குடியிருப்பில் ஒரு வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 6,746 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

நாகரிக நகரங்களில் தவிர்க்க முடியாத வளர்ச்சியாகத் தலையெடுக்கிற எல்லா “எக்ஸ்டென்ஷன்”களையும் போல் தான் அந்தக் குடியிருப்பும் அமைந்திருந்தது.

அமைதியான சூழ்நிலை, பரபரப்பு இல்லாத அருமையான தெருக்கள், “மொட்டைமொழுக்கென்று அழகோ கவர்ச்சியோ இல்லாது கட்டப்பெற்றுள்ள சதுர வடிவக் கட்டிடங்கள் முதலியவற்றை நாகரிக விதிகளின்படி கொண்டிருந்த அந்தப் பகுதிக்கு ஆரம்பத்தில் “நியூ காலனி” என்று தான் பெயர் சூட்டியிருந்தார்கள்.

காலவேகத்தில், பெயர்களுக்கும் தமிழ் வடிவம் கொடுக்க வேண்டியது அவசியம் என்று முளைத்த ஒரு உணர்வைப் பின்பற்றி – அந்த வட்டாரத்துக்கும் “புதுக்குடியிருப்பு” என்று பெயரிட்டு, பளபளக்கும் தகடுகளில் வார்னிஷ் பெயிண்டில் அழியாத முறையில் எழுதி, அநேக இடங்களில் பதித்து விட்டார்கள்.

இத்தகைய “மூளை அதிர்வு”களுக்கு யார் காரணம் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும், அவர்களுடைய திடீர் நடவடிக்கைகளின் பிரத்தியட்சப் பிரமாணங்களாகத் திகழும் பெயர்பலகைகள் பல இடங்களிலும் பளிச்சிடுவதை எளிதில் காணலாம்.

“புதுக்குடியிருப்பு” என்ற அந்த “நியூ காலனி”யில் மூன்று தெருக்களும் முப்பத்தைந்து வீடுகளும் தான் இருந்தன. முதல் தெரு, இரண்டாம் தெரு, நடுத்தெரு என அழைக்கப்பட்ட வீதிகளில், நடுத்தெரு திடீரென்று முக்கிய கவனிப்புக்கு இலக்காகும் தகுதியைப் பெற்றது.

பெரிய நகரங்களில் வீடு கட்டுவதற்கு என்று, தகுதி பெற்றோருக்கு அளிக்கப்படுகிற சலுகைகளையும் பண உதவிகளையும் பிற வசதிகளையும் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் சொந்த உபயோகத்துக்கு என்று வீடு கட்டியவர்களும், அப்படி கட்டிய வீட்டை “நல்ல வாடகை கிடைக்கும்” என்று வேறு யாருக்காவது குடக்கூலிக்கு விட்டு விடுகிறவர்களும் இந்தக் குடியிருப்பிலும் இருந்தார்கள்.

நடுத்தெருவில், வசதி நிறைந்த ஒரு வீடு, ஒருவரின் சொந்த் உபயோகத்துக்காகக் கட்டப்பட்டு, அவரால் சிறிது காலம் அனுபவிக்கப்பெற்று, சில மாதங்களாகப் பூட்டியே கிடந்தது. வீட்டுக்காரர் உத்தியோக மாறுதலில் வேறொரு பெரிய நகருக்குப் போய்விட்டதாக “விஷயம் தெரிந்தவர்கள்” பேசிக் கொண்டார்கள்.

ஒருநாள் – விடிவதற்கு முன்னரே –

“மூன்று மணியிருக்கும்” “ஒன்றரை மணி “இல்லை. நாலு மணிதான்” என்று பல்வேறு அபிப்பிராயங்கள் எழுந்து பரவுவதற்கு உதவிய ஒரு நேரத்தில் –

புதுக்குடியிருப்பு நடுத்தெருவுக்கு ஒரு கார் வந்தது. அந்த வீட்டின் முன் நின்றது. பிறகு போய் விட்டது.

காரில் வந்து இறங்கியவர்கள் யார், எத்தனை பேர். எப்படிப்பட்டவர்கள் என்று எவருக்கும் தெரியாது. ஆனால், அந்த வீட்டுக்கு யாரோ குடி வந்துவிட்டார்கள் என்கிற விஷயம் அவ்வட்டாரத்தின் மூன்று தெருக்களிலும் உள்ள எல்லா வீட்டினருக்கும் தெரிந்து விட்டது.

அந்த வீட்டைக் கட்டியவர் தூக்கத்தின் பக்தரோ, அல்லது லட்சியக் கனவுகள் ஆசைக்கனவுகள் பல வளர்க்கும் உள்ளம் பெற்றிருந்தாரோ – ஏனோ, தெரியவில்லை – தான் கட்டிய வீட்டுக்கு “ஸ்வப்னா” என்று பெயரிட்டிருந்தார். அந்தப் பெயர் பலரும் பலவிதமாகப் பேசுவதற்கு இடமளித்துக் கொண் டிருந்தது. யாருமே இல்லாது அடைப்பட்டுக் கிடந்த காலத்தில் “சொப்பனம் தூக்க நிலையில் இருப்பது நியாயம் தானே!” என்ற தன்மையில் அக்கம் பக்கத்தார் பேசுவது வழக்கம்.

இப்போதும் இஷடம்போல் பேசுவதற்கு “ஸ்வப்னா” துணை புரிந்தது.

அந்த வீட்டின் முன் கதவு திறக்கப்படாமலே கிடந்தது. சன்னல்களில் குளுமையான மென் வர்ணத் திரைகள் தொங்கின. அடைபட்டுக் கிடந்த வீடு, உயிர்ப்பும் உணர்வும் பெற்றிருப்பதற்கான தடயங்கள் தெரிந்தனவே தவிர, கலகலப்போ இயக்க வேகமோ பெற்றுவிட்டதாகக் காட்சி தரவில்லை.

ஆகவே, “சொப்பனம் இன்னம் தூக்கக் கிறக்கம் தெளியாமல் தான் இருக்கிறது” என்று மற்றவர்கள் பேசினார்கள்.

அவரவர் கவலைகளும் சோலிகளும் அளவுக்கு அதிகமாகப் பெருகிக் கிடக்கின்ற இந்நாட்களில் எல்லோரும் அந்த ஒரு வீட்டைப்பற்றியே சதா கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாதுதானே? புதுக்குடியிருப்பு வாசிகளுக்கும் எத்த னையோ அலுவல்கள்! எவ்வளவோ கவலைகள்! அதனால் அவர்களுக்கு “ஸ்வப்னா விஷயம் எப்பவாவது பேசிப்பொழுது போக்குவதற்கு உதவக்கூடிய பல விஷயங்களில் ஒரு அல்ப விஷயமாகத்தான் இருந்தது.

ஆனால் “ஸ்வப்னா” என்கிற வீட்டுக்கு எதிர் வீட்டில் வசித்த ஒரு ஆசாமிக்கு அதுவே குழப்பங்களையும் வீண் எண்ணங் களையும் விசித்திர சந்தேகங்களையும் வளர்க்கும் ஒரு விவகார மாகப்பட்டது. கிருஷ்ணன் என்ற பெயர் உடைய அந்த நபர் சந்தேகப் பிராணியாய், அளவுக்கு அதிகமான கற்பனாவாதி யாய், அறியும் அவா (க்யுரியாஸிட்டி) அதிகம் பெற்றவராய் இருந்தார். கதாசிரியராக மாறி நாவல்கள் எழுத ஆரம்பித்திருந்தார் என்றால், அவர் பிரமாதமான வெற்றிகளைமட்டுமல்லாது, அபாரமான சோதனைகளையும் மகத்தான சாதனைகளையும் செய்து முடித்து, ரசிகப்பெருமக்களாலும் விமர்சனப் புலிகளா லும் அமோகமாகப் பாராட்டப்படும் பேறு பெற்றிருப்பார். ஏனோ அவர் எழுத்துத் துறையில் புகவில்லை. அவரது கற்பனையும், சந்தேகமும், அறியும் ஆர்வமும், இன்ன பிற ஆற்றல்களும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களின், அந்தக் குடியிருப்பு ஆசாமிகளின் வாழ்க்கைப் போக்குகளை துருவி ஆராய்ந்து அலசிப் பிழிவதிலேயே அவரை நாட்டம் மிகக் கொள்ளும்படி தூண்டின.

கிருஷ்ணன், உழைக்க வேண்டிய அவசியம் அதிகம் இல்லாத, ஒய்வு மிக நிறையவே இருந்த, வசதியான உத்தியோகம் ஒன்று பெற்றிருந்தார். அவர் மனைவி அவருக்கு ஏற்ற ஜோடியாகத்தான் இருந்தாள். அவர்களுக்கு பிள்ளைகுட்டி என்ற பிடுங்கல் எதுவும் இல்லை. ஆகையால் அண்டை அயல் எதிர் வீடுகளை ஆராயவும், பிறர் அக்கப்போர்கள் குறித்து வம்பளக்கவும் அவர்களுக்கு நேரம் நிறையவே இருந்தது.

“எதிர்வீட்டில் ஏதோ மர்மம் இருக்கிறது!” என்ற எண்ணம் கிருஷ்ணன் உள்ளத்தில் விழுந்துவிட்டது.

“ஆமாம். சந்தேகத்துக்கு உரிய ஆட்கள் யாரோ தான் குடிவந்திருக்கிறாங்க” என்றால் பூரீமதி சாந்தா கிருஷ்ணன்.

“கள்ள நோட்டு அச்சடிப்பவர்களாக இருக்கலாம்” என்பதில் ஆரம்பித்து, கள்ளச் சாராயம் காய்ச்சுகிறவர்கள், கள்ளக் காதலில் ஈடுபட்டவர்கள் என்பது ஈறாக, சந்தேகப் பூச்சி எதுஎதன் மீது ஊர்ந்து நெளிய முடியுமோ அதை எல்லாம் தொட்டுவிட்டது
அவர்கள் ஊகம்.

“சரி. இதை திட்டமாக ஆராயாமல் விட்டுவிடக் கூடாது” என்று தீர்மானம் செய்தார் கிருஷ்ணன்.

இதைக் கண்டுபிடிக்காமல் எதிர்த்த வீட்டிலே இருந்தால் நாம் சரியான இளிச்சவாய் சுப்பர்கள் என்றுதான் அர்த்தம்” என்று அழுத்தம் கொடுத்தாள் அம்மாள்,

இப்படியாகத்தானே அவர்களுடைய ஆற்றலுக்கும் ஈடுபாட்டுக்கும் பண்பாட்டுக்கும் ஏற்ற முக்கியமான வேலை அதுவாகவே வந்து அவ்விருவரிடமும் சிக்கிக்கொண்டு விட்டது.

கிருஷ்ணன் வெளியே போய்விட்டு வந்த உடனேயே, “என்ன, ஸ்வப்னா கதவு திறக்கப்பட்டதா? யாராவது எட்டிப் பார்த்தாங்களா? உள்ளே யாராவது போனாங்களா? என்று விசாரித்து விட்டுத்தான் இதர அலுவல்களில் இறங்குவார்.

வீட்டு அம்மாள் அவரைவிட ஒரு படி மேலே போய் அனுமானங்களையும் யூகங்களையும் உலுப்பித் தள்ளுவாள். “அந்த வீட்டிலே ஆண்பிள்ளைகளே இல்லை. இரண்டு பெண்கள்தான் இருக்கிறாங்கன்னு தோணுது” என்றாள் ஒரு தடவை. “மூணுபேரு இருப்பாங்க போலிருக்கு” என்றாள் இன்னொரு நாள். “அழகான பெண் ஒருத்தி இருக்கிறா. வெள்ளை வெளேர்னு இருக்கிறா. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். டக்குனு கதவை. சாத்திவிட்டாள்” என்று தெரிவித் தாள் ஒரு சமயம். ஒரு வேலைக்காரி இருப்பாள் போலிருக்கு. அந்த அழகான சிறு வயசுக்காரியோட அம்மாளோ, அக்காளோ தெரியலே, ஒருத்தியும் கூட இருக்கிறாள்” என்றாள். “பிக்சர் மாதிரி இருக்கிற பொண்ணு ஒண்ணா இரண்டா என்று எனக்கே சந்தேகம் வந்திட்டுது” என்று அவளே ஒரு சமயம் குழம்பினாள்.

“யாரும் வெளியே போவதாகவே தெரியலே. இவங்களைத் தேடி எவரும் வருவதாகவும் தோணவில்லை” என்று கிருஷ்ண னும் அவர் மன்ைவியும் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்கே போலும் நிகழலாயின சில
சம்பவங்கள்.

ஒரு நாள் முன்னிரவில், “கப்பல் மாதிரி” பெரிதான ஒரு கார் மினுமினுவென்று வந்து நின்றது அந்த வீட்டின் முன்னே. அதிலிருந்து இறங்கி அவ்வீட்டுக்குள் போனவர் சரியான நீர்யானை மாதிரி இருந்தார். “காண்டாமிருகம் என்று சொன் னாலும் சரியாக இருக்கும்! இது சாந்தா கிருஷ்ணன் அபிப் பிராயம். தடியாய், தொந்தியும் தொப்பையுமாய், வஞ்சனை யின்றித் தின்று கொழுத்த சதைக்குன்றாய் விளங்கிய அந்தப் பெரிய உருவத்தை விலை உயர்ந்த துணிகளும், வைரமும் தங்கமும் அழகுபடுத்த முயன்றன.

அவர் வந்ததும் “ஸ்வப்னா மிகுந்த ஒளி பெற்றது. எல்லா விளக்குகளும் எரியலாயின. சிரிப்பும் பேச்சும் கலகலத்தன. ஒரு பெண் பாடுகிற குரல் கூட எழுந்தது.

“ஸ்வப்னா ஏதோ சொப்பனபுரி மாதிரி ஆகிவிட்டதே!” என்றுதான் கிருஷ்ணனால் கூற முடிந்தது.

வந்திருந்த பெரிய நபர் எப்போது போனார் என்பதை கிருஷ்ணனும் சாந்தாவும் தெரிந்துகொள்ள இயலாது போயிற்று. அவர்கள் படுக்கச் சென்றபோது மணி பத்தரை. அவ்வேளை யிலும் பெரிய கார் எதிர் வீட்டின் முன்னால் நின்றது. பிறகு, பன்னிரண்டு மணி இருக்கலாம், கிருஷ்ணன் விழித்துக் கொண்டார். ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அங்கே கார் எதுவும் இல்லை.

”அடடா, தடியன் போயிட்டான் போலிருக்குதே!” என்று அவர் வருத்தத்தோடு முனகிக்கொண்டார். திரும்பி தனது அறைக்குப் போகலாம் என்று கால் எடுத்தவர் அசையாமல் நின்றுவிட்டார். காரணம் –

அந்த வீட்டின் முன்னால் ஒரு கார் வந்து நின்றது. இது வேறு கார். சிறியது. அதன் வருகைக்காகக் காத்திருந்தவர்போல், யாரோ “ஸ்வப்னா”வின் கதவை திறந்தார்கள். இரண்டு பேர் வெளியே வந்தார்கள்.

கிருஷ்ணன் நன்றாகக் கவனித்தார்,

இரண்டு பெண்கள். ஒருத்தி அதிக வயசு உடையவள் என்றும், மற்றவள் இளம் பெண் என்றும் புரிந்து கொள்ள முடிந்தது. சின்னவள் முகம் தெரியவில்லை. நேர்த்தியான மென் துகில் அணிந்திருந்தாள். அதைத் தலைக்கு மேல் இழுத்து முக்காடாகப் போட்டிருந்தாள். நிலவு நன்றாகத்தான் இருந்தது. அந்த நிலவொளியில் அவள் அழகு மிகுந்த உருவமாகத்தான் தோன்றினாள். சாந்தா குறிப்பிட்ட அழகி இவளாகத்தான் இருக்கும் என்று அவர் மனம் பேசியது.

இரண்டு பெண்களையும் ஏற்றிக்கொண்டு கார் நகர்ந்த பிறகுதான் அவர் படுக்கப்போனார். இந்த நேரத்தில் இவர்கள் எங்கே போகிறார்கள்? ஏன் போகிறார்கள்? ஒன்பது பத்து மணிக்குக் கிளம்பினாலும் சினிமாவுக்குப் போவார்கள் என்று நினைக்கலாம். இந்த வேளை கெட்ட வேளையில், கார் வந்து இவர்களை இட்டுச் செல்கிறது. இதற்கு என்ன அர்த்தம்?” என்று அவர் மனம் குறுகுறுத்தது.

இருட்டில் எவ்வளவோ விஷயங்கள் நடக்கின்றன. இரவு தூங்குவதற்காக ஏற்பட்டது என்பது பொதுவான எண்ணம். ஆனால் நாகரிகப் பெரு நகரங்கள் முழுமையாகத் தூக்கத்தில் ஆழ்ந்து விடுவதில்லை. இரவு வேளைகளில். பாதி நகரம் துயிலில் சிக்கிக் கிடக்கிறபோது, இன்னொரு பாதி விழிப்புடன் என்னென்னவோ செய்து உற்சாகம் பெறுகிறது!” என்று அவர் எண்ணம் வளர்த்தார்.

அவருடைய சந்தேகங்களை விட தூக்கம் வலியதாகி, அவரை ஆட்கொண்டது.

காலையில் கிருஷ்ணன் விழித்து எழுந்த உடனேயே, சாந்தா புதியதோர் விஷயத்தை அறிந்து கொண்ட உற்சாகத்தோடு, பெருமையோடு, பரபரப்போடு, பேசத் தொடங்கினாள். “உங்களுக்குத் தெரியாதே! நாலரை மணிக்கு எதிர்த்த வீட்டுக்கு இன்னொரு பெண் வந்திருக்கிறா. சின்ன வயசுதான். அழகாகத் தான் இருக்கிறா. அவளுக்குத் துணையாக வேறொருத்தியும் வந்திருக்கிறா. இரண்டு பேரும் காரில் வந்து இறங்கினாங்க!” எனறாள்.

“சின்னக்காரு, இல்லையா? சிறுவயசுப் பெண் நீல நிற ஸில்க் புடவை கட்டியிருந்தாள். என்ன?” என்று அவர் கேட்கவும், அவள் திகைப்படைந்தாள்.

“நீங்களும் பார்த்தீர்களா? எப்போ?” என்று, ஏமாற்றம் தொனிக்கும் குரலில், விசாரித்தாள் சாந்தா.

அவங்க வந்ததை நான் பார்க்கவில்லை. சின்னக் காரு வந்து அந்த ரெண்டு பேரையும் அழைத்துக் கொண்டு போனதைப் பார்த்தேன். அந்த வீட்டில் உள்ளவங்கதான். எங்கோ போய், இராப்பொழுதைக் கழித்துவிட்டு, நாலரை மணிக்கு வீடு திரும்பியிருக்கிறாங்க. அவங்க புறப்பட்டுப் போனபோது இரவு மணி பன்னிரண்டரை” என்று அவர் விளக்கம் தந்தார்.

பீடைகள்!” என்று கசப்போடு சொன்னாள் சாந்தா. அவள் குரலும் பார்வையும் தெரிவித்த பேசாத பேச்சுக்களில் எவ்வளவோ அர்த்தங்கள் பொதிந்துகிடந்தன.

“புதுக்குடியிருப்பு” வழக்கம் போல் அமைதியாகவே இருந்தது. “ஸ்வப்னா” சதா அடைத்த கதவுடன் தான் காட்சி அளித்தது. சில இரவுகளில் அங்கு உயிர்ப்பும் உணர்வும் உற்சாக நாட்டியம் புரிவதும் சகஜமாகி விட்டது.

கிருஷ்ணனும் சாந்தாவும் இன்னும் அவர்களைப் பற்றிய விவரம் எதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லையே! என்று தான் வருத்தப்பட்டார்கள்.

அழகான யுவதியை அந்தி ஒளியில், நன்கு பூத்த எழில்மிகு மந்தாரைபோல், ஒரு நாள் கண்டார் கிருஷ்ணன். அவளோடு, அவளைப் போலவே, இன்னொரு இளம் பெண்ணும் இருக் கிறாள் என்பதை, இருவரையும் சேர்ந்தாற்போல் பார்த்ததன் மூலம், உறுதிப் படுத்திக் கொண்டாள் சாந்தா.

“கப்பல் மாதிரிப் பெரிய காரில் எப்பவாவது வந்து போகிற விகாரப் பெரிய மனிதர். அந்தப் பெண்களுக்கு எப்படி உறவோ? அவர்களின் போஷகர் அவர்தான் என்பதில் இருவருக்கும் எவ்விதமான சந்தேகமும் இல்லை.

அவரைப் பற்றி நல்ல எண்ணம் கொள்ள முடியவில்லை கிருஷ்ணனால், பணம் மிகுந்தவர்களில் அநேகர் செய்வது போல, அவரும் தனது இன்ப சுகத்துக்காக இரண்டு பெண் களைத் தனி வீட்டில் வைத்து, தாராளமாகச் செலவு செய்து வருகிறார் என்றுதான் அவர் முடிவு கட்டினார்.

இந்த எண்ணத்தை தன் மனைவியிடம் சொல்ல அவர் தயங்கவுமில்லை. அவளும் “ஆமாம், அப்படித்தான் இருக்கும். பாவம், நல்ல பெண்கள், அழகான பெண்கள், ஏனோ இப்படிக் கெட்டுப்போகிறார்கள். இதை எல்லாம் விதி என்றுதான் சொல்லணும். வேறு என்ன சொல்வது?” என்று ஆறுதல் கூறிக் கொண்டாள்.

பல வாரங்களாக மன உளைச்சல் தந்து கொண்டிருந்த ஒரு பிரச்னைக்கு. சாத்தியமான – சாதகமான விடை ஒன்றைக் கண்டு பிடித்தாயிற்று என்ற திருப்தி அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. அதிலிருந்து அவர்கள் எதிர் வீட்டுக்குப் பெரிய கார் என்றைக்கு வருகிறது. எப்போது போகிறது என்று கவனிப்பதில் அக்கறை காட்டுவதை குறைத்துக் கொண்டார்கள்.

இருந்த போதிலும், கிருஷ்ணனுக்கு இன்னுமொரு பெரிய சந்தேகமும், தெளிவுபெற முடியாத குழப்பமும் அப்படியே இருந்தன. பெரிய காரில், பண எருமை வந்து இரவில் பதினோரு மணி வரை தங்கிவிட்டுப் போகிறது. அதே இரவில், பன்னிரண்டு மணிக்கு மேல் கார் வந்து அழகுப் பெண்ணை அழைத்துப் போகிறதே! எங்கே கூட்டிச் செல்கிறது? ஏன்? ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு கார் வருவதாகக் கண்டுபிடித்தார்
கிருஷ்ணன்.

”ஆகவே, இதில் ஒரு பெரிய மர்மம் இருக்கிறது!” என்று அவர் அறிவு கூறியது.

கூடிய விரைவிலேயே இந்த மர்மமும் விடுபட்டுப் போயிற்று. காலமும் நிகழ்ந்த சில சம்பவங்களும் தான் தெளிவு ஏற்படுத்தின. கிருஷ்ணன் முயன்று எதுவும் துப்புக் கண்டு பிடித்து விடவில்லை.

ஒரு நாள் பெரிய “போலீஸ் வேன்” வந்து, “ஸ்பல்னா” முன் நின்றது. சட்டப் பாதுகாவலர்கள் வீட்டினுள்ளே போனார்கள். இரண்டு இளம் பெண்களையும் ஒரு முதியவளையும் அழைத்து வந்து, வண்டியில் ஏற்றினார்கள்.

கிருஷ்ணனுக்கு அறிமுகமானவர் ஒருவர் வேனில் இருந்தார். அவரிடம் பேச்சு கொடுத்ததில் உண்மைகள் தெரிய வந்தன.

தடி ஆசாமி இதைத் தொழிலாக வளர்த்து, பணம் பண்ணி வாழ்க்கை நடத்துகிறான். சினிமாவில் நடிக்கும் ஆசையினாலும், கணவனோடு நிகழும் சண்டை அல்லது குடும்பத் தகராறு போன்ற பலவிதக் காரணங்களினாலும், வீட்டை விட்டு வெளியேறி, நாகரிகப் பெருநகருக்கு எத்தனையோ இளம் பெண்கள் வருகிறார்கள். அவர்களை ஏமாற்றி, ஆசைகாட்டி, அழைத்து வருவதற்கு அநேக திறமைசாலிகளை அப்பணக் காரன் நியமித்து வைத்திருக்கிறான். இப்படிச் சிக்கும் பெண்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கிறான். பெரிய நட்சத்திரம் ஆக்குவேன் என்று ஆசைகாட்டி, தனது ஆசை களைத் தணித்துக் கொள்வதோடு, விதம் விதமான பெண்களை அனுபவித்து இன்பம் பெறத் தவிக்கும் பணக்காரர்களுக்கும், பெரிய மனிதர்களுக்கும் இவர்களை அனுப்பி வைக்கிறான்.

வசதியோடு, பணத்தோடு, வாழ முடிகிறதே என்பதனால் பல பெண்கள் அவன் சொல்படி நடக்க ஆரம்பித்து விடுகிறார்கள் இந்த விதமான பெண்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் வைத்திருப்பதில்லை இவன். வெவ்வேறு வீடுகளில் இரண்டு பேர், மூன்று பேர் என்று வைத்து, போஷித்து, பிஸினஸ் பண்ணி, பணம் சேர்த்து விட்டான். இவனால் ஏமாற்றப்பட்ட இரண்டு பெண்கள் இந்தப் பிழைப்பு நடத்த மனம் இல்லாமல் ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள். பணக்கார வீட்டு இளைஞன் ஒருவனும் இவன்மீது குற்றம் சாட்டி யிருக்கிறான். அதனால், இவன் வசமாகச் சிக்கிக் கொண்டான். இவன் ஆதரவில் தொழில் நடத்திய பெண்களையும் ரவுண்டப் பண்ணி வருகிறோம் என்று அவர் அறிவித்தார்.

கிருஷ்ணன் அவருக்கு வந்தனம் கூறினார். “நாகரிக நகரங்களில் என்னென்னவோ நடைபெறுகின்றன என்று நான் நினைத்தது சரிதான்” என்று தன்னைத்தானே பாராட்டிக் கொண்டார்.

அவர் மூலம் விவரம் தெரிந்துகொண்ட சாந்தா “பாவம், அறியாப் பெண்ணுக என்ன செய்யும்? காண்டாமிருகம் மாதிரி இருந்துகொண்டு, இப்படி எல்லாம் பண்ணுகிற-வங்களை சுட்டுக் கொல்லணும். ஆமாம்” என்று சீற்றத்தோடு சொன்னாள்.

புதுக்குடியிருப்பின் மூன்று தெருக்களிலும் உள்ள மற்ற முப்பத்து நான்கு வீடுகளிலும் இந்த விஷயம் தான் பேசப் பட்டது. புதுக் குடியிருப்பு திடீர் கவனிப்புக்கும் பரபரப்புக்கும் இலக்காகும்படி உதவிய “ஸ்வப்னா” மீண்டும் அடைபட்ட கதவுடனும் பெரிய பூட்டோடும் காட்சி தரலாயிற்று.

– சிவாஜி 1965

– வல்லிக்கண்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2000, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *