கேட்கக்கூடாத கேள்வி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 19, 2015
பார்வையிட்டோர்: 7,692 
 
 

என் சொந்த விற்பனை வேலையின் நிமித்தம், ஒவ்வொரு வாரமும் பல ஊர் களுக்கு, அது கிட்டே இருந்தால் பஸ் மூலமும் தூரமிருந்தால், இரயில் மூலமும் காலையில் வீட்டிலிருந்து கிளம்பி, பகலெல்லாம் அலைந்து இரை தேடி, இருண்ட பின் வீடு திரும்பி விடுவேன். என்னுடன் தவறாமல் என் நண்பனும் வருவான். இருவரும் சேர்ந்து தான் தொழில் செய்கிறோம் ஆகவே அவனும் உடன் இருப்பான், அனைத்து வேலைகளிலும்.

தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் ஹோசூருக்கும் அடிக்கடி போகவேண்டியதிருக்கும். அப்படி ஒரு நாள் நானும் என் நண்பனும் காலை ஆறு மணிக்கெல்லாம் ஹோசூருக்கு பஸ் மூலம் கிளம்பினோம். நம்மிடத்திலிருந்து நான்கு மணி நேரம் தான் பிடிக்கும், கிருஷ்ணகிரியில் இறங்கி பெங்களூருக்கு போகும் வேறு பஸ் பிடித்தால், அரை நேரம் அதிகமாகும். ஆனால் அன்று நேராக ஹோசூர் செல்லும் பஸ் கிடைத்து விட்டது. இரண்டு பேர் அமரக்கூடிய இருக்கைகளும் காலையாக இருந்ததால், நானும் என் நண்பனும், அதில் அமர்ந்து கொண்டோம். சிறிது தூரம் சென்றதும், பஸ் நிரம்பி வழிந்தது, ஸ்டேன்டிங் கூடிக்கொண்டே போய், மக்கள் நிற்பதற்கே கடினமாயிற்று. வர்தகத்தைப்பற்றி பேசிக்கொண்டே இருந்த போது, ஜன்னல் அருகே அமர்ந்திருந்த என் நண்பன் என் தோளை அசைத்து, ஜாடையாக என்னை தாண்டி சற்று தூரத்தில் தன் கண்களை நிலை நிறுத்தினான். அவன் எனக்கு பின்னால் யாரையோ பார்க்கச்சொல்கிறான் என்பதை உடனே புரிந்து கொண்டேன்., அவன் ஜாடையாக எதையாவது சொன்னால், நானும் உடனே பார்க்க மாட்டேன். ஏனெனில், நாம் பார்க்கும் நபர் நம்மை கவனித்துக்கொண்டிருந்தாரானால், நம் மீது எந்த தவறான எண்ணமும் கொள்ளக்கூடாது. ஆகவே, நானும் கண்ணினால் ஒப்புதல் அளித்து, பேச்சு முடிந்ததும் போகும் போக்கில் தற்செயலாக திரும்புவதுபோல் திரும்பி, அனைவரையும் கவனித்தேன்.

இப்படியும் ஒரு காட்சியா?, கடவுளின் படைப்புகள் கோடானகோடி. அதில் ஒவ்வொன்றிலும் எத்தனை விதங்கள், ஒவ்வொரு விதத்திலும் எத்தனை நிறங்கள். மனிதர்கள் அனைவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தும், அவர்கள் ஒன்றாக இல்லை. ஒவ்வொரு நபரும் ஒரு தனித்தன்மை வாய்ந்தவரே. கையிடத்தில் கை, காலிடத்தில் கால், விரலிடத்தில் விரல்கள் இருந்தும், அனைத்தின் உருவமும், பருமனும், அளவும், நிறமும் மாறுவதுடன், ரேகைகளும், ஒன்றுக்கொன்று சேராமல் இருக்கின்றன. உயிருடன் இருப்பவரின் ரேகை இறந்தவரின் ரேகையுடன் ஒன்று சேருவதில்லை. கடவுளின் படைப்புகளின் மூலம் அவனுடைய அளவிலா சக்தியை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது, மனிதனுக்கு.

என்ன ஆச்சரியம்! அவருக்கு கண்ணுண்டு, காதுண்டு, மூக்குண்டு ஆனால் வாயில்லை, உதடுகளும் இல்லை. மூக்குக்கு நேர் கீழ், ஒரு சீடை மட்டும் போகும் அளவைற்கு ஒரு சிறு துவாரம் மட்டும் இருக்கிறது, மீசை கிடையாது. கன்னங்களும் தாடையும் சேர்ந்து ஒன்றாக இருக்கின்றன. அந்த துவாரத்திலிருந்து, கிளியின் அலகு போல் ஒரே ஒரு பல் மட்டும் வெளியே தெரிகிறது. அந்த பல் வெளியே தெரிவதால் அவருடைய அழகே தனி. மெதுவாக என் நண்பன் என்னை தன் பக்கம் திருப்பினான். “என்னப்பா, அவரை கண்டாயா? வாயே இல்லையே அவர் எப்படி சாப்பிடுகிறாரோ!”

“சும்மா இரு, சாப்பிடாமலா இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்திருக்கிறார்? நீ சாப்பாட்டைப் பற்றி கவலைப்படுகிறாய், நான் சிந்திப்பது வேறு விஷயம்.”

“அது என்ன வேறு விஷயம், சிக்கிரம் சொல், உன் மனதில் என்ன தோன்றுகிறது?”

“விவரத்தை அவரிடமே கேட்போமா?” என கேட்டேன். என் நண்பனுக்கு தெரியும், உலகில் நாம் காணும் ஒரு விசித்திரமான காட்சியை ரசிப்பதுடன் நான் நிறுத்திக்கொள்வதில்லை. அதன் பின்னணி அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு எப்பொழுதும் உண்டு. கொஞ்சமும் கூச்சப்படாமலும், பயமில்லாமலும் அதைப்பற்றி விசாரித்து தெரிந்து கொள்வேன். பஸ் பிரயாணம் ஆகட்டும், அல்லது இரயில் பிரயாணம், நாம் வியக்கக்கூடிய சம்பவத்தை, விசாரிக்காமல் இருப்பதில்லை. இதில் விசேஷம் என்னவென்றால், விசாரணையை சுவரஸ்யமாக ஆக்க, முதலில் அப்பேர்பட்டவருடன் அருமையாக பேசி கொஞ்சம் பழகிக்கொள்வேன். அவர் மீது எனக்கு அக்கரை இருப்பதை அவர் மனதில் பதிய வைப்பேன். அதன் பிறகு அவருடைய அனுமதியுடன், ஒரு நீண்ட இன்டெர்வியூ நடக்கும். சுற்றி நிற்கும் அனைவரும் இதை கேட்டு நிச்சயமாக சந்தோஷப்படுவர். இப்படி என் நண்பனும் நானும் பயணிக்கும் பொழுதே ஆறு ஆண்டுகளில் டஜனுக்கு மேலான விசித்திரமான மனிதர்களை இண்டர்வியு கண்டிருக்கிறேன். அப்படிப்பட்ட சமயங்களில் ஒரு அகோர ஜடா முனி சுவாமி, அவர் மாதக்கணக்கில் குளியாமல் இருந்ததால், இருகில் வந்தாலே மீன் நாற்றம்,…, இல்லை இல்லை….., கருவாடு நாற்றம் அடித்த அவருடைய வாழ்க்கை, இரயில் பயணத்தில் அருகில் அமர்ந்திருந்த ஒருவர், ஒரு விவசாயி ஏழையின் பணத்தை தன் பணம் என்று சொந்தம் கொண்டாடி அழுதவருடைய கீழ் தரமான தந்திரம், பொங்கும் சாம்பாரில் கைவிட்டு ஆட்டிய இட்லிகார அம்மாவின் கொப்புள அனுபவங்கள், பள்ளிக்குச்செல்லாமல், ‘இரயில் பயணங்களில்’ என்ற சினிமா பார்த்து, மறு நாளே டிக்கெட் இல்லாமல் பம்பாய்க்கு இரயில் ஏறிய சிறுவன், உடல் முழுவதும் கட்டிகளுடன் விகாரமான முகம் கொண்டவர் என பல பேரிடம் பேசி, அவர்களிடமிருந்து, நிறைய சுவாரஸ்யமான செய்திகள், சேகரித்துள்ளேன். என் நண்பன் அவன் பாணியில் என்னிடம், “குரு ஹோஜா ஷுரூ” (குருவே, தொடங்கு..) என உருதுவில் சொல்லி, வழக்கமாக ஊக்கமளித்தான்.

எப்படி ஆரம்பிப்பது என யோசித்து கொண்டிருந்த நேரத்தில், கண்டக்டர் அவரிடம் டிக்கெட்டுக்கு சில்லரை கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் சில்லரை இல்லாததால், கண்டக்டர் சற்று கண்டிப்பாக பேசிக்கொண்டிருந்தார். சமயத்தை புரிந்துகொண்ட நான், அவருக்கு சில்லரை கொடுத்தேன். அவர் வயதில் பெரியவராக இருந்ததால், நான் எழுந்து அவரை அமரச்செய்தேன். அவர் என் நண்பனுக்கு அருகில் நன்றி கூறுவது போல் தலை அசைத்து, அமர்ந்தார். நான் வாய்ப்பை தவறவிடாமல் அவரை கண்டு ஆர்வத்தோடு புன்னகைத்தேன். என்ன ஆச்சரியம், அவருடைய முகத்தை மூடிக்கொண்டிருந்த சதையற்ற தோல் இரு பக்கமும் சற்று வீங்கி விரிந்தது, வாயே இல்லாததால், உதடுகளும் இல்லை, ஆனால் அவர் முக மலர்ச்சியை வெளிப்படுத்தினார். இருந்த சிறு துவாரத்தில் எந்த வித ஆக்ஷனும் இல்லை. அது விரியவே இல்லை. அவர் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பும் முன், “எங்கே போகிறீர்கள்” என கேட்டேன், ஏதோ வெகு நாட்களாக அவர் எனக்கு தெரிந்தது போல்.

“ஹோசூரில் இறங்கி என் ஊருக்கு வேறு பஸ் பிடிக்க வேண்டும், அங்கே தான் நான் வேலை செய்கிறேன், நான் பீடி தொழிலாளி. இப்பொழுது ப்ரோமோஷன் கிடைத்து சூபர்வைசராக இருக்கிறேன்.” என்று பெருமையுடன் சொல்லிக்கொண்டார்.

“எப்படி சாப்பிடுகிறீர்கள்”, என அக்கறையுடன் கேட்டேன்.

சிறு ஸ்பூன் மூலம் அதை வாயில் நுழைத்து, நாக்கினால் இழுத்துக்கொள்வேன், அப்புறம் மென்று தின்று விடுவேன். பழங்களையும் முன் பல்லால் கொறித்து சுலபமாக சாப்பிட்டு விடுவேன்.” என்றார். அதனால் தான் இறைவன் அவர் முன் பல்லை கிளியின் அலகு போலவே படைத்திருக்கின்றான் போலும்!! அவர் தொடர்ந்தார், “பல் எல்லாம் தேய்க்க முடியும். பல் பொடியை விரலில் கொண்டு ஒரு விரலால் பல்லுக்கு முன்புறம், பின்புறம் நன்றாக தேய்த்து, ஒரே விரலினால் நாக்கையும் தேய்த்துக்கொள்வேன். தண்ணீரை உறிஞ்சி துப்புவதற்கு ஒன்றும் பிரச்சினை இல்லை.” என்றார்.

“நீங்கள் ஏன் ஆபரேஷன் செய்து கொள்ளக்கூடாது, இப்பொழுதுதான் பிலாஸ்டிக் சர்ஜரி என்று நிறைய வந்திருக்கிறதே.” இதைக்கேட்டவுடன் அவர் முகத்தில் மீண்டும் ஒரு மலர்ச்சியை கண்டேன். கண்கள் சுருங்கி, கன்னத்து மெல்லிய தோல் முகத்தின் இரு பக்கமும் சற்று விரிந்தததால் அப்படி உணர முடிந்தது.

“நாம ஏழை மக்கள், நானும் என் பெற்றோறும் என்னுடைய சிறு வயதில் சிலர் பேச்சை கேட்டு டாக்டரிடம் யோசனை பெற்றோம். அவர் பட்டணத்திற்கு அனுப்பி, முடியுமா, முடியாதா, அப்படி முடிந்தால், என்ன செலவாகும் என்றெல்லம் என் பெற்றோறிடம் பேசி, பண வசதி இல்லாததால், ஒன்றுமே செய்ய முடியவில்லை. எனக்கும் பிரச்சினை ஒன்றும் இல்லாததால், நான் அப்படியே வளர்ந்து விட்டேன்.” என சிறிதும் கவலைப்படாதவர்போல் சர்வ சாதாரணமாக பதிலளித்தார்.

கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருந்தன. என் நண்பன் என்னை நோக்கினான். நான் சிந்திப்பது வேறு ஏதோ விஷயம் என்று சொன்னேனே, அது என்ன விஷயம், என்று என்னை அவன் கேட்டது போல் தோன்றியது. அதை நினைத்து மெல்ல புன்னகைத்த என்னை கண்டு அவனும் புன்னகைத்தான்.

சிறிது தயக்கத்துடன், ” உங்களுக்கு மணமாகி விட்டதா”, என்றேன். இதைக்கேட்ட என் நண்பன், உடனே சற்று நிமிர்ந்து உட்கார்ந்தான். அவருக்கோ அது சாதாரணமாகவே தென்பட்டது.

“ஆமாம், எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றன. நன்றாக படிக்கின்றன, நல்ல அழகாகவும் இருக்கின்றன, என்றார். “நீங்களும் அழகாகத்தான் இருக்கிறீர்கள்” என்று சொன்னதற்கு, “என் மனைவியும் அப்படித்தான் சொல்வாள், அதுவே எனக்கு மன நிம்மதியை கொடுக்கும்,” என்றார்.

அவர் பேசியதெல்லாம் தொண்டையை அடைத்துக்கொண்டு, வாயை மூடிகொண்டு பேசியது என்றாலும் கேட்பவர்களுக்கு புரியாமலில்லை.

அதற்குள் ஹோசூர் வந்துவிட்டது, அனைவரும் இறங்கி அவரவர் இலக்கை நோக்கி கிளம்பிக்கொண்டிருந்தனர். அவரும் அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறி விடை பெற்றார். என் நண்பனும் நானும் இறங்கி ஆட்டோ மூலம், தொழிற்பேட்டையை நோக்கி புறப்பட்டோம். நாம் அவருடன் பேசியதைப்பற்றி ரிவைஸ் செய்துக்கொண்டே வந்தோம். அந்த நேரம் என் நண்பன், ” ஹ்ம்ம்ம்…. எல்லாத்தையும் கேட்டுட்டியா?’ என்றான்.

“இல்லை, ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்க மனம் வரவில்லை. அது கேட்டாலும் நன்றாக இருக்காது, நாம் அவருடன் நண்பர்களாக பழகி இருந்தால், ஒரு வேளை கேட்டிருப்போம், அவர் எங்களை விட வயதில் பெரியவர், அது போக, அந்த கேள்விக்கு பதிலாக அவரும் ஒரு கேள்வி கேட்டால், நம்மிடம் அதன் பதில் நிச்சயமாக இல்லை”, என்றேன்.

“அது என்னாப்ப, அப்பேற்பட்ட கேள்வி, சரி, என்னிடம் சொல்லு, என்ன கேட்கக்கூடாத கேள்வியை கேட்கவிருந்தாய்”, அவன் அடம் பிடித்தான்.

“அதாவது… நீங்கள் எப்படி கிஸ் பண்ணுவீங்க என கேட்கலாம் என்று நினைத்தேன், ஒரு சமயம், அதைக்கேட்டு, யாருக்கு என் கிஸ் வேணும் என்று அவர் கேட்டால், நாம் அங்கே நிக்க முடியாது… அதனால் தான் கேட்க வில்லை.” என்றேன்.

அத்தனை நேரமும் நம் பேச்சை கவனித்துக்கொண்டே வந்த ஆட்டோ டிரைவர், இதைக்கேட்டவுடன் பலமாக சிரித்துவிட்டர். “சார் நீங்க சொன்ன கம்பெனி இதோ, இறங்கிக்கோங்கோ,” என்றார்.

நாமும் இறங்கி அவருக்கு தேவையான பணத்தை கொடுத்து, கம்பெனிக்குள் நுழைந்து விட்டோம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *