கன்னியப்பனுக்கு என் தங்கச்சிய கட்டிக்கொடுத்திட்டோம்… இதெல்லாம் இந்தப் பக்கம் சாதாரணம் சார்…”

கன்னியப்பன் டீக்கடையில் இன்னும் மனோகர் நின்று கொண்டிருந்தான். ப்ரீஃப்கேஸை தலைக்குக் கொடுத்திருந்தும் நனைந்திருந்தான். ஆட்டோவில் என்னைப்பார்த்ததும் பின்வாங்கி சாலையில் எங்கள் பின்னால் அடுத்த ஆட்டோவைத் தேடினான்.

“அவரையும் இந்த ஆட்டோவுல வரச்சொல்லுப்பா.”

மழை விட்டுவிட்டது. தெரு இன்னும் சுத்தமாகத் தெரிந்தது.

– 02-11-2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *