கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 21, 2020
பார்வையிட்டோர்: 25,790 
 
 

அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6

இரவு உணவு முடிந்த பின்னர் நான் ஒரு சிகரெட்டைச் சுருட்டி வாயிலுக்கு முன் இருந்த விலங்குத் தோல்களின் மேல் நன்றாகக் காலை நீட்டிப் படுத்துக் கொண்டேன். அஜோர் என் தொடை மீது தலை வைத்துப் படுத்தாள். பெரும் மன நிம்மதி கிட்டியது போல் இருந்தது. இப்பொழுதுதான் ஒரு அமைதியும் பாதுகாப்பும் கிடைத்தது எனது விமானம் உடைந்து போன பின். எனது கை என்னவள் என்று அறிவித்த அவளது வெல்வெட் பட்டுப் போன்ற கன்னங்களை மெதுவாகத் தடவின. பின் அங்கிருந்து அவளது செழுமையான தலை முடிக்குச் சென்றது. அவளது அழகான தலையில் தங்கத்தாலான ஊசி ஒன்று முடியைக் கட்டி வைத்திருந்தது. அவளது மெல்லிய விரல்கள் எனது விரல்களை எடுத்து அவளது இதழ்களுக்கு அருகில் இட்டுச் சென்றன. அதன் பின் அவளை அப்படியே அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டேன். அவள் இதழ்களில் ஆழப் பதிய நீண்டதொரு முத்தம் கொடுத்தேன். அதுதான் முதல் முறையாக அஜோரிடம் நான் முழு ஈடுபாட்டோடு உறவு கொள்ள ஆரம்பித்தேன். நாங்கள் தனியாக இருந்தோம். அந்தக் குடிசை நாளைக் காலை வரை எங்களுக்கானது.

இப்பொழுது வேலியைத் தாண்டி வாயிலை ஒட்டி வீரர்களின் சங்கேத ஒலிகளும் அதற்கு உள்ளிருந்த வாயிற்காப்பாளர்கள் கொடுத்த பதில் ஒலிகளும் கேட்டன. நாங்கள் அதனைக் கேட்டுக்கொண்டிருந்தோம். வேட்டைக்குச் சென்றவர்கள் திரும்பி இருக்க வேண்டும். அதில் சந்தேகமில்லை. அவர்கள் நாய்களின் குரைப்புகளுக்கு மத்தியில் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள். க்ரோலுவின் நாய்களைப் பற்றிச் சொல்ல மறந்து விட்டேன். அந்த கிராமம் முழுவதுமே நாய்கள்தான். மெலிந்த ஓநாய் போன்ற நாய்கள். மந்தைகளைப் பகலில் பாதுகாக்கும், வேலியைத் தாண்டி பசுக்கள் மேயும் போது, பத்து நாய்கள் ஒரு பசுவிற்கு. இரவில் அந்தப் பசுக்கள் எல்லாம் வெளியில் ஒரு கொட்டிலில் அடைத்து வைக்கப்படுகின்றன மிருகங்களின் தொல்லைகளில் இருந்து காக்க. சில நாய்களைத் தவிர மீதி இருப்பவை கிராமத்திற்குள் அழைத்துச் செல்லப்படுகின்றன. அந்தச் சில நன்றாகப் பழக்கப்பட்ட நாய்கள் கொட்டிலில் பசுக்களைப் பாதுகாக்கின்றன. பகலில் வேட்டையாடிய விலங்குகளின் கறியை அவைகள் நன்றாக உண்ணுகின்றன.

வாயிலில் ஒலித்த கூக்குரல்கள் அடங்கிய சற்று நேரத்தில் அஜோரும் நானும் எழுந்து வெளியில் வந்தோம். அதே நேரத்தில் ஒரு குறுகிய சந்து வழியாக ஒரு வீரன் வெளிப்பட்டான். குத்து மதிப்பாகக் கட்டப்பட்டிருந்த அந்தக் குடிசைகளுக்கு நடுவில் இருக்கும் சிறு இடைவெளிகள்தான் க்ரோலு கிராமத்தின் தெருக்களாகத் தோன்றின. அவன் எங்களுக்கருகில் வந்து நின்றான். என்னைப் பார்த்துச் சொன்னான், ஆல்-டான் அவனது குடிசையில் என்னைச் சந்திக்க விரும்புவதாக. அழைப்பின் சொற்களும் அவனது தோரணையும் கண்டு எனக்கு மிகவும் அதிசயமாக இருந்தது. மனப்பூர்வமாக முன்னதும் மரியாதையாகப் பின்னதும் இருந்ததால் நானே விருப்பப்பட்டு அவனுடன் செல்ல ஆயத்தமானேன். அஜோரிடம் உடனே வந்து விடுவதாகச் சொன்னேன். குடிசைக்குள் நுழைந்ததுமே எனது ஆயுதங்களைக் கழற்றித் தனியே வைத்து விட்டேன். இப்பொழுது அவைகளை அஜோரிடம் கொடுத்து விட்டேன். அந்த வீரர்களும் தெருக்களில் வேட்டையாடும் கத்தி தவிர வேறெந்த ஆயுதமும் வைத்திருக்கவில்லை என்பதைக் கவனித்தேன். இதுவரை கேஸ்பக்கில் காணக்கிடைக்காத ஒருவிதமான அமைதியும் பாதுகாப்புணர்வும் மேலோங்கி இருந்தன அந்தக் கிராமத்தில். எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் எனது புரிந்து கொள்ளும் தன்மையை மழுங்கடித்து விட்டனவோ என்ற ஐயம் ஏற்பட்டது. நான் பாதுகாப்பின் தாமரை மலரைச் சாப்பிட்டு விட்டேன். இனிமேல் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. அவை எல்லாம் மறைந்து விட்டன.

அந்த வீரன் என்னை வளைந்து நெளிந்து செல்லும் தெருக்களில் அழைத்துச் சென்றான். பின்னர் இறுதியில் ஒரு திறந்த வெளி மைதானத்தில் வந்து நின்றோம். அதன் ஒரு முனையில் ஒரு பெரிய குடிசை இருந்தது. இங்கே பார்த்ததிலேயே மிகவும் பெரிதாக இருந்தது. அதன் வாயிலில் நிறைய வீரர்கள் இருந்தனர். அந்தக் குடிசையின் உட்புறம் விளக்கொளியில் வெளிச்சமாய் இருந்தது. உள்ளே நிறைய பேர் இருந்தனர். அங்கே நின்றிருந்த நாய்கள் எல்லாம் உண்ணியைப் போன்ற தடிமனில் இருந்தன. அருகில் சென்று கவனித்த போது அவைகள் என்னைத் தின்று விடுவதற்குத் தயாராய் இருந்தன. அவைகளின் மூக்குகளுக்குத் தெரிந்து விட்டன நான் ஒரு வேற்று மனிதன் என்று. எனது கூட வருபவனைப் பற்றி அவைகள் பொருட்படுத்தவே இல்லை. சபை போன்று தோற்றமளித்த அந்த இடத்தினுள் சென்றவுடன் கவனித்தேன் நிறைய வீரர்கள் குழுமி இருந்தனர். சரியாகச் சொல்வதென்றால் தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தனர். அந்த நீள் வட்டமான தரையின் ஒரு நுனியில் என்னை விட்டுச் சென்றான் அந்த வீரன். அதன் நடுவில் ஆல்-டான் நின்றிருந்தான். அவனுக்கருகில் ஒரு காலு இருந்தான். அதன் பின் நிறைய காலுக்கள் இருந்தனர். சுவர்களுக்கருகில் தீபங்கள் களி மண்ணால் செய்யப்பட்ட ஓட்டைகளில் பொருத்தப்பட்டிருந்தன. மரத்தால் செய்யப்பட்ட குடிசைகள் தீப்பிடித்து விடக் கூடாது என்பதால். வீரர்களுக்கு நடுவில் அங்குமிங்கும் காவல் நாய்கள் சுற்றிக் கொண்டே இருந்தன.

அந்த வீரர்கள் அனைவரும் நான் நுழையும் போது என்னை ஆர்வமாகப் பார்த்தார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் அந்த காலுக்கள். அதன் பின் நடு வழியாக ஆல்-டானை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டேன். நான் அவனை நெருங்கிய போது ஒரு நாய் என் கால்களை மோப்பம் பிடித்தது. இன்னொரு நாய் என் மேல் பாய்ந்தது. அதன் நகங்கள் என்னைக் காயப்படுத்தி விடும் என்று அதனை நான் தள்ளி விட எத்தனித்த போது அந்த ஏர்டேல் இன நாய் என் மேல் ஆக்ரோஷமாகப் பாய்ந்தது. பற்கள் வெளியில் தெரிய அந்த முனகலும் பாதி மூடிய அந்தக் கண்களும் பின் பக்கமாக மடங்கிய அந்தக் காதுகளும் மனிதனின் சத்தங்களை விட அதிகமாகப் பேசியது. இங்கே இருப்பவன் ஒரு காட்டுமிராண்டி அல்ல ஒரு நண்பன் என்று. அதன் பின் எனக்கு விளங்கி விட்டது. ஒரு காலை வைத்து மண்டி இட்டு அதன் முன் அமர்ந்து அதன் கழுத்தில் என் கையை வைத்துத் தடவினேன். அது மகிழ்ச்சியில் முனகியது. அதுதான் நாப்ஸ், எனதருமை நாப்ஸ். போவென் டைலரின் நாப்ஸ். தனது உரிமையாளனுக்குப் பின் என்னை மிகவும் நேசிக்கும் நாப்ஸ்.

“இந்த நாயின் உரிமையாளர் யார்?” என்று ஆல்-டானை நோக்கிக் கேட்டேன். அந்தத் தலைவன் தனது அருகில் நின்ற காலுவைப் பார்த்துத் தலையைத் திருப்பி “அது காலுவாகிய து-சீனினுடையது.” என்று பதில் அளித்தான்.

“அது சாண்டா மாநகாவின் போவன் டைலரினுடையது.” என்று பதில் அளித்தேன். “எனக்கு இதன் முதலாளி எங்கே என்று தெரிய வேண்டும்”

அந்தக் காலு தன் தோள்களைக் குலுக்கினான். “அந்த நாய் என்னுடையது.” என்றான். அது கோர்-ஸ்வ-ஜோவில் இருந்து என்னிடம் வந்தது. அது கேஸ்பக்கின் நாய் போல் இல்லை. மிகவும் அன்பாக இருக்கும். கோபமூட்டினால் கொலைகாரனாகி விடும். நான் யாரிடமும் இதைத் தர மாட்டேன். நீ சொல்லும் மனிதனை எனக்குத் தெரியாது.”

ஆக இவன்தான் து-சீனா! இவனிடம் இருந்துதான் அஜோர் தப்பித்து வந்திருக்கிறாள். இவனுக்கு அஜோர் இங்கிருப்பது தெரியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. ஆனால் அவர்கள் என்னிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்த பின் எனக்கு ஒருவாறு நிம்மதி ஏற்பட்டது. அதில் அவளைப் பற்றி எதுவுமில்லை. அவர்கள் எனது தாய் நிலமான அந்த வினோதமான உலகைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். கேஸ்பக்கில் எனது பயணம் பற்றியும் இங்கு வந்து விட்டபின் இனி என்ன செய்யப் போகிறாய் என்பது பற்றியும் பேசினர். அவர்களிடம் நான் உண்மையைச் சொல்லி விட்டேன். ஒளிப்பதற்கு எதுவும் இல்லை. எனது ஒரே நோக்கம் எனது நண்பர்களைக் கண்டு பிடித்து எனது தாய் நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்பதே. து-சீன் மற்றும் அவனது வீரர்களைப் பார்க்கும் போது அவர்களை ஏன் தங்க இனம் என்று சொன்னார்கள் என்று புரிந்தது. ஏனெனில் அவர்கள் அணிந்திருக்கும் ஆபரணங்கள் அனைத்தும் உருக்கி அடிக்கப்பட்ட தங்கம். அவர்கள் மிகவும் கவர்ச்சிகரமான ஆண்களாய் இருந்தனர். உயரமாய் நேராய் அழகாய். அவர்களின் தலை மேல் அஜோர் அணிந்திருந்தது போல் ஒரு தங்கப் பட்டை அணிந்திருந்தனர். அவர்களின் இடது தோள்பட்டையில் இருந்து காலுக்களின் சிறுத்தையின் வால் தொங்கிக் கொண்டிருந்தது. மான் தோலினால் ஆன சட்டையின் மேல், அதுதான் அவர்களின் பெரும்பான்மையான ஆடையாக இருந்தது, ஒரு மெல்லிய போர்வையும் போர்த்தி இருந்தனர். அது அவர்களுக்கு ஒரு காட்டுமிராண்டியாகத் தோற்றம் கொடுத்தாலும் மிகவும் அழகாக இருந்தது. கேஸ்பக்கில் முதல் தடவையாக நெய்தல் திறமையையும் பார்க்கிறேன். அஜோரிடம் அந்தப் போர்வை இல்லை. து-சீனிடம் இருந்து தப்பிக்கும் பொழுது அவள் இழந்திருக்கலாம். இந்த ஆண்களைப் போல் அவள் முழுவதும் தங்க ஆபரணங்கள் அணிந்திருக்கவுமில்லை.

அந்தக் கூட்டம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தொடர்ந்தது. அதன் பின் ஆல்-டான் என்னை என் குடிசைக்குத் திரும்பச் சொன்னான். அவ்வளவு நேரமும் நாப்ஸ் என் காலடியிலேயே இருந்தது. நான் கிளம்ப ஆரம்பித்ததும் அதுவும் எழுந்து என் பின்னாலேயே வர ஆரம்பித்தது. து-சீன் அதனைக் கூப்பிட்டான். ஆனால் அது அவனைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. நான் கிட்டத்தட்ட அந்த அறையின் கதவிற்கு வந்து விட்டேன். அப்பொழுது ஆல்-டான் எழுந்து என்னைக் கூப்பிட்டான். “நில்” என்று சத்தமிட்டான். “நில், புதியவனே, காலுவான து-சீனின் விலங்கு உன்னையே பின் தொடர்கிறது”

“அந்த நாய் து-சீனுடையது இல்லை” என்று நான் பதில் அளித்தேன். “அது நான் ஏற்கெனவே சொன்ன எனது நண்பனுக்குச் சொந்தமானது. அது அதனுடைய உரிமையாளனைக் கண்டுபிடிக்கும் வரை என்னுடன் இருப்பதற்கு விரும்புகிறது.” என்று சொல்லி விட்டு நான் எனது வழியில் நடக்க ஆரம்பித்தேன். நான் ஒரு சில அடிகள் எடுத்து வைத்தவுடன் என் பின்னால் ஒரே கூச்சல் சத்தம் கேட்டது. அப்போது ஒருவன் என்னருகில் குனிந்து “கசர்” என்று முணுமுணுத்தான். கசர் என்றால் கேஸ்பக் மொழியில் கவனம் என்று பொருள். அதைச் சொல்லியது தோ-மர். அப்படிச் சொல்லிவிட்டு சட்டென்று திரும்பிக் கொண்டான் வேறு யாரும் பார்த்து விடக் கூடாது என்பதற்காக. அவனும் என்னைத் தெரிந்தது போல் காட்டிக் கொள்ள விரும்பவில்லை அவன். அதே நேரம் து-சீன் வேகமாக என்னை நோக்கி வந்தான். ஆல்-டான் அவன் பின்னால் வந்தான். இருவரும் மிகவும் கோபமாக இருந்தனர் என்பதைப் பார்த்தாலே தெரிந்தது.

தனது ஆயுதத்தைப் பாதி உருவிக் கொண்டு து-சீன் பயங்கரக் கோபத்தோடு வந்தான். “அது என்னுடையது” என்று திரும்பவும் சொன்னான். “நீ திருடிச் சென்று விடுவாயோ” என்றான்.

“அது உன்னுடையது இல்லை. என்னுடையதும் இல்லை.” என்று பதில் சொன்னேன். “நான் அதைத் திருடிச் செல்லவும் இல்லை. அது உன் பின்னால் சென்றால் அதை நான் தடுக்கப் போவதுமில்லை. ஆனால் அது என் பின்னால் வர வேண்டும் என்றால், வரட்டும். நீ அதைத் தடுக்கவும் முடியாது.” நான் ஆல்-டானை நோக்கினேன். “இது சரியாகப் படவில்லையா?” என்று கேட்டேன். “அந்த நாயே தனது காப்பாளனைத் தீர்மானிக்கட்டும்.”

து-சீன் ஆல்-டானின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் நாப்ஸின் கழுத்தைப் பற்றினான். நான் அதில் தலையிடவில்லை. தலையிட்டால் என்ன நடக்கும் என்று தெரியும். ஆம் அதுதான் நடந்தது. காட்டுத்தனமாக உறுமியபடியே மின்னலைப் போல் நாப்ஸ் அந்தக் காலுவை நோக்கியது. அவனது பிடியை உதறி விட்டு அவனது கழுத்தைக் கவ்வப் பாய்ந்தது. அவன் சட்டென்று திரும்பி முதல் தாக்குதலைத் தன் கையினால் ஒரு குத்து விட்டுத் தடுத்தான். அதன் பின் ஒரு கத்தியை எடுத்து நாப்ஸை எதிர் கொள்ளத் தயாரானான். நாப்ஸ் பாய்ந்திருக்கும் நான் எதுவும் சொல்லி இருக்காவிட்டால். நான் ஒரு மெல்லிய குரலில் அதனை அமரச் சொன்னேன். ஒருக் கணம் சற்று யோசித்தது. அதனது எதிரியைப் பார்த்து விரிந்த பற்கள் தெரியும் வாயினால் கோபமாக முறைத்தது. அது மிகவும் நன்றாகப் பழக்கப்பட்ட நாய். போவனைப் போல் என்னுடனும் ரொம்ப நாட்கள் வெளியில் சுற்றி இருக்கிறது. அதனால் மெதுவாக நடந்து என் பின்னால் சென்று நின்று கொண்டது.

து-சீன் ஆத்திரத்தில் சிவந்த முகத்துடன் நிச்சயம் எங்கள் இருவரையும் எதாவது செய்திருப்பான் ஆல்-டான் அவனை ஓரமாக இழுத்துக் கொண்டு போய் அவன் காதுகளில் கிசுகிசுக்காமல் இருந்திருந்தால். அதன் பின் ஒருவித பொறுமலுடன் அந்தக் காலு அந்த மன்றத்தின் எனக்கு நேரெதிர் இருந்த வாயிலை நோக்கிச் சென்றான். நானும் நாப்ஸும் எனது குடிசையை நோக்கிச் சென்றோம். மைதானத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கும் பொது சால்-ஆசைக் கண்டேன். அவன் எனக்குத் தொட்டு விடும் தூரத்தில்தான் இருந்தான். எங்கள் கண்கள் அப்போது சந்தித்தன. நான் அவனை முக மலர்ச்சியோடு முகமன் கூறினேன். சற்று நின்று அவனிடம் பேச எத்தனித்தேன். ஆனால் அவன் என்னைக் கண்டு கொள்ளாமல் சென்று விட்டான். எனக்கு அவனது நடத்தை மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அதன் பின் யோசித்துப் பார்த்த போது தோ-மர் கூட என்னை எச்சரித்த போதும் என்னைத் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளவில்லை என்பது புலனானது. அவர்களது நடத்தை எனக்குப் புரியவில்லை. எதாவது விளக்கம் கிடைக்குமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு துப்பாக்கிச் சூடு வந்து என் எண்ணத்தைக் கலைத்தது. உடனே நான் ஓட ஆரம்பித்தேன். என் சிந்தனை கலவரப்படுத்தியது. ஏனெனில் இங்கிருக்கும் ஒரே ஒரு துப்பாக்கி அஜோரிடம் நான் விட்டு வந்தது மட்டும்தான்.

அவள் ஆபத்தில் இருக்கிறாள் என்று தெரிந்ததும் என்னால் பயப்படுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை. இருவகையான துப்பாக்கிகளையும் நன்றாகக் கையாளத் தெரிந்தவள் அவள். அதனால் தெரியாமல் சுட்டிருக்கவும் வாய்ப்பில்லை. அந்தக் குடிசையை நான் விட்டுச் செல்லும்போது இங்கு அவள் பாதுகாப்பாக இருப்பாள் என்றுதான் நினைத்தேன். ஆபத்து நேரப் போவதில்லை என்றே முழுமையாக நம்பினேன். நான் அந்த மன்றத்திற்குச் சென்றது து-சீன் வந்தது சால்-ஆஸ் தோ-மர் இருவரும் வினோதமாக நடந்தது எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது எனக்குள் சந்தேகம் அரும்பத் தொடங்கியது. க்ரோலு கிராமத்தின் அந்தக் குறுகிய சந்துக்கள் வழியாக வேகமாக ஓடினேன். என் இதயம் கிட்டத்தட்ட வாயின் அருகில் வந்து விட்டது போல் இருந்தது.

திசைகள் தெரிந்து கொள்வதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்தச் சில வருடங்களில் அதை நான் மிக நுணுக்கமாகக் கற்றிருக்கிறேன். எனது ஊரில் சம வெளியிலும் பாலைவனத்திலும் மலைகளிலும் பயணப்பட்ட அனுபவம் எனக்கு நன்றாகக் கை கொடுத்தது. அதனால் வெகு எளிதாக நான் எனது குடிசையைக் கண்டு பிடித்து விட்டேன். நான் வாயில் அருகில் வந்தவுடன் அவள் பெயரைச் சத்தமாகக் கூப்பிட்டுக் கொண்டே வந்தேன். எந்தவிதப் பதிலும் இல்லை. என் பையில் இருந்து தீப்பெட்டியை எடுத்து ஒரு குச்சியைப் பற்ற வைத்தேன். பற்ற வைத்ததும் மாமிச மலை போன்று இருந்த ஒரு ஆறு வீரர்கள் பல திக்குகளில் இருந்தும் என் மேல் பாய்ந்தார்கள். அந்தக் குச்சி எரிந்த அந்தச் சிறு நொடிப் பொழுதிலும் கூட அங்கு அஜோர் தென்படவில்லை. எனது ஆயுதங்களும் அங்கு இல்லை.

அந்த ஆறு பேரும் என் மேல் பாய்ந்த போது ஒரு கோபமான உறுமல் அவர்களின் பின்னால் கேட்டது. நான் நாப்ஸை மறந்தே விட்டேன். கோபத்தின் மறு உருவமாய் க்ரோலுவின் வீரர்கள் ஆறு பேரின் மேலும் பாய்ந்து கிழித்து வெட்டிக் குதறி விட்டது அதன் குரூரமான பற்களால். அவர்கள் ஒரு நொடியில் என்னை அமுக்கி விட்டிருந்தனர். நாப்ஸ் இல்லை என்றால் அவர்கள் என்னை அங்கேயே அடைத்து வைத்திருப்பார்கள் என்பதைச் சொல்லவே தேவை இல்லை. அவர்களை உதறிவிட்டு நான் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும்போது நாப்ஸ் ஒவ்வொருவனாய்ப் பிடித்து இழுத்து வீட்டுக் கொண்டே இருந்தது. ஒவ்வொருவனும் தன் உயிரைக் கைகளில் பிடித்துக் கொண்டு இருந்ததால் என்னை அவர்கள் கவனிக்க நேரமே இல்லை. அதில் ஒருவன் என் தலை மேல் தனது கம்பை எடுத்து அடிக்க எத்தனித்தான். ஆனால் நான் அவன் கையைப் பிடித்துத் தள்ளி விட்டேன். அதன் பின் ஒரு நொடியில் சுதாரித்து எழுந்து விட்டேன்.

அப்படி எழும்போது அவனின் கையின் பிடி என்னிடம் இருந்தது. அதனால் அதை என் தோள்பட்டை வரை இழுத்துச் சட்டென்று அவனை அலேக்காகத் தூக்கிக் குடிசைக்கு வெளியே எறிந்து விட்டேன். அந்த மங்கலான வெளிச்சத்தில் நாப்ஸ் இன்னொருவனை முடித்து விட்டதை என்னால் பார்க்க முடிந்தது. ஒருவன் அமைதியாகத் தரையில் அமர்ந்திருந்தான். மீதி நான்கு பேரும் கத்தியை எடுத்து நாப்ஸிடம் சண்டை இட்டுக் கொண்டிருந்தனர்.

நான் எறிந்த அந்த வீரனின் ஒரு பக்கம் ஓடிச் சென்று அவனது கத்தியையும் அரிவாளையும் எடுத்துக் கொண்டேன். மறு கணம் அவர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தேன். இந்தக் காட்டுமிராண்டி மனிதர்களுக்கு நான் கொஞ்சம் கூட இணையில்லை. அவர்களது ஆயுதங்களுடன் அவர்களுடன் சண்டை இட்டால் நான் நிச்சயம் ஒரு மோசமான தோல்வியைத் தழுவி விட்டு இறந்து விட்டிருப்பேன் நாப்ஸ் மட்டும் இல்லை என்றால். அது மட்டும் அந்த நால்வருக்கும் ஈடு கொடுத்துச் சண்டை இட்டது. எந்தவொரு விலங்கும் இவ்வளவு வேகமாக இருந்து நான் பார்த்ததில்லை. அதுவும் அதன் ஆக்ரோஷமான தாக்குதல் போல் வேறெந்த மிருகத்திடமும் நான் கண்டதில்லை. அந்தத் தாக்குதல்தான் எங்களை இவர்களிடம் இருந்து காப்பாற்றி இருக்கிறது. அவர்களும் இந்த ஆக்ரோஷத்திற்குப் பழக்கப்பட்டவர்களாக இருந்தாலும் இந்த வினோதமான விலங்கும் அதன் வினோதமான முதலாளியையும் பார்த்து ஆச்சர்யமடைந்திருந்தனர். இருந்தும் அவர்கள் யாரும் கோழைகள் இல்லை. நாங்கள் கூட்டாக வேலை பார்த்ததால்தான் அவர்களைத் தோற்கடிக்க முடிந்தது. நாங்கள் இருவரும் ஒருவனை நோக்கிப் போவோம். நாப்ஸ் கடிக்கும் போது நான் அவனின் மண்டையில் அரிவாளையும் கத்தியையும் வைத்துத் தாக்குவேன்.

கடைசியாய் இருந்தவனும் சாய்ந்து விட்டபிறகு மைதானத்தின் திசையில் இருந்து பல பேர் ஓடி வரும் சத்தம் கேட்டது. இப்பொழுது சிறை பிடிக்கப்பட்டால் நிச்சயம் சாவுதான். இருந்தாலும் இப்பொழுது என்னால் அஜோர் எங்கிருக்கிறாள் என்று தெரியாமல் இந்த கிராமத்தை விட்டு வெளியேறவும் முடியாது. அவள் சிறை பட்டுக் கிடந்தால் அவளை விடுவிக்கவும் வேண்டும். இருந்தபோதும் இங்கிருந்து தப்பிக்க முடியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இருந்தாலும் ஒன்று மட்டும் நிச்சயம். இங்கேயே இருந்து சிறை படுவது எனக்கும் அஜோருக்கும் எந்தவித பயனும் இல்லை எனபதே அது. நாப்ஸ் ரத்தக்கறையுடன் இருந்த போதும் மகிழ்ச்சியாக இருந்தது. அது என் பின்னால் தொடர்ந்து வர முதல் தெரு வழியாகச் சட்டென்று பாய்ந்து கிராமத்தின் வட திசை நோக்கிப் பயணித்தேன்.

நண்பர்கள் யாரும் உதவிக்கு இல்லாமல் தனிமையில் இந்தக் காட்டுமிராண்டிக் கிராமத்தின் இருட்டுத் தெருக்களில் வேட்டையாடப்பட இதை விடக் கையறு நிலை வேறெதுவுமில்லை. இருந்தாலும் பயத்தை அதிகரிக்காமல் அஜோரைப் பற்றி நினைக்க ஆரம்பித்தேன். அவளுக்கு என்ன ஆகி இருக்கும். எங்கே யாரிடம் சிக்கி இருப்பாள். இதையெல்லாம் கண்டு பிடிக்கும் வரை நான் உயிரோடு இருப்பேனா என்பதே சந்தேகம்தான். அவளைக் கண்டு பிடிக்கப் போராடும் வழியில் என் உயிரைக் கொடுக்கவும் நான் சித்தமாய் இருக்கிறேன் என்பது மட்டும் உண்மை. ஆனால் ஏன்? என்னுடன் கேப்ரோனாவிற்குப் பயணித்த எனது நண்பர்கள் அதிலும் என் உயிர் நண்பன் போவன் டைலர் இவர்களெல்லாம் இருக்கும்போது. இதற்கு முன் எந்தவொரு உயிரினத்தின் பாதுகாப்புப் பற்றியும் முடக்கிவிடக் கூடிய பயமான இப்படியொரு உணர்ச்சியை நான் அனுபவித்ததில்லை. அது இப்பொழுது என்னை விரக்தியின் வெப்பத்திற்கும் பீதியின் குளிர்ந்த வியர்வைக்கும் நடுவில் என்னை மாறி மாறிச் சுழல வைத்துச் சித்திரவதை செய்தது இந்த அரை காட்டுமிராண்டிப் பெண்ணின் விதியை எண்ணித் தவிக்கும் போது.

அவள் எனக்கு அப்படி என்ன மாயம் செய்து விட்டாள். என் மனம் சரியாக யோசிக்க விடாமல் எதாவது வசியம் செய்து விட்டாளா? அதைக் காதல் என்று ஏற்றுக்கொள்ள முழுவதும் மறுத்து விட்ட நிலையிலும் எதோ ஒரு பைத்தியக்காரத்தனம் எனது முடிவெடுக்கும் திறமையையும் பகுத்தறிவையும் சிம்மாசனத்தில் இருந்து கீழே தள்ளி விட்டது. நான் என்றும் இதுவரையிலும் காதல் வயப்பட்டதில்லை. இப்பொழுதும் காதல் வயப்படவில்லை. அந்த எண்ணமே முட்டாள்தனமாக இருந்தது. எப்படி தாமஸ் பில்லிங்ஸ் ஆகிய நான், அமெரிக்கத் தொழில் துறையின் அரசன் கலிபோர்னியாவின் மாபெரும் மனிதரான மூத்த போவன் ஜே டைலரின் வலது கரமாகிய நான் எப்படி இந்த இந்த – தொண்டையில் வார்த்தையே சிக்கிக் கொண்டது. எனது சுய அமெரிக்கத் தரத்தைப் பார்க்கும்போது இவளெல்லாம் ஒன்றுமே இல்லை. ஊரில், அவளது அழகு, மென்மையான இளம் தோல், நடை உடை பாவனைகள், அவளது மக்களின் நாகரீகம், அவளது வாழ்க்கை இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது அவளை ஒரு பட்டிக்காடு என்று எளிதில் முத்திரை குத்தி விடுவார்கள். டாம் பில்லிங்ஸ் ஒரு பட்டிக்காட்டின் மீதா காதல் கொண்டிருக்கிறான்! அதை நினைக்கும் போதே என் மனம் நடுங்கியது.

அதன் பின் எனக்கு நினைவுக்கு வந்தது. மனத் திரையில் சட்டென வெளிச்சம் பரவி அஜோரைக் கடைசியாகப் பார்த்த அந்தக் காட்சி தோன்றியது. ஆல்-டானின் சபைக்குச் செல்லும் முன் அவளும் நானும் கட்டிப்பிடித்து முத்தமிட்டுக் கொண்டிருந்த அந்தக் காட்சியை மீண்டும் வாழ்ந்து பார்ப்பது போல் உணர்ந்தேன். நான் எப்பேர்ப்பட்ட பொறுக்கி போலியானவன் என்பதை அந்த நிகழ்ச்சி உணர்த்த என்னையே நான் அறைந்து கொண்டிருப்பேன். எப்பொழுதும் நான் அப்படிப்பட்டவன் இல்லை என்று கர்வத்தோடு இருந்தவன் நான்.

நானும் நாப்ஸும் அந்த கிராமத்தின் இருட்டான தெருக்களில் ஓடிக் கொண்டிருக்கும் போது இதெல்லாம் என் மனதில் ஓடிக் கொண்டிருந்தன. எங்களைத் தெடிக் கொண்டிருந்தவர்களின் குரல்கள் காலடிச் சத்தங்கள் எங்களுக்கு அருகாமையிலேயே கேட்டுக் கொண்டிருந்தன. இவை மற்றும் இன்னும் பல விஷயங்கள் மறுக்க முடியாத அந்த உண்மையில் இருந்து தப்பிக்கவே முடியாது. எனது எண்ணங்களும் நம்பிக்கையும் சுற்றிப் படர்ந்திருந்த அந்த உருவம் அஜோரினுடையது. என் காதல் காட்டுமிராண்டி. என் கனவுகள் சட்டென்று உடைந்தன. ஒரு கரகரக் குரல் நாங்கள் கடந்து செல்ல வேண்டிய ஒரு குடிசையின் இருட்டினுள் இருந்து அழைத்தது. எனது பெயரை அது மெல்லியதாய் உச்சரித்தது. ஒரு மனிதன் அதனுள் இருந்து வெளியே வந்தான். நான் உருவிய கத்தியுடன் அவனை வரவேற்றேன். அவன் சால்-ஆஸ்.

“சீக்கிரம்!” என்று கத்தினான். “உள்ளே வா. இது என் குடிசை. இதை அவர்கள் தேட மாட்டார்கள்.”

நான் தயங்கினேன். சில மணி நேரங்களுக்கு முன் அவன் நடந்த விதத்தை யோசித்துப் பார்த்தேன். எனது எண்ணத்தை அவன் படித்து விட்டது போல அவன் விரைந்து சொன்னான். “அந்த மைதானத்தில் என்னால் உன்னிடம் பேச முடியவில்லை. ஏனெனில் பிறகு உன்னைக் காப்பாற்ற முடியாமல் போய் விடும்படி அவர்கள் என்னைச் சந்தேகிப்பார்கள் என்பதால். ஆல்-டான் உனக்கெதிராகத் திரும்பி விட்டான். உன்னைக் கொன்று விடுவான் என்று எனக்குச் செய்தி கிடைத்தது. இது அந்தக் காலு இங்கே வந்த பிறகுதான் நடந்தது.”

நான் அவனைப் பின் தொடர்ந்து அவனது குடிசைக்குள் நுழைந்தேன். நானும் நாப்ஸும் உள்ளே நுழைந்து பல அறைகளைக் கடந்து ஒரு சாளரம் இல்லாத ஒரு அறையினுள் நுழைந்தோம். அங்கே ஒரு சிறு அகல் விளக்கு அந்த மையிருட்டில் போராடிக் கொண்டிருந்தது. அதில் எரிந்த எண்ணையின் புகையைப் போக்குவதற்கு அறையின் மேலே ஒரு சிறு துவாரம் இருந்தது. இருந்தாலும் அந்த அறை அவ்வளவு தெளிவாக இல்லை. அங்கே சால்-ஆஸ் ஒரு இருக்கையைச் சுட்டிக் காட்டினான். அது ஒரு விலங்கின் தோல், தரையில் விரிக்கப்பட்டிருந்தது.

“நான் உனது நண்பன்” என்றான் சால்-ஆஸ். “நீ எனது உயிரைக் காப்பாற்றினாய். பாட்டுவாகிய ஆல்-டான் போல நானும் ஒரு நன்றி கெட்டவன் அல்ல. நான் உனக்கு உதவி செய்வேன். என்னைப் போல் உனக்கு வேறு சிலரும் உதவி செய்யத் தயாராய் இருக்கிறார்கள் ஆல்-டான் மற்றும் அந்தத் துரோகி காலு து-சீனுக்கு எதிராய்.

“ஆனால் அஜோர் எங்கே இருக்கிறாள்?” என்று நான் கேட்டேன். அஜோருக்கு ஒரு ஆபத்து இருக்கும் போது என்னைப் பற்றி நான் சிறிதும் கவலைப்படவே மாட்டேன்.

“அஜோரும் பாதுகாப்பாக இருக்கிறாள்.” என்று அவன் பதில் அளித்தான். “ஆல்-டான் து-சீனின் திட்டம் என்னவென்று எங்களுக்குத் தெரிந்து விட்டது. அஜோர் இங்கிருப்பது தெரிந்த பின், து-சீன் அவளைத் தன்னிடம் ஒப்படைக்கும்படிக் கேட்டான். ஆல்-டானும் அதற்கு ஒப்புக் கொண்டு விட்டான். ஆனால் அவளை அழைத்துச் செல்லும் வீரர்களுடன் தோ-மாரும் சென்றான். அஜோர் தற்காத்துக் கொள்ள முயன்றாள். அவள் ஒரு வீரனைக் கொன்றாள். அதன் பின் தோ-மார் அவளைத் தன் கைகளால் பிடித்துக் கொண்டான். அதன் பின் மற்ற சிலர் அவளிடம் இருந்து ஆயுதங்களை பறித்துக் கொண்டனர். அவன் மற்றவர்களைக் காயம்பட்ட அந்த வீரனைக்- அவன் ஏற்கெனவே இறந்து விட்டான்- கவனித்துக் கொள்ளச் சொல்லி விட்டு நீ வந்தவுடன் உன்னைச் சிறை பிடிக்கவும் உத்தரவிட்டுச் சென்று விட்டான். அவன் அஜோரை ஆல்-டானிடம் ஒப்படைத்து விடுவதாகவும் கூறிச் சென்றான். ஆனால் அவனிடம் கூட்டிச் செல்வதற்குப் பதில் தன்னுடைய குடிசைக்கு அவளை அழைத்துச் சென்றான். அங்கே அவள் சோ-ஆலுடன் இருக்கிறாள். சோ-ஆல் தான் தோ-மாருடைய அவள். அதெல்லாம் வெகு வேகமாக நடந்து முடிந்து விட்டன. தோ-மாரும் நானும் மாமன்றத்தின் கூட்டத்தில் து-சீன் உன்னுடைய நாயை எடுத்துக் கொள்ள முயற்சித்த போது அங்கே இருந்தோம். நான் தோ-மாரை இந்த வேலை செய்ய உதவி கேட்டேன். அவன் உடனடியாக அந்த வீரர்களுடன் உனது குடிசைக்குச் சென்றான். நான் கூட்டத்தில் என்ன நடக்கிறதென்று கவனிக்க அங்கேயே இருந்தேன். உனக்கு உதவி எதாவது தேவை இருந்தால் செய்யலாம் என்று நினைத்தேன். அதன் பின் நடந்தது உனக்கே தெரியும்”

அவனது விசுவாசத்திற்கு அவனுக்கு நன்றி தெரிவித்தேன். அதன் பின் என்னை அஜோரிடம் கூட்டிச் செல்லச் சொன்னேன். ஆனால் அதை இப்போது செய்ய முடியாது என்று சொன்னான். ஏனெனில் இந்த கிராமத்தில் உன்னைத் தேடிக் கொண்டு சுற்றுகிறார்கள். சொல்லப் போனால் அவர்கள் இங்கும் அங்கும் சென்று விசாரித்துக் கொண்டிருப்பதைக் கேட்க முடிந்தது. இறுதியில் சால்-ஆஸ் தனது வீட்டின் வாயிலில் சென்று யாராவது தேடிக் கொண்டிருக்கிறார்களா என்று பார்க்கலாம் என்று நினைத்துச் சென்றான். அவனது வீடும் பல குடிசைகள் கொண்ட தொகுப்பாக இருந்தது.

சால்-ஆஸ் நீண்ட நேரம் காணவில்லை. பல மணி நேரம் கடந்து விட்டிருந்தன. அது ஒரு முடிவில்லாத யுகம் போல் இருந்தது. எல்லா சத்தங்களும் அடங்கி விட்டிருந்தன. எனக்கு மிகவும் சஞ்சலமாய் இருந்தது அவன் இவ்வளவு நேரம் தனியாக விட்டு விட்டுப் போய் விட்டானே என்று. அப்பொழுது அவன் இன்னொரு குடிசை வழியாக உள்ளே நுழைந்தான். அவன் முகம் மிகவும் குழம்பிப் போய் இருந்தது. அவன் முகத்தில் கவலை ரேகை படர்ந்திருந்தது.

“என்னாச்சு?” என்று கேட்டேன். “அவர்கள் அஜோரைக் கண்டு பிடித்து விட்டார்களா?”

“இல்லை” என்று பதில் அளித்தான். “ஆனால் அஜோர் சென்று விட்டாள். நீ அவர்களிடம் இருந்து தப்பித்தது அவளுக்குத் தெரிந்து விட்டது. நீ இந்த கிராமத்தை விட்டுத் தப்பித்து விட்டாய் என்றும் அவள் நினைத்திருக்கிறாள். சோ-ஆல் கூட அவளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வேலியின் மேலேறித் தப்பிச் சென்று விட்டாள். அவளிடம் ஒரே ஒரு கத்தி மட்டுமே இருந்தது.”

“அப்படி என்றால் நானும் செல்ல வேண்டும்” என்று எழுந்து கொண்டே சொன்னேன். நாப்ஸ் எழுந்து தன் தலையை உலுக்கியது. அது நன்றாக உறங்கிக் கொண்டிருந்தது நான் பேசும்போது.

“சரி” என்று ஆமோதித்தான் சால்-ஆஸ். “நீ உடனே செல்ல வேண்டும். கிட்டத்தட்ட விடிந்து விட்டது இப்பொழுது. து-சீன் அவளைக் காலையில் தேடித் செல்ல இருக்கிறான்.” அவனின் காதுகளில் வந்து கிசுகிசுத்தான். “நிறைய பேர் உன்னைப் பின் தொடர்ந்து வந்து உன்னைக் காப்பதற்கு வருவார்கள். ஆல்-டான் ஜோரின் காலுக்களுக்கு எதிராக து-சீனை ஆதரிக்கச் சம்மதம் தெரிவித்திருக்கிறான். ஆனால் எங்களில் பலர் க்ரோலு மற்றும் கேஸ்பக்கின் சட்ட திட்டங்களை மனசாட்சி இல்லாமல் அழிக்க நினைக்கும் ஆல்-டானுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட முடிவெடுத்து விட்டோம். லுவாதா எங்களுக்கு உத்தரவிட்டது போல் நாங்கள் நிச்சயம் வெல்வோம். நாங்கள் மட்டுமே வெல்வோம். எந்த பாட்டுவும் குறுக்கு வழியில் காலுவின் நிலத்தை துரோகத்தால் ஆயுதங்களால் அடைய முடியாது இந்த சால்-ஆஸ் உயிரோடு இருக்கும் வரை. உண்மையான க்ரோலுவாய் அதற்கு நாங்கள் சரியான பதிலடி கொடுப்போம் எங்கள் கூரிய குத்தீட்டிகளால்.

“நான் உங்களுக்கு உதவி செய்ய உயிரோடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.” என்று பதில் அளித்தேன். “எனது ஆயுதமும் குண்டுகளும் என்னிடம் இருந்திருந்தால் என்னால் உதவி செய்திருக்க முடியும். அது எங்கிருக்கிறதென்று உனக்குத் தெரியுமா?”

“இல்லை” என்று சொன்னான் அவன். “அவைகள் மாயமாய் மறைந்து விட்டன. பின், “சற்றுப் பொறு. நீயும் பாதி ஆயுதமும் மீதி உடையுமாய் இப்படியே வெளியே செல்லவும் முடியாது. நீ ஒரு காலுவின் நாட்டிற்குச் செல்கிறாய். அதனால் காலுவின் உடைகளோடு செல்ல வேண்டும். வா என்னுடன்.” என்று என் பதிலை எதிர்பார்க்காமல் வேறொரு குடிசைக்குள் சென்றான்.

இங்கே ஒரு குவியலாய் ஆயுதங்களும் ஆடைகளும் ஆபரணங்களும் கிடந்தன. “உன்னுடைய வினோதமான அந்த உடையைக் கழற்றி விடு.” என்றான் சால்-ஆஸ். “நான் உன்னை ஒரு உண்மையான காலுவாக மாற்றுகிறேன். அவர்களில் நிறையப் பேரை நான் ஆரம்பத்தில் கொன்றிருக்கிறேன். இதுதான் அவர்களின் உபகரணங்கள்”

அவன் கூறியதில் இருந்த உண்மை எனக்குப் புரிந்தது. எனது உடையும் கிட்டத்தட்டக் கிழிந்து விட்டிருந்தது. என் உடம்பில் பாதியை மட்டுமே மறைத்துக் கொண்டிருந்தது. அதனால் அவைகளைக் கழற்றி எறிவது எனக்கு ஒன்றும் சிரமமாய் இல்லை. அனைத்தையும் களைந்து விட்டு செம்மானின் தோலால் செய்யப்பட்ட அந்த உள்ளாடையை எடுத்து அணிந்து கொண்டேன். அதன் பின் சிறுத்தை வால், தங்கத்தாலான தலை முடி கட்டும் ஊசி, காப்பு, காலில் அணியும் காலுவின் ஆபரணங்கள் வாருடன், உரையுடன் கூடிய கத்தி, கேடயம், ஈட்டி, வில் அம்பு மற்றும் நீண்ட கயிறு. இப்பொழுதுதான் அந்தத் தனித்துவமான காலுவின் ஆயுதம் பற்றி முதன் முறையாக அறிந்து கொண்டேன். அது பதப்படுத்தப்படாத விலங்குத் தோல் கயிறு. மேற்குப்புற அமெரிக்காவிலும் எனது இளமைக் காலத்தில் மாடுகள் மேய்க்கவும் பயன்படுத்திய கயிறு. அதன் முனையில் தங்கத்தாலான சிறு வளையம் தூக்கி எறிவதற்குச் சரியான எடையில் கட்டப்பட்டிருந்தது. இந்தப் பாரமான வளையம்தான் எதிரியை நோக்கி மிகுந்த வேகத்தில் வீசி எறிந்து சுருட்டி இன்னொரு தடவை பயன்படுத்தலாம் என்று சால்-ஆஸ் விளக்கிக் கொண்டிருந்தான். வேட்டையிலும் சண்டையிலும் வளையம் மற்றும் சுருக்கு இரண்டையும் பயன் படுத்தலாம். பல பேர் ஒரு எதிரியையோ அல்லது விலங்கையோ சூழ்ந்து கொண்டால் சுருக்கு முனையை வீசுவார்கள். ஒரு வீரன் இன்னொரு எதிரியைச் சந்திக்க நேர்ந்தால் அந்த வளையத்தை வீசுவான்.

எனக்குத் துப்பாக்கி தவிர்த்து வேறெந்த ஆயுதம் கொடுத்தாலும் திருப்திகரமாக இருக்காது. அவன் அதை எனக்காக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கலாம். கயிறு சுற்றிச் சிறு வயது முதலே நல்ல பழக்கம் இருக்கிறது. ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். என் உடைதான் எனக்கு சுத்தமாகப் பிடிக்கவே இல்லை. இந்த உணர்ச்சியைச் சொல்ல வேண்டும் என்றால், நான் அம்மணமாகவே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அது அவ்வளவு மெலிதாக லேசாக இருந்தது. இந்த கயிற்றின் பேர் என்ன என்று கேட்டேன். அது கா என்றான். அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது. காலுவென்றால் என்ன என்று. கயிறு மனிதன் என்று பொருள் படுகிறது.

ஆடை அணிகலன்கள் அணிந்த பின் என்னைப் பார்த்தால் எனக்கே நம்ப முடியவில்லை. என் பின்னால் வில் அம்புகள் கேடயம் சிறிய ஈட்டி அனைத்தும் தொங்கிக் கொண்டிருந்தன. எனது இடுப்பின் நடுவில் கத்தி தொங்கியது. எனது வலது இடுப்பில் அரிவாள் இருந்தது. இடது புறம் கயிறு சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. வலது கையை வைத்து இடது தோள் பட்டையில் இருந்து ஈட்டியையோ அம்புகளையோ எடுத்து விட முடியும். இடது கை வில்லை எடுக்க முடியும் வலது தோளில் இருந்து. கேடயத்தை என் முன்னால் கொண்டு வர நான் நன்றாகக் குனிந்துதான் அதை எடுக்க முடியும். அந்தக் கேடயம் நீள்வட்ட வடிவில் பெரிதாக இருந்தது. அதை வைத்து முன்னால் சண்டையிடும் போது பாதுகாப்பிற்காக வைத்துக் கொள்ள முடியாது. மிருகங்களிடம் இருந்து தப்பிக்கவே அதைப் பயன் படுத்த முடியும். நெருக்கமாய் அணிந்த கை வளையங்கள் அனைத்தும் அரிவாள் ஈட்டி கத்தி அம்புகள் போன்றவற்றை முன்னால் வரும்போது தடுக்கப் பயன் படுகின்றன. ஆனால் பெரிய மிருகங்களிடம் இருந்தும் பல எதிரிகளிடம் இருந்தும் காப்பதற்கு இந்தக் கேடயமே நன்றாகப் பயன்படும். அதில் இடது புறம் ஒரு கைப்பிடியும் இருக்கிறது.

ஒரு போர்வை மட்டும்தான் இல்லை மற்றபடி அனைத்தும் என்னிடம் இருக்கிறது. நான் சால்-ஆசை அவனது வீட்டில் இருந்து பின் தொடர்ந்து யாருமில்லாத க்ரோலுவின் அந்த இருட்டான பாதைகளில் நடந்தேன். அமைதியாக நாங்கள் ஊர்ந்து சென்றோம். நாப்ஸும் மிக மெதுவாக தனது முழங்காலில் நடந்தது. கிட்டத்தட்ட வேலியின் மிக அருகில் வந்து விட்டோம். இங்கே சால்-ஆஸ் எனக்கு விடை கூறினான். காலுக்களுக்கு மத்தியில் விரைவில் நாம் சந்திப்போம் என்று கூறினான். அவனுக்கு சீக்கிரமே அதற்கான அழைப்பு வந்து விடும் என்று உறுதியாய் நம்பினான். அவனது விசுவாசமான உதவிக்கு நான் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன். நான் காலுவின் நாட்டிற்குப் போகிறேனோ இல்லையோ நிச்சயம் இந்த உதவிக்குக் கைம்மாறு செய்வதற்கு என்றும் தயாராய் இருப்பேன் என்றேன். அவனும் நான் அவனது புரட்சிக்கு உதவுவேன் என்று திடமாய் நம்பினான்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *