வென்றது பொய் வீழ்ந்தது தமிழ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 14, 2016
பார்வையிட்டோர்: 8,699 
 

சாத்வீக தத்துவ குணங்களின் முப்பரிணாம நேர்கோடு உயிர்ச் சித்திரமாய்க் கண்களில் தெய்வீக ஒளி கொண்டு நிலைத்திருக்கிற அவரிடம் பாடம் கேட்க வரும் போதெல்லாம் பாரதிக்கு அன்றைய பொழுதே முழுவதும் கறைகள் நீங்கிய ஒரு தவப் பொழுதாக விடியும் அந்த விடியலைத் தேடியே அவள் இருப்பெல்லாம் நிமிஷத்தில் அழிந்து போகும் வாழ்க்கை என்று அறியாமல சகதி குளித்தே வாழ்ந்து பழகிய மனதுக்கு விட்டு விலகிய சுகம் அது அவரிடம் பாடம் கேட்க வரும் சாட்டில் அடிக்கடி அவரைத் தரிசனம் காண்பதே பெர்ய கொடை மாதிரி அவளுக்கு அவரைச் சிவம் என்றே எல்லோரும் அழைப்பார்கள் சிவசேகரம் என்று முழுப் பெயர் சிவம் என்று சுருங்கி விட்டது கடையில் எல்லாம் சிவத்தினுள் ஐக்கியமாகி விடுவது போல அதைக் கண்டு கொண்ட மனிதர்களை அவள் அறியாள் அந்த நிலை ஒளி வட்டத்தினுள் தான் மட்டுமே சுடர் விட்டு மின்னித்தெறிக்கிற மாதிரி ஒரு நினைப்பு அவளுக்கு

அவள் அப்போது பல்கலைக்கழகக் கலைப்பிரில் படிப்பதற்கெனத் தேர்வாகியிருந்த நேரம் ஊரை விட்டு வெகு தூரம் போக வேண்டிய நிலைமை யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் திறக்காததால் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தான் படிப்பு .அதற்கு இன்னும் நாலைந்து மாத இடைவெளி இருந்ததால் சமஸ்கிருத பாடம் கற்பதற்காக அடிக்கடி அவள் சிவம் வீட்டிற்கு வர நேர்ந்தது அவர் ஒரு ஓய்வு பெற்ற சமஸ்கிருத விரிவுரையாளர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் கற்பித்த அனுபவஞானம் கொண்டவர் அவர். குடும்பஸ்தனாக இருந்தாலும் பிள்ளைகள் இல்லாதததால் குடும்ப உறவுகளால் பாதிக்கப்படாத தெளிந்த ஞானி போல் முற்றிலும் துறந்த பற்றற்ற நிலையில் அப்படிப்பட்ட அவரோடு பழகுவதே ஒரு சுகமான அனுபவம் தமிழிலும் பாண்டித்தியம் உண்டு நெற்றியில் திருநீற்றொளி துலங்க எப்போதும் பார்த்தாலும் தெய்வீகக் களையோடு தோன்றுகின்ற அவரைப் பார்த்தாலே நெஞ்செல்லாம் உருகிக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றும். பாரதி அவரைத் தன் மான்ஸீகக் குருவாகவே மதிப்பதுண்டு தனக்கு மட்டுமல்ல தான் வாழ்கின்ற சமூகத்துக்கும் அவரைத் தலைவனாக்கிக் கொண்டாட வேண்டுமென்பதே அவளுடைய நெடுநாளைய இலட்சியக் கனவாக இருந்தது

அவர் அவளுடைய பக்கத்து வீட்டிலேயே குடியிருந்தார் அவரிடம் சமஸ்கிருதம் மட்டுமல்ல தமிழும் படிப்பதற்கு நிறையப் பிள்ளைகள் வருவார்கள் அவர்களே அவரின் பிள்ளைகள் மாதிரி அதிலும் பாரதியென்றால் அவர் மனதில் வழிபடத் தோன்றுகின்ற ஒரு சத்திய தேவதை மாதிரி அவள் அவளின் உயர்ந்த நோக்குள்ள வாழ்க்கையின் கறைகளே படியாத இலட்சிய மனம் குறித்து மிகவும் ஆழமாக அவள் மீது அவர் கொண்டிருக்கிற தெய்வீக உறவு அது அது அவர் மனைவிக்கும் தெரியும்

அவளுடைய ஞானிகளின் காலடி மண் பெற்றுப் புனிதம் கொண்டு மிளிர்கிற ஏழாலை என்ற அச் சிறிய கிராமத்தில் முனைப்பாகக் கிராமசபைத் தேர்தல் நடைபெற ஏற்பாடாகியிருந்தது/அதன் தலைவர் தெரிவுக்காக தன்னலமற்ற முற்றிலும் தியாக மனம் கொண்டிருக்கிற ஒரு பெரிய மனிதனுக்காகக் கண் திறந்து ஊரே விழிப்பு நிலையில் காத்துக் கிடந்த நேரம். அதன் கண்களில் மண்ணைத் தூவி விட்டு ஊரை முன் வைத்து ஊழல் செய்து அரசிடம் கொள்ளை அடிப்பதற்காகக் கிரிமினல் புத்தி கொண்ட தங்கராசு வேட்பு மனு தாக்கல் செய்யததை அறிந்து பாரதி வெகுவாக மனம் நொந்து போனாள் அவன் ஊரிலே பெரும் ரெளடி மாதிரித் திரிபவன் பெரும் குடிகாரன் பஞ்சமாபாதகங்களுக்கும்அஞ்சாத முரடன் அவனோடு மோதி மல்லுக்கு நிற்பது ஆத்மார்த்தமான ஒரு பலப் பரீட்சை மாதிரி

இருந்தாலும் பாரதிக்கு மனம் கேட்கவில்லை. தங்கராசிடமுள்ள அதற்கான ஒரே தகுதி அவன் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளன் என்பதே அதற்காகத் தலை வணங்க முற்படுவது பெரிய மடமை என்று அவளுக்கு உறைத்தது அதில் அவன் வெற்றி பெறாமல் தடுப்பதற்கு ஒரே வழி சிவம் மாஸ்டரிடமே இருப்பதாக அவள் பெரும் நம்பிக்கையுடன் நினைவு கூர்ந்தாள் அப்போது தான் தமிழ் வாழும் தமிழ் வாழ்ந்தாலே மனிதமும் வாழும் இதைச் சொன்னால் நிச்சயம் அவர் சம்மதம் கிடைக்கும் என்று அவளுக்கு நம்பிக்கை வந்தது

தங்கராசு வேட்பு மனு தாக்கல் செய்து விட்டதை அறிந்தவுடன் அவள் இதற்கு தீக்குளித்துப் பரிகாரம் தேடும் மன உளைச்சலுடன் சிவம் வீட்டிற்கு வரும் போது அவர் லெளகீக உலக சிந்தனையே அடியோடு மறந்த ஏகாந்த தனிமைச் சுகத்தில் எதுவுமே நடக்காத மாதிரித் தெய்வீகக் களையோடு உயிர் மின்னக் கதிரையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து விட்டுப் பேச வராமல் சமைந்து போய் அவள் ஒரு நிழல் குறியீட்டுச் சின்னமாய் நிற்பதைப் பார்த்து விட்டு அவர் அதிலும் பதற்றம் கொள்ளாத மென்மை குழைய குரல் கனிந்து கேட்டார்

“என்ன பாரதி படிப்புக் கனவு கலைந்து போய ஏன் இந்த மெளனச் சிறை?இது நீதானா என்று சந்தேகமாக இருக்கு?”

அவள் அவரின் குரல் கேட்டு விழிப்புற்ற கனதியோடு உள்ளம் சகஜ நிலைக்கு வராத வெறுமையோடு அழுகை குமுறித் தொண்டை அடைக்கப் பேசுவதை அவர் கனவில் கேட்பதைப் போலக் கேட்டுக் கொண்டிருந்தார்

“ஐயா என் படிப்பை விட இது முக்கியம் ஊர் பெரிய அழிவிலை மூழ்கப் போகுது நீங்கள் மனம் வைச்சுக் கண் திறந்தால் தான் அதைக் காப்பாற்ற முடியுமென்று நான் நம்புறன்”

‘என்ன சொல்கிறாய் பாரதி? நான் இதுக்கு என்ன செய்ய வேணுமெண்டு சொல்ல வாறாய்?”

கிராமசபைத் தேர்தல் வரப் போகுதல்லே இதிலே வாறதுக்குத் தங்கராசு மனுத் தாக்கல் செய்ததை நினைச்சுத்தான் நான் சொல்ல வாறது என்னெண்டால் அவனை எதிர்த்துக் களத்திலை இறங்க நீங்கள் தான் சரியான ஆள் என்று தான் ஒரு யாசகம்மாதிரிக் கை நிட்டிக் காலிலே விழாத குறையாக உங்களைக் கேக்கிறன் ஐயா நில்லுங்கோ அப்ப தான் ஊரைக் காப்பாத்தலாம்”

“இது நல்ல விஷயம் தான் ஒரு தகுதியற்ற தலைவனால் ஊர் உலகம் அழிஞ்சு போறது எல்லோருக்கும் பெரிய இழப்புத் தான் இது நேரக் கூடாதென்று என்னிடம் யாசகம் கேட்டுத் தெய்வம் மாதிரி வந்து நிக்கிற உன்னை நினைச்சு நான் பெருமைப் படுறன் பாரதி. இப்படியொரு மாணவி கிடைக்க நான் கொடுத்து வைச்சிருக்க வேணும் ஆனால் தங்கராசுவுக்கு எதிராகப் போர்க் கொடி நான் தூக்கினால் வெற்றி நிச்சயம் என்று என்ன உத்தரவாதம் இருக்கு?அவனைப் போல நானும் வரிந்து கட்டிக் கொண்டு ஒரு சண்டியனாய் மாறினால் ஒழிய இதிலே வெற்றி பெறலாமென்ற நம்பிக்கை எனக்கில்லை”

“ஐயா! அதுக்காக ஊர் அழிஞ்சு போறதைப் பாத்துக் கொண்டு சும்மா இருப்பது அதை விடக் கேவலம் நான் உங்களுக்காக உயிரைக் கொடுத்து உழைப்பன் இதில் நான் இறந்தால் எனக்கு அது வீர மரணம் “

உயிரையே கொடுத்து ஊரைக் காப்பாற்றத் துணீந்த அளப்பரிய அவளின் தியாக மனம் கொண்ட பெருந்தன்மைக்கு முன்னால் வீண் தர்க்கம் புரிந்து கரை ஒதுங்காமல் என்ன நடந்தாலும் அதற்கு முகம் கொடுக்கத் துணிந்து தான் ஒரு வீரம் மிக்க தலைவனாகக் களத்தில் இறங்குவதே ஒரு தேசீகவாதிக்குரிய மிகப் பெரிய தார்மீகக் கடமையென நம்பியவராய் அவளை நிமிர்ந்து பார்த்து அவர் சொன்னார்

“அப்படியே ஆகட்டும்”

அவர் சம்மதித்த பிறகு பாரதியோடு அவ்வூர் சில இலட்சிய இளைஞர்களும் சேர்ந்து அவர் தேர்தலில் களம் இறங்குவதற்கான முன்னேற்பாடுகளை விரைந்து செய்து முடித்த பிறகு தான் பூகம்பம் வெடித்தது இதைக் கேள்விப்பட்ட நேரத்திலிருந்து தங்கராசு சினம் கொண்டு கொதித்துப் பொங்கியது ஊரையே தீயிட்டுக் கொளுத்துகிற மாதிரி ஒரு நிலைமை அவன் ஊரைக் கூட்டிப் பேசிய விதம் அப்படித்தான் இருந்தது அவனின் அனல் பறக்கும் பேச்சில் சிவம் மாஸ்டர் அநாகரீகமாகவே அவதூறு செய்யப்பட்டார் அவன் கொஞ்சமும் வாய் கூசாமல் சொல்கிறான்

“தமிழே எழுதப் படிக்கத் தெரியாதவன் சொல்கிறான்

“அவர் ஒரு தமிழ் துரோகியாம்”

பாரதியும் அந்தப் பேச்சைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள் தமிழைப் பழிக்கிற இப்படி ஒரு பாவியைக் கடவுள் கூட மன்னிக்க மாட்டார் இந்தச் சனங்களுக்குப் புத்தி இருந்தால் அவன் கழுத்துக்கு மாலையல்ல கல்லெறி தான் விழும் அதையும் பார்த்து விடுவமே

அதற்குப் பதிலடி கொடுக்கிற புத்தி வராமல் நல்லது நினைத்து சிவம் மாஸ்டர் மேடையேறிப் பேசிய அருள் வாக்கெல்லாம் காட்டில் எறித்த நிலா போலாயின ஒருவர் கூட அவர் பேச்சை நம்பவில்லை கூட்டமெல்லாம் திரண்டு தங்கராசுவிற்கே கழுத்தில் மாலை போட்ட கதை வெளிச்சத்துக்கு வந்த போது பாரதி அதை ஜீரணிக்க வழியின்றி தமிழே செத்தது என்பதையே மனதில் நினைவு கூர்ந்து அறிவு விளங்கும் புத்தியே தீக்குளிதுக் கருகி ஒழிந்து போகும் நிலையில் அப்படியே நடைப்பிணமாகச் சிவம் மாஸ்டரைக் கண்டு ஆறுதல் சொல்லத் தலை தெறிக்க ஓடி வரும் போது வாழ்க்கையிலல்ல வரிந்து கட்டிக் கொண்டு வந்த புயலில் தான் ஒரு சிறு துரும்பாகவே ஒடுங்கி ஒழிந்து போய் விட்ட தோல்வியையே மனம் கொள்ளாமல் கண்கள் கூச வைக்கும் கொஞ்சமும் நிலை குலைந்து போகாத அதே ஒளி சிரிக்கும் தீட்சண்யப் பார்வையுடன் பழைய சிவமாக வாசலில் நிஜம் மாறாத உயிர் தரித்து அவர் நிற்பதைப் பார்த்த பின்னும் அவள் அழுகை ஓயவில்லை அவர் காலடியில் விழுந்து தமிழைக் கொன்று விட்ட பாவத்தை மறவாமல் பெருங்குரலெடுத்து அழுகிற அவளைக் கைலாகு கொடுத்துத் தூக்கி நிறுத்தி விட்டு அவர் கேட்டார்

“போதும் அழுகையை நிறுத்து நீ அழுதால் மட்டும் தமிழ் வாழுமென்று நம்புறியே “

“இது அதுக்காக இல்லை ஐயா”

“அப்ப எதுக்கு “

“இங்கு தங்கராசோடு மோதித் தோற்றது நீங்களல்ல தமிழ் தான் என்று நினைச்சுத் தான் இப்ப அழுறன் ‘

“ அழாதே பாரதி தமிழ் வெல்ல ஒரு காலம் பிறக்காமலா போகும் “

“தோற்றது தமிழ். அது கூட அறியாமல் அவர் சொல்லி விட்டுப் போன பின்னும் கனல் கொண்டு எரியும் அவள் மனம் ஆறவில்லை தமிழைக் காலில் போட்டு மிதித்துத் துவைத்த பின்னும் அது உயிர் பெற்று எழுந்து வருமென்று ஏனோ அவளுக்கு நம்பிக்கை வர மறுத்தது தமிழின் புனிதமே அறியாத ஒரு தறுதலையை நம்பி மாலை போடத் துணிந்த தன்னுடைய சமூகம் கண்ணிழந்து காட்டில் விடப்பட்ட பின் கரை சேருமா என்பதைக் காலம் தான் சொல்ல வேண்டும் அந்தக் காட்டுக்கே தானும் வந்து விட்ட மாதிரி இப்போது அவள் நிலைமை சிவம் மாஸ்டர் முகத்தில் விழித்தாலும் தனக்கல்ல தமிழுக்கு இது மாறாத சாபம் தான் என்று அவள் மிகவும் மனவருத்ததுடன் நினைவு கூர்ந்தாள் அந்தக் காடு வெறித்த இருள் வந்து கண்ணை மறைக்கும் போது முழுவதும் ஒளி மறைந்து போன நிலைமை தான். எல்லாம் வெறித்த ஜடக் கூட்டினுள் தான் இப்போது அவளும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *