கேட்க நினைத்த கேள்வி!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,245 
 
 

எங்கள் ஊருக்கு புதிதாக வருபவர்கள், அகலாங்கரையைப் பார்த்து மலைத்துப் போவர்.
“அடேங்கப்பா… கடலாட்டம் தண்ணி கிடக்கு… அதும், நாலு பக்கமும் படிக்கட்டு கட்டி, பார்க்கவே அழகாயில்ல இருக்கு…’ என்பர்.
பாளையக்காரர்கள் இங்கு வந்து வசித்ததாகவும், அவர்கள் கட்டிய கோட்டையும், குளமுமே அதற்கு சாட்சியென்றும் பேசிக் கொள்வர். கோட்டை, குளத்தையொட்டியே இருக்கிறது. ஆனால் சிதிலமடைந்து, மரமும், புதர்களுமாய் கிடக்கும். ஆடு, மாடுகள் மேய சிறந்த இடமாக இருந்தது.
அப்புறம், ரொம்ப காலமாய் ஒரு பேச்சு அடிபட்டது. குளத்துக்குள் சுரங்கப்பாதை ஒன்றை பாளையக்காரர்கள் அமைத்து இருந்தனராம். இன்னமும் இருக்கிறது என்றே சொல்வர். ஒரு முறை வடக்குத்துறையில் குளித்த குழந்தை ஒன்று, தண்ணீரில் மூழ்கி விட்டதாம். எவ்வளவு தேடியும் கிடைக்காமல், சாயங்காலம் தெற்குத்துறையில் கிடைத்ததாம். சுரங்கப்பாதையில் மாட்டி வந்திருக்கலாம் என்றே பேசினர்.
கேட்க நினைத்த கேள்வி!எது எப்படியோ, அகலாங்கரை, எங்கள் ஊரில் அடையாளச் சின்னமாகியிருந்தது. ஊரின் நண்டு சிண்டுகள் எந்நேரமும், குளத்தில் ஊறிக்கிடக்கும். எங்கள் அம்மாக்கள் கொடுக்கிற பாட்டை வாங்கிக் கொண்டு, தண்ணீரில் குதியாளம் போடுவோம். அப்போது, தீபாவளிக்காக எல்லாரும் தயாராகிக் கொண்டிருந்த தருணம். நானும், பாண்டிமுத்துவும் அகலாங்கரைக்கு கிளம்பினோம். வழியில் முருகனையும், சுகுமாறனையும் சேகரித்துக் கொண்டு போனால், தன்னாலேயே, சுருளியும் வந்து சேர்ந்து கொள்வான். சுருளியைத் தேடிப்போகும் அளவுக்கு, முக்கியமானவன் அல்ல.
யாருமில்லாமல், அத்தை வீட்டில் வளர்பவன், கிழிந்த டவுசரும், ஓட்டை பனியனுமாய் பல் தெரிய சிரிப்பான். அத்தைக்காரி போடும் கஞ்சியிலும், கூழிலும் கதை ஓடுகிறது. எப்பவும் நாங்கள் வெடிவெடிக்கையில், திரியைக் கிள்ளித் தருவது, சங்கு சக்கரம் டப்பியிலிருந்து ஒவ்வொன்றாய் எடுத்துத் தருவது என, சில்லுண்டி வேலைக்காக அவனை சேர்த்திருப்போம். ஆனால், நீச்சலில் கில்லாடி… உள்நீச்சலில் அவனை ஜெயிக்க முடியாது.
“லே பாக்கியம்… இரு, வெடிய காய வெச்சுட்டு வர்றேன்…’ என்றான் சுகுமாறன். நானும், பாண்டிமுத்துவும், அவனது வெடிக்கிடங்கை பார்வையிட்டோம். ஒரு கட்டு லட்சுமி வெடி, ஒரு பாக்கெட் சீனி வெடி, ஒரு டப்பா கம்பி மத்தாப்பு அவ்வளவே!
“டேய்… புஸ்வாணம் வாங்கலியா?’ என்றேன்.
“க்கும்… இதுக்கே நேத்து முதுகு பழுத்தது…’ அவன் பேப்பரில் பரத்திவிட்டு உள்ளே போய், தங்கச்சியிடம் சொல்லிவிட்டு வந்தான். “நல்ல வெயில்லே, முறுமுறுன்னு எடுத்துவெக்க சொல்லிட்டேன்…’
பாண்டிமுத்துவுக்கு, முகம் தொங்கிப்போனது. அவனுக்கு எப்பவும், கம்பி மத்தாப்பும், பொட்டுவெடியும் தான் வாங்கித் தருவர்.
