நீங்களே சொல்லிடுங்கோ… என்றாள் சாந்தி.
சொல்லிவிட்டு வாசலுக்கு மறைவாக அந்த நாற்காலியை உள் பக்கமாய் இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.
அவருக்கு ரெகுலர் கஸ்டமர் நீ….இப்போ தீடீர்னு என்னை சொல்லச் சொன்னா எப்டி? நீயே சொல்லிடு….அதுதான் சரி…. – நாதன் அவன் அறைக்குள் புகுந்து கொண்டான்.
சும்மாச் சொல்லுங்க ஒரு நாளைக்கு…பரவாயில்லே…
உறாங்…அதெப்படீ? நா அவர்ட்ட இதுநாள் வரை பேசினது கூட இல்லை…முத முதல்ல போய் அவர்ட்ட இதைச் சொல்லச் சொல்றியா? என்னால முடியாது…
தெரு ஆரம்பத்தில் அந்தக் கீரைக்காரர் நுழையும் சத்தம். சரியாகக் காலை ஏழு இருபதுக்கு கன கச்சிதமாக அந்தக் குரல்.
கீரை….கீராய்….அரைக்கீரை, தண்டாங்கீரை, முருங்கை, பொன்னாங்கண்ணி, வெந்தயக்கீரை, பாலாக்கீரை, மணத்தக்காளீ… …சத்தம் தெருவைக் கலக்குகிறது.
வலது புறம் நான்காவது வீடாக இருக்கும் எங்களுக்கு உடனே மனம் பரபரக்கும்.
ஏய், அவர் வந்தாச்சு…ஃபிரிட்ஜ்ல கீரை இருக்கா இல்ல வாங்கணுமா? பழசு இருந்தால் அதுபோக எவ்வளவு வேண்டும் என்றோ அல்லது புதிதாக இவ்வளவு என்றோ வாங்கும் நேரம் அந்தச் சில கணங்கள்.
இன்ன கீரை என்பதை முடிவு செய்வது அவள்தான். வழக்கமாய் வாங்குவதும் அவளேதான். நான் ஒரு நாள் கூடப் போனதில்லை. ஞாபகப்படுத்துவேன். அத்தோடு சரி. தவறாமல் சமையலைக் கவனிக்கும் அவளுக்குத்தானே உரிமை எது வேண்டும், வேண்டாம் என்பதை முடிவு செய்ய?
கடமையை ஒழுங்காக நிறைவேற்றுவோருக்குத்தான் உரிமையும் தானாகவே வந்து விடுகிறது. மற்றவர் அத்தனை சுலபமாக அந்த வட்டத்துக்குள் நுழைந்து விட முடியுமா?
அந்தச் சில நிமிடங்கள் சற்றுப் பதட்டம்தான். ஆனாலும் அவள் போய் வாங்கினால்தான் திருப்தி. பார்த்துப் பார்த்து, திருப்பித் திருப்பி, இலை இலையாகப் பிரித்துப் பிரித்து, புழு, பூச்சி….அப்படி என்னதான் பாதகம் இருக்குமோ அந்த வஸ்துவில். அவரும்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறாரே? இவளின் அலசலை ஒருநாளும் அவர் குறை சொன்னதில்லை.
எப்டி வேணாலும் பார்த்துக்குங்க….கட்டப் பிரிச்சுக் கூடப் பாருங்க மாமி….அதெல்லாம் நம்ம சரக்கு படு சுத்தமாக்கும்….தோட்டத்துல பறிச்ச மேனிக்கு அப்டியே கழுவிக் கொண்டாரேன்….பார்த்தீங்கள்ல பளபளப்பை…..? நீங்க எதுவும் நினைக்க வேணாம்…நா குடுக்கிறத அப்டியே எடுத்திட்டுப் போங்க….. –சொல்லத்தான் செய்கிறார். இவள் கேட்டால்தானே?
நீங்க, உங்கபாட்டுக்குச் சொல்றதச் சொல்லுங்க…நான் எம்பாட்டுக்குப் பார்க்கிறதப் பார்க்கிறேன்….எதுல பூச்சியிருக்கும், பொட்டிருக்கும்னு எனக்குத்தானே தெரியும்….என்று வாயால் சொல்லாவிட்டாலும் செயலால் காண்பித்து விடுவாள்.
இவள் புரட்டும் புரட்டலில் இன்னும் ரெண்டு வீட்டுக்குப் போட்டு விட்டு வந்துவிடலாம் என்றுதான் அவருக்குத் தோன்றும். அந்த இடைவெளியில் வேறு ஏதாகிலும் ஆகிவிட்டால்? மாமியின் வாடிக்கையை விட மனசில்லைதான். சற்றுக் கோபப்பட்டு விட்டாலும், அது விட்டுப் போக வாய்ப்புள்ளதே…!
இப்படி விடிகாலையில் பால்காரரின் குரலையும், கீரைக்காரரின் சத்தத்தையும், பேப்பர் போடும் பையனின் லாவகத்தையும், பூ கொண்டு போகும் பெண்ணின் மென் குரலையும், கேட்கவும், காணவும் கோடி கொடுத்திருக்க வேண்டுமய்யா…. இப்படியான சூழல்களெல்லாம் மெல்ல மெல்ல மறைந்து வரும் காலமாயிற்றே. மனசு ஏங்கவில்லையா?
அதோ வருகிறதே ஒரு பசு மாடு…அது எதற்கு இத்தனை கருத்தாய் நடைபோட்டு வருகிறது என்று நினைக்கிறீர்கள்? குறிப்பாய் அந்த இடத்தை மட்டும் ஒரே பார்வையாய்ப் பார்த்துக் கொண்டு நடக்கிறது பாருங்கள்….என்னவாய் இருக்கும்? அட, நேரே அந்த எதிர்வீட்டிற்குச் சென்று அங்கு வாசலில் வைத்திருக்கும் பாத்திரத்திற்குள் வாயை நுழைக்கிறதே…?
அது என்னங்கம்மா….?
சாதம் வடிப்போமுல்ல…அந்தக் கஞ்சி……
அது அப்படிக் குடிக்கையில் அந்த அம்மாள் அதன் நெற்றியைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளும் காட்சி. ஆஉறா…..என்ன அற்புதமான தருணம்…! மனிதர்களின் கலாச்சார ரீதியான நம்பிக்கைகள்தான் எத்தனை அழகானவை…! ஒழுக்கம், கட்டுப்பாட்டின் அடிப்படையிலான அவைகள் இந்த வாழ்வின் எத்தனை ஆதார சுருதியாகத் திகழ்கின்றன?
பார்த்தீர்களா…கீரைக்காரரைப் பற்றிச் சொல்ல வந்த இடத்தில் கவனம் அதற்குள் இடம் மாறிவிட்டது. அன்றாடப் பொழுதுகளை இம்மாதிரியான காட்சிகள் இதமாக்குகின்றன அல்லவா? பிறகு எப்படி அவைகளைப் புறக்கணிக்க முடியும்? இருக்கும் பரபரப்பில் யார் இதையெல்லாம் கவனிக்கிறார்கள்? பொழுது விடிந்ததும் பாடு ஆரம்பித்து விடுகிறதே…! சாவகாசமாக இதை ரசிக்க யாருக்கு நேரம்?
தெருவுக்குள் நுழைந்ததும், பக்கத்து வீடுதான் என்றாலும், எடுத்த எடுப்பிலேயே மாமீஈஈஈஈஈஈ…கீரை….என்று சத்தம் கொடுத்து விடுகிறாரோ என்றுதான் தோன்றும். மாமியை அழைக்கும் அழைப்பிலே மற்ற வீட்டுக்காரர்கள் எல்லாம் விழித்துக் கொண்டு ஓடி வந்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கையாய் இருக்கலாம்.
அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. இவள் தேடித் தேடி வாங்கும் கீரைகளை மற்ற யாரும் வாங்குவதாகவே இல்லை. வாங்குவதென்ன…கேட்பதாகவே தெரியவில்லையே…?
சக்ரவர்த்தினி கொண்டு வாங்களேன்….
அதென்ன மாமி…? – அவருக்கே தெரியவில்லை. அவர் வியாபாரத்தில் அதுநாள் வரை அவர் கண்டதில்லை போலும்….
முகத்தில் அத்தனை தாழ்வுணர்ச்சி. சே…! மாமி சொல்ற கீரை நமக்குத் தெரியாமப் போயிடிச்சே…! என்னா பொழப்புப் பார்த்தோம் இத்தனை நாளா? வாடிக்கையின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்கிற உத்வேகம்….
ஊசி ஊசியா பெரிய பெரிய இலையா இருக்கும்…சென்ட்ரல் மார்க்கெட்டுக்கு வரும்….வாங்கிட்டு வர்றீங்களா? பணம் தரட்டுமா?
பணம் கெடக்கட்டும் மாமி…. காசென்ன ஓடியா போகுது…நாளைக்குக் கொண்டாரேன் பாருங்க… – சவாலாய் ஏற்றுக்கொண்டுதான் சென்றார் கீரைக்காரர்.
அட, கர்ம சிரத்தையாய் வாங்கி வந்து விட்டாரய்யா…..!
மாமீ….இந்தாங்க பிடிங்க…நீங்க கேட்ட சக்ரவர்த்தி…..
சக்ரவர்த்தியில்லே….சக்ரவர்த்தினின்னு சொல்லுங்கோ…..
அது ஏதோ ஒரு தீனி..…இந்தாங்க…இதானா பாருங்க….தேடிக் களைச்சிட்டேன் போங்க….
சாந்தியின் முகத்தில் பரவிய சந்தோஷத்திற்கு அளவேயில்லை. அடடா…! இப்படியுமா சொத்து கைக்கு வந்து சேரும்…? பூஜா ரூமில் வைத்து பூஜையே செய்தாலும் போயிற்று…
கையில் இருந்த நோட்டை அவரிடம் கொடுக்க….
மாமி…பாக்கீ….
இருக்கட்டும் வச்சிக்குங்கோ….அலைஞ்சு வாங்கிண்டு வந்திருக்கேள்…! காசா பெரிசு….மனுஷாதான் முக்கியம்…..ஷீகர் இருக்கிறவாளுக்கு அத்தனை நல்லதாக்கும்….தெரிஞ்சிக்குங்கோ….
.சக்கரை வியாதியா மாமீ….அது நமக்கும் இருக்குதாம்…டாக்டரு சொல்றாரு…..
ஓடி ஓடி உழைக்கிறேள்….உங்களுக்கெதுக்கு அது வருது….அண்டாதாக்கும்….நன்னா பார்த்துக்குங்கோ….
அவரின் வாடிக்கை மற்றவர்களுக்கு எப்படியோ…சாந்திக்குப் பெரிய ஆதரவு. நாளை வரச்சே இதக் கொண்டு வாங்கோ…அதக் கொண்டு வாங்கோ என்றெல்லாம் அவள் விடாமல் சொல்கையில் அவரும் அசந்ததேயில்லை. சலித்ததேயில்லை. ஒரு நாளும் முகம் சுண்டி நான் பார்த்ததில்லை. அட்டா…மனிதர்கள்தான் எத்தனை நல்லவர்கள்? அவர்கள் மனதில் ஆழப் பதிந்திருக்கும் நன்னெறிகள்தான் எத்தனையெத்தனை?
பொன்னாங்கண்ணிலயே ரெண்டு வகை இருக்கு….அதுல பச்சைப் பொன்னாங்கண்ணிதான் நல்லது…கண்ணுக்கு அம்புட்டு நல்லதாக்கும்…அது கிடைக்காதா…?
கொண்டாரேன்….உங்களுக்கில்லாததா…? நாளைக்குக் கொண்டாரட்டுமா?
நாளைக்கு வேண்டாம்…அமாவாசை……நாளைக்கழிச்சி ஞாயிறும் போகட்டும்….அப்புறம் கொண்டு வாங்கோ….
மனசுக்குள் முழுக்க முழுக்க மாமிதான் அவருக்கு…அத்தனை மரியாதையோ….கரிசனையோ….சொன்னதெல்லாம் கொண்டு வந்து கொடுத்துத்தான் இருக்கிறார்.
ஆனால் ஒன்று….என்றைக்கும் பேரமே பேசியதில்லை சாந்தி. கீரையில் என்ன பேரம் வேண்டிக் கிடக்கிறது?
பாவம்…தவறாம வந்து கொடுக்கிறார்….விடாம வர்றார். இல்லன்னா தேடித் தேடிப் போயி எத்தனை பேர் வாங்கப் போறா கீரையை…? எல்லாருக்கும் வீட்டு வாசல்லயே கிடைக்கிறது…
எவ்வளவு?
பதினைஞ்சு மாமி…..பன்னெண்டு மாமி…..எட்டு மாமி….
கட்டுக்குத் தகுந்தாற்போல் அவர் சொல்லும் காசை மறு பேச்சில்லாமல் நீட்டி விடுவாள் சாந்தி.
இப்டிக் கொண்டு வர்றதே பெரிசு…இதுல பேரம் வேறையாக்கும்….
நீ இப்டிச் சொல்றே….எதிர் வீடு…பக்கத்து வீடெல்லாம் பார்த்திருக்கியோ…? ஒரு நாளாவது ஒண்ணு சொல்லாமக் காசு கொடுத்ததில்லே யாரும்… கீரை ரொம்பக் கம்மிம்பாங்க….இல்ல விலை ஜாஸ்திம்பாங்க…
நமக்கென்ன வந்துது….நா அதெல்லாம் பேச மாட்டேன்….பாவம் அவர்…வயசான மனுஷன்….அலைஞ்சு திரிஞ்சு விக்கிறார்…..இந்த வயசுல இப்டி விடாம உழைக்கிறாரே….
சாந்தியின் கணிப்பு ரொம்பவும் நியாயமானதுதான். இதே கீரையை தண்ணீரில் அலம்பி, பிளாஸ்டிக் பைக்குள் போட்டு, ஏ.ஸி. ரூமில் பளீர் வெளிச்சத்தில் வைத்திருக்கிறானே….அங்கே போய் வாயைத் திறந்து விலை கேட்டுப் பார்க்க வேண்டியதுதானே….முதலில் விலை கேட்க வாய் வருமா? .அங்கே உள்ளே நுழைந்து ஒரே ஒரு பொருளையேனும் வாங்கிக் கொண்டு, அப்படி எல்லோரும் பார்க்க அந்த விற்பனைக் காட்சிக் கூடத்திற்குள்ளிருந்து வெளியே வருவதுவே பெருமையாயிற்றே என்று எத்தனை பேர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்?
அப்படி ஓர் உலகம் அங்கே சுழல்கிறதென்றால் இங்கே இந்த உலகத்தைக் கட்டிக் காப்பது யார்? நம்மை மாதிரி மத்திய தரத்து ஆட்களே கை விட்டால் அப்புறம் இவர்கள் எங்குதான் போவார்கள்? எப்படித்தான் பிழைப்பு நடத்துவார்கள்? வாழ்க்கை எனும் ஓடம் பிறகு இவர்களை எங்கு கொண்டு போய் நிறுத்தும்? யோசிக்க வேண்டாமா?
மாமீ…கீரை…..
வாசலில் அந்தச் சத்தம். பின்னால் கேரியரில் சாக்கில் கட்டிய கீரையுடன் தொப்பென்று கீழே குதிப்பார். குதித்த வேகத்தில் வண்டி சாய்ந்து விடக் கூடாதே என்று தாங்கிப் பிடிப்பார்.
வண்டி சாய்ந்தாலும் பரவாயில்லை. கீரைக் கட்டுகள் மண்ணில் விழுந்து விடக் கூடாது.
யே…யே…யே….பார்த்து…பார்த்து….பார்த்து… எத்தனையோ நாள் இவன் கத்தியிருக்கிறான். கேட்டைத் திறந்து கொண்டு தாங்கிப் பிடிக்க ஓடியிருக்கிறான்….
ஆனால் அதற்குள் அவர் சமாளித்து நின்று விடுவார். அது தெரியவில்லையென்றால் பிறகு என்னதான் பயன்? மொத்தக் கீரையும் விற்றுத் தீர்க்க, எத்தனையிடத்தில் ஏறி இறங்க வேண்டும்? சைக்கிளில் மூட்டையை ஏற்றி அலைந்து திரிந்துதான் விற்றாக வேண்டும் எனும்போதே மனதாலும், உடலாலும் தயாராகித்தானே கிளம்புவார். உழைப்பு என்பதின் உன்னதமான தத்துவம் அதுதானே?
கீரை….கீராய்….
வாசலில் மீண்டும் சத்தம்……
போங்க…போங்க…போய் சொல்லிடுங்க….. – மறைவிலிருந்தவாறே சைகை காண்பிக்கிறாள் சாந்தி.
இதென்ன, என்றைக்குமில்லாத சங்கடம்…? இவள் போய்ச் சொல்ல வேண்டியதுதானே…?
காதில் விழவில்லையோ என்று மணிச் சத்தம் வேறு.
இன்று திண்ணைத் திரைச் சீலையை வேறு போட்டிருக்கிறாள்…..அதில் மகாத்மாகாந்தி சிரித்தவாறே கம்பூன்றி வேகமாய் நடந்து கொண்டிருக்கிறார். இடுப்பில் கட்டிய வேட்டியுடன் ஒல்லியான அந்த வெற்றுடம்போடு அந்த நடையில்தான் என்ன ஒரு வேகம்? காந்தி படத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு இதென்ன விளையாட்டு?
என்றைக்கும் இவள்தானே போய் வாங்குவாள். இவள்தானே பதில் சொல்வாள். இன்று மட்டும் என்ன என்னை விரட்டுகிறாள்?
போங்க…பாவம்…நிக்கிறாருல்ல….ரெண்டு நாளைக்கு வேண்டாம்னு சொல்லிடுங்க….அப்புறம் ஃப்ரெஷ்ஷா வாங்கிக்கலாம்.
ஏன், நீதான் போய்ச் சொல்லேன். இதயேன் என்னைச் சொல்லச் சொல்றே?
எனக்குக் கஷ்டமாயிருக்கு…அவர் முகத்தைப் பார்த்துச் சொல்ல…ஒரு நாள் விடாமத் தெனம் வாங்குறது…இன்னைக்கு வேண்டாம்னா?….நா மாட்டேன்…. அடுப்படில வேலையாயிருக்கேன்….நீங்களே சொல்லிடுங்க….
சரிதான்…இதுக்கு நாந்தான் கிடைச்சனா…? வேண்டிதான்…
இதுலென்ன கஷ்டம் உங்களுக்கு…நீங்க சொன்னா ஒண்ணும் நினைச்சுக்க மாட்டார் அவர்…..போயிடுவார்….போய்ச் சொல்லுங்க….போங்க….
மாமீஈஈஈஈஈஈஈஈஈ……..
திரையை விலக்கிக் கொண்டு வெளிப் போந்தேன்.
…..இன்னும் ரெண்டு நாளைக்கு வேண்டாங்க…..பிறகு வாங்கிக்கிடுவோம்……
வேணாமா….? மாமி கேட்டாங்களேன்னு முடக்காத்தான் கீரை கொண்டு வந்திருக்கேன் சார்……
என்னது முடக்காத்தானா? அப்டி ஒரு கீரையா இருக்கு?
இருக்குல்ல…..கீரையை நல்லா ஆய்ஞ்சு, மிக்சில போட்டு அரைச்சு, மாவோட கலந்து தோசை சுட்டுச் சாப்பிட்டுப் பாருங்க…..அப்பத் தெரியும்….
அப்டியா? எதுவானாலும் சரி…ரெண்டு நாளைக்குக் கிடையாது….வீட்டுல விசேஷம்….பிறகு வாங்க…..
கீரைக்காரர் இவனையே பார்த்தார். முகத்தில் இன்னும் முழு நம்பிக்கை வந்தமாதிரித் தெரியவில்லை. இத்தனை கட்டன்ரைட்டாகப் பேசுறாரே சாரு…?
மாமி இல்லீங்களா……?
என்னய்யா அநியாயம்? மாமி சொன்னாத்தான் நகருவையா? அதென்ன இத்தனை தெளிவான கேள்வி…?
. லேசான கோபம் மனதில்.
என் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். நம்பிக்கை இல்லை போலும்.
என்ன நினைத்தாரோ…..சரி….வாரன் சார்……
கீரையைக் கொடுத்து விட்டு வழக்கமாய்க் குதித்து வண்டியில் ஏறும் உற்சாகமில்லை. மெல்ல உருட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார். கொஞ்ச தூரம் கடப்பதற்குள் மாமி கூப்பிட்டாலும் கூப்பிடலாம் என்கிற எதிர்பார்ப்போ என்னவோ….அவர்களுக்குள் அப்படி ஒரு அன்டர்ஸ்டான்டிங்….வியாபாரிக்கும் நுகர்வோருக்குமான புரிதல்.
சே…! அந்த முகம்தான் ஏன் இப்படிச் சுண்டிச் சுருங்கிப் போய்விட்டது அவருக்கு? இந்த “வேண்டாம்“ பதிலை அவளே வந்து சொல்லியிருக்கக் கூடாதா? இந்தப் பாவத்தை வேறு நான் கட்டிக் கொள்ள வேண்டுமா?
காரணத்தைச் சொல்லிச் சொல்ல வேண்டியதுதானே? அதற்கு ஏன் தயக்கம்? கேட்டு விட்டிருந்த கீரையை ஒருவேளை கொண்டுவந்து நின்றாலும் போயிற்று என்கிற சங்கடம்தானா அவளை இப்படி உள்ளே தள்ளிற்று? ஃப்ரெஷ்ஷா வாங்கிப்போம்…ஃப்ரெஷ்ஷா வாங்கிப்போம் என்பாளே அதன் எதிரொலியா? என்னய்யா தர்ம சங்கடம் இது? முடக்காத்தானை வாங்காமல் முடங்கி விட்டாளே உள்ளேயே?
சே…பாழாய்ப் போன இந்தத் தாத்தா பாட்டி திவசம் இன்னும் நாலு நாள் கழித்து வந்திருக்கக் கூடாதா?
(ஏண்டா, நீங்க கீரை சாப்பிடணும்ங்கிறதுக்காக நாங்க செத்த நாளைத் தள்ளிப் போட முடியுமா? முட்டாப் பயலே…!}
வேண்டாத மனச் சங்கடத்தோடே உள்ளே நுழைகிறேன்.
அடுப்படியிலிருந்து ஜன்னல் வழியே சற்றே மறைந்து நின்ற போக்கில், அந்தக் கீரைக்காரர் செல்வதையே வைத்த கண் வாங்காமல், சோபையின்றி, அசையாமல் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் சாந்தி….!