கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 11, 2021
பார்வையிட்டோர்: 4,824 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

கொள்ளை இருட்டு கொள்ளையர்களே வேட்டைக்கு வரத்தயங்கும் இருள் மயம்… அந்த கட்டிடத்திற்கு பின்னணியாக உள்ள பாறைப் பொந்துகளும், அவைகளின் பின்புலமான மலைக் குவியல்களும், மரம், செடி, கொடிகளும், மங்கிப் போகாமலே மறைந்து போய் விட்டன. சாலையில் ஒளி உருளைகளாய் செல்லும் வாகனங்களைக்கூட காண முடியவில்லை. ஒப்புக்குக்கூட ஒரு மின்மினிப் பூச்சி இல்லை…

கதிர்வேலுக்கு லேசாய் பயம் பிடித்தது. உடலை சல்லடை செய்வதுபோல் அரித்தத கொசுக்களைக்கூட ‘ஆள் துணையாக,’ அவன் விட்டு வைத்தான். அவை அவன் காதுகளில் ஏறி நின்று போட்ட சத்தம் கூட அவனுக்கு ஒரு துணையாகத் தோன்றியது. இப்படிப்பட்ட இருளை அவன் எப்போதுமே பார்த்ததில்லை… உடலில் சோர்வு தட்டியது. இன்று காலை ஐந்து மணிக்கே எழுந்து அந்த சுற்றுலா மாளிகையின் நான்கு அறைகளையும் பெருக்கி முடித்துவிட்டு, செடி கொடிகளின் நீர்தாகத்தை தணித்துவிட்டு, கரடு முரடான மேட்டுப் பகுதியை, கொத்திப் போட்டு, மேற்பார்வையாளரின் கூப்பிட்ட குரலுக்கெல்லாம் ஓடி ஓடி, டவுனுக்கும் இந்த மாளிகைக்கும் அலைந்து, அலைந்து, இறுதியில், ‘இது நான்தானா’… என் பெயர் கதிர் வேலா… என்ற பிரமை வந்தபோது, வழக்கமாக வரும் மின்சாரம் கட்டறுந்து, இருள் கட்டவிழ்க்கப்பட்டது. கதிர்வேலு தன் உடல் சோர்வை, நியாயப்படுத்திக் கொண்டான். இரண்டு வாட்ச்மேன் வேலைகளை மட்டுமில்லாமல், தோட்டி கார்டனர் ஆகிய அத்தனை வேலைகளையும் அவன் ஒருவனே செய்கிறான். அதுவும் தினக் கூலி நாற்பது ரூபாய்க்காக… இதுக்காக மட்டுமா… இல்லை… இந்த தற்காலிக பணி நிரந்தரமாகனும்… அதுக்கு பாடுபட்டால்தான் முடியும்… கூடவே ஒரு பெரிய அரசு மாளிகையின் ராத்திரி ராசாவாக, தன்னைப் பாவித்துக் கொண்டதில் ஒரு பெருமிதம்… அத்தனை அதிகாரிகளும் அவனை நம்பி இந்த மாளிகையின் இரவு நேரப் பொறுப்பை கொடுத்திருப்பதில் ஒருவித பொறுப்புணர்வு…

பங்களா படிக்கட்டுகளில், கால் பரப்பிக் கிடந்த கதிர்வேலு எழுந்தான். வேகமா ஒரு நடை நடந்து, வீட்டுக்கு போயிட்டு வரலாமா. இவன் போகாமல் தங்கை சாப்பிடமாட்டாள். ஒருவேளை அலறியடித்து இந்தப்பக்கம் வந்திடக்கூடாது. இரவு நேர போக்கிரிகளுக்கு பேர்போன இடம் இது…

வேக, வேகமாய் நடக்கப்போன கதிர்வேலு, அந்த மாளிகையின் வெளிவாசல் முனைக்கு வந்ததும், பின்வாங்கினான். திருடர்கள் கொள்ளையடித்துப் போகிற அளவிற்கு எதுவும் இல்லைதான். தொட்டால் பிய்யும் கதவுகள். தட்டினால் உடையும் சுவர்கள்.

எந்த திருடனும் பகலில் நோட்டம் பார்க்காமல் இரவில் திருடமாட்டான். நோட்டம் பார்த்தவனோ வரவே மாட்டான். ஆனாலும் மூணு கிலோமீட்டர் டவுனில் சினிமா பார்த்துவிட்டு வருகிறவர்கள், குறுக்கு வழியாக இந்த பங்களாப் பாதையை பயன்படுத்தியதுண்டு. இந்த இருட்டில் வழக்கம்போல் வந்து கண் மண் தெரியாமல் அவன் ஆசையோடு சீவி சிங்காரித்த செடி கொடிகளை மிதித்து விடக்கூடாதே…

கதிர்வேலுக்கு தூக்கம் வந்தது. ஆனாலும் தூக்கம் கலைக்க அவன் சுற்றிச் சுற்றி நடந்தான்.

உலாத்திக் கொண்டிருந்த கதிர்வேலு, அப்படியே நின்றான். அந்த தேசியச் சாலையிலிருந்து உருவம் தெரியா ஒன்றை இரண்டு உருளை விளக்குகள் இபத்துக் கொண்டு வருகின்றன. இவன் எட்டிப் பார்ப்பதற்கு முன்பே அது அவன் முன்னால் வந்து நிற்கிறது. அந்தக் காரின் முன்கதவு வழியாக ஒரு ஒட்டடைக் கம்பன் இறங்குகிறான். பின் கதவை திறக்கிறான்… கதிர்வேலுக்கு பரிச்சயமான அவர், காரிலிருந்து இறங்ககிறார். நாற்பது வயதுக்காரர் கழுத்து இருக்க வேண்டிய இடத்தில் தலை இருக்கிறது. முட்டிக் கால்களை வயிறு மறைக்கிறது. டாவடிக்கும் செயின் தரையில் காலூன்னும் முன்பே கதிர்வேலிடம் குசலம் விசாரிக்கிறார்.

“என்ன கதிரு… சுகமா இருக்கியா?

“கதிர் வேலுக்கு அந்த இருளே ஒளியானது போன்ற உணர்வு…” அவரைத் தெரியாதவர் யாருமில்லை. அப்பேர்ப்பட்ட அவர் இவனைத் தெரிந்து வைத்திருக்கிறார். அது மட்டுமல்ல… பதினைந்து நாளைக்கு முன்பு ஒரு நிகழ்ச்சிக்காக கலெக்டர் இங்கே வந்தபோது, சூப்பர்வைசர் அய்யா. இவனைக் கூட்டிக் கொண்டு இவரிடம்தான் போனார். உடனே, இவர் கலெக்டருக்கு முன்னால் இவனை இழுக்காத குறையாய் கூட்டிக்கொண்டு போனார். ‘இவன் தங்கமான பையன் சார். இப்போ இங்கே என்.எம்.ஆர்.ஆக இருக்கான். இவனை உடனடியாய் நீங்க பெர்மனன்ட்டாக்கணும்… இவனுக்கு நீங்க செய்யுற உதவி எனக்கு செய்யுறமாதிரி’, என்று அடித்துச் சொன்னவர். கலெக்டரை தலையாட்ட வைத்தவர். இவனோட மேற்பார்வையாளருக்கு ஜூனியர் இன்ஜினியர், பங்களா தெய்வம். அந்த டி.இ.க்கே காவல்தெய்வம் கலெக்டரய்யா… அந்த தெய்வத்துக்கே தெய்வமான தெய்வம் இந்த அய்யா… கூட்டங்களில் நீட்டி முழக்கி பேசுகிறவர் அதிகாரிகளை நடுங்க வைப்பவர். எம்மாடி… எப்பேர்பட்ட மனுசன் நம்மகிட்ட பேசுறார்… கதிர்வேலு அவரிடம் பேசப் போனான். குரல் வயிற்றுக்குள் போனதும், நாக்கு வெளியே வந்ததும்தான் மிச்சம். ஆனாலும் அவர் மனங்கோணாமலே மீண்டும் பேசினார்.

அப்புறம், ‘உன்ன நிரந்தரமாக்கி அவரு, டிவிஷனல் என்ஜினியர்கிட்ட பேசினாரு. இப்பக்கூட சிரிப்பு வருது… கலெக்டர் வடநாட்டுக்காரறா… ஒன் பேரை அவர் கடிச்சகடி இருக்குதே இப்ப கூட சிரிப்பு வருது… கண்டிப்பா சொன்னார்… டி.இ.யும் சம்மதிச்சதா சொன்னார். இருக்கட்டும். இருக்கட்டும்… கவனிக்கிற விதமா கவனிக்கணும்… ஒனக்கு ஒரு வாரத்தில் ஆர்டர் வராட்டால் ஒன்று நான் இருக்கணும். இல்ல கலெக்டர் இருக்கணும்…”

கதிர்வேலு வாயகல நின்றான்… அந்தக் கார் வெளிச்சத்தில் அவரைப் பயபக்தியோடு பார்த்தான். எம்மாடி… ஈஸ்வரன் கல்லுக்குள் இருக்கிற தேரைக்கும் உதவுறாறே… அப்படிப்பட்ட உதவி… அய்யா வேலை நிரந்தரம் ஆனாலும். இல்லாவிட்டாலும் ஒங்க அன்பே போதும்ப்யா…”என்று சொல்லப்போனால் அழுகை வரும்போல் இருந்தது. அப்படியும் பேசப் போனான். அதற்குள் ஒட்டடைக்கம்பன் ஒண்டிக் கொண்டான்.

“கலெக்டரும் நல்லவரு… டிவிசனரும் நல்லவரு…” இங்கே இருக்கிற சூப்பர்வைசர்தான் விளங்காதவன்… இவனுக்கு ஆர்டர் வந்திருந்தாலும் கிழிச்சுப் போட்டிருப்பான். அவன தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்தணும்… ‘கொஞ்ச இரு… இப்ப எல்லா இடத்திலும் மழை பெய்யுது…”

‘அவர்’, சிரித்தபோது, கதிர்வேலுக்கு வாய் வந்தது… ஒட்டடைக் கம்பனை முறைத்தபடியே ஒப்பித்தான்.

‘எங்க சூப்பர்வைசரு ரொம்ப, ரொம்ப நல்லவருங்கய்யா’ அவன் நல்லவேனா… கெட்டவனோ… எல்லாருக்கும் சேர்த்து நீ நல்லவனா இருக்கே… அதனாலதான் ஒன்ன பெர்மனண்ட் ஆக்க குதிக்கேன்…

கதிர்வேலுக்கு மீண்டும் பேச்சு தட்டுப்பாடானபோது ஒட்டடைக் கம்பன் கரடு முரடாக ஆணையிட்டான்.

“சரி.. சரி… அய்யாவுக்கு ரூமை திறந்து விடு…”

கதிர்வேலு யோசித்தான். சூப்பர்வைசர் சொன்னதை நினைத்துப் பார்த்தான். ரிசர்வேசன் ஆர்டர் இல்லாம கடவுளே வந்தாலும் ரூமைத் திறக்கப்படாதுப்பா.

‘கதிர்வேலா, கடவுளுக்கு கதவடைக்க முடியும். ஆனால் கண்கண்ட கடவுளுக்கு எப்படி முடியும்… சட்டம் முக்கியமா… அதன் சாரமா…

அவர் கிழக்கு அறையை நெருங்கியபோது கதிர்வேலு, அஸ்வத்தமா புகழ், தர்மர்போல தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டு மேற்கில் உள்ள அறையைத் திறக்கப்போனான்… கிழக்கு அறை அமைச்சர்களும், ஆட்சித் தலைவர்களும் வராத வருடத்தில் முன்னுற்றி இருபது நாட்களில் மூடிக்கிடக்கும். சோபா செட்டு. தொலைக்காட்சி பெட்டி, கம்பள விரிப்பு. கண்கவர் படங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய வரவேற்பு அறை. பத்துபேர் புரளக்கூடிய இரட்டைப் படுக்கை அறை, ஒப்பனை அறை, குளியலறை, கழிவறை என்று பஞ்சபாண்டவ அறைகளைக் கொண்டது.

ஒவ்வொரு நாளும், அமைச்சரோ அல்லது ஆட்சித் தலைவரோ வருவார்கள் என்ற அனுமானத்தில் சுத்திகரிக்கப்படும் அறை. மேற்கு அறை, ஒற்றை அறையிலியோ ஒப்புக்கு ஒரு கழிவறை, படுத்தால் கத்தும் மெத்தைக் கட்டிலையும், மூளியான நாற்காலி மேஜைகளையும் கொண்ட அறை…

கதிர்வேலு, திறந்துவிட்ட அந்த அறைக்குள் அவனை ஏற இறங்க பார்த்தபடியே உள்ளே போனார்.

அந்தச் சமயம் பார்த்து மின்சார விளக்குகள் வெளிச்சம் போட்டன… அவருடன் உள்ளே போன ஒட்டடைக் கம்பன் ஒரு போடு போட்டான்.

“அய்யா, எலக்ட்ரிசிட்டிகாரனை விரட்டுன விரட்டுல லைட்டு வந்துட்டு பாருங்க… அவனுகளுக்கு தெரியாதா என்ன… அய்யா, சொல்கிறபடி செய்யணுமே தவிர, செய்யுற படி சொல்லக் கூடாதுன்னு, எவனுக்கு தர்மபுரிக்கோ, ராமநாதபுரத்துக்கோ போக மனசு வரும்…”

“ஆக்கத் தெரிஞ்சவனுக்கு அழிக்கவும் தெரியுண்டா மடையா…”

அவருக்கு ஏற்பட்டிருக்கும் கோபம், புரியாமலே, கதிர்வேலு வெள்ளைத் துணிகளை சுருக்கிக் கொண்டு, சமையல் கூடத்திற்கு போய் புதிய துணிகளை மெத்தையில் பரப்பினான். தலையணை உறைகளை கழற்றிவிட்டு, கையோடு கொண்டுவந்த புதிய உறைகளுக்குள் அவற்றை திணித்துக் கொண்டிருந்தான். அப்போது-

வெளியே போன ஒட்டடைக் கம்பன், காருக்குள் இருந்த ஒருத்தியுடன் உள்ளே வந்து அவளை விட்டுவிட்டு, வெளியேறிவிட்டான். அவளோ கதிர்வேலை ஒரு புழுவைப் பார்ப்பதுபோல பார்த்தபடி கட்டிலில் மல்லாக்க சாய்ந்து, தலையனையை செங்குத்தாக வைத்து அதில் தலையைச் சாய்த்தாள். சந்தேகமில்லை… ‘அவளே’தான். பல மேடைகளில் அவரோடு, ‘வெண்டையாகப்’ பேசுகிறவள். அவருக்கு வரும் விண்ணப்பங்களை வாங்கி வகைப்படுத்துகிறவள். ஒரு டப்பா புருஷனும் இருக்கிறான். உதடுகளின் தடிப்புக்களைவிட சாயத்தின் தடிப்பே அதிகம். பேசுவதைவிட கண்ணடித்துச் சிரிப்பதே அதிகம். அவரைப் பகல் நேரத்தில், ‘அண்ணே… அண்ணே’ என்கிறவள்.

அவள், பச்சைமை புருவங்கள் உயர, இரண்டு கரங்களையும் தூக்கி நெட்டி முறித்து, கொட்டாவியான வாய்க்குள் கொடுக்கு விட்டு விட்டு, வானொலி சுவிட்சை தட்டிவிட்டாள். அந்த பாட்டிற்கு ஏற்ப உடம்பை அங்கு மிங்கும் ஆட்டினாள். பிறகு, ‘அந்த ரூமு என்னாச்சு’, அங்கேதான் மூடு வரும்’… என்று சொல்லிவிட்டு ‘களுக்கு’ சிரிப்பாய் சிரித்தாள். அவர், அந்த அறைக்குள் அவள் எவனோடு போயிருப்பாள் என்று அவளையும் இன்னொருத்தனையும் கடந்த நிகழ்ச்சிகளுக்குள் தேடிக் கொண்டிருந்தார். அப்படி தேடத்தேட அவரை கோபம் தேடிக் கொண்டிருந்தது. கதிர்வேலோ அவள் போக்கையும், நோக்கையும் தன்மானத்திற்கு விடப்பட்ட சவாலாக நினைத்தான். விடுதிகளில் உள்ள மாமா பையன்களுக்குக் கூட கொஞ்ச மரியாதை கிடைக்கும். அதற்குள் அவர் சர்வசாதாரணமாக ஆணையிட்டார்.

“சரி கதிர், சாப்புடனுமுன்னா சாப்பிடு… துங்கணுமுன்னா தூங்கு… உன்ன பெர்மனன்ட்டு ஆக்குறது என்னோட பொறுப்பு… கவலைப்படாதே…”

கதிர்வேலு கவலைப்பட்டபடியே கால், கை நகர்த்தினான். ஒரு காலை மட்டும் வாசலுக்கு வெளியே வைத்தபோது, அவர் கதவைச் சாத்தினார். இவன்தான் கதவிடுக்கில் அடுத்தகால் சிக்காமலிருக்க அதை அவசரமாக வெளியே எடுத்தான். பித்துப் பிடித்ததுபோல் நடந்து புல்வெளித் தரையில் முட்டுக்காலிட்டு, முகத்தை அதில் சாத்தினான். அவனுக்குள் மனம் எரிந்த கட்சிக்கும், மூளை எரியாத கட்சிக்கும் வாதாடி பட்டி மண்டபம் நடந்தது. அவனது சூப்பர்வைசர் மானசீக மனசாட்சி நடுவரானார்.

கண்டுக்காமல் விட்டால் அரசாங்கத்தில் நிரந்தர ஊழியனாகலாம். அந்த அந்தஸ்த்தில் கடன்பட்டும், உடன்பட்டும் தங்கையைக் கரையேற்றலாம். ஏழெட்டு மாதங்களாய், அல்லும் பகலும் பாடுபட்ட உழைப்பு வீணாகக் கூடாது. எல்லா இடத்துலயும் நடக்கிறதுதான் இங்கேயும் நடக்குதுன்னு இருக்கலாம். ஆனால் இந்த இடத்தில் இவனிருக்கும் இடத்தில் நடக்கலாமா… எப்படி இந்த வேலைக்கு வந்தான்? இந்த மாதிரி சங்கதிகளுக்கு உடன்பட்டதற்காக நிரந்தர வாட்ச்மேன் மாற்றப்பட்ட சமயம்… இவன் கிராமத்தில் மனுநீதி நாள்… சப்கலெக்டர் வந்தார். பலர் அவரிடம் மனுக்கள் கொடுத்தபோது, இவன் மனுநீதிச் சோழனாகவே பேசினான். எப்படி..

‘நீங்க இங்க வருவதுல ஒரு பிரயோசனமும் கிடையாது சார். வயதான அனாதைகளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவங்களப் போய் ‘முதியோர் தொகை’ கேட்டு அப்ளிகேசன் போடச் சொல்றீங்க… அது முடியுற காரியமா… மெனக்கட்டு நீங்க ஒவ்வொரு கிராமத்துக்கும் போக முடியுமா.’

‘அப்ப என்னதான் செய்யணுங்கிற…’

‘சொல்றேன் சார்…’ மலையைத் தேடி மகம்மது போகணும்… மகம்மதுகிட்ட மலையை எதிர்பார்க்கப்படாது. நீங்க செய்யுறது இரண்டாவது காரியம். எந்த கிராமத்திலேயாவது, ஒரு கிழவிக்கோ, ஒரு விதவைக்கோ உதவிப்பணம் கிடைக்கலன்னா, சம்பந்தப்பட்ட அதிகாரிமேல் நடவடிக்கை எடுக்கிறமாதிரி, ஒரு முறை இருக்கணும்…’

‘நீ ஊராட்சி தேர்தல்ல நின்னுருக்கலாமே…’

‘யார் சார் ஒட்டுப் போடுவாங்க? யதார்த்தவாதி வெகு ஜன விரோதி.”

“இந்தாப்பாரு தம்பி… ஒன் பேரென்ன… கதிர்வேலா… அருமையான பெயர்… ஒன்றை மட்டும் விடாப்பிடியா நினைச்சுக்கோ… தர்மத்துக்கு துணையா யாருக்கும், அல்லது எதுக்கும் விரோதி ஆகிறது பெருமைப் படுற விசயம். அதோட ஒன் பழமொழியில வர்ற வெகுஜனம் என்கிறது. மிட்டா மிராசுகள், உள்ளுர்த் தலைவர்கள்… இவர்கள் ஜனங்களாகி விடமாட்டார்கள். அதனால மனிதன் என்கிறவன் அநியாயத்துக்கு எதிரா போராடணும். காரணம் எந்த பதவியும், ‘மனிதப் பதவிக்கு’ மேல் பெரிய பதவி இல்ல.”

கதிர்வேலு. இப்போது அந்த சப்-கலெக்டரை முகத்திற்கு முன்னால் நிறுத்தினான். யோகப் பயிற்சியோ அல்லது களங்கமற்ற இதயமோ நாற்பது வயதிலும் முப்பது வயது தோற்றக்காரர்… எடுபிடி ஆட்களைக்கூட, என்னங்க போட்டு பேசுகிறவர்… அதே சமயம் குவாரிகளுக்கு, திருட்டுத்தனமாய் போகும் லாரிகளை மடக்கிப் பிடிப்பவர்… அரிசி கடத்தலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர். உழைப்புக் ஒரு உருவம் காட்ட வேண்டுமென்றால் அவர்தான்.

கதிர்வேலு தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்… எந்தப் பதவியும் மனிதப் பதவிக்கு மேலான பதவி இல்லை.

கதிர்வேலு, அவசர அவசரமாய் எழுந்து, சமையல் கூடத்திலுள்ள அலமாரியில் உள்ள ரிஜிஸ்தரை எடுத்துக் கொண்டு, அவர் தங்கிய அறையைத் தட்டினான். உள்ளே கேட்ட அதட்டல் குரல் ஏற ஏற இவனது தட்டலும் ஏறியது. இறுதியில் அவர் லுங்கியோடு, வெளிப்பட்டார். அவள் குப்புறக் கிடந்தாள்.

‘என்ன கதிர்வேலு… என்ன விசயம்… எதுக்காக இப்படி லூட்டி அடிக்க…’

அப்படியெல்லாம் ஒண்னும் இல்லைங்கய்யா. இந்த ரிஜிஸ்தர்ல அய்யாவோட பேரு அம்மாவோட பேரு வந்ததுக்கான காரணம் எழுதி ஒரு கையெழுத்து போடுங்க…’

“போடாட்டா..?”

‘இடத்தக்காலி பண்ணுங்க…’

‘பண்ணாட்டா…’

‘என் உடம்புல பலம் இருக்குது.’

அவள் உடல் சுருட்டி எழுந்தாள். ஒட்டடைக் கம்பன் உதறல் எடுத்து நின்றான். கதிர்வேலு அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்.

‘இது அரசாங்கத்தோட கெளரவமான மாளிகை. பிராத்தல் ஹவுஸ் இல்ல… ஒண்னு கையெழுத்து போடுங்க… இல்லாட்டா நடையைக் கட்டுங்க..’

கதிர்வேல், ரிஜிஸ்தரை நீட்டியபடியே அவரை நெருங்கிக் கொண்டிருந்தான்…

– தினகரன், பொங்கல் மலர் – ஜனவரி 1998

– சிக்கிமுக்கிக் கற்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 1999, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *