மாரிமுத்துவின் மானசீக அணி ஃபீல்டிங. எதிர் அணி வெற்றி பெற ஒரே பந்து இரண்டு ரன்கள்.
பந்து ஆகாயத்தை நோக்கி அடிக்கப்பட்டது!
மாரிமுத்து டீ ஆத்துவதை கூட நிறுத்திவிட்டு, டீக்கடை டிவி- யில் மூச்சடைத்துப் பார்க்க
பந்து பவுண்டரிக்கு அருகில் இறங்கி, அங்கு நின்றிருந்த அவனது கிரிக்கெட் ‘ஹீரோ’வின் கைகளில் விழுந்தது
அனைவரும் உற்சாக கூச்சலிட பந்து கையிலிருந்து நழுவி கீழே விழ, அணி தோற்றது!
ஆத்திரம் தாங்காத மாரிமுத்து, உடலில் தீயை பற்ற வைக்க, மறுநாள் தினசரிகளின் ஒரு மூலையில் செய்தியாக எரிந்து
போனான்.
”ரெண்டு பொம்பள புள்ளங்களை, நான் எப்படி கரையேத்த!”
அழுது கொண்டே குழந்தைகளோடு போகும் இடம் தெரியாமல் போயக் கொண்டிருந்தாள் மாரிமுத்துவின் இளம் மனைவி
நடுக்கடலில் மிதந்து கொண்டிருந்த அந்த சொகுசுக் கப்பலில் பாலிவுட்டின் ‘கனவுக்கன்னி’ கிரிக்கெட் ‘ஹீரோ’ மார்பில்
சாய்ந்து உளறிக் கொண்டிருந்தாள்
”டார்லிங் நீ அந்த கேட்சை மிஸ் பண்றவரைக்கும் நான் நினைக்கவே இல்லை. இப்படி ‘வேர்ல்டு டூர்’ வருவோம்னு! கிரேட் டீல்..!!
– ப.உமாமகேஸ்வரி (மே 2013)