எனக்கு மட்டும் என்ன வாழுது…. சித்தப்பா தயவில், இரண்டொரு ஆணவெடி கிடைத்தால் சந்தோஷம். மூன்று பேருமாய் முருகன் வீட்டுக்குப் போனோம்.
முருகனின் உடம்பெல்லாம், அவன் அம்மா எண்ணெய் தேய்த்துவிட்டு கொண்டிருந்தாள். தலைமுடியில் எண்ணெய் சொட்டியது.
“நாளைக்கு தானே தீபாவளி… எதுக்கு இன்னைக்கே எண்ணெய் தேச்சுவிடறீங்க?’ என்றேன். முருகன் அம்மா என்னைப்பார்த்து சிரித்தாள்.
“இவனுக்கு சூடு பிடிச்சுட்டது… ஒண்ணுக்குப்போனா எரியுதுங்கிறான். அதான்… சூடு தணிய…’
“டேய்… வெடி காய வெச்சுட்டியா?’ ரகசியமாய் கேட்டான் பாண்டிமுத்து.
“ம்… அப்பா ராத்திரிக்கு வாங்கியாருவாரு…’ என்றான் அவன்.
நாங்கள் கிளம்பினோம். ஒவ்வொரு வீடுகளிலும் வெடி காய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தோம். அப்போது அலறினான் முருகன்.
“அங்கு பாருடா சுருளிய…’ எதற்காக அலறினான் என்று புரியாமல், சுருளியை பார்த்தோம்.
அவன் வீட்டு வாசலில், பாய்விரிக்கப்பட்டு, என்னமோ காய்ந்தது. புளியோ, மிளகாயோ என்று தான் நினைத்தேன்.
அருகே போய் பார்த்தால், எங்கள் மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. ஆம்… பாய் முழுவதும் பட்டாசு! ஏதாவது கனவோ என்று கிள்ளிப் பார்த்தால், வலித்தது.
“டேய்… அது நிஜம் தாண்டா…’ என்றான் சுகுமாறன். சுருளி நின்றிருந்த காட்சியை என்னவென்று சொல்ல…
ஆயுத தளவாடங்களை காவல் காக்கும் மாவீரனைப்போல், கம்பீரமாய் நின்று கொண்டிருந்தான். “டே சுருளி… என்னடா இது?’
சுருளி பெருமிதமாக சொன்னான்…
“பட்டாசுடா எல்லாம் எனக்கு!’
எங்களால் நம்பவே முடியவில்லை. ஒவ்வொன்றாக எட்டிப் பார்த்தோம்; எடுத்துக் காட்டினான் சுருளி.
“இது, லட்சுமி வெடி ஏழு கட்டு; ஆனை வெடி அஞ்சு கட்டு, பாருங்கடா… அணுகுண்டு… பிரிசிடன்ட் வீட்டு கல்யாணத்துல உட்டாங்களே அந்த மாதிரி… ஆறு. இது சங்குசக்கர டப்பா, புஸ்வானம் இதுவே ஆறு டப்பா இருக்கு. டேய், அப்புறம் சீனி வெடி, எட்டு இருக்கு. கேப் ஏழுடா… பொட்டு வெடி, அப்புறம் மத்தாப்பூ, சரம், தவுசன்ட்வாலா, பாம்பு மாத்திரை, வெடி…’
நாங்கள் மவுன நிலையில் இருந்தோம்.
“தவுசண்ட் வாலா சரி, அது என்ன?’ என்று கேட்டான் முருகன்.
“பாட்டில்ல வச்சு வெடிச்சா, புஸ்சுன்னு வானத்துல போய் வெடிக்கும், ராக்கெட் வெடி.’
சத்தியமாய் சொல்கிறேன், ஏதாவது கயிறு இருந்தால், அந்த கணமே தூக்கு மாட்டி கொள்ளத் தயாராய் இருந்தேன்.
“இதெல்லாம் நிறைய வெலயாச்சே… உனக்கு எப்படிடா கிடைச்சுது?’ ஈனஸ்வரத்தில் கேட்டேன்.
“டேய்… இவன் நேத்து சேத்தியாதோப்பு போனானில்லா… அத்தையோட லாஸ்ட் பஸ்சில் வந்திருப்பான். எவனாவது பட்டாசு பார்சலை மறந்து வெச்சிருப்பான். அதை எடுத்துகிட்டு வந்திருப்பான்…’ அவசரமாய் சொன்னான் பாண்டிமுத்து.
“நீ வேற… சேத்தியாதோப்புல ஏதாச்சும் பட்டாசு கடை திடீர்ன்னு பத்தியிருக்கும். ஆளாளுக்கு எதையாச்சும் தூக்கிட்டுப்போயிடுவாங்கல்ல; அந்த மாதிரி, இவன் ஒரு அட்டைப்பெட்டியையே வெட்டியிருப்பான்…’ என்றான் முருகன்.
“எங்க திருடினானோ…’ என்று ரகசியமாய் சொன்னான் சுகுமாறன். ஆனால், எல்லாவற்றையும் கேட்டு, சுருளி சிரித்தான்.
பிறகு, எங்களை உள்ளே அழைத்துப்போனான். உள்ளே நாற்காலியில் முரட்டு மீசையோடு, கனகம்பீரமான உருவத்தோடு, பட்டாளத்து உடையில், ஒருவர் உட்கார்ந்து, டீ குடித்துக் கொண்டிருந்தார்.
அவர் பக்கத்தில் வாயெல்லாம் பல்லாக அத்தை…
“எங்க மாமாடா… பட்டாளத்திலேர்ந்து வந்துருக்காரு. பட்டாளத்துல கொடுத்த வெடிதான் எல்லாம். இவரைக் கூப்புடத்தான், நானும், அத்தையும் நேத்து சேத்தியாதோப்பு போயிருந்தோம்…’ என்று, கிசுகிசுத்தான் சுருளி.
அவர் கரகரத்த குரலில், “வாங்கடா பயலுகளா… என்ன, அகலாங்கரைக்கு ஆட்டம் போட போறீங்களா?’ என்றார்.
கட்டபொம்மன் படத்தில், சிவாஜி பேசுவது போல இருந்தது. நாங்கள் வெளியே ஓடியே வந்து விட்டோம்.
“டேய்… நான், சீக்கிரம் திரும்பி வந்துடுவேன். ரொம்ப நேரம் குதியாட்டம் போட மாட்டேன்…’ என்றான் சுருளி.
நாங்கள் பனைமரத்துப் பாதையில் நடக்க ஆரம்பித்தோம். இந்த உலகத்திலேயே சுருளியே போல அதிர்ஷ்டசாலி யாரும் இருப்பரா?
யானை, மாலை போட்டதனால், ராஜகுமாரி ஆன கதை கேட்டிருக்கிறேன். ஒரு பட்டாளத்து மாமா வந்து, ஒரே இரவில் சுருளியை அரசனாக்கி விட்டாரே… இந்த ஊரில் எல்லாரும் வெடிப்பதை, ஒற்றை ஆளாக சுருளி வெடிக்கப் போகிறானா!
நாங்கள், எப்போதும் ஏதாவது கதை பேசியபடி செல்வது வழக்கம். ஆனால், இன்றோ, அமைதியாகச் சென்றோம். சுருளி பேரானந்தத்தில் அமைதியாக இருக்க, நாங்களோ, பொங்கும் பொறாமையில் புழுங்கிக் கொண்டிருந்தோம்.
சாலையில் ஒரு மாட்டு வண்டி எங்களைக் கடந்தது. இரண்டு மாடுகளும், “கணகண’ வென்று மணியாட்டியபடி எங்களைப் பார்த்து சென்றன. பனைமர நிழலில் ஒரு பெண், கைக்குழந்தையோடு உட்கார்ந்திருந்தாள்.
சைக்கிளில் பெல் அடித்தபடி, எங்கள் முன் வளைந்து சென்றான் சிறுவன் ஒருவன். கூடு கட்டுவதற்காக, ஒரு காய்ந்த குச்சியைப் பற்றிக் கொண்டு, ஒரு காகம் பறந்து சென்றது. இவை எல்லாம் எங்களுக்கு தொடர்பு இல்லாதது போல் நடந்து கொண்டிருந்தோம்.
திடீரென, “”டேய்… பனம்பழம் வுழுதுதானே…” என்று நின்றான் முருகன்.
இரண்டு காய்ந்த பனைமட்டையோடு, பழம் சொத்தென்று விழுந்தது.
ஓடிப்போய் எடுத்து வந்தான் சுகுமாறன்.
நன்கு கனிந்த பனம்பழம். சொரசொரப்பான கறுப்பு மேற்புறத்தை பல்லால் கடித்து இழுத்தான். பளீரென மஞ்சள் பழம்… வாசனை எட்டூருக்கு இழுத்தது. அவன் ஒருகடி கடித்தபின், வரிசையாய் ஆளுக்கு ஒரு கடி கடித்தோம். எங்கிருந்தோ பலகாரம் சுடும் வாசனையும் வந்து கலந்தது.
“பாக்கியம்…’ கிசுகிசுத்தான் சுகுமாறன்.
“என்னடா?’ என்றேன்.
“இல்ல… நிஜமா சுருளிக்கா அம்புட்டு வெடியும்?’
நான் பல்லைக் கடித்தேன்.
“போடா…’ கைகளில் பனஞ்சாறு வழிந்து, காய்ந்தே விட்டது.
நாங்கள் அகலாங்கரை வந்தோம். பெரிய கடல் போல அகலாங்கரை வரவேற்றது.
படித்துறைகள் தோறும் ஜனங்கள் ஆங்காங்கே குளித்துக் கொண்டிருந்தனர்.
கூட்டமில்லாத துறை பக்கம் வந்தோம். எங்களுக்கு வழக்கமான உற்சாகம் வந்துவிட்டது. சட்டை, டவுசர்களை கழட்டி, சுருட்டி வைத்தோம்.
“அடடா…’ என்றான் முருகன்.
“என்னடா?’
“அரப்பு கொண்டார மறந்துட்டேன்…’ வெயிலில் எண்ணெய் மினுங்க சிலைபோல் காணப்பட்டான்.
“களி மண்ணை தேச்சுக்கோ…’ என்று சொல்லிவிட்டு, நான் குபீரென பாய்ந்தேன்.
என்னைத் தொடர்ந்து சுருளி, சுகுமாறன், பாண்டிமுத்து குதித்தனர். ஆர்வமிகுதியால், முருகனும் குதித்தான்.
“முருகா… தலை தேய்க்கலியா?’
“கடைசியில் தேச்சுக்கலாம்…’ தண்ணீரில் அங்கேயும், இங்கேயுமாய் திளைத்தோம்.
குதித்து, குதித்து விளையாடினோம்.
சுருளி ஓரிடத்தில் முங்க, அவன் எங்கு எழுவான் என ஆளுக்கொரு திசையில் காத்திருந்தோம்.
அவனோ, எங்களை தாண்டி எழும்புவான். ஒவ்வொரு முறையும், தோற்றுப்போவோம். ஒவ்வொரு முறையும், அவன் எழும்பும்போது நாங்கள்,”ஓ…’ என்று கத்துவோம்.
திடீரென முருகன் ஆழத்திற்குப் போய்விட்டான். தண்ணீருக்குள் குதித்து, குதித்து எதிர்திசை வர முயன்றவன், மீண்டும் ஆழத்திற்கே போய்க் கொண்டிருந்தான்.
“டேய்… முருகன்… தண்ணீக்குள்ளே முழுகுறாண்டா…’
நானும், பாண்டிமுத்துவும், அவனைப் பிடிக்க முயற்சித்தோம். அவன் கையைப் பிடித்தால் வழுக்கியது. தலைமுடியை பிடித்து இழுக்கலாமென்றால், அதுவும் வழுக்கியது. திடீரென அவன் எங்களை நீருக்குள் இழுக்க எத்தனித்தான்.
“டேய்… நான் உள்நீச்சல்ல போயி, அவனை தோள்ல தூக்கறேன், எட்டி பிடிச்சு இழுத்துடுங்க…’ சொல்லிவிட்டு, உள்ளே முங்கினான் சுருளி. சொன்னது போல, முருகன் மேலே எழும்பினான், நாங்கள் இரண்டுபேரும், அவனை வளைத்துப்பிடித்து கரைக்கு இழுத்து வந்து விட்டோம்.
கரையில் ஏறி கத்திக் கொண்டிருந்தான் சுகுமாறன்.
அதற்குள், முருகன் நிறைய தண்ணீர் குடித்திருந்தான். அவனை கல்லில் போட்டு, முதுகை அழுத்தினேன். தண்ணீரைக் கக்கி, பெருமூச்சு விட்டான். எங்களுக்கு உயிர் வந்தது. அப்போது தான், சுகுமாறன் கேட்டான், “சுருளி எங்கடா?’
நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். திரும்பி தண்ணீரைப் பார்த்தேன். தண்ணீர் அமைதியாக இருந்தது.
நானும், பாண்டிமுத்துவும், மீண்டும் தண்ணீரில் பாய்ந்தோம்.
எங்கு தேடியும் சுருளியைக் காணவில்லை. கரையிலிருந்த முருகன் அழ ஆரம்பித்தான். அதற்குள் கூட்டம் கூடி விட்டது. மேலத்தெரு சுப்பிரமணியண்ணன், “நீங்க கரையேறுங்கடா…’ என்று சொல்லிவிட்டு, தண்ணீரில் மூழ்கித் தேடிப் பார்த்தார். நாங்கள் நாலு பேரும் அழுதோம்.
சுருளியின் அத்தையும், மாமாவும் வந்து கதறி அழுதனர். ரொம்ப நேரம் தேடிய பிறகு, எல்லாரும் போய் விட்டனர். அதற்குப் பிறகு, நாங்களும் கிளம்பி விட்டோம். போகும் போது, தண்ணீரைப் பார்த்தேன், எங்கிருந்தாவது சுருளி நீந்தி வருவான் என்று நம்பினேன். ஆனால், நீர் ஏனோ கருப்பாய் தென்பட்டது.
மறுநாள் ஊரெங்கும் தீபாவளி. எங்கள் வீட்டில், என்னை அடித்து, உதைத்து புதுத்துணி போட்டு விட்டாள் அம்மா. எல்லாரும் வெடி வெடிப்பதை, நான் வெறுமே வேடிக்கை பார்த்தேன். எனக்கு கொடுத்த பட்டாசுகளை, மாடு மேய்க்கும் பாலுவிடம் கொடுத்து விட்டேன்.
அன்று மாலை, நாங்கள் ஒன்றுகூடி மீண்டும் அழுதோம்.
“டேய்… எங்கப்பா சொல்றாரு, சுருளி, சுரங்கப்பாதையில் மாட்டியிருப்பானாம். அப்படியாடா?’ கேட்டான் சுகுமாறன்.
“ஒரு தடவை குழந்தை கூட மாட்டிகிச்சாம்… அதுமாதிரி சுருளியோட உடம்பு மிதந்து வந்துடும்தானே…’ என்றான் முருகன்.
இருட்டின பின், நாங்கள் நாலுபேரும் அகலாங்கரைக்குப்போய், கரையில் உட்கார்ந்து கொண்டோம். எதுவும் பேசிக் கொள்ளவில்லை. முருகன் விசும்பினான். ஆள் அரவமற்ற கரிய நீர்ப்பரப்பு சலனமற்று இருந்தது.
பிறகு, வீடு வந்தோம். அவரவர் வீட்டுக்குப் பிரியுமுன் நின்றேன். எங்கள் நால்வர் மனதிலும், ஒரே கேள்வி இருந்தது. ஆனாலும், அதைக் கேட்க மனசின்றி, பிரிந்தோம்.
இதெல்லாம், நடந்து நாற்பது, நாற்பத்தைந்து வருடங்கள் ஆகிவிட்டன.
நான் ரிடையர் ஆகி விட்டேன்… டில்லியிலே செட்டிலாகி, மனைவி,குழந்தைகளோடு நிறைவான வாழ்க்கை. பேங்க்கில் காத்திருக்கையில், அருகாமை நபர் என் தோளைத் தொட்டார்.
“”நீ… நீங்க… பாக்கியம் தானே…”
எனக்கு அவரை சுத்தமாய் தெரியவில்லை.
“”நான் தான் பாண்டிமுத்து… தெரியல?”
“”டேய்…” ஆள் கனத்து, தொந்தியோடு, பாதி வழுக்கையில் இருந்தான். அந்த கோரைப்பல் மட்டுமே, அவனை நினைவூட்டியது.
சந்தோஷமாய் கட்டிப்பிடித்துக் கொண்டோம். குடும்பம், வேலை பற்றியெல்லாம் பரிமாறிக் கொண்டோம். சுகுமாறன் ஆர்மியில் பிரிகேடியராக இருக்கிறானாம். ஆச்சரியமாய் இருந்தது.
“”கடைசியில் நான்தான் ரைஸ்மில்லோடு செட்டிலாயிட்டேன்…” என்றான் பாண்டிமுத்து.
“”சுருளி அப்புறம் கிடைக்கவேயில்லை… தெரியுமா, நான் அகலாங்கரை பக்கமே போக மாட்டேன்…” என்றான். நான் அப்படியே நின்றேன்.
பிறகு போன் நம்பர்களை வாங்கிக் கொண்டு, கிளம்ப முற்பட்டேன். என் கையைப் பிடித்து இழுத்தான் பாண்டிமுத்து.
“”டேய்… அன்னிக்கு சுருளி வெச்சிருந்த வெடியெல்லாம், என்னாகியிருக்கும்?” நாற்பத்தைந்து வருடங்களுக்குப் பின், அவன் கேட்டுவிட்டான்.

– சூ.ஜூலியட் மரியலில்லி (டிசம்பர் 2012)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *