கிங் மேக்கர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 13, 2016
பார்வையிட்டோர்: 7,819 
 
 

தொழிலதிபர் குரானா மர்மச் சாவில்

மாயா கஷ்யப்பிடம் விசாரணை முடிந்தது – அடுத்த புதன் தீர்ப்பு

பெங்களூர் அக்ட் 30

பிரபல தொழிலதிபர் ராகேஷ் குரானாவின் மர்மச் சாவில் இன்று இறுதி கட்ட விசாரணை பெங்களூர் நீதி மன்றத்தில் நடந்து முடிந்தது. தீர்ப்பு அடுத்த புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

தொழிலதிபர் ராகேஷ் குரானாவும் இளம் அழகி மாயா கஷ்யப்பும் கடந்த மாதம் பெங்களூரிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ரகசியமாக அறை எடுத்து தங்கினார்கள். மறுநாள் காலை குரானா தன் கட்டிலின் மீது இறந்து கிடந்தார். அதிர்ச்சியுற்ற மாயா கஷ்யப், ஹோட்டல் நிர்வாகத்தினருக்கும் போலீசுக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தாள்.

போலீஸ் வந்து பிரேதத்தை போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்பிவைத்து அவர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டபோது தொழிலதிபர் குரானாவின் பெட்டியில் வயாக்கிரா மாத்திரைகள் கண்டெடுக்கப் பட்டன. அவர் அளவுக்கதிகமாக முந்தைய இரவு வயாக்கிரா மாத்திரைகளை உட்கொண்டதால் மாரடைப்பில் இறந்து விட்டதாக போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் அவர் கொலை செய்யப்படவில்லை என்பது உறுதியாகி விட்டது. மாயா குற்றமற்றவர் என்பதால் அவர் இந்த வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்கப் படுவார் என்று சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.

இறுதித் தீர்ப்பு அடுத்த புதன் கிழமை வருவதற்குள் நாம் மாயா கஷ்யப்பைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வோம்.

மாயா கஷ்யப். வயது 27. எண்பது வருடங்களுக்கு முன்பே மாயாவின் முன்னோர்கள் ராஜஸ்தானிலிருந்து பெங்களூர் குடியேறியதால் மாயாவுக்கு பிறப்பிலிருந்தே பெங்களூர் வாசம்தான். ஆங்கிலம், ஹிந்தி அது தவிர அனைத்து தென்னிந்திய மொழிகளும் தெரியும். ஹைஸ்கூலுக்கு மேல் படிப்பு ஏறவில்லை. ஆனால் அழகிலும் அதை தேவையான நேரங்களில் வெளிக் காட்டுவதிலும் டாக்டரேட் வாங்கியவள். சபலமுள்ள பெரிய தொழிலதிபர்களுக்கும், பெரிய அரசியல் தலைவர்களுக்கும் சரீர ஒத்தாசை செய்பவள்.

அவர்களுடன் வெளிநாடு, உள் நாடு என்று பயணிப்பவள். ஒளிவு மறைவின்றி தடாலடியாக எதையும் செய்பவள். இது தப்பு அது சரி என்றெல்லாம் யோசிக்காமல் மனதுக்கு பிடித்ததை சாதித்துக் கொள்பவள்.

மிகவும் தைரியசாலி.

அவள் தைரியத்துக்கு ஒரு சிறிய உதாரணமாக இதே குரானா வழக்கில் நீதி மன்றத்தில் எதிர்கட்சி வக்கீல் கேட்ட கேள்விகளும் அசராது அவள் அளித்த பதில்களும்:

வக்கீல் : தொழிலதிபர் ராகேஷ் குரானாவுக்கும் உங்களுக்கும் என்ன உறவு?

மாயா: நல்ல நண்பர்கள்.

வக்கீல் : அவர் வயது அறுபது. நீங்கள் எப்படி நண்பர்களாக இருக்க முடியும்?

மாயா : நண்பர்களாக இருக்க வயதை எந்தச் சட்டம் குறிக்கிறது?

வக்கீல் : சரி, நீங்களும் மறைந்த குரானாவும் ஹோட்டல் அறையில் என்ன செய்தீர்கள்?

மாயா : கண்டிப்பாக பைபிளோ, கீதையோ படிக்கவில்லை. (கொல்லென்ற சிரிப்பு)

வக்கீல் : வேறு என்னதான் செய்தீர்கள்?

மாயா : அவர் ஒன்றுமே செய்யவில்லை. வெறும் வயாக்கிராவைத்தான் உண்டிருக்கிறார்.

அதனால்தான் இந்த வழக்கே…

அசெம்பிளி, பார்லிமென்ட் எலக்ஷன் வரும்போது சீட்டுக்காக சதாசிவநகரிலுள்ள இவள் பங்களா வீட்டின் முன்பு அரசியல் வாதிகள் பணப் பெட்டியுடன் காத்திருப்பார்கள். கட்சித் தலைவர்களின் தலையைத் தடவி இவள் இதுவரை சுமார் முப்பது பேருக்கு எம்.எல்.ஏ சீட் பத்து பேருக்கு எம்.பி சீட் வாங்கிக் கொடுத்திருக்கிறாள். ஆளுங் கட்சி, எதிர் கட்சி என்கிற பாகுபாடெல்லாம் அவளுக்கு கிடையாது, பணம் மட்டுமே பிரதானம். .

மாயா நான்கு வங்கி லாக்கர்களில் கோடிக் கணக்கில் பணமாகவும், எக்கசக்க நகைகளும் ரகசியமாக வைத்திருக்கிறாள். ‘நாற்பது வயதுக்குப் பிறகு தன்னை யாரும் சீண்ட மாட்டார்கள்… தற்போதைய சேமிப்பில்தான் அப்போது வாழ வேண்டியிருக்கும்’ என்று அடிக்கடி தனக்குள் நினைத்துக் கொள்வாள்.

ஒரு தடவை மும்பையிலிருந்து ஒரு பிரபல வைர வியாபாரி பெங்களூர் வந்து மாயாவுடன் தங்கியிருந்தார். பிடுதியிலுள்ள ஒரு சாமியாரைப் பார்ப்பதற்காக இவளையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். மாயாவுக்கு பிடிக்காத விஷயம் இந்த சாமியார்கள். எனினும் வைர வியாபாரிக்கு கம்பெனி கொடுக்க வேண்டுமே என்பதற்காக அவருடன் சென்றாள். தவிர அவர் முந்தைய தினம் மாயாவிடம் இரண்டு வைர நெக்லஸும், ஐந்து லட்சம் பணமும் ஆசையுடன் கொடுத்திருந்தார். .

சாமியாரின் ஆசிரமத்திற்குள் இவர்களின் கார் நுழையும் போதே ஏகப்பட்ட செக்யூரிட்டி கெடுபிடிகள். சாமியாருக்கு எதுக்கு இவ்வளவு படாடோபம் என்று நினைத்தாள்.

நாடு தெரிந்த பெரிய வைர வியாபாரி என்பதால் எளிதாக அந்த சாமியாரை அவரது தனியறையில் சந்திக்க முடிந்தது. சாமியாரைப் பார்த்ததுமே மாயாவுக்கு குமட்டிக் கொண்டு வந்தது. அந்த ஆள் மூஞ்சியில் அருளே இல்லை. ரெளடிக் களைதான் தென்பட்டது. இவனுக்கு ஏன் இவ்வளவு மரியாதை என்று நினைத்தாள்.

அந்த சாமியார் மாயாவைப் பார்த்ததுமே கண்களில் காமம் தெறிக்க ஏகத்துக்கும் ஜொள்ளு விட்டார். “உட்காரும்மா கோந்தே” என்று தன் முன்னால் இருந்த இருக்கையைக் காண்பித்தார். வியாபாரி எதோ புரிந்து கொண்டவர் போல் அங்கிருந்து அகன்றார்.

மாயா அலட்சியமாக கால் மேல் கால் போட்டுக்கொண்டு சாமியார் முன் அமர்ந்தாள்.

“உனக்கு எந்த ஊர்?”

“பூர்வீகம் ராஜஸ்தான்…”

“ஓ அதான் இப்படி தள தளன்னு சிந்திப் பசு மாதிரி இருக்க…

நீ அடிக்கடி இங்க வரணும் கோந்தே… மற்ற பெண்களுடன் பிரார்த்தனையில் ஈடுபட்டால்

என்னுடைய பூரண ஆசீர்வாதம் உனக்கு கிடக்கும்”

“எனக்கு யாரோட ஆசீர்வாதமும் வேண்டாம். கூட்டுப் பிரார்த்தனை என்றால் அலர்ஜி.”

“ஏன், உனக்கு கடவுள் நம்பிக்கை உண்டுதான.. ?”

“உண்டு.. ஆனா என்னுடைய வழிபாடு வேற மாதிரி… பக்தி என்பது கணவனும் மனைவியும் கலவியில் ஈடுபடுவது மாதிரி அமைதியானது, ஆர்ப்பாட்டமில்லாதது, புனிதமானது, வெளியே தெரியக் கூடாதது.”

சாமியார் சற்று மிரண்டார். முகம் அஷ்ட கோணலானது.

எனினும் அவள் தனக்கு உடன்படுவாளா என்று தெரிந்து கொள்ளும் ஆசையில், “கோந்தே உனக்கு தொடையில் எதோ வீக்கம்னு தோன்றது…எங்க கொஞ்சம் பொடவைய தூக்கிக் காண்பி, பார்க்கலாம்” என்றார்.

மாயா, சற்றும் கூச்சப் படாமல் எழுந்து நின்று தன புடவையை முழங்கால் வரை தூக்கியபடி சாமியாருக்கு அருகில் சென்றாள். மாயாவின் தொடையைப் பார்க்கும் ஆவலில் சாமியார் குனிந்தபோது, அவள் தன் வலது காலைத் தூக்கி அவர் மூஞ்சியில் ஓங்கி ஒரு உதை விட்டாள். சற்றும் இதை எதிர் பார்க்காத சாமியார் அலறிக்கொண்டு கீழே சரிந்தார்.

அன்று மும்பை ஓடிய வைர வியாபாரி இன்றுவரை மாயாவிடம் பேசவில்லை.

புதன் கிழமை…

நீதி மன்றத்தில் நல்ல கூட்டம். பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ் ஏகத்துக்கும் வந்திருந்தனர். மாயாவும் தன்னை மிக நன்றாக அலங்கரித்துக் கொண்டு புன்னகையுடன் காணப்பட்டாள்.

பத்தரை மணிக்கு தீர்ப்பு வாசிக்கப்பட்டது. “ தொழிலதிபர் ராகேஷ் குரானா அதிகமாக வயாக்கிரா எடுத்துக் கொண்டதால் மாரடைப்பினால் இறந்து விட்டார் என்பதை இந்த கோர்ட் உறுதி செய்கிறது. மாயா மிகவும் நேர்மையுடன் போலீசுக்கும், ஹோட்டல் நிர்வாகத்திற்கும் உடனே தெரியப் படுத்தி தன்னையே விசாரணைக்கும் உட்படுத்திக் கொண்டதை இந்த நீதிமன்றம் ஒரு நல்ல உதாரணமாக எடுத்துக் கொள்கிறது. மாயா இந்த வழக்கில் இருந்து முழுவதுமாக விடுவிக்கப் படுகிறார்….”

நீதிமன்றத்தை விட்டு வெளியே மாயா வந்தபோது ரிப்போர்ட்டர்ஸ் அவளைச் சூழ்ந்து கொண்டனர். “மாயா மேடம், உங்க தைரியம் அசாத்தியமானது.. அது எப்படி?”

“நான் என் நண்பர்களுக்கு நல்ல கம்பெனிதான கொடுக்கிறேன் அதுக்கு எதுக்கு பயப் படணும்?”

இந்த வழக்கில் நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்?”

“எனக்கு ஒரு கஷ்டம்னு வரும்போது என் ஆண் நண்பர்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள்…

எல்லோரும் வாலைச் சுருட்டிக் கொண்டார்கள்… அதாவது முன் வாலை. நான்தான் தனியாக நின்று இந்த நீதி விசாரணையை எதிர்கொண்டேன்… சல சலப்புக்கு அஞ்சும் என் நண்பர்களைப் புரிந்து கொண்டேன்.”

மெர்சிடிஸ் பென்ஸ் காரில் ஏறிச் சென்று விட்டாள்.

இந்தக் களேபரம் நடந்து கொண்டிருக்கையில் ஒரு மாதம் முன்பு இன்கம் டாக்ஸ் ஆபீஸுக்கு காரசாரமாக ஒரு கடிதம் வந்தது… அதில், ‘மாயா தன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து விட்டதாகவும், அவள் ஒரு கிங் மேக்கர் என்பதால் ஐ.டி டிபார்ட்மென்ட் அவளிடம் பயந்து விட்டதாகவும்’ கிண்டலாக எழுதியிருந்தார்கள்.

ஐ.டி ஆபீசர் ராம சேஷன் நீதிமன்றத் தீர்ப்பு வரட்டும் எனக் காத்திருந்தார். தற்போது மாயா நிபந்தனையின்றி விடுவிக்கப் பட்டுவிட்டதால், அவளுக்கு போன் செய்தார்.

“மாயா ஹியர்.”

“”மேடம் நான் ஐ.டி ஆபீசர் ராம சேஷன். நீங்க ஐ.டி ரிட்டர்ன்ஸ் எதுவுமே பைல் பண்ணல”

“ஆமா சார் வருமானம் எதுவும் இல்ல… அதனால பண்ணல, சரி இன்னிக்கே நில் ரிட்டர்ன் பைல் பண்ணிடறேன்.”

“அதெப்படி நில் ரிட்டர்ன்னு சொல்றீங்க? உங்க வீட்டுல ஆடி, பென்ஸ், பி.எம்.டபிள்யூ ன்னு அவ்வளவும் காஸ்ட்லி கார்கள்…”

“ஆமா மிஸ்டர் ராம சேஷன்… ஆனா அதுல ஒரு காரும் என்னோடது இல்லயே… டாக்குமெண்ட்ஸ் பாருங்க. என் நண்பர்கள் பலர் என் வீட்டிலேயே பார்க் பண்ணிடறாங்க… என் கைல எப்பவும் ஒரு பத்தாயிரத்துக்கு மேல நான் வச்சுக்கிறதில்ல … வீட்டுல என் பெட்ரூமில் ஒரு ஏ.ஸி, ஒரு லாக்கர் இருக்கு அவ்வளவுதான். நீங்க என் வீட்டு ரெய்டுக்கு வாங்க… எல்லாத்தையும் காண்பிக்கிறேன் தராளமா பாருங்க..” என்றாள்.

“சரி… சரி நீங்க முதல்ல ரிட்டர்ன் பைல் பண்ணுங்க… ரெய்டைப் பற்றி அப்புறம் நாங்க டிசைட் பண்ணுகிறோம்.”

“மணி இப்ப பன்னிரண்டு. நான் என் லேப்டாப்புல ஐ.டி.பார்ம் டவுன் லோடு பண்ணி நீங்க லஞ்சுக்கு போயிட்டு வரதுக்குள்ள அனுப்பிச்சுடுவேன்.”

ராமசேஷன் தன் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த தயிர் சாதம், வடுமாங்காய் சாப்பிட்டுவிட்டு, ஒரு மாத்திரை போட்டுக் கொண்டு தண்ணீர் குடித்தார்.

இரண்டு மணிக்கு தன் டெஸ்க் டாப்பைத் திறக்க, அதில் மாயாவின் ஐ.டி ரிட்டர்ன்

வந்திருந்தது.

“அட சொன்ன மாதிரியே அனுப்பிச்சுட்டாளே… கெட்டிக்காரி” முனகிக் கொண்டார்.

பின்பு ஆர்வத்துடன் படித்தார்.

பெயர் : மாயா கஷ்யப்

தொழில் .. . .கிவ் குட் கம்பெனி டு சோபிஸ்டிகேட்டட் எலைட் பீப்பிள்

தொழில் நேச்சர் : டிமாலிஷன் ஆப் இல்லீகல் எரக்ஷன்ஸ்.

ராமசேஷன் வெடித்துச் சிரித்தார்.

என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *