பேருந்தின் ஆட்டத்தைவிட அவரின் ஆட்டம் மிகுதியாக இருந்தது. பேருந்தில் கூட்டம் குறைவுதான். ஆனால், இருக்கைகள் நிறைந்துவிட்டன. அவரைத் தவிர யாரும் நிற்கவில்லை. அவருக்கு மட்டும் இருக்கை கிடைக்கவில்லை. கிடைத்தாலும் அவர் அமர்வார் என்று உறுதியாகக் கூற முடியவில்லை.
அவர் நிற்பது போலவே நடக்கிறார். அமர்வது போலவே மிதக்கிறார். அமர நினைத்து மரக்கிளைக்கு அருகில் சென்ற பறவை திடீரெனத் தன் மனத்தை மாற்றிக்கொண்டு, பறந்து வானில் எழுவது போல ஒரு முடிவின் எதிர்மறையான மாற்றத்தில், அந்த மாற்றம் செயலுக்கு வராத அந்தக் கணத்தில்தான் அவர் அப்பொழுது இருந்தார். அந்தக்கணம் அவருக்கு முழு வாழ்வுமாக அமைந்து விட்டது.
அவர் மனம் எங்கும் எதிலும் அமர மறுத்து அலைந்துகொண்டே இருந்தது. அதற்கு ஏற்பவே அவரின் உடல் உறுப்புகளும் பதற்றத்துடனேயே இருந்தன. அவர் உடல் முழுக்க நடுக்கிக்கொண்டிருந்தது. பூகம்பத்தால் நிலம் அதிர்வது போலவே, இவரின் மூளைக்குள் நியூரான்கள் தெறிக்க இவரின் உடல் முழுவதும் அதிர்ந்தது.
தார்ச்சாலை சீராக இல்லை. பேருந்தும் பழையது. ஓட்டுநர் உரிய நேரத்தைத் தவறவிட்டதால், தன்னுடைய முழுக் கவனத்தையும் வண்டியை முடுக்குவதிலேயே செலவிட்டார். அலைகள் பாயும் கடலின் மீது அதிவேகத்தில் மிதந்து நகரும் கட்டுமரம் போல இந்தப் பேருந்து தார்ச்சாலையில் நகர்ந்து கொண்டிருந்தது.
தார்ச்சாலையில் வண்டியின் ரப்பர் சக்கரங்கள் உராயும் ஓசையும் பேருந்தில் உடைந்த பாகங்களின் அதிர்வு ஓசையும் இணைந்து, கரும்பாலை எந்திரத்துக்குள் அகப்பட்டுவிட்டது போலத்தான் என்னை உணரச் செய்தன.
அவர் கடந்த பேருந்து நிறுத்தத்தில் ஏறும்போதே, அவரை ஏறவிடாமல் தடுக்கப் பார்த்தார் நடத்துநர். ஆனால், அவர் ஏறுவதற்கு முன்பே ஐம்பது ரூபாய்த்தாளை இடக்கையால் பேருந்து வாசலுக்கு முன்பாக நீட்டிக்கொண்டுதான் இருந்தார். அதனால், அவரின் வருகையை நடத்துநரால் புறக்கணிக்க முடியவில்லை.
பயணச் சீட்டையோ நாற்பத்து மூன்று ரூபாய்கள் பயணக் கட்டணமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, மீதத் தொகையாக வழங்கப்பட்ட ரூபாய் ஏழுக்குரிய சில்லரைக் காசுகளையோ அவரால் வாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் நடத்துநரே அந்தப் பயணச் சீட்டையும் சில்லரைக் காசுகளையும் அவரின் சட்டைப் பைக்குள் திணித்துவிட்டார்.
என் இருக்கைக்கும் அதற்கு இணையாக இருந்த இருக்கைக்கும் இடையே இருந்த நடைபாதையில் அவர் நின்றிருந்தார். அந்த இருக்கையில் புதுமணத் தம்பதியர் அமர்ந்திருந்தனர். அவரின் இடதுகை பேருந்தின் மேற்கூரையை வருடிக் கொண்டிருந்தன. அவரின் வலதுகை பூமியை நோக்கி இறங்கும் ஆலம்விழுது போலத் தொங்கிக் கொண்டிருந்தது. அவரின் தலை ஒடிந்த மரக்கிளை போலக் கவிழ்ந்திருந்தது. அவரின் விழிகள் சுழன்று சுழன்று தரையில் எதையோ தேடின.
அவரின் தலைமுடிகள் சுருள் சுருளாக இருந்தன. இரும்பு இழைக்கும் பட்டறையில் இரும்புத் துண்டுகளை எந்திரத்தால் இழைக்கும்போது, வெட்டி எறியப்படும் இரும்புப் பிசிறுகள் இப்படித்தான் சுருள் சுருளாக இருக்கும். அவரின் சுருள்முடிகள் குழந்தையின் இளம் முடி போலப் பளபளப்புடனும் மென்மையுடனும் இருப்பதாகவே நான் உணர்ந்தேன்.
புதுமணப்பெண் இவரைப் பார்த்துத் தன் முகத்தைச் சுளித்தபடியே, தன் கணவரைப் பார்த்தார். ‘இதெல்லாம் பேருந்தில் சகஜம்தான்’ என்பது போல அந்தப் புதுமணஆண் தன் மனைவியைப் பார்த்தார். அதைப் புரிந்துகொண்ட அந்தப் புதுமணப்பெண் முகத்தைத் திருப்பி, சன்னல்வழியாகத் தெரிந்த வயல்வெளியைப் பார்க்கத் தொடங்கினார்.
அவர் தன்னுடைய உடலாட்டத்தாலும் பேருந்தின் உலுக்கல்களாலும் மெல்ல மெல்ல ஆடி ஆடி முன்னே நகர்ந்து, என் இருக்கைக்கு இணையாக, இடப்புறம் சற்றுப் பின்னகர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் சென்று நின்றார்.
அந்த இருக்கையில் இரண்டு குழந்தைகளோடு ஒரு குடும்பம் அமர்ந்திருந்தது. அவர்களின் குழந்தைகளுள் மூத்தது மட்டும் அவரின் ஆலம்விழுது போலத் தொங்கிக்கொண்டிருந்த கையைப் பற்றியது. உடனே, அந்தக் குழந்தையின் தந்தை, தொட்ட கையை மெல்ல அடித்து, விலக்கினார். குழந்தை சிணுங்கியது.
சிணுங்கல் ஒலியைக் கேட்டதும் தலையை உயர்த்தினார் அவர். ‘அந்தச் சிணுங்கல் ஒலி எங்கிருந்து வருகிறது?’ என்பதைத் தேடித் தன் தலையைச் சுழற்றினார். சிலம்பம் சுற்றுபவரின் கையசைவு போலவே அவரின் தலையசைவு இருந்தது. இறுதியாகத் தன் தலையை ஒரு கோணத்தில் நிறுத்தி, ‘ராணுவ ராடார்’ கருவி போல ஒலிகளை உள்வாங்கத் தொடங்கினார்.
‘சிணுங்கல் ஒலி தன் வலக்கையின் அருகில் இருந்துதான் வருகிறது’ என்பதைத் துப்பறிந்து, சடாரெனக் குனிந்து, அந்தக் குழந்தையைப் பார்த்தார். இதை எதிர்பார்க்காத அந்தக் குழந்தை வீறிட்டு அழத் தொடங்கியது. மூத்த குழந்தை அழுவதைப் பார்த்த இளைய குழந்தையும் அழத் தொடங்கியது. தாய் இரண்டு குழந்தைகளையும் அணைத்துக்கொண்டார்.
தந்தை தன்னருகில் தரையில் குனிந்தமர்ந்த அவரைச் சற்றுத் தள்ளிப் போகுமாறு சைகை காட்டினார். அந்தச் சைகை அவருக்குப் புரியவில்லை. அவர் அந்த இடத்திலேயே குத்தவைத்து அமர்ந்துகொண்டு, ‘அழும் குழந்தைகளுக்கு எதைக் கொடுத்துச் சமாதானம் செய்யலாம்?’ என்று சிந்தித்தார்.
தன் சட்டைப் பைக்குள் இடக்கை விரல்களை நுழைத்தார். முதலில் அகப்பட்டது பயணச் சீட்டுதான். அதை ‘ஏதோ ஒரு வெற்றுத்தாள்’ என நினைத்து, கசக்கி, தரையில் எறிந்தார். மீண்டும் விரல்களை நுழைத்தார். இரண்டு ஒரு ரூபாய் நாணயங்கள் வந்தன. அவற்றை அழும் குழந்தைகளுக்கு ஆளுக்கு ஒன்றாகக் கொடுக்க முனைந்தார்.
தந்தை ‘தர வேண்டாம்’ என்பது போல, அவரின் கையைத் தன் கையால் தடுத்தார். உடனே, அவருக்குச் சினம் வந்துவிட்டது.
“என்னையா அடிக்குற? நீ என்னையா அடிக்குற?” என்று மூச்சை இழுத்து இழுத்து சுவாசித்தபடியே கேட்டார்.
உடனே தந்தை சற்று அஞ்சி, “யாரு அடிச்சா? நான் உன்னைத் தடுக்கத்தானே செஞ்சேன்” என்றார்.
“இல்லை, நீ அடிச்ச. நீ என்னை அடிச்சிட்ட” என்றார்.
தந்தை தன் குரலை உயர்த்தி, “இல்லை. அடிக்கலை” என்றார்.
“அழற குழந்தைக்கு நான் காசுகொடுக்குறது உனக்குப் பிடிக்கலை. என்னை நீ அடிச்சிட்ட” என்றார் அவர்.
“உன்னோட காசு எங்குழந்தைகளுக்கு வேண்டாம்” என்றார் அந்தத் தந்தை.
“அதை உன்னோட குழந்தைக சொல்லட்டும்” என்று கூறிக்கொண்டே, அவர் வளைந்து அந்தக் குழந்தைகளுக்கு முன்பாகத் தன் தலையைத் தாழ்த்தி, காசை அவற்றிடம் கொடுக்க முயன்றார்.
இவரின் தலை அந்தக் குழந்தைகளை நெருங்க நெருங்க, அவை மேலும் மேலும் வீறிட்டு அழத் தொடங்கின.
நடத்துநர் வேகமாக வந்து, அவரின் வலதுதோளைத் தொட்டு, மெல்லத் தள்ளினார். அவர் தள்ளாடி, சாய்ந்து நகர்ந்து, மீண்டும் அந்தப் புதுமணத் தம்பதியரின் அருகில் வந்து நின்றார். அவரின் கையில் இருந்த இரண்டு ஒரு ரூபாய் நாணயங்கள் நழுவும் நிலையில் இருந்தன. நடத்துநர் சென்றுவிட்டார்.
அவர் என்னிடம் நியாயம் கேட்பது போல, “நீங்களே சொல்லுங்க, குழந்தைக்குக் கொடுக்குறத யாராவது தடுப்பாங்களா?” என்று கேட்டார்.
நான் ‘ஆமாம்’ என்பது போலவும் ‘இல்லை’ என்பது போலவும் தலையை அசைத்தேன்.
உடனே, அவர் என்னுடைய குழப்ப நிலையைப் புரிந்துகொண்டு, “என்ன, நான் சொல்றது புரியலையா? தமிழ்த் தெரியாதா?” என்று கேட்டுவிட்டு, “ஒய் தே ரெஃபியூஸ்டு மை கிஃப்ட்?” என்று கேட்டார்.
நான் இப்போதும் ‘ஆமாம்’ என்பது போலவும் ‘இல்லை’ என்பது போலவும் தலையை அசைத்தேன். என்னுடைய தலையாட்டல்கள் அவருக்கு எரிச்சல் ஏற்படுத்திவிட்டன போலும்.
அவர் சினத்துடன், “போ! உனக்கு இங்கிலீசும் தெரியாதா?” என்று கேட்டுவிட்டு, அந்தப் புதுமணத் தம்பதியரைப் பார்த்தார்.
அந்தப் புதுமணப் பெண், ‘இவர் தன்னை ஏதும் கேள்வி கேட்டுவிடுவாரோ?’ என்ற அச்சத்தில், தன் கணவரின் மடியில் சாய்ந்துகொண்டார். இப்போது கேள்வி புதுமண ஆணுக்குத்தான்.
அவர் அந்தப் புதுமணஆணைப் பார்த்து, “டிட் யூ நோ இங்கிலீஸ்? ஆர் தமிழ்?” என்று கேட்டார்.
அவர் தன் தலையைச் சற்றுப் பின்னுக்கு இழுத்து, அவரின் முதுகுக்கும் இருக்கைக்கும் இடையில் தெரிந்த என்னுடைய முகத்தைப் பார்த்தார். நான் புன்னகைத்தேன்.
அவர் அந்தப் புதுமண ஆணிடம், “டெல் மி?” என்றார்.
அந்தப் புதுமண ஆண் தன் தலையைத் தாழ்த்தித் தன் மனைவியின் முதுகைப் பார்த்தார்.
ஆனாலும், அவர் அந்தப் புதுமண ஆணை விடவில்லை. “டெல் மி?”, “டெல் மி?” என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.
பின்னர் என் பக்கம் திரும்பி, “யூ டெல் மி?” என்று கேட்டார்.
இப்போதும் நான் ‘ஆமாம்’ என்பது போலவும் ‘இல்லை’ என்பது போலவும் தலையை அசைத்தேன்.
அவருக்குத் தலை வலித்துவிட்டது போல. அவரின் கையிலிருந்து நாணயங்கள் நழுவி தலையில் விழுந்து உருண்டன. அவை ஆளுக்கு ஒரு பக்கமாகத் திரும்பி, வெவ்வேறு இருக்கைகளுக்கு அடியில் சென்று, மறைந்தன.
அவர் தன்னிரு கைகளாலும் தன் தலையைப் பிடித்துக்கொண்டு, தரையில் அமர்ந்தார். தலையை மேலும் தாழ்த்திக் கொண்டார். அவருக்கு விக்கல் வந்தது. அதனைத் தொடர்ந்து வாந்தியும் வந்தது. தன் மடிமீதே வாந்தியை எடுத்துவிட்டு, அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தார்.
என் கால்களுக்கு முன்பாக உயர்ந்திருந்த இரும்புக் கம்பியைப் பிடித்தார். பேருந்தின் தளத்தில் நன்றாக அமர்ந்துகொண்டார். அவரின் தலைக்கு அருகில் என்னுடைய வலக்காலின் தொடை இருந்தது. அதில் அவரின் தலை மெல்ல உரசியது. பின்னர் வேகமாக உரசியது. நான் அசையாமல் இருந்தேன்.
என்னுடைய தொடை அவருக்கு வசதியாக இருந்தது போல. அவர் என் தொடையின் மீது தன் நெற்றியை வைத்துக்கொண்டு, சிறிது நேரம் அப்படியே இருந்தார். சில நிமிடங்களில் மெல்லிய குறட்டை ஒலியை எழுப்பித் தூங்கத் தொடங்கினார். அவர் ஒரு குழந்தைபோலவே என் தொடை மீது தலை சாய்த்துத் துயின்றுகொண்டிருந்தார். நான் அவரின் சுருள்முடிகளை என் வலக்கை விரல்களால் மெல்லக் கோதிவிட்டேன்.