“என்ன ஐயா! ரோடு ரிப்பேர் நடந்து கொண்டிருக்கிறது போலிருக்கிறதே? குறுக்கே பள்ளம் வெட்டியிருக்கான். மோட்டார் சைக்கிள் போகாது.”
“என்ன செய்கிறது?” பின்புறம் காரியரில் உட்கார்ந்து கொண்டிருந்த நண்பர் என்னைக் கேட்டார். சைக்கிள் என்னுடையதானாலும் நான் சைக்கிளோடு அவரைச் சந்திக்கிற போதெல்லாம், இலவசச் சவாரி செய்யும் உரிமை அந்த நண்பருக்கு உண்டு.
“பக்கத்து சந்து வழியாக விட்டுக் கொண்டு போய் விடலாமா?” நான் மெல்லச் சிரித்துக் கொண்டே கேட்டேன்.
“பக்கத்துச் சந்தா? ஐயையோ வேண்டவே வேண்டாம். நான் பேசாமல் இறங்கி நடந்தே போய் விடுகிறேன்.”
“ஏன் அப்படிப் பயந்து சாகிறீர்?”
“ஏனா? உமக்கு ஒன்றுமே தெரியாதா? அல்லது வேண்டுமெனறே என் வாயைக் கிண்டுகிறீரா?”
நான் பதில் சொல்லாமல் முன் போலவே அவரைப் பார்த்துக் குறும்புத்தனமாகச் சிரித்தேன். மேற்படி சந்துக்குள் நுழைந்து செல்ல நண்பர் பயப்பட்டது நியாயந்தான். சாதாரணமாக மாலை ஐந்தரை மணிக்கு மேல் எவ்வளவு திட வைராக்கியமுள்ள ஆண் பிள்ளையானாலும் சரி, அந்தச் சந்தின் ஒரு கோடியில் நுழைந்து மறு கோடி வழியாக வெளியேறி விடுவதென்பது சுலபத்தில் முடிகிற காரியமில்லை. அப்படி நுழைந்து வெளியேறாமலிருப்பதற்காகவே காரிலும், ஜட்காவிலும், கால்நடை யாகவும், தரத்துக்கேற்றபடிப் பல உல்லாஸ் புருஷர்கள் அந்தச் சந்திற்கு ‘வாடிக்கையாக’ வந்து போவதுண்டு.
ஆம்! அது ஒரு தனி உலகம்! அந்தக் காலத்தில் தேவதாசிகளென்றும், அதற்குப் பின் கணிகையர்களென்றும் கூறப்பட்டு, இந்தக் காலத்தில் எந்தப் பெயரால் அழைப்பதென்றே தெரியாமலிருக்கும் அழகின் பிம்பங்கள். கேளிக்கைக்காக நாடி வருபவரையும், நாடாது தெருவோடு போகிறவரையும், வலை போட்டு இழுக்க வழி மேல் விழி வைத்து நிற்கும் போக பூமிதான் அந்தச் சந்து.
“என்ன ஐயா, சந்து வழியாக வேண்டாமென்றால் வேறு எப்படித்தான் போவது? – அதையாவது சொல்லுமேன்…?”
“திரும்பி மெயின் ரோடு வழியே போனால் என்ன?”
“அப்படிப் போனால் இரண்டு மைல் அதிகமாகச் சுற்ற வேண்டும்? பெட்ரோல் செலவாகுமே, என்று பார்க்கிறேன்.”
“வேறே என்னதான் செய்கிறது?”
“இந்தச் சந்து வழியாகப் போயிடறதாயிருந்தால் இவ்வளவு யோசனை பண்ண வேண்டாம். நீர்தான் ஒரேயடியா நடுங்குகிறீரே.”
“நடுங்குகிறேனோ நடுங்கவில்லையோ, வரமுடியாதென்றால் வர முடியாது. உமக்கு அவசரமானால் நீர் தாராளமாகச் சந்து வழியே போகலாம். நான் இரண்டு மைல் நடந்தாவது போய்க் கொள்வேன்…”
“அட! நீரொண்ணு… நெருப்பைப் பார்த்தாக்கூடவா சுட்டுடும்? என்னமோ பெரிசாக் கதைக்கிறீரே!”
“பனைமரத்துக்குக் கீழே நின்னு பாலைக் குடிச்சாலும் கள்ளுதான்…”
“ஏதேது! பெரிய பீஷ்மராட்டமாப் பேறீரே.”
“சார்! இந்தாங்க. உங்களுக்கும் உங்க மோட்டார் சைக்கிளுக்கும் ஒரு பெரிய நமஸ்காரம் என்னைத் தயவு செய்து விட்டுடுங்க”
நண்பர் கோபித்துக் கொண்டு கிளம்பிவிட்டார். “சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்! வாரும், உம் இஷ்டப்படியே மெயின்ரோடு வழியாகத் திரும்பிப் போகலாம்” என்று அவரைச் சமாதானப்படுத்திச் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு கிளம்பினேன்.
மெயின்ரோடும், கடற்கரைக்குப் போகும் வழியும் சந்திக்கின்ற இடத்திற்குச் சென்ற போது, நண்பர் திடீரென்று திட்டத்தை மாற்றினார். “சார் இப்ப உடனே வீட்டுக்குப் போய்த் தான் என்ன செய்யப் போகிறோம்? பீச்சிலே போய்க் கொஞ்ச நேரம் நிம்மதியாக் காத்து வாங்கிட்டுப் போகலாமே!”
“ஒ எஸ். அப்படியே செய்தால் போச்சு நான் மோட்டார் சைக்கிளைக் கடற்கரைக்குப் போகும் வழியில் திருப்பினேன்.
கடற்கரையில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் குட்டிகளுமாக ஒரே கூட்டம் ஒரு கடல் முடிகிற இடத்தில் இன்னொரு கடல் ஆரம்பமாவது போல் தோன்றியது, அந்தக் கூட்டத்தைப் பார்க்கும் போது.
மணலில் வெகுதுரம் நடந்து சென்று, ஒதுக்குப்புறமாகக் கூட்டமில்லாத இடத்தில் உட்கார்ந்தோம். நண்பர் எதையோ சிந்தித்துக் கொண்டே என்னோடு உட்கார்ந்திருக்கிறார் என்று அவர் முகத்திலிருந்து அனுமானிக்க முடிந்தது. ‘கேட்டுவிடலாமா?’ என்று எண்ணினேன். ஆனால் கேட்கத் தோன்றவில்லை. பேசாமல் கடலைப் பார்க்கத் தொடங்கினேன். அவரும் கடலைப் பார்த்தார். புறக்கண்கள் தான் கடலைப் பார்த்தனவே ஒழிய அகக்கண்கள் உள்முகமாக ஆழ்ந்து எதையோ துழாவிக் கொண்டிருக்க வேண்டுமென்று தோன்றியது. இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளாமலேயே கால் மணி நேரம் கழிந்துவிட்டது. திடீரென்று நண்பர் வாயைத் திறந்தார். அவர் அவ்வளவு நேரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்த பிரச்னை வெளிவந்து விட்டது.
“சார்! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்…? ஒழுங்கீனத்தையே உல்லாசம், நினைக்கும் ஒருவகைப் பெண்மை சமூகத்தில் எப்படி ஏற்பட்டிருக்க முடியும்?, யாருடைய அஜாக்கிரதையால் ஏற்பட்டிருக்க முடியும்?”
“நீங்கள் எதைக் கேட்கிறீர்கள்? உங்கள் கேள்வி எனக்குத் தெளிவாக விளங்கு வில்லையே?’ நான் வேண்டுமென்றே அவர் கேட்பது இன்னதென்று தெரிந்தும் தெரியாதது போல் கேட்டேன். என்னை ஏறிட்டுப் பார்த்தார் அவர் ஒரு நிமிஷம் அந்தப் பார்வை அப்படியே நிலைத்தது. கொஞ்சம் தயங்குவதுபோல் தெரிந்தது. “இல்லை!. கற்பும் ஒழுக்கமுமே இரண்டு கண்களாக விளங்கும் நமது நாட்டுப் பெண் சமூகத்தில் இந்த மாதிரி வரம்பற்ற வகை ஒன்று ஏற்படக் காரணமென்ன என்று கேட்கிறேன்?”
நண்பர் துணிவை வரவழைத்துக் கொண்டு நேரடியாகவே என்னைக் கேட்டார்.
“இந்தக் கேள்வியை என்னிடம் கேட்க வேண்டுமென்ற எண்ணம் உங்கள் மனத்தில் எப்போதிருந்து உண்டாயிற்று?” நான் அவரைச் சரியானபடி மடக்கினேன்.
“ஏன்? இப்போதுதான்! சிறிது நேரமாக இதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.”
“அப்படியானால் அந்தச் சந்து முனையில் நமக்குள் நடந்த விவாதத்தை நீர் இன்னும் மறக்கவில்லை. இல்லையா?”
“ஆமாம்! அதற்கென்ன?”
“ஒன்றுமில்லை! சும்மாக் கேட்டேன்’’ நான் மெல்லச் சிரித்துக் கொண்டேன். அதை எப்படியோ நண்பர் பார்த்து விட்டார்.
“ஏன் சிரிக்கிறீர்கள்? நான் கேட்டதில் என்ன தப்பு?”
‘தப்பாவது, ஒன்றாவது? அதெல்லாமில்லை. அந்தப் பிரச்சனை உம்முடைய மனத்தில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறதென்று நினைத்துப் பார்த்தேன். சிரிப்பு வந்தது.”
“அது சரி! நீங்கள் இன்னும் என் கேள்விக்குப் பதில் சொல்லவே இல்லையே?’
“சொல்கிறேன்! தோட்டித்துக்கு வேலி போடுகிறார்கள். ஆனால், வேலிக்கு என்ன பாதுகாப்பு? வேலி இருப்பதனால் தானே தோட்டம் அடைய வேண்டிய துன்பங்களையும், அழிவுகளையும் அது அடையாமல், தானே தாங்கிக் கொள்கிற அளவிற்கு வேலி பயன்படுகிறது?”
“ஊம்! அப்புறம்?.” “இந்த மாதிரிப் பரத்தையர் கூட்டம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல மனிதகுலத்தில் பெண்களின் பிரவேசம் என்று ஏற்பட்டதோ அன்றிலிருந்து பரத்தைமையும் இருக்கிறது!”
“பொய்! சுத்தப் பொய்! இந்தச் சமூகம் ஒரு சிலரை வேண்டுமென்றே குட்டிச்சுவராக்கிவிட்டது. ராஜாக்களும், பிரபுக்களும், கோவில்களுமாகச் சேர்ந்து பணக்கொழுப்பினாலும், பக்திக் கொழுப்பினாலும் பரத்தைமையை வளர்த்துவிட்டார்கள்.”
“சார்! நீங்கள் ஆவேசமாகப் பேசுகிறீர்கள். கொஞ்சம் உண்மையையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தக் குற்றத்தை ராஜாக்களின் மேலும் மதத்தின் மேலும் சுமத்திவிட்டுத் தப்பித்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு தனி மனிதனும், அவ்வளவேன்? நீரும் நானும் உட்பட, இந்தச் சமூகம் முழுவதும் இது விஷயத்தில் குற்றவாளி தான்! யாருமே தப்ப முடியாது!”
“உம்மை வேண்டுமானால் குற்றவாளி என்று சொல்லிக் கொள்ளும் என்னைச் சொல்லாதீர். நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!” அவர் கோபமடைந்து மறுத்துப் பேசினார். அவர் தம்மைக் குற்றவாளியாக்குவதை விரும்பவில்லை. நான் மேலும் விவாதத்தை வளர்த்தேன்.
“நான் கேட்கிற கேள்விகளுக்குக் கொஞ்சம் நிதானத்தோடு பொறுமையாகப் பதில் சொல்வீரா?”
“என்ன? கேளுமே சொல்கிறேன்.”
“தோட்டத்துக்கு இருக்கிற கட்டுக்காவல், பாதுகாப்பு எல்லாம் அதைக் காக்கிற வேலிக்கு மட்டும் ஏன் இருப்பதில்லை?”
“பாதுகாப்பை உண்டாக்கும் வஸ்து எதுவோ அதற்குப் பாதுகாப்பு தேவை இல்லை!. பாங்கு கட்டிடத்திற்குக் காவலாக நைட் வாட்ச்மேன் (இரவுக் காவல்காரன்) போடுகிறார்கள். அவனுக்குக் காவலாக இன்னொரு காவல்காரனா போடுகிறார்கள்?” நண்பர் என் கேள்விக்குப்பதிலாக மற்றொரு கேள்வியையே கேட்டார். அது எனக்குச் சாதகமாகவே அமைந்துவிட்டது.
“ஆல்ரைட் சரியான கேள்வி. சமூகக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பெண்கள் வழி தவறாமல், அழிவடையாமல், கெடாமல் இருக்க வேண்டுமானால் இப்படிச் சிலர் வேலியாக அமைய வேண்டும். இல்லையானால் வேலிக்கு ஏற்படும் அழிவு தோட்டத்துக்கே ஏற்பட்டு விடும்!”
“தர்க்கரீதியாக இந்த முடிவு சரியாக இருக்கலாம். ஆனால் இது அநியாயம்! கொடுமை ஒரு சிலரை நிரந்தரமாகக் கெடுக்கும் சூழ்ச்சி?”
ஆவேசமாக என்னை எதிர்த்து முழங்கினார் அவர்.
“‘ஃபயர் பெல்ட்’ என்று கேள்விப்பட்டிருக்கிறீரா? காட்டிலாகாவில் வேலை பார்த்திருந்தால் தெரியும். காட்டிலுள்ள பயன்மிக்க நல்ல மரங்களில் தீப்பிடித்துக் கொள்ளக்கூடாதே என்பதற்காக ஒரு பயனுமில்லாத சில வெற்று மரங்களை அவற்றைச் சுற்றிப் பயிரிட்டிருப்பார்கள். தீப்பிடித்தாலும் அந்த வெற்று மரங்களோடு அழிவு நின்றுவிடும். மற்ற மரங்களில் பற்றாமல் அணைத்து விடுவார்கள். பரத்தையர்கள் இந்த மாதிரிச் சமூகத்திற்கு ஒரு ‘ஃபயர் பெல்ட்’ டாக இருந்து காத்து வருகிறார்கள்.”
“இப்படி முடிவு செய்வது நாகரிகமடைந்த சமூகத்தின் அறிவுக்கும் ஆண்மைக்குமே ஒரு பெரிய களங்கம். இதை நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன்.”
“எது களங்கம்? வீடெல்லாம் சாக்கடைத் தண்ணிரால் அசிங்கமாதி விடக்கூடாதே என்பதற்காக வீட்டின் ஒரு மூலையில் சிறிய சாக்கடை வைத்துக் கட்டுகிறோம். அப்படிக் கட்டுவதால் அது வீட்டுக்கே களங்கம் என்று கூறி விட முடியுமா?” என்னுடைய கேள்வி ஆணித்தரமாக இருந்தது.
நண்பர் ‘முழி முழி’ என்று விழித்தார். எனக்கு எப்படிப் பதில் சொல்வதென்றே உடனே அவருக்குப் புரியவில்லை.
“வேறொன்றிற்காகவும் நான் உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. நம்முடைய சமூகத்தில் கண்ணகிக்கும் சீதைக்கும் விழா நடத்துகிறோம். இது மாதிரி ஊழல்களை ஒழிக்க முடியவில்லையே’ என்று வருந்தித்தான் கேட்டேன்’ நண்பரின் தொண்டை கரகரத்தது.
“சமூகத்தில் பெண்ணின் உடல் சம்பந்தமான தேவை மனிதனுக்கு இருக்கிறவரை ஒழிக்க முடியாத பிரச்சனை இது சொல்லப் போனால் இந்த ஊழல் இருப்பதனால் தான் சீதையையும் கண்ணகியையும் புகழ முடிகிறது. இவர்கள் போல் வாழாமல் நன்றாக வாழ்ந்ததற்காகத் தானே அவர்களுக்குப் பெருமை? எல்லாருமே சீதைபோல், கண்ணகிபோல் வாழ்ந்தால் அவர்களுக்கென்று தனிப்பெருமை ஏற்பட்டிருக்க முடியுமா? நன்றாக யோசித்துப் பாரும்!”
“உங்கள் விவாதம் வெகு அழகாக இருக்கிறது. மறுப்புச் சொல்ல முடியாமல் பேசுகிறீர்கள். ஆனால் இவ்வளவு திறமையும் ஒழுங்கீனத்தை அங்கீகரிப்பதற்குப் பயன்படுகிறதே என்பதைத்தான் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.” நண்பருக்கு என்மீது மிகுந்த வருத்தம்.
“மணி எட்டரை ஆகிவிட்டதே. புறப்படலாமா?”நண்பர் எழுந்திருந்தார்.நானும் எழுந்திருந்தேன். இருவரும் கடற்கரையிலிருந்து புறப்பட்டோம்.
இதன் பிறகு பத்துப் பதினைந்து நாட்கள் நான் அந்த நண்பரைச் சந்திக்கவே இல்லை. பின்பு திடீரென்று ஒருநாள் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சந்தித்தேன்.
“என்ன சார்? எங்கே? பத்துப் பதினைந்து நாட்களாக ஆளையே காணோம்! ஊரில் இல்லையோ?” என்று விசாரித்தேன்.
வீட்டிலே பிரசவ டயம் அவளை மாமனார் வீட்டில் கொண்டு போய் விட்டு வரப் போயிருந்தேன். போன இடத்திலே ஒரு வாரம் தங்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். இருந்துவிட்டு வந்தேன்!”
“அப்போ சாப்பாடெல்லாம் ஹோட்டல் தானா?”
“ஆமாம் வீட்டிலே ஒருத்தரும் இல்லைன்னா வேறென்ன செய்யிறது?”
“அது சரிதான் வீட்டில் இல்லையானால் ஹோட்டல்லேதான் சாப்பிடனும்?”
சாப்பிட்டு முடிந்ததும் அவர் என்னிடம் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்.
ஏழெட்டு நாள் கழித்து ஒருநாள் அதிகாலையில் அவசர காரியம் ஒன்றின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் வெளியே போக வேண்டியிருந்தது. குழந்தைக்கு ஜூரம் மருந்து வாங்குவதற்குப் போக’வேண்டும்.
‘அந்தச் சந்து’ வழியாகப் போனால் சுருக்கப் போய் விடலாம். மெயின்ரோடு சுற்றிப் போனால் அரைமணி அதிகமாகும். பொழுது புலர்ந்தும் புலராமலும் இருக்கிற கருக்கிருட்டு நேரம். ‘யார் எப்படி நினைத்தாலென்ன? காரியம் அவசரம்’ என்று எண்ணிக் கொண்டு, சந்து வழியாகவே கிளம்பினேன். வழக்கமாகச் சாயங்கால நேரங்களில் இருக்கும் கலகலப்பு அப்போது அந்தத் தெருவில் இல்லை. ஆள் வசிக்கிற தெருவாகவே தெரியவில்லை. சந்தின் ஒரு வீட்டு வாயிற்கதவு திறக்கப்படும் ஒலி கேட்டது. தாழ்ப்பாள் நீங்கும் ஒலியோடு கலகலவென ஒரு பெண்ணின் சிரிப்பொலியும் வளையல் ஒலியும் கேட்டன.
அதையடுத்து முகம் மறைந்தும் மறையாமலும் அங்கவஸ்திரத்தால் தலையில் முட்டாக்குப் போட்டுக்கொண்டிருந்த மனிதர் ஒருவர் அந்த வீட்டுப் படிகளிலிருந்து இறங்கித் தெருவில் நடந்தார்.
நான்தான் பராக்குப் பார்த்துக் கொண்டே சைக்கிளை விட்டுவிட்டேனோ, அல்லது அந்த மனிதர்தான் பராக்குப் பார்த்துக் கொண்டே நடந்து வந்தாரோ? எப்படி நடந்ததென்று தெரியவில்லை!
மோட்டார் சைக்கிளின் முன் சக்கரம் இலேசாக அவர் மேல் மோதிக் கீழே தள்ளிவிட்டது. நிலைதடுமாறி விழுந்த வேகத்தில் கால்கள் பின்னியதால் அவருடைய அரை வேஷ்டி கறையோரத்தில் ‘பர்’ ரென்று கிழிந்தது. தலையை முடியிருந்த அங்கவஸ்திரம் விலகித் துரப் போய் விழுந்தது. உயர்ந்த ரக செண்ட்டின் வாசனை அவர் ஆடைகளிலிருந்து கிளம்பி வந்து மூக்கைத் துளைத்தது. நான் சைக்கிளை நிறுத்திவிட்டுத் துக்கிவிடுவதற்கு ஒடினேன். காயம் ஒன்றுமில்லை. அதிர்ச்சியில் விழுந்துவிட்டார். அருகில் நெருங்கியதும் திடுக்கிட்டேன். அவர் என் நண்பர்.
“அடேடே சார்வாளா? ஏது? இத்தறுவாய்க்கு இந்தத் தெருப் பக்கம்!” என் கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை.
“போம் ஐயா நீர் சைக்கிளை விட்டுக் கொண்டு வந்த லட்சணம், நல்ல வேஷ்டி – கிழிந்துவிட்டதே?”
“கிழிசல் இப்போதுதானா ஏற்பட்டது? அடடா” என்னுடைய கேள்வியின் சிலேடைப் பொருளை அவர் புரிந்து கொண்டாரோ, இல்லையோ?
– 1969-க்கு முன், நா.பார்த்தசாரதி சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி), முதற்பதிப்பு: டிசம்பர் 2005, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை