கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 6, 2022
பார்வையிட்டோர்: 4,103 
 
 

“ஏம்மா.. இத்தன பேரு வேல பாத்தும் ஒரு வேல கூட முழுசா நடக்கலயே. கையிலயா எழுதுறீங்க. ம்… ஒரு மிசினா ரெண்டு மிசினா, மொத்தம் பன்னெண்டு மிசினு இருக்கு. மிசின்ல என்ன நிகழ்வுனு கொடுத்தா அது செய்யப் போகுது. இல்ல…. எதும் புரியலனா என்கிட்ட கேட்டா நா சொல்ல மாட்டேனா. அது என்னாச்சு இது என்னாச்சுனு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் காலையிலிருந்து போன்ல கேட்டுக்கிட்டே இருக்காங்க. நா என்னத்த சொல்லி மழுப்புறது. எனக்குனு ஒரு மரியாதை இருக்கு அதக் கெடுத்துறாதீங்க.” ஆடிட்டர் கோவிந்தராஜின் சத்தத்தில் அந்த அறையே நிசப்தமானது.

அப்போது பக்கத்து அறையிலிருந்து இரண்டு கோப்புகளுடன் வந்தாள் நவநீதசுந்தரி.

“என்னம்மா…வந்த புதுசுல நீயும் ஒழுங்காதான் வேல பாத்த. இவங்களோட சேர்ந்து நீயும் வரவர சொதப்ப ஆரம்பிச்சுட்டீயே.”

அவள் எதுவும் பேசாமல் இரண்டு கோப்புகளையும் அவர் கைகளில் நீட்டினாள். வாங்கி ஒவ்வொரு பக்கமாக புரட்டி பார்த்துவிட்டு அவளின் முகத்தைப் பார்த்தார். சீதையம்மாள் டிரான்ஸ்போர்ட் ஆடிட்டிங் பேமஸ் ஜவுளிக்கடை ஆடிட்டிங்கும் பணிகள் நிறைவு பெற்றிருந்தன. வேற எதும் பாக்கனும்னா சொல்லுங்க சார் என்பது போல அவரை பார்த்துக் கொண்டிருந்தாள் நவநீதசுந்தரி.

“பரவாயில்லையே. வேலக்கி வந்த நாள்ல இருந்து இந்தப் பொண்ணுக்கிட்ட ஒரு குறையும் பாக்க முடியலயே. எனக்கும் வயசு எழுபது ஆகப் போவுது. இந்த மாதிரி துருதுருனு இருக்க பொண்ண ஒன்னு ரெண்டதான் பாக்க முடியுது.” ம்….. தலையாட்டி்கொண்டே கோப்புகளை கையில் வைத்துக்கொண்டு சீதையம்மாள் டிரான்ஸ்போர்ட் மேலாளர் ரெத்தினத்தை அலைபேசியில் தொடர்பு கொண்டபடி தனது அறைக்குள் நுழைந்தார் ஆடிட்டர் கோவிந்தராசு.

“இப்புடி எறிஞ்சு விழுறது தப்பு இல்லயா. எல்லாம் வயசுக்கு வந்த புள்ளைங்க. வெளியில போயி ஒன்ன திட்ட மாட்டாங்களா. வேல பாக்குறவுங்ககிட்ட அன்பா இருடா. வயசுக்கு ஏத்த பக்குவம் ரொம்ப முக்கியம்” நண்பர் செங்குட்டுவன் சொன்னதை நினைத்து தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டார்.

“நா சாமி கும்புடுறது இல்லனு உனக்கு தெரியும். எனக்கு எல்லாமே இந்த ஆபிஸ்தான். யாரா இருந்தாலும் கொடுத்த வேலயா சரியான நேரத்துல செஞ்சு முடிக்கனும். இல்லனா, பொம்பளப் புள்ளைகள வச்சுக்கிட்டு கெழவன் அரட்டை அடிக்கிறானு, இங்க வந்துட்டு போற நூறு பேருல எவனாவது ஒருத்தன் டவுனுக்குள்ள பொய்யும் பொரட்டுமா சொல்லிக்கிட்டு திரிவான். கோவிந்தராசு சிடுமூஞ்சிகாரனு சொல்லட்டுமே. அதுனால எனக்கு ஒரு நட்டமும் இல்ல. ஆனா இங்க வேல பாக்குற பொம்பளப் புள்ளைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு கெடைக்கும்ல”. நினைப்போடு இருக்கையில் அமர்ந்து அழைப்பு மணியை அழுத்தினார்.

அழைப்பு மணியோசை கேட்டு உள்ளே நுழைந்தாள் நவநீதசுந்தரி.

“சார்…” அவளின் ஒலியளவு மிக மெதுவாய் இருந்தது.

நீல நிறத்தில் கோப்பு ஒன்றை கொடுத்து ”இந்த கோப்புகள புரட்டி பாரும்மா. அரைமணி நேரத்துல கணேசன்னு ஒருத்தரு வருவாரு. அவருக்கிட்ட தேவையான வெவரத்த கேட்டுக்க. இந்த வேலை எப்ப முடியுமுனு சரியாச் சொல்லி அனுப்பிடு. பீஸ் எப்பவும்போல பாதி வாங்கிடும்மா”

கோவிந்தராஜின் பேச்சுக்கு ஆமோதிப்பது போல் தலையாட்டிக் கொண்டே சென்றாள் நவநீதசுந்தரி.

ஆடிட்டர் கோவிந்தராசின் அலுவலக நேரம் காலை பத்துமணி முதல் மாலை ஆறுமணி வரைதான். ஞாயிறு விடுமுறை. எல்லோரும் வீட்டுக்குச் சென்ற பிறகு இரவு பத்துப் பதினோரு மணிவரை அலுவலகத்தில் வேலை பார்ப்பார். பல நேரங்களில் அங்கேயே சாப்பிடாமல் கூட உறங்கி விடுவிடுவார்.

“ஏங்க இப்புடி ஒடம்ப கெடுத்துக்குறீங்க. பசங்கதான் நல்ல நிலையில் இருக்கானுக. நமக்கு என்ன குறை. வயசான காலத்துல ஒரு இடத்துல இருக்கக் கூடாதா. இதுவரைக்கும் ஒழச்சது போதாதா.” தினந்தோறும் இப்படி சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் உலகநாயகி.

“உலகம் தெரிஞ்சவனு நெனச்சுதான் என் மாமனாரு பொருத்தமா ஒனக்குப் பேரு வச்சுருக்காரு. ஒன்னோட ஒலகத்துக்குள்ள இந்தக் கோவிந்தராச அடச்சுப் போட்றனும்னு இந்தன வருசமா போராடுற. ம்….ஒன்னோட உலகத்த விட்டு நா எப்ப வெலகுனேன். எங்க இருந்தாலும் ஒனக்குள்ளதான் அடஞ்சு கெடக்குறேன்.” அவரின் பேச்சுக்கு வலுசேர்ப்பதைப்போல “எதையாவது சொல்லி மயக்கிப்புடுங்க. பேசாம நீங்க வக்கீலுக்கு படிச்சு வக்கீல் ஆயிருக்கலாம்” என்றார்.

“பேசுனாதானே வக்கீல் ஆக முடியும்…” மொட்டு மலர ஆரம்பிப்பதைப் போல் சொற்களை மெல்ல தூவினா். அந்தச் சொற்களில் நனைந்து மலர்ந்து கொண்டிருந்தார் உலகநாயகி. வயது கடந்தும் அவர்களின் சொற்களில் காதல் குடிகொண்டு நடனமாடியது.

காரு , பங்களா என்று வசதிக்கு குறைவில்லை. பணம் வாழ்க்கை நடத்துறதுக்கு ஒரு துணை அவ்ளோதான் என்று உணர்ந்ததால் பணத்தின் மீது அவ்வளவு ஆசை அவருக்கு கிடையாது. மகன் முகிலன் திரைத்துறையில் இசையமைப்பாளர். மேலும் இசைக் கல்லூரி ஒன்றையும் நடத்துகிறார். மகள் தமிழினி மகப்பேரு மருத்துவராக இருக்கிறார். ஆபிஸ அடுத்த ஆளுகிட்ட விட்டா நம்ம பேர காப்பாத்த மாட்டாங்க. நம்ம இருக்குறதால இத்தன பொம்பளப் புள்ளைங்களுக்கும் வேல கெடக்குது. ஆபிஸ இழுத்து மூடிட்டா நமக்கு ஒன்னும் நட்டம் இல்லனாலும் இத்தன புள்ளைங்களோட குடும்பம் என்னாகும். ஏதோ உசுரு இருக்க வரைக்கும் ஆபிஸ் இயங்கட்டும் என்று எண்ணியே ஆடிட்டர் கோவிந்தராசு அலுவலகத்தை நடத்தி வந்தார்.

வேலை முடிந்து பேருந்து நிலையத்திற்கு சின்னப்பா பூங்கா வழியாகத்தான் நவநீதசுந்தரியும் யாமினியும் நடந்து செல்வார்கள். அந்த வழியில்தான் தனம் பேங்கர்ஸ் என்ற வட்டிக்கடை இருக்கிறது. அந்தக் கடையின் அருகில் செல்லும்போதெல்லாம் எதையோ முனுமுனுத்துக் கொண்டே செல்வாள் நவநீதசுந்தரி.

எத்தனையோ நாய்ங்க தெருவுல திரியுது. சில நாய்க கத்துது, சில நாய்க மூடிக்கிட்டு கெடக்குது, கத்துறது…. லோலோனு அலையுறது நாயோட கொணம்டி. அதுக்காக அதுககூட சண்ட போட முடியுமா. நம்ம வேலய பாத்துக்கிட்டு போக வேண்டியதுதான். நாம கிராமத்துல இருந்து டவுனுக்கு வேலக்கி வர்றோம். வந்தம்மா வேலய பாத்தமானு ஊரு போயி சேரனும்டி. டவுன்லயே பெரிய வட்டிக்கடை இதுதான். அதுமட்டுமா தனம் லாட்ஜ்ம் அவனுகோட்டுதான். ஒரே புள்ள அதான் போற வர்ற பொம்பளப் புள்ளைகள ரூட்டுவிட்டுக்கிட்டு திரியுறான். நமக்கென்ன….. எத்தனையோ முறை யாமினியும் சொல்லிவிட்டாள். ஆனாலும் புவியரசை பார்க்கும் போதெல்லாம் மனதுக்குள் திட்டுவதை நவநீதசுந்தரி நிறுத்துவதே இல்லை.

கிழக்கு சூரியன் மேற்கே மறைகிறதோ இல்லையோ புவியரசு மறக்காமல் மாலை நேரம் தனது கடை வாசலுக்கு வந்துவிடுவான். ராயல் என்பீல்டு வண்டியில் செல்போன் பேசியபடி பின் தொடர்வதை தலையாய பணியாக கொண்டிருந்தான்.

“மாப்ள ஒரு கவிதை சொல்றேன் கேளு…

காற்றில் ஆடும் செவ்வந்தி பூ
உன்
மாராப்பில் ஒளிந்துகொண்டு
என் மனதை திருடும் வித்தை
கேளடி….
அருகே தோழி
அன்ன நடையே
அலையும் என் மூச்சு
அமுதம் தர
எடுத்துச் சொல்வாயோ…
என் பீல்டு வண்டியும்
நொண்டியாய் ஒண்டியாய்
நாள்தோறும் நலியுதே
என் மேனி மெலியுதே
கிராமத்து தேன் ஊற்றே
என்னைக் கிரங்கடிக்கும்
தென்றல் காற்றே….
வாரேன் வாரேன்
வாயேன் வாயேன்
உனது
வலது கரத்தை தாயேன்…..!

மாப்ள எப்படிடா இருக்கு என்னோட கவிதை”. அலைபேசியில் பேசியபடி வண்டியை இயக்கினான்.

மெல்லியதாய் சிரித்தவள், பேருந்தின் சன்னலோரமாய் உட்கார்ந்தாள். நகரத்து காற்றில் நவநீதசுந்தரியின் மூச்சுக்காற்று கலந்து புவியரசின் முகத்தில் பளிச்சென பட சிலிர்த்துப் போனான்.

“டவுனு பசங்ககிட்ட கவனமா இருக்கனும்டி. அவன் நம்ம பின்னாடி சுத்துறது தெரிஞ்சுச்சுனா சாரு நம்மல வேலயவிட்டு தூக்கிருவாரு.” யாமினியின் பேச்சை காதில் வாங்காதவளாய் பேருந்தில் ஒலித்த செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா…. பாடலில் மூழ்கிப் போனாள்.

தனது திருமணம் அடுத்தவாரம் ஞாயிற்றுக்கிழமை தபசுமலை முருகன் கோவிலில் நடப்பதாகச் சொல்லி அழைப்பிதழை எல்லோரிடமும் கொடுத்திருந்தாள் யாமினி. அவளை திருமணம் முடியும்வரை வீட்டில் ஓய்வு எடு திருமணத்திற்கு பிறகு உன் கணவனிடம் சொல்லிவிட்டு பணிக்கு வரலாம் என்று சொல்லி மூன்றரை பவுன் நெக்லஸும் வாங்கிக் கொடுத்தார் ஆடிட்டர் கோவிந்தராசு. ஆனால் அவளோ வீட்டில் எனக்கொன்றும் வேலையில்லை. அதனால் வேலைக்கு வருகிறேன் என்று பிடிவாதமாக வந்தாள்.

தமது அலுவலகத்தில் இரண்டாண்டுக்கு மேல் பணியாற்றுபவர்களின் திருமணத்திற்கு மூன்றரைபவுன் நெக்லஸ் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பது உலகநாயகியின் உத்தரவு.

“லீவே கொடுக்காம சாரு வேல வாங்குறாருனு யாரும் தப்பா நெனைக்க மாட்டாங்களா” நவநீதசுந்தரி சொன்னதை காதில் வாங்கிக் கொண்டவள்…

“பெத்த தகப்பனோடு எத்தன நாள்டி வாழப்போறோம். நம்ம சாரு எனக்கும் தகப்பன் மாதிரிதான். சிடுசிடுனு சத்தம் போட்டாலும் தங்கமான மனசுடி சாருக்கு. நா வேணுங்கிற நெனப்புல என்னக் கட்டிக்கப் போறவன் எல்லாத்துக்கும் மண்டய ஆட்டுறான். கல்யாணத்துக்குபிறகு அப்புடியே இருக்க முடியுமா. போற எடத்துல என்ன நெலமையோ அதப் பாத்த பிறகுதான்டி வேலக்கிப் போறதா இல்லையானே முடிவு எடுக்க முடியும். அதுவரைக்கும் ஒங்க கூட இருக்கேனே…”யாமினியின் பேச்சில் கண்கலங்கிப் போனாள் நவநீதசுந்தரி.

யாமினியின் திருமணத்திற்குப் பிறகு நவநீதசுந்தரி கண்ணனூரிலிருந்து தனியாகத்தான் வேலைக்கு வந்து சென்றாள். புவியரசு அவளை பின்தொடர்ந்து செல்வதில் முன்னேற்றம் கண்டான். மெல்லியதாய் சிரிக்க ஆரம்பித்தவள் மணிக்கணக்கில் அலைபேசியில் அவனோடு சிரித்து சிரித்து பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டாள்.

யாருக்கும் சந்தேகம் வந்துவிடாதவாறும் நடந்து கொண்டாள். எப்போதாவது யாமினி அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினால் புவியரசைப் பற்றிக் கேட்பாள். அப்போதெல்லாம் நீதான் சொல்லியிருக்கியே நாம உண்டு நம்ம வேல உண்டுனு இருக்கனும்னு. நா எதயும் கண்டுக்கிறது இல்லடி. பூமி தன்னையும் சுத்திக்கிட்டு சூரியனையும் சுத்துது. என்னைக்காச்சும் சூரியன பூமி தொட முடியுமா. தொட்டா மொத்தமா எரிஞ்சு போயிரும்… நவநீதசுந்தரியின் சொல்லாடலில் உண்மை இருப்பதை உணர்ந்து பெருமைபட்டுக் கொண்டாள் யாமினி.

ஒட்டுமொத்த அழகையும் உதடுகளுக்குள் பூட்டிவச்சு உசுர எடுக்குறாளே. அதை உறிஞ்சி குடிக்கும் நாள் எந்நாளோ. அந்த நாள் எந்த உலகில் இருக்கோ தெரியலயே. ஓராயிரம் கவிதைகளை ஒவ்வொரு கண்களுக்குள்ளும் குவித்து வைத்து என் இதயத்தை குடைபவளின் மேனியை என் கரங்களால் கடைந்தெடுக்க நேரம் சீக்கிரம் வாய்க்காதா. நம்ம வச்ச குறி தப்பவில்லை. இருந்தாலும் சுவைத்துவிட முடியவில்லையே என்று ஏங்கினான் புவியரசு.

காதலின் உச்சத்திற்கு சென்றான் புவியரசு. அதனைக் கொண்டாடும் விதமாக சத்யம் லாட்ஜில் அறை எடுத்து தன் நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்து மகிழ்ந்தான்.

மாப்ள ஒனக்கு மச்சம்டா. இல்லனா பேரழகின் பிறப்பிடமாய் திகழும் அவள் கிடைப்பாளா. இன்னும் அவள எங்கயும் கூட்டிப் போகலயா. என்னடா இப்புடி சொதப்புற. வாழ்க்கையின் ரகசியத்தை நாங்கள் சொல்லித் தரனுமா என்னா… மதுவுக்குள் மூழ்கிய நண்பர்கள் சொற்களை வழிந்தோடச் செய்தார்கள். மதுவுக்குள் மூழ்கியவாறே அந்தச் சொற்களை மாலையாக்கி அணிந்து மகிழ்ந்தான்.

ஆடிட்டர் கோவிந்தராஜின் எழுபதாவது பிறந்த நாள் விழாவினை அலுவலகத்தில் எல்லோரும் கொண்டாடிக் கொண்டு இருந்தார்கள். இரவு விருந்துடன் விழா நிறைவு பெற ஏழு மணியானது.

நவநீதசுந்தரியின் அலைபேசி சினுங்குவதும் அமைதியாவதுமாக இருந்தது. ஒருகட்டத்தில் அதன் ஒலியளவைக் குறைத்து வைத்தாள். கவனித்துக் கொண்டிருந்த ஆடிட்டர் கோவிந்தராசு மாடியிலிருந்து வெளியில் வாசலைப் பார்த்தார். புவியரசு வீதியில் அலைபேசியை நோண்டிக்கொண்டு நின்றான். உள்ளே வந்தவர் நவநீதசுந்தரியை பார்த்தார். அவள் அலைபேசியில் குறுந்தகவல் ஒன்றை பதிவு செய்துகொண்டு இருப்பதை அவளின் பின்புறம் இருந்த நிலைக் கண்ணாடி காட்டிக் கொடுத்தது. குறுஞ்செய்தியை அனுப்பியவள் தனது கைப்பைக்குள் அலைபேசியை வைத்தாள்.

வேகமாய் மாடியிலிருந்து வீதியை பார்த்தார். புவியரசு அலைபேசியை சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு மாடியை திரும்பி பார்த்தபடி சென்றுகொண்டிருந்தான்.

நவநீதசுந்தரியின் நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாமல் வழக்கத்தைவிட சுறுசுறுப்பாக காணப்பட்டாள். யாமினி வராத நாட்களில் புவியரசோடு காரில் அவளது ஊர் எல்லைவரை செல்வதை ஆடிட்டர் கோவிந்தராசுவிடம் நண்பர் செங்குட்டுவன் பலமுறை நேரில் பார்த்ததாக சொல்லியிருக்கிறார்.

விழா முடிந்ததும் நவநீதசுந்தரியை தனது காரில் ஏற்றிக் கொண்டு பேருந்து நிலையம் வந்தார். புவியரசு பின்தொடர்ந்து கொண்டே இருந்தான். வீட்டுக்குப் போயிட்டு எனக்கு போன் பண்ணும்மா. நாளைக்கி மதியம் வந்தால் போதும். உனக்கும் சீக்கிரம் மூன்றரை பவுன்ல நெக்லஸ் வாங்கனும். உங்க அப்பாகிட்ட சொல்லி ஒனக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளை பாக்கச் சொல்லனும் என்று சொல்லிக்கொண்டே தனது காரை ஓரமாக நிறுத்தினார். அவள், வர்றேங்க சார் என்றவாறு பேருந்தில் ஏறினாள். பேருந்து புறப்பட்டது. புவியரசின் அழைப்பு வந்துகொண்டே இருந்தது. ஆடிட்டர் பார்த்துக்கொண்டே இருந்ததால் பேருந்து மறையும் வரை அலைபேசியின் ஒலியளவை குறைத்தே வைத்திருந்தாள்.

“ஏங்க இப்புடி பறக்குறீங்க. நான்தான் வர்றேனு சொல்லிட்டேன்ல. ராத்திரி பூரா தூங்கவிடல. கல்யாணம் வரைக்கும் பொறுத்திருக்க முடியாதா. அவ்ளோ அவசரமா. சார் மத்தியானம் ஆபிஸ்க்கு வரச்சொன்னார். நா ஒடம்பு சரியில்லைனு லீவு சொல்லிட்டேன். ஒங்களுக்காக நான், எங்க சார்கிட்ட சொன்ன முதல் பொய். இன்னும் எத்தன பொய் சொல்ல வைக்கப் போறீகளோ” சொல்லிக்கொண்டே கட்டிலில் அமர்ந்தாள். சாய்ந்தரம் கொண்டு போய் டவுன்ல விட்ருங்க. அப்பதான் ஆபிஸ் முடிஞ்சு போறமாதிரி எங்க ஊர் பஸ்ல வீட்டுக்கு கெளம்ப முடியும்.” முந்தானையை வலது கை விரல்களால் பின்னிக்கொண்டிருந்தாள்.

“இப்பவே மணி பன்னண்டாச்சு. நாலு மணிக்கு கார்ல கெளம்புனா ஆறுமணிக்கெல்லாம் போய்டலாம். இந்த லாட்ஜ்க்கு ஒருநாள் வாடகை பதினஞ்சாயிரம். எல்லாம் ஒனக்காகத்தான். வா…. அடங்கா பசியோடு இருக்கேன் என்னை அப்படியே அடக்கிவிடு” மேல்சட்டை பணியனை கழட்டி கட்டிலில் போட்டவன் அவளை நெருங்கி தோள்களில் கை போட்டான். தொட்டால் சினுங்கியாய் வெட்கத்தில் குறுகிப் போனாள்.

அவளை மார்போடு அணைத்தான். தூண்டில் மீனாய் துடித்தாள். என்னங்க… நான் சொன்னேனே வாங்கி வந்தீங்களா… முனுமுனுத்தாள். ம்…. வாங்கி வந்திருக்கேன். கொஞ்சம் குடிச்சாலே போதை இமயமலை உச்சிக்கு கொண்டு போய்டும். அதோடு உன்னோட போதையும் சேர்ந்தால் எனக்கு கண்ணே தெரியாது. அதாங்க எனக்கு வேணும்… சொல்லிக்கொண்டே மதுப்பாட்டிலை திறந்து கண்ணாடி குவளையில் ஊற்றினாள். அவன் ஒட்டுமொத்தமாக தனது ஆடைகளை களைந்து மெல்லிய துண்டு ஒன்றை கட்டியிருந்தான்.

சன்னல் கதவினை திறந்தாள். வெளிக்காற்று உள்ளே நுழைந்து வேடிக்கைப் பார்த்தது. எதற்கு சன்னலை திறந்தாய் என்பது போல் கண்களை உயர்த்தினான். நாம் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து அந்தச் சூரியன் கொஞ்ச நேரம் வெட்கத்தில் குளிரட்டுமே என்றாள்.

என்னங்க கல்யாணத்துக்குப் பிறகு உங்கப் பசியை அடக்க முடியாமல் திணறப் போறேன். அவன் மதுவை குடித்துக்கொண்டே அவளை இறுக அணைத்தான். என்னங்க எதையும் நீங்க முழுசா சாப்டுவீங்களா இல்ல அறைகுறைதானா.

நான் முழுசா உன்ன சாப்பிடப் போறத பாக்கத்தானே போற. எப்புடி நம்புறது. அப்புடினா இந்தப்‌ பாட்டில் முழுவதுமாய் குடிங்க பாக்கலாம்.

ம்….அப்படியா.

ம்… அப்படித்தான்.

இத முழுசா குடிச்சா என் கண்ணே எனக்குத் தெரியாது. அப்படினா இன்னக்கி ராத்திரி இங்கயே தங்கிருவோமா… எத்தன ராத்திரி வேணாலும் ஒங்க கூட தங்குறேன்ங்க. அவளின் சொற்களில் சொக்கிப் போனவன் ஆனந்தத்தில் அப்படியே குடித்தான்.

வாய் அவனுக்கு உளர ஆரம்பித்தது. அவளின் மார்பில் சாய்ந்தான். முந்தானையின் வாசத்தை நுகர்ந்தபடி அவளையும் நுகர கட்டிலில் அவளோடு சாய்ந்தான். அவனால் அவளை இப்போது நுகர முடியாது என்பதை உணர்ந்தாள்.

தனது பையை திறந்தாள். அவனைப் பார்த்தாள். மேற்கு சுவரையும் பார்த்தாள். கண் இமைக்கும் நேரத்தில் அவனது குறியை அறுத்து சன்னலில் எறிந்தாள். அது தார்ச்சாலையில் விழ, வேகமாக வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி நசுங்கியது. . நவ….நவ…. என்று அலறினான். அலறல் சத்தம் கேட்டு லாட்ஜில் இருந்தவர்கள் அறையை நோக்கி ஓடிவந்தனர்.

“எத்தனப் பொண்ணுகள நாசம் பண்ணியிருப்ப. அப்பாவி புள்ளைகள மயக்கி கெடுத்து அத வீடியோ எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்புறியா. பாருடா….. பாரு…..” என்று கத்திக்கொண்டே தனது பைக்குள்ளிருந்து செய்தித்தாள்களை எடுத்து அவன் மேல் போட்டாள். “இந்த கவிதாளும் நானும் ஆறாங்கிளாசுலருந்து ஒன்னாப் படிச்சோம்டா. என் உசுருடா அவ. அவளை மயக்கி கெடுத்து கொன்னுட்டியேடா. பணம் இருக்க திமிருல ஜெயிலுக்குப் போறதும் வாரதும் ஒனக்குப் பழகிப் போச்சுல. நா என்ன கூறுகெட்ட சிறுக்கியா. ஒன்ன நேரா எதிர்க்க என்னால முடியாதுடா. ஆனா எனக்கு இதவிட்டா வேற வழி தெரியல. ஒனக்காகவேதான்ட அங்க வேலக்கி சேந்தேன். இப்ப கூட என்னைய படம்பிடிக்க கேமராவ செட்பண்ணி வச்சுருக்கே. நீ செட் பண்ணுன வீடியோ உலகம்பூரா போகட்டும். நாசம் பண்றவனுகளுக்கு பயம் வரட்டும்”

அவள் சொல்வது எதுவுமே அவன் காதில் விழவில்லை. கைகளை இடுப்பில் பொத்திக்கொண்டு கத்தினான். இரத்தம் பீறிட்டு வழிந்தோடியது. கதவு தட்டும் சத்தம் கேட்டது. அவள் திறக்கவில்லை. நான்கைந்து பேர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தனர்.

செய்தித்தாள்கள் கட்டிலில் சிதறிக் கிடக்க கைகளில் இரத்தம் வழிய பெருமூச்சுவிட்டபடி கத்தியுடன் நின்றாள் நவநீதசுந்தரி. இரத்த வெள்ளத்தில் கட்டிலில் செத்துக் கிடந்தான் புவியரசு.

என் இயற்பெயர் தீ.திருப்பதி. சோலச்சி என்பது யார்......? இதற்கான விளக்கத்தை எனது "முதல் பரிசு " சிறுகதை நூலில் என்னுரையில் பதிவு செய்துள்ளேன். நான் புதுக்கோட்டை மாவட்டம் இராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி , நச்சாந்துபட்டியில் பத்தாம் வகுப்பு (1997-1998) படிக்கும்போது எனக்கு அறிவியல் ஆசிரியராக இருந்தவர் தான் திருமதி. எஸ்.சோலச்சி அவர்கள். என் குடும்பம் சோற்றுக்கும் துணிக்கும் தங்குவதற்கும் வழியில்லாமல் ஊர் நடுவிலே இருந்த புளியமரத்தடியில் வாடி வதங்கிய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *