சோழன் நலங்கிள்ளி பெரிய போர் வீரன். சோழ நாட்டின் ஒரு பகுதியை அவன் ஆண்டு வந்தான். அவனுடைய தம்பி மாவளத்தான்;நல்ல சால்புணர்ச்சி மிகுந்தவன்;புலவர்களிடத்தில் பேரன்பு பூண்டவன். வீரமும் ஈகையும் அவன் குலத்துக்கே சொந்தமாக இருக்கும்போது அவனிடமும் இருந்தன என்று சொல்லவேண்டுமா, என்ன?
தாமப்பல் கண்ணனார் என்ற புலவர் மாவளத்தானுடைய நட்புக்குப் பாத்திரமானவர்;அந்தணர். தமிழ் இன்பத்தைத் தேக்கும் உள்ளத்தையும் தமிழ்ச் செய்யுட்கள் பாயும் மடையாகிய செஞ் செவிகளையும் உடைய மாவளத்தானுக்கு அவரைக் கண்டாலே மகிழ்ச்சி பொங்கும்;அவர் வார்த்தையைக் கேட்டாலோ உள்ளம் பூரிக்கும்;அதுவும் தமிழ்க் கவிதையை அவர் சொல்ல ஆரம்பித்தால் அவன் தன்னையே மறந்துவிடுவான்.
இந்த மாதிரி, செந்தமிழ் நுகர்ச்சியிலே இருவரும் சேர்ந்து மகிழ்வதோடு நில்லாமல், வேறொரு வகையிலும் அவர்கள் இருவரும் சேர்ந்து மகிழ்வதுண்டு. இருவரும் சதுரங்கம் விளையாடுவதிலே வல்லவர்கள். இளவரசனும் புலவரும் சதுரங்க விளையாட்டிலே ஈடுபட்டுவிட்டால் சில சமயங்களில் பகல் போனதும் தெரியாது; இரவு போனதும் தெரியாது; அப்படி விளையாடுவார்கள். புலமை விளையாட்டிலும் வட்டு விளையாட்டிலும் ஒருங்கு பயின்ற உள்ளத்தினராகிய அவர்களுக்கிடையே நட்பு முதிர்ந்துவந்தது வியப்பன்று.
ஒருநாள் இருவரும் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பகலுணவு உண்டு உட்கார்ந்தவர்கள், இருட்டப்போகிறது. இன்னும் எழுந்திருக்கவில்லை. ஒருநாளும் இல்லாதபடி அன்று புலவருக்கு ஆதியிலிருந்து தோல்விதான் உண்டாயிற்று. தோல்வி உண்டாக உண்டாக ரோசம் மிகுதியாயிற்று. மாவளத்தானோ வெற்றி மிடுக்கினால் ஊக்கம் பெற்று விளையாடினான்.
“என்ன, தாமப்பல் கண்ணனாரே, இன்று சதுரங்க பலம் உம்மிடத்திலே இல்லையே! நான் அரச குலத்திலே பிறந்தவன், சதுரங்க வலியுடையவன்; நான் தான் வெல்கிறேன். உம்முடைய பக்கம் வெற்றி உண்டாக இது தமிழ்க் கவிதை அல்ல” என்று அந்த உற்சாகத்திலே மாவளத்தான் பேசத் தொடங்கினான்.
“போர்க்களத்துப் படைக்கும் இந்தச் சதுரங்கத்துக்கும் சம்பந்தமே இல்லை. அது வேறு, இது வேறு” என்று புலவர் சொல்லிக் காயை நகர்த்தி வைத்தார்.
“நேற்றுவரையில் வேறாகத்தான் இருந்தன. இன்று இரண்டும் ஒன்றாகவே தோற்றுகின்றன. நீர் அந்தணர். நான் அரசன், சதுரங்கபலத்தால் வெல்லும் உரிமை எனக்குத்தான் உண்டு.” என்று சொல்லி அவர் வைத்த காய் மேலே செல்ல முடியாமல் மடக்கினான் இளங்கோ.
“அந்தணருக்கும் வீரம் உண்டு; துரோணர், கிருபாசாரியார் என்பவர்களையும் விறல் வீரனாகிய அசுவத்தாமனையும் மறந்து விட்டீர்களோ!” என்று வாதப்போர் தொடங்கினார் தாமப்பல் கண்ணனார்.
“அதெல்லாம் கதை. துரோணரும் கிருபரும் பொதுவிதிக்கு விலக்கானவர்கள். க்ஷத்திரியர்களைச் சார்ந்து பிழைத்தவர்கள். அந்தணர் கூட்டத்திலே அவர்களுக்கு இடம் இல்லை” என்று திருப்பினான் மாவளத்தான். அருச்சுனன் வீரமெல்லாம் துரோணர் இட்ட பிச்சை என்பதை நினைக்க வேண்டுகிறேன். கர்ணன் கற்ற வில்வித்தை ஜமதக்கினியின் புதல்வராகிய பரசுராமர் தந்ததென்பதையும் ஞாபகப்படுத்துகிறேன்.”
துரோணர் நூற்றைவருக்குந்தான் வில்வித்தை கற்றுத் தந்தார். அவர் சொல்லித்தந்த வித்தைக்குப் பெருமை இருந்தால் அந்த நூற்றைம்பது பேரும் சிறந்த வீரர்களாக இருக்கவேண்டும். அருச்சுனன் மாத்திரம் சிறந்தமைக்குக் காரணம் அவனுடைய திறமையேயன்றித் துரோணர் திறமை அல்ல.”
“மழை எங்கும் பெய்தாலும் நிலத்திற்குத் தக்கபடிதான் விளைவு உண்டாகிறது. களர் நிலத்தில் மழை பெய்தும் ஒன்றும் விளையவில்லையே என்றால் அது மழையின் குற்றமா? வெறும் புழுதியாக இல்லாமல் ஈரமாகி அடங்குகிறதே. அந்த அளவிலே அது பயன் அடைகிறது.”
இளவரசனுக்கு, மேலே தொடர்ந்து வாதம் செய்ய வழி தோன்றவில்லை.
“அது கிடக்கட்டும், இந்தச் சதுரங்கத்திலே நீங்கள் துரோணராக இருங்கள் பார்க்கலாம்; உங்களுடைய நா வன்மையினால் வட்டுப்பலகையில் மாயம் நிகழாது. இங்கே திறமையோடு ஆடித்தான் வெற்றி பெற வேண்டும்” என்று பின்னும் ரோசத்தை மூட்டி விட்டான் அரசிளங்கோ.
“ஓர் ஆட்டமாவாது வெல்லாமல் எழுந்திருப்பதில்லை” என்று காலைச் சிறிது நகர்த்தி நிமிர்ந்து உட் கார்ந்துகொண்டார் புலவர். தோல்விமேல் தோல்வியும், மாவளத்தான் பேச்சும் அவருடைய ரோசத்தையும் கோபத்தையும் தூண்டிவிட்டன. என்ன என்னவோ விதமாக வெல்லாம் விளையாடினார்; நன்றாக யோசித்துக் காய்களை நகர்த்தி வைத்தார்; நிச்சயமாக மாவளத்தான் படையை மறித்துவிடலாம் என்று துணிந்து காயை நகர்த்தினார். அவன் அவர் எதிர் பாராதபடி அவருடைய கட்டை மீறினான். அவனுடைய தந்திர சாமர்த்தியங்கள் அன்று உச்ச நிலையில் இருந்தன.
“எவ்வளவு நாழிகை இப்படியே இருப்பது; இது விளையாட்டுத்தானே?” என்ற கோணல் எண்ணம் புலவர் நெஞ்சில் புகுந்தது. மாலை வேளையில் தாம் செய்யும் கரவு தெரியாதென்று நினைத்தாரோ, என்னவோ? திடீரென்று ஒரு காயை ஆட்டவிதிகளுக்குப் புறம்பாகத் திருட்டுத்தனமாய் மாற்றி வைத்துவிட்டார்.
அவன் அரசன்; கோபம் வந்தால் புயலைப் போலத் தான் வரும். புலவர் கைகரப்பதைக் கண்டுவிட்டான். எடுத்தான் காயை. படீரென்று அவர் முகத்தில் வீசினான். “ஸ் ஸ்” என்று நெற்றியைக் கையால் அமுக்கிக்கொண்டார் தாமப்பல் கண்ணனார். ரத்தம் அவர் கைக்கு அடங்காமல் வழிந்து சொட்டியது. கோபமும் அவர் உள்ளத்தில் தங்கவில்லை. “சீ, நீ சோழனுக்குப் பிறந்தவனா? நான் பிராம்மணன். உங்கள் வமிதில் இந்தத் துணிச்சல் யாருக்கும் இல்லை. நீ இந்த வமிசத்தில் பிறந்தவனாக இருந்தால் அல்லவா உனக்குத் தர்மம் தெரியும்?” என்று வார்த்தைகளை வீசி எறிந்தார்.
அடுத்தபடியாக நாம் எதிர்பார்ப்பது இதுதான்: மாவளத்தான் சடக்கென்று தன் உறையிலிருந்து வாளை உருவினான். அந்தணன் கோபத்தைவிட அரசன் கோபம் வீறியது என்று தெரிவிப்பதுபோல அடுத்த கணத்தில் தாமப்பல் கண்ணனார் தலை சதுரங்கக் காய்களோடு சேர்ந்து உருண்டது.
ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. மாவளத்தானுடைய கோபம் வட்டை எறியும்போதுதான் இருந்தது. அவர் நெற்றியில் தோன்றிய ரத்தத்தைக் கண்டவுடன் அது அவிந்தது. ஏதோ பெரும் பழியைச் செய்துவிட்டவனைப் போல அவன் நாணித் தலை குனிந்து உட்கார்ந்துபோனான். ‘பெரிய பிழையைச் செய்துவிட்டோம்; இதற்கு பரிகாரம் என்ன?’ என்று ஆராய்வதுபோல் அவன் சிந்தனையில் மூழ்கினான். புலவர் சொன்ன வார்த்தைகள் சரியாக அவன் காதில் நுழைந்தனவோ இல்லையோ, சந்தேகந்தான், அவர் நெற்றியிற் புறப்பட்ட ரத்தத்துளிகள், அவன் உள்ளம் முழுவதையும் கறையாக்கி அவன் உடம்பையும் குன்றவைத்துவிட்டன.
எதிர்ப்புக்குமேல் எதிர்ப்பு இருந்தால்தான் கோபமும் மூளும். தாமப்பல் கண்ணணாருடைய அம்பு போன்ற கொடிய வார்த்தைகளுக்குப் பதில் இல்லை; அவை, நாணத்தால் முகம் கவிழ்ந்து உட்கார்ந்திருந்த இளவரசனுடைய மௌனத்தினால் தாக்குண்டு உதிர்ந்து போயின. அவனிடமிருந்து எதிர்த் தாக்கு ஒன்றும் வரவில்லை.
இப்போது புலவர் சினம் ஆறியது. சற்று நிதானித்தார். தாம் கூறிய வார்த்தைகளை அவரே நினைத்துப் பார்த்தார். அத்தகைய நல்லிசைச் சான்றோருடைய வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தைகள் அல்ல அவை. அது மட்டுமா? சதுரங்க விளையாட்டானாலும் அதற்கு என்று ஒரு முறை, ஒரு தர்மம் இல்லையா? விளையாட்டுத் தர்மத்தையே கடைப்பிடிக்கத் தெரியாத அவர் உலகில் மற்ற எந்தத் தர்மத்தைக் கடைபிடிக்கப் போகிறார்! அவன் காயை எறிந்ததிலே என்ன பிழை? அவன் செய்தது சரிதான். குற்றம் தம்மேல் இருக்க இதை உணராமல் அவனைப் பின்னும் கொடிய மொழிகளால் புண்படுத்தலாமா? அந்த வார்த்தைகளை நினைத்தாலே நெஞ்சு நடுங்குமே! அவன் எறிந்த காயம் நாளைக்கு ஆறிவிடும். அவர் எறிந்தாரே அந்த வார்த்தைகளால் உண்டான புண் இந்தப் பிறவியில் ஆறுமா? ‘இப்படி நம்மையே மறந்து கொட்டிவிட்டோமே’ என்ற வருத்தந்தான் அவருக்கு மாறுமா? அவன் அரசன்; அவன் உணர்ச்சி செய்கையால் வெளியாகும்; மனம் மகிழ்ந்தால் கை உதவும்; அகம் சினந்தால் கை எறியும். இதை அவன் இன்று காட்டினான். புலவரோ தம் மன உணர்ச்சியை நாவால் வெளியிடுவார். அவர் மனம் மகிழ்ந்தால் வாய் பாடும். இன்று சினஞ் சிறந்த உள்ளத்தில் எழுந்த உணர்ச்சி சொல்லத் தகாத வார்த்தைகளை நாவால் வாரி இறைத்தது. அவனோ தன் கோபத்தைச் செயலில் காட்டாமல் அடங்கினான். இவரோ அடங்காமல் வசைமாரி பொழிந்தார். மாரி என்று சொல்லும்படி நெடு நேரம் வையவில்லை. சொன்னவை சில வார்த்தைகளே, ஆனாலும் அவை கூரிய அம்புபோல உயிர்நிலையில் பாயத் தக்கவை, வீரர் விடும் அம்பல்ல; கொலையொன்றையே கருதிக் காட்டில் திரியும் வேடர் விடும் முரட்டு வாளிகள் அவை. “நீ சோழனுக்குப் பிறந்தவனா?” என்ன கொடூரமான வார்த்தைகள்! – புலவர் மனத்தில் இந்த எண்ணச் சுருள்கள் விரிந்தன,
‘புலவரை, அந்தணர் பெருமானை நாம் வட்டு வீசிப் புண்ணாக்கினோமே! இது வெறும் விளையாட்டு. இதில் நேர்ந்த தவறுகளைப் பொறுக்கத் தெரியாத நான், எப்படி உலகத்தார் தவறுகளைப் பொறுக்கும் சால்புடையவனாவேன்? இவ்வளவு நாள் பழகிய இப் புலவர் பெருமான், உண்மையில் பொறுத்தற்கரிய தவறு செய்தாலும் கெழுதகைமை பாராட்டிப் போற்ற வேண்டியவன் அல்லவா நான்? விளையாட்டில் வினையைப் புகுத்தினேனே. என் மடமை இது. இந்தச் சதுரங்கத்தைப் போர்க்களத்துப் படையோடு உவமித்துப்பேசிய நான் உண்மையிலேயே போரை எழுப்பிப் புண்ணையும் உண்டாக்கிவிட்டேனே! என்னுடைய ராஜச குணம் விளையாட்டின்பத்தை உணர முடியாமல் செய்துவிட்டதே. இனி இவரை நிமிர்ந்து பார்த்து நேருக்கு நேரே பேச எனக்கு வாயேது?’ – இவ்வாறு படர்ந்தது மாவளத்தான் கழிவரக்கம், புலவர் நினைக்கிறார்: ‘இப்போதல்லவா இவனுடைய பெருந்தன்மையை உள்ளவாறு உணர முடிகிறது? நம்முடைய கொடிய சொல்லம்புகளைத் தாங்கிக்கொண்டு இவன் மேரு மலைபோல் விளங்குகிறான்.
முதலில் வஞ்சகம் செய்த குற்றமோ என்னுடையது, முடிவில் தகாத வார்த்தைகள் கூறியதோ படுமோச மான பெருங்குற்றம். இதற்காக நானல்லவா நாணியிருக்கவேண்டும்? இவன் நாணி முகம் கவிழ்ந்து இருக் கிறானே! இது சால்பா? பொறுமையா? உண்மையான ஞான வீரமா? என்ன பெருந்தகைமை!” அவர் உள்ளம் பட்ட வேதனைக்குக்கங்கு கரை இல்லை, தம்மை அணு அணுவாகச் சேதித்தாலும் தாம் செய்த குற்றத்துக்குரிய தண்டனை நிறைவேறிய தாகாது என்று எண்ணினார், மாவளத்தான் நிலைகண்டு உருகினார், தம் பேதைமையை நினைந்து இரங்கினார். துக்கம் பொங்குகிறது, வேதனை நெஞ்சை அறுக்கிறது, அவனுடைய நாணத்திலே அவன் சிறப்பு ஆயிரமடங்கு மிளிர்ந்து அவர் உள்ளத்தை நிரப்புகிறது, ‘மன்னிப் புக் கேட்கவேண்டும்’ என்று உந்துகிறது நெஞ்சம். முந்துகிறது வார்த்தை: கூறத்தொடங்கினார், தாம் கூறிய இழி சொற்களுக்கெல்லாம் பிராயச்சித்தமாக அவனுடைய குலப் பெருமையையும். அந்தக் குலத்தில் வந்த அவன் பெருமையையும், அவன் தனக்குக் குற்றம் செய்தோரைப் பொறுக்கும் பொறுமையையும் எடுத்துக் காட்டுகிறார்; “பிறப்பின்கண் ஐயமுடை யேன் என்ற தகாத வார்த்தை சொன்னதற்குரிய விடையை நீ உன் செயலாலேயே காட்டிவிட்டாய். அக் குலத்திற்கு உரிய குணங்க ளெல்லாவற்றிற்கும் நீ இருப்பிடம் என்பதை உணர்ந்துகொண்டேன்!” என்ற குறிப்புத் தோன்றும்படி அவர் பாடுகிறார்:
“சூரியன் உலகத்திலுள்ள உயிர்களுக்கு இன்றி யமையாதவன், ஆனாலும் அவனுடைய கிரணங்களின் வெம்மை முழுவதையும் தாங்குவதற்கு ஏற்ற ஆற்றல் உயிர்களுக்கு இல்லை. அதனால் அந்த உயிர்களின்மேல் கருணைகொண்டு சில தேவரிஷிகள் தினந்தோறும் சூரியனோடு பிரயாணம் செய்து அவனுடைய வெம் மையைத் தாம் ஏற்றுக்கொண்டு தணிக்கிறார்கள். அவர்களுடைய கருணையை உலகம் வியக்கிறது. ஆனால் அந்தக் கருணையாளர்கள்கூட வியக்கும்படியான கருணை சிபிச் சக்கரவர்த்திபால் இருந்தது. தன்னைக் கொல்ல வந்த பருந்துக்கு அஞ்சி அடைக்கலம் புகுந்த ஒரு சிறிய புறாவுக்காகத் துலையில் புக்குத் தன் உடம்பையே தியா கம் செய்ய முன்வந்தவன் அவன்; தனக்கென்று எத னையும் பாதுகாவாத தயா வீரனாகிய அந்த மன்னவன் குலத்தில் உதித்தவனே! இது பழம் பெருமை என்றால் இதோ நின்னோடு உடன்பிறந்தவன் பெருமை எப்படி இருக்கிறது? உன் தமையனாகிய நலங்கிள்ளி பகைவரை வென்று பெற்ற செல்வமும், இரவலர்களுக்குத் தேரை ஈயும் ஈகையும் உடையவன். அத்தகையவனுக்கு ஏற்ற இளவலே! அம்பும் வில்லும் கொண்டு போர் செய்யும் வீரர்களுள் வீரனே! விரைந்த குதிரையையுடைய வள்ளலே! ‘ஆத்திமாலை புனைந்த சோழர்களாகிய நின் முன்னோரெல்லாம் அந்தணர் வருந்தும் செய்கையைச் செய்யார்; இதை நீ செய்தாயே; இது நின் இயல்புக்கு ஒத்ததோ? நீ இதைச் செய்ததால் உன் பிறப் பில் எனக்குச் சந்தேகம் உண்டாகியிருக்கிறது’ என்று வெறுப்பு உண்டாகும்படி சொல்லி உன் திறத்து நான் பெரிய குற்றத்தைச் செய்தேன். அதைக் கண்டும் நீ என்னை வெறுக்கவில்லை. குற்றம் செய்த நான் முன்னே இருக்க, குற்றம் செய்தவனைப் போல நீ மிகவும் நாணினாய். ‘தமக்குக் குற்றம் செய்தவர்களைப் பொறுக்கும் சிறப்பு இந்தக் குடியிற் பிறந்தவர்களுக்கு மிகவும் எளிதான காரியமென்பதைப் பாரும்’ என்று சிறந்த பலமுடைய நீ இன்று புலப்படுத்தினாய். நான்தான் தவறு செய்தவன். நீ தீர்க்காயுள் பெற்று வாழ்வாயாக! பெருகி வரும் இனிய நீரையுடைய காவிரி எக்கரிட்ட மணலைக் காட்டிலும் பல காலம் வாழ்வாயாக!” (புறநா.43).
இந்தக் கருத்து அமைந்த பாட்டு அவர் உள்ளங் குழைந்து வெளிவந்தது. மாவளத்தான் சிறிது தலை நிமிர்ந்தான். ‘இனி வட்டாடுதலை விளையாட்டிற்கும் செய்யேன்’ என்று கூறும்போதே அவன் கண்களில் நீர் துளித்தது. தாமப்பல்கண்ணனார் கண்களிலோ வெள்ளம் பாய்ந்து அதனை வரவேற்றது.