குழந்தை திருமணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 12, 2021
பார்வையிட்டோர்: 3,573 
 
 

அலுவலக வேலையாக பீகார் மாநிலத்தில் பூர்ணியா மாவட்டத்தின்,பைசிநகருக்கு சென்றிருந்தேன். .

எங்களது கம்பெனியின் ஒர்க் சைட் அருகில் உள்ள கிராமத்தில் அமைந்திருந்தது. மறுநாள் காலை அங்கு போகலாம் என முடிவு செய்து ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தேன்.

இரவு உணவு சாப்பிடுவதற்காக நான் தங்கியிருந்த ஹோட்டலின் கீழே இறங்கி வந்து அருகில் உள்ள ஒரு சிறு கடைக்கு சென்று சப்பாத்தி மற்றும் சாப்ஜி சாப்பிட்டுவிட்டு வெளியே நின்று கொண்டிருந்தேன் .

அப்போது தெருவில் ஒரு திருமண ஊர்வலம் வந்து கொண்டிருந்தது . அதை நான் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தேன், அப்போது மணப்பெண்ணை பார்த்தபோது மிகவும் சிறிய பெண்ணாக இருந்தாள் ,அவளுக்கு சுமார் பதினான்கு வயது மட்டுமே இருக்கும் போல,தெரிந்தது.

பிறகு நான் மாப்பிள்ளையை பார்த்தபோது அவனுக்கு சுமார் 35 லிருந்து 40 வயதுக்குள் இருக்கும்போல தெரிந்தது . அவனை நான் அருகில் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் அவனை எனக்கு தெரியும் . அவன் பெயர் துக்காராம், அவன் சென்னையில் உள்ள எனது நண்பர் நவீனின் கம்பெனியில் வேலை பார்த்து வந்தான். அவனுக்கு சென்னையில் ஒரு குடும்பம் இருந்தது.

நான் ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்த ஒருவரை என் அருகில் அழைத்து மாப்பிள்ளை மற்றும் பெண் சம்பந்தப்பட்ட விவரங்களை கேட்டேன். அவர் மாப்பிள்ளை மதராஸில் பெரிய வேலையில் இருப்பதாகவும், பெண் யாமினியை குடும்ப வறுமை காரணமாக இவனுக்கு திருமணம் செய்து கொடுப்பதாகவும் கூறினார்.

எனக்கு அப்போதுதான் புரிந்தது, துக்காராம் பெண் வீட்டாரை ஏமாற்றி திருமணம் செய்து கொள்கிறான் என தெரியவந்தது.

ஒரு ஏழை மைனர் சிறுமியின் வாழ்க்கை பாழாவதை தடுக்க நினைத்த நான், உடனே எனது உள்ளூர் நண்பருக்கு போன் செய்து விவரங்களைக் கூறி, இந்த திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறினேன்.

எனது நண்பர் உடனே நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு விரைந்தவந்தார்.

நான் சென்னையில் உள்ள எனது நண்பன் நவீனுக்கு போன் செய்து விவரங்களை தெரிவித்தேன். பிறகு துக்காராம் அவர்களது கம்பெனியில் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது மனைவியுடன் வந்திருந்தான் அப்போது எடுத்த புகைப்படத்தை உடனடியாக எனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிவைக்க சொன்னேன்.

எனது நண்பர் நவீனும் உடனே அந்த புகைப்படத்தை எனக்கு அனுப்பிவைத்தார்.

அதை எடுத்துக்கொண்டு நானும் ,எனது உள்ளூர் அலுவலக நண்பரும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று அங்கிருந்த காவல்துறை அதிகாரியிடம் அனைத்து விவரங்களையும் கூறினோம். சென்னையிலிருந்து எனக்கு அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் புகைப்படத்தையும் அவருக்கு காண்பித்தோம்.

நான் அந்த காவல் அதிகாரியிடம் துக்காராமுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது அதை மறைத்து இரண்டாவது திருமணம் செய்கிறான் அது ஒரு குற்றம், மேலும் , அவன் 18 வயது நிரம்பாத மைனர் பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறான், அதுவும் சட்டப்படி குற்றம். ஆகவே, இந்த திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன்.

நாங்கள் சொல்வதை அனைத்தையும் கேட்டுக் கொண்ட காவல் அதிகாரி உடனே ஜீப்பில் எங்களையும் அழைத்துக் கொண்டு திருமணம் நடக்கவிருந்த மண்டபத்தை சென்றடைந்தார்.

அவர், துக்காரமையும், பெண்ணின் பெற்றோரையும் உடனடியாக தனியாக அழைத்து சென்று விசாரணை செய்தார்.

முதலில் தன் மீது கூறப்பட்ட குற்றங்களை மறுத்த துக்காராம், காவல்துறையின் முறையான கவனிப்புக்குப்பின் தனக்கு திருமணமாகி ஒரு குடும்பம் சென்னையில்,இருப்பதை,ஒத்துக்கொண்டான்.

காவல் அதிகாரி உடனடியாக துக்காராமை கைது செய்தார்.

பெண்ணின் பெற்றோரை அழைத்து, அவர்களிடம் பெண் குழந்தைகளுக்கு பதினெட்டு வயது முடிவதற்க்கு முன்பாக திருமணம் செய்வது சட்டப்படி குற்றம், ஆகவே, உங்கள் பெண்ணை தொடர்ந்து படிக்க வையுங்கள் என்றும் அறிவுறை வழங்கினார்.

பெண்ணின் பெற்றோர் குடும்ப வறுமையின் காரணமாகவே இந்த திருமணத்தை செய்ய நினைத்ததாகவும், மேலும் அவனுக்கு முன்னரே திருமணம் நடந்து குடும்பம் இருப்பதை அவன் மறைத்து விட்டான் என்றும் நீங்கள் தான் என் பெண்ணை காப்பாற்றினீர்கள் என்று கூறி கண்ணீர் மல்க எனக்கும் நன்றி சொல்லி விடை பெற்றார்கள்.

எனக்கும், ஒரு சிறுமியின் வாழ்க்கையை ஒரு கயவனிடமிருந்து காப்பாற்றியது மிகுந்த மனநிறைவையும், சந்தோஷத்தையும் அளித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *